அன்புள்ள ஜெயந்தி அக்கா (நீங்கள் எங்களை உறவாக நினைக்கவில்லை என்றாலும் நாங்கள் உங்களை எங்களின் உறவாகத்தான் நினைக்கிறோம்). பச்சைத் தமிழன் என்று தந்தை பெரியாரால் போற்றப்பட்ட “கர்மவீரர் காமராசர்” பெயரால் அண்மையில் உங்களுக்கு விருது வழங்கப்பட்டது. தமிழக மக்களின் விருப்பங்கள் அல்லது ஆலோசனைகள் எதுவும் கேட்கப்படாமல் தமிழக அரசு தன்னிச்சையாக உங்களுக்கு இந்த விருது வழங்கியிருக்கிறது. சில கூட்டணி கணக்குகள் அதற்கு இருக்கலாம். ஆனால், காமராஜர் பெயரில் ஒரு விருது வாங்குபவர்க்கு, சில பொறுப்புகள் இருப்பதாக நான் நினனக்கிறேன். ஏனென்றால் காமராஜர் மக்களுக்காக வாழ்ந்தவர். அதன் அடிப்படையிலேயே இந்த மடலை எழுதுகிறேன். 

karuna_anbazhagan_jaya

 உங்களுக்கு ஒரு நிகழ்ச்சியை நினைவுபடுத்த விரும்புகிறேன். சென்ற வருடம்(2009) ஏப்ரல் மாதம் தேர்தலுக்கு முன்னால் பிரபல(NDTV) ஆங்கிலத் தொலைக்காட்சியில் ஒரு விவாத அரங்கத்தில் (The Big Fight) நீங்கள் ஒரு கேள்விக்கு பதில் அளிக்கும்பொழுது “இலங்கையில் நடப்பது இனப்படுகொலை தான்” Yes ofcourse it is genocide என்று ஒத்துக்கொண்டீர்கள். அப்பொழுது நீங்கள் இந்திய அரசாங்கம் எந்த உதவியும் செய்யவில்லை என்றும் உறுதியாக சொன்னீர்கள். ஆனால் நடந்தது என்ன என்பதை நீங்களும் பார்த்து இருப்பீர்கள் என நம்புகிறேன். சுமார் 40,000 தமிழ் பொதுமக்கள் கொல்லப்பட்டு எந்தவித அடையாளமும் இல்லாமல் அழிக்கப்பட்டதாக சர்வதேசப் பார்வையாளர்கள் கூறுகின்றனர். எண்ணிக்கையில் வேண்டும் என்றால் மாற்றம் இருக்கலாம். ஆனால் போராளிகள் மட்டுமின்றி பொதுமக்களும் அதிக எண்ணிகையில் கொல்லப்பட்டனர் என்பது நிச்சயம். இது துப்ளின் நகரத்தில் அமைந்துள்ள “மக்கள் தீர்ப்பாணையம்” – “The people’s Tribunal”  சொல்லியுள்ள தீர்ப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

எதற்காக இந்த நாடகம் நடந்தது, இதை காங்கிரஸ் கட்சியில் உள்ள தமிழக தலைவர்களோ, நீங்களோ ஏன் கண்டுகொள்ளவில்லை? சமீபத்தில் நடந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நிறைவு நாள் நிகழ்ச்சிக்கு இனப்படுகொலை செய்த (இனப்படுகொலை என்பதை நீங்களே ஒப்புக்கொண்டீர்கள்) ஒருவரை எப்படி உங்கள் காங்கிரஸ் அரசாங்கம் அழைக்கலாம்? இதற்கு நீங்கள் எப்படி ஒத்துக் கொண்டீர்கள்?

உங்களுக்கு ஞாபகம் இருக்கும் என்று நினைக்கிறேன். 1974ஆம் ஆண்டு இந்தியாவிற்கு டேவிஸ் கப் டென்னிஸ் இறுதிப் போட்டியில் விளையாட வாய்ப்புவந்தது. ஆனால் அந்த இறுதிப்போட்டியில் இந்தியா விளையாட மறுத்தது. அதற்குக் காரணம் எதிரில் விளையாடவேண்டிய அணி தென் ஆப்ரிக்கா ஆகும். தென் ஆப்ரிக்கா அப்பொழுது ஆங்கிலேய ஆளுமையின் கீழ் “இனவெறி” கொண்ட நாடாக இருந்தது. ஆதலால் இந்தியா, ஒரு இனவெறி நாட்டிற்கு எதிராக டென்னிஸ் விளையாட மாட்டோம் என்று புறக்கணித்தது. முதன்முறையாக இந்தியாவிற்கு வந்த வாய்ப்பை ஒரு “மனித சமுகத்தின்” அடையாளமாய் தன்னை உறுதியாய் முன்னிறுத்த அப்போட்டியையே நிராகரித்தது. உலகமே கைதட்டி இந்தியாவைப் பாராட்டியது.

எங்களைப் போன்ற சாதாரண மக்களுக்குக் கூட தெரியும் அக்கா, “இனவெறியை” விட “இனப்படுகொலை” மிகப் பெரிய குற்றம் என்று. அப்படி இருக்கும்பொழுது எப்படி நீங்கள் ஒரு இனப்படுகொலை செய்தவனை புத்தனும் காந்தியும் பிறந்த மண்ணுக்கு கூப்பிட முடியும்? ஒரு டேவிஸ் கப் டென்னிஸ் விளையாட்டை விட கேவலமானதா தமிழனின் உயிர்? இதைவிட தமிழனுக்கு இழிநிலை வரவேண்டுமா? 500 மீனவர்கள் கொல்லப்பட்டதற்கு குறைந்தபட்சம் ஒரு மிரட்டல் தொனிகூட இல்லையே? அப்படி என்ன இந்தத் தமிழ் இனம் தாழ்ந்து போய்விட்டது? இந்த இழிவுக்குக் காரணம் ஒரு வகையில் நீங்களும் (காங்கிரஸ்), உங்களைத் தூக்கிச் சுமக்கும் நாங்களும் தான்.

உங்கள் இயக்கத்தின் நம்பிக்கை நட்சத்திரம் ராகுல் காந்தி சென்னை வந்தபொழுது “ஏன் நீங்கள் ராஜபக்சேவை அழைத்தீர்கள்?” என்ற கேள்விக்கு “No i did not call him”, (“இல்லை நான் அழைக்கவில்லை”) என்று பதில் கூறி உள்ளார். அப்போதைக்குத் தப்பித்துக் கொள்ள அப்படி ஒரு பதில் சொன்னாரா அல்லது உண்மையில் அவருக்கும் தெரியாமல் இது நடந்ததா? “ராஜபக்சேவை” அழைத்தது தவறு என்று அவர் நினைப்பது தெரிகிறது. இந்த உணர்வுகூட இங்கு உள்ள காங்கிரஸ்காரர்களுக்கு இல்லையே (நீங்கள் உட்பட) என்று எண்ணும்பொழுது வருத்தமாக உள்ளது. தமிழ் மீனவனை இலங்கைக் கடற்படை சுட்டுக் கொன்றபொழுது ஒருவர் கூட மத்திய அரசைக் கேட்கவில்லையே? இப்பொழுது இன்னும் ஒரு செயல் “தி ஹிந்து” போன்ற பார்பன பத்திரிக்கைகளும் சிங்கள அரசாங்கமும் சேர்ந்து “இரு தேசத்து மீனவர்களிடேயே” பிரச்னை ஏற்படுத்த தமிழ் மீனவர்களை ஈழத் தமிழ் மீனவர்கள் தான் தாக்குவதாக சொல்ல ஆரம்பிக்கின்றன!!!!

எதற்கு எடுத்தாலும் நீங்கள் ராஜீவ் கொலையைப் பற்றி சொல்கிறீர்கள். இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவை கொலை செய்ததை யாரும் கண்டிக்காமல் இருக்க முடியாது. அதை யார் செய்து இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்பதில் மாற்றுக் கருத்து இருக்கமுடியாது. ஆனால் உங்களுக்கு ஒரு விசயத்தை நாங்கள் சொல்லக் கடமைபட்டுள்ளோம். இந்திய அமைதிப்படை என்ற பெயரில் இங்கு இருந்து சென்ற ராணுவம், 10,000 தமிழர்களைக் கொன்று குவித்ததற்கு யார் காரணம்? நீங்கள் இந்த விசயத்தை மறுக்கலாம். ஆனால் உங்கள் கூட்டணியின் தலைவரும் முதல்வருமான திரு.கருணாநிதி அவர்கள் அந்த சமயத்தில், “இலங்கையில் இருந்து திரும்பும் இந்திய ராணுவத்தை நீங்கள் ஏன் வரவேற்க போகவில்லை?” என்ற கேள்விக்கு “அவர்கள் எங்கள் மக்களை கொன்றுவிட்டு திரும்புகிறார்கள், ஆதலால் நான் போகவில்லை” என்று பதில் அளித்து உள்ளார்கள். அப்படி என்றால் அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர் என்பது உண்மை தானே.

jayanthi_natarajan_340அந்த உயிர்களுக்கு யார் பொறுப்பு ஏற்பது? முதலில் இருந்தே, ராஜீவ் அவர்கள் ஈழ விசயத்தில் தப்பான ஆலோசகர்கள் பேச்சைக் கேட்டு தப்பாக நடந்து கொண்டார். குள்ளநரி ஜெயவர்த்தனேவும் ராஜீவ் அவர்களின் அனுபவின்மையைப் பயன்படுத்திக் கொண்டார். அங்கு இருந்த பிரச்சனை தமிழர்களுக்கும் சிங்களவர்க்கும் தான். அப்புறம் அது எப்படி இந்திய-இலங்கை ஒப்பந்தம் ஆகமுடியும்? இந்தியா இரு இனத்திற்கும் நடுவில் இருந்து சிங்களவர்களையும் தமிழர்களையும் கையெழுத்து இட செய்து இருக்க வேண்டும். இது எப்படி என்றால் இருவர் சண்டை இட்டுக்கொள்ளும் பொழுது, சமரசம் செய்ய வரும் நபர் ஒருவருடன் ஒப்பந்தம் செய்து கொண்டு இன்னொருவரை அந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளுமாறு செய்வதைப் போல் தான். அப்பொழுதும் அந்த ஒப்பந்தத்தை கையெழுத்து இடச் சென்ற பிரதமர் ராஜீவ் அவர்களை ஒரு சிங்கள கடற்படை வீரன் துப்பாக்கியால் தாக்கி நிலை குனிய வைத்த பொழுதாவது ராஜீவ் அவர்கள் யோசித்திருக்க வேண்டும். “நமக்கே இங்கு பாதுகாப்பு இல்லையே, நாம் போடும் கையெழுத்து என்ன பாதுகாப்பை தமிழ் மக்களுக்குத் தரும்” என்று யோசித்திருந்தால் இந்தப் பிரச்சனையே வந்திருக்காது.

இன்று எல்லாவற்றையும் இழந்த தமிழர்கள் உங்களிடம் இருந்து எதிர்பார்ப்பது ஒன்று தான். எங்களுடய நலனுக்காக இல்லாவிட்டாலும் எதிர்காலத்தில் இந்தியாவின் நலனைக் கருத்தில் கொண்டாவது ஈழ தமிழர் பக்கம் தங்களுடைய பார்வைபடும்படி நடந்து கொள்ள வேண்டும். ஏற்கனவே சீனாக்காரன் முழு இலங்கையும் ஆக்ரமித்து கொண்டுள்ளான். அது இந்தியாவின் எதிர்கால பாதுகாப்புக்கு பெரிய அச்சுறுத்தலே. இலங்கை இந்தியாவை எப்போதும் ஓர் ஆதிக்க சக்தியாகவே பார்த்துள்ளது. இந்தியாவின் ஆதிக்கம் இலங்கையின் மீது வருவதற்குத் தமிழகம் தான் எப்பவுமே ஒரு நுழைவு வாயில். அதனால் சிங்களவன் ஒரு பொழுதும் இந்தியாவை நட்பு நாடாக பார்க்கமாட்டான். அதுவும் அவனுக்கு தமிழ்நாட்டு  தமிழர் என்றால் ஆதிக்க சக்தியாக இந்தியாவின் முகம் தான் நினைவு வரும்.  அவன் ஒரு பொழுதும் இந்தியாவிற்கு நேச நாடாக விளங்கமாட்டான். இந்த உண்மையை இந்தியா புரிந்து கொள்ளும் நாள் தான் ஈழத் தமிழர் வாழ்வில் வெளிச்சம் திரும்பும் நாளாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. இதற்கு உண்டான முயற்சிகளை நீங்கள் மேற்கொள்ளுவீர்கள் என்று நம்புகிறோம்.

நன்றி.

இப்படிக்கு

உங்களை உறவு என்றும் நினைத்துத்கொள்ளும் தமிழ்த் தம்பி

- வேந்தன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)