அனைத்திந்திய இஞ்சின் ஓட்டுனர்கள் அசோசியேசனுடைய (ஆல் இந்தியா லோகோ ரன்னிங் ஸ்டாப் அசோசியேசன் - AILRSA) 20-ஆவது மாநாட்டில், எழுப்பப்பட்ட “இன்குலாப் ஜிந்தாபாத்”, “புரட்சி ஓங்குக”, ”தொழிலாளர் ஒற்றுமை ஓங்குக”, “லோகோ பைலட்டுகளுடைய ஒற்றுமை ஓங்குக”, ”இரயில்வே தனியார்மயப்படுத்துவதை முறியடிப்போம்” போன்ற வீரமான முழக்கங்களும், போராட்டத்திற்கான அறைகூவலும், இராஜஸ்தானில் உள்ள சித்தோர்கர் நகரெங்கும் எதிரொலித்தன.

இந்த மாநாட்டில் இரயில்வேயின் எல்லா பிராந்தியங்களைச் சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களும், அவர்களுடைய குடும்பத்தினரும் ஆர்வத்தோடு பங்கேற்றனர்.

தோழர் எல்.மணி கொடியேற்ற, போராட்டத் தியாகிகளுடைய நினைவாக “இன்குலாப் ஜிந்தாபாத்” முழக்கத்தோடு, மலர் அஞ்சலி செலுத்தி, கடலென எழுந்த செங்கொடிகளுக்கு இடையே மாநாடு துவங்கியது.

பிரதாப்கர் பால் கூட்டுறவு கூட்டமைப்பினுடைய தலைவர் திரு. பத்திரிலால் ஜட்டும், ஆல் இந்தியா கிசான் சபாவின் தலைவர் திரு.அமாராராமும் துவக்க உரை நிகழ்த்தினர். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், சிஐடியு-வின் துணைத் தலைவருமாகிய தோழர். வாசுதேவ் ஆச்சாரியா, ஏஐஎல்ஆர்எஸ்ஏ-வின் மாநாடு வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தார். இரயில்வேயில் இஞ்சின் ஓட்டுனர்கள் மிக முக்கிய பங்காற்றி வருவதை அவர் குறிப்பிட்டார். தனியார்மயம் மூலமாகவும், அன்னிய நேரடி முதலீட்டின் மூலமாகவும், இரயில்வே சீரழிக்கப்பட்டு வருகிறது. தனிப்பட்ட முதலாளிகள், பொது மக்களுடைய சொத்துக்களைத் திருடி வருகின்றனர். இதை நாம் தொடர்ந்து எதிர்க்க வேண்டும் என்றார் அவர்.

மாநாட்டில் உரையாற்றிய தொழிலாளர் ஒற்றுமை இயக்கத்தின் தோழர் மேத்யூ தனியார்மயம், தாராளமயம் மூலம் உலகமயமாக்கும் கொள்கை, உழைப்பைச் சுரண்டுவதன் மூலம் அளவற்ற இலாபத்தை முதலாளி வர்க்கம் அடைய வழி வகுத்திருக்கிறது என்றார். நாளுக்கு நாள் தொழிலாளி வர்க்கத்தின் நிலைமை மோசமடைந்து வருகிறது. உழைப்பைச் சுரண்டுவதைத் தீவிரப்படுத்த தொழிற் சட்டங்களை, இராஜஸ்தான் அரசு திருத்தியிருக்கிறது. தற்போது சட்டப்படி, முதலாளிகள் எந்தத் தொழிலாளியையும் வேலையிலிருந்து தூக்கியெறிய முடியும். இராஜஸ்தான் அரசாங்கம் செய்துள்ள இதே தொழிற் சட்ட மாற்றங்களை, நாடெங்கிலும் கொண்டுவர சட்டத் திருத்தங்கள் பாராளுமன்றத்தின் முன் வைக்கப்பட்டுள்ளன.

முதலாளி வர்க்கத்தின் இந்தக் கொள்கைகளை எதிர்த்து எல்லாத் தொழிலாளர்களும் ஒன்றுபட வேண்டும். அரசியல் அதிகாரத்தைத் தொழிலாளி வர்க்கம் தன் கைகளில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.

கடந்த இரண்டாண்டுகளில் செய்த வேலை பற்றிய அறிக்கையை பொதுச் செயலாளர் தோழர் ஏ.என்.பிரசாத் மாநாட்டின் முன்வைத்தார். இந்த மாநாட்டை ஏற்பாடு செய்ததற்காக, மேற்கு இரயில்வே பிராந்தியத்தைச் சேர்ந்த தோழர்கள் ருனாலால் ரியோக் மற்றும் பி.எல்-க்கு அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

சித்தோர்கரில் நடைபெற்ற பேரணியைப் பாராட்டிய அவர், இரயில்வே உள்கட்டமைப்பில் 100% அன்னிய நேரடி முதலீட்டிற்கு எதிரான இரயில்வே தொழிற் சங்கங்களின் போராட்டத்தில் இந்த மாநாடு ஒரு குறிப்பிடத்தக்க மையில் கல்லாக இருக்குமென நம்பிக்கை தெரிவித்தார். எதிர்க்கட்சியாக இருந்தபோது இரயில்வேயின் தனியார்மயப்படுத்தும் கொள்கையையும், அன்னிய நேரடி முதலீட்டையும் எதிர்த்த கட்சி, தற்போது இதே போக்கைத் தீவிரமாக கடைபிடித்து வருவது மிகவும் அதிர்ச்சி தருவதாக அவர் குறிப்பிட்டார். முதலாளிகளுக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்குவதற்காக, தொழிற் சட்ட சீர்திருத்தம் என்ற பெயரில் தொழிலாளர் விரோத கொள்கைகள் கொண்டு வரப்படுகின்றன. அரசாங்கம்தான் மாறியிருக்கிறது. ஆனால் அதே கொள்கைகள் மாற்றமின்றி தொடர்கின்றன. விலைவாசி உயர்வானாலும், ஊழல் அல்லது கருப்புப் பணமானாலும், எதிலும் மாற்றம் எதுவும் ஏற்படவில்லை. தங்களுடைய உரிமைகளுக்காக தொழிலாளர்கள் முன்வந்து போராடுவது ஒரு நல்ல அறிகுறி என்று அவர் குறிப்பிட்டார்.

அமைப்பு பற்றிய அறிக்கை

தோழர் ஏ.என்.பிரசாத் அமைப்பு பற்றிய அறிக்கையை முன்வைத்தார். உள்கட்டமைப்பு பற்றி பின்பற்றப்பட்டுவரும் கொள்கைகள் காரணமாக, நிலைமைகள் இன்னும் மோசமாக ஆகப்போவதை அவர் சுட்டிக் காட்டினார். உயர்மட்ட பாதுகாப்பு மேற்பார்வைக் குழுவின் பரிந்துரைகளுக்கு மாறாக, உள்கட்டமைப்பை விரிவுபடுத்தாமல், இரயில்கள் மற்றும் இரயில்வே சேவைகளை பொறுப்பற்ற முறையில் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. உள்கட்டமைப்பில் உள்ள குறைபாடுகளைக் களையாமல் இருப்பதால், நிகழும் விபத்துக்களுக்கு இஞ்சின் ஓட்டுனர்களை பலியாடுகளாக ஆக்கி வருகிறார்கள். பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு குறுக்குவழிகள் எடுக்கப்படுகின்றன. இவற்றின் மூலம், விபத்துக்கள் நிகழக்கூடிய ஒரு மோசமான சூழ்நிலை உருவாக்கப்பட்டு வருகிறது.

100% அன்னிய நேரடி முதலீட்டுத் திட்டத்தின் கீழ் அன்னிய முதலீடுகள் வருவதற்கு முன்னரே கூட, மிகவும் முக்கியமான பணிகள் ஒப்பந்த முறையில் செய்ய கொடுக்கப்பட்டிருப்பதால், எதிர்காலம் மேலும் மோசமடையும் என்பதை அவர் சுட்டிக்காட்டினார். இந்தப் போக்கு தொடருமானால், இரயில்வேயின் எல்லா வேலைகளுமே விரைவில் ஒப்பந்த முறையிலேயே நடைபெறும்.

இரயில்வே பயணச்சீட்டுப் முன்பதிவுகளை முழுமையாகவே ஐஆர்சிடிசியிடம் கொடுத்துவிடவும், எல்லா துறைகளிலும் ஓய்வு பெற்ற தொழிலாளர்களைக் மிகவும் குறைந்த ஊதியத்தில் வேலைக்கு வைக்கவும், எல்லா உற்பத்தியும் வெளியே கொடுத்துச் செய்யவும், அது போலவே சில இரயில்களின் இயக்கத்தை ஒப்பந்தக்காரர்களிடம் கொடுக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பயண மற்றும் சரக்குக் கட்டணங்களைத் தீர்மானிப்பதில் தற்போது கூட அரசாங்கத்திற்கு மிகக் குறைவான அதிகாரம்தான் இருக்கிறது. அது மென்மேலும் தனிப்பட்ட மேற்பார்வைக் குழுக்களால் நிர்வகிக்கப்பட்டு பெட்ரோல், டீசல் விலைகளுக்கு ஏற்ப உயர்த்தப்படும்.  

தன்னுடைய உரையின் இறுதியில், ஒரு வலிவான அமைப்பு மட்டுமே, இஞ்சின் ஓட்டுனர்களை இப்போது காப்பாற்ற முடியும் என்றார். நம்முடைய தோழர்களிடையே தொழிற் சங்க வகுப்பை நடத்த வேண்டிய ஒரு தேவை இருக்கிறது. நம்மிடம் ஒரு வலுவான அமைப்பு இருக்குமானால், வருகின்ற சூழ்நிலைகளை நம்மால் எதிர்கொள்ள முடியும். இரயில்வே தொழிலாளர்களையும், பயணிகளையும், வேலையற்ற இளைஞர்களையும், மத்திய அரசின் மற்றும் பிற ஊழியர்களையும் அணிதிரட்ட நாம் செயலூக்கத்தை மேற்கொள்ள வேண்டும்.

முதல் நாள் மாநாட்டின் பிற்பகலில் சித்தோர்கர் நகரில் ஒரு மாபெரும் பேரணி நடைபெற்றது. பேரணியில் ஆயிரக்கணக்கான இஞ்சின் ஓட்டுனர்களும் அவர்களுடைய குடும்பத்தினரும் மிகுந்த ஆர்வத்தோடு பங்கேற்றனர். பேரணியில் காணுமிடங்களிலெல்லாம் செங்கொடிகளாக இருந்தன. சித்தோர்கர் நகரமெங்கும் பேரணி சென்றது. “இரயில்வேயிலிருந்து அன்னிய நேரடி முதலீட்டை நீக்கு”, ”காலியுள்ள எல்லா இடங்களையும் நிரப்ப இஞ்சன் ஓட்டுனர்களை வேலைக்கு எடு”, ’’இஞ்சின் ஓட்டுனர்களுக்கு வேலை நேரத்தை முறைப்படுத்து” என்பன போன்ற முழக்கங்களை பேரணி முழுவதும் அவர்கள் எழுப்பினர்.

மறுநாள் நடைபெற்ற மாநாட்டு நிகழ்ச்சிகளில் எல்லா உறுப்பினர்களும் ஆர்வத்தோடு பங்கேற்று கருத்துக்களைக் கூறினர். சங்க நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தோழர் எம்.என்.பிரசாத் பொதுச் செயலாளராக போட்டியின்றி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். தோழர் எம்.மோனி, செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய செயற்குழு அமைப்பு வேலைகளை விரிவுபடுத்துவோமென உறுதி கூறினர்.

மாநாட்டில், ஆல் இந்தியா கார்டுகள் கவுன்சிலினுடைய தலைவரும், சித்தரஞ்சன் லோகோமோட்டிவ் தொழிற்சாலைத் தோழர் நிர்மல் முக்கர்ஜியும், சிஐடியு-வின் இராஜஸ்தான் மாநிலத் தலைவர் தோழர், ஆர்.கே.,சுக்லா ஆகியோரும் பிறரும் உரையாற்றினர்.

மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதற்காக ஏஐஎல்ஆர்எஸ்ஏ-ஐ தொழிலாளர் ஒற்றுமைக் குரல் பாராட்டுகிறது.