தமிழ் இன மக்களின் பாரம்பரியப் பண்பாடு எனக் கூறப்படும் சல்லிக்கட்டு விளையாட்டை இன்று அனைத்துத் தமிழ் இன மக்களுக்குமானது என எடுத்துக் கொள்ள முடியுமா?

சங்க காலத்தில் முல்லை நிலத்தில் வாழ்ந்த ஆயர் இன மக்களின் பண்பாடாக ஏறு தழுவுதல் இருந்துள்ளதை கலித்தொகை, மலைபடுகடாம் போன்ற பழந்தமிழ் நூல்கள் கூறுகின்றன. சீற்றமிக்க காளைகளை அடக்கும் வீரனுக்குத் தனது மகளை மணம் முடித்துக் கொடுக்கும் பண்பாடும் அப்பொழுது இருந்து வந்துள்ளது. ஏற்றத்தாழ்வற்ற, சாதிகள் தோன்றியிராத அந்தக் காலகட்டத்தில் அந்தப் பண்பாடு நிலவி வந்ததற்குச் சாத்தியம் உள்ளது. ஆனால் பிறகு சாதிகளாகப் பிளவுபட்ட சமூகத்தில் அந்தப் பண்பாடு தொடர்ந்து நிலவுவது சாத்தியமில்லை. சமூகத்தில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப அந்தச் சமூகத்தின் பண்பாடுகளிலும் மாற்றங்கள் ஏற்படுவது என்பதும் இயல்பான ஒன்றே.

வரலாற்றுக் காலத்தில் பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளான ஏறு தழுவுதல் என்னும் விளையாட்டு இன்று தமிழ் நாட்டின் பல பகுதிகளிலும் ஒரே வடிவத்தில் நடைபெறுவதில்லை. மாடு பிடித்தல், மஞ்சு விரட்டு, எருத்தாட்டம் எனப் பல வடிவங்களில் நடைபெற்று வருகின்றன.

ஏறு தழுவுதல் என்னும் ஒரு இனக் குழுவின் வீர விளையாட்டு காலப்போக்கில் நில உடைமை வர்க்கத்தின் காளைகளை உழைக்கும் வர்க்கத்தைச் சார்ந்தவர்கள் அடக்கும் வீர விளையாட்டாக மாற்றமடைந்தது. காளைகளின் கொம்புகளில் சல்லிக்காசுகளைக் கட்டி விட்டு, அந்தக் காளையை அடக்குபவர்கள அந்தக் காசுகளை எடுத்துக் கொள்ளலாம் என ஆசை காட்டப்பட்டார்கள். வீரம் என்ற பெயரிலும், புகழ் என்ற பெயரிலும் இளைஞர்கள் ஊக்குவிக்கப்பட்டனர். எது வீரம், எது புகழ் என்பதெல்லாம் அந்த அந்தக் காலகட்டத்திற்கேற்பக் கட்டமைக்கப்படுவதுதானே! வீரம், புகழ் என்ற பெயரில் இளைஞர்கள் காளைகளை அடக்குவதை மேட்டுக்குடி உடைமை வர்க்கம் கண்டு களிக்கும். அவ்வாறு காளைகளை அடக்க முயலும் பல இளைஞர்கள் காளைகளின் கூரிய கொம்புகளால் குத்தப்பட்டுக் குடல் சரிந்து மரணத்தை எய்துவர். அதனால் பல பெண்கள் விதவைகள் ஆன நிகழ்வுகள் பாலமேடு, அலங்காநல்லூர் பகுதிகளில் ஆண்டாண்டு தோறும் நடந்து வருவதைக் காணலாம். சிரமறுத்தல் வேந்தனுக்கோ பொழுதுபோக்கு. மக்களுக்கோ உயிர்வாதை!

அலங்காநல்லூர், பாலமேடு பகுதிகளில் நடைபெற்று வரும் சல்லிக்கட்டுகள் முதலாளியச் சூழலில் இன்று முற்றிலும் வணிகமயமாக்கப்பட்டுள்ளது. சல்லிகட்டுக்கான தடையை நீக்குவதற்கு மத்திய அரசு ஆணை ஒன்றைப் பிறப்பித்ததும் காளைகளின் விலை இரண்டு, மூன்று மடங்கு உயர்ந்ததாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. சல்லிகட்டு இன்று பெரும் தேர்த்திருவிழா போல மாற்றப்பட்டு, பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடும் இடமாக மாற்றப்படுகிறது. பெரும் வணிகச் சந்தையாக மாற்றப்படுகிறது. காளைகளை அடக்குபவர்களுக்கு இரு சக்கர வாகனங்கள் வழங்குவதாகவும், வீட்டுக்குப் பயன்படும் சாதனங்கள் வழங்குவதாகவும் வணிக நிறுவனங்கள் அறிவித்து அதன் மூலம் தங்கள் வணிகத்தை அதிகரித்துக்கொள்ளப் பார்க்கின்றன. சல்லிக்கட்டைப் பார்க்க வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் ஆகியவற்றில் இருந்து மட்டுமல்லாமல் வெளி நாடுகளில் இருந்தும் பார்வையாளர்கள் வருகின்றனர். இவ்வாறு சல்லிக்கட்டு இன்று ஒரு சுற்றுலாக் காட்சிப்பொருளாக மாற்றப்பட்டு, அதனால் இலாபம் அடைவோர் பல்கிப் பெருகி உள்ளன. இவர்கள் அனைவரும் கண்டு களிக்கவும், இலாபம் அடையவும் நமது உழைக்கும் மக்களின் இன்னுயிர்கள் வீரம் என்ற பெயரிலும், பாரம்பரியத் தமிழ்ப் பண்பாடு என்ற பெயரிலும் பலியிடப்படத்தான் வேண்டுமா?

அலங்காநல்லூர், பாலமேடு பகுதிகளில் நடைபெறும் சல்லிக்கட்டுகளைப் போல தமிழகத்தின் வேறு பகுதிகளில் நடைபெறுவதில்லை. நான் ஏற்கனவே கூறியதைப் போல பல வேறுபட்ட வடிவங்களில் நடைபெற்று வருகின்றன. ஆனால் அலங்காநல்லூர், பாலமேடு சல்லிக்கட்டுகள் மட்டும்தான் தமிழ் இனத்தின் பாரம்பரியப் பண்பாடுபோல இன்று ஊடகங்களாலும், அரசியல்வாதிகளாலும், சல்லிக்கட்டு ஆர்வலர்களாலும் பரப்புரை செய்யப்பட்டு வருகின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தூங்கிக் கொண்டிருந்த ஆளுங்கட்சிகள், எதிர்க்கட்சிகள் என அனைவரும் தேர்தல் நெருங்க நெருங்க தங்கள் இனப் பற்றைத் தம்பட்டமடித்து அரசியல் இலாபம் அடையத் துடித்துக் கொண்டிருக்கின்றன. தமிழ் மக்களிடையே உள்ள இன உணர்வை வாக்குகளாக மாற்றுவதற்குப் போட்டியில் இறங்கியுள்ளன. தேசிய இனங்களின் தனித்தன்மையை ஒப்புக்கொள்ளாத, இந்துக் கலாச்சாரம் என்ற ஒற்றைப் பண்பாட்டையே தனது வேத மந்திரமாகக் கொண்டிருக்கும் பாஜக கூடத் தமிழ் இனப் பற்றாளன் வேடத்தைத் தாங்கி உள்ளது! என்னே ஆச்சரியம்!

சல்லிக்கட்டில் உள்ள வர்க்கத்தன்மையையும், அதனால் தாம் இலாபம் அடைந்து வருவதையும் உடைமை வர்க்கங்கள் மூடி மறைத்து வருகின்றன. அதனால் சல்லிகட்டு மீதான தடையை உள் நாட்டில் உள்ள பசு இனங்களை ஒழிக்க ஏகாதியபத்தியங்களும், அவற்றின் அடிவருடிகளும் செய்யும் சதி எனப் பரப்புரை செய்து வருகின்றனர். சல்லிகட்டு இல்லாவிட்டால் நமது நாட்டுப் பசு இனங்கள் அழிந்து விடும் என்றும் கூறி வருகின்றனர். இந்தப் பரப்புரைக்கு உழைக்கும் மக்களின் விடுதலை மீது உண்மையான பற்றுக் கொண்ட, அதே சமயத்தில் தமது இன உணர்விலிருந்து இன்னும் விடுபடாதவர்களும் இரையாகி வருகின்றனர். நமது நாட்டுக்குரிய பசு இனங்களை ஒழிக்க ஏகாதிபத்தியங்கள் புதியதாகச் சதி எதுவும் செய்யத் தேவையில்லை. ஏற்கனவே நமது காங்கேயம், பர்கூர், உம்பளாச்சேரி புலிக்குளம் பசு இனங்கள் பெரும்பகுதி அழிக்கப்பட்டு விட்டன. இவ்வளவு நாட்கள் சல்லிக்கட்டு தொடர்ந்து நடத்தப்பட்டு வந்தும் ஏன் அவை காப்பாற்றப்படவில்லை?

கடந்த காலங்களில் மாடுகள் இல்லாத வேளாண்மையைக் கனவிலும் கருத முடியாது. வேளாண்மைப் பணிகளுக்கு, ஏர் உழுவதற்கும், ஏற்றம் இறைப்பதற்கும், வண்டி இழுப்பதற்கும் மாடுகள் இன்றியமையாதவையாக இருந்தன. காளைகளும், எருதுகளும் தேவையாய் இருந்தன. மாடுகள் கூடப் பால் கறப்பதற்காக மட்டுமல்லாமல் வேளாண்மைப் பணிகளுக்கும் பயன்படுத்தப்பட்டன. வேளாண்மையில் முதலாளிய உற்பத்திமுறை நுழைந்ததும், இயந்திரங்கள் புகுத்தப்பட்டதும் மாடுகளின் பங்கு வேளாண்மையில் குறைந்தது. காளைகளும், எருதுகளும் தேவையற்றுப் போயின. அனைத்தையும் பண்டமாக்கி இலாபம் சம்பாதிக்கும் முதலாளியம் பாலையும் பண்டமாக்கியது. குறைவான பால் உற்பத்தித்திறன் கொண்ட நாட்டு மாடுகள் விவசாயிகளுக்கு இலாபகரமாகத் தெரியவில்லை. இங்குள்ள கால்நடைப் பல்கலைக் கழகங்களும் நமது சூழலில் வாழும் நாட்டு இன மாடுகளை மேலும் மேம்படுத்தி அவற்றின் பால் உற்பத்தித்திறனை எவ்வாறு அதிகரிப்பது என்றஆராய்ச்சியில் ஈடுபடுவதற்குப் பதிலாக, அதிகப் பால் உற்பத்தித்திறன் கொண்ட மேலை நாட்டுப் பசு இனங்களை இங்கு புகுத்துவது எளிது எனக் கருதினர். -ஏகாதிபத்திய நாடுகளின் சிந்தனைத் தாக்கத்தில் இருக்கும் நமது ஆராய்ச்சி நிறுவனங்களும், ஆராய்ச்சியாளர்களும் அவ்வாறு இருப்பதில் வியப்பு ஒன்றுமில்லைதான். – அதன் விளைவாக நமது விவசாயிகள் நாட்டு மாடுகளைக் கை விட்டனர். ஜெர்சி, ஃப்ரேஸ்டியன் என அந்நிய நாட்டு இன மாடுகளை வளர்க்கத் தொடங்கி விட்டனர். இதுதான் நமது நாட்டு இன மாடுகள் அழிந்த அண்மைக் கால வரலாறு. ஆனால் இதை எல்லாம் மறைத்து விட்டு இப்பொழுதுதான் சதி தொடங்கியதாகப் பரப்புரை செய்து வருகின்றனர். இது நாள் வரை இந்த ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பது புரியவில்லை.

இந்தப் போலித் தேச பக்தர்களின் பரப்புரைக்கும், தமிழ் இன உணர்வுக்கும் இரையாகாமல் சல்லிக்கட்டின் அடிநாதமாக இருக்கும் வர்க்கத்தன்மையையும், உடைமை வர்க்கங்களின் இலாப நோக்கையும் புரிந்து கொள்ள வேண்டும். உழைக்கும் மக்களுக்கு வர்க்க உணர்வை ஊட்டி அவர்களது விடுதலை பற்றிச் சிந்திக்க வைக்க வேண்டும்.

- புவிமைந்தன்