இன்றையத் தமிழக அரசியல் சூழலை உற்று நோக்குகின்ற பொழுது, போராளி பழனிபாபாவின் கனவுகள், களமாடிக் கொண்டிருப்பது கண்கூடு. காலம் காலமாக நசுக்கப்படும் தலித் சமூகமும், பொது சமூகத்திலிருந்து அந்நியப்படுத்தப்படும் இசுலாமிய சமூகமும், இன்று அரசியல் அரங்கில் கணிசமான விழிப்புணர்வுகளை பெற்று வருகின்றனர். ஊடக அரங்கிலும் இவர்களின் பெயர்கள், ஆதிக்க சக்திகளாலே தவிர்க்க முடியாமல், தடை உடைத்து வெளிவருகின்றன. தோழமைச் சக்திகளால் தொடர்ந்து ஏமாற்றத்துக்குள்ளாக்கப்படும் இசுலாமியர்களும், பிறப்பு அடிப்படையால் தங்கள் மதத்திற்குள்ளாக இழிவுபடுத்தப்பட்டு, சேரிகளில் அடைக்கப்படும் தலித் சமூகமும், இன்று ஓர் அணியில் திரள்வது வரவேற்கப்பட வேண்டிய வரலாறு. இதுவே காலத்தின் அதிமுக்கியமான தேவையாகவும் உள்ளது. இதைத்தான் தோழர் பழனிபாபாவும் அன்றே மேடைகள் பலவெங்கிலும், கருத்தியலாக கொண்டு கர்ஜித்தார்.

‘எதிர்வரக்கூடிய தமிழக 2016-சட்டமன்றத் தேர்தல், இசுலாமிய-தலித் ஆண்டாக மலரும். 2016 ஆம் ஆண்டு தலித் - முஸ்லிம் கூட்டணி தமிழகத்தில் மலர வேண்டும். ஆட்சி அதிகாரத்தை நோக்கிய நமது பயணம் வெற்றியடைய வேண்டும். நமக்கான அரசியல் அதிகாரம் தேவை. அதை அடையாமல் நம்மீதான ஒடுக்குமுறைகளை நாம் தடுத்து நிறுத்த முடியாது.’ என்று கூறி வெளிப்படையாக அறைகூவல் விடுத்து இசுலாமியர்களை அழைக்கிறார், சேரி வாழ் மக்களின் நாயகன், அம்பேத்கர், பெரியார் வழியில் பயணிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர், தொல்.திருமாவளவன். இப்படியான ஒரு அணியைத்தான் பழனிபாபா அமைக்க அயராது பாடுபட்டார்.

இந்த அணியின் சக்தி எத்தகையது என்று பார்க்கிறபோது புரியும், இதன் தேவை எவ்வளவு முக்கியமானதென்று. எண்பதுகளிலிருந்து பழனிபாபா பட்டிதொட்டியெங்கும் வீர உரைகளை அனுதினமும் நிகழ்த்தி வந்தார். ஆனால் இவரின் ஆவேசப் பேருரைகளை, தங்களின் அரசியல் இலாபத்திற்க்காக திராவிட முன்னேற்ற கழகமும், அதன் பின்னர் பா.ம.க-வும் பயன்டுத்திக் கொண்டு ஏமாற்றிவிட்டனர். அதனால் மனம் துவண்ட பழனிபாபா தானே அரசியல் கட்சி அமைத்து, ஆழமாக ஓர் அரசியல் அணி அமைக்க, செயலோட்டம் கண்டு கொண்டிருந்தபோதுதான் அவர் படுகொலை செய்யப்படுகிறார். அதற்கு முன்னர் பல ஆண்டுகள் அவர் வீர வேங்கையாய், ஆர்.எஸ்.எஸ் சங்கபரிவார்களையும், தி.மு.க கட்சியையும், கருணாநிதியையும், எம்.ஜி.ஆரையும், ஜெயலலிதாவையும், எதிர்த்து கூர்வாளாய் பேசிய பொழுதெல்லாம், அவர் சிறை, கைது, தடை என்ற ரீதியிலயே முடக்கப்பட்டுக் கொண்டிருந்தார். ஆனால் என்று அவர் ஒரு அரசியல் அணி அமைக்க முயன்று அமைதியாக களம் கண்டாரோ, அன்று அவர் குறிவைக்கப்படுகிறார்.

அவரின் அரசியல் அணி இசுலாமியர்களோடு நிற்க்காமல், தலித் மக்களோடு சேர்ந்து வலுப்பெறுவது கண்ட தி.மு.க-வும், அதேசமயம் அவராலே வளர்க்கப்பட்ட பா.ம.க-வும், இணைவு கொள்கின்றனர், பா.ஜ.க உடன் எனும் அரசியல் அரங்கில் இல்லை, மாறாக ஆர்.எஸ்.எஸ் எனும் பாசிச அரங்கிலயே. அதன் விளைவு பழனிபாபா படுகொலை செய்யப்படுகிறார். இவரின் கொலை வெறும் ஆர்.எஸ்.எஸ் பரிவார்களின் இசுலாமிய வெறுப்பில் மட்டும் நிகழ்ந்தது இல்லை, மாறாக அரசியல் காழ்ப்புணர்வு துரோகத்தால், தமிழக திராவிட கட்சிகளின் கூட்டாய் நிகழ்ந்த ஒன்று என்பது அவரின் அரசியல் செயல்பாடுகள் நமக்கு உணர்த்துகின்றது. இப்படி கொலை செய்யப்படும் அளவிற்கு, ஆபத்தாக இருந்த அந்த அரசியல் அணிதான், இசுலாமிய, தலித் அரசியல் அணி. ஆம் இது பெரும் ஆபத்தானதுதான், ஆதிக்கச் சக்திகளுக்கு. இது இன்று இந்த மண்ணில் நாகரீக பாணியில் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. இது இன்னும் வலுப்பெற வேண்டும்.

இது இப்படியிருக்க, என்னதான் இசுலாமியர்களும், தலித்துகளும் அரசியல் கூட்டணி அமைத்து களம் கண்டாலும், ஆட்சி கைப்பற்றுவது என்பது இயலாத காரியமாகவே உள்ளது. எப்படியெனில், காலம் காலமாக காங்கிரஸில் தொடங்கி, திராவிடக் கட்சிகள் வரை இசுலாமியர்கள் ஏமாற்றப்பட்டாலும், முஸ்லீம்களில் பலரும் இன்று அவர்களோடே கைகுலுக்கிக் கொண்டுள்ளனர். ஆயிரமயிரம் இசுலாமிய உயிர்களை சூறையாடிய, பாபர் மசூதியை இடித்த, இந்துக்களை தவிர ஏனைய மதத்தவர்கள் இந்தியாவில் அடிமைகளாகத்தான் வாழவேண்டும் என்று கூறும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இல்லாவிட்டாலும், அதன் அரசியல் பிரிவான, பாரதிய ஜனாதாவிலேயும் கூட சில இசுலாமியர்கள் இருக்கின்றனர், பெயர் தாங்கிகளாக. இதே நிலைப்பாடுதான் தலித் சமூகத்திலும் நிலவி வருகின்றது.

வர்ணாஸ்சிரம கொள்கைகளால், தங்களின் புனித தலங்களுக்குள் கூட செல்ல அனுமதி மறுக்கப்படுகின்ற, தங்களின் வேத நூல்களை படிக்க இயலாமல் தடுக்கப்படுகின்ற, ஓட்டுகளுக்காக மட்டும் இந்துவாய் பார்க்கப்பட்டு பின்னர் சூத்திரர்களாய் ஒதுக்கப்படுகின்ற தலித் சமூகத்தில் சிலரும் கூட இன்று ஆதிக்கச் சக்திகளின் சித்து விளையட்டுகளில் சிக்கிக் கொண்டு, அவர்களுக்கு கூலிப்படையாய் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் பழனிபாபாவின் சூளுரை மெய்ப்பிக்குமா? என்று வாதிடுவது ஒரு வகையில் சரியே. ஆனாலும், இப்படி ஒரு வலுவான கூட்டணி அமைந்தால் சாத்தியம்தானே? இசுலாமியர்களிலும், தலித்துகளிலும் மிகை சதவீதத்தினர் ஆதிக்க சக்திகளை புறக்கணித்தால் சாத்தியம்தானே?

அதேசமயம் பழனிபாபா வலியுறுத்தியது, இசுலாமிய, தலித் சமூக ஒற்றுமை மட்டும் அல்ல மாறாக கிருத்துவ இன மக்களின் கூட்டிணைவினையும்தான் என்பது இன்னும் இங்கு கவனிக்கப்பட வேண்டியது. எப்படி இசுலாமிய, தலித் சமூகம் மிகையாக ஒன்றினைந்தால் ஆட்சியில் குறிப்பிடும் எண்ணிகையில் வீற்றிருக்க இயலுமோ. அதனினும் கிருத்துவ சமூகங்களும் உடனிணைந்தால், ஆட்சியினையே கைப்பற்ற இலயலும் என்பது, சாத்தியங்களுக்கு உட்பட்டதே. ஆனால் நடைமுறையில் இதில் பெரும் பின்னடைவு என்பதும் உண்டும்.

ஆகவே, இசுலாமிய, தலித், கிருத்துவ சமூகங்கள் அரசியல் மேடைகளில் கைகுலுக்கிக் கொண்டும், இவர்களின் போராட்டங்களுக்கு அவர்களும், அவர்களின் போராட்டங்களுக்கு இவர்களும் பங்கெடுத்துக் கொள்வது மட்டும் போதாத ஒன்று. இந்த சூழ்நிலைதான் இன்று தமிழகத்தில் நிகழ்ந்து கொண்டுள்ளது. இதனை மாற்ற வேண்டும். இவர்கள் முதலில் தங்களுக்குள் ஒன்றுபட வேண்டும். வாருங்கள் அரசியல் சக்தியாய் எழுந்து நடைபோடுவோம் என்று அழைத்ததோடு நின்றுவிடாமல், பழனிபாபா அவர்கள், இசுலாமிய ஜமாத்துகளை ஒன்றிணைக்க பாடுபட்டு, புதுக்கோட்டையில் ஒரு புரட்சி படைத்தார். 45-ஜமாத்துகளை ஒன்றிணைத்தார். அதேபோல் ஏனைய சமூக மக்களிடத்திலும் இவரே ஒருங்கிணைவு செய்ய முற்ப்பட்டார். அதில்தான் வெற்றி என்பதனை நன்கு உணர்ந்திருந்தார்.

இன்று இசுலாமியர்களும், தலித்துகளும் கட்சியிலான கூட்டமைப்பில் ஒன்றிணைகிறார்களே தவிர, சமூக ரீதியாக ஒன்றிணையவில்லை. இது மாற வேண்டும். அன்றைய காலத்தில், பழனிபாபா ஒருவராக நின்று இரண்டு சமூகங்களை ஒன்றிணைக்க முனைந்தார் என்கிற போது, இன்று அது இன்னும் சுலபமாகிறது. ஏனெனில் இன்று இசுலாமியர்களுக்கென்றும், தலித்துகளுக்கென்றும் தலைவர்கள் உருவாகி தனித்தனியே நிற்க்கின்றனர்.

ஆக, இவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் இவர்களுக்குள் ஒன்றுபட வேண்டியதே, அதன்பின்னர் அரசியல் ரீதியாக ஒன்றிணைய வேண்டும். இசுலாமியர்களில் இன்று நிறைய அரசியல் கட்சிகள் உருவாகிவிட்டன. இவர்கள் தேர்தல் காலங்களில் ஒன்றுபட்ட சக்தியாக இணைய வேண்டும், திராவிடக் கட்சிகளை புறக்கணிக்க வேண்டும். அதேபோல்தான் தலித் சமூகங்களும் ஒரே அணியாக ஒன்று திரள வேண்டும். இவர்களை ஒன்றிணைக்கத் தலித் தலைவர்கள் கடுமையான செயல்பாடுகள் மேற்கொள்ள வேண்டும். இப்படி இரு சமூகங்களும் தங்களுக்குள் ஒரே அணியாக அமைந்து, இரண்டு பெரும் அணிகளாக அரசியல் அரங்கில் ஒன்றாக வேண்டும். கூட்டணித் தலைமையாக, அதிக வருட அரசியல் பயணமும், ஆட்சியில் பதவிகளும், அனுபவமும் பெற்ற ஒரு கட்சி முன்னிறுத்தப்பட வேண்டும். இந்த மாற்றம் அமைந்தாலே அதிகார வர்க்கங்கள், அதிகப்படியான தொகுதிகளை தர முண்டியடித்துக் கொண்டுவரும். ஆனாலும் இந்த, தலித், இசுலாமிய, கிருத்துவ கூட்டமைப்பு என்பது தனித்து நின்றாலே பெரும்பான்மையோடு ஆட்சி அமைக்கும் என்பது திண்ணம்.

இது சாத்தியமா என்தனை ஆராய்வதை விடவும் இதற்கான களங்களை கூராக்குவதில்தான் சாதனை உள்ளது. இந்த அணியின் தனித்த தேர்தல் போட்டியினால், வாக்குகள் பலவாறு உடைந்து சிதறும். திராவிடக் கட்சிகளின் கூட்டிலிருந்து கூட சில கட்சிகள் இங்கு தாவும் வாய்ப்பு ஏற்ப்படும். எப்படி கர்ம வீரர் காமராஜரின் காங்கிரஸ் கூட இங்கிருந்து மண்ணைக் கவ்வியது சாத்தியமாயிற்றோ, அதனைவிடவும் இது இருமடங்கு சாத்தியக் கூறுகள் கொண்டது. 1967-ம் ஆண்டு தி.மு.க ஆட்சி கட்டிலில் ஏற ஒற்றை இசுலாமிய கட்சியான முஸ்லீம் லீக்கே ஒரு பெரும் காரணம் என்பதனை மறந்து விடக்கூடாது. அப்படியிருக்க இந்த மூன்று சமூகங்களும் ஓர் அணியாய் அரசியலில் எழுந்து நின்றால் என்னவாகும்?

இப்படி ஒன்றிற்கான கருத்தியலை மட்டும் பேசிக் கொண்டிருக்கும் கட்சியினர் கூட, இதன்மீது நம்பிக்கைகளற்று களம் காண்பது இல்லை. இதனை கருத்தியலாகவே கொண்டிருக்காமல், களமாக மாற்றி நடைபோட்டால், வருகின்ற 2016-ம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலில் பழனிபாபா கனவு மெய்ப்பிக்கும் என்பது ஆணித்தரமான சாத்தியம். 

ஷஹான் நூர், கீரனூர்.