பூவுலகின் நண்பர்கள் கூடங்குளம் அணுஉலை திட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பதிவு செய்த மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை போது “மக்களின் பாதுகாப்பே மேலானது” என்னும் கருத்தை வழியூறித்தியுள்ளது நீதிமன்றம். கூடங்குளம் அணுஉலை தொடர்பான பல வழக்குகள் மீதான தீர்ப்புகளை கடந்த 31.08.2012 அன்று சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியது. இந்த தீர்ப்பில், கூடங்குளம் அணுஉலை திட்டம் சட்டரீதியாக எந்தக் குறைபாடுகளின்றி நடைபெற்று வருகிறது என்று கூறப்பட்டுள்ளது. மேலும் அணுசக்தி ஒழுங்குமுறை வாரியம், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகிய அமைப்புகளின் அனுமதியிலும், தொடர் கண்காணிப்பிலும் கூடங்குளம் அணுமின் திட்டம் செயல்பட்டு வருதாக அத்தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இதற்கு ஏதிராகவே உச்ச நீதிமன்றம் சென்றுள்ளது பூவுலகின் நண்பர்கள் இயக்கம்.

            koodankulam_371கூடங்குளம் அணுமின் திட்டத்திற்காக, இந்தியா மற்றும் சோவியத் ரஷ்யா அரசுகளால் கடந்த 1988–ம் ஆண்டில் முதல் ஒப்பந்தம் உருவானாலும், சோவியத் ரஷ்யா சிதறுண்ட நிலையில் 1998–ஆம் ஆண்டு இயற்றப்பட்ட புதிய ஒப்பந்தத்திற்கு பின்னரே இத்திட்டம் புத்துயிர் பெற்றது. அணுஉலையின் கட்டுமான பணிகள் 2001-ல் துவங்கப்பட்டது. இந்த திட்டத்திற்கான அறிவிப்பு வெளிவந்த நாள் முதலே, அதாவது 1988ம் ஆண்டுக்கு முன்பிருந்தே அப்பகுதி மக்கள் இத்திட்டத்தை எதிர்த்து வந்துள்ளனர்.

            2011-ம் ஆண்டு ஜப்பான் நாட்டின் புகுஷிமா அணுஉலை விபத்திற்கு பின் இந்திய அரசு நாட்டில் உள்ள அனைத்து அணுஉலைகளின் பாதுகாப்பு அம்சங்கள் பற்றி ஆய்வு செய்வதற்காக ஒரு நிபுணர் குழுவை அமைத்தது.[1] அந்தக் குழு கூடங்குளம் அணுஉலைகள் 1 மற்றும் 2ல் மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு அம்சங்கள் குறித்த இடைக்கால அறிக்கை ஒன்றை கொடுத்தது. இதன் அடிப்படையில் பூவுலகின் நண்பர்கள் இயக்கத்தை சார்ந்த சுந்தர்ராஜன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடுத்தார். புகுஷிமா விபத்திற்கு பிறகு கூடங்குளம் அணுஉலையின் பாதுகாப்பு தன்மை குறித்து ஓர் குழுவை இந்திய அரசே அமைத்துள்ளபோது, பொதுவான சுற்றுச்சூழல் சார்ந்த விளைவுகள் குறித்த ஆய்வுகளும் இதில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்னும் அடிப்படையில் இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.[2]

வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், மேற்கூறிய குழு 2012–ம் ஆண்டு கூடங்குளம் பாதுகாப்பு தன்மை குறித்து தனது இறுதி அறிக்கையை தாக்கல் செய்தது. அதில் அணுஉலை பாதுகாப்புக்காக 17 பரிந்துரைகளை வழங்கியது.[3] இவற்றில் அணுஉலை ரியாக்டர் பற்றிய பரிந்துரைகளும் இடம்பெற்றுள்ளன. இவை அனைத்தும் அணுஉலையில் எரிபொருள் நிரப்புவதற்கு முன்பாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இரண்டாம் வழக்கையும் பூவுலகின் நண்பர்கள் இயக்கம் தாக்கல் செய்தது.[4] இதற்கு இடையே கூடங்குளம் திட்டத்தை ஆதரித்தும் எதிர்த்தும் மேலும் பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. எல்லா வழக்குகளும் ஒருசேர விசாரிக்கப்பட்ட பின்பு தீர்ப்பு தற்போது வெளியாகியுள்ளது.

பூவுலகின் நண்பர்கள் தரப்பில் கீழ்க்கண்ட வாதம் முன்வைக்கப்பட்டது. 1986-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின்கீழ் இந்திய அணுஉலைகளில் முதல்முதலாக கூடங்குளத்தின் முதல் மற்றும் இரண்டாம் அணுஉலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அப்போது நிலவிய சட்டங்கள் அடிப்படையில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே 1994–ம் ஆண்டு சுற்றுச்சூழல் சட்டத்தின் கீழாக “சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வு அறிக்கை” என்னும் விதிமுறை அறிமுகம் செய்யப்பட்டது. இந்த விதிமுறை இவ்வாறு கூறுகிறது: 

Environmental Impact Assessment Notification, 1994, Para 2 reads : 

“2. Requirements and procedure for seeking environmental clearance of projects : 

I.(a) Any person who desires to undertake any new project or the expansion or modernisation of any existing industry or project listed in Schedule I shall submit an application to the Secretary, Minister of Environment and Forests, New Delhi. 

The application shall be made in proforma specified in Schedule II of this notification and shall be accompanied by a project report which shall, inter alia, include an Environmental Impact Assessment Report/Environment Management Plan and details of public hearing as specified in Schedule IV prepared in accordance with the guidelines issued by the Central Government in the Minister of Environment and Forests from time to time.

 மேற்கூறிய புதிய விதிமுறை கூறுவது எந்த ஒரு கட்டுமான பணியும் சுற்றுச்சூழலுக்கு மாசு அல்லது இடர்ப்பாடு ஏற்படுத்தும்போது இச்சட்டப்படி அனுமதி பெற்ற பின்னரே பணி துவங்க வேண்டும். ஏற்கனவே அனுமதி பெற்ற திட்டமாக இருந்தாலும் 1994–ம் ஆண்டுக்கு பின் திட்டத்தை நவீனமாக்கி இருந்தாலோ அல்லது திட்டத்தை விரிவுபடுத்தி இருந்தாலோ இச்சட்டப்படி புதிய சுற்றுச்சூழல் அனுமதி அவசியமாகிறது.

கூடங்குளம் அணுஉலை கட்டுமானப்பணிகள் 2001–ல் துவங்கிய காரணத்தாலும், 1989ம் ஆண்டு இருந்த திட்டம் பலவாறு மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாலும் 1994ம் ஆண்டு உருவாக்கப்பட்ட புதிய சுற்றுச்சூழல் விதிமுறைப்படி கூடங்குளம் அணுஉலைக்கு சுற்றுச்சூழல் மத்திய அமைச்சகத்தின் அனுமதி தேவை என்று நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. இந்த சட்டப்படி சுற்றுச்சூழல் அனுமதி என்பது சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு மேலாண்மை திட்டம் வரையப்பட்டு, பொதுமக்கள் கருத்துகள் கேட்கப்பட்டு, இவற்றை எல்லாம் ஓர் குழு பரிசீலனை செய்த பின்னர் அது மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்படும். பின்பு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் உரிய அனுமதி தரும்.[5] இப்படிப்பட்ட புதிய அனுமதியை கூடங்குளம் திட்டம் பெற வேண்டும் என்பது வழக்கின் வாதம்.

இதற்கான காரணங்கள்: கூடங்குளம் அணுமின் திட்டம் இரண்டு முக்கிய மாற்றத்தை சந்தித்துள்ளது என்பதே. ஒன்று அணுஉலையை குளிர்விக்க பேச்சிபாறை அணையில் இருந்து தண்ணீர் எடுப்பது என்பது கைவிடப்பட்டு கடல் நீரை குடிதண்ணீரின் தரத்தில் நல்ல நீராக மாற்றும் திட்டம் அறிமுகமாகியுள்ளது. இரண்டாவதாக அணுஉலை ரியாக்டரும் நவீனமாகியுள்ளது.

அணுஉலைகளின் நீர் தேவை:

 அணுமின் உற்பத்திக்கு ரியாக்டர் மற்றும் அதனை குளிர்விக்கும் நீர் ஆகிய இரண்டும் மையமானது. கூடங்குளம் அணுஉலைக்கு சுமார் 56,64,000 லிட்டர் தண்ணீர் நாள் ஒன்றுக்கு தேவைப்படுகிறது.[6] இந்த தேவையை கடல்நீரை நன்னீராக மாற்றித்தான் பூர்த்தி செய்ய வேண்டும். நன்னீராக மாற்ற முதலில் கடல் நீரில் உள்ள உப்புத் தன்மை மற்றும் இரும்புத் தன்மை ஆகியவற்றை நீக்க வேண்டும். இதற்கு தனியாக 4 ஆலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இத்திட்டம் 2006-க்கு பின் செயல்படுத்தப்பட்டது. இது அணுஉலை திட்டத்தில் செய்யப்பட்ட முக்கிய மாற்றமாகும். கடல் நீரை நன்னீராக மாற்றும் ஆலைக்கு கடலோர ஒழுங்குமுறை வாரியத்தின் அனுமதி தேவை.[7] ஆனால் கூடங்குளத்தில் இயங்க உள்ள ஆலைக்கு இதுவரை இத்தகைய அனுமதி இன்னும் பெறப்படவில்லை. மேலும் இந்த ஆலையிருந்து பலவித கழிவுகள் வெளியாகும் என்று தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கூறியுள்ளது.[8] எனவே புதிய சட்டப்படி சுற்றுச்சூழல் அனுமதி அவசியம் என்று வாதிடப்பட்டது.

இதற்கு நீதிமன்றம் தனது தீர்ப்பில் சொல்வது :

"Therefore, there is no question of using potable water for the purpose of production of electricity through the nuclear plant. The potable water is only for drinking purposes and the said potable water is not connected with the project. While so, the construction of desalination plant for the purpose of potable water is no way connected with the project and the question of inclusion of desalination plant for modernization process is totally unacceptable."

நீதிமன்றத்தின் மேற்கூறிய கருத்துகள் தவறான தகவலின் அடிப்படையிலானது. கூடங்குளம் அணுமின் திட்டத்திற்கு முதலில் 1989-ம் ஆண்டு வழங்கப்பட்ட அனுமதி ஆணையில் பேச்சிபாறை தண்ணீர் மட்டுமே அணுஉலையில் பயன்படுத்தப்படும் என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது. கடல் நீரை பற்றி 1989ம் சுற்றுச்சூழல் அனுமதி ஆணையில் ஒரு வரி கூட இல்லை. கடல் நீரை குடி நீராக மாற்றலாம் என்னும் திட்டமே 2000ம் ஆண்டு பின்னரே இந்தியாவில் அறிமுகமானது. மேலும் கடல் நீரை சுத்தப்படுத்தும் ஆலை கட்டுமானம் என்பது திட்டத்தில் ஏற்பட்ட மாற்றமாக கருதப்படமாட்டாது என்று நீதிமன்றம் கூறி இருப்பது மிகவும் தவறானது. காரணம் கடல் நீர் மாற்று ஆலை என்பது பெருவாரியாக மாசு ஏற்படுத்த கூடியது. மேலும் கூடங்குளம் அணுஉலை 1 மற்றும் 2–க்கு தேவையான பல லட்சம் லிட்டர் தண்ணீரை தினம்தோறும் இந்த ஆலை சுத்தம் செய்யப்போகிறது. அவை அணுஉலைக்கு சென்ற பின்னர் கழிவு நீராக வெளியேறி கடலில் கலக்கப்படும். இயற்கையான தூய குடிநீரை அப்படியே பயன்படுத்துவதற்கும், கடல் நீரை செயற்கை முறையில் நன்னீராக மாற்றி அணுஉலையில் பயன்படுத்துவதற்கும் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது. இரண்டு முறைக்குமான சுற்றுச்சூழல் பாதிப்பு என்பது வேறு. இத்தகைய கூறுகளை நீதிமன்றம் காணத் தவறிவிட்டது.

அணுஉலைகளின் ரியாக்டர்கள் :

அடுத்து அணுஉலைக்கான ரியாக்டர் இன்றைய நவீன தொழில்நுட்பங்களை உள்ளடக்கியுள்ளது என்று தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது. மத்திய அமைச்சர் நாராயணசாமி, நாடாளுமன்ற மேல் சபையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கும்போது, 2006-ம் ஆண்டு பின் அரும்பிய தொழில்நுட்பங்களை உள்ளடங்கிய ரியாக்டரைதான் கூடங்குளம் அணுஉலை பெற்றுள்ளது என்று கூறியுள்ளார்.[9] இது உண்மையாக இருக்கும் நிலையில் 1994-ம் ஆண்டு சட்டத்தை பின்பற்றி சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதியை பெற வேண்டிய கட்டாயம் உள்ளது. இந்த வாதமே பூவுலகின் நண்பர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் எழுப்பப்பட்டது.

ரியாக்டர் பற்றி இப்படி நீதிமன்றம் கூறியுள்ளது :

 “But on the facts of the present case, we have also held that between the first agreement and the second agreement there is no modernization or new project and from the beginning the project is VVERs, as it is seen in the project report of the year 1988 itself and, therefore, it cannot be said as if VVER has been introduced as a modern reactor and hence, the Environmental Impact Assessment and AERB's review are contradictory.” (அழுத்தம் நம்முடையது)

            VVER ரியாக்டரில் பல வகைகள் உள்ளன. 1988 ம் ஆண்டு சோவியத் அரசுடன் இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்ட போது VVER 312 என்னும் வகையான ரியாக்டர்களே உருவாக்கப்பட்டுவந்தன. அதன் பின்பாக இந்த ரியாக்டர்கள் பலவித தொழில்நுட்ப மாறுதல்களை சந்தித்துள்ளன. அந்த வகையில் கூடங்குளத்தில் பயன்படுத்த போகின்ற ரியாக்டர் “VVER 412 3+” என்பது 2000ம் ஆண்டுக்கு பின் உருவானது, எனவே இந்த தொழில்நுட்ப மாறுதல் காரணமாக புதிய சுற்றுச்சூழல் அனுமதி தேவை என்கிற வாதம் நீதிமன்றத்தின் முன்பு வைக்கப்பட்டது. இதனை நீதிமன்றம் நிராகரித்து எல்லாமே VVER ரியாக்டர்கள்தான் இதில் ஒரு மாற்றமும் இல்லை என்று கூறியுள்ளது.

 இதன் மூலம் நீதிமன்றம் கூறுவது என்னவென்றால், சுனாமி மற்றும் நிலநடுக்கம் போன்றவற்றில் எந்த பாதிப்பும் அடையாத வகையில் கூடங்குளம் அணுஉலையில் பயன்படுத்தப்படும் ரியாக்டர் “VVER 412 3+” வகையைச் சேர்ந்தது என்று அணுசக்தி துறை கூறி வருவது 1989–ம் ஆண்டு திட்டமிட்டு உருவாக்கப்பட்டதாம். 1989–ம் ஆண்டு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதி ஆணையில் சுனாமி ஆய்வு குறித்தான எந்த தகவலும் இல்லை. சுனாமி என்பதையே 2004–ம் ஆண்டுக்கு பின்பே இந்திய அணுசக்தி துறை கருத்தில் கொள்ள ஆரம்பித்தது. அறிஞர் குழுக்கள் தொடர்ந்து கூறி வரும் சிறப்பு அம்சங்கள் கொண்ட கூடங்குளம் அணுஉலை ரியாக்டர் என்பது 1989–ம் ஆண்டு திட்டமிட்டு உருவாக்கப்பட்டது என்பது மட்டுமல்ல அதற்கு பின்பாக அந்த ரியாக்டர்கள் எவ்வித தொழில்நுட்ப மாற்றங்களையும் சந்திக்கவில்லை என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும் ரியாக்டரின் நவீன தன்மை குறித்த சுற்றுச்சூழல் அமைச்சகம் மற்றும் அணுசக்தி துறையின் கருத்துகள் முரண்படுகின்றன என்றும் கூறியுள்ளது நீதிமன்றம்.

            இத்தகைய சிறப்பான ரியாக்டர்களை கொண்டுள்ளது கூடங்குளம் அணுஉலை. அடுத்து இரண்டாம் மனுவில் வலியுறுத்தப்பட்ட அம்சங்கள் குறித்து நீதிமன்றம் எந்த கருத்தும் கூறாதது ஏமாற்றத்தை அளிக்கிறது. அணுசக்தி ஒழுங்குமுறை வாரியம் அமைத்த குழுவின் பரிந்துறைகளை நடைமுறைப்படுத்திய பின்பே எரிபொருள் நிரப்ப அனுமதி வழங்கப்படும் என்னும் உறுதியை அணுசக்தி ஒழுங்குமுறை வாரியம் நீதிமன்றத்தில் அளித்திருந்தது.[10] இதன்படி இரண்டாம் மனு ஏற்றுக்கொள்ளப்பட்டு மனுதாரருக்கு சார்பாக தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் இந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இங்கு மற்றொன்றும் குறிப்பிட்டாக வேண்டும் மேற்கூறிய மனுக்கள் மீதான விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைத்திருந்த நிலையில் அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் மேற்கூறிய உறுதிமொழியை மீறி எரிபொருள் நிரப்புவதற்கான அனுமதியை வழங்கியது. தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கூடங்குளம் அணுஉலை துவங்குவதற்கான அனுமதியை வழங்கியது. இவ்விரண்டு அனுமதியையும் எதிர்த்து மீண்டும் இரண்டு வழக்குகளை தொடுத்தது பூவுலகின் நண்பர்கள் இயக்கம்.[11]

அணுஉலையில் இருந்து வெளியேறும் கழிவு நீரானது கூடங்குளம் கடலோர பகுதியில் கலக்கும் போது 45 டிகிரி வரை வெப்பம் கொண்டதாக இருக்கலாம் என்று மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்கியது. 45 டிகிரி வரை வெப்பத்தில் நீர் கடலில் கலந்தால், கடல்வாழ் உயிரினத்தை அழித்துவிடும் என்று எடுத்துக்கூறப்பட்டது. அதற்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில், தாங்கள் 1984ம் அண்டு மேற்கொண்ட வாரிய கூட்டத்தின் இந்த வெப்ப அளவு நிர்ணயிக்கப்பட்டது என்றும், என்வே 45 டிகிரி சரியானது என்று வாதிடப்பட்டது.[12] இதனை உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளாததை தொடர்ந்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் புதிய ஆணையை பிறப்பித்தது. இத்தகைய அறிவியல் ஆய்வு தன்மையோடு செயல்படும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் தான் அணுஉலையில் இருந்து வெளியேறும் மாசுப்பொருட்களின் அளவை தொடர்ந்து கண்காணிக்க போகிறது. மணல் மற்றும் கிராணைட் குவாரிகளை இவர்கள் கண்காணித்த கதை நமக்கு தெரிந்ததே. மேலும் கல்பாக்கம் அணுஉலையை தன் வாழ்நாளில் இதுவரை சோதனை செய்யாத தமிழ்நாடு மாடு கட்டுப்பாட்டு வாரியம் கூடங்குளம் அணுஉலையை சிறப்பாக கண்காணிக்கும் என்று நம்புவோம்.

அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத்தின் எரிபொருள் நிரப்பும் அனுமதி ஆணை, மேற்கூறிய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையக்குழுவின் பரிந்துரையை நிரைவேற்றாமல் வழங்கப்பட்டுள்ளது, இது நீதிமன்றத்தில் ஒழுங்குமுறை வாரியம் கொடுத்த உறுதிமொழிக்கு எதிரானது என்கிற வாதம் நீதிமன்றத்தில் எழுப்பப்பட்டது. அதற்கு நீதிமன்றம், 17 பரிந்துறைகளில் 6 பரிந்துறைகள் ஏற்கனவே அமல்படுத்தப்பட்ட காரணத்தாலும், அணுசக்தி ஒழுங்குமுறை வாரியமே இத்தகைய சூழலில் முடிவெடுக்க ஆற்றல்படைத்த அமைப்பு என்பதால் இந்த மனுவையும் தள்ளுபடி செய்வதாக கூறியுள்ளது.

அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத்தின் செயல்பாடு குறித்து இந்திய தணிக்கை துறை வழங்கியுள்ள கண்டன அறிக்கை நம் நினைவுக்கு வருகிறது. கடந்த 8.08.2012 வெளியான அந்த அறிக்கை கூறுவது : (1)இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை வாரியம் போதிய அதிகாரம் படைத்ததாக இல்லை. (2) இந்த வாரியத்திற்கு போதிய நிதி ஒதுக்கீடும், மனிதவளமும் தேவைப்படுகிறது. (3) இந்த வாரியத்தின் முக்கிய கடமையான அணுஆற்றல் தொடர்புடைய பகுதிகளை சோதனை செய்யும் பணியைக்கூட சரியாக செய்யவில்லை. (4) அணுஉலை குறித்த போதுமான விதிகளை இயற்றவில்லை. (5) அணுசக்தி ஒழுங்குமுறை வாரியம் இந்திய அணுசக்தி துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் யாரை கண்காணிக்க வேண்டுமோ அந்த துறைக்கு கீழாக செயல்படுகிற அவல நிலையில் உள்ளது. இத்தகைய பல்வேறு சிறப்புத் தன்மைகளை உடைய அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத்தின் கண்காணிப்பில்தான் கூடங்குளம் அணுஉலை செயல்பட போகிறது.

பொது மக்கள் கருத்துக் கேட்பு :

மேலும் உயர் நீதிமன்றம் பொது மக்கள் கருத்து கேட்பு தொடர்பாக இப்படி கூறியுள்ளது:

 “73….When once a project has already been started, we do not understand as to what purpose the public hearing will serve in respect of an existing project. The project has come to the major shape after spending enormous amount from and out of the exchequer making thorough study about the entire aspect. In such a situation, in our considered view, public hearing can at the most be for the purpose of rectification of possible defects and not for the purpose of abandonment of the project.”

அதாவது பலகோடி ரூபாய் செலவு செய்து கட்டுமானம் ஆகி வருகின்ற ஒரு திட்டத்திற்கு பொது மக்கள் கருத்து அவசியம் இல்லை என்றும், திட்டத்தில் மாற்றங்கள் கூற மட்டுமே பொது மக்கள் கருத்து கேட்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளது உயர் நீதிமன்றம்.

அணுகழிவுகள்

            1988ம் ஆண்டு உருவாக்கப்பட்ட முதல் ஒப்பந்தபடி அணுகழிவுகளை ரஷ்யா எடுத்துக்கொள்ளும் என்றும் நிலை தற்போது மாறிவிட்டது. 1998ம் ஆண்டு உருவாக்கப்பட்ட புதிய ஒப்பந்தத்தின் அடிப்படையில் அணுக்கழிவுகள் கூடங்குளத்திலேயே சேமித்து வைக்கப்படும் என்று கூறப்படுகிறது. இப்படி சேமிக்கப்படும் அணுக்கழிவுகளை பாதுகாக்க தனித் திட்டம் எதுவும் கூடங்குளம் அணுமின் திட்டத்தில் இல்லை. மேலும் அணுக்கழிவுகளை சேமிக்கும் தொட்டிகள் கட்டப்பட வேண்டும் என்பது அணுசக்தி ஒழுங்குமுறை வாரிய குழுவின் பரிந்துறைகளில் ஒன்று. அணுக்கழிவு மேலாண்மைக்கு சுற்றுச்சூழல் அமைச்சக அனுமதியும் இல்லை.

            கூடங்குளம் அணுமின் திட்டம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு அரசு நியமித்த வல்லுநர்கள் குழுகளின் ஒட்டுமொத்த தொகுப்பாக மட்டுமே உள்ளது என்று கூறலாம். கூடங்குளம் உள்ளிட்ட அணுமின் திட்டங்கள் “A Technology from Hell” என்று மட்டுமே சொல்ல முடியும் என்ற மனுதாரர் வாதத்திற்கு பதிலாக நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள் பயன்படுத்திய “Project of God” என்ற சொற்றொடரை பயன்படுத்தியுள்ளனர்.

சட்டரீதியாக எழுப்பப்பட்ட பல கேள்விகளுக்கு அரசுத்தரப்பில் உரிய பதில் அளிக்காத நிலையிலும், அணுஉலை ஆதரவு அறிவியல் நிபுணர்களின் கருத்துக்களை மட்டுமே ஏற்றுக்கொண்டு இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதன் மூலம் சட்டரீதியாக இயங்கும் அமைப்புகளிடமிருந்து உரிய அனுமதி தேவையில்லை என்று இத்தீர்ப்பு அனுமதி அளிப்பது மிகவும் ஆபத்தானது. அரசு வகுக்கும் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை அரசு நிறுவனங்களே பின்பற்றாமல் புறக்கணிப்பதை நீதிமன்றம் கண்டிக்காததும் வருந்தத்தக்கது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் மேற்கூறிய தவறுகளை உச்ச நீதிமன்றமும் பின்பற்றாது என்று நம்புவோம். 

- வழக்கறிஞர் மு.வெற்றிச்செல்வன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

குறிப்புகள்:


[1] AERB Committee to Review Safety of Indian Nuclear Power Plants against External Events of Natural Origin.

[2] W.P.No: 24770 of 2011.

[3] Annexure 8 of AERB Committee Report, Safety Assessment of Kudankulam Nuclear Power Plant Units – 1 & 2 (KK NPP1&2) in the wake of Fukushima Accident recommendations reads: “(1) Back up provisions from alternate sources should be made for (i)Charging water to secondary side of SGs, (ii)Make-up of borated water to spent fuel pools, (iii)Injection of borated water in the reactor coolant system; (2)Seismic qualification of emergency water storage facility and augmentation of its storage capacity for core decay heat removal for a period of at least one week; (3) Mobile self powered pumping equipment for emergency use; (4) Facility for monitoring safety parameters using portable power packs; (5) Finalization of emergency operating procedures for BDBA conditions; (6) Primary Containment to be assessed for ultimate load bearing capacity; (7)Doors and barrels of airlocks to be qualified for proof test pressure; (8) Ensuring that highly active water used for cooling the core catcher vessel under BDBA is contained inside the primary containment; (8) Reconfirmation of design adequacy of hydrogen management system; (9) Environmental qualification of core catcher temperature monitoring system; (10) Adequacy of design provision for remote water addition to core catcher; (11) Adequacy of instrumentation for monitoring plant status during BDBA; (11) Details of margin available on location of various safety related SSCs above DBFL should be reviewed again; (12) Need for design provision for containment venting, that has been deleted, should be re-examined; (13) The backup sources for water injection to SG secondary side should be seismically qualified; (14) Provisions for addition of water to core catcher require a detailed study, to ensure that there is no possibility of any steam explosion; (15) Provision of additional backup power supply sources for performing essential safety functions, like air cooled DGs located at a high elevation, should be considered.”

[4] W.P.No: 8262 of 2012.

[5] Environmental Impact Assessment Notification, 1994, Para 2 III.

[6] Muthunayagam Committee Report, dated December 2011.

[7] Coastal Regulation Zone Notification, 2011.

[8] Consent Order under Water Act dated 28.08.2012.

[9] Raja Sabha Starred Question No.485 answered on 10.05.2012.

[10] Counter Affidavit filed by the AERB in W.P.No: 8262 of 2012 dated 5.06.2012.

[11] W.P.No: 22253 of 2012 & W.P.No: 22200 of 2012.

[12] Counter Affidavit of TNPCB in W.P.No: 22200 dated 17.08.2012.