கு.சின்னப்பபாரதி அறக்கட்டளையும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்க மும் இணைந்து வழங்கிய “கு.சின்னப்பபாரதி விருது” விழா சேலம் தமிழ்ச்சங்க அரங்கில் அக் டோபர் 2ஆம்தேதி நடைபெற்றது.

அகில இந்திய மொழிக்கான முதன்மைப் பரிசு ரூபாய் ஐம்பதாயிரம் இந்தி எழுத்தாளர் திருமதி சித்ரா முத்கலுக்கு வழங்கப்பட்டது. தமிழுக்கான முதன்மைப் பரிசு ரூபாய் ஐம்பதாயிரம் முனைவர் க.ப.அறவாணன், ஜாகிர்ராஜா ஆகிய இருவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது. மேலும், சிறப்புப் பரிசாக நாவலாசிரியர்கள் பொன்னீலன், ஜோதிர்லதா கிரிஜா, சு.வெங்கடேசன், தேனி சீருடையான், இலங்கை எழுத்தாளர்கள் தாமரைச் செல்வி, நீ.ப. அருளானந்தம் ஆகியோருக்கு தலா ஐந்தாயிரம் ரூபாய் பரிசும், பாராட்டுப் பத்திரமும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

விழாவிற்கு தலைமை ஏற்றுப் பேசிய அறக் கட்டளைத் தலைவர் டாக்டர் பொ.செல்வராஜ் “நாமக்கல் கவிஞர் என்று போற்றப்படும் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை அவர்களை நாமக்கல் கண்டு கொள்ளாமல் விட்டுப்போன குறை எங்களைப் போன்ற கல்வியாளர்களுக்கு உறுத்துதலாக இருந்து வந்தது. சின்னப்ப பாரதியின் படைப்புக்கள் இந்திய அளவில் பேசப்படுகிற நிலையில் அவருடைய படைப்புகளைப் பேச வேண்டும் என்கிற கருத்தில் அவரின் படைப்புகளைப்பற்றிய அகில இந்திய கருத்தரங்கம் 2008ல் நாமக்கல்லில் இரண்டு நாட்கள் நடத்தப்பட்டதன் விளைவே இந்த அறக் கட்டளையின் உருவாக்கம்” என்று கூறினார்.

அறிமுக உரையாற்றிய அறக்கட்டளையின் உதவித் தலைவர் சி.க.கருப்பண்ணன் “எனக்குத் தெரிந்த அளவில் தமிழில் இருந்து அதிகப்படியான மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட ஒரே படைப்பாளி சின்னப்பபாரதிதான். ஆனால் உரிய வகையில் அவர் கவனிக்கப்படாத நிலையில் இப்படியொரு அறக்கட்டளை மூலம் அவர் பெயரால் இலக்கியப் பரிசளித்து சிறப்பிக்க வேண்டும் என்று எண்ணியதே இந்தப் பரிசின் வெளிப்பாடாகும். அடுத்துவரும் ஆண்டுகளில் பரிசுக்கான தொகையை மேலும் அதிகப்படுத்தும் சிந்தனையும் இருந்து வருகிறது” என்றார்.

அடுத்து துவக்க உரையாற்றிய தமுஎகச மாநிலப் பொதுச்செயலாளர் ச.தமிழ்ச்செல்வன், ‘தமுஎகச வின் முன்னோடிகளில் ஒருவரும், உழைக்கும் மக்களின் போராட்ட உணர்வுகளை நாவல்களாகப் படைத்து எங்களுக்கு வழிகாட்டியாக விளங்குப வருமான கு.சி.பா.வின் பெயரில் அமைந்த அறக்கட்டளை சார்பாக இலக்கியவாதிகளுக்கு விருது வழங்குவது எங்களுக்குப் பெரும் மகிழ்ச்சி யூட்டுவதாக விளங்குகிறது’ என்று பெருமிதம் பொங்கக் குறிப்பிட்டார்.

அடுத்துப் பேசிய செம்மலர் ஆசிரியரும், சிறந்த படைப்பாளியுமான எஸ்.ஏ.பெருமாள் ‘கு.சி.பா.வின் படைப்பின் வெற்றி என்பது போராடும் மக்களின் திரளோடு தன்னையும் இணைத்துக் கொண்டு பெறுகின்ற அனுபவ வெளிப்பாடாக இருப்பதுதான் காரணம். அதனால் தான் இந்திய அளவில் அவரின் படைப்புக்கள் வரவேற்பைப் பெறுவதில் முக்கியத்துவம் பெற்று விளங்குகின்றன’ என்றார்.

முதன்மைப் பரிசு பெற்ற இந்திய எழுத்தாளர் திருமதி சித்ராமுத்கல் பேசும்போது, “நான் பிறந்தது தமிழ்நாட்டில் என்றாலும் பெற்றோர்களின் பணி நிமித்தமாக வெளிமாநிலங்களில் இருந்துவிட்ட படியால் எனக்குத் தமிழ்தெரியாது. எங்கள் குடும்பம் ஜமீன் குடும்பம். நான் சிறுமியாக இருக்கும்பொழுது எங்கள் பண்ணையில் வேலை பார்த்த தாழ்த்தப்பட்ட ஒருவரை வேப்பமரத்தில் கட்டிவைத்து அடிக்கப்பட்ட காட்சியை பார்த்திருக் கிறேன். அது மாதிரியான நிகழ்வுகளை சின்னப்ப பாரதியின் தாகம் நாவலில் படித்துவிட்டு மூன்று இரவுகள் தூக்கமின்றி அவதிப்பட்டேன். அப்படிப் பட்ட படைப்பாளியின் பெயரால் வழங்கப்படும் பரிசைப் பெறுவதில் பெரிதும் மகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறேன்” என்றார்.

தமிழுக்கான முதன்மைப் பரிசு பெற்ற முனைவர் க.ப.அறவாணன், “உலகைப் புரட்டிப் போட்ட மேதைகள் ஐவர் என்பார்கள். காரல் மார்க்ஸ், டார்வின், கலிலியோ, நியூட்டன், எடிசன் என்று கூறுவார்கள். அவர்கள் வழியில் இன்றைய சமூக அமைப்பை மாற்றுவதற்கான பணியை இலக்கியப்படைப்பின் மூலம் ஆற்றி வருபவர் கு.சி.பா. அவரின் பெயரால் உருவாக்கப்பட்டி ருக்கும் பரிசையும், விருதையும் முதல் துவக்க ஆண்டிலேயே பெறுவதில் பெருமையடைகிறேன்” என்றார்.

கு.சி.பா.வின் சுரங்கம் நாவல் சிங்கள மொழியில் “கல் அங்குரு” என்ற பெயரில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. அதன்மொழி பெயர்ப் பாளர் உபாலி லீலா ரத்னா, நாடக ஆசிரியரும் “கொழுந்து” மாத இதழின் ஆசிரியருமான அந்தனி ஜீவா, பத்திரிகையாளர் கே.ஜி.மகாதேவா ஆகியோர் விழா மேடையில் இந்நூலை அறிமுகப் படுத்திப் பேசினார்கள். இனப்பூசல் மலிந்துள்ள சூழலில் ஒரு தமிழ்ப்படைப்பாளியின் நூல் சிங்கள மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு வரவேற்பை பெறுவது இலக்கியத்தின் வழி இன ஒற்றுமை வலுப்பட்டு வருவதையே காட்டுகிறது என்பதற்கு இதொரு நல்ல எடுத்துக்காட்டு என்று கூறுவதுடன் கு.சி.பா.வின் தாகம் நாவல் தற்பொழுது சிங்கள மொழியில் பெயர்க்கப்பட்டு வருகிறதென்றும் கூறினார்கள்.

டில்லி எழுத்தாளர் எச்.பாலசுப்பிரமணியம் பேசுகையில், “இந்தியில் குசிபாவின் ஆறு நாவல்கள் மொழி பெயர்க்கப்பட்டு பரவலான அறிமுகம் பெற்றுள்ளார். அந்த வகையில் அவருக்கான சிறப்பிதழ் ஒன்றை ‘தைனிக்ஜாகரன்’ என்கிற இலக்கிய மாத இதழ் வெளியிட உள்ளது. அதையொட்டி இந்திக் கருத்தரங்கம் ஒன்றும் டில்லியில் நடைபெற உள்ளது’ என்றார்.

இவ்விழாவில் ஈரோடு மக்கள் சிந்தனையாளர் மன்றம் தலைவரும், சிறந்த வரலாற்று ஆசிரியரு மான ஸ்டாலின் குணசேகரன், அறக்கட்டளை செயலாளர் நாமக்கல் கே.பழனிச்சாமி, உறுப்பினர் சி.ரங்கசாமி ஆகியோர் வாழ்த்துரைக்க, அசோகன் முத்துச்சாமி நன்றி கூற விழா நல்லதொரு இலக்கியப் பொலிவுடன் நிறைவுற்றது.

Pin It