தமிழகத்தில் தீண்டாமை ஒழிப்பு போராட்டத்தின் முக்கிய அடையாளமாக இருக்கக்கூடிய பெரியாரின் வாழ்வியல் என்பது இன்றைய இளைஞர்கள் அறியப்பட வேண்டிய ஒன்றாகும். பெரியார் இன்றைய தலைமுறையினருக்கு எப்படி அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கின்றார் என்றால், அவர் ஒரு கடவுள் மறுப்பாளர், மற்ற கடவுள்களை எல்லாம் பழித்துரைக்கக் கூடியவர் போன்ற செய்திகள் மட்டும்தான் அவர்களுக்கு கற்பிக்கப்பட்டு வருகின்றது. அது, ஆரிய பார்ப்பனர்களால் திட்டமிட்டு பரப்பப்பட்ட ஒன்றாகும்.

periyar 391ஆனால், பெரியார் ஒரு சமூக சீர்திருத்தவாதி என்ற நோக்கிலேயே நாம் அணுக வேண்டும். அப்பொழுதுதான் நாம் பெரியாரின் தீண்டாமை எதிர்ப்புப் போராட்டத்தையும், அவரின் தனிப்பட்ட வாழ்க்கை முறையையும் நாம் புரிந்து கொள்ள முடியும். பெரியாரின் வாழ்வியல் என்பது மிக நுட்பமானது. அவருக்கு முன்னும், பின்னும் அத்தனை நுட்பமான வகையில் வாழ்க்கையை அமைத்துக் கொடுத்தவர்கள் யாருமில்லை என்பது முக்கியமான ஒன்றாகும். இருபதாம் நூற்றாண்டு தொடங்கும் பொழுது பெரியாருக்கு வயது 21.

அன்றைக்கு ஆங்கிலேயர்களின் ஆட்சி இந்தியாவில் நடந்து கொண்டிருக்கின்றது. இந்திய வரலாற்றையே ஆங்கிலேயர்கள் எப்படி பிரித்து எழுதினார்கள் என்றால், ஜேம்ஸ் மில் என்பவர் மூன்று விதமாக எழுதி இருந்தார்: 1. இந்து இந்தியா 2. மொகலாயர் இந்தியா 3. பிரிட்டீஷ் இந்தியா என்று. அப்பொழுது அது பிரிட்டீஷ் இந்தியாவாக இருந்தது. அன்றைக்கு இந்திய மற்றும் தமிழக மக்கள் இரண்டு விதமான அடிமைத்தனங்களுக்கு உள்ளாகியிருந்தார்கள்.

ஒன்று, அரசியல் அடிமைத்தனம். மற்றொன்று சமூக அடிமைத்தனம். அரசியல் அடிமைத்தனம் மேலோட்டமாக பார்க்கின்ற போதே தெரிந்தது. சமூக அடிமைத்தனம் மறைமுகமாக வேரூன்றி இருந்தது. அந்தக் காலக்கட்டத்தில் தான் இந்த இரண்டு அடிமைத்தனங்களையும் மீட்க வந்த மாமனிதராக இருந்தார் பெரியார். அவருடைய பார்வை எப்படி இருந்ததென்றால், இந்திய வரலாற்றை யாரும் பார்க்க முடியாத வகையில் பார்ப்பதிலேதான் இருந்தது பெரியாரின் நுட்பமான அறிவு.

மற்றெல்லோரும் ஆங்கிலேயர்கள் இந்த நாட்டை ஆண்டு கொண்டு இருக்கின்றார்கள். அவர்களை இந்த நாட்டை விட்டு வெளியேற்ற ஒரு போராட்டம் நடந்து கொண்டிருக்கின்றது. ஆங்கிலேயர்களுக்கும் போராட்ட வீரர்களுக்கும் போர் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது என்றுதான் எண்ணிக் கொண்டிருந்தனர். அதாவது, ஆங்கிலேயர்களுக்கும் விடுதலைப் போராட்ட வீரர்களுக்கும் போர் நடந்து கொண்டு இருக்கின்றது என்று தான் வரலாற்று ஆசிரியர்களும், ஆய்வாளர்களும் எழுதினார்கள்.

ஆனால், அதில் இருந்த நுட்பமான கருத்தியல் என்னவென்றால், மேல் தளத்திலே அப்படி ஒரு போராட்டம் நடைபெற்றது உண்மைதான். ஆனால், கீழ் தளத்திலே என்ன நடந்தது என்றால், மேலை நாட்டு பண்பாட்டுக்கும் நிலவுடைமைப் பண்பாட்டுக்கும் இடையிலான போர் நடந்து கொண்டிருந்தது. இரண்டு அடிமைத்தனங்களும் நம்மை அழுத்தின. ஆனால், அவற்றுக்குள்ளேயே ஒரு முரண்பாடு இருந்தது.

அங்கே நடைபெற்றது வெறும் விடுதலைப் போராட்டம் அல்ல. உன்னுடைய ஆதிக்கத்தை தகர்த்துவிட்டு, எங்களுடைய ஆதிக்கத்தை நிலைநாட்ட வேண்டும் என்று நினைத்தவர்களுக்கும் வெள்ளைக்காரர்களுக்கும் ஒரு போர் நடக்கின்றது என்பதைக் கண்டறிந்த சமூக விஞ்ஞானி தான் தந்தை பெரியார். இரண்டு பண்பாடுகளுக்குமிடையே சிக்கித் தவித்த மக்களை புதிய பண்பாட்டை நோக்கி அழைத்துச் சென்றது தந்தை பெரியாரின் வாழ்வியல்.

நீ வெறும் மேலை நாட்டவனாக அல்ல; அல்லது இரண்டாயிரமாண்டுகளுக்கு முன்பிருந்த அந்த நிலவுடைமை கலாச்சாரத்தின் சார்பாளனாக அல்ல; நீ மானமும், அறிவும் உள்ள மனிதனாக உன்னை நிறுத்துவேன் என்று தன்னுடைய தோள் மீது போட்டுக் கொண்டு செய்த பணி என்பதை நாம் புரிய வேண்டும். அந்தளவுக்கு உயர் ஜாதிக்காரர்களின் ஆதிக்கம் தமிழகத்தை ஆட்டுவித்துக் கொண்டிருந்தது.

தமிழகத்தில் சமூக அடிமைத்தனம் எப்பொழுது தொடங்கிற்று? சங்க காலத்திலேயே அதன் தலை தெரிகிறது. பல்லவர்கள் காலத்தில் அது முழுக்க முழுக்க வேரூன்றுகிறது. யுவான் சுவாங் என்ற சீனத் தூதுவர் தன்னுடைய நூலிலே எழுதுகிறார்: “நான் இந்தியாவுக்கு போய், அங்கு தமிழ்நாடு என்ற பகுதிக்குப் போன போது, மூன்று ஊர்களில் ஏறத்தாழ ஐயாயிரம் மாணவர்கள் சமஸ்கிருதம் மொழியை கற்றுக் கொண்டிருந்தார்கள்.”

அந்த மூன்று ஊரையும் அவர் குறிப்பிடுகின்றார். ஒன்று சென்னையில் இருக்கக்கூடிய திருவொற்றியூர், இரண்டாவது காஞ்சிபுரம், மூன்றாவது புதுவையில் இருக்கக்கூடிய பாகூர். இந்த மூன்று ஊர்களிலும் 1,500 ஆண்டுகளுக்கு முன்பே சமஸ்கிருதம் மொழியை கற்றுக் கொண்டிருந்தார்கள் என்றால், எவ்வளவு வேகமாக சமஸ்கிரும் மொழி பரவி இருந்தது என்பதை நாம் கணக்கில் கொள்ள வேண்டும்.

பல்லவர்களினுடைய கல்வெட்டுக்கள் அனைத்தும் தொடக்கத்தில் கிரந்த மொழி மற்றும் சமஸ்கிருத மொழியிலேயே இருந்திருக்கின்றது. அதன் இறுதிக் காலத்திலே தான் கொஞ்சம் தமிழ் மொழி தலை காட்டுகின்றது.

எனவே, சமூக அடிமைத்தனம் என்பது 1,500 ஆண்டுகளுக்கு முன்பே இருந்திருக்கின்றது. பெரியாரின் பிறப்பு என்பது தமிழக மக்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கும் பெரிய வரப்பிரசாதமாக இருந்தது என்றால் அது மிகையாகாது. பெரியார் ஆங்கிலேய அடிமைத்தனத்தைவிட இங்கிருந்த ஜாதிய அடிமைத்தனத்தைதான் பெரிதாக நினைத்தார். அதனால் தான் இந்திய விடுதலைப் போராட்டத்தைக்கூட பெரியார் அவர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இந்தியா சுதந்திரம் பெற்ற நாளை பெரியார் சொன்னார் ‘துக்க நாள்’ என்று.

அதற்கு அவர் விளக்கமும் கொடுத்தார்: “ஜெனரல் டயர் போகிறார், பட்டேல் வருகிறார், என்ன வித்தியாசம்?” என்று கேட்டார். இது தான் பெரியாரின் நுணுக்கமான அரசியல் பார்வை. இதற்கு அண்ணா சமாதானம் சொன்னார்: “போகட்டும், இருவரில் ஒருவன் போகிறான்” என்றார். இது அண்ணா சொன்ன சமாதானம்.

அதற்கு பெரியார் சொன்னார்: “யார் போகிறார்? யார் வருகிறார்? சாவி கைமாறுகிறது. விலங்கு அப்படியே தான் இருக்கின்றது. சாவி கைமாற்றப்படுவதில் என்ன மகிழ்ச்சி உங்களுக்கு என்று” கேட்டார் பெரியார். அந்தச் சிந்தனையோடு தான் இந்தப் போராட்டம் எதை நோக்கி இருக்க வேண்டும் என்பதை தீர்மானித்தார் பெரியார்.

பெரியார் இந்திய விடுதலைப் போராட்டத்தை முழுமையாக நிராகரிக்கவில்லை. ஆனால், புதிய பண்பாட்டை உருவாக்குகிற, பண்பாட்டு போர்க்களம் முதலில் தேவை என்பதே பெரியாரின் கண்டுபிடிப்பு. அதுதான் பெரியாரின் தொடக்கமாக இருந்தது. எதை முன்னெடுக்க வேண்டும், எதை முதலில் எடுக்க வேண்டும் என்பதை பெரியார் தெளிவாக சிந்தித்தார்.

ஏனென்றால், இதே அடிமைத்தனத்தை வைத்துக் கொண்டு, இதே மூட நம்பிக்கையை வைத்துக் கொண்டு இருப்பதில் அவன் இருந்தால் என்ன? நாம் இருந்தால் என்ன? என்பதுதான் பெரியாரின் கேள்வியாக இருந்தது. இதை பெரியார் முன்வைத்த பொழுது அவரை ‘கலகக்காரர்’ என்று தான் சொன்னார்கள். பெரியார் அதற்கு பதில் சொன்னார்: “புதர் காடுகளை அழிக்காமல், பூங்காவை உருவாக்க முடியாது” என்றார்.

அதனால், பெரியார் எல்லோருக்கும் நல்லவராக இருக்க விரும்பவில்லை. பெரியார் சொன்னார்: “தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருப்பவர்கள் தன்னலக்காரர்கள்” என்றார். மேலும், “தான் உண்டு தன் மொழி உண்டு, தான் உண்டு தன் சமூகம் உண்டு என்று இருக்கின்றாரே அவரே நல்லவர்” என்றார் பெரியார்.

இன்றைய அரசியல்வாதிகள் ஜனநாயகத்தைப் பற்றிப் பேசக்கூடிய பேச்சுக்கள், செயல் அளவில் இல்லை என்பதுதான் உண்மை. உண்மையில் அரசியல் களத்தில் உண்மையான ஜனநாயகம் பின்பற்றப்படாததால் தான் நாட்டில் 1,700 கட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், தந்தை பெரியார் அவர்கள் உண்மையான ஜனநாயகவாதியாக இருந்தார் என்பதுதான் உண்மை.

அதற்கு ஒரு நல்லதொரு உதாரணம் தான் அவருடைய கூட்டங்களில் கேட்கப்படக்கூடிய கேள்விகள். அவர் மேடையிலோ அல்லது கூட்டங்களில் பேசும் பொழுதே கேள்விகள் வந்து கொண்டே இருக்கும். அதற்கு பதில் சொல்லிக் கொண்டே இருப்பார் பெரியார். மிக குதர்க்கமான கேள்விகள் எல்லாம் வரும். அதற்கெல்லாம் பொறுமையாக பதில் சொல்லுவார் பெரியார். காரணம்,“மக்களுக்கு விடை சொல்லுவதற்காகவே வந்திருக்கிறேன்” என்பார். குழப்பத்தில் இருப்பவனை தெளிவுப்படுத்துவதே முக்கியமான பணி என்பதை பெரியார் உணர்ந்திருந்தார்.

ஒரு கூட்டத்திலே அப்படித்தான் பெரியாரை கேலி செய்யும் விதமாக ஒருவர் துண்டுத் தாளிலே கேள்வி ஒன்றை எழுதி அனுப்பினார். அந்த துண்டுச் சீட்டில் எழுதி இருந்தது என்னவென்றால், “நான் ஒரு முட்டாள்” என்று எழுதி இருந்தது. இதை ஒலி பெருக்கியிலேயே பெரியார் படிப்பார் என்று தான் அந்த நபர் எழுதி இருந்தார். ஆனால், எவ்வாறு சாமர்த்தியமாக பதில் அளித்தார் தெரியுமா பெரியார்?

“யாரோ ஒருவர் தன்னுடைய பெயரை மட்டும் எழுதிவிட்டு, கேள்வியை எழுதாமல் கொடுத்துவிட்டார்” என்றார் பெரியார். எவ்வளவு புத்திக் கூர்மையோடு பதில் அளித்தார் என்று பாருங்கள். தந்தை பெரியார் அளவுக்கு தமிழகத்தில் அறியப்பட்ட தலைவரும் இல்லை. அவர் அளவுக்கு தவறுதலாக அறியப்பட்ட தலைவரும் இல்லை என்று சொல்லலாம். தந்தை பெரியார் யாரோடோ சண்டை போடுவதற்காக பிறந்தவர்கள் என்று கருதுகிறார்கள். ஆனால், மக்களிடம் சமத்துவம் என்ற ஒன்றைத் தவிர வேறு எதற்காகவும் சண்டை போட்டதில்லை என்பது தான் அவருடைய வாழ்க்கையில் இருந்து கிடைக்கின்றது. 

சமூகம் என்பது பல்வேறு குடும்பங்களை கொண்டது. ஒவ்வொரு குடும்பமும் பல்வேறு மனிதர்களை கொண்டது. ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு வாழ்க்கை இருக்கிறது. அந்த வாழ்க்கை முறையை சரி செய்யாமல் சமூக நீதியை உருவாக்க முடியாது என்பதில் பெரியார் கண்ணும் கருத்தமாக இருந்தார். பெரியார் கண்ட வாழ்வியல் என்பது, வெறும் ஒழுங்கை சொல்லிக் கொடுப்பது மட்டுமல்ல. நல்லவனாக இருக்க வேண்டும்; ஆனால், அது சமூகத்திற்காக இருக்க வேண்டும் என்பதே பெரியாரின் வாழ்வியல் நோக்கமாக இருந்தது என்பதே நமக்கு கிடைக்கும் பாடமாக இருக்கின்றது.

- நெல்லை சலீம்

(குறிப்பு: சுப.வீரபாண்டியன் அவர்களின் உரையின் அடிப்படையில் தொகுக்கப்பட்டது)