2010 ஆம் ஆண்டு சமாதானத்துக்கான நோபல் பரிசு சீனாவைச் சேர்ந்த லியு ஜியாவோபோவிற்கு வழங்கப்பட்டது பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. சீன அரசு அதைக் கடுமையாகக் கண்டித்துள்ளது. சீன அரசால் குற்றவாளி எனத் தண்டிக்கப்பட்டு பதினொரு ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்ட ஒருவருக்கு பரிசு வழங்கிப் பாரட்டுவது தனது உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதாகும் எனச் சீன அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.10.12.2010 அன்று நார்வே நாட்டில் நடந்த பரிசளிப்பு விழாவில் அவர் இல்லாமலே பரிசளிப்பு விழா நடந்து உள்ளது. 

லியுவுக்கு வழங்கப்பட்டநோபல் பரிசைப் பாராட்டியும் சீன அரசின் அதிகாரப்போக்கைக் கண்டித்தும் தமிழகத்தைச் சேர்ந்த படைப்பாளி ஒருவர் பொங்கு தமிழ் என்ற இணையதளத்தில் பின்வருமாறு எழுதியுள்ளார். “…அரசியல் சீர்திருத்தங்களைய்யோ, சனநாயக வழிமுறைகளையோ ஏற்பவரல்ல அப்போதைய சீன அதிபர் டெங் சியோ பிங். அவருக்குள் ஓடிய வேர் அவருடையது மட்டுமல்ல. அந்த வேர் சீனப் பொதுவுடைமைக் கட்சிக்குள் ஓடுகிறது. கட்சிக்குள் ஓடும் வேரையும் தலைவர் மாவோவுக்குள் தேடவேண்டும். மாவோ சில பொழுதுகளில் தவிர, பிற அனைத்துக் காலகட்டங்களிலும் கட்சியை ஒற்றை மனப்போக்குடன் இயக்கியவர். கலாச்சாரப்புரட்சி போன்ற சீன வரலாற்றுக் கொடூரத்தை உற்பத்தி செய்தவர்” என்று அந்த அறிவுஜீவி வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று எழுதியுள்ளார். லியுவுக்கு நோபல் பரிசு வழங்கியதன் மூலம் நோபல் பரிசு கமிட்டி தன் மீது ஏற்பட்டுள்ள களங்கத்தைத் துடைத்துவிட்டதாகவும் மகிழ்ச்சி அடைகிறார் அவர். அவரின் ஆய்வு எவ்வளவு தூரம் ஆழமற்றது, அவரின் மகிழ்ச்சி எவ்வளவு அற்பமானது என்பதை உண்மை விவரங்களிலிருந்து பார்ப்போம். 

லியு ஜியாவோபோ சீனாவில் பென் என்னும் நிறுவனத்தின் தலைவர். அதற்கு நிதி உதவி அளிப்பது ஜனநாயகத்திக்கான தேசிய அறக்கொடை(Endowment for Democracy) என்னும் அமெரிக்க நிறுவனமாகும். அந்நிறுவனம் ரீகன் அமெரிக்கக் குடியரசின் தலைவராக இருந்தபோது அமெரிக்கக் காங்கிரசின் (பாராளுமன்றம்) ஆதரவுடன் அமைக்கப்பட்ட ஓர் அரசாங்கச் சார்பு நிறுவனம். அதன் நோக்கம் (முதலாளிய)அரசியல் ஜனநாயகத்தையும், புதிய தாராளவாதத்தையும் ஆதரிப்பது, பரப்புவது. லியு 2008 டிசம்பரில் கைது செயப்பட்டார். அதற்குக் காரணம் சாசனம் 08 அறிக்கையோடு அவருக்குள்ள தொடர்பு ஆகும். அந்த அறிக்கை தனிமனித உரிமைகளையும், அரசியல் உரிமைகளையும் வலியுறுத்துகிறது. கூடவே அது சீனாவில் உள்ள பொதுத்துறைகளையும், கொஞ்சம் நஞ்சம உள்ள அரசுப் பண்ணைகளையும் தனியார்மயமக்கக் கோருகிறது. இந்த வகைப்பட்ட ஜனநாயகத்தைத்தான் ஜனநாயகத்திற்கான தேசிய அறக்கொடை ஆதரித்து நிதி அளிக்கிறது. 

தாரிக் அலி, புத்தகங்களைப் பற்றிய லண்டன் திறனாய்வு (Londan Review Of Books) என்ற தனது வலைப்பூவில் லியுவின் அரசியல் கருத்துக்களைப் பின்வருமாறு தொகுத்துக் கூறுகிறார். 

முதலாவது, மேற்கத்திய நாடுகளின் காலனியாதிக்கத்தின் கீழ் மூன்று நூற்றாண்டுகள் இருந்திருந்தால் சீனா நாகரிகம் அடைந்திருக்கும். 

இரண்டாவது, கொரியா மற்றும் வியட்நாம் யுத்தங்களில் அமெரிக்கா சர்வாதிகாரத்தை எதிர்த்துப் போரிட்டது. எனவே அதன் அறநெறியின் நம்பகத்தன்மை கேள்விக்கு அப்பாற்பட்டது. 

மூன்றாவது,ஈரான் மீது போர் தொடுத்ததன் மூலம் ஜோர்ஜ் புஷ் சரியான செயலையே செய்தார். 

நான்காவது, லியு ஆப்கானிஸ்தான் மீதான நேட்டோ நாடுகளின் ஆக்கிரமிப்பு யுத்தத்தை முழுமையாக ஆதரிக்கிறார். 

இவ்வாறு லியு அனைத்துக் காலனிய ஆதிக்கத்தையும், ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு யுத்தங்களையும் மனிதநேய அடிப்படையில் ஆதரிக்கிறார். ஏகாதிபத்தியத்திற்கு வக்காலத்து வாங்கும் தரகு அறிவுஜீவியாக இருக்கிறார். 

மனிதஉரிமை என்ற பெயரில் பிற நாடுகளில் ஏகாதிபத்தியத் தலையீடுகளை ஆதரிக்கும் லியு அமெரிக்கா தனது பொருளாதாரத் தடைகள் மூலம் லட்சக்கணக்கான குழந்தைகளை ஈரானில் கொன்றதைக் கண்டிக்கவில்லை. பிறகு சர்வதேச விதிகளையும் மீறி அது ஈரான் மீதும், ஆப்கானிஸ்தான் மீதும் ஆக்கிரமிப்பு யுத்தங்கள் தொடுத்ததையும், அந்நாடுகளில் கொடூரமான மனிதஉரிமை மீறல்களை நடத்திக்கொண்டிருப்பதையும் லியு கண்டிக்கவில்லை. 

அதற்காக சீனாவில் கம்யூனிசம் நிலவுகிறது என்றோ, ஜனநாயகம் தழைத்து ஓங்குகிறது என்றோ யாரும் கருதவேண்டியது இல்லை. 'சீனப் பண்புடன் சோசலிசம்’ என்ற முழக்கத்துடன் 1970களின் பிற்பகுதியிலிருந்து சீனா படிப்படியாக முதலாளியப் பாதைக்குத் திரும்பிய ஒரு நாடு. சோசலிசக் காலகட்டத்தில் உருவாக்கப்பட்ட உள்கட்டுமானங்களையும், அடித்தளங்களையும் பயன்படுத்திக்கொண்டு இன்று பிற ஏகாதிபத்திய நாடுகளுக்கே பொருளாதார ரீதியாக சவால் விடும் நாடாக மாறியுள்ளது. இன்று அமெரிக்க ஏகாதிபத்தியம் பொருளாதார வீழ்ச்சியில் நொறுங்கிவிடாமல் முட்டுக்கொடுத்துக் கொண்டிருப்பதும் சீனாதான். 

சீனாவின் புதிய முதலாளிகளுக்கும், அங்கு மூலதனமிட்டுள்ள பன்னாட்டு முதலாளிகளுக்கும் சீன மக்களின் சமூக மற்றும் பொருளாதார உரிமைகளைப் பற்றிக் கவலை இல்லை. அவர்களுக்குத் தேவை தங்கள் மூலதனங்களுக்கு கொள்ளை இலாபங்கள். அதற்காக மக்களைக் கடுமையாக அடக்கி ஒடுக்கி வருகிறார்கள். இருப்பினும் பிற மூன்றாம் உலக நாடுகளில் உள்ள முதலாளியம் போல அது அடிவருடி முதலாளியமாய் இல்லை. ஏகாதிபத்தியங்கள் தனது விருப்பம்போல அந்த அரசை ஆட்டிவைக்க முடியவில்லை. தனது விருப்பம்போல அதைக் கொள்ளையடிக்கவும் முடியவில்லை. இப்பொழுது சீனாவில் நிலவிவரும் இறுக்கமான ஆட்சியமைப்பை வீழ்த்தாமல் சீனாவை வீழ்த்த முடியாது. உலக அரங்கில் புதியதாக உருவாகியுள்ள தனது போட்டியாளனை வீழ்த்த முடியாது. அதை வீழ்த்தாவிட்டால் அமெரிக்காவைத் தலைமையாகக் கொண்ட ஏகாதிபத்தியத்தின் எதிர்காலம் இருண்டகாலமகிவிடும். தனது போட்டியாளனை வீழ்த்தவேண்டும் என்ற நோக்கத்திற்காகவே லியு போன்ற முதலாளிய மனித உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கி ஊக்குவித்து வருகிறது ஏகாதிபத்தியம். லியு போன்று நம்பகமான அடிவருடிகள் வேறு யாரும் ஏகாதிபத்தியத்திற்கு கிடைக்கமாட்டார்கள். அதன் விளைவே இந்த நோபல்பரிசு. 

இந்தப் பரிசுக்குப் பின்னணியில் இருக்கும் ஏகாதிபத்தியத்தியத்தின் அரசியலைப் பார்க்காத நமது படைப்பாளி லியுவுக்குப் பரிசளித்ததன் மூலம் நோபல்பரிசுக் கமிட்டி தனது களங்கத்தைப் போக்கிக்கொண்டதாகக் கூறுகிறார். உண்மையில் அது தனது களங்கத்தைப் போக்கிக்கொள்ளவில்லை. மாறாக மீண்டும் ஒருமுறை அது உலகின் முன் அம்பலப்பட்டு நிற்கிறது. 

மனித உரிமைக்காக இந்தப் பரிசை வழங்கியதாகக் கூறும் அக்கமிட்டி ஏன் அப்பரிசை இந்தியாவில் மனித உரிமைக்காகப் போராடிவரும் அருந்ததி ராய்க்கு வழங்கவில்லை? மனித உரிமைக்காகக் குரல் கொடுத்தார் என்பதற்காக இந்திய அரசாங்கத்தால் அநீதியான முறையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பினாயக் சென்னுக்கு ஏன் வழங்கவில்லை? இந்திய அரசாங்கத்தின் ஆயுதப்படைகள்(சிறப்பு அதிகாரங்கள்) 1958 சட்டத்தை எதிர்த்து கடந்த பத்தாண்டுகளாக சிறையில், ஒரு கவளம் சோறோ,ஒரு சொட்டுத் தண்ணீரோ கூட அருந்தாமல் காந்திய வழியில் போராடி வரும் அயிரோம் சர்மிளாவுக்கு ஏன் வழங்கவில்லை? ஏனென்றால் ஏகாதிபத்திய நலன்களைக் காப்பாற்றி வரும் இந்திய ஆளும் வர்க்கத்திற்கு எதிராக இவர்களது போராட்டம் உள்ளது. எனவே இவர்களுக்கு நோபல் பரிசு எப்பொழுதும் வழங்கப்படமாட்டாது. 

வியட்நாம் மீதான அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு யுத்தத்திலிருந்து அனைத்து ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு யுத்தங்களுக்கு எதிராகவும் குரல் கொடுத்துவரும் அமெரிக்காவில் உள்ள பேராசிரியர் நாம் சோம்ஸ்கி அவர்களுக்கு ஏன் இதுவரை நோபல்பரிசு வழங்கவில்லை?

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கொடுரங்களை, மனித உரிமை மீறல்களை, மனிதகுல விரோதக் காட்டுமிராண்டித்தனமான செயல்களை அப்பட்டமாகத் தோலுரித்துக்காட்டிய விக்கிலீக்ஸ் ஜூலியன் அசஞ்சேவுக்கு நோபல்பரிசு ஏன் வழங்கவில்லை? உண்மையில் ஏகாதிபத்தியத்தின் நலன்களுக்கு எதிராகப் போராடுபவர்களுக்கு பரிசு கிடைக்காது. சிறைவாசம்தான்கிடைக்கும். லியு ஏகாதிபத்தியத்தின் அடிவருடியாக இருப்பதால்தான் இந்தப்பரிசு. 

அடுத்து, கலாச்சரப் புரட்சி போன்ற கொடுரங்களை உற்பத்தி செய்தவர் மாவோ என நமது அறிவுஜீவி கூறியுள்ளதைப் பற்றிப் பார்ப்போம். ஒரு புரட்சிகரக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையின்கீழ் ஒரு நாட்டில் புரட்சி நடந்து முடிந்ததும் எந்தவிதமான போராட்டமும் இன்றி சோசலிசக்கட்டுமானம் நடந்துமுடிந்து விடுவதில்லை. புரட்சிக்குப் பிறகும் சமூகத்தில் வர்க்கங்கள் நிலவுகின்றன. வர்க்கப்போராட்டங்கள் நிலவுகின்றன. இது கட்சியிலும் பிரதிபலிக்கவே செய்யும். ஈராயிரம் ஆண்டுகளாகத் தனியுடமைச் சமுதாயத்தில் மரபுவழியாகப் பெற்றுவந்த தனிநலன் சார்ந்த பண்பாடுகளை, கூட்டுவாழ்க்கைக்கு எதிரான பண்பாடுகளை அனைத்து அரங்குகளிலும் போராடி வீழ்த்தாமல் புதிய சமுதாயத்தைப் படைக்கமுடியாது. தனியுடமைச் சிந்தனைகளை ஒழித்துப் புதிய மனிதனைப் படைப்பதற்கான போராட்டம்தான் பண்பாட்டுப் புரட்சி. இது சோசலிச வரலாற்றில் மாவோவின் மாபெரும் பங்களிப்பாகும். லெனின் பண்பாட்டுப் புரட்சி பற்றிக் குறிப்பிட்டு இருந்தாலும் அதைத் தன்னுடைய நாட்டில் நடத்த அவர் நீண்ட காலம் உயிரோடு இல்லை.

புரட்சிக்குப் பிறகு கட்சியிலும் அரசாங்க நிர்வாகத்திலும் உருவாகியிருந்த முதலாளியப் பாதையாளர்களையும், அதிகாரவர்க்கத்தினரையும் வீழ்த்துவதற்காகவே சீனாவில் மாவோவால் கலாச்சரப்புராட்சி கட்டமைக்கப்பட்டது டெங் சியோ பிங் போன்றவர்கள் கலாச்சாரப் புரட்சியின்போது களை எடுக்கப்பட்டவர்களே. மாவோ ஒற்றை மனப்போக்குடன் கட்சியை இயக்குபவராய் இருந்திருந்தால் டெங் போன்றவர்கள் எப்பொழுதோ இல்லாமல் ஆக்கப்பட்டிருப்பார்கள். மாவோ மிகப்பெரும் ஜனநாயகவாதியாக இருந்ததால்தான் டெங் போன்றவர்கள் மீண்டும் தலைமைக்கு வரமுடிந்தது என்பதை நமது அறிவுஜீவி போன்றவர்கள் அறிந்துகொள்வது நல்லது. 

சீனாவில் பண்பாட்டுப்புரட்சி மக்களுடைய படைப்பாற்றலைக் கட்டவிழ்த்துவிட்டது. புதிய மனிதனைப் படைக்க முயற்சி செய்தது. உண்மையில் மக்கள் கையில் அதிகாரத்தைக் கொண்டுவர முயற்சி செய்தது. ஆனால் சீனாவில் இருந்த முதலாளியப் பாதையாளர்களும், வெளி நாடுகளில் இருந்த ஏகாதிபத்திய அடிவருடிகளும் அப்புரட்சியைக் கொடூரம் என்றனர். நமது அறிவுஜீவியும் அதைக் கொடூரம் என்கிறார். இதன் மூலம் அவர் யார் பக்கம் நிற்கிறார் என்பதை அறிந்து கொள்வோம்.

 ------------------------------------

ஆதாரம்:Economic and Political weekly,18,டிசம்பர், 2010.

- புவிமைந்தன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)