இந்திய தொழிலாளர் மாநாட்டின் 45 வது அமர்வு

17 மே, 2013 அன்று புது தில்லியில் நடைபெற்ற இந்திய தொழிலாளர் மாநாட்டின் 45-வது அமர்வைத் தொடங்கி வைத்துப் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், “தொழிற்சங்கங்கள் அண்மையில் நடத்திய இரண்டு நாள் வேலைநிறுத்தத்தில் எழுப்பிய பல்வேறு பிரச்சனைகள் தொழிலாளர்களின் நலன்களை மட்டுமே மையமாக கொண்டவையல்ல, அவை பெருந்திரளான மக்களின் நலன்களோடும் தொடர்பானது தான். இதில் எந்தவித கருத்து வேறுபாடும் இருக்க முடியாத கோரிக்கைகளும் உண்டு. எடுத்துக்காட்டாக, பணவீக்கத்தை கட்டுப்படுத்தவும், வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், தொழிலாளர் சட்டங்களை நடைமுறைப்படுத்தவும் தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பன சரியான கோரிக்கைகளாகும். இருந்தாலும், இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற சிறந்த வழி எது என்பதில் கருத்து வேறுபாடுகள் இருக்க முடியும். இது சம்பந்தமாக தொழிற்சங்கங்களுடன் ஆக்கப்பூர்வமாக ஈடுபட நாங்கள் தயாராக உள்ளோம்.” என்று கூறினார்.

அரசாங்கத்திற்கு தொழிலாளர் கொள்கைகளை பரிந்துரை செய்யுமாறு இந்திய தொழிலாளர் மாநாட்டிற்கு பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இது ஒரு "முத்தரப்பு" அமைப்பு என்று அழைக்கப்படுகிறது. முதலாளிகளின் முக்கிய அமைப்புகளின் பிரதிநிதிகளும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட மத்திய தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளும், அரசாங்கத்தின் பல்வேறு அமைச்சரகங்களின் பிரதிநிதிகளும் இதில் உள்ளனர். அரசாங்கமானது, முதலாளி வர்க்கம் மற்றும் தொழிலாளி வர்க்கம் உட்பட்ட அனைத்து வகுப்புகளையும் பிரதிபலிப்பதாக தொழிலாளி வர்க்கம் இடையேயும் மக்களிடையேயும் தவறான பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. ஆனால் உண்மையில், இந்த அரசாங்கம் முதலாளித்துவ வர்க்கத்தின் அரசாங்கமாக,  கண்டிப்பாக அந்த வர்க்கத்தின் விருப்பத்தை மட்டுமே செயல்படுத்துகிறது.

அனைத்திந்திய வேலைநிறுத்தங்களின் முக்கிய கோரிக்கைகளின் அடிப்படையிலோ, தொழிற்சங்கங்கள் நடத்திய பிற நடவடிக்கைகளை ஒட்டியோ, 45-ஆவது அமர்வில் எந்தவித உறுதியான முடிவுகளும் வரவில்லை. தொழிற்சங்கங்களின் முக்கிய கோரிக்கைகள் எதுவும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. தங்கள் நலன்களுக்கு உகந்ததாக இந்திய தொழிலாளர் மாநாடு எந்தவித உறுதியான நடவடிக்கைகளையும் எடுக்கும் என்று எதிர்பார்ப்பது பயனற்றது என்று தொழிலாளர்களுக்கு இது மீண்டும் ஒருமுறை காட்டுகிறது.

நாம் பிரதமரின் தொடக்க உரையை உற்று நோக்கினால் அவர் பொய் பேசுகிறார் என்று கண்டுகொள்ள முடியும். பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதிலும், வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்பதிலும், தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக தொழிலாளர் சட்டங்களை தீவிரமாக செயல்படுத்த வேண்டும் என்பனவற்றில் அரசாங்கத்திற்கும் தொழிலாளி வர்க்கத்திற்கும் இடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்று கூறுகிறார். இது உண்மை என்றால், பெருவாரியான தொழிலாளர்களும் உழைக்கும் மக்களுக்குமான நிலைமைகள் மோசமடைந்து வரும் அதே நேரத்தில் பெரிய முதலாளிகளின் செல்வம் அதிவேகமாக உயர்ந்து வருவது ஏன், என்று நாம் வியக்க வேண்டுயுள்ளது.

பணவீக்கம்  

பணவீக்கம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பதில் முதலாளிகளும் தொழிலாளர்களும் ஒப்புதல் கொண்டுள்ளனர் என்று நாம் நம்ப வேண்டும் என்று பிரதமர் விரும்புகிறார். உண்மையில், இரண்டு வர்க்கமும் இரண்டு எதிரெதிர் பக்கங்களில் இருந்து இந்த பிரச்சனையைப் பார்க்கிறார்கள்.

பொதுவாக பொருட்களின் விலை உயர்ந்தால் அது தொழிலாளர்களை பாதித்து முதலாளி வர்க்கத்திற்கு நன்மையாகிறது. தொழிலாளர்கள் தங்கள் வருமானத்தின் உண்மையான மதிப்பின் ஒரு பகுதியை இழக்கின்றனர். அவர்கள் இழந்தது முதலாளி வர்க்கத்தின் லாபத்தில் சேர்கிறது. அதே நேரத்தில், பெரிய முதலாளிகள் இந்தியாவிலுள்ள பணவீக்கம் மற்ற முதலாளித்துவ நாடுகளில் இருப்பதைவிட மிக அதிகமாக இருப்பதை விரும்பவில்லை. ஏனெனில், அப்படி இருந்தால் சர்வதேச வர்த்தகத்தில் மற்ற நாணயங்களுடன் ஒப்பிடுகையில் ரூபாயின் முன்னுரிமை குறைந்துவிடும்.

தொழிலாளி வர்க்கம், வீட்டிற்குத் தேவையான அனைத்து அத்தியாவசிய பொருட்களையும் மாதத்திற்கு வாங்கும் சக்தி கொண்டதாக இருக்க விரும்புகிறது. அதற்கு அர்த்தம் அதனுடைய விலைகள் தற்போதைய நிலையில் இருந்து குறைய வேண்டும், அதாவது எதிர்மறையான பணவீக்க விகிதம் என்ற நிலை வரவேண்டும். அல்லது, தொழிலாளி வர்க்கத்தின் வாழ்க்கை தரத்தை செழிப்பாக்கவும் பாதுகாக்கவும், வருமானங்கள் அதிக விலையை ஈடுகட்டும் விதமாக வேகமாக உயர வேண்டும்.

பெருந்திரளான மக்கள் நுகரும், அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறையாமல் இருக்க வேண்டுமென முதலாளி வர்க்கம் விரும்புகிறது. ஏனெனில் தொழிலாளி வர்க்கத்திடமிருந்தும் மக்களிடமிருந்தும் மேலும் கரப்பதற்கு இது இன்னும் ஒரு வழியாகும். எல்லோருக்குமான பொது விநியோக அமைப்பிற்கான கோரலுக்கும் இந்திய மற்றும் வெளிநாட்டு தனியார் ஏகபோகங்களுக்கு வர்த்தகத்தையும் விநியோகத்தையும் மேலும் திறந்து விடுவதற்கான அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கும் இடையே, உடன்பாட்டிற்கு பதிலாக, கடுமையான மோதல் உள்ளது.

உள்நாட்டு மொத்த வர்த்தகத்தையும் வெளிநாட்டு வர்த்தகத்தையும் தேசியமயமாக்கி சமூகமயமாக்கப்பட்டால், லாபமீட்டும் தனியாரை படிப்படியாக வர்த்தக துறையில் இருந்து வெளியேற்றப்பட்டால், அனைத்து அத்தியாவசிய பொருட்களையும் அனைத்து உழைக்கும் குடும்பங்களுக்கு கட்டுப்படியான விலையில் கிடைக்க வைக்க முடியும். சரக்கு வாங்குதலை வெளிப்படையாக நிர்வாகித்தால், அது ஒரு பொது வினியோக அமைப்பு முறைக்கு ஆதரவளிக்கும். அது, பெருவாரியான மக்கள் நுகரும் அனைத்து பொருட்களையும் பொதுக் கடைகள் மூலம் கிடைக்க வகை செய்யும்.

பிரதமர் மன்மோகன் சிங்கும் அவர் தலைமையில் நடத்தப்படும் அரசும் இதற்கு நேர் எதிரானதை செய்துவருகிறது. அது, இந்திய மற்றும் வெளிநாட்டு தனியார் ஏகபோகங்களை மொத்த மற்றும் சில்லறை வர்த்தகத்தை எடுத்துக்கொள்ள ஊக்குவிக்கிறது. இது தனியார் முதலாளித்துவ ஏகபோகங்களின் உலகளாவிய விநியோக சங்கிலிகளோடு அவற்றை ஒருங்கிணைக்கிறது. இவ்வாறு அரசாங்கம் முதலாளிகளின் நலன்களுக்கு ஆதரவாகவும், தொழிலாளி வர்க்கம் மற்றும் உழைக்கும் பெரும்பான்மை மக்களுக்கு எதிராகவும் செயல்பட்டு வருகிறது.

வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் உரிமைகள்  

2012, பிப்ரவரி 14 அன்று, இந்திய தொழிலாளர் மாநாட்டின் 44-வது அமர்வில் உரை நிகழ்த்திய பிரதமர் மன்மோகன் சிங், இன்றுள்ள கொள்கைகள் "தேவைக்கதிகமாக" "தற்போது வேலையில் உள்ளவர்களின்" நலன்களை பாதுகாத்து வருகிறது என்றும் அது புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க தடையாக இருப்பதாகவும் கூறினார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். தொழிலாளர் உரிமைகளின் பாதுகாப்பைக் குறைக்க சட்டங்களில் சீர்திருத்தங்களை அறிமுகம் செய்த மாநில அரசாங்கங்களை அவர் பாராட்டினார். அப்படிப்பட்ட சீர்திருத்தங்கள் மத்திய சட்டங்களிலும் தேவை என்று அவர் வாதிட்டார்.

தொழிலாளர்கள் தங்களை மேலும் தீவிர சுரண்டலுக்கு அர்ப்பணித்து, அதே வேலையை குறைந்த ஊதியத்திற்கு செய்தும், அதிகப்படியான வேலையை அதே ஊதியத்திற்கு செய்வதன் மூலம், உலகின் அனைத்து பகுதிகளிலிருந்தும் முதலாளிகள் இந்தியாவில் முதலீடு செய்ய ஆர்வம் கொள்ளச் செய்வதுதான் மேலும் வேலை வாய்ப்புகளை உருவாக்க வழி என்கிறார் நமது பிரதமர்.

எல்லோருக்கும் வளமையும் பாதுகாப்பும் வழங்குமாறு பொருளாதாரத்தை மாற்றி அமைத்தால் இலட்சக்கணக்கான மக்கள் தற்போது வாங்க முடியாத பல நுகர்வுப் பொருட்களின் உற்பத்தியை விரிவாக்க ஒரு பெரிய தேவை ஏற்படும். மேலும் அதிகமான உணவு, ஆடை, கட்டுப்படியான விலைகளில் வீடுகள், வீட்டு உபகரணங்கள் போன்றவற்றின் உற்பத்தியில் விரைவான பெருக்கம் இருக்கும். இதனால் இரும்பு, சிமெண்ட், எரிசக்தி, மற்றும் நீண்டகால சொத்துக்களான இயந்திரங்கள் கருவிகள் உட்பட்ட பல உற்பத்தி சாதனங்களின் தேவையும் அதிகரிக்கும். அனைவருடைய தேவைகளையும் நிறைவேற்றுமாறு பொருளாதாரத்தை மாற்றி அமைத்தால், வேலை வாய்ப்புகளைப் பெருக்கி அனைவருக்கும் வேலை வாய்ப்பை உறுதி செய்வது சாத்தியமே.

தடையற்ற சந்தை சக்திகளுக்கு அனைத்தையும் விட்டுவிடும் தற்போதைய போக்கைத் உயர்த்திப் பிடிப்பவர்களில் ஒருவர், பிரதமர் மன்மோகன் சிங். அதில், பல்வேறு துறைகளில் வளர்ச்சி விகிதமானது, முதலாளித்துவ இலாப அடையும் விகிதத்தாலும் தனியார் லாபமீட்டும் நிறுவனங்களும் நிதி நிறுவனங்களும் எடுக்கும் முதலீடு தொடர்பான முடிவுகளாலும் நிர்ணயிக்கப்படும் என்று அர்த்தம். இப்படிப்பட்ட முறையற்ற போக்கு, தவிர்க்க முடியாமல் ஒரு பகுதி தொழிலாளர்கள் மீது அதிகமான வேலைப்பளுவையும் மற்றொரு பகுதி தொழிலாளர்கள் வேலையே இல்லாத நிலைக்கும் தள்ளுகிறது.

முதலாளிகளுக்கும், தொழிலாளர்களுக்கும், மத்திய அரசுக்கும் இடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்று கூறுவது உண்மையில் ஒரு கொடூரமான பொய்.

உண்மையில் நம் இளம் தொழிலாளர்களுக்கு வேலை உரிமையும் சமூகப் பாதுகாப்பும் உத்தரவாதமளிக்கப்படவில்லை. 2002-ல் இருந்து மிக வேகமாக வளர்ந்துள்ள துறைகளான வாகனங்கள் மற்றும் வாகன உதிரிபாகங்கள், மின்னணு பொருட்கள், கைபேசி சேவைகள், செய்தி ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு உள்ளிட்ட தகவல் தொழில் நுட்ப மற்றும் தகவல் தொழில் நுட்ப சேவைத் துறைகளில் உள்ள தொழிலாளர்கள் வழக்கமாகவே நீண்ட நேரம் வேலையில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். அவர்களுக்கு வேலைப் பாதுகாப்பும் இல்லை. அவர்களில் பலர் தமது உரிமைகளுக்காக எந்த சட்ட பாதுகாப்பும் இல்லாமல், தொழிற்சங்கங்கள் அமைக்கக் கூட அடிப்படை உரிமை இல்லாமல் இருக்கிறார்கள்.

"தொழிலாளர்களின் உரிமைகளுக்காக போராடும் தொழிற்சங்கங்கள் முதலீட்டு சூழலுக்கு கெட்டவை". இந்த மந்திரத்தை வைத்து தான் முதலாளி வர்க்கம், ஒரு தொழிலாளி சட்ட பூர்வமாக எதைத் தன்னுடைய உரிமையாக கோரலாம் என்ற அடிப்படையைக் குறைக்க பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஒப்பந்த தொழிலாளர் முறை வழக்கமாகவே ஆகிவிட்டது. தனியார் நிறுவனங்களில் மட்டுமின்றி, அரசு துறையிலும் வேலை செய்யும் தொழிலாளர்களில் பாதி பேர் ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.

தொழிலாளர்களுக்கு எவ்வித பாதுகாப்பும் இன்றி, தங்கள் விருப்பம் போல தொழிலாளர்களைப் பணியமர்த்தவோ பணியிலிருந்து நீக்கவோ முடியும் என்பதற்காக, ஒப்பந்த தொழிலாளர் முறையை முழுமையாக சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்று முதலாளி வர்க்கம் கோரி வருகிறது. கோடிக்கணக்கான தொழிலாளிகள் வேலை செய்துவரும் "சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள்" என்று கூறப்படும் பொருளாதாரத் துறைகளை குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின் வரையறைக்கு வெளியே வைக்கப்பட வேண்டும் என்று பெரிய மூலதனத்தின் சங்கங்கள் கோருகின்றனர். வேலை நேர வரம்பை ஒரு வாரத்திற்கு 48 மணி என்பதிலிருந்து 60 மணி நேரமாக அதிகரிக்க வேண்டும் என்றும் தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளை பாதுகாப்பதற்காக தொழிற்சங்கங்களை அமைக்கும் உரிமையைப் பிடுங்க வேண்டும் என்றும் பெரு முதலாளிகள் கோருகின்றனர்.

குறைந்தபட்ச ஊதியம்  

இந்த இந்தியத் தொழிலாளர் மாநாட்டில் பிரதமர் கூறினார்: "தொழிற்சங்கங்களினால் எழுப்பப்பட்ட வேறு சில கோரிக்கைகள் ஏற்கனவே அரசின் கருத்தில் ஒரு மேம்பட்ட நிலையில் உள்ளன. தேசிய குறைந்தபட்ச ஊதியத்தை முடிவு செய்வதும், ஊழியர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.1000 மாதத்திற்கு ஒதுக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்டவை அவை."

குறைந்தபட்சம் என்பதற்கு அர்த்தம் "குறைந்த சாத்தியப்பட்ட அளவு" என்பதாகும். ஊதியமானது, வேலை செய்யும் குடும்பங்கள் மனித வாழ்கை நடத்துவதற்குத் தேவையானது என்ற அடிப்படையில், நாட்டில் எந்த பகுதியில் வேலை செய்தாலும் எந்த தொழிலாளிக்கும் குறைந்தபட்ச ஊதியமாக மாதம் ரூ 10,000-த்தை நிர்ணயிக்க வேண்டும் என்றும் அந்த ஊதியம் நுகர்வோர் விலை குறியீட்டோடு இணைக்கப்பட வேண்டும் என்றும் தொழிற்சங்கங்கள் கோரியுள்ளனர். இன்று, தொழிலாளர்களுக்கு சட்டப்படியான குறைந்தபட்ச ஊதியம் வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு மட்டங்களில் உள்ளது. மேலும் அது கோரப்பட்டதிலிருந்து மிகக் குறைந்த அளவிலுள்ளது, அதுவும் எந்தவொரு குறியீட்டோடும் இணைக்கப்படவில்லை.

உண்மையில் முழு நாட்டிற்கும் ஒரு குறைந்த பட்ச உதியம் வைக்கப்பட வேண்டும். அது மாதத்திற்கு ரூ.10,000-க்கும் குறைவாக இருக்க கூடாது மேலும் அது நுகர்வோர் விலை குறியீட்டோடு இணைக்கப்பட்டிருக்க வேண்டும். இதைத்தான் வாழ்க்கையின் உண்மையான நிலைமைகள் நமக்கு சொல்கின்றன. பிரதமரும் அரசாங்கமும் ஒரு தேசிய குறைந்தபட்ச ஊதியத்தைப் பற்றி, எவ்வளவு என்றோ எப்படி கணக்கிட போகிறார்கள் என்றோ குறிப்பிடாமல், பேசிக்கொண்டு வருகிறார்கள். அரசாங்கம் வெளிப்படையாக தொழிற்சங்கங்களின் கோரிக்கையை இதிலும் எதிர்க்கிறது.

தொழிலாளர்களை அடிமட்டத்தில் வைத்து பெரிய முதலாளிகள் உலக தரத்தை எட்டுவதற்கு உதவுவதில் மத்திய அரசு உறுதியாக இருக்கிறது. உழைக்கும் மக்களுக்கு எல்லாவித வளமையையும் மறுத்து முதலாளிகளுக்கு அதிகபட்ச வளமையை வழங்குவது – இதுவே மன்மோகன் சிங்கிற்கும் பெரு முதலாளிகளின் மற்ற பிரதிநிதிகளுக்கும் குறிக்கோள்.

ஓய்வூதியம்  

ஊழியர் ஓய்வூதிய திட்டம் (இபிஎஸ்) ஒரு மாதத்திற்கு ரூ. 6,500-க்கும் குறைவாக சம்பாதிக்கும் தொழிலாளர்களுக்கு மட்டுமே உள்ளது. தொழிலாளர்கள் உருவாக்கும் மதிப்பில் ஒரு பகுதியை ஒதுக்கி வைத்து, ஓய்வு பெற்ற பிறகு அவர்களுக்கு அதை ஓய்வூதியமாக வழங்குவது எல்லோருக்கும் கொடுக்கப்பட வேண்டிய உரிமை என்று தொழிலாளர்களின் பிரதிநிதிகள் வாதிடுகிறார்கள். அது ஊதிய அளவிற்கு அப்பாற்பட்டு, அனைத்து தொழிலாளர்களுக்கும் உரியதாகும். நுகர்வோர் விலையில் இரட்டை இலக்கு பணவீக்கம் இருப்பதனால், ஒரு வருடத்திற்கு ஒருமுறையாவது அல்லது விலை குறியீட்டின் அசைவுகளை அடிப்படையாக கொண்டு அடிக்கடியாவது ஓய்வூதியத்தை சரிசெய்ய வேண்டியது அவசியம். முதலாளிகள் மற்றும் மத்திய அரசின் பிரதிநிதிகளும் இந்திய தொழிலாளர் மாநாட்டில் நடந்த விவாதங்களில் இந்த நியாயமான கோரிக்கையை நிராகரித்துவிட்டனர். அதற்கு பதிலாக, பிரதமர் குறைந்தபட்ச ஓய்வூதியமாக மாதத்திற்கு ரூ 1000 என்று அறிவித்தார், இது ஒரு கஞ்சத்தனமாக தொகையாகும். காலப்போக்கில், அதன் வாங்கும் சக்தி மேலும் சுருங்கிவிடும்.

முக்கிய பிரச்சினைகள் கைவிடப்பட்டன  

இறுதியாக, "மூன்றாவது கட்டு கோரிக்கைகளுக்கு முத்தரப்பு பேச்சுவார்த்தை உட்பட தொழிற்சங்க தலைவர்களிடம் மேலும் பேச்சுவார்த்தைகள் தேவைப்படுகிறது. தொழிற்சங்கங்கள் எழுப்பியள்ள கோரிக்கைகளை முழுவதுமாக ஆராய நிதி அமைச்சரின் கீழ் அமைச்சர்களின் குழு அமைக்கப்பட்டுள்ளது..." என்று பிரதமர் பேசினார். அமைச்சர்கள் குழு 23 மே, 2013 அன்று தொழிற்சங்க தலைவர்களை சந்தித்து பேசியது, ஆனால் தொழிலாளர்கள் எழுப்பிய கோரிக்கைகளுக்கு எந்த ஒரு முடிவுக்கும் வரவில்லை.

"மூன்றாவது கட்டு கோரிக்கைகள்" என்றால் என்ன? அது, தங்களது வாழ்வாதாரத்தையும் உரிமைகளையும் பாதுகாப்பதற்காக தொழிலாளி வர்க்கம் எழுப்பி வந்த எல்லா கோரிக்கைகளாகும். நிரந்தர  அல்லது தொடரும் தன்மை கொண்ட வேலைகளில் ஒப்பந்த தொழிலாளர் முறையை ஒழித்தல், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு நிரந்தர தொழிலாளர்களுக்கு இணையான ஊதியங்களும் சலுகைகளும் தரவேண்டும், தனியார் மயப்படுத்துவதை உடனடியாக முடிவுக்கு கொண்டு வரவேண்டும், போனஸ் மற்றும் வருங்கால வைப்பு நிதி மீதான உச்சவரம்பு நீக்கம், எல்லோருக்கும் சமூக பாதுகாப்பு போன்றவை இதில் அடக்கம். எதிர்பார்த்தபடி, அமைச்சர்கள் குழு மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகளின் கூட்டத்தில் இந்த கோரிக்கைகள் பற்றி எந்த முடிவுக்கும் வரவில்லை.

முடிவுரை  

முதலாளிகளின் நலன்களையும் தொழிலாளி வர்க்கத்தின் நலன்களையும் சமரசப்படுத்த முடியும் என்றும், அரசாங்கம் ஒரு நடுநிலையான அங்கம் என்றும், அது இந்த இரு வர்க்கங்களின் நலன்களையும் சமரசம் செய்து வைக்கும் என்றும் மாயைகளை உருவாக்குவதே இந்திய தொழிலாளர் மாநாடு போன்ற முத்தரப்பு அமைப்புகளின் நோக்கமாகும். ஆனால் இதில் எதுவுமே உண்மை இல்லை.

இந்திய தொழிலாளர் மாநாட்டின் 45-வது அமர்வின் நிகழ்ச்சி நிரலை தொழிலாளி வர்க்கம் தீர்மானிக்கவில்லை. அது தொழிலாளர்கள் எழுப்பிய கோரிக்கைகளையும் விவாதிக்கவில்லை. மாறாக நிகழ்ச்சி நிரலை முதலாளித்துவ வர்க்கத்தின் சார்பில் அரசாங்கம் தீர்மானித்திருந்தது. அது தொழிலாளர்களின் கவலைகளுக்கு கொஞ்சமும் செவிசாய்க்கவில்லை.

அரசாங்கம் வர்க்கங்களுக்கு அப்பாற்பட்டு உள்ளது என்றோ அது எல்லா வர்க்கத்தின் நலன்களையும் பாதுகாக்கும் என்றோ தொழிலாளர்கள் எந்த மாயையிலும் இருக்கக் கூடாது. சமுதாயம் எதிரெதிரான வர்க்கங்களாகப் பிரிந்திருக்கையில் அது சாத்தியமில்லை. ஒன்று முதலாளி வர்க்கம் அதிகாரத்தில் இருக்கும் அல்லது தொழிலாளி வர்க்கம் அதிகாரத்தில் இருக்கும். தொழிலாளி வர்க்கம் மற்றும் உழைக்கும் மக்களின் அரசாங்கம் மட்டும் தான் தொழிலாளர்களின் நலன்களை பாதுகாப்பது மட்டுமின்றி சமுதாயத்தின் பொது நலன்களையும் காக்க முடியும். ஏனென்றால், தொழிலாளி வர்க்கத்தின் நலன்கள் சமுதாயத்தின் பொது நலன்களோடு முரண்பட்டவையல்ல.

தங்கள் வாழ்வாதாரத்தையும் உரிமைகளையும் சமுதாயத்தின் பொது நலன்களையும் பாதுகாப்பதற்கான ஒரே வழி தொழிலாளர்கள், முதலாளிகளையும் அவர்களுடைய அரசாங்கத்தையும் எதிர்த்து உறுதியாக சமரசமற்று போராடுவதுதான். தொழிலாளிகளுக்கு எதிரான, விவசாயிகளுக்கு எதிரான, தேசத்திற்கு எதிரான திட்டமான தாராளமயமாக்கல் மற்றும் தனியார்மயமாக்கல் மூலம் உலகமயமாக்கும் திட்டத்தோடு சமரசமே இருக்க முடியாது.

கம்யூனிஸ்டுகளாகிய நாம், தொழிலாளி வர்க்கத்தின் உடனடி கோரிக்கைகளுக்கான போராட்டத்தைத் தலைமை தாங்கி நடத்திச் செல்கையில் நம்முடைய நோக்கத்தில் மிகத் தெளிவாக இருக்க வேண்டும். உழைக்கும் விவசாயிகளோடு கூட்டு சேர்ந்து தொழிலாளி வர்க்கத்தின் ஆட்சியை நிறுவுவதுதான் அந்த நோக்கமாகும். அப்படி செய்தால் மட்டுமே மக்களுடைய தேவைகளை நிறைவேற்றிட, பொருளாதாரத்தை நாம் மாற்றி அமைக்க முடியும்.

அனைத்து கம்யூனிஸ்டுகளும் தொழிலாளி வர்க்கத்தின் செயல் வீரர்களும் வாழ்வாதாரத்தையும் உரிமைகளையும் பாதுகாக்க உறுதியான சமரசமில்லாத போராட்டத்தை தொடுக்கவும், முதலாளி வர்க்கத்தின் ஆட்சிக்கு பதிலாக தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் ஆட்சியை நிறுவும் நோக்கத்தை ஒட்டி ஒன்றுபடவும் இன்றைய நிலைமைகள் கோருகின்றன.  

போராடும் தொழிலாளர்களின் உடனடியான கோரிக்கைகள் - 

 

1. விலை உயர்வை கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கைகள்

2. வேலை வாய்ப்புகளை அதிகரிக்க உறுதியான நடவடிக்கைகள்

3. தொழிலாளர் சட்டங்களை உறுதியோடு அமலாக்கு

4. அணிதிரட்டப்பட்ட மற்றும் முறைசாரா தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு. தேசிய சமூக பாதுகாப்பு நிதியம் உருவாக்க வேண்டும்.

5. மத்திய மற்றும் மாநில பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதை நிறுத்த வேண்டும்.

6. நிரந்தர  அல்லது தொடரும் தன்மை கொண்ட வேலைகளில் ஒப்பந்த தொழிலாளர் முறையை ஒழித்தல், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு நிரந்தர தொழிலாளர்களுக்கு இணையாக ஊதியங்களும் சலுகைகளும் தரவேண்டும்

7. விலைவாசி குறியீட்டுடன் இணைத்து ரூ.10,000 க்கும் குறையாமல் ஊதியத்தை நிர்ணயித்து குறைந்தபட்ச ஊதிய சட்ட திருத்தத்தை செய்

8. போனஸ், வருங்கால வைப்பு நிதிக்கான வரம்புகளை நீக்கு. பணிக்கொடை தொகையை உயர்த்து.

9. அனைவருக்கும் உத்திரவாதமான ஓய்வூதியம்

10. 45 நாட்களுக்குள் தொழிற்சங்கங்களைக் கட்டாயமாகப் பதிவு செய்தல். சர்வதேச தொழிலாளர் நிறுவன (ஐ.எல்.ஓ) உடன்படிக்கை எண்கள் 87 மற்றும் 98-ஐ உடனடியாக ஏற்று அங்கீகரிக்க வேண்டும்