பயங்கரவாதத்திற்கு  எதிரான போர் என்ற பெயரில், இரண்டு நாடுகளுக்கு இடையேயான போர் போன்ற ஒப்பனையுடன் ஆரம்பிக்கப்பட்ட போரில்,  உலகில் உள்ள அத்தனை வல்லரசுகளிடமும்   ஆயுதமும், ஆதரவும் வாங்கி குவித்திருந்த சிங்கள தேசம் ஒருபுறம். தங்களுக்கு உரிய உரிமை மறுக்கப்பட்ட போது அதனை எந்த விலை கொடுத்தாவது பெற்று விட வேண்டும் என்ற புலிகள் மறுபுறம். ஆனால் கொடுமை என்னவென்றால்  பயங்கரவாத இயக்கம் என உலகால் அறிவிக்கப்பட்ட புலிகள் நான்காம் கட்ட ஈழப்போரின் எந்த கட்டத்திலும் சிங்கள பொதுமக்களை இலக்காக கொண்டு எந்த ஒரு  தாக்குதலையும் நடத்தவில்லை. ஆனால் பெரும்பான்மை மக்களின் ஆதரவுடன் தேர்ந்தெடுக்கபட்ட அரசு என்ற முகமூடியுடன்,   ஒரு பயங்கரவாத இயக்கம் செய்ய வேண்டிய அத்தனை பயங்கரவாத வேலைகளையும் இலங்கை அரசு திட்டமிட்டு தமிழ் மக்களின் மீது ஏவி,  தன் விருப்பப்படி  போரை நடத்தி முடிவுக்கு கொண்டு வந்தது .

பயங்கரவாத இயக்கம் என்ற பெயரில் புலிகள் இயக்கத்தின் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை விடவும், கொடுரமான குற்றங்களை இலங்கை அரசு திட்டமிட்டு செய்தது என ஐநா நிபுணர் குழு ஒத்துக்கொண்டுள்ளது.  பொது மக்களின் எண்ணிக்கையை வேண்டும் என்றே குறைத்துக் கூறி அவர்களுக்கு செல்ல வேண்டிய உணவு, மருந்துகளை தடை செய்தது. பாதுகாப்புவலயங்களை உருவாக்கி, பொதுமக்களை ஒன்று கூடச்செய்து அவர்கள் மீது தாக்குதல் நடத்தியது. தெரிந்தே மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்தியது, சர்வதேச தொண்டு நிறுவனங்களையும், பத்திரிக்கையாளர்களையும்  பாதுகாப்பைக் காரணம் காட்டி வெளியேற்றியது, சரணடைந்த போராளிகளை வகை தொகை இன்றி கொன்று குவித்தது, என நீளும்பட்டியல் ஜனநாயகத்தை விரும்பும் எந்த அரசும் செய்யத் தயங்குபவை.

இது ஏதோ திடீரென்று   நிகழ்த்தப்பட்ட போரும், குற்றங்களுமல்ல, இலங்கைத் தீவில் தமிழர்களின் உரிமைகளை பறித்து, தமிழர்களின் இருப்பை இலங்கையில் நிராகரிப்பதன் மூலம் ஆதாயம் தேடும் வண்ணம்  தமிழர்கள் மீது திட்டமிட்டு தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டன,  நிகழ்த்தப்படுகின்றன .  இந்த தாக்குதல்கள்தான்  தமிழர்களை ஆயுத போரட்டத்தில் தள்ளியது, கடந்த ஐம்பது ஆண்டு கால போராட்டத்தில் தமிழர்களும் இலங்கையைச்  சேர்ந்தவர்கள்தான்  என்பதற்காக இலங்கை அரசு எந்த சட்ட ரீதியான பாதுகாப்பையும் தந்தது  இல்லை. தமிழர்கள் மீது திட்டமிட்ட படுகொலை தாக்குதல்களையும், சித்திரவதைகளையும், பாலியல் வன்முறைகளையும் ஏவி விட்டு  நாட்டை விட்டு துரத்துதல், என சிறுபான்மை தமிழர்களை ஒடுக்குவதிலேய குறியாய் இருகின்றது.

ஆனால் இவற்றை எல்லாம் கண்டித்து வழிக்கு கொண்டுவர வேண்டிய உலகம் , தமிழர்களது ஆயுத போராட்டத்தை காரணம் காட்டி களத்தில் இருந்த  புலிகளை பயங்கரவாத இயக்கமாக அறிவித்தது. ஆனால்  தங்கள் சுய நலனுக்காகவும், பூகோள அரசியலில் இலங்கையின் முக்கியத்துவம் கருதியும் இலங்கை செய்த படுகொலைகளையும், வன்முறைகளையும் கண்ணை மூடிக்கொண்டு ஆதரித்தன. போர்  முடிந்த உடனேயாவது சர்வதேச சமுகம் உள்ளே நுழைந்து பொதுமக்களுக்கு ஏற்பட்ட  இழப்பை கணக்கிட்டு இருக்க  வேண்டும், அந்த மக்களின் புனர் வாழ்வுக்கான பணிகளை முன் எடுத்திருக்க   வேண்டும். அதிலும் உலக நாடுகள் ஆர்வம் காட்டவில்லை, எனவே இலங்கை அரசு தன்னால் முடிந்த மட்டும் தமிழர்களை தரப்படுத்தி சித்திரவதைகளையும், படுகொலைகளையும், பாலியல் வன்முறைகளையும் கட்டற்று நிகழ்த்தியது.  

மேலும் உலக நாடுகள், ஐநா சபையை தொடர்பு கொண்டு அவர்களின் ஒப்புதலுடன், வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த புலிகளின் அரசியல் தலைவர்களுக்கு நிகழ்ந்த சித்திரவதை படுகொலைகளையும் தடுக்க முடியாமல் கைவிரித்தது.

 போர் முடிந்த இரண்டு வருடங்களின் பின்பும் போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சர்வேதேச உதவிகள் சென்று சேராதவண்ணம் இலங்கை அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து சர்வதேச நிறுவனங்களை வெளியேற்றி விட்டது.  வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் உதவிகளும் சிங்கள அரசின் மூலம் மட்டுமே  சென்று சேர வேண்டும் என்ற நெருக்குதலை உருவாக்கி, அந்த உதவிகளையும் சிங்கள மக்களுக்கு திருப்பி விடுகிறது. இலங்கையின்  வடக்கும், கிழக்கும் ராணுவ அடக்குமுறையின் கீழ் இருண்ட பிரதேசமாக மாற்றப்பட்டு கடத்தல்களும், படுகொலைகளும், பாலியல் வன்முறைகளும் தொடர்ந்தபடி  உள்ளன .

 போரில் பதிக்கப்பட்ட மக்கள் தகர கூரையின் கீழ் வாழ்ந்து வரும் நிலையில், போரில் ஈடுபட்ட  சிங்கள ராணுவத்தினருக்கு தமிழர்களிடம் இருந்து பறிக்க பட்ட இடங்களில் வீடுகள் கட்டி தருவதில் சிங்கள அரசு முனைப்பாக உள்ளது. நேர்மையான உள்நாட்டு, வெளிநாட்டு பத்திரிக்கையாளர்களை செய்தி சேகரிக்க விடாமல் பார்த்து கொள்ளும் இலங்கை அரசு,   மீறுவோரையும் எதிர்ப்பாளர்களையும்   வெள்ளை வேன் கடத்தல் மூலம் படுகொலை செய்கிறது,
 
போர் குற்றம் நடந்ததா? என்பதை பற்றி பான் கி மூனுக்கு ஆலோசனை வழங்க நியமிக்கப்பட்ட குழு, இலங்கைக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களிடம் விசாரணை நடத்த அனுமதி மறுத்த இலங்கை அரசு.  இன்று வரை போரில் எத்தனை  பேர் கொல்லப்பட்டு உள்ளனர், எத்தனை பேர் இலங்கை அரசின் தடுப்பு காவலில் உள்ளனர் என்பதை வெளிப்படையாக பேச மறுக்கிறது.

போர் முடிந்த பின்பு தமிழருக்கு ஒரு அரசியல் தீர்வு வழங்குவோம் என்று ஒரு மாய தோற்றத்தை  ஏற்படுத்திய சிங்கள அரசு, இன்று வரை அதற்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் போர்வெற்றியின் மூலம் சிங்கள மக்களிடம் கிடைத்த ஆதரவில், இலங்கையில் ஒருவர் இரண்டு முறைக்கு மேல் அதிபராக இருக்க முடியாது என்ற 18 பிரிவில் ராஜபக்சே திருத்தும் கொண்டு வந்து விட்டார். இதன் மூலம் தன்னை இலங்கையின்  நிரந்தர அதிபராக மாற்றி கொள்ள முயற்சி செய்கிறார் .

ஐநா போர்குற்ற அறிக்கைகளும்,  விசாரணைகளும் தமிழ் மக்களுக்கு சென்று சேரும் உதவிகளை பாதிக்கும் என அந்த மக்களை கேடயமாக்கி மிரட்டுவதன் மூலம், தனது குற்றங்களில் இருந்து இலங்கை தப்பிக்கப் பார்கிறது .

சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட பொதுமக்கள், போராளிகள் என போர் பற்றி வரும்  அனைத்து புகைப்படங்களையும் ,  காணொளிகளையும், தகவல்களையும் கண்ணை மூடிக்கொண்டு, எந்த வித விளக்கமும் இல்லாமல் பொய்என இலங்கை மறுக்கிறது. அது தனக்குதானே நற்சான்றிதழ் கொடுத்தபடி எல்லா குற்றசாட்டுகளையும், விசாரணைகளையும்  மறுக்கிறது .  சிறுபான்மை  தமிழர் மீது தன்னால் இயன்ற அனைத்து வழிகளிலும்  இன அழிப்பையும், அடக்குமுறைகளையும் திட்டமிட்டு மேற்கொள்ளும்  இலங்கையுடன் இனி தமிழர்கள் இணைந்து வாழ முடியாது என்ற உண்மையை உலக நாடுகள் உணர்ந்து கொண்டு ' இலங்கையை  பயங்கரவாத நாடாக' அறிவித்து, தமிழர்களுக்கு தனிநாடு மட்டுமே தீர்வு என உலக நாடுகள் அங்கீகரிக்கும் வரை இலங்கையில்  உள்ள தமிழர்களின் வாழ்வுக்கு எந்த ஒரு பாதுகாப்பும் இருக்கப்போவதில்லை.

Pin It