கோவையைச் சேர்ந்த மருத்துவர் கோவி என்று அழைக்கப்படும் தோழர் கோவிந்தன் அவர்கள் எழுதியுள்ள மார்க்சியத்தின் பரிணாமமே காந்தியம் என்னும் கட்டுரையை விவாதப் பொருளாகக் கொண்டு இந்த வாசிப்பு முன்வைக்கப்படுகிறது.

மார்க்சியவாதிகள் காந்தியத்தின் பொருத்தப்பாட்டை திறனாய்வதும், காந்தியவாதிகள் வன்முறை நீங்கிய மார்க்சியத்தின் தேவையைப் பற்றி விவாதிப்பதும் பல்லாண்டுகளாக நிகழ்ந்து வரும் கருத்தாடலாகும்.

Gandhi 321‘வன்முறையற்ற மார்க்சியமே காந்தியம்’ என்றும் சமூக மாற்றத்தில் புரட்சிகர வன்முறை என்பது தற்கால உலகச் சூழலில் தேவையற்றது என்றும், சாத்தியமில்லாதது என்றும் விமர்சிக்கப்படுகிறது. அதே நேரத்தில் புரட்சிகர வன்முறையின்றி மக்கள் அதிகாரத்தை நிறுவுவது சாத்தியமில்லை; இதனை மறுப்பது வர்க்க சமரசத்திற்கே இட்டுச்செல்லும்; விடுதலைக்கு இட்டுச்செல்லாது என்கிற விவாதமும் தொடர்கிறது. மேலும், பாராளுமன்ற ஜனநாயகம் என்பது முதலாளிய ஜனநாயகமேயன்றி மக்கள் ஜனநாயகமன்று. மக்கள் ஜனநாயகத்தை நிறுவி சோசலிச, சமதர்ம சமூகத்திற்கு பயணிக்க பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிறுவாமல் சாத்தியமில்லை என்ற வாதமும் தொடர்கிறது.

ஆனால், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் நிறுவப்பட்டதாகச் சொல்லப்படும் சோவியத் ருஷ்யா உட்பட உள்ள நாடுகளில் சோசலிச கட்டுமானம் சிதைந்து போனதற்கான காரணங்களில் மிக முக்கியமான ஒன்று சோசலிச கட்டுமானத்தை முதலாளிய வழியில் மேற்கொண்டதன் விளைவே என்று விமர்சிக்கப்படுகிறது. ஆக, காந்தி முன்வைக்கும் இலக்கும் வழிமுறையும் (means and ends) பற்றிய விவாதம் எல்லா தளங்களிலும் மீண்டும் எழுந்துள்ளன. (மார்க்சிய அறிஞரான எஸ்.என்.நாகராசன் அவர்கள் 60களில் அன்று தனிச்சுற்றுக்கு மட்டும் வெளியான புதிய தலைமுறை என்னும் இதழில் நெறி தவறினால் குறி தவறும்  என்னும் கட்டுரை இங்கு நினைவு கூறத்தக்கது.

இந்த இடத்தில்தான் காந்தியம் மறுவாசிப்புக்கு உட்படுத்தப்படுகிறது. ‘காந்தியம்’ என்பதை ஓரு மெய்யியல் பார்வையாக, ஒரு கோட்பாடாக காந்தியே ஏற்றுக்கொள்ளவில்லை. (மார்க்சும் தாம் மார்கியரல்ல என்றே உரைத்தார் என்பதும் பதிவாகியுள்ளது).

ஆனால் "தம் வாழ்க்கையே தம் செய்தி" ("My life is my message") என்று துணிந்து கூறியது மட்டுமின்றி தம் வாழ்க்கையை ஒரு திறந்த புத்தகமாகவும் சத்திய சோதனையாகவும் முன்வைத்தவர் காந்தி. தம் வாழ்க்கைச் சோதனைகளை பொது அரங்கில் வைத்ததன் விளைவாக நம் ஒவ்வொருவருடைய வாழ்க்கைக்கும் வார்த்தைக்குமான உறவை சுயஆய்விற்கு உட்படுத்த வேண்டியதன் தேவையை காத்திரமான அரசியல் மற்றும் அறச் செயற்பாடாக காந்தி மாற்றினார் என்றால் மிகையில்லை. காலனிய எதிர்ப்பில் இந்த அணுகுமுறை தீர்க்கமாக கையாளப்படவில்லை என்றாலும் புதுக்காலனியச் சூழலில் இந்த அணுகுமுறை மிகவும் தேவையானதாக அமைந்துள்ளது.

அந்த வகையில் காந்தியின் ஒவ்வொரு சொல்லும் செயலும் தொடர்ந்து விவாதிக்கப்படுகின்றன; விமர்சனத்துள்ளாகின்றன.

சத்தியத்தையும் அகிம்சையையும் தனது வாழ்க்கை நெறியாகக் கொண்ட காந்தி தமது தென்னாப்பிரிக்க பயணத்தின்போது, அங்கே நிறவெறி கோலோச்சியிருந்த காலத்தில் இந்திய வணிகர்களின் வணிக நலனிற்காக மட்டும் உரிமைக் குரல் எழுப்பினார் என்பது ஒரு நகை முரண். கொத்தடிமைகளாக இருந்த தோட்டத்தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரம் ஏற்புடையதாகத்தான் இருந்தது (Satisfactory) என்றும் பதிவு செய்துள்ளார். அங்கே நிலவிவந்த அடிமைத்தனத்தை ஆண்டானுக்கு சாதகமாக விளக்கியிருக்கிறார். தென்னாப்பிரிக்காவில் இந்தியர்களின் அடிப்படை குடியுரிமைக்காக அவர் பாடுபடவில்லை என்ற செய்தியும் வரலாற்றில் பதிவாகி இருக்கிறது. தென்னாப்பிரிக்க பூர்வீக இனமக்களான ஸுலு இன மக்களின் எழுச்சியை அடக்க பிரித்தானிய அரசுக்கு சாதகமான நிலைப்பாட்டை காந்தி எடுத்தார் என்பதையும் நம்ப முடியவில்லை.

பிரிட்டிஷ் இராணுவத்தின் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை காந்தி கண்டிக்கவில்லை. காரணம், பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் வீழ்ச்சி மனித குலத்தின் வீழ்ச்சி என்று காந்தி அன்று ஆழமாக நம்பினார் என்று தாமே இதற்கான விளக்கம் கூறுவதும் அவரது அகிம்சை கோட்பாட்டை கேள்விக்குட்படுத்துகிறது. மேலும், முதல் உலகப் போர் தொடங்கிய பிறகு பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவையும் சேவையையும் நல்க வேண்டுமென்ற காந்தியின் நிலைப்பாடும் அகிம்சையைப் பறைச்சாற்றி, பின்னர் மகாத்மாவாக அறியப்பட்டவரின், குரலாக தெரியவில்லை. போர் காலத்தில் காங்கிரஸ் கட்சியின் மேற்கொண்ட ‘ஹோம் ரூல் தீர்மானமானத்திற்கு காந்தி தம் எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறார் என்பது மட்டுமல்ல இந்த இக்கட்டான தருணத்தில் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவையும் சேவையையும் நல்க வேண்டுமென லட்ச கணக்கான மக்களை போருக்காக அணியப்படுத்தினார் என்பதும் ‘அகிம்சையின்’ வரலாறு!

ஜாலியன் வாலாபாக் படுகொலைக்குப் பிறகு முதல் சுதந்திரப்போரின் போது எழுந்த பேரெழுச்சியைப் போன்ற மக்கள் எழுச்சி நடந்திடாவண்ணம் காந்தியின் ஜாலியன் வாலாபாக் பயணம் 6 மாதங்களுக்கு மேல் பிரிட்டிஷ் அரசின் அனுமதிக்காக காத்திருந்து தள்ளிப் போடப்பட்டது என்பதும் வரலாறு. வெள்ளயன் வெளியேற வேண்டிய கட்டாயத்தை உலகப் போரும், இந்திய இராணுவ கிளர்ச்சிகளும், மக்களின் எழுச்சியும், சுபாஷ் தலைமையில் இயங்கிய இந்திய தேசியப் படையின் செயற்பாடும் ஏற்படுத்திய பின்னணியில் “வெள்ளையனே வெளியேறு” என்று முழங்கி பரந்துபட்ட மக்களைத் திரட்ட காந்தியின் தலைமை வாய்ப்பாக அமைந்தது.

இவையனைத்தையும் கடந்து மக்களின் சுதந்திர வேட்கையை கட்டுப்படுத்த முடியவில்லை. இருப்பினும் காந்தி ஒரு வகையில் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் நம்பிக்கைக்குரிய காவலராக இருந்தார் என அவர்கள் நினைத்ததில் தவறில்லை என்றே தோன்றுகிறது.

ஒவ்வொரு சத்தியாகிரகப் போராட்டமும் இயல்பாக வன்முறையாக வெடிக்கும்போது காந்தி அப்போராட்டத்தை கைவிட்டார் என்பதும் வரலாறு.

“முழுச் சுதந்திரம்” (பூரண ஸ்வராஜ்) என்று அறிவித்த சுபாஷ் சந்திரபோஸ் போன்ற தலைவர்களின் செல்வாக்கை, வளர்ச்சியை மட்டுப்படுத்த காந்தி மேற்கொண்ட தந்திரங்களை தனியாக பட்டியலிட வேண்டும்.

இந்து முசுலிம் ஒற்றுமையை தொடர்ந்து வலியுறுத்தி வந்த காந்தி, தன் பிணத்தின் மீதுதான் இந்துஸ்த்தானை பிளவுபடுத்த முடியும் என உரக்க தெரிவித்த காந்தி, இறுதியில் படேலுடன் இந்தியா பாக்கிஸ்தான் பிரிவினைக்கு துணை நின்றார் என்பதும் கசப்பான வரலாறு.

தீண்டாமை கொடுமைக்கு எதிராக குரல் கொடுத்து வந்த காந்தி வருணாசிரம முறை இந்து மதத்தின் மாற்ற முடியாத அடிப்படை என்பதை வலியுறுத்தியதும் “பூனா ஒப்பந்தத்தின்” மூலம் தாழ்த்தப்பட்ட மக்களின் தனித் தொகுதி வாய்ப்பினை குலைத்து, சாதியமைப்பிற்கு சாமரம் வீசியதும் வரலாற்று முரண்.

இவையனைத்தையும் கடந்து காந்தியத்தின் இன்றைய பொருத்தப்பாட்டினை ஆய்வது அவசியம்.

காந்தி வெள்ளைய ஆதிக்க எதிர்ப்பினை வெறும் அரசியல் மாற்றத்திற்கான இயக்கமாக மட்டுமில்லாமல் சுதந்திரமான மாற்று கட்டமைப்பினை, கலாச்சாரத்தை, வாழ்வியலை தனி நபராகவும் சமூகமாகவும் வளர்த்தெடுக்க வேண்டியதன் தேவையை தொடர்ந்து வலியுறுத்தினார். “நாம் ஏற்றுக்கொள்ளாமல் பிரிட்டன் நம்மை அடிமைப்படுத்தியிருக்க முடியாது” என்று காந்தி கூறியதன் நோக்கம் வெள்ளையன் நம்மை கலாச்சார ரீதியாக ஆட்கொள்ள நாம்தான் அவர்களை அனுமதித்தோம் என்று விமர்சிக்கிறார். அறத்துள் அரசியலையும் அரசியலில் அறத்தையும் வலியுறுத்தினார். சுதந்திரத்திற்குப் பிறகு காங்கிரஸ் கட்சி கலைக்கப்பட்டு “லோக் சேவக் சங்க்” என்னும் அமைப்பை உருவாக்க வேண்டுமென முன்மொழிந்தார். ஆனால் அது புறந்தள்ளப்பட்டது. காங்கிரஸ் கட்சி தமக்கு தேவையான பொழுது காந்தியை மட்டும் ஏற்றுக் கொண்டு காந்தியத்தை மறுத்து வந்ததிற்கு இது கடைசி எடுத்துக் காட்டு.

அவ்வகையில் அந்தோனியோ கிராம்ஸி முன்வைத்த (Hegemony by Consent) ஆதிக்கச் சக்திகள் நம்முடைய ஒப்புதலுடன் தம் ஆதிக்கத்தை நிறுவுதல் என்பதற்கு எதிரான சமூக கலாச்சார புரட்சியை மேற்கொள்வதற்கான ஒரு உந்து சக்தியாக காந்தி இன்று உள்ளார். Hegemony by Consent என்னும் நிலையில் கலகம் ஏற்படாமல் Hegemony by force அதிகாரத்தைக் கொண்டு ஆதிக்கம் என்னும் அரசு அடக்கமுறையை எதிர்க்கத் தேவையான ஆன்மீக பலத்தை நாம் அடைய இயலாது.

kovi book on gandhiஇவ்விடத்தில் “படைப்பிற்கும் படைத்தவனுக்கும் இடையில் உள்ள முரணில்தான் எல்லா விளைவுகளுக்கான காரணங்களும் அடங்கியுள்ளன” மற்றும் “தொழிலாளி வர்க்கம் தன்னை விடுவித்துக் கொள்ள வேண்டுமென்றால் தம் எதிரியையும் விடுவிக்க வேண்டும்” என்ற மார்க்சின் கூற்றை அடிப்படையாகக் கொண்டு தெளிவது மிக மிக தேவை. படைப்பு உறவை மாற்றுவதே சமூகப் புரட்சியின் தலையாயக் கடமை. முதலாளிய/வல்லரசிய உற்பத்திப் பாணியை (Pattern of Production) மாற்றாமல் படைப்பு உறவை மாற்ற இயலாது என்பதை வரலாறு மெய்ப்பித்திருக்கிறது. (உதாரணத்திற்கு பசுமைப் புரட்சி). விமர்சனத்திற்குள்ளாகாத உற்பத்திப் பாணி உற்பத்தி உறவையும் பாதிக்கும் என்பதை சோசலிச நாடுகள் கவனப்படுத்தவில்லை.

குறிப்பாக இன்றைய புதுக்காலனிய வல்லரசியச் சூழலில், வல்லரசியம் நவீன தொழில் நுட்பத்தை ஒரு சுரண்டல் கருவியாகக் கொண்டு, ஒர் உலக அமைப்பு முறையாக (Imperialism as a System) ஆட்கொண்டுள்ளது. இந்நிலையில் உலகளாவிய அமைதிப் போராட்டம் மூலம், அறப்போராட்டம் மூலம் வல்லரசியத்திற்கு எதிரான மாற்றான மக்கள் இயக்கத்தை, மக்கள் அறிவியலை, வாழ்வியலை, குறிப்பாக ஒடுக்கப்பட்ட மக்களின், பெண்களின், சிறுபான்மையின மக்களின் தலைமையில் கட்டமைப்பதற்கு மார்க்சிய பார்வையிலான காந்திய அணுகுமுறையை கற்க வேண்டியதன் தேவையை இந்த விவாதம் முன்வைக்கிறது.

“இயற்கை நமது தேவையை பூர்த்தி செய்யலாம்; நமது பேராசையை அல்ல” என்னும் காந்திய நோக்கில் ஆக்க வகையிலான பணிகள் மேற்கொள்ள வேண்டும். இந்த பாணியில் இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்கள் முன்வைத்த இயற்கை வழி விவசாயம், மருந்தில்லா மருத்துவம், தாய்மொழிக் கல்வி ஆகியவைகளோடு வளப் பாதுகாப்பு, அணு தீமைகளற்ற உலகம், நீடித்த வளர்ச்சி ஆகிய செயற் திட்டங்களை மேற்கொள்ள வேண்டும். சாதி ஆதிக்க ஒழிப்பு; தீண்டாமை ஒழிப்பு, வளமான தமிழ் நாகரீகத்தை, வள்ளுவத்தை நெறியாகக் கொண்ட அறத்தை வளர்த்தெடுத்தல், நமது சமய முன்னோர்களின் சமூக நீதிக்கான விழுமியங்களை ஏற்று சமூகப் பணி அமைய வேண்டும். பேரழிவு ஆயதங்களுக்கும் அணு ஆயுதங்களுக்கும் வல்லரசியப் போர்களுக்கும் எதிரான உலக அமைதி இயக்கம் கட்டமைக்கப்பட வேண்டும், பன்முகப் பண்பாட்டுக் களம் என கிராமந் தோறும் அமைதிப் பூங்காக்களை அமைத்து குடும்பம் குடும்பமாக அர்பணிப்புடன் தம்மை ஒப்படைத்துக் கொள்ள விழையும் தோழர்களின் கூட்டுப் பண்ணைகள் நிறுவ பாடுபட வேண்டும். இதற்கு காந்திய வழித் தோன்றலான குமரப்பாவின் சிந்தனையும் வாழ்வும் உறுதியாக வழிகாட்டும்.

“சத்தியாகிரகம் என்பது கோழைகளின் ஆயுதமல்ல மாறாக வாய்மையை நெறியாகக் கொண்டு எல்லா இன்னல்களையும் எதிர் கொள்ளும் துணிவுடையவர்களின் போராட்டக் களம்”. இப்புரிதலோடு கிராம ராஜ்ஜியம் என்னும் அதிகாரப் பரவலை இலக்காகக் கொண்ட தன்னாட்சி அரசியலை வலுப்படுத்துதல் என இதன் செயல் பரப்பு மேலும் விரியும்.

இதற்கு மார்க்ஸ் முதல் மாவோ வரையிலான சமூகப் புரட்சியாளர்களின், டால்ஸ்டாய் முதல் கிராம்ஸி வரையிலான பண்பாட்டு புரட்சியாளர்களின் நெறிகளை, வழிமுறைகளை தன்வயமாக்கிக்கொண்ட காந்திய அணுகுமுறை புதுக் காலனிய உலகச் சூழலில் இன்றியமையாததாகும்.

மேலும், இந்திய/தமிழகச் சூழலில் அம்பேத்கர், பெரியார், அயோத்திதாசர் ஆகியோரின் வழிகாட்டுதல்களும் வள்ளுவம் மற்றும் சமூக நீதிக்கான எல்லா சமய அறநெறிகளையும் தன்வயப்படுத்திக் கொண்டு சமூகப் பண்பாட்டு இயக்கத்திற்கான அடித்தளத்தை அமைத்திட வேண்டும்.

“ஒரு டன் கொள்கை அறிவிப்பை விட ஒரு துளி செயற்பாடு மெச்சத் தகுந்தது” என்னும் காந்தியின் குரல் வழிகாட்டட்டும்.!

________________________________________________________________________________________________________

பிகு: 1. “மார்க்சியத்தின் பரிணாமம் (evolution) காந்தியமே” என்னும் மருத்துவர் கோவியின் தொகுப்புரை விவாதத்திற்குரியது. இருத்தலியல், அமைப்பியல், பின் நவீனத்துவம், பெண்ணியம், தலித்தியம், சூழலியம் போன்று மார்க்சியம் உள்வாங்க வேண்டிய மிக முக்கியமான ஒரு பரிமாணமாக (dimension) காந்தியத்தையும் முன்வைக்கலாம்.

2. பிரேம் அவர்களின் காந்தியை கடந்த காந்தியம் - ஒரு பின் நவீனத்துவ வாசிப்பு (காலச்சுவடு பதிப்பகத்தின் வெளியீடு ஆகஸ்ட் 2013) நூலில் காந்தி பற்றிய மறுவாசிப்பு சிறப்பாக அமைந்துள்ளதை காணலாம்.

3. காந்தியைப் பற்றிய விமர்சனைங்கள் பஸ்லூல் ஹக் அவர்கள் எழுதிய காந்தி - புனிதரா? பாவியா?” (“Gandhi - Saint or Sinner” by Fazlul Huq (Barister, London),1992, (Dalit Sahitya Akademy, Bangalore) என்னும் நூலில் விரிவாக பதிவு செய்யப்பட்டுள்ளன.

நன்றி: உயிர் எழுத்து, மே 2016

- பொன்.சந்திரன்