எதிர்வரும் 2016 - சட்டமன்றத் தேர்தலில் தங்கள் கட்சி தயாரிக்கும் தேர்தல் வாக்குறுதிகளில், எமது ‘புதிய குரல்’ அமைப்பு முன்வைக்கும் மக்கள் நலன் சார்ந்த மூன்று கோரிக்கைகளையும் சேர்க்க வேண்டும் எனத் தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

புதிய குரல் ஓர் அறிமுகம்:

“சாதியற்ற, பாலின சமத்துவமுள்ள தமிழ்ச்சமூகம்! அதுவே இலக்கு!” என்னும் முழக்கத்தை முன்வைத்து, எங்கள் ‘புதியகுரல்’ அமைப்பு கடந்த ஐந்தாண்டுகளாக, சமூகநீதிக் களத்தில் செயல்பட்டு வருகிறது. வளர்ந்து வரும் தமிழ்ச்சூழலில் “சாதி ஒடுக்குமுறைக்கு எதிரான குரல்கள்” ஓரளவு வளர்ந்து இருக்கின்றன. ஆனால் சாதியற்றோர்களுக்கான வெளி குறைந்துக் கொண்டே போகிறது. சாதியை மறுப்பதென்பதும் பெண்ணடிமையை மறுப்பதென்பதும் ஒரு மாற்றுவெளியை கட்டுவதற்கானத் தேவையை முன்னிறுத்துகின்றன. அந்த மாபெரும் பணியில் சிற்றுளியாய் நம்மை இணைத்துக் கொள்ளும் தளம்தான் புதிய குரல். பல்வேறு துறைகளைச் சார்ந்த 500 தோழர்கள் இதில் உறுப்பினர்களாக உள்ளனர். புதிய குரல் கட்சி பேதமில்லாமல் இயங்கும் ஓர் அமைப்பாகும்.

சாதிக்கு எதிராகக் குரல் கொடுப்பதோடு, சாதிக்கு ஆதரவான எந்தவொரு குரலையும், அமைப்பையும் எதிர்ப்பதும் புதியகுரல் உறுப்பினர்களின் தீர்மானிக்கப்பட்ட கடமையாக இருக்கிறது. அன்று குடும்பம் குடும்பமாகத் திராவிட இயக்க மாநாடுகளில் கலந்து கொண்டதை, அவ்வியக்க வரலாற்றில் காணலாம். அதேபோன்றதொரு சூழலை புதியகுரல் அமைப்பு இன்று உருவாக்கி இருக்கிறது. தனி மனிதர்களாக இல்லாமல், குடும்பம் குடும்பமாக இந்த அமைப்பில் உறுப்பினர்களாகச் சேர்ந்து பணியாற்றி வருகின்றனர். அவ்வகையில் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டோருக்கான ஒரு உறவு வெளியாகவும் இயங்குகிறது ‘புதியகுரல்’ அமைப்பு.

‘பெண்ணடிமையை வேரறுப்போம்! மனித நேயம் வளர்த்தெடுப்போம்!’ என்ற முழக்கத்துடன் பெண் விடுதலையை மாந்தர் விடுதலைக்கு முன் நிபந்தனையாகக் கொண்டு, 1987இல் தொடங்கப்பட்டு, செயல்பட்டு வந்த மகளிர் விடுதலை மன்றத்தாரால் நடத்தப்பட்டு வந்த சிற்றிதழின் பெயர் புதியகுரல்.

இந்தியாவிலேயே முதல் பெண் பேருந்து ஓட்டுனர் (நாகர்கோயிலைச் சேர்ந்த வசந்தகுமாரி) நியமனம், இந்து அறநிலையத் துறை பதவி உயர்வுகளில் பெண்கள் மீதான தீண்டாமை ஒழிப்பு போன்ற பல்வேறு செயல்திட்டங்களில் தனது இலக்கை அடைவதில் மகளிர் விடுதலை மன்றம், தமிழினப் பெண்கள் விடுதலை இயக்கம் போன்ற அமைப்புகளுக்குக் கேடயமாகப் விளங்கியதுடன், அவ்வியக்கங்களை நாடு முழுவதும் எடுத்துச் சென்ற புதிய குரல் இதழ், ஏழாண்டுகள் வரை நடத்தப்பட்டது.தற்போது, சமூக சூழலின் தேவை கருதி, இரண்டாவது கட்டச் செயல்பாடாகவும், மகளிர் விடுதலை மன்றம் மற்றும் தமிழினப் பெண்கள் விடுதலை இயக்கத்தின் தொடர்ச்சியாகவும் கடந்த 2012ஆம் ஆண்டில் இருந்து, சாதியற்ற சமுதாயம் படைப்போம் என்னும் இலக்கோடு  ஒரு கலாச்சார அமைப்பாக மீண்டும் செயல்படத் தொடங்கியிருக்கிறது. புதிய குரலின் பயணம், குற்றாலம், குன்னூர் திண்டுக்கல், கன்னியாகுமரி, கோவை, கொடைக்கானல், சென்னை எனத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அறிவார்ந்த தோழர்களின் பங்களிப்பில் , மாதமொருமுறை படிப்பு வட்டக் கூட்டம் மற்றும் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை குடும்ப சந்திப்புகள் நடத்தப்படுகின்றன.  டிசம்பர், மே மாதங்களில் தமிழகத்தின் ஏதேனும் ஒரு சுற்றுலாத் தலத்தில், தமிழ்கமெங்கும் உள்ள இதன் உறுப்பினர்கள் குடும்பத்துடன் கூடி,  சமூக, அரசியல் தொடர்பாக பல்வேறு தலைப்புகளில் விவாதிப்பது, கருத்தரங்குகள் நடத்துவது, சாதியற்ற எதிர்காலத் தலைமுறைகளை உருவாக்கும் அடித்தளமாக, குழந்தைகள் பழகு முகாம் நடத்துவது என செயல்பட்டு வருகின்றனர்.

எமது அமைப்பின் சார்பாக முன் வைக்கப்படும், மக்கள் நலன் சார்ந்த சில கோரிக்கைகளைத் தங்கள் கட்சியின் 2016 – சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதிப் பட்டியலில் இடம்பெறச் செய்யும்படி வேண்டுகிறோம்.

எமது கோரிக்கைகள்:

கோரிக்கை – 1

பள்ளி கல்லூரிகளில் சேர்க்கையின்போது மட்டுமே சாதி சான்றிதழ் பரிசீலிக்கப் படவும் வாங்கப் படவும் வேண்டும். அதன்பின் அவை முக்கிய இரகசிய கோப்புகளாக அந்தந்த கல்வி நிறுவன அலுவலகங்களில் முதன்மை அலுவலர்கள் கட்டுப்பாட்டில் வைக்கப் பட வேண்டும். சாதி அடிப்படையில் வழங்கப்படும் சலுகைகள் மற்றும் பிற உதவிகள் மாவட்டக் கருவூலம் வங்கிகள் அல்லது பிற்படுத்தப்பட்டோர் அல்லது தாழ்த்தப்பட்டோர் நலத் துறைகள் வாயிலாக வழங்கப் பட வேண்டும். அதாவது சேர்க்கையின் போது தவிர சாதிக்கும் கல்வி வளாகங்களுக்கும் எந்தத் தொடர்பும்இருக்கக் கூடாது.

கோரிக்கையின் தேவை: அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ளது போன்று, அறிவியல் மனப்பான்மையை வளர்த்தெடுக்க வேண்டிய பள்ளிக்கூட வளாகங்கள் சாதிய மனப்பான்மையை மாணவர்கள் சிந்தனையில் விதைக்கத் தொடங்கியுள்ளன. நமது பள்ளிகளில் இட ஒதுக்கீட்டின் படி மாணவர்களுக்கு சேர்க்கை நடத்துவது அந்தப் பள்ளி நிர்வாகங்களின் கடமையும் பணியுமாகும். இந்த வேலையை அந்தப் பள்ளி நிர்வாக அலுவலகம் மாணவர் சேர்க்கையின் போது மட்டும் செய்தால் போதும். ஆனால் இன்றைய நிலவரப்படி, பள்ளிகளில், மாணவர்களின் சாதியை அல்லது சாதிபிரிவை நாட்குறிப்பில், வருகைப் பதிவேட்டில் குறிக்கின்ற நிலை காணப்படுகிறது. இவ்வாறு செய்யுமாறு பள்ளி நிர்வாகத்தை எந்த சட்டமும் கேட்கவில்லை. இருந்தும் ஏன் அதைச் செய்கின்றனர்? தென் மாவட்டங்களில் சில பள்ளிகளில், கைகளில் வண்ணக் கயிறுகளைக் கட்டிக்கொண்டு, சாதியக் குழுக்களாக மாணவர்கள் பிரிந்து கிடப்பதை, தமிழ்நாட்டின் முன்னணி ஏடுகள் வெளிப்படுத்தி இருக்கின்றன. இந்தச் சாதியப் பிரிவினையின் பின்னணியில் பல ஆசிரியர்களே இருக்கின்றனர் என்பது கசப்பான உண்மை.

மேலும், அரசு உதவி பெறும் பட்டியல் பிரிவு மாணவர்களை, வகுப்பறையில் எழுந்து நிற்கச் செய்து பிரித்துக்காட்டும் போது, பிற மாணவர்களிடம் இருந்து அவர்கள் தனிமைப்பட நேரிடுகிறது. இது அவர்கள் சாதி அடிப்படையில் ஒன்று சேர்வதற்கும், மோதல்கள் ஏற்படுவதற்கும் ஒரு காரணமாக அமைந்து விடுகிறது. இவ்வாறாக சாதியை ஒழிப்பதற்காக உருவாக்கப் பட்ட இடஒதுக்கீடு சலுகையை சாதி அமைப்பை வலுவாக்குவதற்காகப் பயன்படுத்துகிறார்கள்.
இதனை உடனடியாக தடுத்து மாற்றுவதற்கான சமுதாயத் தேவை இன்று முன்னணியில் இருக்கிறது. பெருகி வரும் சாதிய மோதல்களைக் கட்டமைப்பதின் அடித்தளத்தில் பள்ளிக்கூடங்கள் மவுனமாக பங்காற்றிக் கொண்டிருக்கின்றன. அரசின் உதவி என்பது சலுகையன்று...அந்த மாணவர்களுக்கான உரிமை என்பதை பாடத்திட்டங்களில் கொண்டுவந்து விளக்காதவரை, பள்ளி வளாகங்களுக்குள் சாதி என்பது இருபக்கக் கூர்மையான ஆயுதத்தைப் போன்று செயல்படக்கூடியது என்பதை உணரவேண்டியது அவசியமாகிறது. எனவே, பள்ளிக்கூடங்களின் வளாகத்திற்குள், குறிப்பாக வகுப்பறைக்குள் சாதி கேட்கப்படவோ, வெளிப்படுத்தப்படவோ கூடாது என்பதற்கான சட்டம் இயற்றப்பட வேண்டும் என்பது எங்கள் புதிய குரல் அமைப்பின் கோரிக்கை. சாதியற்ற, பாலின சமத்துவமுள்ள தமிழ்ச் சமூகத்தைக் கட்டமைக்கும் பணியின் ஒரு முக்கிய பகுதியாக இந்தக் கோரிக்கையைத் தங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம் பெறச் செய்ய வேண்டும் என வேண்டுகிறோம்.

கோரிக்கை – 2

தமிழ்நாட்டில் கிராமங்கள் தோறும் அரசு பொது மயானங்கள் அமைக்கப்பட்டு, அனைத்து மக்களும் அந்த மயானத்தை மட்டுமே பொதுவானதாகப் பயன்படுத்த வழிவகை செய்ய வேண்டும். சாதிக்கொரு மயானம் என்பது கண்டிப்பாகத் தடை செய்யப்பட வேண்டும்.

கோரிக்கைக்கான தேவை :

“ஊரெலாம் கூடி ஒலிக்க அழுதிட்டு

பேரினை நீக்கிப் பிணமென்று பெயரிட்டு

சூறையம் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு

நீரிலே மூழ்கி நினைப்பொழிந்தார்கள்” என்கிறது ஒரு பழைய தமிழ்ப்பாடல்.

ஆனால் அந்தப் பிணத்தின் மீதும் விடாமல் சாதியைப் போர்த்தி, மயானம் வரை சாதி இழிவைச் சுமந்து திரிகிறார்கள். பிறப்பின் வழி திணிக்கப்பட்ட சாதி இழிவை, உயிரோடு வாழும் நாளெல்லாம் சுமந்துதிரியும், மக்கள் கூட்டம் செத்த பிறகும், சாதிக்கொரு மயானம் வைத்து, அதன் பெயரால் அவமானகரமான வகையில் சண்டைகளை உருவாக்கி வருவதை நாளும் பார்க்கிறோம். குறிப்பாக ஊருக்கு ஒதுக்குப்புறமாக வாழ நிர்பந்திக்கப்பட்டுள்ள தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள், இறந்தவர்களின் உடலை மரியாதையுடன் அடக்கம் செய்ய, ஆதிக்க சாதிகளுடன் போராட வேண்டியுள்ளது. பிணத்தை அடக்கம் செய்யக் கூட நீதிமன்றம் தலையிட வேண்டிய அவலமான நிலை, சமூக நீதி மண்ணான தமிழகத்தில் நிலவுவது வேதனை தரக்கூடியதாக உள்ளது. அண்மையில் மயிலாடுதுறை அருகில், திருநாள் கொண்டச்சேரி கிராமத்தில், இறந்துபோன தாழ்த்தப்பட்ட முதியவரின் உடலை, பொது வழியில் கொண்டு செல்லக் கூடாது எனக் கூறி ஆதிக்க சாதிகள் தடுத்ததால், மூன்று நாள்களுக்கும் மேலாக பிணத்தை அடக்கம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டதையும், நீதிமன்ற உத்தரவையும் ஆதிக்க சாதிகள் மதிக்கவில்லை என்பதையும் அனைவரும் அறிவோம். இந்த இழிநிலையை மாற்ற, பொது மயானங்கள் அமைப்பதே தீர்வாக அமையும் என புதிய குரல் கருதுகிறது.

கோரிக்கை – 3

மிகுந்த சமூக ஒடுக்குமுறைக்கு ஆளாகிவரும் திருநர் அதாவது திருநங்கை மற்றும் திருநம்பியருக்குக் கல்வி வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

கோரிக்கைக்கான தேவை :  சமூகத்தின் விளிம்பு நிலையில் வாழும், பாலின சிறுபான்மையினரான மாற்றுப்பாலினத்தவர்கள், அதிகளவிலான சமூக ஒடுக்குமுறைகளுக்கு ஆளாகி வருகின்றனர். பெற்றோர்களாலும் வெறுத்து ஒதுக்கப்பட்டு, சமூகப் புறக்கணிப்புக்கும் ஆளாகி வரும் திருநங்கை, திருநம்பியர் உள்ளிட்ட திருநர்களும் நாம் வாழும் இந்த சமூகத்தின் அங்கத்தினர்கள்தான் என்னும் புரிதல் இன்னும் பெரும்பான்மை மக்களைச் சென்றடையவில்லை. இந்நிலையில், அவர்களை பிச்சை எடுப்பவர்களாகவும், பாலியல் தொழில் செய்பவர்களாகவுமே இன்னும் இந்தச் சமூகம் பார்க்கிறது. நமது அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள கண்ணியத்துடன் வாழும் உரிமை அவர்களுக்கும் உண்டு என்பதை உணர்ந்து, நம்மின் சக மனிதர்களான அவர்கள் கண்ணியத்துடன் வாழ்வதை உறுதி செய்ய வேண்டியது அனைவரின் கடமையாகும்.

அவர்களில் ஒரு சிலர் கடுமையான போராட்டங்களுக்குப் பிறகு, பொறியியல் பட்டதாரிகளாகவும், ஊடகத்துறை, கலைத்துறை உள்ளிட்ட துறைகளில் வல்லுநர்களாகவும் தங்களை நிலைநிறுத்திக் கொண்டுள்ளனர். இவர்களைப் போன்று, அனைத்து திருநர்களும் தன்மானத்துடன் வாழ்வதற்கு, கல்வியும், அதன் அடிப்படையில் வேலை வாய்ப்பும் முக்கியத் தேவையாகக் கருதப்படுகின்றன. கடும் ஒடுக்குமுறைகளுக்கு ஆளாகி வரும் திருநர்களுக்குக் கல்வி, வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்குவதுதான், அவர்களைப் பொதுச்சமூகத்தோடு இணைந்து சுயமரியாதையுடன் வாழவைக்கும் என்பது புதிய குரலின் கருத்து. இந்தியாவிலேயே முதல்முறையாகத் திருநங்கைகளுக்கான நலவாரியம் கண்ட தமிழ்நாடு, அவர்களுக்குக் கல்வி வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்கி உலகிற்கே முன்னுதாரணமாகத் திகழத் தங்கள் கட்சியின் ஆட்சியின் மூலம் ஆவன செய்திட வேண்டுகிறோம்.

எமது புதிய குரல் அமைப்பு முன்வைத்துள்ள இந்தக் கோரிக்கைகளைத் தங்கள் கட்சியின் தேர்தல் வாக்குறுதிப் பட்டியலில் இணைத்து, அவற்றைச் சட்டங்களாக்கியும், திட்டங்கள் தீட்டியும் நடைமுறைப்படுத்தும் சமூக நீதி நல்லாட்சியைத் தங்களின் கட்சி அளிக்கும் என நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறோம்.

நன்றி,

தோழமையுடன்

புதிய குரல்