நான் தோசைகளை வெறுக்கத் துவங்கியது அம்பையின் எழுத்துக்களைப் படிக்கத் துவங்கிய காலத்தில்தான்.அதற்கு முன்வரைக்கும் தோசை என்றால் கபகபவென்று அவ்வளவு ஆசையுடன் தட்டின் முன்னால் காத்திருப்பேன். என் அம்மா கல்லில் தோசை வார்த்து அதை ஒரு இட்லிக்கொப்பரை மூடிகொண்டு மூடி வைத்துப் பின் மூடியைத் திறந்து தோசையை அப்படியே இரண்டாக மடித்து, மடித்த தோசையின் மீது தோசைக்கரண்டியால் செல்லமாக ரெண்டு தடவு தடவி எடுத்து எங்கள் தட்டில் போடுவார்கள். எங்கள் கிராமத்திலேயே இப்படித் தோசை சுடுவது எங்க அம்மா மட்டும்தான். மற்ற வீடுகளிலெல்லாம் ராத்திரி 2 மணிக்கெல்லாம் தோசைகளைச் சுட்டு வட்ட வட்டமாக நார்ப்பெட்டியில் அடுக்கி விடுவார்கள் பெண்கள். அப்பேர்ப்பட்ட தோசையும் ஆணாதிக்கத்தின் இன்னொரு வடிவமாக என் மனதில் அழுத்தமாகப் படிந்துவிட்டது. அம்பையின் வெளிப்பாடு கதையைப் படித்து முடித்த அந்த நிமிடத்தில். (வட்டமான ஆணாதிக்கம்). எங்கள் அம்மா சுட்டு நாங்கள் தின்ற தோசைகள் வயிற்றில் வலி உண்டாக்கின.

பெண்கள் வாழ்க்கை குறித்து ஆய்வு செய்ய வந்த ஆய்வாளரான ஒரு பெண்ணுக்கும் ஒரு குடும்பப்பெண்ணுக்கும் நடக்கும் உரையாடல் (வெளிப்பாடு-கதை):

“நான் தோசை சுடட்டுமா?

“அட, தோசை சுடத்தெரியுமா?”

“ஏன், தெரியாதுன்னு நினைச்சீங்களா? உங்களை மாதிரி அவ்வளவு அழகா வராது. ஆனா சுடுவேன்.”

“என்ன மாதிரின்னா, என் வயசு என்ன உங்க வயசு என்ன? பத்து வயசு தொடங்கி சுடறேன். நாப்பது வருஷத்திலே ஒரு நாளைக்கு இருபது மேனிக்கு எவ்வளவு தோசை.... அம்மம்மா...”

ஒரு வருடத்துக்கு ஏழாயிரத்து முந்நூறு தோசைகள்.நாற்பது வருடங்களில் இரண்டு லட்சத்துத் தொண்ணூற்றிரண்டாயிரம் தோசைகள்.இது தவிர இட்லிகள்,வடைகள், அப்பங்கள், பொரியல்கள், குழம்புகள். எவ்வளவு முறை சோறு வடித்திருப்பாள்? எவ்வளவு கிலோ அரிசி சமைத்திருப்பாள்? இவள் சிரிக்கிறாள்.

“என்னா ரிப்போர்ட்டு எளுதணும்?”

“ பொம்பளைங்க பத்தி “

“பொம்பளைங்க பத்தி எழுத என்ன இருக்கு?”

“அதாவது அவங்க எப்படி வாழறாங்க? என்னவெல்லாம் வேலை செய்யறாங்க, அவங்க தங்க ளோட வாழ்க்கையைப் பத்தி என்ன நெனக்கிறாங்க..”

“என்ன நெனக்கிறாங்க? புள்ள பெறுதோம். ஆக்கிப் போடுதோம்.”

தோசையைப் புரட்டிப்போட்டது போல அன்று என் ஆண் மனதைப் புரட்டிப்போட்ட அரைப்பக்கம் இது. இன்று 2010இல் இன்னும் கூர்மையாக நம்மைத்தாக்கும் கதைகளைப் பெண் படைப்பாளிகள் பலர் எழுதித்தீர்த்து விட்டார்கள் என்றாலும் நவீன தமிழ் உரைநடை இலக்கியத்தில் ஒலித்த முதல் பெண் குரல் அம்பையினுடையது அல்லவா? பெண் கோபத்தின் முதல் வெளிப்பாடு என்று சுந்தரராமசாமி மிகச்சரியாகக் குறிப்பிட்டார். உண்மையில் இக்கதையை வாசித்த பிறகு பெண்களின் உலகத்தைப் பார்க்கும் என் பார்வை தலைகீழான மாற்றம் அடைந்தது.இதெல்லாம் கூடக் கவனிக்காமல் கடந்து வந்துவிட்டோமே என்கிற குற்ற உணர்வும் கூர்மைப்பட்டது.’பெண் பார்வை’ என்றால் என்ன என்பதை முதன் முதலாக எம்மில் பலருக்கு உணர்த்தியது அம்பையின் சிறுகதைகள்தாம்.அப்புறம் தான் நான் அலெக்ஸாண்டர் கொலண்டாயும் கிளாரா ஜெட்கினும் சிமாண்டிபுவாவும் அறிய வாய்த்தது.

70களில் கசடதபற இதழில் அம்பை எழுதிய ‘அம்மா ஒரு கொலை செய்தாள்' கதை பெரும் அதிர்வலைகளையும் விவாதத்தையும் தமிழ் இலக்கியப்பரப்பில் ஏற்படுத்தியது. என் முன்னோடிகளான வண்ணநிலவனுக்கும் வண்ணதாசனுக்கும் (ஒரு போதும் தனித்தனியாக இந்த இருவரையும் பிரித்து என்னால் யோசிக்கவே முடிந்ததில்லை-க.சீ.சிவக்குமாரையும் பாஸ்கர் சக்தியையும் போல) நெருக்கமான நண்பர் அம்பை எனக் கேள்விப்பட்டிருந்ததால் அவர் எழுத்துக்கள் மீது வாசிக்கும் முன்பே ஒரு மரியாதை விழுந்திருந்தது.

வயதுக்கு வரும் நாளின் மனக் குழப்பத்தோடு அம்மாவின் ஆறுதலான வார்த்தைகளுக்காகக் காத்திருக்கும் சிறுமி ஒருத்தியின் மனம் -அம்மா வந்ததும் அவள் கழுத்தைக்கட்டிக்கொண்டு- தன் அவஸ்தையைச் சொல்லக்காத்திருக்கும் அந்த மனம்-தன் உடம்பே தனக்கு மாறுதலாகப் படும் தவிப்பை -அதற்கான விளக்கத்தை அம்மா சொல்லுவாள் எனக்காத்திருக்கும் அவள் மனதை ‘ உனக்கு இந்த இழவுக்கு என்னடீ அவசரம் ’என்று சொல்லிச் சிதறடிக்கும் அம்மா உண்மையில் ஒரு கொலைதான் செய்தாள்.

அவருடைய முதல் தொகுப்பின் தலைப்புக்கதையான சிறகுகள் முறியும் ஆண் பெண் உறவு குறித்தும் பெண்ணின் விடுபட முடியாத் துயரம் குறித்தும் விஸ்தாரமாகவும் அழுத்தமாகவும் பேசியது. அந்தக்கதையை நான் வாசித்து முடித்த அந்த நாள் இன்னும் நினைவில் இருக்கிறது. தன் நிலை பற்றிய சுய பிரக்ஞை ஏதும் இல்லாதவரைக்கும்தான் பெண் நிம்மதியாகத் தூங்க முடியும்.தன்னுணர்வு பெற்ற கணத்திலிருந்து சாயாவைப்போல அல்லது அவள் அம்மாவைப்போலச் சிரிப்பை இழந்து வெறிக்கும் பார்வையோடு மௌனத்தில் நிற்கும் நிலையே லபித்து விடும். ஆனால் தன்னுணர்வு பெறாமல், இத்தகைய மன நிலையைக் கடந்து ஒரு கோப மனநிலையை நோக்கித் தன்னை நகர்த்தாமல் விடுதலைக்கு வேறு மார்க்கமில்லை. இது கடந்தே தீர வேண்டிய வலிதான்.இவ்வாறும் பலவிதமாகவும் யோசித்தபடி அன்று யாரோடும் பேசப்பிடிக்காமல் நெடுந்தூரம் தனியே நடந்து கொண்டிருந்தேன்.

கு.அழகிரிசாமியின் திரிபுரம் கதைக்குப் பிறகு அவ்வளவு மன அழுத்தத்தை நான் அடைந்தது அம்பையின் வெளிப்பாடு, வீட்டின் மூலையில் ஒரு சமையலறை மற்றும் கறுப்புக்குதிரைச் சதுக்கம், காட்டில் ஒரு மான் போன்ற கதைகளால்தான்.

கு.அழகிரிசாமி, வண்ணநிலவன், வண்ணதாசன் என்று என்னுடைய உலகம் உணர்ச்சிகரமானதாக இருக்க, அம்பை அறிவார்த்தமான கேள்விகளைக் கிளப்பியபடி எனக்குள்ளே பிரவேசித்தார். அறிவார்ந்த உலுக்குதல் மூலம் உள்நுழையும் அவரது கதைகள் பெரும் உணர்ச்சிக் கொந்தளிப்பை வாசக மனதில் பொங்கி எழ வைக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளவை.அறிவின் தீட்சண்யமும் ஆழ்ந்தடங்கி உறைந்திருக்கும் உணர்வுப் பெருக்கும் சரியாகக் கலந்த ஒரு படைப்பு சக்தியாக நான் அம்பையை உணர்கிறேன். இந்த நிதானம்தான் இன்றைய நம் படைப்பாளிகளிடம் தப்பி விடுவதாகப் பலமுறை உணர்ந்திருக்கிறேன்.

தோழர் கந்தசாமியின் துணைவி தன் மகன் லெனினைப் பற்றிப் பேசும் ஒரு பத்தி (கறுப்புக்குதிரைச் சதுக்கம்):

“நல்ல புள்ளம்மா அவன்.” கையைப்பற்றிக் கொண்டாள்.” “இன்னும் நிஜார் போட்ட பையனாகவே தெரியிறான் எனக்கு.ஒருவாட்டி அவரை செயில்ல போட்டுட்டாங்க. பன்னண்டு வயசுப்பயையணை இழுத்துக்கிட்டு ஓடறேன் அங்க. அங்க அலைஞ்சு, இங்க போயி அவரப் பாக்குற வரிக்கும் ‘பசிக்குதம்மா’ன்னு சொல்லலையே பையன்! எப்படிப்பட்ட புள்ள அவன்! ”

முதல் முறை இந்தப்பகுதியை வாசித்தபோது வெடித்து அழுதுவிட்டேன். எத்தனை ஆண்டுகள் கழிந்தும் ஒரு தாய்க்குத் தன் மகன் பற்றிய எந்த நினைவு முதலில் முந்திக்கொண்டு வருகிறது ! பசியாற்றிப் பசியாற்றித் தன் பசியும் தன் சுகமும் தன் சுயமும் அழிந்துபோன ஆயிரமாயிரம் தாய்களின் தியாகப் புகையில் மூச்சுத்திணறுகிறது.பால்நினைந்தூட்டும் தாய் மனதோடு கூடிய ஒரு சமூக அமைப்பு பற்றிய நம் நெடுங்கனவு குறித்தான ஏக்கம் பெருமூச்செரிகிறது. தாயும் சமூக அமைப்பும் ஒன்றெனக் கொள்கிறேன்.

அம்பையின் படைப்புகளில் முதலில் நம்மைத்தாக்குவது அவரது தெளிவான-அகண்ட பார்வை வாழ்க்கை பற்றிய கண்ணோட்டம் -அவர் முன் வைக்கும் பெண்ணரசியல். இதெல்லாவற்றையும்விட பொதுவான பிரச்னைகளை ஒரு தன்னுணர்வோடும் தனிப்பட்டதான உணர்வாக மடைமாற்றியும் அவர் பேசும் விதம்தான் அவர் படைப்புகளைத் தனித்துவமிக்கவையாக்குகிறது.இது தமிழில் அபூர்வமான இடமாகும்.

வன்முறைக்கும் வன்புணர்ச்சிக்கும் ஆளாக்கப்பட்ட பெண் உறுப்புகள் மீது அவர் கொள்ளும் -கொட்டும்-கருணையும் வாஞ்சையும் நம் ரத்தத்தை உறையச் செய்கின்றன. நம்மால் (ஆண்களால்)அப்படியெல்லாம் யோசிக்கவே முடியாது. “ஒவ்வொரு பெண்ணும் இன்னொருத்தியின் கண் அடியில் உள்ள கருவட்டங்களைத் தடவ வேண்டும்.பிரசவக் கோடுகளில் உள்ளங்கைகளை வைக்க வேண்டும். புடைத்த நரம்புகளில் விரலை வைக்க வேண்டும்.வெடித்த கால்களைக் கைகளில் ஏந்த வேண்டும். யோனியில் முகம் பதிக்க வேண்டும்’’

இப்பத்தியில் இடம் பெறாமல் புறந்தள்ளப்பட்ட ஆணாக என்னை உணரும் இக்கணம் பெரும் குற்றச் சுமையை ஏற்றுகிறது. பல கதைகளில் பெண்களின் உடல்கள் கோடுகளோடும் கீறல்களோடும் விவரிக்கப் பட்டிருப்பது பெரும் மனத்திறப்பை ஆண் வாசகரிடம் ஏற்படுத்த வல்லதாகும். கதைகளுக்கு அப்பால் அம்பை இயங்கும் படைப்புத் தளம் மிக விரிந்து பரந்தது. அவர் நடத்தி வரும் ஸ்பாரோ (SPARROW- Sound and Picture Archives for Reasearch on Women) பெண்களுக்கான ஆய்வு மையத்தின் பணிகள் குறிப்பிடத்தக்கவை. அவர்களின் ஓரிரு நூல்கள் வாசிக்கக் கிடைத்தன. புதிய வெளிச்சம் தரும் முயற்சிகள் அவை. இப்பூமியில் தோசைகளும் மார்ச்-8 உம் உள்ளவரை அம்பையின் கதைகள் நினைக்கப்படும். ஆழ்ந்த அதிர்வுகளை அவசியமான அளவுக்குத் தந்து கொண்டே இருக்கும்.

Pin It