சன் நியூஸ் தொலைக்காட்சி “நிஜம்” என்ற நிகழ்ச்சியின் மூலம், ஒரு கிராமத்தை பேய்பிடித்து ஆட்டுவதாகச் செய்தி ஒளிபரப்பி, அந்தக் கிராமத்தைப் பீதியில் ஆட்படுத்தி விட்டது.

அந்தக் கிராமம் தருமபுரி மாவட்டம், அரூர் வட்டத்தை அடுத்துள்ள ஆல்ட்ராபட்டி என்ற கிராமம்.

இத்தகவலை அறிந்த திராவிட இயக்கத் தமிழர் பேரவை, சேலம் மாவட்டச் செயலாளர் தோழர் அமிர்தராஜ், பேரவைத் தோழர்கள் பார்த்திபன், பிரதாப், பிரேம்குமார் உட்பட 18 தோழர்கள், தருமபுரி திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர் திரு. தாமரைச்செல்வன் அவர்களுடன் 14. 08. 2010 அன்று அக்கிராமத்தை அடைந்தனர்.

தோழர்களிடம் கிராம மக்கள் சொல்லிய செய்தி விசித்திரமாக இருந்தது.

அக்கிராமத்தை ஒட்டிய சுடுகாட்டு வழியில் பகல் 12 மணி அளவில் சென்ற ஒருவர் மீது அரைலிட்டர் இரத்தம் தானாகக் கொட்டியதாக ஒருவர் கூறினார். அதற்குப் பேய் காரணமாம்.

ஒரு பெரியவர் ஆடு கட்டிக் கொண்டு இருக்கும்போது நெஞ்சுவலி என்று (மார டைப்பால்) இறந்து போனார். அதற்கும் பேய்தான் காரணம் என்கிறார்கள் மக்கள்.

இரண்டு குழந்தைகள் வாந்திபேதி (நோய்) எடுத்து இறந்ததாகவும், அதற்கும் பேய்தான் காரணம் என்றார்கள் அவர்கள்.

அக்கிராமத்தில் 15 வயது சிறுமியை, 29 வயது ஆணுக்குத் திருமணம் செய்துள்ளனர். அவர்கள் ஒன்றாகச் சேரும் நேரம் அச்சிறுமி மாதவிலக்காகி இருக்கிறாள். உடனே பேய்தான் இரத்தம் வரச் செய்ததாகச் சொல்லி அவர்களைப் பிரித்து விட்டார் கள். இது குழந்தை மணம் என்பதை கவனிக்க வேண்டும். குறிப்பாக அந்தச் சிறுமி பேய் வாழும் இடம் என்று சொல்லப்படும் சிறு தெருவுக்கு அடுத்துள்ள வீட்டில் வாழ்கிறாள்.

சுடுகாட்டுப் பக்கம் காலையில் இருசக்கர வண்டியில் செல்பவர்கள் அஙகே விழுந்து இறந்து விடுகிறார்கள் என்கின்றனர் மக்கள். உண்மையில் அந்தப் பாதை மிகவும் குறுகலான வளைவுப் பாதை. வேகமாக வரும் வண்டிகள் மோதி விபத்துக்குள் ளாகின்றன.

ஆனால் அந்த மக்கள் இவை எல்லாம் “பேய்” செய்கின்ற வேலை என்று சொல்லி, மாலை 6 மணிக்கே வீட்டுக் கதவுகளைப் பூடடிக் கொண்டு, அடுத்தநாள் காலை 6 மணிவரை திறப்பதே இல்லை.

இவைகளை எல்லாம் கேட்டுக்கொண்டு அச்சிறு ஊரைச் சுற்றிப் பார்த்தனர் தோழர் அமிர்தராஜ் குழுவும், நாடாளுமன்ற உறுப்பினர் திரு. தாமரைச் செல்வனும். அவர்களின் அறியாமை யைப் புரிந்து கொண்டு, பேய் என்பது கட்டுக்கதை என்பதை எடுத்துக்கூறினார்கள்.

அத்தோடு, அன்றே பேய் இருப்பதாகச் சொல்லும் இரு வீடுகளுக்கு இடையே இருக்கும் சிறு சந்து போன்ற தெருவில் இவர்கள் இரவு முழுவதும் அமர்ந்து இருந்துள்ளார்கள். மறுநாள் பேய் இருந்தால் எங்களிடம் வந்திருக்குமே, ஏன் வரவில்லை என்று இவர்கள் வினா எழுப்பி மக்களின் அறியாமையை அகற்ற விளக்கம் அளித்துள்ளார்கள்.

அக்கிராமத்தில் சாலை வசதி இல்லாததால் விபத்துகள் ஏற்படுகின்றன. அங்குள்ள ஒரே டிரான்ஸ்பார்மர் பழுதடைந்து இருந்ததால் மின்சாரம் இல்லாமல், இருட்டில் இருந்த மக்கள் சிறுசிறு சலனங்களால் பேய் பீதி அடைந்துள்ளனர். அரைலிட்டர் ரத்தம் தன்மீது கொட்டியதாகச் சொன்ன மனிதர் அதை வேண்டும் என்றே சொன்னார் என்பதும் தெரியவந்தது.

உடனே சாலை வசதி மற்றும் மின் இணைப்பை உடனடியாகச் செய்துதர தாமரைச் செல்வன் ஏற்பாடு செய்தார். இருபது இளைஞர் களுக்குப் பகுத்தறிவுக் கருத்துகளை விளக்கிச் சொல்லி, மூட நம்பிக்கைகளை அகற்ற வகுப்பு எடுத்தார் தோழர் அமிர்தராஜ். அத்துடன் பேய் இருந்தால் காட்டுங்கள் ரூபாய் 10,000 பரிசு தருகிறோம் என்றும் அறிவித்தார் அவர்.

இறுதியாக, மக்களின் அச்ச உணர்வுகளைக் களைந்த பேரவைத் தோழர்கள் “பெரியார் மண்ணில் பேய் பயமா? பேய் எங்களுக்கு ; பரிசு ரூபாய் பத்தாயிரம் உங்களுக்கு. கவலை வேண்டாம், கருஞ்சட்டைத் தோழர்கள் உங்களுடன் இருக்கி றோம்” என்று கூறி விடை பெற்றுக் கொண்டார்கள், நாடாளுமன்ற உறுப்பினர் தாமரைச் செல்வனுக்கு நன்றி கூறி.

இன்று அக்கிராம மக்கள் பேய் அச்சத்தில் இருந்து விடுபட்டு இருக்கிறார்கள் என்கிற தகவல் கிடைக்கிறது.

Pin It