தமிழ்ப் புனைகதை உலகில் ‘விஷ்ணுபுரம்’ தனித்ததொரு நிலையில் தன்னை அடையாளம் காட்டிக்கொண்டது. இதற்குக் காரணம் இதன் கதையமைப்பு, மொழியமைப்பு என்பதை விடக் கதையை நிகழ்த்த ஏதுவான பரிமாணத்தை முக்கியமாகக் குறிப்பிடலாம். இந்நாவல் ஸ்ரீபாதம், கௌஸ்துபம், மணிமுடி என மூன்று பகுதிகளாகப் பகுக்கப்பட்டுள்ளது. விஷ்ணுபுரம் தோற்றம் கொள்வதற்கு முன் வாழ்ந்த ஆதிமக்களின் வாழ்நிலை, விஷ்ணு புரத் தோற்றம், விஷ்ணுபுரத்திற்குள் நிகழும் உள்முரண்பாடுகள் ஆகியவற்றை முதற்கட்டமாகவும் விஷ்ணுபுரம் அழிவதற்கான காரணம், அழிவுற்ற பிறகான சமூகநிலை அதற்குப் பின்னும் சொல்லப்படுகிறது.

பாண்டியர்களின் ஆட்சிக்குட்பட்ட விஷ்ணுபுரம் பார்ப்பனர்களின் செல்வாக்குமிக்க இடமாகத் தோற்றம் கொள்கிறது. விஷ்ணுபுரத் தலைவராகிய சூர்யதத்தரின் விருப்பு வெறுப்புகளுக்கு உட்பட்டே விஷ்ணுபுரம் அமைகிறது. அங்கு நிகழும் திருவிழாச் சடங்குகள், நீதி வழங்குதல் முதலானவற்றின் அடிப்படையில் இதனை அனுமானிக்க முடிகிறது. ஆனால் விஷ்ணுபுர பார்ப்பனர்களுக்கும் காளாமுகர்களுக்கும் இடையே நிகழும் உள்முரண்பாடுகள் காலச் சுழற்சியில் உச்சகட்ட மடைந்து பார்ப்பனர்களின் ஆட்சி வீழ்ச்சியடைகிறது. பார்ப்பனர்களின் ஆட்சி வீழ்ச்சியடைவது போலச் சித்திரிக்கப்பட்டாலும் ஆத்திகத்தின் வெற்றியே இந்நாவலின் உட்கருத்தாக அமைகிறது.

விஷ்ணுபுரத்தில் பௌத்தர்களின் ஆட்சி மேலோங்க ‘அஜிதன்’ முயற்சிப்பதை நாவலின் திருப்புமுனையாகக் கருதலாம். அஜிதன் ஆட்சியில் எதுவும் பங்கேற்காமல் பிட்சுக்களுடனும் மதவாதிக ளுடனும் சேர்ந்து பார்ப்பனர்களுக்கு எதிராகப் போரிட்டு நகரத்தை விட்டே பார்ப்பனர்களைத் துரத்துகிறான். இதனைத் தொடர்ந்து இஸ்லாமியப் படையெடுப்பு நிகழ்வதாக ஜெயமோகன் புனை கிறார். ஆனால் அவைதீகத்தை வீழ்த்தி வைதீக சமயங்கள் பதினான்காம் நூற்றாண்டு வரை ஆதிக்கம் செலுத்தியதுதான் வரலாறு.

மேலும் வைதீக, அவைதீக போராட்டங்களை முன்னெடுத் துள்ள இந்நாவல் வைதீக சமயத்தை ஆதிப் பழங்குடிகளுக்கு இணக்கமான சமயமாகவும், அவைதீக சமயத்தை தாந்திரிகம் மற்றும் சூழ்ச்சியின் அடிப்படையில் தோற்றம் கொண்டதாகவும் சித்திரித்துள்ளது. இவ்வாறு இந்நாவலில் வரலாற்றுக் காலகட்டம் ‘புனைவு’ சுதந்திரத்தின் மூலம் திரித்துப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக உணரமுடிகிறது.

கல்கியின் புனைவுகளில் காபாலிகர்களையும் நாகந்தி முதலான அவைதீக சமயத்தாரையும் எதிர்மறையாகச் சித்திரித்துள்ளார். சம்பந்தர், நாவுக்கரசர் முதலான வைதீக சமயத்தாரை நேர்மறையாகச் சித்திரித்துள்ளார். இந்நாவலிலும் அவைதீக சமயத்தை எதிர்மறையாகவும் வைதீக சமயத்தை நேர்மறையாகவுமே ஜெயமோகன் சித்திரித்துள்ளார். இவர் பயன்படுத்திய மொழியும் காலத்தன்மையும் தமிழ்ப் புதினப் போக்கை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் சென்றாலும் அதன் உள்ளீடாக ‘இந்துத்துவச் சார்பு’ இருப்பதனை அவதானிக்க முடிகிறது.

Pin It