dalit_people_560

இழப்புகளின் மேல்தான் அடிமைகளின் விடுதலை கம்பீரமாகக் கட்டமைக்கப்படுகிறது. உயிரைத் தவிர இழப்பதற்கு ஏதுமற்ற தலித்துகள் அதையும் பணயம் வைத்தே உரிமைகளுக்கும் சுயமரியாதைக்குமான தங்களின் போராட்டத்தை முனைப்போடு எடுத்துச் செல்கின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்திற்கு அருகில் இருக்கும் தச்சூரில் சாதி வக்கிரத்திற்கு தன் உயிரைப் பறிகொடுத்து, சமத்துவத்திற்கான விதையை விதைத்திருக்கிறார் ராஜேந்திரன். தச்சூர் தலித் மக்களின் அடிமை வாழ்வும், அதை எதிர்த்து அவர்கள் நிகழ்த்தி வரும் உரிமைப் போரும் நெடிய வரலாற்றைக் கொண்டிருக்கின்றன. அதன் தொடர்ச்சியாகவே ராஜேந்திரனின் உயிரைப் பறிகொடுத்து பொதுக் கல்லறை உரிமையை வென்றிருக்கின்றனர், தச்சூர் தலித் மக்கள்.

தலித் மக்கள் பெரும்பான்மையாகவும், ரெட்டியார்கள் சிறுபான்மையாகவும் வசிக்கும் ஊரான தச்சூரில் சுமார் இருநூறு ஆண்டுகள் பழமையான தேவாலயம் இருக்கிறது. பூர்வகுடிகளான தலித் மக்கள் மீது ஆந்திராவில் இருந்து வந்த ரெட்டியார்கள் சாதி ஆதிக்கத்தை செலுத்தி, அவர்களை அடிமையாக்கினர். ரெட்டியார்களிடம் நிலங்களை இழந்து, கூலிகளாகி, தீண்டாமையையும், வன்கொடுமையையும் அனுபவித்த தலித் மக்கள், வழிபாட்டு உரிமைகளின்றி தேவாலயத்திலிருந்தும் விரட்டியடிக்கப்பட்டனர். சாதியின் கரைகளை தங்கள் மேலிருந்து கழுவும் பொருட்டு, இந்து மதத்திலிருந்து துண்டித்துக் கொண்டு கிறித்துவத்தைத் தழுவிய தலித் மக்கள் மீது – கிறித்துவர்களான ரெட்டியார்கள் அதிகபட்ச ஆதிக்கத்தை செலுத்தி வந்தனர். சிலுவை போன்ற அமைப்பில் கம்பீரமாக எழுந்து நிற்கும் தச்சூர் தேவாலயத்தின் நேர் பாதையில் சென்று வழிபடும் உரிமை ரெட்டியார்களுக்கு மட்டுமே இருந்து வந்த நிலையில், ஆலயப் பணிக்கு வந்த தலித் பாதிரியார்கள் சிலர், தலித் மக்களின் வாழ்நிலையை மேம்படுத்தும் பொருட்டு எடுத்த முயற்சிகளையெல்லாம் தடுத்து நிறுத்தி வன்முறையில் ஈடுபடுவது ரெட்டியார்களின் வழக்கமாக இருந்தது.

1997 ஆம் ஆண்டு தலித் பெண்களுக்கும் இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த பாதிரியார் ஜோசப்பை ரெட்டியார்கள் தாக்க, ஆலயம் இழுத்து மூடப்பட்டது. தலித் மக்களை ஆலய உரிமைகளில் இருந்து துண்டிக்கும் பொருட்டு, தெலுங்கில் வழிபாட்டு உரிமையைக் கேட்டு தகராறில் ஈடுபட பிரச்சனை ஊரைத் தாண்டி நீதிமன்றத்தை வந்தடைந்தது. மொழி பிரச்சனை, வழிபாட்டு உரிமை, பங்கு பேரவை பிரதிநிதித்துவம், தேரோட்டம் என நான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஆனால் வழக்கு நடந்து கொண்டிருந்த போதே... ரெட்டியார்கள் அத்துமீறி ஆலய வழிபாட்டில் ஈடுபட்டனர். அதை எதிர்த்தும் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 2005 ஏப்ரல் மாதம் வந்த தீர்ப்பில் – அரசு அதிகாரிகள், திருச்சபை ஊழியர்கள், வருவாய்த் துறையினர், தச்சூர் மக்கள் என அனைவரும் கலந்து பேசி ஆலயத்தைத் திறக்க வேண்டுமென்ற நீதிமன்றப் பரிந்துரையை அவமதித்து, ரெட்டியார்கள் மட்டும் அத்துமீறி நுழைந்து தனிப்பட்ட முறையில் வழிபாடு நடத்தினர். தொடர்ந்து மே மாதத்தில் கோலாகலமாக திருவிழாவும் கொண்டாடினர். தலித் மக்கள் தங்களின் வழிபாட்டு உரிமைக்காகப் போராடுவதும் ரெட்டியார்கள் அதை மறுப்பதுமாகவே நாட்கள் கழிந்து கொண்டிருந்தன.

இந்நிலையில் 2005 நவம்பர் மாதத்தில் மறைமாவட்ட முதன்மைப் பாதிரியார் சுரேஷ், தலித் மக்களுக்காக பூசை நடத்த முற்பட அது பெரும் ரகளையில் முடிகிறது. ஆலயம் என்பது எல்லா தரப்பு மக்களுக்கும் பொதுவான இடம்; அங்கு பாகுபாடுகள் கூடாது என்ற திருச்சøபயின் வார்த்தைகள் மதிக்கப்படவில்லை. 2005 நவம்பர் தொடங்கி ஓராண்டு காலம் வரையிலும் நடைபெற்ற பலதரப்பட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்தன. இறுதியாக, 2006 நவம்பர் 26 அன்று 12 அம்ச கோரிக்கைகளுடன் பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது. வழிபாட்டில் சமத்துவம், ஆலய நிர்வாகக் குழுவில் பிரதிநிதித்துவம், பொதுக் கல்லறை அடக்க உரிமையென தலித்துகளின் உரிமை மீட்பு அம்சங்கள் கோரிக்கைகளில் இருந்தாலும், மொழிச் சிறுபான்மையினரான ரெட்டியார்களுக்கு தெலுங்கில் வழிபாடு என்ற கோரிக்கை மட்டுமே நடைமுறைக்கு வருகிறது. பேராயர் நீதிநாதன் தலித் என்பதற்காகவே அவரை ஏற்றுக் கொள்ளாமல் ரெட்டியார்கள் புறக்கணித்தனர். தங்களின் பேராயர் ஆந்திராவில் இருப்பதாகக் கூறியதோடு, அங்கிருந்து அழைத்து வந்து வழிபாடு நடத்தவும் செய்தனர்.

நீதிமன்றத் தீர்ப்பு, மாவட்ட ஆட்சியர், தாசில்தார், வருவாய்த்துறை அதிகாரிகளின் பேச்சுவார்த்தை முடிவுகள் என எதையும் ரெட்டியார்கள் மதிக்கவில்லை. ஆலய உரிமைகளுக்காக தலித் மக்கள் போராடுவது தொடர்ந்தது. தலித் மக்கள் தரப்பில் இறப்பு நிகழும்போதெல்லாம் அந்த சடலத்தை பொதுக் கல்லறையில் அடக்கம் செய்ய முயன்று தோற்றுக் கொண்டே இருந்தனர். இந்நிலையில்தான் 22.1.2011 அன்று பாதிரியார் ஜானின் சகோதரர் வேளாங்கண்ணி இயற்கை எய்தினார். அவருடைய சடலத்தை பொதுக் கல்லறையில் அடக்கம் செய்ய முடிவாகிறது. பேராயரிடம் அனுமதியைப் பெறுகின்றனர். கல்லறைத் தோட்டத்தில் பாகுபாடு கூடாதென எல்லா பங்குத் தந்தையருக்கும் சுற்றறிக்கை அனுப்பப்படுகிறது. தலித் மக்களுக்கு ஆதரவாக தீண்டாமை ஒழிப்பு முன்னணியைச் சேர்ந்தவர்கள் குரல் கொடுக்கின்றனர். சடலம் பொதுக் கல்லறைக்குள் நுழைவதை வருவாய்த்துறை அதிகாரியும் தாசில்தாரும் தடுக்கின்றனர். மீறி எடுத்துச் சென்றபோது சவக்குழி வெட்டும் ஊழியர் பின்வாங்குகிறார். பரபரப்பான இச்சூழ்நிலையில்தான் தானே குழியெடுக்க முன் வருகிறார் ராஜேந்திரன்.

திரண்டு வந்த ரெட்டியார்களின் ஆவேச கூக்குரல்களுக்கிடையே, அரசு அதிகாரிகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் 190 ஆண்டுகால ஆதிக்க நியதியை உடைத்து, பொதுக் கல்லறையில் தலித் சடலம் அடக்கம் செய்யப்படுகிறது. தச்சூரை கலவரச் சூழல் ஆக்கிரமிக்க காவல் துறை குவிக்கப்படுகிறது. ஆலயத்தை இழுத்து மூட வேண்டுமென ரெட்டியார்கள் கூட்டம் போட்டு பேச்சு வார்த்தை நடத்த காவல் துறையின் தீவிர கண்காணிப்பின் கீழ் வருகிறது தச்சூர். தச்சூரின் ஒவ்வொரு தலித்தும் ரெட்டியார்களுக்கு அடிமையென்பதால், அவர்களின் சாதிவெறியின் தீவிரத்தை உணர்ந்தே இருந்தனர். என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற நிலையில்தான் அக்கொடுமை நடந்தேறியது.

திடீரென காணாமல் போனார் ராஜேந்திரன். ஊர் முழுவதும் தேடியும் கிடைக்கவில்லை. ரெட்டியார் சாந்தையனின் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்த ராஜேந்திரன், அவர் அழைப்பின் பேரில் ஏரிக்கரைப் பக்கம் சென்றதாக ரெட்டி இனத்தைச் சேர்ந்த ஆகத்தம்மாள் சொல்ல, தேடுதல் தீவிரமடைகிறது. மறுநாள் சனவரி 24 அன்று காலை ஏரியில் சடலமாக மிதந்த ராஜேந்திரனின் உடலில் தீக்காயம் உட்பட பல வகையான காயங்கள். கொதித்தெழுந்து குமுறிய தலித் மக்களிடம் ராஜேந்திரன் குடித்துவிட்டு, ஏரியில் விழுந்துவிட்டதாக காவல் துறை நிறுவ முயல, அப்பட்டமான இக்கொலையைச் செய்தவர்களை கைது செய்யும் வரை சடலத்தை எடுக்க அனுமதிக்கப் போவதில்லை எனப் போராட்டத்தில் இறங்கினர் தலித் மக்கள். எனினும் வலுக்கட்டாயமாக மக்களை அகற்றி, சடலத்தை பிரேதப் பரிசோதனைக்கு எடுத்துச் சென்றது காவல் துறை.

ராஜேந்திரன் கொலை செய்யப்பட்ட நாள், வேளாங்கண்ணி இறந்த மூன்றாம் நாள். அதற்கான சடங்குகளை செய்ய வந்த தலித் மக்களை காவல் துறையும் அரசு அதிகாரிகளும் தடுக்கின்றனர். அதே நாள் ரெட்டியார் பகுதியில் ஒருவர் இறக்க, அந்த சடலத்தை புதைக்க அனுமதி வழங்கப்படுகிறது. எங்களை அனுமதிக்கவில்லையெனில் ரெட்டியார் களையும் அனுமதிக்க மாட்டோம் என தலித் மக்கள் உறுதியாக நிற்க இறுதியில் வழிபாடு நடக்கிறது. இதற்கிடையில் ராஜேந்திரனின் சடலம் எடுத்துச் செல்லப்பட்டு, செங்கல்பட்டு மருத்துவமனையை முற்றுகையிடுகின்றனர் தலித் மக்கள். கொலையாளிகளை கைது செய்யும் வரை சடலத்தை வாங்குவதில்லை என உறுதி காட்டுகின்றனர்.

பிணவறைக்கு வந்த, விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் திருமாவளவன், மதுராந்தகத்தில் மறியல் நடக்கும் என அறிவிக்கிறார். முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்யச் சொல்லி வலியுறுத்துகிறார், தீண்டாமை ஒழிப்பு முன்னணியைச் சேர்ந்த, சட்டமன்ற உறுப்பினர் லதா. பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த ஆம்ஸ்ட்ராங், மாநிலங்களவை உறுப்பினர் ப்ரமோத் குறில் எனப் பலரும் ஒன்றிணைந்து குரல் கொடுத்தும் மாவட்ட நிர்வாகம், ராஜேந்திரன் சடலத்தை பொதுக் கல்லறையில் புதைக்க அனுமதி மறுக்கிறது. பாரம்பரிய வழக்கத்தை பின்பற்றச் சொல்லி அறிவுறுத்தவும் செய்கிறது.

சனவரி 25 அன்று காலை, மதுராந்தகத்தில் தலித் கிறித்துவ இயக்கம், விடுதலைச் சிறுத்தைகள், தீண்டாமை ஒழிப்பு முன்னணி, பகுஜன் சமாஜ் கட்சியினர் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ரெட்டியார்கள் தரப்பிலிருந்து மூன்று பேர் கைது செய்யப்பட, பொதுக் கல்லறையில்தான் புதைப்போம் என்ற பிடிவாதத்தோடு ராஜேந்திரனின் சடலத்தைப் பெற்று ஊர் திரும்பினர் எல்லோரும். வழிபாட்டிற்காக பேராயர் நீதிநாதன் ஏற்கனவே வந்திருக்க, குடும்ப அட்டைகளை திரும்ப ஒப்படைக்கப் போவதாக மிரட்டுகினறனர் ரெட்டியார்கள். பொதுக் கல்லறையில் புதைக்க ஆயர் பேரவையின் அனுமதி இருக்கும்போது, அதைத் தடுக்க அரசு அதிகாரிகளுக்கு உரிமையில்லை என வாதிடுகிறார் பேராயர்.

அரசு அதிகாரிகளோடு நடைபெற்ற பலமணி நேர பேச்சு வார்த்தையின் முடிவாக ராஜேந்திரனின் சடலம், பொதுக் கல்லறையில் புதைக்கப்பட்டது. மிக நிச்சயமாக, தலித் கிறித்துவர்களுக்கு இதுவொரு வரலாற்று நிகழ்வு. தமிழகத்தில் உள்ள மற்ற தேவõலயங்களில் சாதியைத் துடைத்தழிக்க இதுவொரு முன்னுதாரணம். எனினும் ஓர் உயிரை இழந்துதான் இந்த உரிமையை அடைய முடிந்திருக்கிறது. ஏனெனில், இழப்புகளின் மேல்தான் அடிமைகளின் விடுதலை கம்பீரமாக கட்டமைக்கப்படுகிறது.

இந்தியாவில் மதமாற்றமென்பது, வெறுமனே ஆள் பிடிக்கும் வேலையாக இருக்க முடியாது. இந்து மதத்திலிருந்து மக்களைப் பிரித்தெடுக்கும் எந்த மதமும் பண்பாட்டுக் கூறுகளாக்கப்பட்ட அதன் அடிமைத்தனங்களைத் தான் முதலில் களைந்தாக வேண்டும். இந்தியாவின் பார்ப்பன மேல்தட்டு, இந்து மதத்தை இறுகப் பற்றிக் கொண்டிருக்கும்போது, அதன் அடித்தட்டு மக்களிடம் குறிவைத்து இயங்கத் தொடங்கியது கிறித்துவம். இந்தியõவின் அடித்தட்டு மக்கள் வெறுமனே ஏழைகளல்லர். அவர்கள் தீண்டத்தகாதோர். அவர்களின் தலையாயப் பிரச்சனை வறுமை அல்ல – ஜாதி. இந்த உண்மையை புரிந்து கொள்ளாமல் கல்வி மட்டுமே தலித் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வாகிவிட முடியுமென்று நம்பிக் கொண்டிருக்கிறது கிறித்துவம்.

ஆண்டாண்டு காலமாக சாதி வெறிக்கு ஆட்பட்ட மக்களை நல்வழிப்படுத்தாமல், இந்து மதத்தின் சனாதனக் கூறுகளை உள்வாங்கியபடியே கிறித்துவமும் தனக்கான இருப்பை இங்கே தக்க வைக்க அலைகிறது. இந்துக்களைப் போல கிறித்துவர்களும் ஊர் என்றும் சேரி என்றும் வாழ்கின்றனர். கல்லறைகள் இரண்டு; தேவாலயத்தில் தீண்டாமை என கிறித்துவமும் சாதியைக் கொண்டாடுகிறது. தலித் கிறித்துவர்/நாடார் கிறித்துவர்/ரெட்டியார் கிறித்துவர் என மதம் மாறினாலும் ஜாதியை இழக்க விரும்பாதவர்களாக – பாகுபாட்டைக் கட்டிக் காக்கின்றனர். அதனால் இந்தியாவைப் பொருத்தவரை, கிறித்துவர்கள் அனைவரும் ஏசுவை வழிபடும் இந்துக்களே! தச்சூரில் ஆட்டம் போடும் கிறித்துவ ரெட்டியார்களின் ஆதிக்க வெறி தமிழகத்தின், இந்தியாவின் எல்லா ஊர்களிலும், எல்லா கூறுகளிலும் நாம் பார்க்க முடிவதுதான். எனில், கிறித்துவத்தின் சுயமும் தத்துவமும்தான் என்ன?

மேற்குலகில் தான் பாராட்டும் இனவெறியின் நீட்சியாகவே அது சாதியையும் அணுகுகிறபோது, மதமாற்றம் என்பது இங்கு வெறும் ஆள் பிடிக்கும் வேலையாகவே ஆகிறது. ஜாதியை எதிர்க்காத கிறித்துவம், இந்துக்களை அச்சுறுத்துவதில்லை. மேரி மாதாவை ஏதோவொரு அம்மனாகவும், ஏசு கிறிஸ்துவை கிருஷ்ணனின் அவதாரமாகவும் இந்து வெறியர்கள் அறிவித்தாலும் அதையும் இவர்கள் ஏற்றுக் கொண்டாலும் ஆச்சர்யமில்லை. காரணம், இங்குள்ள கிறித்துவர்களின் உளவியல் அடிப்படையில் இந்துவயப்பட்டுள்ளது. சாதி இந்துக்களைப் போலவே, சாதிக் கிறித்துவர்களிடமும் அடிமைப்பட்டுக் கிடக்கும் தலித் மக்களை – தீண்டாமையும் வன்கொடுமையும் துண்டாடுகிறது.

இதன் நீதி நாமறிந்ததே! பாகுபாடுகளின்றி ஒரு மந்தையின் ஆடுகளாக மக்களை மேய்க்க முடியாத கிறித்துவத்தின் தோல்வியை தலித் மக்கள் புரிந்து கொண்டாக வேண்டும். இந்து மதத்தைப் போலவே, கிறித்துவத்திற்குள் இருந்து கொண்டே சாதியைக் கடந்துவிட முடியும் என்று நம்புவது அறியாமையே! தச்சூரில் ராஜேந்திரனின் உயிர்த் தியாகமும், பொதுக் கல்லறை உரிமை வெற்றியும் வரலாற்று நிகழ்வென்றாலும், இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் கிறித்துவத்தைத் தழுவிய தங்கள் மூதாதையர் இந்து மதத்தை துறந்ததன் நோக்கத்தை தச்சூர் தலித் மக்கள் மறந்துவிடக் கூடாது.

இரு நூறு ஆண்டுகளுக்குப் பின்னர் இப்போதுதான் பொதுக் கல்லறை உரிமை வென்றெடுக்கப்பட்டிருக்கிறது. ரெட்டியார்களிடம் தலித் மக்கள் இழந்துவிட்ட எண்ணற்ற உரிமைகளில் மீட்கப்பட்ட இது வெறும் ஒரு துளி. ஒவ்வொரு துளியாக எல்லாவற்றையும் இனி திரும்பப் பெற எத்தனை நூற்றாண்டுகளாகுமோ? மதம் மாறுதல் அதன் பயனை எட்டாதபோது, அம்மதத்தை அது எதுவாக இருந்தாலும் அதைத் துறக்கும் துணிவு தலித் மக்களின் நெறியாக வேண்டும். 

Pin It