க‌ட்டுரையில் நுழையும் முன் க‌ட்டுரையின் மைய‌  விவாத பொருளான இண‌க்க‌ப்பாடு (Reconcilation) என்ற சொல் புழக்கத்தில் இல்லாமல் இருப்பதால் அதன் பொருள் பெரும்பான்மையான‌ த‌மிழ‌ர்க‌ளுக்கு தெரிந்திருக்கும் என்ப‌து ஐய‌மே. இண‌க்க‌ப்பாடு என்ப‌தை சேர்ந்து வாழுத‌ல் என‌ப் பொருள் கொள்ள‌லாம்.  கே.பி என்றறியப்படும் குமரன் பத்மபநாபன் சமீபத்தில் ஒரு ஊடகத்திற்கு செவ்வி அளிக்கும்பொழுது  இல‌ங்கையில் த‌மிழ‌ர்க‌ள் சிங்க‌ள‌வ‌ர்க‌ளுட‌ன் சேர்ந்து வாழ‌ வேண்டும் என்று கூறியுள்ளார். அவ‌ரின் அந்த‌ கூற்று சாத்திய‌மான‌ ஒன்றா என‌ இக்க‌ட்டுரையில் விரிவாக‌ ஆராய்ந்துள்ளார் ஆசுத்திரேலியாவில் வாழ்ந்து வரும் சிங்க‌ள‌ ம‌ருத்துவ‌ரான‌ பிரைன் சேன‌விர‌த்னே அவ‌ர்க‌ள்.

பிரைன் சேன‌விர‌த்னேத‌ன‌து ச‌மீப‌த்திய‌ க‌ட்டுரையான‌ “ஏன் இலங்கையில் இணக்கப்பாடு என்பது சாத்தியமில்லை ?” என்ற‌ க‌ட்டுரையில் பிரைன் சேன‌விர‌த்னே இல‌ங்கையில் “இண‌க்க‌ப்பாடு” என்ற வாதமே க‌ற்பனையான ஒன்று என்கிறார், மேலும் த‌மிழ் ம‌க்க‌ளின் மீது நடைபெற்ற உலகின் மிக‌ மோச‌மான‌ ம‌னித‌ உரிமை மீற‌லும், தொட‌ர்ந்து ந‌டைபெற்று வருகின்ற‌ இன‌ அழித்தொழிப்பு ந‌ட‌வ‌டிக்கைக‌ளும் இல‌ங்கையில் “இண‌க்க‌ப்பாடு” என்ற‌ ஒன்றையே இல்லாம‌ல் செய்து விட்டன என்கிறார் அவர். மேலும் “எரிகின்ற வீட்டில் பிடுங்கிய வரை இலாபம்” என்பதை போல ச‌ர்வ‌தேசியம்(International) தங்களது சுய இலாபத்திற்காக‌ செய்த‌ திட்டமிட்ட  க‌ழுத்தறுப்புகள், த‌மிழ‌ர்க‌ளை “இண‌க்கப்பாடு” ப‌ற்றி யோசிக்கவே விடாம‌ல் செய்து விட்ட‌து. 76 வ‌ய‌தான‌ பிரைன் சேன‌விர‌த்னே ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளின் உரிமைக்காக‌ ப‌ல‌ ஆண்டுக‌ளாக போராடிவருபவர். பண்டார நாயக்கா குடும்பத்தை சேர்ந்தவராக இருந்தாலும் இவர் ஈழ தமிழர்களின் உரிமைக்காக போராடி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் மேலும் கூறுகையில், சிங்க‌ள‌ ப‌குதிக‌ளில் ந‌டைபெறுவ‌தாக‌ சொல்ல‌ப்ப‌டும் அபிவிருத்தி(Development) ப‌ணிகளுக்கான‌ திட்டமிடும் அதிகாரம் கொழும்பில் உள்ள‌வ‌ர்க‌ளிடமே தொடர்ந்தால் சிங்கள பகுதிகளில் கூட அபிவிருத்தி என்ப‌து சாத்திய‌மான‌ ஒன்று அல்ல என்கிறார்…….

“ச‌ர்வ‌தேசிய‌ம் ம‌ற்றும் சர்வதேச நிதியத்தின்(IMF) தேவையில்லாத‌ த‌லையீடுக‌ள் இல்லாம‌ல் இருந்திருந்தால், ஒரு வேளை இல‌ங்கையில் சிங்க‌ள‌ ம‌ற்றும் த‌மிழ் இன‌ங்களுக்குள்ளே ஒரு ச‌மாதான‌ உட‌ன்பாடும், இண‌க்க‌பாடும் ஏற்ப‌ட்டிருக்கும் என‌ நான் உறுதியாக‌ ந‌ம்புகின்றேன்”  என‌க் கூறுகின்றார் ம‌ருத்துவ‌ர்.பிரைன் சேன‌விர‌த்னே. 1984ல் இந்த‌ பிர‌ச்ச‌னைக்கு தான் முன்வைத்த‌ “ஐந்து தேச‌‌ திட்ட‌த்தை” சற்றே த‌ன் ம‌ன‌தில் அசை போடுகின்றார்.(இதை ப‌ற்றி பின்ன‌ர் விரிவாக‌ காண்போம்)

“சிங்க‌ள‌ பெரும்பான்மைக்கும், ஒடுக்க‌ப்ப‌டுகின்ற‌ த‌மிழ் சிறுபான்மைக்குமான‌ இடைவெளி மேலும், மேலும் அதிக‌ரித்து கொண்டே செல்கின்ற‌து. அதே போல‌ த‌ங்க‌ளுக்கு எது “தேவை”,  எது “தேவை இல்லை” என்ப‌து தொட‌ர்பான‌ இடைவெளியும் தெற்கில் வாழும் சிங்க‌ள‌ர்க‌ளிட‌ம் அதிக‌ரித்து வ‌ருகின்ற‌து. ஊழ‌ல் மிகுந்த‌, அட‌க்குமுறை அர‌சினாலும், சர்வதேச நிதியத்தின் நிப‌ந்த‌னைக‌ளுக்காக‌ அர‌சு மேற்கொள்ளும் ம‌னித‌ உரிமைய‌ற்ற‌ செய‌ல்க‌ளினாலும் இந்த இடைவெளி அதிக‌ரித்துக் கொண்டே செல்கின்றது”.

“இந்த‌ திட்ட‌ங்க‌ளினால் பாதிக்க‌ப்ப‌ட்ட‌ ம‌க்க‌ளோ ஒழுங்கின்மையுட‌ன், ப‌ல‌ குற்ற‌ச்செய‌ல்க‌ளில் அதிக‌ளவில் ஈடுப‌ட்டு வ‌ருகின்றார்க‌ள். இவ‌ர்க‌ளுக்காக‌ குர‌ல் கொடுப்ப‌த‌ற்கு வெளியில் ச‌க்தி வாய்ந்த‌ ஒரு ச‌மூக‌ம் இல்லை. இது தான் ஏழைக‌ளின் பிர‌ச்ச‌னை. இத‌னால் தான் நான் இவ‌ர்க‌ளின் துய‌ர‌ங்க‌ளுக்காக‌ வ‌ருத்த‌ப்ப‌டுவ‌தோடு ம‌ட்டும‌ல்லாம‌ல், ப‌ல‌ வ‌ருட‌ங்க‌ளாக‌ இவ‌ர்க‌ளுக்காக‌ குர‌ல் கொடுத்தும் வ‌ருகின்றேன்”.

“உல‌கெங்கிலும் புலம்பெயர்ந்து வாழுகின்ற‌ ப‌த்து இல‌ட்ச‌த்திற்கும் மேற்ப‌ட்ட‌ தமிழ் சமூகம் இல‌ங்கை அர‌சு “இண‌க்க‌ப்பாடு” என்று கூறுவ‌தற்கான‌ உண்மை காரணத்தை புள்ளி விவ‌ர‌ங்க‌ளுட‌ன் ச‌ர்வ‌தேச‌ ச‌முதாய‌த்திட‌ம் எடுத்து வைத்து, “இண‌க்கப்பாடு” என்ப‌து இல‌ங்கையில் ஏன் சாத்திய‌மில்லை என‌ ஆதார‌பூர்வ‌மாக‌ விள‌க்க‌வேண்டும். இத‌ற்கு ந‌ம்மிட‌ம் தெளிவான‌ புள்ளிவிவ‌ர‌ங்க‌ள் வேண்டும்,  இந்த‌ ஒரு கார‌ண‌த்திற்காக‌த் தான் இக்க‌ட்டுரையை  நான் இந்த தருணத்தில் எழுதுகின்றேன்”.

க‌ட்டுரையிலிருந்து……….

இல‌ங்கையில் “தேசிய‌ இண‌க்க‌ப்பாடு” என்பது ப‌ற்றிய‌ பேச்சு இப்பொழுது ப‌ர‌வ‌லாக‌ பேச‌ப்ப‌டுகின்ற‌து. இந்த “இண‌க்க‌ப்பாடு” என்ப‌து குறிப்பாக‌ சிங்க‌ள‌ ஆதிக்க‌ அர‌சிற்கும், த‌மிழ் ம‌க்க‌ளுக்கும் இடையில் வேண்டும் எனவும் கூற‌ப்ப‌டுகின்ற‌து. த‌மிழ் ம‌க்க‌ள் ச‌ம‌ உரிமையுட‌னும், கௌர‌வ‌த்துட‌னும் எந்த‌ ஒரு இன‌ப்பாகுபாடும் இல்லாம‌ல் வாழ்வத‌ற்காக‌ போராடிய‌ சிங்க‌ள‌ன் என்ற‌ முறையில் கூறுகிறேன், இப்பொழுது தாங்க‌ள் பிற‌ந்த‌ ம‌ண்ணில் அவ‌ர்க‌ளுக்கு வாழ‌ வ‌ழியே இல்லாத நிலைமை உள்ளது, இந்த காரணத்தினால் அங்கு இண‌க்க‌ப்பாடு என்ப‌து சாத்தியமே இல்லை.
1948லிருந்து த‌மிழ‌ர்க‌ளின் மேல் இழைக்க‌ப்ப‌டும் கொடுமைக‌ளை நான் மிக‌வும் உன்னிபாக‌ க‌வ‌னித்து வ‌ருகின்றேன். 1948ல் ப‌த்து இல‌ட்ச‌ம் “இந்திய‌ ம‌லைய‌க‌ த‌மிழ‌ர்க‌ளை” (அந்த‌ கால‌க‌ட்ட‌த்தில் இல‌ங்கையின் மொத்த‌ ம‌க்க‌ள் தொகையில் ஏழில் ஒரு பங்கான இவர்களை) நாட‌ற்ற‌வ‌ர்க‌ளாக‌ மாற்றிய‌து அர‌சின் அநாக‌ரீகமான இனப்பாகுபாட்டு‌  ந‌ட‌வ‌டிக்கை (இந்த இந்தியத் தமிழர்கள் தான் இலங்கையின் தேசிய வருமானத்தில் முக்கிய பங்கு வகிக்கும் தேயிலை தோட்டங்களையும், இருப்புப் பாதை போக்குவரத்து கட்டமைப்பையும் உருவாக்கியவர்கள் எனபதை இங்கே நினைவில் கொள்ளவும்). இது போன்ற ஒருத‌லைப‌ட்ச‌மான‌ ந‌ட‌வ‌டிக்கைக‌ள் 1956லிருந்து தொட‌ர்ந்து வந்த சிங்க‌ள‌ அர‌சுக‌ளால்  பாரபட்சமில்லாமல் தொட‌ர்ச்சியாக‌ நிக‌ழ்ந்த‌து. இதில் அர‌சு நிறுவ‌ன‌ங்க‌ளின் திட்ட‌மிட்ட எண்ண‌ற்ற பாரபட்சமான நட‌வ‌டிக்கைக‌ளும் அட‌ங்கும். அர‌சின் இது போன்ற‌ திட்ட‌மிட்ட  இனப்பாகுபாடுக‌ளையும், ம‌னித‌ உரிமைய‌ற்ற‌ செய‌ல்க‌ளையும் பார்த்து வ‌ந்த‌தால் தான் நான் இல‌ங்கையில் “தேசிய‌ இண‌க்க‌ப்பாடு” என்ப‌து சாத்திய‌மில்லாத ஒன்று என‌ உறுதியாக கூறுகின்றேன்.

“த‌மிழ் தீவிர‌வாத‌த்தை” துடைத்தெறிகின்றோம் என்ற‌ பெய‌ரில் ச‌மீப‌த்தில் அர‌சு ந‌ட‌த்திய‌ த‌மிழர்கள் மீதான ப‌டுகொலைக‌ள் “தேசிய‌ இண‌க்க‌ப்பாட்டை” இல்லாமலே செய்துவிட்ட‌ன.

“தேசிய‌ இண‌க்க‌ப்பாடு” ந‌ட‌ப்ப‌த‌ற்கு சில‌ முக்கிய‌ அடிப்ப‌டை கார‌ணிக‌ள் உள்ள‌ன.

1) இண‌க்க‌ப்பாடு வேண்டும் என்ற‌ ச‌ரியான‌ உள்நோக்க‌ம் (அரசுக்கு இருக்க)வேண்டும்.

2) இது வ‌ரை தாங்கள் செய்த‌‌ த‌வ‌றுக‌ளை உண‌ர்ந்து அவர்கள் ம‌ன்னிப்பு கேட்க‌ வேண்டும்.

3) இன‌ப்பிர‌ச்ச‌னை ந‌ட‌க்க‌ கார‌ண‌மான‌ முக்கிய‌ பிர‌ச்ச‌னைக‌ளை க‌ண்டுண‌ர்ந்து அவ‌ற்றை க‌ளைவ‌த‌ற்கு தேவையான‌ ந‌ட‌வ‌டிக்கைக‌ளை மேற்கொள்ள‌ வேண்டும்.

4) இண‌க்க‌ப்பாடு தொட‌ர்பான‌ திட்ட‌த்தில் உள்ள‌ த‌டைக‌ளை நீக்க‌ வேண்டும்.

மேற்கூறிய‌வ‌ற்றில் எந்த‌ ஒரு நிக‌ழ்வும் இல‌ங்கையில் ந‌ட‌ப்ப‌து போல‌ தெரிய‌வில்லை. இத‌னால் “தேசிய‌ இண‌க்க‌ப்பாடு” சாத்திய‌மில்லை என்ப‌து சிறு குழ‌ந்தைக்கு கூட‌ புரியும் ஒன்றாகும்.

“தேசிய‌ இண‌க்க‌ப்பாடு” என்ற‌ ந‌ம்ப‌ முடியாத‌ பொய்யை இல‌ங்கை த‌ன‌து ச‌ர்வாதிகார‌ அர‌சை த‌க்க‌வைப்ப‌த‌ற்காக ச‌ர்வ‌தேசிய‌ ச‌மூக‌த்திட‌ம் திட்ட‌மிட்டு ப‌ர‌ப்பி வ‌ருகின்ற‌து. இத‌ற்கு முன்னால் சில‌ அடிப்ப‌டை பிரச்சனைகளைப் ப‌ற்றி நாம் விரிவாக‌ பேச‌ வேண்டியுள்ள‌து. இதில் நான்கு முக்கிய‌ புள்ளிக‌ள் உள்ள‌ன‌.

1) ச‌ன‌நாய‌க‌த்தை முற்றிலுமாக‌ துடைத்தெறியும் ந‌ட‌வ‌டிக்கைகள்.

2) இல‌ங்கையை சிங்க‌ள‌ பௌத்த‌ நாடாக‌ மாற்றும் திட்ட‌மிட்ட‌ நோக்கம்

3) த‌ன‌து புவிசார் அர‌சிய‌லுக்காக‌வும், சுய‌ இலாப‌த்திற்காக‌வும் இந்த‌ பிர‌ச்ச‌னையில் த‌லையிட்ட உலக‌நாடுகள்

4) இல‌ங்கை ஆங்கிலேய‌ கால‌னீய‌ க‌ட்ட‌மைப்பைக் கொண்ட‌ தோல்விய‌டைந்த‌ நாடு. இந்த‌ க‌ட்ட‌மைப்பை முற்றிலுமாக‌ மாற்றும் வ‌ரை இங்கு அமைதி, இண‌க்க‌ப்பாடு, ஒற்றுமை என்ப‌தெல்லாம் கற்பனையில் கூட ந‌ட‌க்கவியலாதவை. [.......]

வெளி உல‌கிற்கு இல‌ங்கை ஒரு ச‌ன‌நாய‌க‌ நாடு என‌ காட்டுவ‌தற்கு ப‌ய‌ன்ப‌டும் ஒரு க‌ருவியாக‌ இல‌ங்கை அர‌சிய‌ல்வாதிக‌ள் “அர‌சியலமைப்பை” ப‌ய‌ன்ப‌டுத்துகின்ற‌ன‌. ஆனால் உண்மையில் இந்த  “அரசியலமைப்பை” பெரும்பான்மை சிங்க‌ள‌ ஆதிக்க‌ எண்ண‌த்திற்காக இந்த ச‌ட்ட‌த்தை எப்படியெல்லாம் வ‌ளைக்க‌, உடைக்க முடியுமே அப்படியெல்லாம் சிங்களர்கள் பயன்படுத்தியுள்ளார்கள். த‌மிழ‌ர்க‌ள் “பெரும்பான்மை அல்லாத‌வ‌ர்க‌ள்” ஆகையால் அவ‌ர்க‌ளுக்கு இங்கே க‌ருத்து கூற‌ கூட‌ அனும‌தி இல்லை. அவர்க‌ள் இந்த‌ ச‌ட்ட‌த்தை எடுத்து கொள்ளவதும் அல்ல‌து அப்ப‌டியே விட்டு விட்டு செல்வதும் அவர்கள் விருப்பம், இதைப்ப‌ற்றியெல்லாம் அர‌சு (எப்பொழுதுமே சிங்க‌ள‌ பெரும்பான்மை கொண்ட அரசு) ஒரு பொழுதும் க‌வ‌லையே ப‌டாது.

அர‌சிய‌லமைப்பிற்கு இவ்வ‌ள‌வு தான் அதிகார‌ம் உண்டு. ஒரு நிக‌ழ்வு எப்ப‌டி ந‌ட‌க்க‌ வேண்டும் என்ற‌ வ‌ரைமுறையை வ‌ரைய‌றுக்கும் அதிகாரமும், அர‌சு என்ன‌ செய்ய‌லாம், என்ன‌ செய்ய‌கூடாது என‌ சொல்லும் உரிமை ம‌ட்டும் தான் உண்டு. இதற்கு மேல் அர‌சிய‌லமைப்புக‌ளுக்கு எந்தவொரு அதிகாரமும் இல்லை. அர‌சு அதிகார‌த்தை கைப்ப‌ற்றுவ‌ர்க‌ளிட‌ம் உள்ள‌ நேர்மை, நாண‌ய‌ம் போன்ற‌வையே இவ‌ற்றை நிர்ண‌ய‌க்கின்ற‌ன‌. அர‌சு அதிகார‌த்தை கைப்ப‌ற்றுப‌வ‌ர்க‌ள் ச‌ர்வாதிகாரிக‌ளாக‌ இருந்தால் ச‌ர்வாதிகார ஆட்சி தான் அங்கு ந‌ட‌க்கும், அர‌சிய‌ல‌மைப்பு இருந்தாலும் சரி, இல்லை என்றாலும் ச‌ரி.

[......]

த‌மிழீழ‌ விடுத‌லைப் புலிக‌ளை அழிக்க‌ அர‌சு எல்லா முய‌ற்சிக‌ளையும் மேற்கொண்ட‌து. இங்கே புலிக‌ள் பிர‌ச்ச‌னை அல்ல‌, புலிக‌ள் இந்த‌ பிர‌ச்ச‌னையால் உருவான‌வ‌ர்க‌ள் ம‌ட்டுமே. ப‌ல இன‌, ப‌ல ம‌த‌, ப‌ல‌ மொழிக‌ள், ப‌ல‌ க‌லாச்சார‌ங்க‌ளை கொண்ட‌ இல‌ங்கையை சிங்க‌ள‌ பௌத்த‌ நாடாக‌ மாற்றிய‌ இன‌வெறியே இந்த‌ “பிர‌ச்ச‌னைக்கு” முக்கிய கார‌ண‌மாகும்.

இங்கே அழிக்க‌ப்ப‌ட்ட‌து த‌மிழீழ‌ விடுத‌லைப் புலிக‌ள் ம‌ட்டும‌ல்ல அவர்களுடன் சேர்த்து நீதி, அமைதி என்ற எல்லாமே அழிக்க‌ப்ப‌ட்டு விட்டது. வ‌ட‌க்கு ம‌ற்றும் கிழ‌க்கில் வாழ்ந்து வ‌ந்த‌ 40,000 த்திற்கும் அதிக‌மான‌  த‌மிழ‌ர்க‌ளை சிங்க‌ள‌ அர‌ச‌ ப‌டைக‌ள் கொடூரமாக ப‌டுகொலை செய்துள்ள‌ன‌. இந்த படுகொலைக்கு முன்ன‌ர் ச‌ர்வ‌தேசிய‌ பார்வையாள‌ர்களையும், தொண்டு நிறுவ‌ன‌ங்களைச் சேர்ந்தவர்களையும் அந்த‌ இட‌த்தில் இருந்து வெளியேற்றி “சாட்சியமே இல்லாத‌ இன‌ப்ப‌டுகொலையை” நடத்தியுள்ளது இலங்கை இனவெறி அரசு.

இந்த‌ ப‌டுகொலையில் இருந்து த‌ப்பித்த‌ 2,80,000 த‌மிழ‌ர்களோ “வ‌தை முகாம்க‌ளில்” அடைக்க‌ப்பட்டு தினம் தினம் சித்ரவதைகளுக்கு ஆளாகின்றனர். இந்த‌ முகாம்களோ இல‌ங்கை அர‌சு கையெழுத்திட்டுள்ள சர்வதேச ம‌னித‌ உரிமை விதிக‌ளுக்கு நேரெதிராக‌ உள்ள‌ன‌.

ச‌ர்வ‌தேசிய‌ ச‌மூக‌த்தின் க‌டுமையான‌ நிர்பந்த‌த்தினால் இவ‌ர்க‌ளில் 2,00,000 த‌மிழ‌ர்க‌ள் விடுவிக்க‌ப்பட்டுள்ளார்கள். இவ‌ர்க‌ளின் நிலமோ போரினால் ஒட்டு மொத்த‌மாக‌ அழிக்க‌ப்ப‌ட்டு, க‌ண்ணி வெடிக‌ள் நிர‌ம்பி காட்சிய‌ளிக்கின்றது. இவ‌ர்க‌ள் அரசினால் உள்நாட்டிலேயே அக‌திக‌ளாக‌ ஆக்க‌ப்ப‌ட்டுள்ள‌ன‌ர். சூன் 2010 க‌ண‌க்கின் ப‌டி இன்றும் 60,000 த‌மிழ‌ர்க‌ள் “வ‌தை முகாம்க‌ளில்” அடைக்கப்பட்டுள்ளார்கள். க‌ட‌ந்த‌ ஒரு வ‌ருட‌த்திற்கும் மேலாக‌ அவ‌ர்க‌ள் இங்கு அடைத்து வைக்க‌ப்ப‌ட்டுள்ளார்கள். ஆயிர‌க்க‌ண‌க்கானோர் அகதி தஞ்சம் ‌கோரி புல‌ம் பெய‌ர்ந்து பல நாடுகளுக்கு சென்று வருகின்றார்கள். இல‌ங்கை அர‌சு “தேசிய‌ இண‌க்க‌ப்பாட்டிற்காக” செய்தது இதை தான்.

[.....] 

இர‌ண்டு தேசங்களை உருவாக்க வேண்டிய தேவையும் அதற்கான இடமும் இல‌ங்கையில் உள்ளது( சிங்க‌ள‌ நாடு ஒன்று, த‌மிழ் நாடு ஒன்று), என்னை பொருத்தவரை ஐந்து தேசங்களை உருவாக்குவ‌த‌ற்கான‌ தேவையும் அதற்கான இடமும் கூட‌ இல‌ங்கையில் உள்ள‌து என்பேன் (வ‌ட‌க்கு, கிழ‌க்கு, ந‌டுப்ப‌குதி, தெற்கு, மேற்கு) அந்த‌ந்த‌ ப‌குதிக‌ளுக்கான‌ த‌லைந‌க‌ர‌ங்க‌ள் அந்த‌ ப‌குதிக‌ளிலேயே வைத்து, அந்தந்த‌ ப‌குதியின் அபிவிருத்தி திட்ட‌ங்க‌ளுக்கான முழு அதிகாரத்தை அவர்களிடம் கொடுக்க‌ வேண்டும்.

இல‌ங்கை இவ்வாறெல்லாம் பிரிக்க‌ இய‌லாத‌ மிக‌ச்சிறிய‌ நாடு எனக் கூறுவ‌து மிகவும் முட்டாள்த‌ன‌மான‌ ஒன்று. இந்த‌ திட்ட‌ம் தான் இல‌ங்கையில் உள்ள‌ எல்லா ப‌குதியும் அபிவிருத்திய‌டைய உதவும். இதை விடுத்து விட்டு அபிவிருத்திக்கான‌ எல்லா அதிகார‌ங்க‌ளையும் கொழும்பில் உள்ள‌வ‌ர்க‌ளிட‌ம் கொடுப்பதும் எல்லா அதிகாரங்களையும் கொண்ட மைய அரசும் ச‌ரியான அமைப்பு முறைய‌‌ல்ல‌.

[......]

இல‌ங்கையில் உள்ள‌ பெரும்பான்மை ம‌க்க‌ளின் ம‌ன‌நிலையை புரிந்துகொள்வ‌து மிக‌ க‌டின‌மான‌ ஒன்று. “அமைதி ம‌ற்றும் இண‌க்க‌ப்பாடு” என்ப‌து ந‌ட‌க்க‌விய‌லாத‌ ஒன்று. கொழும்பில் உள்ள‌ ஊழ‌ல் க‌றை ப‌டிந்த‌, த‌குதிய‌ற்ற‌, ஒடுக்குமுறை அர‌சை பாதுகாக்க‌ ந‌ட‌க்கும் ச‌ர்வ‌தேச‌ அர‌சிய‌லை புரிந்துகொள்ளாம‌ல் “அமைதி ம‌ற்றும் நீதி” பற்றி கதைப்பது சிறுபிள்ளைத் த‌ன‌மான‌தும், ந‌டைமுறைக்கு ஒவ்வாத‌துமாகும்.

ம‌த்திய‌ கிழக்கு நாடுகளில் உள்ள‌ “பெட்ரோல்” எப்படி அவர்களின் பிர‌ச்ச‌னைக்கு கார‌ண‌மோ, அதே போல‌ இந்திய‌ பெருங்க‌ட‌ல் ப‌குதியில் இல‌ங்கை அமைந்துள்ள‌ இடமே அத‌ன் பிர‌ச்ச‌னைக்கு முக்கிய‌ கார‌ண‌மாகும். இலங்கை இந்தியாவிலிருந்து 36 கிலோ மீட்ட‌ர் தொலைவில் உள்ள‌து. இந்தியாவின் கொல்லைப்புற நாடு தான் இல‌ங்கை. இந்திய‌ப் பெருங்க‌டல் பகுதி உல‌கிலேயே பெரிய‌ க‌ட‌ல் பகுதியா என்றால் இல்லை, ஆனால் இந்த கடல் பகுதி தான் உல‌கிலேயே அதிகமாக‌ க‌ட‌ல்போக்குவ‌ர‌த்து நிக‌ழும் ப‌குதியாகும். இந்திய‌ பெருங்க‌ட‌ல் ப‌குதியை சுற்றியுள்ள‌ நாடுக‌ள் தான் உல‌கின் 40 விழுக்காடு பெட்ரோலிய‌த்தை உற்ப‌த்தி செய்கின்ற‌ன‌. இந்த‌ க‌ட‌ல் ப‌குதியில் தான் 70 விழுக்காடு பெட்ரோலிய‌ போக்குவ‌ர‌த்தும், 50விழுக்காடு கடல்வழி ச‌ர‌க்கு போக்குவ‌ர‌த்தும் நிக‌ழ்கின்ற‌து. “யார் இந்திய‌ பெருங்க‌ட‌ல் ப‌குதியை க‌ட்டுப‌டுத்துகின்றார்களோ அவர்களே ஆசியாவில் ஆதிக்க‌ம் செலுத்துவார்கள்” என்ற‌ ஒரு நூற்றாண்டுக்கு முன்ன‌ர் கூறினார் வ‌ட அமெரிக்க‌ க‌ட‌ற்ப‌டை த‌லைவ‌ர் ஆல்பிரெட் மேக‌ன்.

த‌மிழ‌ர் ப‌குதியான‌ வ‌ட‌க்கு ம‌ற்றும் கிழ‌க்கு ப‌குதியில் உள்ள‌ திரிகோண‌ம‌லை ப‌குதி தான் உல‌கிலேயே நான்காவ‌து பெரிய‌ இய‌ற்கை துறைமுக‌மாகும். இந்த‌ ப‌குதியை கைப‌ற்ற‌ ப‌ல உலக‌நாடுக‌ள் ப‌ல‌ நூற்றாண்டுக‌ளாக‌ போராடினார்கள். இன்றும் கூட‌ போராடி வ‌ருகின்றார்கள்.

சீனாவின் “முத்து மாலை” திட்ட‌த்தில் இல‌ங்கை முக்கிய பங்கு வகிக்கின்றது. இந்த‌ திட்ட‌த்தை சீனா த‌ன‌து எண்ணெய் போக்குவ‌ர‌த்தை பாதுகாப்ப‌த‌ற்காக‌வும், ஐரோப்பிய‌ நாடுக‌ளுக்கு ஏற்றும‌தி செய்யும் கடல் வழி ச‌ர‌க்கு போக்குவ‌ர‌த்தினை பாதுகாப்பத‌ற்காக‌வும்  ஒரு திட்டத்தை உருவாக்கியது. இந்த திட்டத்தின் படி தனது இராணுவ‌த்தை சீனா பல்வேறு நாடுகளில் நிறுவி வ‌ருகின்ற‌து. திரிகோண‌ம‌லை ப‌குதிக்காக‌ இந்தியாவுட‌ன் போராடிக் கொண்டிராமல், சீனா இல‌ங்கையின் தெற்கு ப‌குதியில் உள்ள‌ அம்ப‌ன்தோட்டா (இது ம‌கிந்தாவின் சொந்த‌ தொகுதியாகும்) என்ற‌ சிறிய‌ மீன்பிடி துறைமுக‌த்தை மிகப்பெரிய‌ துறைமுக‌மாக மாற்றியும், அங்கு ஒரு ச‌ர்வ‌தேச விமான‌ நிலைய‌ம் ஒன்றையும் கட்டமைத்து வருகின்றது (இதில் சர்வதேச விமான நிலையம் திறக்கப்பட்டு விட்டது).

இந்த‌ திட்ட‌த்தை த‌ன‌து துருப்பு சீட்டாக‌ கொண்ட‌ இராச‌ப‌க்சே த‌மிழ‌ர்க‌ளை அழிப்ப‌த‌ற்காக சிங்கள இராணுவ‌த்தை மேலும் ப‌ல‌ப்ப‌டுத்த, இராணுவத்திற்கு தேவையான‌ க‌ருவிக‌ள் அனைத்தையும் சீனாவிடம் இருந்து பெற்றுக்கொண்டார். இவ்வளவு உதவிகளைச் செய்த சீனாவோ இல‌ங்கை அரசின் ம‌னித‌ உரிமை மீற‌லை ப‌ற்றி ஒருவார்த்தை கூட கூறிய‌து இல்லை.

இல‌ங்கையில் சீனா வ‌ள‌ர்ந்து வ‌ருவ‌தை க‌ண்ட‌ வ‌ட‌ அமெரிக்கா இல‌ங்கையை மீண்டும் மேற்குல‌க‌ கூட்ட‌மைப்பில் கொண்டுவ‌ருவ‌த‌ற்கு முய‌ற்சி செய்ய‌ ஆர‌ம்பித்த‌து. ச‌ர்வ‌தேசிய‌ நிதிய‌ம் வ‌ட‌ அமெரிக்காவில் இல்லாம‌ல் இருந்தாலும், வ‌ட‌ அமெரிக்கா தான் அந்த நிதிய‌‌த்தை முழுமையாக‌ க‌ட்டுப‌டுத்துகின்ற‌து. இல‌ங்கை முத‌லாளித்துவ‌ நாடுக‌ளின் கூட்ட‌மைப்பில் உள்ள‌ ஒரு முக்கிய நாடாகும், இந்த கூட்டமைப்பில் ‘க‌ம்யூனிச‌’ சீனாவும் சேர்ந்திருப்பது சற்றே ஆச்ச‌ரிய‌மான உண்மை. வ‌ட‌ அமெரிக்காவின் வெளியுற‌வு கொள்கை தொடர்பான‌ ஆலோசனை குழுவில் உள்ள‌வ‌ர்க‌ள் இந்திய‌ பெருங்க‌ட‌ல் ப‌குதியில் முக்கிய‌மான‌ இட‌த்தில் உள்ள இல‌ங்கையை நாம் எக்காரணம் கொண்டும் த‌வ‌ற‌விட்டு விட‌க்கூடாது என‌ அர‌சை எச்ச‌ரித்துள்ளார்கள்.

தன் அருகிலேயே உள்ள‌ ஒரு நாட்டில் சீனாவும், வ‌ட‌ அமெரிக்காவும் வ‌ள‌ர்வ‌து க‌ண்ட இந்தியா இல‌ங்கையின் அர‌சிய‌லுக்குள் நுழைந்த‌து. வ‌ட‌ அமெரிக்காவையும், சீனாவையும் இல‌ங்கையில் இருந்து வெளியேற்றுவது, மேலும் இல‌ங்கையை இந்திய பேர‌ர‌சின் கீழ் ஒரு கால‌னீய‌ நாடாக்குவது, அதன் மூலம் இல‌ங்கையிலுள்ள‌ பெரும்பாலான‌ இய‌ற்கை வ‌ள‌த்தை சுர‌ண்டுவ‌து (எல்லா ஏகாதிப‌த்திய‌ நாடுக‌ளை போல‌) என்ப‌தே இந்திய‌ அர‌சின் கொள்கையாகும். 

eelam_tamils_339இல‌ங்கையில் வாழும் த‌மிழ‌ர்க‌ளின் நிலை ப‌ற்றிய‌ அக்க‌றை தென்னிந்தியாவில் வாழும் 7.5 கோடி த‌மிழ‌ர்க‌ளை த‌விர்த்து இந்தியாவில் வேறு யாருக்கும் இருந்ததில்லை. ஆனால் இந்தியா த‌மிழ்நாட்டில் இருந்து இய‌ங்குவ‌தில்லை. ச‌ர்வ‌தேசிய‌ முத‌லாளிக‌ளின் சுய இலாப‌ங்களை மட்டுமே க‌ண‌க்கில் கொண்டு தில்லியில் இருந்தே இந்தியா இய‌ங்குகின்ற‌து. இந்தியாவின் பிர‌த‌ம‌ரான‌ ம‌ன்மோக‌ன் சிங் ஒரு பொம்மை ம‌ட்டுமே. இத‌னால் தான் இவ‌ர் சூலை 8,2010ல் த‌ன்னை ச‌ந்திக்க வந்த‌ இல‌ங்கை த‌மிழ்  பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர்க‌ளிட‌ம் பின்வருமாறு கூறியுள்ளார் “நீங்கள் இல‌ங்கை அர‌சுட‌ன் சுமூகமான‌ முறையில் பேச்சுவார்த்தையை தொடர வேண்டும்”. இந்தியா ஈழத்த‌மிழ‌ர்க‌ளுக்கான‌ நீதியை பெற்றுத் தரும் என்று ஈழத்த‌மிழ்ச் ச‌மூக‌ம் எதிர்பார்த்தால் அவ‌ர்க‌ள் நிக‌ழ்கால‌ உல‌க‌ அர‌சிய‌லை புரிந்துகொள்ளவே இல்லை என்று தான் பொருள்.

இந்த‌ ச‌ர்வ‌தேசிய‌ அர‌சியல் தான் இல‌ங்கை யாரைப் பற்றியும் கவலை கொள்ளாமலும், தண்டனை பயமில்லாமலும் த‌மிழ‌ர்களை மிக மோசமாக படுகொலை செய்ய உதவியது, இதுவே இலங்கையில் “தேசிய‌ இண‌க்கப்பாடு” என்ப‌து சாத்தியமில்லாத‌‌ ஒன்றாக‌வும் மாற்றியுள்ள‌‌து. “ச‌ர்வ‌தேசிய அரசியலும், சர்வதேச நிதியத்தின்‌ த‌லையீடுக‌ள் இல்லாம‌ல் இருந்திருந்தால், ஒரு வேளை இல‌ங்கையில் சிங்க‌ள‌ ம‌ற்றும் த‌மிழ் இன‌ங்களுக்குள்ளே ஒரு ச‌மாதான‌ உட‌ன்பாடும், இண‌க்க‌பாடும் ஏற்ப‌ட்டிருக்கக்கூடும் என‌ நான் உறுதியாக‌ ந‌ம்புகின்றேன்” . ஊழ‌ல் மிகுந்த‌, அட‌க்குமுறை அர‌சை பாதுகாக்கும், சர்வதேச‌ நிதியத்தின் செயல்பாடுகளும்,  ச‌ர்வ‌தேசிய‌ அர‌சிய‌லும் இதே நிலையில் தொட‌ர்ந்தால் இல‌ங்கையில் “அமைதி”, “தேசிய‌ இண‌க்க‌ப்பாடு” போன்றவை க‌ற்ப‌னா வாக்கிய‌ங்க‌ளாகி விடும்.

[....]

“ஐக்கிய‌ நாடுக‌ளின் அக‌திக‌ளுக்கான‌ உய‌ர் அமைப்பு”(UNHCR) வெளியிட்ட‌ இல‌ங்கையில் ம‌னித‌ உரிமை நிலை பற்றயஅறிக்கையே ச‌ர்வ‌தேசிய‌ அமைப்புக‌ளினால் இது வ‌ரை வெளியிடப்ப‌ட்ட‌திலேயே மிக‌ மோச‌மான‌ அறிக்கையாகும். தமிழர்கள் வாழும் பகுதிகளில் உள்ள மனித‌ உரிமை நிலை நன்றாக முன்னேற்றம் கண்டிருப்பதாக கூறுகின்றது இந்த அறிக்கை.  ச‌ர்வ‌தேச‌ ம‌ன்னிப்பு ச‌பை, ம‌னித‌ உரிமை காப்ப‌க‌ம் போன்ற‌ உல‌க அள‌வில் அங்கீக‌ரிக்க‌ப்ப‌ட்ட‌ அமைப்புக‌ளே இலங்கைக்குள் வ‌ருவ‌தற்கு அரசு தடை விதித்திருக்கும் போது “ஐக்கிய‌ நாடுக‌ளின் அக‌திக‌ளுக்கான‌ உய‌ர் அமைப்பு” சூன் 5,2010 அன்று வெளியிட்ட‌ HRC/EG/SLK/10/03 என்ற‌ அறிக்கை வேடிக்கையான‌‌ ஒன்றாக‌ உள்ள‌து.

இந்த‌ அறிக்கையை வெளியிட்ட‌து “ஐக்கிய‌ நாடுக‌ளின் அக‌திக‌ளுக்கான‌ உய‌ர் அமைப்பு”. இந்த‌ அறிக்கை உலக அர‌சுக‌ள் இல‌ங்கையிலிருந்து வ‌ரும் ம‌க்க‌ளின் அகதி த‌ஞ்ச‌ கோரிக்கைக‌ளை பரிசீளிக்க உதவும் ஒன்றாகும். ஆரம்பம் முதலே க‌டும் ஒடுக்குமுறைக்கு ஆளாகி வரும் த‌மிழ் ம‌க்க‌ளை மிகவும் மோச‌மான‌ நிலைக்கு த‌ள்ளுகின்ற‌து இந்த‌ பொறுப்பில்லாத‌ அறிக்கை. இந்த‌ அறிக்கை “பாதி உண்மைகளையும்”, “பாதி பொய்களையும்”, முழுப்‌ பொய்களையும் கொண்டு த‌மிழ் ம‌க்க‌ளை நேர‌டியாக‌ பார்க்காம‌லே உருவாக்க‌ப்ப‌ட்ட‌ ஒன்றாகும். இந்த‌ அறிக்கையில் உள்ள‌ ஒவ்வொரு விவ‌ர‌மும் கேள்விக்குள்ளாக்க‌ப்ப‌ட‌ வேண்டியவையே.

[...]

அர‌சின் பொருளாதார‌ நெருக்க‌டியும், அதனால் தொடரும்‌ பிர‌ச்ச‌னைக‌ளும் “தேசிய‌ இண‌க்க‌ப்பாட்டை” மேலும் கேள்விக்குள்ளாக்குகின்ற‌ன‌. இந்த‌ இண‌க்க‌ப்பாடு என்ப‌தை சிங்க‌ள, த‌மிழ் ம‌க்க‌ளுக்கு இடையில் என‌க் கருதினும் ச‌ரி, அல்ல‌து சிங்க‌ள‌ ம‌க்க‌ள் த‌ங்க‌ளுக்கு எது “தேவை”, எது “தேவை இல்லை” எனக் கருதினும் சரி, எப்படியிருப்பினும் இந்த “இணக்கப்பாடு” கோரிக்கை கேள்விக்குள்ளாக்க‌ப்ப‌ட‌ வேண்டிய‌ ஒன்றே.

இல‌ங்கை மிக பெரும்‌ க‌டன் சுமையை கொண்டுள்ள‌து. இது ம‌ட்டும‌ல்லாம‌ல் மேலும் ப‌ல‌ பிர‌ச்ச‌னைக‌ள் அரசை தொட‌ர‌ப் போகின்ற‌ன‌. 2005 ந‌வ‌ம்ப‌ரில் தேர்ந்தெடுக்க‌ப்ப‌ட்ட‌ இராச‌ப‌க்சே அர‌சு த‌மிழீழ‌ விடுத‌லை புலிக‌ளுக்கு எதிரான‌ போருக்காக‌ மிக‌ பெரிய‌ அளவு செல‌வு செய்த‌து. இந்த‌ போரில் புலிக‌ளை அழித்த‌து ம‌ட்டுமல்லாம‌ல், 40,000 த‌மிழ் ம‌ற்றும் இசுலாமிய‌ பொது ம‌க்க‌ளை ப‌டுகொலை செய்துள்ளது அரச படை. மே 2009ல்  அதிப‌ர் இராச‌ப‌க்சே “போரில் அர‌சு வெற்றி பெற்றுள்ளது” என்று அறிவித்து போரை முடிவுக்கு கொண்டுவந்தார்.

இவையெல்லாம் முடிந்து ஒரு வ‌ருட‌ம் ஆன‌ பின்ன‌ரும்(சூன் 2010), இல‌ங்கை அரசு இராணுவ‌த்தின‌ரின் எண்ணிக்கையை 1,75,000லிருந்து 3,00,000 ஆக்க‌வேண்டும் என்ற‌ நோக்க‌த்துட‌ன்,  த‌ற்பொழுது மேலும் 55,000 ப‌டையின‌ரை சேர்த்துள்ளது. இதன் மூலம் இப்பொழுது 2,30,000 என்ற எண்ணிக்கையில் துருப்புகள் உள்ளார்கள். எந்த ஒரு போரும் ந‌டக்காத இந்நிலையில் ஏன் இராணுவ‌த்தின‌ரின் எண்ணிக்கையை அரசு அதிக‌ரி‌க்க‌ வேண்டும் என்ப‌தே என் கேள்வி? வாழ்க்கைக்கு தேவையான அத்தியாவசிய‌ செலவு அதிக‌ரித்து வருவதால், இந்த நிலையை எதிர்த்து அரசுக்கு எதிராக சிங்க‌ள‌ ம‌க்க‌ள் போராடினால் தமிழர்களை போல அவ‌ர்க‌ளையும் ந‌சுக்குவ‌த‌ற்கு இவ‌ர்க‌ள் தேவை என்பதே என் கேள்வியின் பதிலாகும். இதை தான் ச‌ர்வாதிகார‌ அர‌சுக‌ளும், ச‌ர்வாதிகாரிக‌ளும் கால‌ம் கால‌மாக‌ செய்து வ‌ந்துள்ள‌னர் என வரலாறு நமக்கு கற்பிக்கின்றது. இத‌ற்கு இராச‌ப‌க்சேவின் அர‌சும் ஒன்றும் விதிவிலக்கானத‌ல்ல‌.

போர் முடிந்த‌ பின்னும், இல்லாத ஒரு எதிரியிட‌ம் இருந்து நாட்டை பாதுகாப்ப‌த‌ற்காக‌ அர‌சு 2010ல் வ‌ர‌வு செல‌வில்(Budget) ஒதுக்கிய‌ தொகை ரூபாய்.202 பில்லியன். இது அரசின் மொத்த‌ வ‌ர‌வு செல‌வான‌ ரூபாய்.974 பில்லியனில் 21 விழுக்காடு ஆகும்.

SALW_400

க‌ட‌ந்த‌ வ‌ருட‌த்தில் ம‌ட்டும் (2009) அர‌சின் க‌ட‌ன் தொகை ரூபாய் 4.1 ட்ரில்லியன் என்ற இமாலய உயரத்தை எட்டியுள்ள‌து. இதில் ரூபாய் 1.8 ட்ரில்லியன் வெளிநாட்டு க‌ட‌ன் தொகையாகும் (இது 22 விழுக்காடு அதிக‌ரித்துள்ள‌து). “அர‌சின் மொத்த வ‌ருமான‌த்திலிருந்து, க‌ட‌ன் செலுத்தும் விகிதம் 90.5% லிருந்து 117.5% என்ற‌ அள‌விற்கு அதிக‌ரித்துள்ளது” என‌ த‌ன‌து வ‌ருடாந்திர‌ அறிக்கையில் கூறியுள்ள‌து இல‌ங்கையின் மைய‌ வ‌ங்கி. 2009ல் மொத்த‌ க‌ட‌ன் செலுத்தும் விகித‌மான‌ 39% (825.7 பில்லியன் ரூபாய்), இதில் க‌ட‌னின் வ‌ட்டி தொகை ம‌ட்டும் ரூபாய் 309.7 பில்லியன் அதாவ‌து அர‌சின் மொத்த‌ செல‌வில் 26%.

அர‌சின் மொத்த க‌ட‌ன் தொகையும், அதை திருப்பிச் செலுத்தும் தொகையும் 2010 ரூபாய் 767 பில்லியன் என்ற அளவில் உள்ள‌‌து. இது அர‌சின் மொத்த‌ செல‌வான‌ ரூபாய். 1,780 பில்லியனில் 44 விழுக்காடு ஆகும்.

சூலை 2009ல் அரசு திவால் நிலைக்கு சென்ற‌தால், அர‌சு ச‌ர்வ‌தேசிய‌ நிதிய‌த்திட‌ம் 2.6 பில்லியன் அமெரிக்க டாலர் தொகையை க‌ட‌னாக‌ கேட்ட‌து. இத‌ன் மூல‌ம் முன்னர் வாங்கிய‌ க‌ட‌ன் தொகையில் ஒரு ப‌குதியை திரும்ப‌ செலுத்த‌வும், அர‌சின் நிதிநிலைமையை மேம்ப‌டுத்த‌வும் அர‌சு திட்ட‌மிட்ட‌து. இதில் முத‌ல் இர‌ண்டு த‌வ‌ணைக‌ளையும் கொடுத்த‌ ச‌ர்வ‌தேசிய‌ நிதிய‌ம் இறுதி த‌வ‌ணையை நிறுத்திய‌து. அர‌சின் வ‌ர‌வு செல‌வு ப‌ற்றாக்குறையை(budget deficit) அரசு எப்படி குறைக்கும் என்று காட்டத் தவறியதே மூன்றாவது தவணை தொகையை சர்வதேச நிதியம் நிறுத்தக் காரணமாகும்., அரசின் வரவு செலவு பற்றாக்குறை 2009ஆம் ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்ப‌த்தியில்(GDP) 9.7% விழுக்காட்டை எட்டிய‌து. இந்த‌ வ‌ர‌வு செல‌வு ப‌ற்றாக்குறையை 2009ல் 7 விழுக்காடாக‌வும், 2010ல் 6 விழுக்காடாக‌வும், 2011ல்  5 விழுக்காடாக‌வும் குறைக்க‌ வேண்டும் என்ற‌ நிப‌ந்த‌னையை விதித்திருந்தது சர்வதேச நிதியம்.

இல‌ங்கை தெற்காசியாவிலேயே அதிக‌ க‌ட‌ன் தொகையை கொண்ட நாடுகளின் பட்டியலில் இர‌ண்டாவதாக இருக்கின்ரது என சூன்,2010ல் உல‌க‌ வ‌ங்கியின் தெற்காசிய‌ நிர்வாக‌ இய‌க்குன‌ரான‌ “எர்ன‌சுட்டோ மே” த‌ன‌து ச‌மீப‌த்திய‌ பொருளாதார‌ அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அதாவ‌து 2008ல் மொத்த‌ உள்நாட்டு உற்ப‌த்தியில் 81 விழுக்காடாக‌ இருந்த‌ இந்த‌ விகித‌ம் 2009ல் 86 விழுக்காடு அள‌விற்கு அதிக‌ரித்துள்ள‌து.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில், க‌ட‌ன் தொகை விகிதம் தொடர்பான பட்டியலிலும் ஆசியாவில் உள்ள‌ நாடுகளிலேயே இர‌ண்டாவ‌து நாடாக 2009ல் இல‌ங்கை ஆனது. க‌ட‌னை திருப்பி செலுத்தும் தொகை மொத்த‌ வ‌ர‌வு செல‌வில்(budget) 44 விழுக்காடாகும். அர‌சின் வ‌ர‌வு செல‌வில் மேற்கொள்ள‌ப்ப‌டும் மிக‌ப் பெரிய‌ செலவீன‌ம் இதுவே. இதில் இந்த‌ வ‌ருட‌ க‌ட‌ன் திருப்பி செலுத்தும் தொகை இதுவ‌ரை இல்லாத‌ அள‌வில் உள்ள‌து. அர‌சின் செல‌வீன‌த்தில் 26 விழுக்காடான‌ ரூபாய் 337 பில்லியன் க‌ட‌ன் தொகைக்கான‌ வ‌ட்டியாக‌ ம‌ட்டுமே 2010ல் இல‌ங்கை செலுத்தவேண்டும். இது ம‌ட்டும‌ல்லாம‌ல் ரூபாய். 565 பில்லியன் க‌ட‌ன் தொகையை திருப்பி செலுத்துவ‌த‌ற்காக‌ அர‌சு செல‌வீன‌ம் செய்ய‌ வேண்டும். இது மொத்த‌ க‌ட‌ன் தொகையை ரூபாய்.980 பில்லியன் என்ற‌ அள‌விற்கு உய‌ர்த்துகின்ற‌து.

ச‌ர்வ‌தேசிய‌ நிதிய‌த்தின் நிப‌ந்த‌னைக‌ளை நிறைவேற்றுவ‌த‌ற்காக (மக்கள் விரோத கொள்கைகளை கொண்ட) தான் மகிந்த‌ இராச‌ப‌க்சே ந‌வ‌ம்ப‌ர் 2009 அன்று வெளியிட‌ப்ப‌ட‌ வேண்டிய‌ அர‌சின் வ‌ர‌வு செலவு க‌ண‌க்கை தான் திரும்ப‌ அதிப‌ராக‌ ப‌த‌வியேற்ற‌பின் (சனவரி 2010), தனது அரசு அமைக்கப்பட்ட(ஏப்ர‌ல் 2010) பின்னர் பொறுமையாக‌ சூன் இறுதியில் வெளியிட்டார்.

சிலோன் மின்சார‌ வாரிய‌ம், பெட்ரோலிய‌ துறை, மைய‌ போக்குவர‌த்து துறை, இருப்பு பாதை போக்குவ்ர‌த்து துறை ம‌ற்றும் அஞ்ச‌ல் துறை போன்ற‌ துறைக‌ளுக்கு அர‌சு அளிக்கும் மானிய‌த்தை பெரும‌ள‌வில் குறைத்து கொள்வ‌தாக‌ அர‌சு மே 2010ல் ச‌ர்வ‌தேசிய‌ நிதி ஆணைய‌த்திட‌ம் வாக்குறுதி அளித்த‌து. த‌ற்பொழுது வேலையில் உள்ள‌ அர‌சு ப‌ணியாள‌ர்க‌ளை குறைப்ப‌து, ச‌ம்ப‌ள‌த்தை குறைப்ப‌து, பொருட்களுக்கான விலையை ஏற்றுவ‌த‌ன் மூல‌ம் ம‌ட்டுமே இதை அர‌சு மேற்கொள்ள‌ முடியும்.

இறுதியாக‌ சூலை 2010ன் ஆர‌ம்ப‌த்தில் அர‌சு பாராளும‌ன்ற‌த்தில் செல‌வீன‌ அறிக்கையை செல‌வீன‌ ச‌ட்ட‌ம் 2010ன் ஒரு ப‌குதியாக‌ கொடுத்த‌து. இதில் இரு பெரும் செலவீன‌ங்க‌ள் “பாதுகாப்பு” ம‌ற்றும் “க‌ட‌னை திருப்பி செலுத்தும் தொகையாகும்”. ம‌ற்ற‌ எல்லா இட‌ங்க‌ளிலும் அர‌சு கத்திரி வைத்து விட்ட‌து. குறிப்பாக‌ ச‌ம்ப‌ள‌ உய‌ர்வு இல்லை, ஊழிய‌ர்க‌ளின் சேம‌ ந‌ல‌ நிதி ம‌ற்றும் அவ‌ர்க‌ளின் ந‌ல்வாழ்வு திட்ட‌ங்க‌ள் குறைக்க‌ப்ப‌ட்ட‌ன‌. பொதும‌க்க‌ளுக்கான‌ உட‌ல் ந‌ல‌ பாதுகாப்பு ம‌ற்றும் க‌ல்விக்கான‌ நிதி பெரும‌ள‌வில் குறைக்க‌ப்ப‌ட்ட‌து.

இறுதியாக‌ அர‌சின் வ‌ர‌வு செல‌வு சூன் 29, 2010 அன்று பாராளும‌ன்ற‌த்தில் வெளியிடபட்டது. இத‌ற்கு ஒரு நாள் முன்ன‌தாகவே அர‌சு பெரும்பான்மையான‌ உழைக்கும் ம‌க்க‌ளை பாதிக்க‌க்கூடிய‌ வ‌கையில் தான் தயாரித்த‌ வ‌ர‌வு செல‌வு க‌ண‌க்கை ச‌ர்வ‌தேச‌ நிதி ஆணைய‌த்திட‌ம் கொடுத்த‌து. இதை க‌ண்டு பெரு ம‌கிழ்ச்சி அடைந்த ச‌ர்வ‌தேச‌ நிதிய‌ம்  இல‌ங்கைக்கான‌ க‌டனில் இறுதி த‌வ‌ணையான 2.6 பில்லிய‌ன் அமெரிக்க‌ டால‌ர் தொகையை இல‌ங்கைக்கு தாராளமாக கொடுத்த‌து.

ம‌க்க‌ள் ம‌றுவாழ்வு துறைக்கான‌ மொத்த‌ ஒதுக்கீடு 4 பில்லியன் ரூபாயிலிருந்து 2 பில்லியன் ரூபாய் என்று பாதியாக‌ குறைக்க‌ப்ப‌ட்ட‌து. இத‌ன் விளைவாக‌ வ‌ட‌க்கு ம‌ற்றும் கிழ‌க்கில் அர‌சால் உள்நாட்டிலேயே அக‌திக‌ளாக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் வீடு ம‌ற்றும் அத்தியாவ‌சிய‌ பொருட்க‌ள் இல்லாம‌ல் த‌விக்கும் நிலைக்கு த‌ள்ள‌ப்ப‌ட்டுள்ளார்கள். வீடு ம‌ற்றும் அத்தியாவ‌சிய‌ பொருட்க‌ள் இல்லாம‌ல் த‌விக்கும் நிலையில் “தேசிய‌ இண‌க்க‌ப்பாடு” என்ப‌து சாத்திய‌மான‌ ஒன்ற‌ல்ல‌ என்ப‌து சாமான்ய ம‌க்களுக்கு கூட எளிதில் புரியும்.

பொதும‌க்க‌ளின் உட‌ல் பாதுகாப்பு ம‌ற்றும் க‌ல்விக்கான‌ ஒதுக்கீடு முறையே ரூபாய் 52 பில்லியன் ம‌ற்றும் 46 பில்லியனாகும். இது 2009ல் ஒதுக்க‌ப்ப‌ட்ட‌ தொகையை விட‌ ரூபாய் 100 பில்லியன் குறைவாகும் (2009 ஆம் ஆண்டு ஒதுக்கீடு செய்ய‌ப்ப‌ட்ட‌ தொகையே 2008ஆம் ஆண்டு ஒதுக்கீடு செய்ய‌ப்ப‌ட்ட‌ தொகையை விட‌ ரூபாய் 12 பில்லியன் குறைவு என்ப‌தை இங்கே நினைவு கூற‌ வேண்டும்).

இது போன்ற மக்கள் விரோத‌ வ‌ர‌வு செலவானது பெரும்பான்மையான‌ ம‌க்க‌ளின் எதிர்ப்புக‌ளையும், உழைக்கும் ம‌க்க‌ளின் வேலை நிறுத்த‌த்தையும் ச‌ந்திக்கும் என‌ இராச‌ப‌க்சே அரசுக்கு தெரியும். இந்த எதிர்ப்புகளை எல்லாம் இராசபக்சே தன்னிடம் உள்ள மிக‌ப்பெரிய இராணுவத்தின் மூல‌ம் ஒன்றும் இல்லாம‌ல் செய்து விடுவார். இதுவரை இலங்கையில் நடைபெற்ற ஒரு இனத்தை அழித்தல் என்ற படியிலிருந்து முன்னேறி  அர‌ச‌ப‌டை எல்லா இன‌ ம‌க்க‌ளையும் அடித்து ஒடுக்கும் நிலைக்கு சென்றுள்ளது.

இந்த‌ பொருளாதார‌ குறைபாடு ம‌ட்டும‌ல்லாம‌ல், அரசில் அதிகார‌த்திலுள்ளவர்கள் அனைவ‌ரும் ஊழ‌ல் க‌றைப‌டிந்த‌வ‌ர்க‌ளாக‌வும், த‌குதியில்லாத‌வ‌ர்க‌ளாக‌வுமே உள்ளார்கள்.

பொருளாதார‌ பிர‌ச்ச‌னை ம‌ற்றும் க‌ட‌னை திருப்பி செலுத்த‌வ‌தில் பிர‌ச்ச‌னை உள்ள‌தால் அர‌சு இல‌ங்கையின் பெரும்பாலான‌ ப‌குதிக‌ளை வெளிநாட்டு முத‌லாளிக‌ளுக்கு குறைந்த‌ விலையில் விற்று வ‌ருகின்ற‌து, இதில் குறிப்பாக‌ சீனா ம‌ற்றும் இந்திய நாடுக‌ளுக்கு விற்று வருகின்றது. இதில் பெரும்பாலான‌ ப‌குதிக‌ள் த‌மிழ‌ர்க‌ளின் பூர்விக‌ ப‌குதியான‌ வ‌ட‌க்கு ம‌ற்றும் கிழக்கு ப‌குதியே. ஆனால் இந்த‌ நில‌ப்ப‌குதியின் உரிமையாள‌ர்களான தமிழர்களோ த‌ங்க‌ள் வீடுக‌ள் ம‌ற்றும் நில‌ப்ப‌குதிக்கு திரும்ப‌ முடியாத‌ வ‌ண்ண‌ம் “வ‌தை முகாம்க‌ளிளோ” அல்லது  “அக‌திக‌ளாக‌வோ” அலைந்து கொண்டுள்ளார்கள்.

[......]

இல‌ங்கை முத‌லாளிக‌ளுக்கு விற்க‌ப்ப‌ட்டு வ‌ருகின்ற‌து என்ப‌து இல‌ங்கையிலுள்ள‌ பெரும்பான்மை ம‌க்க‌ளுக்கே தெரியாது. அதிலும் குறிப்பாக “அபிவிருத்தி தேவையுள்ள‌தாக‌” ச‌ர்வ‌தேச‌ பொருளாதார‌ வ‌ல்லுன‌ர்களால் வ‌ர்ணிக்க‌ப்ப‌டும் த‌மிழ‌ர்க‌ளின் பூர்வீக‌ நில‌மான‌ வ‌ட‌க்கு ம‌ற்றும் கிழ‌க்கு ப‌குதிக‌ளில் உள்ள‌ நில‌ங்க‌ளே பெரும‌ள‌வில் விற்க‌ப்ப‌ட்டு வ‌ருகின்ற‌ன‌. இதே நிலை தான் இந்தியாவில் உள்ள‌து என்று த‌ன‌து ச‌மீப‌த்திய‌ நூலான “சாமான்ய‌ ம‌க்க‌ள் பேர‌ர‌சு ஆவ‌த‌ற்கான‌ வ‌ழிமுறை”என்ற நூலில் அருந்த‌தி ராய் எழுதியுள்ளார்:

”இந்திய‌ அர‌சு த‌ன‌து இர‌ண்டு க‌ர‌ங்க‌ளின் கொடுக்கு பிடிக்குள் இந்தியாவை வைக்க‌ ந‌ன்றாக‌ ப‌ழ‌கிவிட்ட‌து. ஒரு க‌ர‌த்தின் மூல‌மாக‌ இந்தியாவில் உள்ள‌ பெரும்பான்மை ப‌குதிக‌ளை முத‌லாளிக‌ளுக்கு விற்றுவ‌ருகின்ற‌து. இதிலிருந்து ம‌க்க‌ளின் க‌வ‌ன‌த்தை திருப்புவ‌த‌ற்காக “இந்து தேசிய‌வாத‌” கூச்ச‌ல்க‌ளையும், “ம‌த‌ பாசிச‌ கொள்கைக‌ளையும்” ம‌க்க‌ள் ம‌ன‌தில் விதைத்து வ‌ருகின்றது”.

imf_debt_350இதே நிலை தான் இல‌ங்கையிலும். அர‌சின் ஒரு க‌ர‌ம் நாட்டின் வள‌ங்க‌ளையும், நில‌ப்ப‌குதியையும் விற்றும், ச‌ர்வ‌தேசிய‌ அமைப்புக‌ளிட‌ம் (ச‌ர்வ‌தேசிய‌ நிதிய‌க‌ம், சீனா) இருந்து பெரும‌ள‌வில் க‌ட‌ன் வாங்கி நாட்டை ஒரு மீளா க‌ட‌னாளியாக‌ ஆக்கிவ‌ருகின்ற‌து. ஆனால் இதை ம‌றைப்ப‌த‌ற்காக‌ ம‌ற்றொரு க‌ர‌ம் “த‌மிழ் இராணுவ‌க்குழுக்க‌ளை வீழ்த்திய‌ வெற்றி கொண்டாட்ட‌ங்க‌ளிலும், த‌மிழ் தீவிர‌வாத‌த்திலுருந்து ம‌க்க‌ளை காப்பாற்றிய‌ முறையையும் கூறி ம‌க்க‌ளை மேலும் இன‌ வெறிய‌ர்க‌ளாக‌ மாற்றி வ‌ருகின்ற‌து.

அருந்த‌தி ராயின் நூலிலிருந்து:

”அர‌சின் பொருளாதார‌ க‌ட்ட‌மைப்பு மாறும் வேக‌த்தை பொறுத்து ம‌க்க‌ளாட்சி அமைப்பு முறை ஒவ்வொன்றாக‌ க‌ழ‌ற்றி வீச‌ப்பட்டு வருகின்ற‌து. நடைமுறைபடுத்தப்படும் உல‌க‌ம‌ய‌மாக்க‌ல் திட்டத்தினால் இந்தியாவிலுள்ள‌ ம‌க்க‌ளின் நிலை மிக‌வும் மோச‌மான நிலையில் உள்ளது. பெரும்பாலான‌ துறைக‌ள் த‌னியார்ம‌ய‌மாக்க‌ப்ப‌டுவ‌தாலும், தொழிலாள‌ர் ச‌ட்ட‌ங்க‌ள் மாற்ற‌ப்ப‌டுவ‌தாலும், பெரும்பான்மையான‌ ம‌க்க‌ள் த‌ங்க‌ள் நில‌ங்க‌ளலிருந்து துர‌த்த‌ப்படுவதால், மக்கள் தங்கள் நிலங்களை இழந்தும், வேலைக‌ளை இழ‌ந்தும் வ‌ருகின்ற‌ன‌ர். ஏழ்மை நிலையிலுள்ள‌ நூற்றுக்க‌ண‌க்கான‌ விவ‌சாயிக‌ள் பூச்சிக்கொல்லி ம‌ருந்துக‌ளை குடித்துத் த‌ற்கொலை செய்து வருகின்றார்கள். ப‌ட்டினிச் சாவு ப‌ற்றிய‌ செய்திக‌ள் நாடு முழுவ‌தும் இருந்து வ‌ந்த‌ வ‌ண்ண‌ம் உள்ளது‌. இதே நேர‌த்தில் மேல்த‌ட்டு வ‌ர்க்க‌மோ உல‌க‌த்தின் உச்சி நிலை என்ற கற்பனையான இடத்திற்கு செல்வதற்கான தங்கள் பயணத்தை துவக்கியுள்ளனர். ஆனால் பாதிக்க‌ப்ப‌ட்ட‌ ம‌க்க‌ளோ ஒழுங்கின்மையுட‌ன், ப‌ல‌ குற்ற‌ச்செய‌ல்க‌ளில் ஈடுப‌ட்டு வ‌ருகின்றார்க‌ள். அர‌சின் தெளிவில்லாத திட்டங்கள், அர‌சின் மீதான‌ ம‌க்க‌ளின் வெறுப்பு நிலை,  போன்ற‌ கார‌ணிக‌ளே ஒரு நாட்டில் பாசிச‌ உண‌ர்வு வ‌ள‌ரக் கார‌ண‌மாகும் என‌ ந‌ம‌க்கு வ‌ர‌லாறு தெளிவாக‌ ந‌ம‌க்கு கூறுகின்ற‌து”.

இந்த‌ நிலை தான் இல‌ங்கையில் த‌ற்போது உள்ள‌து. ம‌க்க‌ளாட்சி முறை கூறுக‌ள் மிக‌ வேக‌மாக‌ நீக்க‌ப்ப‌ட்டு வ‌ருகின்ற‌ செய‌ல் ந‌ம்முள்ளே எச்ச‌ரிக்கை உண‌ர்வை உருவாக்குகின்றது. மீத‌முள்ள‌ ம‌க்க‌ளாட்சி கூறுக‌ள் என்னவென்று நாம் எளிதாக‌ க‌ண்டுகொள்ள‌லாம். (த‌மிழ்)ம‌க்க‌ள் த‌ங்க‌ள் நில‌ங்க‌ளிலிருந்து விர‌ட்ட‌ப்ப‌ட்டு “வ‌தை முகாம்க‌ளுக்கோ” அல்ல‌து அருகிலுள்ள‌ காடுக‌ளுக்கோ செல்ல‌ நிர்ப‌ந்திக்க‌ப்ப‌டுகின்றார்க‌ள். இவ‌ர்க‌ளுக்கென்று இருந்த‌ வேலையும் அவர்களிடம் இருந்து பிடுங்க‌ப்ப‌ட்டாயிற்று (மீன்பிடித்த‌ல் ம‌ற்றும் வேளாண்மை போன்ற‌ தொழில்க‌ள்).

நூற்றுக்க‌ண‌க்கான‌ (த‌மிழ்)ம‌க்க‌ள் த‌ற்கொலை செய்து வ‌ருகின்றார்க‌ள் (உல‌கிலேயே இரண்டாவது அதிகமான ப‌ட்டினிச் சாவுகள் நடைபெறும் நாடு இலங்கை(இந்த‌ ப‌ட்டினி சாவுக‌ளில் ஈடுப‌டுவ‌து வ‌ட‌க்கு ம‌ற்றும் கிழ‌க்கு ப‌குதியில் வாழும் த‌மிழ‌ர்களும், தெற்கில் ஏழ்மை நிலையில் உள்ள‌ சிங்க‌ள‌வ‌ர்களும்). இந்த‌ த‌ற்கொலை எண்ணிக்கை தினம், தினம் அதிக‌ரித்துவ‌ருகின்ற‌து.

ஏழ்மை நிலையிலுள்ள‌ ம‌க்க‌ள் வாழும் சேரி ப‌குதிக‌ள் அக‌ற்ற‌ப்ப‌ட்டு அந்த‌ நில‌ங்க‌ள் ப‌ண‌க்கார‌ முத‌லாளிக‌ளிட‌ம் கைய‌ளிக்க‌ப்ப‌டுகின்ற‌து. ஏழ்மை நிலையிலுள்ள‌ சிங்க‌ள‌ர்க‌ள், த‌மிழ‌ர்க‌ள் ம‌ற்றும் இசுலாமிய‌ர்க‌ள் த‌ங்க‌ள் நில‌த்திலிருந்து க‌ட்டாய‌மாக‌ வெளியேற்ற‌ப்ப‌டுகின்ற‌ன‌ர். ஆனால் அவர்க‌ளுக்கு செல்ல‌ ஒரு இட‌ம் இல்லை .

ப‌ண‌க்கார‌ வ‌ர்க்க‌ம் (குறிப்பாக‌ இராச‌ப‌க்சே குடும்ப‌ம்) உல‌க‌த்தின் உச்ச‌ நிலைக்கு சென்றுள்ளது (இது ஒன்றும் கற்பனையான உச்சி நிலை அல்ல). ஆனால் மித‌முள்ள‌ பெரும்பான்மையான‌ ம‌க்க‌ளோ 30 விழுக்காடு விலைவாசி உயர்வுடன் விளிம்பு நிலையில் வாழ்ந்து வ‌ருகின்றார்கள். வ‌ர‌லாறு மீண்டும் திரும்பும் என்ப‌தை இது உறுதிப‌டுத்தும் வித‌மாக‌ இங்கு பாசிச‌ம் ஏற்க‌ன‌வே நிறுவ‌ப்ப‌ட்டு விட்ட‌து.

இந்த‌ திட்ட‌ங்க‌ளினால் பாதிக்க‌ப்ப‌ட்ட‌ ம‌க்க‌ளோ ஒழுங்கின்மையுட‌ன், ப‌ல‌ குற்ற‌ச்செய‌ல்க‌ளில் அதிக‌ளிவில் ஈடுப‌ட்டு வ‌ருகின்றார்க‌ள். இவ‌ர்க‌ளுக்காக‌ குர‌ல் கொடுப்ப‌த‌ற்கு வெளியில் ச‌க்தி வாய்ந்த‌ ஒரு ச‌மூக‌ம் இல்லை. இது தான் ஏழைக‌ளின் பிர‌ச்ச‌னை. இத‌னால் தான் நான் இவ‌ர்க‌ளின் துய‌ர‌ங்க‌ளுக்காக‌ வ‌ருத்த‌ப்ப‌டுவ‌தோடு ம‌ட்டும‌ல்லாம‌ல், ப‌ல‌ வ‌ருட‌ங்க‌ளாக‌ இவ‌ர்க‌ளுக்காக‌ குர‌ல் கொடுத்தும் வ‌ருகின்றேன்.

[....]

ம‌னித‌ உரிமைக‌ளை மீறிய‌ த‌ண்ட‌னைக்கு உள்ளாக‌ வேண்டிய‌ ச‌ர்வாதிக‌ரிக‌ளுக்கு உறுதுணை புரிவ‌தில் ச‌ர்வ‌தேச‌ நிதிய‌த்திற்கு எப்பொழுதும் எந்த‌ ஒரு பிர‌ச்ச‌னையும் இருந்த‌தே இல்லை. உல‌க‌ நாடுக‌ளிலே மொத்த‌ செல‌வில் பெரும்பான்மை ப‌ண‌த்தை இராணுவ‌த்திற்கு செலவிடுவ‌தில் முத‌லிட‌ம் பெற்ற‌ இல‌ங்கை அர‌சு த‌ன‌து சொந்த‌ ம‌க்க‌ளை ந‌சுக்குவ‌த‌ற்கும், கொலை செய்வ‌த‌ற்கும் 1.8 பில்லிய‌ன் அமெரிக்க‌ டால‌ர் தொகையை க‌ட‌னாக‌ கேட்ட‌ பொழுது. இல‌ங்கை அர‌சு கேட்ட‌ தொகையை விட‌ அதிக‌மான‌ தொகையை (2.6 பில்லிய‌ன் அமெரிக்க‌ டாலரை) க‌ட‌னாக‌ தாராள‌மாக‌ கொடுத்த‌து ச‌ர்வ‌தேச நிதிய‌ம். 

எந்த‌வொரு நிப‌ந்த‌னையும் இல்லாம‌ல் எப்பொழுதும் ச‌ர்வ‌தேச‌ நிதிய‌ம் கட‌ன்க‌ளை கொடுப்ப‌து கிடையாது. இந்த‌ நிப‌ந்த‌னைகள் பெரும்பாலும் பொதும‌க்க‌ளின் வாழ்வாதார‌த்தை பாதிக்கும் ஒன்றாக‌வே இருக்கும் என்பது குறிப்பிடதக்கது. இந்த‌ ச‌ர்வ‌தேச‌ நிதிய‌த்தின் நிப‌ந்த‌னைக‌ளை நிறைவேற்றுவ‌த‌ற்காக‌ ந‌டைபெறும் திட்ட‌ங்க‌ளான‌, அர‌சின் வ‌ர‌வு செல‌வில் ப‌ற்றாக்குறையை குறைத்த‌ல், வ‌ரி திட்ட‌ங்க‌ளை மாற்றிய‌மைத்த‌ல், சமூக‌ ந‌ல‌த்திட்ட‌ங்க‌ளான‌ உண‌வு, எண்ணெய், மின்சார‌ம் போன்ற‌வ‌ற்றிற்கு கொடுக்க‌ப்ப‌டும் மானிய‌ங்க‌ளை குறைத்த‌ல் போன்ற‌வை எப்பொழுதும் ச‌மூக‌ அடுக்கில் கீழ் நிலையில் உள்ள‌வ‌ர்க‌ளை மிக‌வும் க‌டுமையாக‌ பாதிக்கும்.

இன்னும் குறிப்பாக‌ கூறுவ‌தென்றால், அர‌சின் இராணுவ‌த்துறைக்கான‌ செல‌வுக‌ளை வானுய‌ர‌ கொண்டு செல்வ‌‌த‌ற்காக‌, ச‌மூக‌ ந‌ல‌த்திட்ட‌ங்க‌ள், அபிவிருத்தி திட்ட‌ங்க‌ளை குறைக்கும் இராச‌ப‌க்சே அர‌சுக்கு உத‌வுவ‌தில் ச‌ர்வ‌தேச‌ நிதிய‌த்திற்கு எந்த‌வொரு பிர‌ச்ச‌னையும் இல்லை. இராச‌ப‌க்சே அர‌சு உல‌கிலேயே பெரிய‌ அமைச்ச‌ர‌வையை கொண்டிருப்பதை பற்றியும், உல்லாச‌ வ‌ண்டிக‌ளுக்கு வ‌ரி வில‌க்கு அளிப்பதை பற்றியும், “ச‌ர்வ‌தேச‌ இந்திய‌ திரைப்ப‌ட‌ குழுக்க‌ளின்” கொண்டாட்ட‌ங்க‌ளைப் போன்ற‌ வெற்று ஆட‌ம்ப‌ர‌, தேவைய‌ற்ற‌ செல‌வுக‌ளை ப‌ற்றியும் க‌வ‌லைப்ப‌டாத‌ எந்த‌ ஒரு முத‌லாளித்துவ‌ அமைப்பை போன்ற‌தே “ச‌ர்வ‌தேச‌ நிதிய‌மும்”. ஆனால் அதே அர‌சு ஊதிய‌ உய‌ர்வின்மையையும், பொதும‌க்க‌ளுக்கு தேவையான‌ அத்தியாவசிய‌ பொருட்க‌ளின் மீதான‌ மானிய‌ங்க‌ளை குறைப்பதையும், அந்த‌ பொருட்க‌ளின் விலையை உயர்த்துவதையும் செய்கின்றார்க‌ளா என்பதை மட்டும் த‌வ‌றாம‌ல் பார்த்து வருகின்றது ச‌ர்வ‌தேச‌ நிதிய‌ம்.

அர‌சுக‌ள் த‌ங்க‌ள் இறையாண்மையை காப்ப‌த‌ற்காக‌ ந‌ட‌த்தும் ம‌க்க‌ளாட்சி ம‌ற்றும் ம‌னித‌ உரிமை மீற‌ல்க‌ளில் ச‌ர்வ‌தேச‌ நிதிய‌ம் ஒரு போதும் த‌லையிடுவ‌தில்லை. மேலும் த‌ங்க‌ளின் நிப‌ந்த‌னைக‌ளினால் மேற்கூறிய‌ நிலை தான் உருவாகும் என்ப‌தும் ச‌ர்வ‌தேச‌ நிதிய‌த்திற்கு ந‌ன்றாக‌ தெரியும்.

ச‌ர்வ‌தேச‌ நிதிய‌த்தின் எல்லா நிப‌ந்த‌னைக‌ளையும் இல‌ங்கை அர‌சு நிறைவேற்றி விட்ட‌து. இந்த‌ கொள்கைக‌ளின் கார‌ண‌மாக‌ உள்நாட்டில் எழும் எதிர்ப்புக‌ளையும், போராட்ட‌ங்க‌ளையும், த‌மிழ‌ர்க‌ளை எவ்வாறு ஈவு இர‌க்க‌மின்றி ந‌சுக்கிய‌தோ அதே போல‌வே ந‌சுக்க‌ அர‌சு ஏதுவான‌ நிலையில் உள்ள‌து.
ந‌ன்றி. த‌மிழ் நெட்

மூல‌ப்ப‌திவு : http://www.tamilnet.com/art.html?catid=79&artid=32514
……………………………..
பால‌சுதீனிய‌ர்க‌ள், இசுரேல் யூத‌ர்க‌ளுட‌ன் இண‌க்க‌ப்பாட்டுட‌ன் வாழ்வ‌தென்ப‌து எப்ப‌டி இய‌லாத‌ ஒன்றோ, அதே போல‌ தான் ஈழ‌த் த‌மிழ‌ர்க‌ள் இல‌ங்கை சிங்க‌ள‌வ‌ர்க‌ளுட‌ன் வாழ்வ‌தென்ப‌து சாத்திய‌மில்லாத‌ ஒன்று. ஒரு பொழுதும் ஒரு ஒடுக்குகின்ற இனத்துடன், ஒடுக்கப்படுகின்ற இனம் சேர்ந்து வாழ‌ வேண்டும் என்று எந்த‌ ஒரு ச‌ர்வ‌தேசிய‌வாதியும் கூற‌மாட்டார். மேலும் எந்தவொரு மக்களாட்சி அமைப்பு முறையிலும் இல்லாத ஒன்றான ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் அதிபர் பதவிக்கு போட்டியிடலாம் என்ற 18ஆவது  சட்ட திருத்தத்தை பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றியதன் மூலம் இலங்கையின் நிரந்தர சர்வாதிகாரியாக (அதிபர் என்று விளிப்பது கேலிக்கிடமான ஒன்றாகும்) மாறுகின்றார் மகிந்த இராசபக்சே (இட்லருக்கு பல படிகள் மேலே). இவ்வ‌ள‌வையும் ப‌டித்து விட்டு நீங்க‌ள் இண‌க்கப்பாடு ச‌ரி என்று சொல்வீர்க‌ளேயானால் நீங்க‌ள் இல‌ங்கை, இசுரேல், இந்தியா, வ‌ட‌ அமெரிக்கா போன்ற‌ ம‌னித‌ உரிமை(?) காக்கும் நாடுக‌ளில் வாழ‌ த‌குதிய‌டைந்து விட்டீர்க‌ளென்று பொருள் கொள்ளவேண்டி வரும்.

த‌மிழாக்க‌ம் : ப‌.ந‌ற்ற‌மிழ‌ன்.

நன்றி: தமிழ் முழக்கம் - திங்களிருமுறை இதழ் (இந்த இதழின் சென்ற பதிப்பில் இந்த மொழியாக்கம் வெளிவந்துள்ளது)