நற்சிந்தனையும், நல்லெண்ணமுமே நமது சமயம்!
சமத்துவமே நமது சடங்கு!

இந்து மதம் என்பது ஷண் மதம். அதாவது ஆறு சமயங்களின் தொகுப்பு. (ஷண்முகம் = ஆறுமுகம்)

ஆறு சமயங்களுக்கும் வெவ்வேறு விதமான நம்பிக்கைகளும், விதிமுறைகளும் இருக்கின்றன.

குறிப்பாக நடைமுறையில் சைவம், வைணவம் என்ற இருவேறு பெரிய சமயங்கள் வெவ்வேறு பழக்க வழக்கங்களைக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

இந்த பூசனைக்கானச் சடங்கு முறைகளைக் கூறும் விதிமுறைகளை ஆகம விதி முறைகள் என்று கூறுகிறார்கள். இந்த ஆகமம் ஒரே சீரான நடைமுறையை கோவில்களுக்குள் கொண்டுவருவதற்கு உதவும் சட்டமே.

எப்படி என்றால்... சாலையில் நடக்கும் போது இடது பக்கமாகச் செல்லவேண்டும் என்பது சாலை விதிமுறை, அதுபோலவே ஆகமமும் கோவில் நடைமுறை பற்றியது.

brahmins 600

இந்த ஆகம விதிமுறைகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் எந்தவிதமான தொடர்பும் கிடையாது.

இறை நம்பிக்கை என்பது முற்றிலும் ஆகம விதியிலிருந்து மாறுபட்டது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு முறையில் இறைவனை வணங்கும் அனுபவங்களை நாம் பார்க்கிறோம்.

இறை நம்பிக்கைக்குள் ஆகம விதி பொருந்தாது.

ஒவ்வொரு கோவிலுக்குள்ளும் நடத்தப்படும் சடங்கு முறைகளை ஒற்றுமைப்படுத்தவே ஆகம விதிமுறைகள் பயன்படுமே தவிர மக்களின் நம்பிக்கைகளுக்குள் அது தலையிட முடியாது.

அதிலும் குறிப்பாக இன்று பள்ளிகளில் மாணவர்களிடத்தில் பிரிவினையை உண்டாக்கக் கூடாது என்பதற்காக பின்பற்றப்படும் சீருடை முறைமையைப் போல பக்தர்களிடத்தில் ஒத்த நடைமுறையை உண்டாக்குவதற்காக (ஆண்கள் சட்டை அணியாமல் செல்வது, வேட்டி கட்டிக்கொண்டு செல்வது, பெண்கள் பூ வைத்துக்கொள்ளாமல் செல்வது போன்றவை) ஆகமங்கள் உள்ளன.

ஆகம விதிகளின் படி அனைத்து சாதியினரும் அர்ச்சகராக எவ்வித தடையும் இல்லை என்பது ஆகம விதிகளைக் கற்றறிந்த வல்லுநர்களின் கருத்து.

சட்டப்படியும் அனைத்து சாதியினரும் அர்ச்சகராக எவ்வித தடையும் இல்லை என்பது சட்ட வல்லுநர்களின் கருத்து.

பிறகு எப்படி பிறப்பின் அடிப்படையில் அர்ச்சகர் நியமனம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது?

அதற்கான அடிப்படை எது?

வழி வழியாக கோவில்கள் மூலம் யார் பயன்பட்டு வந்தார்களோ அவர்கள்தான் இதற்கு தடையாக இருக்கிறார்கள்.

தமிழகத்தில் தேவதாசி ஒழிப்புச் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது அதை தீரர் சத்திய மூர்த்தி எதிர்த்ததாக வரலாறு கூறுகிறது. அந்த மசோதாவை சட்டமன்றத்தில் கொண்டுவந்தது அப்போது சட்டசபையில் ஒரே பெண் உறுப்பினராக இருந்த முத்துலெட்சுமி ரெட்டி. இவர் தேவதாசி சமூகத்திலில் பிறந்து, தான் கற்ற கல்வியால் உயர்ந்து, சமூக சிந்தனையால் மக்களிடத்தில் செல்வாக்கைப் பெற்றவர். தான் பிறந்த சமூகம், மதத்தின் பெயரால் தொடர்ந்து இழிவு படுத்தப்படுவதை எதிர்க்கும் துணிவு டாக்டர் முத்து லெட்சுமி ரெட்டிக்கு இருந்தது.

ஆனால் எந்த பிற்படுத்தப்பட்ட(B.C), மிகவும் பிற்படுத்தப்பட்ட(M.B.C), தாழ்த்தப்பட்ட(SC) மக்கள் தொடர்ந்து மதச் சடங்குகளால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்களோ அந்தச் சமூக மக்களே பிற்போக்கான சடங்குகளை பின்பற்றி வருவதால்தான் இது போன்ற சட்டங்களை நடைமுறைப்படுத்த முடியாமல் போகிறது.

அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதற்கு பார்ப்பனியத்தால் ஊறித்திழைத்த இந்த சமூகமும் ஒரு தடைக்கல்லாக இருக்கிறது. மக்களிடம் உள்ள பார்ப்பனியச் சிந்தனையும் செயல்பாடும்தான் இதுபோன்ற அவலங்கள் தொடர்ந்து நடப்பதற்கு காரணமாக அமைகிறது.

பெண் கல்வி மறுக்கப்பட்டபோது பெண் உரிமைக்காக மக்களிடம் எழுச்சி இருந்தது.

உடன் கட்டை ஏறும் வழக்கத்தை நிறுத்த மக்களிடம் எழுச்சி உண்டானது. 

அனைத்து சாதியினருக்கும் கல்வி என்பது மத அடிப்படையில் மறுக்கப்பட்டபோது அதை எதிர்த்த குரல் ஓங்கி ஒலித்தது.

அனைத்து சாதியினரும் கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுத்தபோது சமூகத்தில் எதிர்ப்பு உருவானது.

இன்று இளம் வயதில் மொட்டை போட்டுக் கொண்டிருக்கும் பார்ப்பன இளம் விதவைப் பெண்களைப் பார்க்க முடிவதில்லை, நகரங்களில் உள்ள கோவில்களில் சாதி பார்த்து அனுமதிக்கும் வழக்கம் நின்று போய்விட்டது(ஊர்ப்புறங்களில் இன்றும் உள்ளது). உடன்கட்டை ஏறும் வழக்கம் இன்று முற்றிலும் அழிந்துவிட்டது. பெண்கள் மறுமணம் தவிர்க்க இயலாததாகிவிட்டது. பெண்கள் எல்லா துறைகளிலும் சாதனை படைத்து வருகிறார்கள். இவைகளெல்லாம் சாத்தியமானால் கோவில்களுக்குள் அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதற்கு தடையேதும் இருந்துவிடப்போவதில்லை.

எரிகிற கொல்லியை எடுத்துவிட்டால் கொழுந்துவிட்டு எரியும் நெருப்பை அணைத்துவிடலாம் என்பது பழமொழி. அதுபோல மக்களிடம் உள்ள பார்ப்பன சிந்தனையை ஒழித்தால்தான் இது சாத்தியமாகும்.

திருமணத்தின்போது, குழந்தை பிறப்பின்போது, குழந்தைக்குப் பெயர் சூட்டும்போது, இறப்புச் சடங்கின்போது, வீடு கட்டத் தொடங்கும்போது, கட்டி முடித்த வீட்டில் குடும்பமாக குடியேறும்போது என வாழ்வின் பல்வேறு மறக்கமுடியாத நிகழ்வுகளில் எல்லாம் பிறப்பால் பார்ப்பனராகப் பிறந்த ஒருவரையோ, பலரையோ அழைத்து சடங்குகள் செய்ய அனுமதித்துவிட்டு, அப்படிச் செய்யப்படும் சடங்குகள் தனக்கான கெளரவம் என நினைத்துக் கொண்டிருக்கும் சமூகப் பழக்கம்தான், கோவில்களிலும் எதிரொலிக்கிறது. நடைமுறையில் தனது வாழ்வில் பார்ப்பனர்களை புனிதர்களாக, அவர்களால் செய்யப்படும் சடங்குகள் புனிதங்களாக நினைத்துக் கொண்டு - கோவில்களில் மட்டும் பார்ப்பன சடங்குகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது என்பது நடைமுறைக்குச் சாத்தியமல்ல.

பிறப்பின் அடிப்படையில் உரிமையை வழங்கும் எந்தச் சடங்குகளை செய்வதும், செய்துவிப்பதும் சட்டப்படி குற்றம் என்ற நிலைப்பாடு சமூகத்தில் நிலைபெற்றால் மட்டுமே கோவில்களுக்குள் அனைத்து சாதியினரையும் அனுமதிக்கும் வழக்கமும் சாத்தியமாகும். ஒன்றை விட்டு ஒன்றை பின்பற்றுவது எளிதல்ல.

உடன்கட்டை ஏறும் வழக்கம் எப்படி சட்டப்படி குற்றமோ, தேவதாசி முறை எப்படி சட்டப்படி குற்றமோ அதுபோலவே பிறப்பின் அடிப்படையிலான பார்ப்பனச் சடங்குகளும் சட்டப்படி குற்றம் என்ற நிலை உருவாக வேண்டும்.

திருமணங்களிலோ, புதுமனை புதுவிழாக்களிலோ, இல்லத்தில் நடக்கும் மகிழ்ச்சி, துக்க நிகழ்வுகளிலோ பார்ப்பனச் சடங்குகளைப் பின்பற்றினால் குற்றம் என்ற நிலைப்பாட்டை சட்டமாக்க வேண்டும். அரசின் கொள்கை முடிவாக இதை நடைமுறைப் படுத்த வேண்டும்.

அதைப்போலவே மடாலயத் தலைவர்கள் பிறப்பின் அடிப்படையில் நியமனம் செய்யப்படுவதை தடுக்கச் சட்டம் கொண்டுவரவேண்டும். சமூக நீதிக்கு எதிரான நடைமுறைகளுக்கும், பண்பாட்டுக்கும் எவ்வித தொடர்புமில்லை. ஒருவேளை சமூக நீதிக்கு எதிரானதுதான் நமது பண்பாடு என்றால் புதிய பண்பாட்டை உருவாக்கத் தயங்கவேண்டியதில்லை. அதுதான் நாகரீகம்.

சிவாச்சாரியார்கள், பட்டாச்சாரியார்கள், ஸ்மார்த்தர்கள் எல்லாம் தங்களைப் பார்ப்பனர்கள் என்று சொல்லிக்கொள்கிறார்கள். பார்ப்பனர்களின் ஒரு பிரிவு மட்டுமே சமயச் சடங்குகளைச் செய்ய முடியும், மற்றவர்கள் அதற்கு உரிமையற்றவர்கள் என்ற நிலைப்பாடுதான் சமூகத்துக்குள் மிகப்பெரிய பிரிவினையயை உண்டாக்குகிறது.

ஒரு பக்கம் ஆகம விதிப்படி சடங்கு என்ற வாதத்தை முன் வைத்தவர்கள், ஆகமத்துக்குள் அனைத்து சாதியினரும் அர்ச்சகராக தடையில்லை என்ற செய்தி வெளிப்பட்டவுடன், மரபு வழியாக யார் அர்ச்சகராக இருக்கிறார்களோ அவர்கள்தான் அர்ச்சகராக நீடிக்க வேண்டும் என்று வாதம் செய்கிறார்கள்.

ஏழாம் நூற்றாண்டுக்குப் பிறகுதான் பார்ப்பனர்கள் கோவிலுக்குள் நுழைந்து சமயச் சடங்குகளை கைப்பற்றிக் கொண்டார்கள் என்ற வரலாற்றை காட்டினால், ஏழாம் நூற்றாண்டிலிருந்தே நாங்கள்தான் சடங்குகளைக் செய்து வருகிறோம், அதால் இந்த முறையை மாற்றக்கூடாது என்கிறார்கள்.

மனிதர்களாகப் பிறந்த யாவருக்குள்ளும் ஒரே மாதிரியான குருதியோட்டம், காற்றோட்டம், கழிவு வெளியேற்றம், மூளை வளர்ச்சி என உடலியக்கம் யாவும் பொதுவாகவே உள்ளது. பார்ப்பனராகப் பிறந்தவருக்கு என்று எந்த சிறப்பும் தனியாக இருப்பதில்லை. ஆனால் இந்தியாவில் பார்ப்பனர்கள் தங்களை புனிதர்களாக அறிவித்துக்கொள்ளும் இழி நிலை இன்றும் தொடருவது சமூகத்தில் பிரிவினைக்கே வழிவகுக்கும்.

ஆகமம், சட்டம், மரபு எதையும் மதிக்காமல் பிறப்பின் அடிப்படையில், தகுதியற்ற பார்ப்பனர்களை கோவில்களிலிருந்து வெளியேற்றவும், சமூகத்துக்கு நன் மக்களை உருவாக்கக் கூடிய சமயச் சடங்குகளை (தேசப் பற்று, மொழிப் பற்று, பெற்றோர்களை மதித்தல், நல்லொழுக்கம் போன்ற நற்பண்புகளை உள்ளடக்கிய சடங்குகள்) யார்வேண்டுமானாலும் செய்வதற்கான நடைமுறைகளை உருவாக்கவும் ஒட்டு மொத்த சமூகமும் குரல் கொடுக்க வேண்டும்.

இந்தியாவில் பெரும்பான்மையாக உள்ள இந்து சமய நம்பிக்கை கொண்டவர்களிடத்தில் பிரிவினையை உண்டாக்கும் நடைமுறைகளை துடைத்தெரியவேண்டும். ஈராயிரம் ஆண்டுகளாக மனிதர்களுக்குள் உயர்வுதாழ்வு கற்பிக்கும் சிந்தனைகளை வேரருக்க வேண்டும்.

ஊர்ப்புறங்களில் மனிதர்களுக்குள் நடந்த மனிதத்தன்மையற்ற பல்வேறு செயல்களில் இருந்தெல்லாம் நாம் மீண்டு எழவும், சமத்துவத்தோடு வாழவும் நமக்கு முன்னாள் வழ்ந்த சமூகப் போராளிகளின் தன்னலமற்ற ஈகம் காரணமாக அமைந்தது. அவர்களின் ஈகத்தால் விளைந்த நற்பயிர்களை நாம் அனுபவித்து வருகிறோம். இந்நிலையில் அனைத்து சாதியினரையும் சமமாக பாவிக்கும் நிலையை உருவாக்குவது ஒன்றும் முடியாததல்ல. அதை உருவாக்கும் வழி வகைகளும் நம் முன் உள்ளது.

மனிதர்களில் ஒரு பிரிவினரே புனிதர், மொழிகளில் ஒரு மொழியே தேவ பாசை என்பன போன்ற மனிதத் தன்மையற்ற, நாகரீகமற்ற சமயச் சிந்தனைகளை எதிர்கால தலைமுறைகளுக்கு விதைக்காமல், சமத்துவத்தையும், விவேகானந்தர் வலியுறுத்திய சகோதரத்துவத்தையும் விதைக்கச் சபதமேற்போம்.

- நா.வெங்கடேசன், ஆசிரியர், மெய்ச்சுடர் சிற்றிதழ், பேராவூரணி