தனி மாநிலம் கேட்ட தெலுங்கானாவுக்கு தலையசைத்தாலும் அசைத்தார்கள் எங்கே பார்த்தாலும் தனிமாநில கோரிக்கைகள். இந்தியப் பூகோளப் பாடம் படிக்கிற மாதிரி இருக்கு. சும்மா சொல்லப்பிடாது நம்ம பக்கத்து வீட்டு சந்திரசேகர ராவ் இருந்த உண்ணாவிரதத்தை. மனுசர் நிசமாலுமே சாப்பிடாமா இருந்தாருனு சொல்லுதாங்க. எதுக்கு உடம்பைக் கெடுத்துக்கனும் சொல்லுங்க? கொஞ்சம் சொல்புத்தி சுயபுத்தி இல்லாட்டாலும் அடுத்தவனைப் பார்த்து நடக்கிற புத்தியுமா இல்லை. எதுக்காக இப்படி 11 நாளு உண்ணா நோன்பிருக்க வேண்டும? பக்கத்து மாநிலமான நம்மைப் பார்த்தாவது காலை 9 மணி முதல் பகல் 1 மணிவரை உண்ணா நோம்பிருக்கும் அதிரடி உண்ணாவிரத ஸ்டைலைத் தெரிந்து கொண்டிருக்க வேண்டாமோ?

டில்லியிலே ரொம்ப குளிருங்க. குளிரில் தலையாட்டினதை நம்ம டில்லிக்காரங்க தெலுங்கானாவுக்கு சரினு சொல்லிப்பிட்டாங்கனு எழுதப்போக இங்கே பாருங்க இன்னிக்கு பத்திரிகையிலே வந்திருக்கிற ஏகப்பட்ட தனிமாநில கோரிக்கைகளை.

> நாங்க தான் முதல்ல தனிமாநிலம் கேட்டோம்னு சொல்றாங்க நம்ம கூர்க்கா மக்கள். மே.வங்கத்துடன் இருக்கப் பிடிக்கலையாம் அந்த டார்ஜிலிங் கூர்க்கா சனங்களுக்கு. முதல்ல கேட்ட எங்களுக்கு கொடுக்காமா அது என்ன தெலுங்கானாவுக்குனு கேட்கிறாங்க.

> எங்க மராத்தி மாநிலம் (அய்யோ நான் இப்படி எழுதியிருக்கதை மேரா ராஜ்தாக்கரெ மானுஷ்களிடம் யாராவது போட்டுக் கொடுத்திடாதீங்க அண்ணாச்சீங்களா, எம் பிழைப்புக் கெட்டுப்போயிடும்!) 5 வருடங்களுக்கு முன்பே 'விதர்பா' தனிமாநில கோரிக்கையை வைத்தது. பாவம் அப்படி வைத்தவர் பாபாசாகிப் அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர். யாரும் அவர் சொன்னாருனு கண்டுக்காமா விட்டுட்டாங்களொ என்னவோ. இப்போ மீண்டும் 'விதர்பா' வந்திடுச்சி. ஒரே கூட்டணியிலிருக்கும் சிவசேனா எதிர்ப்பு, பா.ஜனதா ஆதரவு.

> சும்மா சொல்லப்பிடாது எங்க மாயாவதியை. பின்னே என்ன உ.பி எவ்வளவு பெரிய மாநிலம். தனி ஆளா தூத்து பெருக்கி துடைக்கிறவங்களுக்குத்தானே கஷ்டம் தெரியும். அவுங்களும் கடிதாசி எழுதிட்டாங்க அவுங்க கஷ்டத்தை. உ.பி இரண்டா இல்லை மூணா பிரிச்சா ரொம்ப நல்லா நிர்வாகிக்க முடியும்னு கண்டுபிடிச்சிருக்காங்க. பண்டல்காண்ட்., மேற்கு உ.பி, கிழக்கு உ.பினு 3 மாநிலங்காளாகிடும்.

>இதை எல்லாம் பார்த்திட்டு இருக்கிற நம்ம தமிழ்நாட்டிலிருந்து ஏன் எந்தக் குரலும் வரலைனு எனக்கு ரொம்பவும் கவலையா இருக்குங்க. என்னவோ நம்ம் தமிழினத்தலைவரை எல்லொரும் அரசியல் சாணக்கியர் அது இதுனு புகழாராங்க. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்காமா இப்படி கம்முனு இருக்காரோ. இப்போ போயி அவர் சந்திரசேகர ராவிடம் வருத்தப்பட்டுக்கவோ முறைச்சுக்கவோ கூடாதுங்க. சில வேலை இல்லாததுகள் தேவையில்லாமல் சந்திரசேகர ராவ் உண்ணா விரதத்தையும் அவர் உண்ணாவிரதத்தையும் ஒப்பிட்டு ஆய்வு செய்துக்கொண்டிருப்பது அவரைக் கடுப்பேற்றி இருக்கும்.

இதெல்லாம் என்ன சின்னக் கொசுக்கடி மாதிரி அவருக்கு. அப்படியே லைட்டா தட்டிவிட்டுட்டு தனக்கு கிடைத்திருக்கும் இந்தப் பொன்னான சந்தர்ப்பதைப் பயன்படுத்தி தன்னால் தீர்த்து வைக்க முடியாத பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்பது தாங்க என் ஆசை.

* தமிழ்நாடு மாநிலத்தை இரண்டா பிரிச்சிடலாம். ஒன்று தஞ்சை, கடலூர் என்று வடமாநிலங்களை உள்ளடக்கிய சோழ மண்டலம். இன்னொன்று மதுரையைத் தலைநகராகக் கொண்ட தெற்கு மாநிலங்களை உள்ளடக்கிய பாண்டிய மண்டலம். எந்தெந்த மண்டலங்களுக்கு யார் யார் முதல்வர்னு நான் சொல்லியா உங்களுக்குப் புரியனும்?

மதுரையைத் தலைநகராகக்கொண்டு மூன்று சங்கங்கள் வைத்து அரசாண்ட் நம் பாண்டியர் வரலாற்றை சரித்திர சான்றுகளுடனும் இலக்கியச் சான்றுகளுடனும் எழுதவும் நிரூபிக்கவும் நம் தமிழினத் தலைவர் தமிழக முதல்வரை விட்டால் பொருத்தமான ஆள் வேறு யார்? சோழ மண்டலம் கண்ட ராஜ ராஜ சோழன் என்ற பட்டமும் நான்காவது தமிழ்ச்சங்கம் கண்ட பாண்டியன் என்ற பட்டமும் கொடுத்துவிடலாம். தமிழகம் எங்கும் நம் சோழ பாண்டியர் வரலாற்றை கதை கவிதைகள் எழுதி சாமாய்ச்சிடலாம்!

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் (ரொம்ப பழசாகிப் போன சொலவடைனு கோவிச்சிக்காதீங்க) அடிச்ச கதையா தமிழகத் தலைவர் அவரை வாட்டி வதைக்கும் 'யாருக்குப் பட்டாபிஷேகம்" என்ற பிரச்சனைக்கும் புத்திசாலித்தனமாக தீர்வு கண்டுவிடலாம்.

பெண்ணியம், பெண்ணுரிமை அது இதுனு பேசற நானே எங்க கனிமொழியை அப்படியே அம்போனு விட்டுவிடுவேன்னு நினைச்சீங்களா. நெவர். அவுங்களுத்தான் இப்போ டில்லிக்குப் போற ரூட் க்ளியர் ஆயிடுமே! இனிமே என்ன டில்லியில் நிறைய கருத்துக்களம் நடக்கும். அப்புறம் டில்லியில் தமிழ்ச்சங்கமம் நடக்கும். அசத்திடலாம். அய்யோ நினைச்சாலே ரொம்பவும் சந்தோஷமா இருக்குங்க. அங்கேயும் கவியரங்கத்தில் போய் நம்ம ஆதவன் தீட்சண்யா மாதிரி தோழர்கள் காச்சு பூச்சுனு கத்தாமா கவிதை வாசித்தோமோ வாசிக்கலியோ டில்லியைச் சுத்திப் பாத்தமா வந்தோமானு வரனும்னு இப்போவெ சொல்லி வையுங்க.

> அப்புறம் இன்னொரு முக்கியமான செய்திங்க. யாரும் ஏன் டில்லி அரசு தெலுங்கானாவுக்கு தலையசைச்சாங்கனு மண்டையைப் போட்டு கசக்கிப் பிழிஞ்சிக்கவேண்டாம். தப்பித்தவறிக் கூட இது சந்திரசேகர் ரர்வ் உண்ணாவிரதத்தின் மகிமை, வெற்றினு நினைச்சி காந்தியம் பேச ஆரம்பிச்சாடாதீங்க. வருஷக்கணக்கில் மணிப்பூரில் மனோராமா உண்ணா நோம்பிருப்பதை ஏன் கண்டு கொள்ளவில்லை இந்திய அரசுனு தேவையில்லாத கேள்விகளைத் தவிர்த்துவிடுங்கள்.

.> உலகத்தில் என்ன நடந்தாலும் அதில் அமெரிக்காவின் தலையீடு இருப்பதாக நம்ம காம்ரேட்கள் தொண்டை வறள கத்திக் கொண்டிருப்பார்கள். சோவியத் ஒன்றியத்தை உடைத்த அமெரிக்கா ஆசியாவின் பெரும் சக்தியாக வளர்ந்து கொண்டிருக்கும் இந்தியாவைத் துண்டு துண்டுகளாக உடைக்கும். உடைக்க வைக்கும் .. மன்மோகம் சிங் இதெற்கெல்லாம் தலையாட்டியே ஆகவேண்டும் என்று பேசுவார்கள், நீங்கள் என்ன செய்யுங்கள்.. உங்கள் டி.வி சேனலில் மானாடா மயிலாட பாருங்கள், அதுப் பிடிக்காட்டா உலக அரங்கில் தரவரிசையில் முதலிடத்திற்கு வந்துவிட்ட இந்தியாவின் கிரிக்கேட் மேட்சைப் பாருங்கள். காம்ரேட்கள் சொல்வதை எல்லாம் கேட்டால் தலைவலி வரும். எனவே முன்னெச்சரிக்கையாக அவற்றைத் தவிர்த்துவிடுங்கள்.

> பிள்ளையைக் கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டுவதுனா என்னானு இத்தனை வருஷமும் புரியாம இருந்தேனா. இப்போ புரிஞ்சிட்டுங்க. தெலுங்கானா வேணும்னு ஒரு கூட்டம், வேண்டாம்னு ஒரு கூட்டம். டில்லிக்காரன் பயங்கர எம்டன். சரினு சொல்ற மாதிரி சொல்லி எப்படி ந்நோ சொல்லிட்டிருக்கான் கவனிச்சீங்களா. How to say YES when you want to say NO என்று இந்த எம்டனகளை வச்சே தலையாணி மாதிரி தடியா புக்கு போடலாம்.

இப்படியே நாளையும் பொழுதையும் இவனுக எல்லாம் கழிச்சிடுவானுக. அப்புறம் பொதுசனத்தைப் பத்தி பேசவோ யோசிக்கவோ இந்த பார்லிமெண்டு, சட்டசபை , பத்திரிகை, டி.விக்காரன் இவனுக்கெல்லாம் எங்கே நேரமிருக்கும்? அது என்னா லிபரன் கமிஷன் அது இதுனு எதோ காதில் விழுந்ததே... எல்லாத்துக்கும் கோவிந்தா.. எங்க ஊரிலே சாம்பார் பருப்பு விலை கிலோ 100 ரூபாங்க. அட வெங்காயம், உருளைக்கிழங்கி விலை கிலோ 25க்கும் மேலே. இப்போ புரியுதா ஏன் டில்லிக்காரன் YES சொன்னானு.

புரியாட்டாலும் ஒன்னும் குடிமுழுகிப் போயிடாதுங்க. கோவையில் நடக்க இருக்கும் செம்மொழி மாநாடு ஏற்பாடுகள் குறித்து எழுதுங்களேன் யாராச்சும். செம்மொழி மாநாடு நடக்கும் காலத்தில் நாமும் வாழ்ந்து கொண்டிருக்கிறொம் என்பதை நினைத்து நினைத்து நினைத்து பூரித்துப் போகும்,

- புதியமாதவி, மும்பை

பின்குறிப்பு:

சில தனி மாநிலக் கோரிக்கைகளின் நியாயங்களை இனவரைவியல் ஆய்வுக்குட்படுத்தி எழுத உட்கார்ந்தேன். புத்தகம் படிச்சி குறிப்பெடுத்து எப்பவுமே ஸீரியசா எழுதி எழுதி என் கணினி மவுசுக்குப் போரடித்துவிட்டதாம்!