டிசம்பர் 10 ஆம் தேதி உலகளாவிய மனித உரிமை நாள். 1948 டிசம்பர் 10 ஆம் நாள் அய்க்கிய நாட்டு சபையில் உலகளாவிய மனித உரிமைப் பிரகடனம் வெளியிட்ட தினம் உலகளாவிய மனித உரிமை தினம் என கடைபிடிக்கப்படுகின்றது. ஒரு தாயின் கருவறையில் பிறந்த குழந்தை பிறப்பால் அல்லது நிறம், மொழி, இனம் இதர வேறுபாடுகளால் மனித பாகுபாட்டுடன் நடத்தப்படக் கூடாது என அச் சாசனம் முழங்குகிறது.

1948 சமயம் நமது அரசியலமைப்புச் சட்டம் எழுதப்பட்டுக் கொண்டிருந்தது. அடிப்படை உரிமை மனித உரிமை குறித்து அரசியலமைப்பில் சேர்க்கும் நிலை வந்தபோது உலகளாவிய மனித உரிமை சாசனம் குறிப்பிட்ட அதே கருத்தை அப்படியே எடுத்து நமது அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டது. கருத்துரிமை, எழுத்துரிமை, சங்கம் சேரும் உரிமை, சட்டத்தின் முன் சமமாக கருதும் சமத்துவ உரிமை, தனி மனித சுதந்திரம் ஆகிய உரிமைகள் நமது அரசியலமைப்பில் வெளிப்பட உலகளாவிய மனித உரிமை சாசனம் முக்கிய பங்காற்றியது. இச் சாசனம் இரண்டாம் உலகப்போரின் கோரத்தின் படிப்பினையில் உலகம் அமைதியாகவும், அதன் மக்கள் கண்ணிய உணர்வுடனும், சுமரியாதையுடனும் வாழ வழிவகை செய்கின்றது. இக் கருத்துக்கள் சனநாயக சமூகத்திற்கு இன்றியமையாதது.

மனிதர்கள் குடும்பமாக மாறும் உரிமையையும், அடிப்படை மனித உரிமையாக இச் சாசனம் கருதுகின்றது. வயது வந்த ஆணும் பெண்ணும் காதல் செய்வது மனித உரிமை சாசனத்தின் வழி மனித உரிமை சார்ந்ததே. நமது சமூகம் ஈழத்தில் ஒன்றரை இலட்சம் மக்களின் சாவிற்கு சாட்சியாக நின்றுள்ளது. உலகம் முழுதும் சொந்த நாட்டில் வாழ முடியாது, அகதியாக புகழிடம் தேடும் மக்கள் துன்புறுத்தப்படுகின்றனர். இந்த அகதிகள் தஞ்சம் புகுந்த நாட்டில் அந்த நாட்டு குடிமக்களுக்கு உள்ளது போன்று கல்வி, வேலைவாய்ப்புகளைக் கோர முடியும் என்பதையும் இந்த மனித உரிமை சாசனம் அங்கீகரித்துள்ளது.

உலகம் முழுதும் மனித உரிமைக்கொடி பறக்கும் போதே மக்கள் சமூகம் அமைதியாக வாழ முடியும் என்ற கருத்தின் அடிப்படையிலேயே உலகளாவிய மனித உரிமை நாள் கடைபிடிக்கப்படுகின்றது. உலகில் எந்த மனிதனும் இன்னொரு மனிதனுக்கு உரிமையினை வழங்க முடியாது. உரிமை வழங்கும் பொருளல்ல. எனவேதான் நமது அரசியலமைப்புச் சட்டமும் நமக்கு அடிப்படை உரிமையினை வழங்கவில்லை; நமக்கு அடிப்படை உரிமை உள்ளதாக அங்கீகரித்துள்ளது.

தமிழகத்தில் இயற்கைப் பேரிடரினால் அடிப்படை வாழ்வாதாரங்களை இழந்து வாடும் மக்களுக்கு சமூக, பொருளாதார உரிமை பறிக்கப்பட்டதாகவே கருத வேண்டியுள்ளது. அவர்களின் வாழ்வாதார உரிமையும், கண்ணியமான வாழ்க்கைக்கு அவர்களைப் பயணப்படுத்தும் செயல்களும் அம் மக்களின் மனித உரிமை சார்ந்தது.

உலகளாவிய மனித உரிமை தின வாழ்த்துக்கள்.

- பேரா.சரஸ்வதி, மாநிலத் தலைவர் & ச.பாலமுருகன், மாநிலச்செயலர், மக்கள் சிவில் உரிமைக்கழகம்( பி.யு.சி.எல்)