டாக்டர் வரதராஜுலு நாயுடு அவர்கள் தனது சுற்றுப்பிரயாணத்தில் நாகப்பட்டணம் முனிசிபல் உபசாரப்பத்திரத்திற்கு பதிலளிக்கும்போது வகுப்புவாரிப்பிரதிநிதித்துவம் வேண்டுமென்று பேசினார். அதாவது பஞ்சமர் முதலிய சிறுபான்மையோருக்கு தனித்தொகுதி வகுத்து தேர்தல் முறையை அளிக்க வேண்டும் என்று பேசியிருக்கிறார். (இது 21-3-26 தமிழ்நாடு பத்திரிகையின் 7 - வது பக்கம் 23, 24, 25, 26 - வது வரிகளில் பிரசுரமாயிருக் கிறது) நாம் கேழ்க்கும் முதல் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் இதேதான். இது சமயம் பஞ்சமர்களுக்கு டாக்டர் நாயுடு சொல்லுகிறபடி செய்தால்கூட போது மானது. ஆனாலும் பஞ்சமர் சிறுபான்மையோரல்ல என்பதை டாக்டர் நாயுடு அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்ளுகிறோம். பஞ்சமர் என்போர் இந்தியாவில் ஐந்தாவது வகுப்பார் என்று சொல்லுவது நிஜமல்லாமலிருந்தாலும் தேச மொத்த ஜனத்தொகையில் 5-ல் ஒன்றுக்கு மேலாயிருக்கிறார்கள். இந்த கணக்கு டாக்டர் நாயுடு அவர்களுக்குத் தெரிந்ததுதான்.

ஜஸ்டிஸ் கட்சியாருடைய வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தின் தத்துவமும் இதுதான். அதாவது தனித்தொகுதி வகுத்து, தேர்தல் முறையை அளிக்க வேண்டுமென்றுதான் கேள்க்கிறார்கள். நாமும் அதைத்தான் ஆதரிக்கிறோம். டாக்டர் நாயுடு அவர்கள் சொல்லுவது பஞ்சமருக்கும் சிறுபான்மையோருக்கும் என்கிறார். நாம் சொல்லுவதும் அதேதான். அதாவது பிராமணர், பிராமணரல்லாதார், பஞ்சமர் என மூன்று பிரிவுகளாகப்பிரிக்கும்படி கேள்க்கிறோம். டாக்டர் நாயுடு அவர்கள் சொல்லுவது போல் இம்மூன்று பிரிவில் பஞ்சமருக்கும் சிறுபான்மையோராகிய பிராமணருக்கும் தனித்தொகுதி வகுத்து தேர்தல் முறை அளித்துவிட்டால் பாக்கியிருப்பவர்களுக்கு தானாகவே தனித்தொகுதியும் தேர்தல் முறையும் ஏற்பட்டுவிடுகிறது. மற்றபடி கிறிஸ்தவர், மகமதியர், ஐரோப்பியர், ஆங்கிலோ இந்தியர் முதலிய வகுப்பார்களுக்கு ஏற்கெனவே ஏற்பட்டுப்போயிருக்கிறது.

மற்றபடி எந்த விதத்தில் ஜஸ்டிஸ் கட்சி பிராமணரல்லாதார் கேள்க்கும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்திற்கும், டாக்டர் நாயுடு போன்ற சுயராஜ்யக்கட்சியை ஆதரிக்கும் பிராமணரல்லாதார் கேள்க்கும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்திற்கும், ஸ்ரீமான்கள் எஸ்.ராமநாதன், ஆரியா, சக்கரைச் செட்டியார், தண்டபாணி பிள்ளை, ஈ.வெ.இராமசாமி நாயக்கர் முதலியோர் போன்ற பிராமணரல்லாதார் கேள்க்கும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்திற்கும் வித்தியாசமிருக்கிறதோ நமக்கு விளங்கவில்லை. இதையறிந்தே தான் நாம் பலதடவைகளில் டாக்டர் நாயுடு அவர்கள் தனது அந்தரங்கத்தில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்திற்கு விரோதியல்லவென்றும் ஏதோ சிற்சில சந்தர்ப்பங்களில் மாத்திரம் ஸ்ரீமான் திரு.வி. கலியாணசுந்திர முதலியார் அவர்களோடு போட்டி போட்டு பிராமணர்களுக்கு நல்ல பிள்ளையாக வேண்டுமென்கிற சமயங்களில் டாக்டர் நாயுடுவும் முதலியாரைப் போலவே வகுப்புவாரிப்பிரதிநிதித்துவம் கூடாது என்று சொல்லவேண்டியதாய்ப் போய்விடுகிறது என்று கருதியே எழுதியிருக்கிறோம். ஆனாலும் ஸ்ரீமான் திரு.வி.கலியாண சுந்திர முதலியார் தான் கொஞ்ச காலத்திற்கு முன் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கேட்டது ஜஸ்டிஸ் கட்சியை ஒடுக்குவதற்காக என்று இப்போது சொல்வதுபோல் நமது டாக்டரும் நாகப்பட்டணத்தில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் வேண்டுமென்பதற்கு ஏதாவது காரணமோ வியாக்கியானமோ சொல்லி, மறுபடியும் வேதாளம் முருங்கை மரத்திலேறினாலும் ஏறலாம். ஆதலால், டாக்டர் நாயுடு முதலியோர்கள் சந்தர்ப்பங்களை உத்தேசித்துச்சொல்லும் வியாக்கியானங்களில் கருத்தைச் செலுத்தாமல் அவர்களின் அந்தரங்கத்தை மாத்திரம் தெரிந்து கொள்ளும்படி வேண்டுகிறோம்.

(குடி அரசு - கட்டுரை - 18.04.1926)

 

Pin It