lpf copyசென்னை அரசினர் விருந்தினர் மாளிகை முன்னர் ஏப்ரல் 13 அன்று பெருந்திரள் தொழிலாளர்கள் ஆர்பாட்டம் நடைபெற்றது. சிறையில் உள்ள எல்லா மாருதி மற்றும் பிரிகால் தொழிலாளர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும், தமிழக உழவர்களுடைய நியாயமான கோரிக்கைகளை நிறைவு செய்ய வேண்டும் என்றும் கோரி நடந்த இந்த ஆர்பாட்டத்தை ஏஐடியுசி, எல்பிஎப், ஏஐசிசிடியு, டபிள்யுபிடியுசி, ஏஐயுடியுசி, சிஐடியு மற்றும் எச்எம்எஸ் ஆகிய மத்திய தொழிற்சங்கங்கள் கூட்டாக ஏற்பாடு செய்திருந்தன.

பெரும் தொழிற்சாலைகள், வங்கிகள், அரசு போக்குவரத்து, வாகன உற்பத்தித் தொழிற்சாலைகள் ஆகியவற்றைச் சேர்ந்த தொழிற் சங்கங்களும், தொழிலாளர் ஒற்றுமை இயக்கமும் ஆர்பாட்டத்தில் பங்கேற்றன. பல தொழிற்சாலைகள், பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் சேவைகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் பெரும் எண்ணிக்கையில் பங்கேற்றனர்.

பெரு முதலாளிகளுக்கு ஆதரவாக நீதி மன்றம் வழங்கிய அநீதியான தீர்ப்பை எதிர்த்தும், சிறையில் அடைக்கப்பட்டுள்ள எல்லாத் தொழிலாளர்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டுமென்றும் கோரி ஆர்பாட்டத்தில் பங்கேற்ற தொழிலாளர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, பல வாரங்களாக தமிழகமெங்கும் போராடி வரும் தமிழக உழவர்களுடைய கோரிக்கைகளை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டுமென்றும் அவர்கள் கோரினர்.

ஆர்பாட்டத்தில் மத்திய தொழிற் சங்கங்களின் தலைவர்கள் உரையாற்றினர். ஏஐடியுசி-யின் தோழர் டி.எம்.மூர்த்தி, டபிள்யுபிடியுசி-யின் தோழர் என். துரைராஜ், ஏஐசிசிடியு-வின் தோழர் எஸ்.ஜவகர், ஏஐயுடியுசி-யின் தோழர் வி.சிவகுமார், எல்.பி.எப்-இன் தோழர் நடராசன், சிஐடியு-வின் தோழர் சௌந்தர் ராஜன் மற்றும் எச்.எம்.எஸ்-இன் தோழர் சி.ஏ.இராஜாஸ்ரீதர் ஆகியோர் போராட்டத்தை விளக்கிப் பேசினர்.

உரையாற்றிய தோழர்கள், மாருதி சுசூகி தொழிலாளர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதிக்கு இந்திய அரசாங்கத்தைக் கடுமையாக கண்டித்தனர். சூலை 2012-இல் மாருதி நிர்வாகம்தான் தொழிலாளர்களைத் தாக்குவதற்காகவும், நிர்வாகத்தின் மேலாளரையே கொலை செய்வதற்காகவும் குண்டர்களையும், பிற குற்றவாளிகளையும் மானேசர் தொழிற்சாலைக்குள் கொண்டுவந்து தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள்.

பின்னர் குற்றத்தைத் தொழிலாளர்கள் மீது சுமத்தியிருக்கின்றனர். இந்தியத் தொழிலாளர்கள், தங்களுடைய உரிமைகளுக்காகப் போராட முன்வரக் கூடாதென்றும், அப்படி அவர்கள் செய்வார்களேயானால் மாருதி தொழிலாளர்களுக்கு நேர்ந்த கதி தான் அவர்களுக்கும் நேரும் என்று ஒரு படிப்பினையைப் புகட்டுவதற்காக, இந்தக் குற்றத்தை இந்திய மற்றும் அன்னியப் பெரு முதலாளிகள் திட்டமிட்டு நடத்தியிருக்கிறார்கள்.

பெரு முதலாளிகளின் கட்டளைக்கிணங்கி காவல் துறை நூற்றுக் கணக்கான தொழிலாளர்களைக் கைது செய்து அதில் 148 தொழிலாளர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். இது மட்டுமின்றி மேலும் 66 தொழிலாளர்களையும் சிறையிலடைத்து அவர்கள் மீதும் வழக்கு நடத்தினர். கடந்த நான்கு ஆண்டுகளாக இவர்கள் அனைவருக்கும் பிணையில் கூட வெளியே வர அனுமதி மறுக்கப்பட்டது.

tok 600 copyமாருதி நிர்வாகம் ஏற்பாடு செய்தவாறு, சிறையில் அடைக்கப்பட்ட தொழிலாளர்களை பட்டியல் வரிசைப்படி ஒப்பந்தக்காரர்கள் பிரித்துக் கொண்டு அவர்களுக்கு எதிராகப் பொய் சாட்சி கூறியுள்ளனர். தொழிலாளர்களைத் தாக்கவும், தங்களுடைய சொந்த மேலாளரையே கொடூரமாகக் கொல்லவும் சதித் திட்டமிட்டு குற்றமிழைத்த நிர்வாகத்தையோ, அவர்களுடைய குண்டர்களையோ காவல் துறை கைது செய்யவில்லை.

தொழிலாளர்களுக்கு எதிராக வாதாடிய அரசு வழக்குறைஞர் குற்றத்தைத் தொழிலாளர்கள்தான் செய்தார்களென நிரூபிக்கவில்லை. மாறாக அவர், “இந்த தொழிற்சங்கத் தலைவர்களை விடுதலை செய்தால், அதிக மூலதனத்தை இந்தியாவிற்குக் கொண்டு வருவதற்காக அரசாங்கம் மேற்கொண்டு வரும் ‘இந்தியாவில் உற்பத்தி செய்யுங்கள்’ போன்ற திட்டங்கள் தோல்வியடைந்துவிடும் என்றும், இந்தியாவில் முதலீடு செய்ய முதலாளிகள் முன்வர மாட்டார்கள்” என்றும் நீதிமன்றத்தில் வாதாடினார். இவ்வாறு இந்திய அரசாங்கமும், முதலாளிகளும் தொழிலாளர்களைத் தாக்குவதிலும், உண்மையைக் குழி தோண்டி புதைப்பதிலும் ஒன்றுபட்டு நிற்கிறார்கள் என்பதைப் பேச்சாளர்கள் சுட்டிக் காட்டினர்.

தொழிலாளர்கள் தான் மேலாளரைக் கொன்றார்கள் என்றோ, தொழிற்சாலைக்குத் தீ வைத்தார்கள் என்றோ எந்த அத்தாட்சியும் இல்லாத போதிலும், இந்திய பெரு முதலாளிகளின் கட்டளைக்கிணங்கி, நீதி மன்றம் நீதிக்குப் புறம்பாக 13 தொழிலாளர்களுக்கு ஆயுள் சிறை தண்டனையும், 4 தொழிலாளர்களுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 14 தொழிலாளர்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் கொடுத்திருக்கிறது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு 4 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டு வந்திருந்த 117 தொழிலாளர்களுக்கு குற்றத்தில் எவ்வித பங்கும் இல்லையென நீதி மன்றம் விடுவித்திருப்பதைச் சுட்டிக் காட்டிய பேச்சாளர்கள், இந்தத் தொழிலாளர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு அரசு எப்படி பதில் சொல்லப்போகிறது என்று கேள்வி எழுப்பினர்.  

tok2 350 copyகோவை பிரிக்காலிலும் இது போன்ற நிலையே இருப்பதாக சில தோழர்கள் குறிப்பிட்டனர். குற்றத்தில் எவ்விதத் தொடர்பும் இல்லாமல் இருந்துங்கூட 8 தொழிலாளர்களுக்கு அமர்வு நீதி மன்றம், இரட்டை ஆயுள் சிறை தண்டனை வழங்கியது. பின்னர் அவர்களில் 6 தொழிலாளர்களை குற்றமற்றவர்களென உயர் நீதி மன்றம் விடுதலை செய்திருக்கிறது. மற்றவர்களையும் விடுவிப்பதற்காக, உச்ச நீதி மன்றத்தில் தற்போது வழக்கு தொடர்கிறது.

தமிழக உழவர்கள் தங்களுடைய நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடெங்கிலும் மட்டுமின்றி, அவர்களுடைய ஒரு பிரிவினர் தில்லியிலும் போராடி வருகின்றனர் என்பதை பேச்சாளர்கள் சுட்டிக்காட்டினர். போராடி வருகின்ற இந்த உழவர்களை மோடியும் அவரது அமைச்சர்களும் சந்திக்க மறுத்து வருகிறார்கள். உழவர்களுக்குக் கொடுத்த கடனைகளைத் தள்ளுபடி செய்யக் கூடாதென இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் கூறியிருக்கிறார். இதே அமைச்சர்களும், அதிகாரிகளும் இலட்சக் கணக்கான கோடி ரூபாய்கள் பொருமானமுள்ள இந்திய பெரு முதலாளிகளுடைய வாராக் கடன்களைத் தள்ளுபடி செய்து வருகிறார்கள். இப்படி கடனைத் திருப்பியடைக்க மறுத்து வந்த பெரு முதலாளி விஜய் மல்லையா-வை பாதுகாப்பாக இலண்டன் அனுப்பி வைத்துவிட்ட பின்னர் அவரைக் கைது செய்ய அதிகாரிகள், ஆணை பிறப்பிக்கிறார்கள்! இப்படி பெரு முதலாளிகளுக்கென்றும், நாட்டின் செல்வத்தையும், மக்களுக்கு உணவையும் உற்பத்தி செய்யும் மற்ற உழைக்கும் மக்களுக்கென்றும் இரு வேறு நெறி முறைகளும் சட்டங்களும் பின்பற்றப்பட்டு வருகின்றன.

இந்திய அரசு இந்த வழக்குகளைக் கையாண்ட விதமும், வழங்கப்பட்ட தீர்ப்பும், ஏகபோக முதலாளிகளின் கீழ் உழைக்கும் மக்களுக்கு நியாயமான நீதி கிடைக்க வழியில்லை என்பதை நிரூபிக்கின்றன. ஆர்பாட்டத்தில் பங்கேற்றவர்கள், சிறையில் அடைக்கப்பட்டுள்ள எல்லா தொழிலாளர்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும், மாருதி நிர்வாகத்தால் வேலையிலிருந்து தூக்கியெறியப்பட்ட தொழிலாளர்களை வேலைக்கு மீண்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் ஒரே குரலில் திட்டவட்டமாகக் கோரிக்கை எழுப்பினர்.

நம்முடைய உரிமைகள் மீது தொடுக்கப்படும் இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களுக்கு போர்க்குணமிக்க ஒன்றுபட்ட போராட்டங்கள் மூலம் பதிலளிக்க வேண்டும். சுரண்டலுக்கும், அநீதிக்கும் முடிவு கட்டுவதற்கு, தொழிலாளி வகுப்பின் மற்றும் தொழிலாளர்கள் - உழவர்களுக்கிடையே ஒற்றுமைக்கான அவசியத்தை பேச்சாளர்கள் வலியுறுத்தினர்.

மாருதி மற்றும் பிரிகால் தொழிலாளர்களுக்கு ஆதரவாக துண்டறிக்கைகளை தொழிற் சங்கங்களும் தொழிலாளர் ஒற்றுமை இயக்கமும் ஆர்பாட்டத்தில் பங்கேற்ற தொழிலாளர்களிடையே வினியோகித்தனர்.

தலாளிகள் மற்றும் இந்திய அரசு தொழிலாளர்கள் மீது நடத்திவரும் அநியாயமான தாக்குதல்களைக் கண்டித்தும், தங்களுடைய உரிமைகளுக்காகத் தொழிலாளர்கள் ஒன்றுபட வேண்டுமென வலியுறுத்தியும் பல தட்டிகள் அங்கு வைக்கப்பட்டிருந்தன.

மாருதி, பிரிகால் தொழிலாளர்களை விடுதலை செய்யும் வரை போராட்டத்தை வரும் நாட்களில் தீவிரப்படுத்துவோம் என்ற உறுதியோடு ஆர்பாட்டம் நிறைவு பெற்றது.