தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களின்  பொருளாதார வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்ட சிறப்பு கூறுத்திட்டம் அனைத்து மாநிலங்களிலும் சரிவர பயன்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. எந்த ஒரு அரசியல் கட்சிகளும் இதனை எதிர்த்து குரல் கொடுக்கவில்லை என்ற நிலையில்,  நீண்டகாலமாக தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களின் வாழ்வுரிமைக்காக போராடி வரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் அவர்களிடம் ஒரு நேர்காணல் மூலம் சிறப்பு கூறு திட்டத்தினை முறையாக தமிழகத்தில் செயல்படுத்த விடுதலைச் சிறுத்தைகள் என்ன பங்களிப்பு செய்துள்ளார்கள் என்பதை அறிய  சென்னையில் கடந்த ஜனவரி மாதம் சென்னையில் ஒரு சந்திப்பு நடந்தது...

கேள்வி: தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களின்  பொருளாதார வளர்ச்சிக்காக ஏற்படுத்தப்பட்ட சிறப்புக் கூறு திட்டங்கள் நாடு முழுவதும் சரிவர நடைமுறைப்படுத்தப் படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. விடுதலைச் சிறுத்தைகளின் தேர்தல் அரசியல் நிலைப்பாட்டிற்கு பிறகான கால கட்டங்களில் நீங்கள் செய்த தலித் மக்கள் நலத்திட்டங்கள் என்ன?

thirumavalavan_351திருமாவளவன்: ஒவ்வொரு ஐந்தாண்டுத் திட்டம் மற்றும் நாட்டின் வரவு செலவுத் திட்டங்கள் உருவாக்கும் போதும் அந்த திட்டங்களின் மொத்த வரவு செலவு ஒதுக்கீட்டில், பட்டியல் இன மக்களின் மக்கள் தொகை சதவிகிதத்திற்குச் சமமான நிதியை, அம்மக்கள் பயனடையும் வகையில் துறைவாரியாக திட்ட வரைவுகளை உருவாக்கிச் செயல்படுத்தும் முறையை ஏற்படுத்தியது சிறப்புக் கூறுத் திட்டம்.  ஆனால் மைய அரசு, மாநில அரசுகளின் முறைகேடுகளினால் அந்த திட்டம் முழுமையாக தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களை சென்றடையவில்லை. அதற்கான நிதிகள் அனைத்தும் வேறு பல திட்டங்களுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

இன்னும் சில மாநிலங்களில் இப்படி ஒரு திட்டம் இருப்பதே தெரியாமல் பல தலித் தலைவர்கள் மெளனமாக இருக்கிறார்கள் என்ற செய்தி என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.   

இந்தியாவிலேயே தமிழகத்தில் ஒவ்வொரு நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யபடும்போதும் தாழ்த்தப்பட்ட மக்களின் சதவீத அடிப்படையில்  நிதி ஒதுக்கீடு செய்யும் சிறப்பு கூறு திட்டத்தை  நடைமுறைப்படுத்த செய்து ஆண்டுக்கு இரண்டாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் தலித் மக்களின் நல திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்ய வழி வகை செய்தது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. அந்த திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் உள்ள எல்லா தலித் மக்களும் பயனடைய வழி வகை செய்வதற்கு நிச்சயம் விடுதலை சிறுத்தைகள் கட்சி போராடும்.

தலித்துகளுக்கான உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்ற காரணத்திற்காக 2004ல் முதன் முதலாக தேர்தலில் வெற்றி பெற்று நான் ஏற்றுக் கொண்ட மங்களூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியை துறந்துள்ளேன்.

இன்னும் நமது குரல் வலுவடைவதற்கு அரசியல் அதிகாரங்களை அதிகமாக வென்றெடுக்க வேண்டிய சூழலில் உள்ளோம். விடுதலைச் சிறுத்தைகளின் தொடர் போராட்டங்களாலும் பெரும் முயற்சிகளினாலும் தலித் மக்களுக்கான பல மேம்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

பஞ்சமி நில மீட்புக்கான தனி ஆணையம், தலித் மக்களின் ரூபாய் 85 கோடியை தாட்கோவிடம் இருந்து தள்ளூபடி செய்ய வைத்தது, 10 ஆண்டுகளான தொகுப்பு வீடுகளை சரி செய்ய ரூ 15000 வழங்க வழி செய்ததும் விடுதலை சிறுத்தைகளின் பெரும் முயற்சியினால் தான்.

2001ன் மக்கள் தொகை அடிப்படையில் தலித் மக்களுக்கான தொகுதிகளை அதிகப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில்   நகராட்சி உட்பட 1300 மேற்பட்ட கூடுதல் இடங்கள் கிடைத்தது விடுதலை சிறுத்தைகளின் பெரும் முயற்சியாகும்,

மேலும் தொழிற் கல்வி பயிலும் தாழ்த்தப்பட்ட மாணவர்களின்  கல்விக் கட்டணத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்ற போரட்டத்தின் விளைவால் முதல் தலைமுறை மாணவர்களின் தொழிற் கல்விக்கான செலவை அரசே ஏற்று கொள்ள செய்தது.

அதே போல் ஆண்டுக்கு ரூபாய்  100 கோடி மதிப்பிலான மக்கள் நலத்திட்டங்களுக்காக தலித் மக்களின் மக்கள் சதவீத அடிப்படையில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியை அதிகப்படுத்தியது.

எங்கள் கட்சிக்கு கிடைத்த குறைந்த அதிகாரத்தின் மூலமாகவே இத்தனை நலத்திட்டங்களையும் எம்மக்களுக்காக போராடி பெற்றுள்ளோம். அரசியல் அதிகாரங்களை கைப்பற்றினால் இன்னும் அதிகமாக போராடி சமுக உரிமைகளை மீட்டெடுபோம்.

கேள்வி: தமிழ்த் தேசியம் பேசுபவர்களிடையே சிலர் இந்துத்துவா ஆதரவு சிந்தனை உடையவர்களாக உள்ளனர். அதனால் இந்துத்துவா எதிர்ப்பு நிலையில் உள்ள நடுநிலையாளர்களுக்கு தமிழ்த் தேசியம் என்பதில் ஒரு சிறு தயக்க உணர்வு இருப்பதாக தோன்றுகிறது. இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இந்துத்துவா எதிர்ப்பு நிலைப்பாடு என்ன?.  

திருமாவளவன்: தமிழ்த் தேசியத்தை வலியுறுத்துவதிலும், அதனை முன்னெடுத்துச் செல்வதிலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எப்பொழுதுமே ஒரு முன்னோடி இயக்கமாகத் தான் உள்ளது. ஆனால் நாங்கள் வலியுறுத்தும் தமிழ்த் தேசியம் இந்துத்துவ கொள்கைகளுக்கு முற்றிலும் எதிரானது. இன்னமும் சொல்லப்போனால் விடுதலை சிறுத்தைகளின் கொள்கைகளில் முதல் முக்கிய கொள்கையே இந்துத்துவா எதிர்ப்பு தான். சாதியத்திற்கு எதிரான எங்கள் போராட்டத்தில்  இந்துத்துவா எதிர்ப்பு என்பது முக்கிய பங்கு வகிக்கிறது. 

கேள்வி: விடுதலை சிறுத்தைகள் கட்சி சாதியத்தால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மட்டும் அல்லாமல் ஏனைய ஒடுக்கப்பட்ட சிறுபான்மை மற்றும் பிற்படுத்தப்பட்ட சமுகத்திற்காகவும் தொடர்ந்து பல வடிவங்களில் போராடி வருகிற அமைப்பு. ஆனால் கட்சியின் தேர்தல் அரசியல் நிலைப்பாட்டிற்கு பிறகு உங்களின் போராட்டக் குணங்களில் சிறு தொய்வு இருப்பதாகவும் தேர்தல் அரசியலுக்கு முந்தைய போர் குணம் குறைந்திருப்பாதாகவும் கூறப்படுகிறதே... உங்களின் நிலைப்பாடு என்ன? 

திருமாவளவன்: தலித் மக்களின் சமுக விடுதலைக்காக 80களில் தொடங்கிய போராட்டம் இன்றளவும் அதே வீரியத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. சாதியத்தால் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வுரிமையை காப்பதற்காக பல்வேறு மாறுபட்ட திட்டங்களுடன் போராடிய இயக்கம் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு.  கூனி குறுகித் திரிந்த சமுகத்தினை சக மனிதனை போல தலை நிமிர்ந்து யாருக்கும் அஞ்சத் தேவையில்லை என்ற உணர்வை தலித் மக்களுக்கு தந்தது விடுதலை சிறுத்தைகள் இயக்கம். பெரியாரையும், அண்ணல் அம்பேத்காரின் கொள்கைகளையும் சுமந்து சுயமரியாதையுடனும், அனைத்து உரிமைகள் பெற்ற மனித இனமாக தலித் மக்களின் வாழ்வாதாரத்தை வென்றெடுக்க தொலைநோக்கு பார்வையுடன் பயணித்துக் கொண்டிருக்கிறது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.  அதன் பயணத்தில் தலித் சமுகத்தை போன்றே சமுகத்தில் ஒடுக்கப்பட்ட அனைத்து சிறுபான்மை மற்றும் விளிம்பு நிலை சமுகத்தினரின் சமுக விடுதலைக்கான களமாகவும் விடுதலைச் சிறுத்தைகள் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறது.  அதனால் மேலும் எங்கள் போர்க்குணம் கூடியுள்ளது.

தேர்தல் நிலைப்பாடு என்பது அதிகாரத்தை வென்றெடுப்பதற்கான இன்னொரு திட்டம் மட்டுமே; அதனால் நமது போர்க் குணம் குன்றியதாய் மதிப்பிட முடியாது. ஜனநாயகத்தின் உரிமைகளின் எல்லைக்குள் சாத்தியப்பட்ட எல்லா வழிமுறைகளிலும் விடுதலைச் சிறுத்தைகள் தொடந்து போராடி வரும்.

2001 வேளச்சேரி தீர்மானத்திற்கு பிறகு பொதுத்தளத்தில் எல்லா மக்களுக்குமான கட்சியாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

இசுலாமிய சனநாயக பேரவை, மகளிர் விடுதலை இயக்கம், இளம்சிறுத்தைகள் எழுச்சி பாசறை, தமிழக உழவர் இயக்கம், முற்போக்கு மாணவர் கழகம், அரசு ஊழியர் ஐக்கியப் பேரவை, விடுதலை கலை இலக்கியப்பேரவை, தொழிலாளர் விடுதலை முண்ணனி, பழங்குடியினர் விடுதலை இயக்கம், சிறுவர் எழுச்சி மன்றம், மீனவர் மேம்பாட்டு பேராயம், தமிழக கிருத்துவ சமுக நீதிப்பேரவை, நரிக் குறவர்கள், கொத்தடிமை  ஒழிப்பு முன்னணி, சமுக நல்லின இயக்கம், அரவாணிகள் நலச் சங்கம், உழைக்கும    மக்கள் பண்பாட்டு இயக்கம், துரும்பர் விடுதலை இயக்கம் என பல இயக்கங்களைக் கொண்டு மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

கேள்வி: தமிழகத்தில் தமிழ் ஈழ விடுதலைப் போராட்டங்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பங்கு முக்கியமானதாக இருக்கிறது. இருந்தபோதும் அதன் நம்பகத்தன்மையின் மீது சிலர் சந்தேகம் கொள்வதாகத் தெரிகிறது. அதை பற்றி உங்களின் விளக்கம் என்ன?.

திருமாவளவன்: தமிழ் ஈழ விடுதலைப் போராட்டங்களில் விடுதலைச் சிறுத்தைகள் போராடுவதற்கும் மற்றவர்களின் போராட்ட நிலைப்பாடுகளுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன.  நாங்கள் சாதிய அடக்குமுறைகளுக்கு இடையே தமிழ் ஈழத்திற்காக தொடர்ந்து போராடி வருகின்றோம். எண்பதுகளில் தொடங்கி இன்றளவும் தொடர்ந்து நாங்கள் ஈழ விடுதலையை முக்கிய கொள்கைகளாக கொண்டு போராடி வருகிறோம்..

இன்னும் சாதிய பிரச்சனைகளில் நான் களம் கண்டதை விட பல மடங்கு தமிழ் ஈழ விடுதலைக்காகத் தான் நான் போராடி வருகிறேன்.

எங்களது போராட்டங்களையும் உணர்வுகளையும் சரிவர ஊடகங்கள் பதிவு செய்யாதபோதும், அண்ணன் பிரபாகரன் என்னை நேரில் அழைத்து அவரிடம் எனது உணர்வுகளையும் அவரது உணர்வுகளை நானும் பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்தது. எங்களின் போராட்டங்களுக்கு இன்றளவும் போதுமான ஊடக வெளிச்சங்கள் இல்லை.

2009 ஈழத்தமிழர்களுக்காக சென்னை மறைமலை நகரில் நான்கு நாட்கள் தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டபோது, நான் திமுக கூட்டணியில் இருந்து கொண்டே மூன்றாவது அணி அமைப்பதற்காக வைகோ, மருத்துவர் மற்றும் அண்ணன் பழ.நெடுமாறன் அவர்களை எல்லாம் எவ்வளவோ வலியுறுத்தியும், பல முறை முயற்சித்தும் அந்த யோசனையை யாரும் ஏற்காமல் உதறித் தள்ளினார்கள். அதிமுகவுடன் இணைந்து தேர்தலை சந்திக்க தயாரானார்கள். ஒரு கட்சியின் கூட்டணியில் இருந்து கொண்டே மூன்றாவது அணி அமைப்பதற்கு பகிரங்க அழைப்பு விடுத்தும் என்னை புறக்கணித்தார்கள். அப்பொழுது எங்களுக்கு வேறு வாய்ப்புகளே இல்லாதபோது தான் திமுகவுடனான தேர்தல் கூட்டணியை தொடர்ந்தோம். பிரபாகரன் கைது செய்து தூக்கிலிடப்பட வேண்டும் என்றும், போர் என்றால் பொதுமக்கள் சாகத்தான் செய்வார்கள் என்றும் ஈழத்து மக்கள் செத்து மடியும்போதும் ஆணவமாக பேசிய ஜெயலலிதாவிடம்  எப்படி எங்களால் கூட்டணி வைத்துக் கொள்ள முடியும்?.

திமுகவினுடன் தேர்தல் கூட்டணியில் இருந்து கொண்டே இன்றளவும் காங்கிரஸின் ஈழ எதிர்ப்பு நிலைப்பாடுகளை தொடர்ந்து கடுமையாக கண்டித்து வருகிறது விடுதலைச் சிறுத்தைகள்.

அதற்காக நாங்கள் எத்தனையோ அரசியல் எதிர்ப்புகளை தினந்தோறும் சந்தித்து வருகிறோம். தேர்தல் அரசியலுக்காக எங்களது கொள்கைகளை ஒரு பொழுதும் விட்டுக் கொடுக்க மாட்டோம்.

சந்திப்பு: மால்கம் X இராசகம்பீரத்தான்