இந்தியாவில் வர்க்க-வர்ண போராட்டம், ஊழலாட்சி உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து தம் கருத்துகளைப் பகிர்ந்து கொள்கிறார் மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத். சென்னையில் ஜனவரி 7 முதல் 11 வரையில் நடந்த கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர்களுக்கான பயிலரங்கையொட்டி வந்திருந்தபோது அவர் அளித்த நேர்காணல் இது.

சந்திப்பு:    அ. குமரேசன்

அண்மையில் லண்டனின் கேம் பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் நீங்கள் உரையாற்றியபோது, இந்திய விடுதலைப் போராட்ட கால கட்டத்தில் கம்யூனிஸ்ட்டுகள் நாட்டின் சாதியக் கட்டமைப்புபற்றி சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்று சொன்னதாகச் சில ஊடகங் களில் செய்தி வெளியானது. சில தமிழ் ஏடுகளும் அதை வெளியிட்டு, கம்யூனிஸ்ட்டுகள் இப்போதுதான் உண்மையை உணர்கிறார்கள் என்பதுபோல் குறிப்பிட்டிருந்தன...

அங்கே நடைபெற்றது ஒரு கல்வித் துறை சார்ந்த மாநாடுதான். அது ஒன்றும் அரசியல் மேடை அல்ல. அதில் பங்கேற்ற செய்தியாளர் களில் பிடிஐ செய்தி நிறுவனத்தைச் சேர்ந்தவர் மட்டும் எனது உரையைத் தவறாகப் புரிந்துகொண்டு, நான் அப்படிக் கூறியதாக செய்தி அனுப்பியிருக் கிறார். நேரடியாகத் தங்க ளுடைய செய்தியாளர் களை அந்த நிகழ்ச்சிக்கு அனுப்பியிருந்த ஊடகங் கள் எதுவும் நான் அப்படிப் பேசியதாகச் செய்தி வெளியிடவில்லை. நேரடி யாகச் செய்தியாளர்களை அனுப்பாமல் பிடிஐ செய்தியை எடுத்து வெளியிட்ட சில ஊடகங்களில் மட்டும்தான் நான் அப்படி அன்றைய கம்யூனிஸ்ட்டுகள் பற்றிய ஒரு விமர்சனத்தை வைத்தது போல் சித்தரிக்கப்பட்டது.

மறுநாளே எனது முழு உரையும் மாற்றமின்றி எல்லா ஊடகங்களுக்கும் அனுப்பப்பட்டுவிட்டது. அதிலே எனது கருத்துகள் முழுமையாக வந்துள்ளன. ஆகவே, ஒரு குறிப்பிட்ட செய்தியாளர் புரிந்து கொள்ள முடியாதவராக அப்படியொரு தவறான செய்தியை அனுப்பியதற்கும், அதைச் சில ஊடகங்கள் விசாரிக்காமலே வெளியிட்ட தற்கும் இப்போது நான் விளக்கம் அளித்துக் கொண்டிருக்கத் தேவையில்லை.

இந்தியாவில் இன்று முன்னெப்போதையும் விட ஊழல் என்பது ஒரு மிகப்பெரிய அரசியல், சமூகப் பிரச்சனையாக உருவெடுத்திருக்கிறது. இது பொதுவான அரசியல் ஈடுபாடு என்பதிலிருந்தே மக்களை அந்நியப்படுத்துவதாகவும் இருக்கிறதே?

ஆம், ஊழல் என்பது மக்கள் பணம் கொள்ளையடிக்கப்படுகிறது என்கிற பிரச்சனை மட்டுமல்ல; அரசுக்கு வந்து சேர வேண்டிய நிதி மடை மாற்றப்படாமல் இருந்தால், வறுமை ஒழிப்பு, கட்டாய இலவசக் கல்வி, அனைவருக்கும் அடிப்படையான தரமான மருத்துவம் போன்ற பல சமூகத் திட்டங்களைப் பெருமளவுக்கு நிறைவேற்ற முடியுமே என்கிற பிரச்சனை மட்டுமல்ல. இப்படிச் சூறையாடப்படுகிற பணம் அரசியல் விளையாட்டு களுக்குப் பயன்படுத்தப்படுகிறது, அது ஜனநாயகத்தையே கேலிக்கூத்தாக்குகிறது என்கிற ஆழமான அரசியல் பிரச்சனையாகவும் ஊழல் உருவெடுத்திருக்கிறது. தொலைத்தொடர்பு இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை உரிமங்கள் ஒதுக்கீட்டில் சுமார் ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி ரூபாய் அளவிலான நிதி அரசுக்கு வந்து சேரவில்லை என்று தலைமை கணக்குத் தணிக்கை யாளரே அறிக்கை அளித்திருக்கிறார். அவ்வளவு பெரிய நிதி முறையாக அரசுக்கு வந்திருந்தால் முதலில் நான் சொன்ன பல மக்கள் நலத் திட்டங்களுக்கு அதைப் பயன்படுத்தியிருக்க முடியும்.

ஊழல் என்பது முதலாளித்துவ சமுதாய அமைப்பில் நடைபெறுகிற மூலதனக் குவிப்பின் ஒரு வடிவம்தான். எல்லா முதலாளித்துவ சமுதாயங்களிலும் ஊழல் இணைந்தே வந்திருக்கிறது. எடுத்துக்காட்டாக, 17வது, 18வது நூற்றாண்டுகளின் இங்கிலாந்து நாட்டைப் பார்த்தால், மிகவும் ஊழல் மலிந்த சமுதாயங்களாக இருந்த வரலாறு தெரியும். நாடாளுமன்ற உறுப்பினர்களாக நியமிக்கப்பட வேண்டுமென்றால் அதற்கே லஞ்சம் கொடுக்கப்பட்டது! பெரும் பணம் கொடுக்க முடிந்த அன்றைய இங்கிலாந்தின் பெரும் நிலப் பிரபுக்களும் பெரும் பணக்காரர்களும்தான் உறுப்பினராக முடிந்தது! அரசியல் ஊழல் பற்றிப் பேசுகிறோமே, அங்கே இப்படி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை விலைகொடுத்து வாங்கினார்கள்! ஆக, முதலாளித்துவம் இருக்கிற தென்றால் அங்கே ஊழலும் இருக்கும்.

இரண்டாவது வகை ஊழல் என்பது இப்போது நாம் இந்தியாவில் பார்ப்பது. இன்றைய நவீன தாராளமய ஆட்சியோடு நேரடியாகத் தொடர்புடையது இது. மூலதனத்தைத் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதால் உற்பத்திக் கருவிகளைத் தங்களது பிடியில் வைத்திருப் பவர்கள் இயற்கை வளங்களைக் கைப்பற்ற நவீன தாராளமயம் அனுமதிக்கிறது. அதனால்தான் இங்கே நிலம் விற்பதிலும் கனிமங்களிலும் மிகப்பெரும் ஊழல்கள் நடக்கின்றன. அலைக்கற்றை என்பதே கூட என்ன? ஒரு வகையில் அது ஒரு வளம்தான். தொலைத்தொடர்புக்கான வளம்தான் அலைக்கற்றை. அதைக் கைப்பற்றுவதில் ஊழல் நடந்திருக்கிறது. கர்நாடகத்தில் சட்டவிரோதமாகக் கனிமச் சுரங்கங்கள் தோண்டுவது இந்த வகை ஊழல்தான்.

அதிகாரத்தையும் அரசு எந்திரத்தையும் பயன்படுத்தி இப்படி நடக்கிறது. முதலாளித்துவ வளர்ச்சியின் ஒரு பகுதியாக இவ்வாறு இயற்கை வளங்கள் கைப்பற்றப்பட்டு சூறையாடப்படுகிறன்றன. நவீன தாராளமய ஆட்சியில் அரசு இப்படிப்பட்ட பெரிய முதலாளிகள் வளங்களைக் கைப்பற்றுவதற்கு உதவுகிற கருவியாக மாறுகிறது. பெரும் வர்த்தக நிறுவனங்களுக்கும் ஆள்வோராக இருக்கிற அரசியல்வாதிகளுக்கும் அதிகாரவர்க்கத்தினருக்கும் இடையே ஒரு பிணைப்பு இருக்கிறது. மத்திய ஆட்சி யிலிருந்து மாநிலம் வரையில் பல்வேறு மட்டங்களில் இந்தப் பிணைப்பு இருக்கிறது.

ஊழலின் மூன்றாவது கூறாக வருவது, பெரும் முதலாளிகளின் பணஅரசியல். இடதுசாரிக் கட்சிகள் தவிர்த்து, முதலாளித்துவக் கட்சிகள் மேலும் மேலும் அதிக மாக பெருமுதலாளிகளின் பிடியில் தங்களை ஒப்படைத்துக் கொள்கின்றன. இடதுசாரி கட்சிகள் மட்டுமே விதிவிலக் காக இருக்கின்றன. இருபது ஆண்டுகளுக்கு முன் இந்த அளவுக்குப் பார்த்திருக்க முடியாது என்று கூறத்தக்க அளவில், நாடாளுமன்றத்திலும் சட்டமன்றங்களிலும் பெருமுதலாளிகளின் பிரதிநிதிகள் இடம்பெறுகிறார்கள் என்ற நிலைமை மாறி, நேரடியாக அந்தப் பெரிய முதலாளி களே நுழைகிற போக்கு அதிகரித்து வருகிறது. 

இந்தப் பின்னணிகளோடுதான் ஊழல் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அலைக்கற்றை, கனிமச் சுரங்கம், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள், மும்பை ஆதர்ஷ் வளாகம் என்று எதை எடுத்தாலும் அதன் பின்னணி இதுதான். ஆனால், இந்த ஊழல் வலைப்பின்னலின் மைய ஊற்றாக இருக்கிற பெருமுதலாளிகள் பற்றி யாரும் எதுவும் பேசுவதில்லை.

எளிய மக்களைப் பொறுத்தவரையில் அவர்கள் அன்றாடம் சந்திக்கிற ஒரு அரசு அலுவலர், ஒரு காவலர் போன்றோர்தானே ஊழல் பேர்வழிகளாகத் தெரிகிறார்கள்?

உண்மைதான். மக்கள் தங்களுடைய நடைமுறை வாழ்க்கையில் அவரவர் வட்டாரத்தைச் சேர்ந்த கீழ்மட்ட லஞ்சப் பேர்வழிகளைத்தான் சந்திக்கிறார்கள். எளிய மக்களின் தேவைகளை நிறைவேற்ற கீழ்மட்டத்தினர் லஞ்சம் வாங்குவதை நியாயப்படுத்தவும் முடியாது. ஆனால், அந்த கீழ் மட்ட ஊழலும் ஒட்டுமொத்தமான முதலாளித்துவ சமுதாய அமைப்போடு இணைந்த உயர் மட்ட ஊழலின் ஒரு அங்கம்தான். கீழ்மட்ட ஊழல் பற்றிப் பேசுகிறவர்கள், பெரிய முதலாளிகளும் அரசியல் தலைவர் களும் அதிகார வர்க்கத்தினரும் இணைகிற மகா ஊழல் தளத்தைப் பற்றிப் பேசுவதில்லை.

இப்படிப்பட்ட விவகாரங்களால், அயோத்தி பாபர் மசூதி இடம் தொடர்பான வழக்கில் அலகாபாத் நீதிமன்றம் அளித்த குழப்படியான தீர்ப்பு பின்னுக்குத் தள்ளப்பட்டிருக்கிறதா?

அந்தத் தீர்ப்பு தொடர்பாக மக்களிடையே ஏன் பெரிய கொந்தளிப்பு ஏற்படவில்லை என்றால், அவர்கள் நீதிமன்ற நடைமுறை முழுமையாக முடியட்டும், இறுதித் தீர்ப்பு வரட்டும் என்று விரும்புகிறார்கள். பிரச்சனை தெருவில் தீர்க்கப்படுவதை அவர்கள் விரும்பவில்லை. வரலாற்று உண்மைகளையோ, அறிவியல் ஆதாரங்களையோ சார்ந்திராமல், ஒரு பிரிவு மக்களின் நம்பிக்கை அடிப்படையில் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ கிளை அளித்துள்ள தீர்ப்பு ஏற்புடையதல்ல. மார்க்சிஸ்ட் கட்சி ஏற்கவில்லை. குறிப்பிட்ட நிலத்தின் இரண்டு பகுதி கள் கோவிலுக்கும், ஒரு பகுதி முஸ்லிம்களுக்கும் பிரித்தளிக்கப்பட வேண்டும் என்ற அந்தத் தீர்ப்பை இரு தரப்பு மக்களுமே ஏற்கவில்லை.

தற்போது அந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கான நடைமுறை கள் தொடங்கியிருக்கின்றன. உச்சநீதிமன்றம் அந்தத் தீர்ப்பைத் தள்ளுபடி செய்யும் என்று எதிர்பார்க்கிறோம்.

தெலுங்கானா பிரச்சனை தொடர்பாக ஸ்ரீகிருஷ்ணா குழு அளித்துள்ள அறிக்கை குறித்து?

இப்பிரச்சனையில் மார்க்சிஸ்ட் கட்சியின் நிலைபாடு என்ன என்பதை ஸ்ரீகிருஷ்ணா குழுவிடமே தெரிவித்துப் பதிவு செய்திருக்கிறோம். குழுவும் தனது அறிக்கையை மத்திய அரசிடம் அளித்துவிட்டது. இனி மத்திய அரசுதான் இந்தப் பிரச்சனையில் தனது நிலைபாடு என்ன என்பதை காலதாமதமின்றி வெளிப்படையாகச் சொல்ல வேண்டும்.

இந்தியாவில் வர்க்க வேறுபாடற்ற சமுதாயம் அமைப்பதற்கான போராட்டமும் சாதிப்பாகுபாடற்ற போராட்டமும் ஒன்றுக்கொன்று முரண்பட்டதா?

வர்க்கமற்ற சமுதாயம், சாதியற்ற சமுதாயம் இரண்டுமே ஒரு தொலைதூரக் கனவாகவே இருக்கின்றன. வர்க்கச் சுரண்டலுக்கு எதிரான போராட்டம், சாதி ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் இரண்டும் இணைந்தே செல்ல வேண்டியவை என்றுதான் மார்க்சிய இயக்கம் கருதுகிறது. பாட்டாளி வர்க்கப் புரட்சி பற்றிப் பேசுகிறபோது, அந்தப் புரட்சி வர்க்கச் சுரண்டல், சாதியின் பெயரால் நடக்கிற சமூக ஒடுக்குமுறை இரண்டிற்குமே முடிவு கட்டுவதாக இருக்க வேண்டும் என்ற புரிதலோடு தான் பேசுகிறோம்.

Pin It