நிலவுடைமைச் சமூகத்தின் வீழ்ச்சியால் விளைந்த வளமான சூழலில் உருவான பொருளாதார அமைப்பே முதலாளித்துவமாகும். மார்க்சின் மொழியில் கூறுவதானால், “நிலவுடைமைச் சமூகத்தின் அழிவுகளிலிருந்து முளைத்தெழுந்த நவீன நடுத்தர வர்க்க சமூகம் என்பது, வர்க்க வேறுபாடுகளிலிருந்து விடுபடவில்லை.’ சமூகத்தை இரண்டு கூர்மையான பிரிவுகளாகப் பிளவுபடுத்துவதில் அது முக்கியப் பங்கு வகித்தது. அந்த இரண்டு பிரிவுகளான உழைக்கும் மக்களும், முதலாளிகளும் ஒருவரையொருவர் நேருக்கு நேராக எதிர்த்து நிற்கின்றனர். முதலாளித்துவத்தின் சாரமானது, உற்பத்தியாளர்களின் உபரியை சுரண்டுவதன் மூலம் கிடைக்கக்கூடிய அதிக வருவாய்க்காக - சொத்தையோ, பணத்தையோ (உற்பத்தியின் அனைத்து வழிகளையும்) முதலீடு செய்வதே ஆகும். இத்தகைய பொருளாதாரக் கட்டமைப்பு இந்தியாவில் இருக்கவில்லை. ஏனெனில், முதலாளித்துவத்திற்கு முன்னரான நிலவுடைமைப் பொருளாதாரக் கட்டமைப்பு இருந்திருக்கவில்லை.

இந்திய சமூகத்தின் பொருளாதாரம், வர்ணாசிரம தர்மத்தினால் உருவாக்கப்பட்டது. அதுதான் சாதிய அமைப்பு என்றழைக்கப்படுகிறது. இப்பொருளாதாரக் கட்டமைப்புதான் சாதியம் ஆகும். சாதியத்தில் சொத்தையோ, பொருளையோ அதிக வருவாய்க்காக முதலீடு செய்யும் வழிமுறையோ, வாய்ப்போ இல்லை. உற்பத்திக்கான அத்தனை வழிமுறைகளும் தெய்வீக உத்தரவின்படி, பார்ப்பனர்களுக்கு மட்டுமே உரியதாயிருந்தன. நிலவுடைமை, முதலாளித்துவம் மற்றும் பொதுவுடைமை ஆகிய எதன் குணங்களையும் சாதியம் கொண்டிருக்கவில்லை. அது முற்றிலும் வேறானது. உலகில் அறியப்பட்ட அனைத்து பொருளாதாரக் கட்டமைப்புகளிலிருந்தும் அது மாறுபட்டது. அது அதனளவில் தனித்துவமானது.

காந்தியார் மிகச்சரியாக குறிப்பிட்டுள்ளபடி, “சாதிய அமைப்பை ஒழித்து, மேற்கத்திய அய்ரோப்பிய சமூக அமைப்பை ஏற்றுக் கொள்வதற்கு சாதிய அமைப்பின் உயிராக இருக்கின்ற பரம்பரைத் தொழில் தத்துவத்தை இந்துக்கள் கைவிட வேண்டும்.’ விவேகானந்தரின் கூற்றை முழுவதும் ஏற்றுக் கொண்டு, அவர் மேலும் கூறுகிறார்: “வர்ண அமைப்பின் நோக்கமானது - போட்டி, வகுப்புப் போராட்டம் மற்றும் வகுப்புப் போரினை தவிர்ப்பதே ஆகும். நான் வர்ண அமைப்பை நம்புகிறேன். ஏனெனில், அது மனிதர்களின் கடமைகளையும், தொழில்களையும் நிர்ணயிக்கிறது. வர்ணம் என்பது ஒரு மனிதன் பிறப்பதற்கு முன்பே அவனுடைய தொழிலைத் தீர்மானிப்பதாகும்.’

கடவுளால் திட்டமிடப்பட்டதாகக் கூறப்படும் சாதிய பொருளாதாரக் கட்டமைப்பின்படி - சூத்திரர்களுக்கும், தீண்டத்தகாதவர்களுக்கும் அனைத்து விதமான பொருளாதார உரிமைகளும் மறுக்கப்பட்டன. சொத்தை உருவாக்குபவர்கள் என்ற கடமையை ஆற்றுவது மட்டுமே, அவர்களுக்குரிய ஒரே பணியாக இருந்தது. சாதிப்படி நிலையில் மேலே உள்ள மூன்று சாதியினருக்கும் எவ்வித பிரதிபலனும் எதிர்பாராமல், சேவை புரிவதற்காகவே அவர்கள் கடவுளால் உருவாக்கப்பட்டிருக்கின்றனர். உற்பத்தி வழிமுறைகளில் மிகவும் முக்கியக் கூறான உடல் உழைப்பின் குறியீடாக அவர்கள் கருதப்படுகின்றனர். அவ்வகையில் அவர்களே ஒரு சொத்து எனும் அடிப்படையில், ஆதிக்கச் சாதியினரின் உடைமை ஆகின்றனர். அவர்கள் அடிமைகளாகவும், உற்பத்தியாளர்களாகவும் கடவுளால் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்மூலம் ஒட்டுமொத்த சுரண்டலுக்கும் மூலப் பொருளாக அவர்கள் இருக்கின்றனர். உண்மையில் அவர்களைப் பொருத்தவரையில் சுரண்டல் என்பது சுரண்டலாகவே இல்லை!

ஒட்டுமொத்த சுரண்டலுடன் வெறுப்பும் சேர்ந்து, அவர்களை சுமைதாங்கிகளாக மட்டுமின்றி, பலியாடுகளாகவும் மாற்றியது. இதன் கொடூர வெளிப்பாடே தீண்டாமை எனும் வழக்கமாகும். இதன் விளைவாக, ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 90 விழுக்காட்டினர் ("தலித் பகுஜன்'), வாங்கும் திறனின்றி, மனித அடையாளம் இன்றி வாழவைக்கப்பட்டனர். உண்மையில், அவர்கள் வளர்ப்புப் பிராணிகளை விடவும் கீழாக நடத்தப்பட்டனர். ஒரு குறிப்பிட்ட தூரம் விலக்கியே வைக்கப்பட்டனர். இதன் விளைவாக, இந்திய பொருளாதார சந்தை அல்லது வாங்கும் சந்தையானது, சமூகத்தின் 15 விழுக்காட்டிற்கு மேலாக இருக்கவில்லை. இந்த சாதிய பொருளாதாரக் கட்டமைப்பில் வாங்கும் சந்தையானது, ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு மேல் விரிவாக்க முடியாததாக இருக்கிறது. இந்தியப் பொருட்கள் வெளிநாட்டு சந்தைகளில் நுழைய முடியாமல் இருக்கின்றன. அதற்குக் காரணம், தரம் பற்றிய உணர்வின்மையே ஆகும். இந்திய தொழில் துறை இந்தியõவில் வளரவோ, விரிவாகவோ முடியாததற்கான முக்கியக் காரணங்கள் இவைதான். முதலாளித்துவம் தனது வேர்களை விரிவாக்காமல் வளராது.

சுதந்திரம் பெற்ற நாளில் தொடங்கி கடந்த 60 ஆண்டு களாக, இந்தியாவின் ஒட்டுமொத்த உழைக்கும் சக்தியில் வெறும் 11 விழுக்காடு மட்டுமே தொழில் துறையில் ஈடுபடுத்தப்படுகிறது. தொழில் துறையில் அதிக தொழிலாளர்களை வேலைக்கு எடுப்பதோ, அதிக முதலீட்டினை செலுத்துவதோ - அதிக உற்பத்தி எனும் பெரும் சிக்கலுக்கு வழிவகுத்துவிடும். தேவை சந்தையைவிட அதிக பொருட்களை தருவது என்பது, முதலாளிகளின் அழிவிற்கே வழிவகுக்கும். அதனால் இந்தியா, சாதியம் அல்லது முதலாளித்துவம் எனும் இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுக்கும் நிலையில் நிற்கிறது. இந்த இரண்டு அமைப்புகளும் நேர் எதிரானவை மற்றும் முற்றிலும் வெவ்வேறானவை. இந்த அடிப்படையில் ஒரு சமூகத்தில் முதலாளித்துவம் மற்றும் முதலாளித்துவ பொருளாதாரக் கட்டமைப்பின் வளர்ச்சி ஆகியவை இன்றிப் பொதுவுடைமைக்கான மார்க்சியப் புரட்சியானது, ஒரு கற்பனைக் கருவாகவே இருக்கும்.

ஆகவே, இந்தியப் பொருளாதாரத்தில் நாம் இருவகையான பொருளாதார நடவடிக்கைகளை காண்கிறோம். ஒன்று, முதலாளித்துவம் மற்றும் மாற்றம் காணக்கூடிய முறை. மற்றொன்று, நிலவுடைமைக்கு முந்தைய மற்றும் மாறா தன்மையுடைய பொருளாதார நடவடிக்கைகள். ஆதிக்கச் சாதியினரின் இருப்பிடமான நகர மய்யங்கள், முதலாளித்துவ முறையில் இயங்குகின்றன. நகர மய்யங்கள் உலகளாவிய தொழில் மய்யங்களுடன் இணைந்து வளர்கின்றன. மாறாக, உற்பத்தியாளர்கள் அல்லது பாரம்பரிய கீழ் சாதியினர் அதிகமாக இருக்கக்கூடிய கிராமப்புறங்கள் - பழைமையான பொருளாதார முறையிலேயே இயங்குகின்றன. இந்திய நகர மற்றும் கிராமப் புறங்கள், இரு வெவ்வேறான உலகங்களாகவே இருக்கின்றன. ஜவகர்லால் நேரு விவரித்தபடி ஒன்று - "இந்தியா' (மேட்டுக்குடியினரும் சுரண்டல்காரர்களும் இருக்கக்கூடிய நகரங்கள்) மற்றொன்று - "பாரதமாதா' (உற்பத்தியாளர்கள் மற்றும் வறுமையின் இருப்பிடமாக இருக்கக்கூடிய கிராமப்புறங்கள்).

தீவிர தொழில் நுட்ப வளர்ச்சியும் முன்னேற்றமும் உடைய இன்றைய முதலாளித்துவ கட்டமைப்பிற்கு நடுவே, இந்தியத் தொழில் துறையானது, முதலாளித்துவப் பொருளாதார முறை மற்றும் முதலாளித்துவத்தின் வளர்ச்சியை செயற்கையாக கட்டுப்படுத்துவதன் மூலம் - சாதிய அமைப்பையும் தன்னுடன் இழுத்துச் சென்றிருக்கிறது. இந்தியாவில் தொழில்துறை உற்பத்தியானது, ஆதிக்கச் சாதியினரால் உருவாக்கப்பட்ட, பத்து விழுக்காடு மட்டுமே ஆன சந்தையுடன் தன்னை சுருக்கிக் கொண்டுள்ளது. தொழில் துறை சந்தையும் முதலாளித்துவ முறையிலான வாழ்வியலும் - கையளவிலான குறிப்பிட்ட பெரு நகரங்களில் மட்டுமே நிலவுகின்றன.

"விடுதலை பெற்ற இந்தியாவில்' அரசியல் மற்றும் அரசு துறைகளில் சட்டப்படியான இடஒதுக்கீடு முறையின் மூலம் சமூகப் படிகளில் சற்று மேலே வந்துள்ள - புதிதாக உருவாகியுள்ள மிகவும் கீழ் நடுத்தர வர்க்க மக்களின் பங்கேற்பால் இந்த சந்தையானது சிறிது விரிவடைந்துள்ளது. இதைத் தவிர, இந்தியாவில் குறிப்பாக அண்மைக்காலமாக, பெரு நகரங்களிலும் அதைச் சுற்றியும் வந்துள்ள ஒட்டுமொத்த தொழில்நுட்ப வளர்ச்சி என்பது, உலக அளவில் வளர்ச்சி பெற்ற நாடுகளின் உற்பத்திப் பிரிவுகளே அன்றி வேறில்லை. இந்திய தொழில் மற்றும் இந்திய சமூக அமைப்புடன் அதற்கு பெரிய தொடர்பு எதுவுமில்லை.

இந்திய தொழில் துறை உற்பத்தியில் பெரும் பங்கைத் தரவல்ல மற்றொரு சந்தை இந்திய அரசுத் துறையாகும். கோடிக்கணக்கான மக்களைக் கொண்ட சூத்திர சமூகத்தினர், பணத்தை கையாளவும் பொருளாதாரத் துறையில் நுழையவும் அனுமதிக்கப்பட்டிருந்தால், உருவாகியிருக்கக்கூடிய வளமான சந்தையை உருவாக்குவதற்கான எவ்வித வாய்ப்பும் திட்டமும் இந்திய பொருளாதார சூழலில் இல்லை. பாரம்பரிய முயற்சிகள் இன்றளவிலும் அவர்களை பொருளாதார பங்கெடுப்பிலிருந்து விலக்கியே வைத்திருக்கின்றன. இதற்கு மாறாக, தொழில் மற்றும் உலக சந்தையின் விரிவாக்கம் மற்றும் பொருளாதாரத்தின் உலகமயமாக்கல், கையளவே ஆன எண்ணிக்கையில் உள்ள ஆளும் வர்க்கத்தினரின் பிடியில் இருக்கக்கூடிய சூழல் ஆகியவற்றினால் - ஆளும் வர்க்கம் மிகப்பெரிய அளவில் அதிகார விரிவாக்கம் அடைந்துள்ளது. அவர்கள் உலக சந்தையின் பிரதிநிதிகளாக துடிப்புடன் செயல்படுகின்றனர். இந்திய மக்களின் பிரதிநிதிகளாக அன்றி உலக மக்களின் பிரதிநிதிகளாகவே செயல்படுகின்றனர் இதனால் உழைக்கும் வர்க்கத்தினர் நேர்மாறாக மேலும் வலிமையற்றவர்களாக, பாதிப்புக்குள்ளாகுபவர்களாக தவிக்கின்றனர்.

சாதியம் என அழைக்கப்படும் இந்திய பொருளாதாரக் கட்டமைப்பு, முதலாளித்துவ பொருளாதார அமைப்பிலிருந்து முற்றிலும் வேறுபட்டு நிற்கிறது. உண்மையில், அது முதலாளித்துவ அமைப்பிற்கு நேர் எதிரான பண்புகளைக் கொண்டிருக்கிறது. இந்தச் சூழலில் "பலன்பெறாத தொழிலாளர்கள்' (வேத காலம் தொடங்கி நிலவுடைமையிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள்) இருந்தபோதும், இந்திய ஆளும் வர்க்கம் மிக ஆடம்பரமான வாழ்க்கையில் புரண்டபோதும், அவர்களது பணத்தை முதலீடாக மாற்றி, அதன் மூலம் அதிக வருவாயைப் பெறுவதற்கான எவ்வித உந்துதலும் அவர்களிடம் இல்லை. அத்தகைய தேவையை உணர்வதற்கான ஒரு சூழலை அவர்கள் எதிர்கொண்டிருக்கவில்லை.

இந்துஸ்தானில் பணக்காரர்கள் மற்றும் ஏழைகள் என்ற இருவகுப்பினர் மட்டுமே இருந்தனர். வளமிக்க ஆளும் வர்க்கமானது, ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 5 விழுக்காடாக மட்டுமே இருக்கிறது. எஞ்சியுள்ளவர்கள் வறுமையிலும், கடின உழைப்பிலும் உழன்று கொண்டிருக்கின்றனர். நடுத்தர வர்க்கம் அதன் உண்மையான பொருளில் இல்லவேஇல்லை. அமீர்களும், காரிபுகளும் மட்டுமே இருந்தனர். அவுரங்கசீப்பின் சபையில் உரையாற்றிய பிரெஞ்சு பயணியான பார்னியர் தனது குறிப்பில், இந்துஸ்தானின் பணக்கார மக்கள் உலகில் உள்ள மொத்த பணத்தையும் செலவழிக்கவோ, மேலும் முதலீடு செய்யவோ விருப்பமின்றி சேமிக்கவே விரும்புகின்ற ஆபத்தான போக்கு குறித்தும், இதன் காரணமாக பொதுமக்களுக்கு தனியான உடைமையை வைத்துக் கொள்வதற்கான உரிமை மறுக்கப்படுவது ஒருமரபாகவே மாறிப்போனதையும் அவர் விவரிக்கிறார்.

அதிக சேமிப்பானது, முதலாளித்துவ பொருளாதாரக் கட்டமைப்பின் வளர்ச்சிக்கு எதிரானது. முகலாயப் பேரரசர் அனைத்து விதமான உற்பத்தி வழிமுறைகளின் தனி உரிமையாளராக இருந்தார். இதன் அடிப்படையில், அவர் “இந்துஸ்தானின் துயரம் அந்த மக்களின் துயரத்தினால் உருவானது’ என்றார். எனவே, முதலீட்டின் உருவாக்கம் எதிர்பார்க்க முடியாத ஒன்றாகவே இருந்தது. இந்திய பொருளாதார படிநிலை மற்றும் சொத்து உறவுகள் ஆகியவை கடவுளால் உருவாக்கப்பட்டும், கட்டுப்படுத்தப்பட்டும் வந்தன. சாதிய அமைப்பின் அடிநாதமாக கடவுள் என்பதே இருந்தது. அது தெய்வீகமானதாகவும், மதம் சார்ந்ததாகவும் இருந்தது. இதனால் உற்பத்தியாளர்கள் வியாபாரிகளாகவோ, முதலாளிகளாகவோ மாறுவதற்கான எந்த வாய்ப்பும் இருக்கவில்லை. இந்த பொருளாதார முறை யானது, நிலவுடைமைக்கும் உட்பட்டதாகும். பெரும் எண்ணிக்கையிலான சிற்றரசர்கள் மற்றும் அரசர்களால் நிர்வகிக்கப்படுகின்ற, "கடவுளின் அரசாட்சி' யைக் கொண்ட ஒரு வேறுபாடான அரசியல் கட்டமைப்பை இது கொண்டுள்ளது.

இந்திய ஆளும் வர்க்கத்தினர், இக் கூறுகளை எல்லாம் அறிந்திருக்கவில்லை என்று சொல்வது நேர்மையாகாது. பார்ப்பன கம்யூனிஸ்டுகள் எப்பொழுதுமே தங்களது வகுப்பு மற்றும் சாதிய அந்தஸ்தை அறிந்தே வைத்திருந்தனர். அதன் மூலம் அவர்கள் ஆற்றக்கூடிய பங்கையும் அறிந்து வைத்திருந்தனர். ஓர் ஆளும் வர்க்கமாக தாங்கள் இருப்பதையும், அதனாலேயே கம்யூனிச இயக்கத்திற்கு தாங்கள் பொருத்தமானவர்கள் அல்ல என்பதையும் அவர்கள் முழுமையாக உணர்ந்திருந்தனர். இதனால் மார்க்சியத்திற்கு எதிரான தங்களது சாதிய பாகுபாட்டை, பாகுபாட்டிற்கு எதிரான சிக்கல்களை கையாள - ஒரு பொருத்தமான சொற்றொடரை அவர்கள் உருவாக்கினர்.

இந்திய மார்க்சிஸ்டுகள் "வகுப்பு நீக்கம்' என்ற புதிய கவர்ச்சிகர சொற்றொடரை உருவாக்கினர். இதனையே எப்போதும் பயன்படுத்தவும் செய்தனர். மார்க்சியத்தை கடைப்பிடிக்கவும், பிரச்சாரம் செய்யவும் விரும்புகின்ற ஆளும் சாதி உறுப்பினர்களை குறிப்பிட இந்த சொற்றொடரை அவர்கள் பயன்படுத்தினர். இதன்மூலம் வகுப்பு சார்ந்த பார்வையில் இருந்து தங்களுக்கு ஒரு தகுதியான நிலையை அளிக்கவும், உழைக்கும் வர்க்கத்தினருக்கு தலைவராக தங்களை அங்கீகரிக்கவும் முற்பட்டனர்.

பிறப்பால் பார்ப்பனர்களாக இருந்தபோதும், அவர்கள் வகுப்புநிலையிலிருந்து கீழே இறக்கப்பட்டு, உழைக்கும் வர்க்கத்திற்கு இணையான நிலையை அடைந்திருக்கின்றனர் என்று அறிவிக்க விரும்பினர். அதனால் வகுப்பு நீக்கப்பட்ட ஒரு தோழர், கம்யூனிசத்தை பிரச்சாரம் செய்ய எல்லா வித தகுதியும் கொண்டிருக்கிறார் என்றும், ஓர் உண்மையான கம்யூனிஸ்டாக பார்ப்பனிய ராஜ்ஜியத்தை தூக்கியெறிந்துவிட்டு, உழைக்கும் வர்க்கத்தினரின் ஆட்சியை உருவாக்கக்கூடிய போராட்டத்தில் பங்கெடுக்கலாம் என்றும் கூறினர்.

ஆனால், இந்த ஒப்பீடு அடிப்படையில் பகுத்தறிவுக்கு முரணானது. முதல் கேள்வி என்னவெனில், ஆளும் சாதி அல்லது வர்க்கத்தைச் சேர்ந்த ஒருவரை சாதி நீக்கம் அல்லது வகுப்பு நீக்கம் செய்ய இயலுமா? இயலும் எனில், அவர் படிநிலையில் இருப்பதிலேயே கீழ்நிலைக்கு தள்ளப்பட முடியுமா? சாதிகளுக்கு நூற்றுக்கணக்கான படிநிலைகள் இருக்கின்றன. அவர் இதன்மூலம் ஒரேயடியாக படிநிலையில் இருந்து இறங்குவதன் மூலம், ஒரு பார்ப்பனர் தீண்டத்தகாதவர் ஆகிறாரா? ஒரு பார்ப்பனர் சத்திரியர் ஆகிறாரா? வகுப்பு நீக்கம் செய்வதற்கான வழிமுறை என்ன? அதன் அடிப்படை குணங்கள் என்ன? இத்தகைய சிக்கலான கேள்விகள் எதற்கும் சரியான விடை காணாமல், ஆளும் சாதிகளின் உறுப்பினர்களை குறிப்பாக பார்ப்பனர்களை வகுப்பு நீக்கம் செய்யும் கருத்தியலை மநுவாதி கம்யூனிஸ்டுகள் ஏற்றுக் கொண்டனர்.

சாதி நீக்கம் அல்லது வகுப்பு நீக்கம் செய்யப்பட்ட ஒரு பார்ப்பனரின் குணங்கள் அல்லது தகுதிகள் என்ன? அறிவியல் பூர்வமான பொதுவுடைமை அல்லது கம்யூனிசத்தை கையாளுகையில், இவை எதற்கும் சரியான விளக்கம் இல்லை. வகுப்பு நீக்கம் செய்யும் தத்துவமானது ஆபத்தானதும் மேலோட்டமானதும் ஆகும். "உண்மை வரலாறு'க்கான அறிவியல் விளக்கம் என்பது, மக்கள் மீதோ மக்களின் வர்க்கத்தின் மீதோ கொண்ட உணர்ச்சிவயப்பட்ட அனுதாபத்தைச் சார்ந்தது அல்ல. சுரண்டக்கூடிய ஆளும் சாதி மற்றும் வர்க்கத்தின் உறுப்பினர்கள் எவ்வித துன்பங்களையும் அனுபவிக்காமல், எந்தப் போராட்டப் பாதையிலும் பயணிக்காமல் புரட்சிகர மாற்றத்திற்கான சோதனைகளை நுகராமல் - மிக எளிதாக தங்களை வகுப்பு நீக்கம் செய்து கொண்டனர் என்பது எத்தனை வேடிக்கையானது!

வெறுமனே சிகப்புச் சட்டை அணிந்து கொண்டும், மார்க்சின் பேரால் முழக்கங்களை எழுப்பிக் கொண்டும், கம்யூனிஸ்ட்டு கட்சியில் தங்கள் பெயரைப் பதிவு செய்து கொண்டும், ஆச்சாரமான பார்ப்பனர்கள் எவ்வாறு தங்களை சாதி நீக்கம் அல்லது வகுப்பு நீக்கம் செய்து கொள்கின்றனர்?

உண்மையில், மார்க்சிய எழுத்துகள் முழுவதிலும் எங்குமே வகுப்பு நீக்கம் என்ற சொற்றொடர் பற்றிய குறிப்புகள் எதுவுமே இல்லை. ஒரு வர்க்கத்தைச் சேர்ந்த ஒருவரை வகுப்பு நீக்கம் செய்யக்கூடிய எந்த வாய்ப்போ, வழிமுறையோ இல்லை. சமூகத்தில் வகுப்பு நீக்கம் செய்யப்பட்ட ஓர் உறுப்பினருக்கு இடமும் இல்லை. வகுப்புப் போராட்டம் இருக்கிறது. ஆனால், ஒரு மனிதரை வகுப்பு நீக்கம் செய்ய வழிமுறைகள் இல்லை. அதோடு சாதி நீக்கம் அல்லது சாதி ஒழிப்பு என்பது சாத்தியமற்ற ஒரு கருத்தியல் என்பது ஏற்கனவே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. போரõட்டத்தினூடாக சாதி ஒழிப்பு என்பதேகூட, ஒரு கற்பனையான கருத்தியலே!

சலுகைகள் மற்றும் உணவு வேண்டியோ, விடுதலைக்கான தேவையினாலோ சுரண்டல் அல்லது வறுமை காரணமாகவோ எழக்கூடிய கடினமான சூழலினால் புரட்சி வருவதில்லை. மறுக்கப்படுவது பற்றிய உணர்வினாலும், சுரண்டப்படுவது குறித்த தெளிவான புரிந்துணர்வினாலுமே புரட்சி உருவாகிறது. இழந்த பொருளை மீட்க மக்கள் எழுந்து போராடுகின்றனர். சுரண்டலுக்கு எதிராகப் போராடுகின்றனர். சாதிய அமைப்பில் மறுக்கப்படுவது குறித்த உணர்வும், சுரண்டலினால் எழும் சிக்கலும் முழுமையாக நீக்கப்பட்டுள்ளன. எவ்வாறு தான் இளையவர் என்பதால் தம்பி அண்ணனை எதிர்த்துப் போராடுவதில்லையோ, அவ்வாறே பார்ப்பன சாதிகளால் சுரண்டப்படுவது மற்றும் மறுக்கப்படுவது பற்றிய உணர்வையே சாதியம் பிழிந்து எடுத்துவிட்டது.

"தெய்வீக அடிமைகளான' சூத்திரர்கள், தங்களுடைய உழைப்பின் பங்கையும் தங்களது கீழான நிலையையும் ஓர் இயற்கை விதியென ஏற்றுக் கொண்டுள்ளனர். "இந்துயிசம்' எனப்படும் மதத்தின் பெயரால் அறியாமை எனும் இருளின் போதையில் வைக்கப்பட்டிருக்கும் சூத்திரர்களின் உணர்வுகள் மழுங்கடிக்கப்பட்டுள்ளன. சமூகக் கலப்பு மறுக்கப்பட்ட நிலையில், அவர்கள் வெளியுலகத்தைப் பற்றி அறிந்திராத நிலையில், சூத்திரத் தன்மைக்கு எதிராகப் போராடுவது குறித்து அவர்கள் சிந்திப்பதே இல்லை. மனித இனத்தால் சுரண்டலுக்கு உள்ளாக்கப்படும் கால் நடைகள், தாங்கள் சுரண்டப்படுவதற்கு எதிராக எப்படி புரட்சி செய்யவில்லையோ, அவ்வாறே இவர்களும் இருக்கின்றனர்.

எஸ்.கே. பிஸ்வாஸ்

தமிழில் : பூங்குழலி

Pin It