இந்த ஆண்டுக்கான பொது பட்ஜெட் திங்களன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஒட்டு மொத்த இந்தியாவின் பொருளாதாரத்தையே இந்த பட்ஜெட்தான் ஒரு ஆண்டுக்குக் கட்டுப்படுத்தப் போகின்றது. வழக்கமாக பொது பட்ஜெட் என்றாலே அனைவருக்கும் ஒரு எதிர்ப்பார்ப்பு கூடிவிடும். கோடிகளைக் குவிக்கும் மிகப்பெரும் முதலாளிகள் தொடங்கி ஐம்பதுக்கும் நூறுக்கும் அல்லல்படும் சாமானிய மக்கள் வரை நமக்கு ஏதாவது கிடைக்காதா என்ற எண்ணம் தவிர்க்க முடியாமல் தோன்றும். பத்திரிக்கைகளில் வரும் பொருளாதார செய்திகளை அன்று மட்டும் தான் பெரும்பாலான மக்கள் பார்க்க நினைப்பார்கள். ஆனால் இந்திய ஆளும்வர்க்கம் எப்போதுமே பட்ஜெட்போடும் போது தான் தின்று தீர்த்தது போக மிச்சமீதி உள்ளதையே மிகப்பெரும் கருணையோடு நமக்கெல்லாம் வீசி எறியும். எறிந்துவிட்டு அதனால் தான் இந்திய பொருளாதாரமே நாசம் ஆவதாக சொல்லிசொல்லிக் காட்டும்.

arun jaitley

  அப்படி  சில சில்லரை சலுகைகளை வழங்கிவிட்டு தான் இந்தப்பட்ஜெட்டை சாமானிய மக்களுக்கான பட்ஜெட் என கூசாமல் புளுகுகின்றார்கள் கார்ப்ரேட் காவி அடிமைகள். குறிப்பாக விவசாயிகளுக்கு என அறிவிக்கப்பட்ட பல திட்டங்கள் மிகப்பெரிய ஏமாற்றுத் திட்டமாக தெரிகின்றது. பிரதான் மந்திரி கிருஷி சிக்சாய் யோஜனாவின் கீழ் 28.5 லட்சம் ஹெக்டர் விளைநிலங்கள் நீர்ப்பாசன் வசதி ஏற்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கின்றது. எப்படி ஏற்படுத்தப்படும் என தெளிவாக அறிவிக்கப்படவில்லை. ஆழ்துளைக் கிணறுகள் அமைத்துத் தரப்படுமா இல்லை ஏதாவது ஏரிகுளங்கள் புதிதாக உருவாக்கப்பட்டு அதில் இருந்து நீர்ப்பாசன வசதி செய்துதரப்படுமா இல்லை நதிகள் இணைப்பின் மூலம் இது சாத்தியப்படுத்தப்படுமா என ஒரு கருமமும் தெரிவிக்கப்படவில்லை. பன்னாட்டு நிறுவனங்களுக்காக லட்சக்கணக்கான ஏக்கர் பரப்பளவுள்ள மழைக்காடுகள் அழிக்கப்பட்டு விட்டன. இதனால் இந்தியாவின் ஒட்டுமொத்த இயற்கை சமநிலையே பாதிப்படைந்து கடும் வறட்சியும் கடும் மழையும் மக்களை வாட்டிவதைத்துக்கொண்டு இருக்கின்றது.  இப்படிப்பட்ட சூழ்நிலையில் இதற்கான தீர்வை முன்வைக்காமல் 28.5 லட்சம் ஹெக்டர் அல்ல, ஒரு லட்சம் ஹெக்டர் விளைநிலங்களைக் கூட நீர்ப்பாசன வசதி செய்யமுடியாது.

 அடுத்து விவசாயிகளின் வருமானத்தை அடுத்த 5 ஆண்டுகளில் இரட்டிப்பாக்க இலக்கு நிர்ணயக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் அதை எப்படி நிறைவேற்றப் போகின்றார்கள் என்பது பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை. இவர்கள் ஆட்சி செய்யும் மகாராஷ்டிராவில் தினம் தினம் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வதை தடுக்க துப்பில்லாத இவர்கள் எப்படி நாடுமுழுவதும் உள்ள விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவார்கள் என்று தெரியவில்லை. ஒருவேலை விவசாயிகளின் தற்கொலையை இரட்டிப்பாக்குவோம் என்பதைத்தான் தவறாக சொல்லிவிட்டார்களோ என்று எண்ணத் தோன்றுகின்றது.

 பொதுத்துறை வங்கிகளை மேம்படுத்த 25000 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் இந்தத் தொகையை வைத்துக்கொண்டு ஏற்கெனவே வராக்கடனால் தள்ளாடிக்கொண்டிருக்கும் பொதுத்துறை வங்கிகளால் எழுந்துநிற்கவே முடியாது என்பதுவே உண்மை. மோடியின் ஆத்ம நண்பர்கள் வாங்கிய கடனை ஒழுங்காக கட்டினாலே அவை பிழைத்துகொள்ளும். இந்த லட்சணத்தில்  இந்த பட்ஜெட்டிலும் மோடியின் நண்பர்களை காப்பாற்ற  ரூ 1 லட்சம் கோடிகளுக்கு மேல் மானியம் வழங்கப்பட்டிருக்கின்றது. ஆனால் சாமானிய மக்களுக்கு மானியமாக கொடுத்தது வெறும் ரூ16369 கோடிதான்.

 மேலும் அரசின் வருவாயை சமாளிக்க  பொதுத்துறை நிறுவனங்களின் பங்குவிலக்கல் மூலம் 56500 கோடியைத் திரட்ட முடிவுசெய்துள்ளது. மக்களின் சொத்தான பொதுத்துறை நிறுவனங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக இந்திய தரகு முதலாளிகளுக்கும் பன்னாட்டு முதலாளிகளுக்கும் விற்கும் அயோக்கியத்தனத்தை தொடர்ந்து இந்திய ஆளும்வர்க்கம் செய்துவருகின்றது. அதன் தொடர்ச்சியாகவே இந்த அறிவிப்பும் உள்ளது.

 உச்சநீதிமன்றம்  அரசின் எந்த சலுகையைப்பெறவும் ஆதார் அட்டையைக் கட்டாயமாக்கக்கூடாது என தெளிவாக அறிவுறுத்தல் செய்த பிறகும்  இந்த காவிபயங்கரவாதிகள் திட்டமிட்டே ஆதார் எண்ணை அனைத்து இடங்களிலும் கட்டாயமாக்கிவருகின்றார்கள். உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பெல்லாம் எப்போதுமே காவிபயங்கரவாதிகளைக் கட்டுப்படுத்துவது கிடையாது என்பதையே இது காட்டுகின்றது.

  பள்ளிகல்விக்கான  நிதியும் இந்த பட்ஜெட்டில் குறைக்கப்பட்டுள்ளது. சென்ற பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட ரூ 69,794 கோடியில் இருந்து  63,836 கோடியாக குறைக்கப்பட்டிருக்கின்றது. இந்த லட்சணத்தில் உலகத்தரத்தில் 10 அரசு கல்வி நிறுவனங்களையும் 10 தனியார் கல்வி நிறுவனங்களையும் மேம்படுத்தப் போகின்றார்களாம். சாமானிய மக்களின் குழந்தைகள் பயிலும் கல்விக்கான நிதியை பெருமளவு குறைத்துவிட்டு  யாருடைய குழந்தைகள் படிப்பதற்காக உலகத்தரத்தில் கல்வி நிறுவனங்கள் என்று தெரியவில்லை.

 உணவுப்பொருள்,உரம் மற்றும் பெட்ரோலியப் பொருட்களுக்கான மானியச் செலவு 4 சதவீதம் குறைந்து ரூ2.31 லட்சம் கோடியாக இருக்கும் என்று மத்திய அரசே தெரிவித்துள்ளது. வரும் நிதி ஆண்டில் உணவுப்பொருள், உரம் மற்றும் பெட்ரோலிய பொருட்களுக்கு அரசு வழங்கும் மானியத்தொகை ரூ 231781.61 கோடியாக குறையும். இது நடப்பு 2015- 2016 நிதியாண்டின் மானியச் செலவான ரூ 241856.58 கோடியைவிட  4 சதவீதம் குறைவாகும். அதே போல நடப்பு நிதியாண்டில் 1,39419 கோடியாக உள்ள  உணவுப்பொருள் மானியமும் வரும் நிதியாண்டில் 1,34834 லட்சம் கோடியாக குறைக்கப்பட்டிருக்கின்றது. அதே போல உர மானியமும் ரூ 72437 கோடியில் இருந்து ரூ 70 ஆயிரம் கோடியாக குறைக்கப்பட்டிருக்கின்றது. பெட்ரோலியப்பொருள்களுக்கான  மானியம் ரூ 30 ஆயிரம் கோடியில் இருந்து ரூ 26 947 கோடியாக குறைக்கப்பட்டிருக்கின்றது. சாமானிய மக்களுக்குக் கிடைக்கும் அனைத்துவகையான மானியங்களும் பெரும் அளவில் குறைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் அவர்களிடம் இருந்து அவர்களுக்கே தெரியாமல் மேலும் பணத்தை பிடுங்க மறைமுகவரி பெரும் அளவில் உயர்த்தப்பட்டிருக்கின்றது.

  தொடங்கிடு இந்தியா திட்டத்தின் மூலம் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண்கள் தொழில் தொடங்க ரூ 500 கோடி ஒதுக்கப்பட்டிருக்கின்றது. இதன் மூலம் 2.5 லட்சம் பேர் பயன் அடைவார்களாம். இந்தியாவில் இருக்கும் தாழ்த்தப்பட்ட பெண்களின் எண்ணிக்கைய ஒப்பிட்டு பார்த்தால் இந்தத் திட்டம் ஒரு உலகமகா மோசடி திட்டம் என்பது புலப்படும். மேலும் நாடு முழுவதும் ரூ 1700 கோடியில் 1500 திறன்சார் பயிற்சி மையங்கள் உருவாக்கப்படும் என தெரிவிக்கப் பட்டிருக்கின்றது. படித்துமுடித்து  வெளியே வந்த இளைஞர்களில் 90 சதவீத பேருக்கு வேலையே கிடைப்பதில்லை. இதற்குக் காரணம் திறன் இல்லாமை இல்லை. உண்மையான காரணம் இங்கு தொழிற்சாலைகள் இல்லை என்பதுவே. உற்பத்திசார்ந்த தொழிற்துறைக்கு முன்னுரிமை அளிக்காமல் சும்மா திறனை மேம்படுத்துகின்றேன்  அதற்கு பயிற்சி அளிக்கின்றேன் என்று சொல்வதெல்லாம் இளைஞர்களை ஏமாற்றும் சூழ்ச்சியேயாகும்.

 மக்களின் வரிப்பணத்தில்  ஜனசங்கத்தின் நிறுவனரான தீனதயாளு உபாத்யாயவின் பிறந்த நாளைக் கொண்டாட நூறுகோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. எவன் வீட்டு பணத்தில் எவன் பிறந்த நாளை கொண்டாடுவது என்று பார்த்தீர்களா? இனி வரும் காலங்களில் கோட்சேவின் பிறந்த நாளை கொண்டாட மக்களின் வரிப்பணம் செலவிடப்பட்டாலும் செலவிடப்படலாம்.

 மேலும் இந்த பட்ஜெட்டில் மிகப்பெரிய மோசடி  ஒன்றையும் அருண்ஜெட்லி அரங்கேற்றி உள்ளார். அது என்னவென்றால் ராணுவத்திற்கான நிதி ஒதுக்கீடு எவ்வளவு என்று வெளிப்படையாக  சொல்லாதது ஆகும். சென்ற ஆண்டு ராணுவத்திற்கு 2,46,727 கோடிகள் ஒதுக்கப்பட்டன. இது கடும் விமர்சனத்திற்கு ஆளானது. கோடிக்கணக்கான மக்கள் ஒருவேளை சோற்றுக்கே வழியற்று இருக்கும் ஒரு நாட்டில் இராணுவத்திற்கு இவ்வளவு நிதி ஒதுக்கவேண்டுமா என்று. அதனால் இந்த பட்ஜேட்டில் திட்டமிட்டே ராணுவத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி பற்றிய விவரங்கள் மூடிமறைக்கப்பட்டிருக்கின்றன.  பி.ஜே.பிக்கு பாகிஸ்தான், சீனா என நிறைய எதிரிகள்  இருப்பதால் நிச்சயம் அவை போன ஆண்டைவிட இந்த ஆண்டு அதிகம் இருக்கும் என நாம் எதிர்பார்க்கலாம்.

 ஒட்டுமொத்தமாக மதிப்பிட்டால் இந்தப் பட்ஜெட் குரளி வித்தை காட்டி உங்களிடம் இருந்து பணம் பறிக்கும் பட்ஜெட் ஆகும்.

 - செ.கார்கி