விரிவுரையின் தலைப்பு: மேற்கின் வளர்ச்சி, கொள்ளை, அடிமைமுறை, இனஅழிப்பு

ஆசிரியர்: பிரபிர் புர்கயஸ்தா

காலானியாதிக்கத்தைப் பற்றிய ஒரு பரந்துபட்ட கருத்துச்சித்திரம் இவ்விரிவுரையின் மூலம் வழங்கப்பட்டது. மேற்கு நாடுகள் மேலாதிக்கம் பெற்றதை நிர்ணயித்தது எது என்பது குறித்து பெரும்பாலான நம் வரலாற்றிலக்கியங்களில் காட்டப்படும் சித்திரம் முழுமையானதல்ல. அவை நம்மைத் தவறாக வழி நடத்துகிறது. தாங்கள் எவ்வாறு உயர்வடைந்தோம் என்று மேற்கத்திய நாடுகள் சொல்லிக் கொள்வதற்கும், உண்மையில் மேற்கத்திய நாடுகள் எப்படி ஆதிக்கம் பெற்றது என்பதும் இரண்டு வேறுபட்டனவையாக உள்ளன. மேற்கின் வளர்ச்சிக்கு பின்னே பகுதியளவு மறைக்கப்பட்ட, முழுவதும் கவனத்தில் கொள்ளப்படாத காரணிகள் வரலாற்றில் சொல்லப்படாமல் துடைத்தெரியப்பட்டுள்ளது. சில காலப்பதிவுகளுக்கு, அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. மேற்கின் வளர்ச்சி குறித்து உலகம் நம்பும்படியாகத் தங்களுக்காக ஏற்படுத்திய சித்திரத்தில் பாதி உருவாக்கப்பட்டவை, பாதி திரிக்கப்பட்டவை என இரு கூறுகளையும் கொண்டதாகவும் உள்ளதால் மேற்கின் வளர்ச்சி உற்பத்தி செய்யப்பட்டது என்றே கூற வேண்டும். இதுவே உண்மையான வரலாறு என உலகின் பெரும்பகுதியினரை நம்ப வைக்க முடிந்ததே அவர்களின் வெற்றியாகும். இது போன்றப் பிறழ்வுகள் வரலாற்று பிரச்சினை தானே அதைப் பற்றி நாம் ஏன் கவலைப்பட வேண்டும் எனப் பார்த்தோமானால் இது ஒரு தொடர் நிகழ்வாக உள்ளது. உலகம் எப்படித் தங்களைப் பார்க்க வேண்டும் என்று அவர்கள் விரும்பியவாறு வரலாறு கட்டமைக்கப்பட்டுள்ளது. இது ஏதோ ஒரு முறை நடந்த கடந்த கால நிகழ்வு மட்டுமல்ல. இன்றும் கூட அவர்கள் அதையே தான் செய்கிறார்கள் என்பதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.. எனவே இந்தத் திரிபுகள் வரலாறாகவும், நிகழ்காலமாகவும் தொடர்கிறது.

புவியை மெர்கெடர் வரைதாளில் காணும் போது, ஒரு கோளப் பரப்பை ஒரு வரைதாளின் செவ்வக ஆயத்தொலைகளில் தரப்படுவதால் உலகின் வடபகுதிகள் பெரிதாக நீட்டிக்கப்பட்டும், புவியின் மையப்பகுதியான நிலநடுக்கக் கோட்டுப் பகுதிகளை குறுக்கப்பட்டும் அளவில் ஒரு தோற்றப் பிழையை ஏற்படுத்துகிறது.. இதில் இன்னொரு பிரச்சனையும் உள்ளது ஏனெனில் நாம் விமானப் பயணங்களுக்கு தெற்கிலிருந்து வடக்கிற்கு செல்லாமல் கிழக்கிலிருந்து மேற்கே செல்வதால் உலக வரைபடத்தில் தரப்படும் தொலைவுகளை உணருவதில்லை. உலகின் பெரும்பாலான பயண வழித் தடங்கள் துருவ வழிகளிலே மேற்கொள்வதாலே அருகில் உள்ளது. வரைபடத்தில் காண்பது போல் மேற்கொள்ளப்படுவதில்லை. வரைபடங்களை காணும் போது அவை ஐரோப்பியாவையும், ஆசியாவையும் மையப்படுத்தியதாகவே உள்ளது.

ஆனால் பூகோளத்தைக் காணும் போது மேற்கு ஐரோப்பா நாம் நினைப்பதைப் போல் பெரிதாக இல்லாமல் மிகச் சிறியதாக இருப்பதையும், கிழக்கு ஐரோப்பாவும், மத்திய ஐரோப்பாவும் மிகப் பெரிதாக இருப்பதையும் காணலாம். இப்பொழுது ஒரு கேள்வி நம் முன் எழுகிறது. எப்படி உலகின் மிகச் சிறியப் பகுதியாக இருக்கும் மேற்கு ஐரோப்பா மேலாதிக்கம் பெற்றது? இக்கேள்விக்கான விடையை இங்கே காண்போம்.. இரண்டாவதாக இன்று நாம் உள் நாட்டுப் பொருளாக்க மதிப்பை (ஜிடிபி) கணக்கிடுவது போல் அன்றையக் காலகட்டத்தில் கணக்கிட்டால் உலகின் மொத்தப் பொருளாக்க மதிப்பில் நாடுகள் எவ்வளவு விகிதம் வகிக்கின்றன. கடந்த 300-400 வருடங்களுக்கு முன் வரை உலகின் மொத்தப் பொருளுற்பத்தியில் மேற்கு ஐரோப்பாவும், ஐக்கிய அமெரிக்க நாடுகளும் மிகக் குறைந்த பங்கையே வகித்துள்ளன.

மூன்றாவதாக நாம் காண விழைவது மேற்கு ஐரோப்பா உலகின் ஆதிக்க சக்தி ஆவதற்கு முன்னர் பெரிதளவில் நிலவுடைமை பேரரசுகளேக் காணப்பட்டன. யுரேசியா உலகின் முக்கிய ஆதிக்கப் பகுதியாக விளங்கியது. அன்றைய ஆப்பிரிக்கா இன்றைக் காட்டிலும் பொருளாதார அளவில் மிகப் பெரும்பங்கு வகித்தது. யுரேசியாவின் மிகப் பெரும் பேரரசுகள் 80-86% மக்கள்தொகையைக் கொண்டிருந்தது. ஆசியாவில் சீனப் பேரரசு, முகலாயப் பேரரசு, சஃபாவித் பேரரசு, ஒட்டமன் பேரரசு ஆட்சியில் இருந்தது.

ஐரோப்பியப் பேரரசுகளில் ரஷ்யப் பேரரசைத் தவிர ஆஸ்திரிய-ஹங்கேரி பேரரசு இருந்தது அது புனித ரோமப் பேரரசாக அழைக்கப்பட்டது. ஏனெனில் அது கத்தோலிக்க தேவாலயத்தை பிரதிநிதித்துவப் படுத்துவதாகவும், அது கத்தோலிக்க தேவாலயத்தால் புனிதப்படுத்தப் பட்டிருந்தது. இந்தப் பேரரசின் காலகட்டத்திலே வெஸ்ட்பாலியன் ஒப்பந்தம் (1648) கையெழுத்திடப்பட்டது. ஆஸ்திரிய ஹங்கேரியப் பேரரசின் பிரதானமான மதமாக கத்தோலிக்க மதம் இருந்த போதும், மற்ற மதங்கள் கடைபிடிக்கப் படுவதையும் அனுமதித்தது. கத்தோலிக்க மதமும், புராட்டஸ்டண்டு மதம் இரண்டுமே யூதமக்களை ஒடுக்கியது இது அல்லாமல் ஒட்டோமன் பேரரசு ஐரோப்பாவில் மட்டுமின்றி, மத்திய ஐரோப்பா, கருங்கடல், கிழக்கு ஐரோப்பா, மேற்காசியா, வடக்கு ஆப்பிரிக்கா என மூன்று கண்டங்களில் பரவியிருந்தது. பெருமளவிலான மத்தியத் தரைக்கடல் வர்த்தகத்தை கட்டுப்படுத்துவதாக விளங்கியதால் இது மிகவும் முக்கியத்துவம் பெற்றது. வரைபடத்தில் காணும் போது ஒட்டமன் பேரரசு பட்டு வழித் தடத்தின் முகவாயிலாக இருப்பதை அறியலாம். பட்டு வழித் தடம் பரந்த அளவில் மத்திய ஆசியா, இந்தியா, பெர்சியா ஆகியவற்றை பல்வேறு வழிகளில் இணைத்தது. பட்டுவழித்தடத்தின் மையப்பகுதியாக காந்தாரம் அமைந்தது.

ஒட்டமன் பேரரசு கான்ஸ்டான்டி நோபிளை 1453-ல் கைப்பற்றியது மேற்கு ஐரோப்பிய நாடுகளின் ஆதிக்கத்திற்கு பெரும் தீங்கானது. முக்கியமாக ஐரோப்பாவிற்கு பட்டு வழித்தடத்தை மறித்ததால் அதன் வழி நடந்த பெருமளவு வர்த்தகம் தடைபட்டது. ஆசியாவிலிருந்து ஐரோப்பாவிற்கு முதலாவதாக பெருமளவு வாசனைத் திரவியங்கள், இரண்டாவதாகத் துணிகள் மற்றும் பட்டு ஆகிய மூன்றுமே வர்த்தகம் செய்யப்பட்டன.. இந்த வர்த்தகம் தொடர அனுமதிக்கப் படவில்லை, அதிக அளவு வரியும் விதிக்கப்பட்டது. அதனால் தான் ஐரோப்பியர்களுக்கு, குறிப்பாக மேற்கு ஐரோப்பியர்களுக்கு கான்ஸ்டான்டிநோபிளைத் தவிர்த்து ஆசியாவை அடையவேண்டியத் தேவை ஏற்பட்டதாலே அவர்கள் கடற்பயணங்களை மேற்கொண்டனர். அதன் அடிப்படையில் கிரிஸ்டோபர் கொலம்பஸ் இந்தியாவைக் கண்டறியும் பயணத்தை மேற்கொண்டார். இந்தியாவைக் கண்டுபிடிப்பதன் நோக்கம் தெற்காசியா, தென் கிழக்கு ஆசியாவை அடைவதே ஆகும். ஏனென்றால் இப்பகுதிகளே வாசனைத் திரவியங்களின் மூலமாக இருந்தன. ஐரோப்பாவில் வாசனைப் பொருள் தரும் தாவரங்கள் வளராததால் அவர்களுக்கு வாசனை திரவியங்கள் மிகவும் அரிய விலை மதிப்பிற்குரியவையாகின. வாசனைப் பொருட்கள் சமையலுக்கு சுவைகூட்ட மட்டும் உபயோகிக்கப் படவில்லை. உணவு, மாமிசத்தைக் கெட்டுப் போகாமல் பதப்படுத்தும் பதப்படுத்தியாகவும் பயன்படுத்தப்பட்டது. குளிர்பதனப்படுத்து முறையைக் கண்டுபிடிக்கும் முன் ஐரோப்பிய உணவு வகைகள் காரசாரமாகவே தயாரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நிலவுடைமைப் பேரரசுகளைத் தொடர்ந்து கடல்சார் பேரரசுகள் ஆதிக்கம் பெற்றன. கடற்படைகள் மற்றும் அவற்றின் நிலைகள், கடல்சார் பேரரசுகளின் வளர்ச்சியோடு உலகத்தில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. மேற்கு ஐரோப்பிய நாடுகள் ஆதிக்க வளர்ச்சி பெற்றன. கடல்சார் பேரரசுகளின் வரலாற்றுத் தடயங்களைக் காண்போம், கடல்சார் பேரரசுகளின் வளர்ச்சியோடு எப்படி உலகமும், நிலப் பேரரசுகளும் மாறின என்பதையும் காண்போம். 17, 18ஆம் நூற்றாண்டுகளில் உலகளாவிய அளவில் பிரிட்டிஷ் பேரரசு மிகுந்த முக்கியத்துவம் பெற்றது. அதனால் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில் சூரியன் மறைவதில்லை எனக் கூறப்பட்டது. ஆனால் அதே போது, பிரெஞ்சு, டச்சு, போர்த்துக்கீசிய, ஸ்பானிய அரசுகளும் கடற்பேரரசுகளாகத் திகழ்ந்தன. அந்தக் காலகட்டத்தில் இருந்த கடற்படைத் தொழில்நுட்பங்களை ஆராயும் போதுவரலாற்றின் சுவாரசியமானப் பகுதியைக் காண உள்ளோம், வரலாறு என்பது இயற்கை ஒழுங்கு நெறிகளின் அடிப்படையில் முன்னரே எழுதப்பட்டதன் படி நிகழ்பவை அல்ல, அதில் பல விபத்துகளும் நேரிடுகின்றன. ஏனென்றால் சமூக ஆற்றல்களின் சமநிலை ஒவ்வொரு நாட்டிலும் வேறுபட்டிருப்பதால் அவை விபத்துகளாக நேரிடுகின்றன. அதன் பிரத்தியேக நிலைகளால் முன்னரே கணிக்க இயலாத புதிய திசைவழியைத் தருகிறது.

வரலாற்றில் நாம் நம் சாத்தியப்பாடுகள் பற்றியே பேசுகிறோம். சாத்தியமான நிகழ்வுகள், மாற்றத்திற்கான சாத்தியங்கள். ஆனால் உண்மையில் நிகழ்வது அந்த சாத்தியப்பாடுகள் மற்றும் விபத்துகளின் கலவையாக உள்ளது. ஒரு குதிரை லாடத்தால் போரில் தோல்வி போன்ற விபத்துகளும் ஏற்படுகின்றன. எதற்காக போர் ஏற்பட்டது என்பது போரிடுபவர்களுக்கு முக்கியமாக இருக்கலாம் ஆனால் சில சமயங்களில் வரலாற்றில் ஏற்படும் விபத்துகளும் சிலவற்றை நிர்ணயிப்பவையாக அமைகிறது. அப்படிப்பட்ட ஒரு விபத்தையே இங்கு காண உள்ளோம். இதுவரை ஐரோப்பியர்களும், மேற்குலகும் குறைத்து மதிப்பிட்ட/புறக்கணித்தவற்றை இறுதியில் துல்லியமான கப்பல், கடற்படை தொல்லியல் மூலமாக உறுதிசெய்யப்பட்ட சீனாவின் கப்பற் படைத் தொழில் நுட்பம் குறித்த வரலாற்றைக் காண்போம். உலக நாடுகளிலே தொன்மையானது சீனாவின் கப்பல் தொழில்நுட்பம்.

சீனக் கடற்படையின் முக்கியமான முன்னேற்றங்களில் ஒன்று அவர்கள் ஒரு பாய்மரத்திற்கு பதில் பலப் பாய்மரங்களைப் பயன்படுத்தினர். எவ்வாறு கப்பல்கள் காற்றிலிருந்து வேறுபட்ட திசையில் பயணிக்கின்றன எனப் பார்த்தோமானால், பருவக்காற்றைப் பயன்படுத்தியே கப்பல்களின் மூலம் தெற்காசியா, தென் கிழக்கு ஆசியாவிலிருந்து மேற்காசியாவிற்கான வர்த்தகம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் பருவக்காற்று ஒரு நேரத்தில் ஒரு திசையிலும், இன்னொரு நேரத்தில் வேறொரு திசையிலும் நகரும். அதன் வழியே கடற்பயணங்கள் மேற்கொள்ளப்பட்டாலும் கப்பல் எப்பொழுதும் காற்றின் வழியிலே போகவேண்டுமென்பதில்லை. பாய்மரத்தை சாய்ப்பதாலும்,, சுழற்றுவதாலும் காற்றின் திசையிலிருந்து சற்று மாறுபட்ட திசையில் பயணிக்க முடியும். ஆனால் குறிப்பிட்டப் புள்ளிக்கு மேல் திசையை மாற்ற இயலாது. காற்றின் திசையிலிருந்து நேரெதிர் திசையில் பயணிக்க இயலாது.

சீனர்கள் கப்பலில் ஒரு பாய்மரத்திற்கு பதிலாக பாய்மரங்களின் தொகுப்புகளைப் பயன்படுத்தினர். இதனால் காற்றின் திசையிலிருந்து பெருங்கோண அளவில் நீண்ட பயணத்தை மேற்கொள்ளும் பெரியக் கப்பலை உருவாக்க முடிந்தது. மிகப் பெரிய அளவில் ஓரு பாய்மரத்தை பயன்படுத்துவது அதிக எடையுடன் இருப்பதால் பயணம் சிரமமாக இருக்கும். அதற்கு பதிலாகப் பாய்மரங்களின் தொகுப்பைப் பயன்படுத்தினர். பாய்மரங்களின் எண்ணிக்கை, பாய்மரத்தின் அளவை பதிலீடு செய்தது. இரண்டாவதாக மூடப்பட்டக் கட்டுத்தலைகள்(sealed bulkheads) பயன்படுத்தப்பட்டன. அதாவது கப்பலின் உடற்பகுதிக்குக் கீழுள்ள அறைகள் மூடப்பட்டிருக்கும். கப்பல் தளத்திற்குக் கீழுள்ள பகுதியில் உள்ள தடுப்பறைகள் மூடப்படும் பொழுது, கட்டுத் தலைகள் மூடப்படும் பொழுது, கப்பலின் உடற்பகுதியில் ஏதேனும் ஒருபகுதியில் உள்ள துளையால் மற்ற பகுதிகள் பாதிக்கப்படாது. ஏனென்றால் ஒவ்வொரு அறையும் மூடப்பட்டுள்ளதால் கப்பலில் சேதாரம் இருக்கும் போதும் கடலில் மூழ்காமல் இயல்பாக செலுத்த முடியும் என்பது பெரிய சாதகமான அம்சமாக அமைந்தது. கப்பலுக்குள் புகும் நீரை வெளியேற்றக் குழாய்களும் பொருத்தப்பட்டிருந்தது. ஒவ்வொரு அறையும் மூடமுடிந்ததால் ஒவ்வொரு கட்டுத்தலையும் தன்னிச்சையாக செயல்பட முடிந்ததால் கப்பல் மூழ்குவதிலிருந்தும் பாதுகாப்பு பெற முடிந்தது.

சீனர்கள் தான் முதன்முதலில் திசைமானியைக் கண்டுபடைத்தார்கள். வான்காட்சிகோளம் (Astralabs), நட்சத்திர வரைபடங்கள்(Star Charts) மூலம் அட்சரேகை, தீர்க்கரேகை கணக்கீடுகள் செய்யவும் அவர்களால் முடிந்தது. தீர்க்கரேகை கணக்கீடுகள் மற்றவர்களால் செய்ய முடிந்த போதும் வானில் நட்சத்திரங்களின் இருப்பிடத்தைக் கொண்டு நிலநடுக்கக்கோட்டிலிருந்து எவ்வளவு தொலைவிலிலுள்ளது என்பதை நட்சத்திர வரைபடத்தின் மூலம் முதலில் கணக்கிட்டதும் சீனர்களே. அவர்கள் போருக்காக பீரங்கிகளையும் கப்பலில் பொருத்தினர். துப்பாக்கிக்கான வெடிபொருளை முதன்முதலில் கண்டுபடைத்தவர்களும் சீனர்கள் தான். மற்ற எல்லோருக்கும் முன்னே அவர்களிடம், துப்பாக்கி, வாணவெடி, பீரங்கிகள் இருந்தது. ஆனால் ஒரு காலகட்டத்தில் மேற்கு ஐரோப்பியநாடுகளே இதன் மூலம் அதிகப் பயனடைந்தனர். பீரங்கியை கப்பலில் பொருத்துவதன் மூலம் பயணித்துக் கொண்டே தாக்க முடிந்ததால் கடற்கரையோர நகரங்கள் தாக்கி அவர்களை தோற்கடிக்கமுடிந்தது. போர்கப்பலுக்கு எதிரான ஆயுதங்கள் மற்றவர்களிடம் இல்லை. இது அவர்களின் கடல்போருக்கு கூடுதல் வலிமையைத் தந்தது.

உலகின் மிகப் பிரபலமான டிரெஷர் கப்பல் :

ஸெங்க் ஹெ சீனாவின் மிகச் சிறந்த ஒரு கப்பற் படைத் தளபதி அவர் ஒரு திருநர். திருநர்கள் சீன அரசாட்சியில் மிகவும் முக்கியத்துவம் பெற்றிருந்தனர்.

டிரெஷர் கப்பல் ஏழுக்கு மேற்பட்டப் பாய்மரங்களைக் கொண்டிருந்தது. பெரும் எண்ணிக்கையிலான மக்கள் அதில் பயணிக்க முடிந்தது. பயணத்தின் திசையைக் ஒழுங்கமைத்துக் கட்டுப்படுத்த அதில் பெரும் எண்ணிக்கையில் பாய்மரங்கள் வெவ்வேறு கோணங்களில் பொருத்தப்பட்டிருந்தது. காற்றுக்கு நேரெதிராகப் பயணிக்க முடியாவிட்டாலும் வெவ்வேறு பக்கத்தில் வளைந்து வளைந்து காற்றுக்கு எதிராகப் பயணம் செய்ய முடிந்தது. குறைந்த எண்ணிக்கையில் பாய்மரங்களைக் கொண்டக் கப்பல்களைக் காட்டிலும் இதன் மூலம் சிறப்பாக பயணம் செய்ய முடிந்தது.

chinese shipசாண்டா மரியா - கிரிஸ்டோபர் கொலம்பஸ் பயணித்த கப்பல். அதில் 2-3 பாய்மரங்களே இருந்தது. சாண்டா மரியாவை விட, ஸ்பானியர்களும், போர்த்துக்கீசியரும் பயணம் புரிந்த அர்மடா கப்பலை விட டிரஷர் கப்பல் மிகப் பெரியதாக இருப்பதைக் காணலாம். கப்பற்படைத் தளபதி ஸெங்க் ஹெ 1405-1433 வரை ஏழு கடற் பயணங்களை மேற்கொண்டார். ஒவ்வொரு கடற் பயணமும் பெரும் எண்ணிக்கையிலான கப்பல்களினால் மேற்கொள்ளப்பட்டது. அதில் சில டிரஷர் கப்பல்களும் இருந்தன. உணவு, மற்ற பொருட்கள், போர்வீரர்களைக் கொண்ட மற்ற கப்பல்களும் இருந்தது. மிகப் பெரும் எண்ணிக்கையில் 28000 ஆண், பெண்களுடன் கப்பற் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டன. போருக்காக மட்டுமல்ல வர்த்தகத்திற்காகவும் பெருமளவு கப்பற் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் கொலம்பஸ் பயணமோ 3 கப்பலில் 90 நபர்களுடன் மட்டுமே மேற்கொள்ளப்பட்டது. கொலம்பஸ் கப்பற்படைக்கு ஸ்கர்வி நோயைப் பற்றித் தெரிந்திருக்கவில்லை. அவர்கள் கப்பலில் பழங்களைக் கொண்டு செல்லவில்லை. அதனால் விட்டமின் சி குறைபாட்டால் ஏற்படும் ஸ்கர்வி நோயால் கொலம்பஸ் படையினர் கடுமையாக பாதிக்கப்பட்டார்கள்.

மிக நீண்ட காலத்திற்கு இதனால் பாதிக்கப்பட்ட பின்னே பழங்களால் இந்நோயை சரிசெய்ய முடியும் என்பதைக் கண்டறிந்தனர். சீனக் கப்பல்களிலோ பழங்கள், நன்னீர் கொண்டு செல்லப்பட்டது என்பது இன்னொரு முக்கிய வேறுபாடு. போர்த்துக்கீசிய வாஸ்கோடகாமா 160 ஆண், பெண்களுடன் 4 கப்பல்களில் பயணத்தை மேற்கொண்டார். மெகலன் 265 நபருடன் கப்பல் பயணத்தை மேற்கொண்டார், இவற்றுடன் ஒப்பிடும் பொழுது சீனர்களால் மேற்கொள்ளப்பட்டக் கப்பற்பயணம், அதில் பயணித்த நபர்களின் எண்ணிக்கையிலாகட்டும், அவர்களால் போக்குவரத்து செய்யப்பட்ட உணவு, மற்ற பொருட்களின் அளவிலாகட்டும் மிக பிரம்மாண்டமானதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஸெங்க் ஹெயின் ஏழுக் கடல் பயணங்களில், அவர் கிழக்கு ஆப்பிரிக்கா வரை சென்று வந்ததற்கான தடயங்கள் உள்ளது. பயணித்தவரின் ஓர் குறிப்பானது அவர்கள் பயணித்தக் கப்பல்களில் ஒன்று கிழக்கு ஆப்பிரிக்காவில் மூழ்கியதாகக் கூறுகிறது. அங்குள்ள ஒரு கிராமத்திலுள்ள ஒருமக்கள் குழுவில் உள்ளவர்களிடம் சீன மரபுக் குறியீடுகள் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. அவர்களின் வாய்வழிக்கதை வரலாற்றில் அவர்கள் சீனாவின் கப்பற் படையினரின் வழித் தோன்றிகள் என்பதும் அங்கு சீனாவின் பழந்தொன்மக் கலைப்பொருட்கள் காணப்படுவதன் மூலம் ஸெங்க் ஹெயின் கடற் படை கிழக்கு ஆப்பிரிக்கா அடைந்திருப்பதற்கான தெளிந்த தடயங்களும் கிடைத்துள்ளன. அங்கிருந்து சுற்றி ஆப்பிரிக்காவின் மேற்கு கரையை அடைந்ததாகக் கூறப்பட்டாலும் அதற்கானத் தடயங்கள் இன்னும் கிடைக்கவில்லை. அவர்கள் தென் கிழக்கு ஆசியா, சிரிலங்கா, தென்னிந்தியா, தெற்காசியா, மேற்காசியா, ஹொர்மெஸ் வளைகுடா, பெர்சியன் வளைகுடா, ஏதென்ஸ்(ஏமனின் கிழக்குத் துறைமுகம்), செங்கடல், ஆப்பிரிக்காவின் கிழக்குக் கடற்கரை ஆகியவற்றை உட்கொண்டிருந்தது ஸெங்க் ஹெ மேற்கொண்ட கடல்பயண வழித்தடம்.

அது போன்ற கடற் பயணங்களை பிறகு ஏன் சீனர்கள் மேற்கொள்ளவில்லை என்ற கேள்வி இப்பொழுது நம் முன்வருகிறது. அது ஏனென்று பார்த்தோமென்றால் கடற்பயணங்கள், கடற்படைகள் சீனாவில் திருநர்களால் தலைமை தாங்கப்பட்டிருந்தது. சீனப் பேரரசின் அரண்மனைகள் அனைத்தும் திருநர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. பெரும்பாலான அரசர்கள் தங்கள் மனைவிகள், பெண்கள் உள்ள இடத்தில் ஆண்கள் நுழைவதை விரும்புவதில்லை, அதனால் திருநர்களின் கட்டுப்பாட்டிலே அரண்மனைகளை வைத்திருந்ததனர். அதே போல் ஒட்டொமன் பேரரசின் இஸ்தான்புலிலும் அரண்மனை திருநர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. சீனாவின் பெரும்பான்மையான கப்பற்படை திருநர்களின் மூலம் அரசரின் கட்டுப்பாட்டில் இருந்தது. அதனால் திருநர்களின் செல்வாக்கு வளர்ந்தது. ஏனெனில் கடற்பயணங்களின் மூலம் அரிய பொருட்களை அவர்கள் கொண்டுவந்தார்கள், உலகின் வேறெங்கும் வருவதற்கு வெகுமுன்னரே சிறந்தத் தொழில்நுட்பத்துடன் நெடும்பயணங்கள் மேற்கொள்வதால் சமூகத்தில் அவர்கள் மீது பெருமதிப்பும் அங்கீகாரமும் கிடைத்தது. இவ்வளவு பெரிய கப்பல் அப்பொழுது இருந்திருக்க வாய்ப்பேயில்லை என ஐரோப்பிய வரலாற்றறிஞர்கள் பெரும் விவாதம் மேற்கொண்டனர்.

ஏன் அவ்வளவு பெரிய கப்பல் பயணங்கள் அதற்குப் பிறகு மேற்கொள்ளப்படவில்லை. சீன அரசவையின் நிலக்கிழார்கள் இது பெரும் தெண்ட செலவு, இதற்கு செலவு செய்வதைக் காட்டிலும் சீனப்பெருஞ்சுவரைக் கட்டி, வலுப்படுத்தி வடக்கிலிருந்து வரும் நாடோடிகளின், ஊடுருவலைத் தடுக்கலாம் என அரசரை ஏற்றுக் கொள்ள செய்தார்கள். அதன் பிறகு இரண்டுக்கு மேல் அதிக பாய்மரங்கள் கொண்ட கப்பல் கட்டப்படுவதற்குத் தடை விதிக்கப்பட்டு கப்பல்படை இல்லாமலடிக்கப்பட்டது. இதற்கான உண்மையானக் காரணம் என்னவெனப் பார்த்தோமானால் திருநர்களின் செல்வாக்கை, சக்தியை அழிக்கவே இப்படி செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. சீனாவில் நிலக்கிழார்களும், எழுத்தர்களும் முக்கியமானவர்களாகக் கருதப்பட்டனர். சீனாவில் அந்த காலத்திலேயே குடி ஆட்சி பணிகளுக்கான தேர்வுமுறை இருந்தது. அதன் மூலம் எழுத்தர்கள் அரசவைப்பணிகளுக்கு செல்வதால் எழுத்தர்களும் பெரும் செல்வாக்கு பெற்றிருந்தனர். அரண்மனையையும், கப்பல்படை, வர்த்தகம் தங்கள் முழுக்கட்டுப்பாட்டில் இருந்ததால் வளர்ந்துவரும் திருநர்களின் செல்வாக்கை நிலக்கிழார்களும், எழுத்தர்களும் அழிக்கத் திட்டமிட்டார்கள். அவர்களின் வெற்றியால் சீனக் கப்பற்படை அழிந்தது. இவ்வாறு திருநர்களின் செல்வாக்கும் அழிக்கப்பட்டது.

இது குறித்து பல்வேறு விவாதங்கள் இருந்த நிலையில் 25 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய சீனக் கப்பல் கண்டெடுக்கப்பட்டது. அதன் திசைமாற்றும் பல்சக்கரத்தின் அளவிலிருந்து அதன் கப்பல் தளத்தின் அளவு கணக்கிடப்பட்ட போது, அது டிரெஷர் கப்பலின் அளவில் இருப்பது தெரியவந்தது. கப்பல் கட்டமைக்கப்படும் இடத்திலும் தொன்ம உதிரி பாகங்கள் இருப்பது தெரிய வந்தது. அதே அளவு கொண்ட கப்பலின் பகுதிகளும் கிடைத்துள்ளது. கடந்த 10-15 ஆண்டுகளாக செய்து வந்த கப்பல் தொல்லாய்வு சீனர்களின் குறிப்புகள் மிகைப்படுத்தல் அல்ல, உண்மை தான் எனத் தெரியவந்துள்ளது. இதே அளவிலான கப்பல்களை ஐரோப்பியர்களால் 300 ஆண்டுகளுக்கு முன்புதான் உருவாக்க முடிந்தது. சீனத் துறைமுகங்களில் கப்பல்கள் மூலம் கடற்கரை வணிகம் மட்டுமே மேற்கொள்ளப்பட்டது. அதன் மூலம் தென் கிழக்கு ஆசியா வரை வேண்டுமானால் செல்லலாம். நெடுதூரக் கடல் கடந்த பயணங்கள் அதற்குப் பிறகு அனுமதிக்கப்படவில்லை.

அல் ஆண்டலுஸ்:

உமய்யத் பேரரசின் வரலாறுக்கு சென்றால் அவர்களுக்கு மேற்காசியாவில் ஏற்பட்டத் தோல்விக்குப் பின் வட ஆப்பிரிக்காவிற்குப் பின்வாங்கினார்கள் அங்கிருந்து அல் அண்டலுஸ் அல்லது ஸ்பெயின், போர்த்துக்கல், ஐபீரியன் வளைகுடா ஆகியவற்றை 1750-60 காலகட்டத்தில் அவர்கள் அடைந்தார்கள். அங்குள்ள பாலத்தைக் கடந்து பின் அந்தப் பாலத்தை மீண்டும் கடந்து செல்வதில்லை என உடைத்தார்கள். இது வரலாறாகவோ, இல்லை புனைவாகக் கூட இருக்கலாம். ஆனால் இங்கு முக்கியமாகக் குறிப்பிட வேண்டியது என்னவென்றால் அல் அண்டலூஸ் என்ற பகுதியிலே அரேபிய இலக்கியம், அறிவியல், கணிதம், தொழில்நுட்பம் சென்று அங்கிருந்தே அது ஐரோப்பியாவை சென்றடைந்தது. இதன் சுவாரசியமான பகுதி என்னவென்றால் அரபியர்கள் இந்த அறிவியல்களை வளர்க்கவில்லை. உலக வரைபடத்தில் பார்த்தோமானால் அது தெற்காசியா, சீனா, மத்திய ஆசியா ஆகியவற்றிற்கு இடையில் இருந்துள்ளது, எல்லா வர்த்தகத் தடங்களும் மேற்காசியாவின் இப்பகுதியைக் கடந்தே ஐரோப்பாவிற்கு சென்றது அதனால் இந்த மேற்காசியப் பகுதி அறிவியலின் கடவுளாகக் கருதப்பட்டது. டானிலிருந்து டமாஸ்கஸ் வரை எல்லா அரபு பேரரசுகளும் அறிவியல் மையங்களாகவும், வர்த்தக மையங்களாகவும் இருந்தது. பாக்தாத்தின் பெரும் நூலகத்தில் எல்லா வகையான அறிவியலும் அரபு மொழியாக்கம் செய்யப்பட்டது. இந்திய அல்லது தெற்காசிய எண்முறை அரேபியாவை முதலில் அடைந்து அங்கிருந்தே மேற்கு ஐரோப்பாவை சென்றடைந்து அங்கு அரபு எண்களாக அழைக்கப்பட்டது. அல்-க்வரிஷ்மி என்ற கணிதவியலாளர் கணித முறைகள் குறித்து பலவற்றை எழுதியுள்ளார்.

al andalus mapஅல்-ஹிந்த் கணிதம் குறித்து பெருமளவில் எழுதியும், மொழி பெயர்த்தும் உள்ளார். இந்திய எண்முறையை அல்-ஹிந்த் என்று குறிப்பிட்டுள்ளார். அவர் இந்தியக் கணித முறை மற்றும் எண் முறை இரண்டு சாதகமான தன்மைகளைக் கொண்டிருந்ததால் அறிமுகப்படுத்தியுள்ளார். முதலாவதாக, இலக்க எண், அதன் பொருளானது ஒரு எண் எந்த இலக்கத்தில் உள்ளதோ அதுவே அதன் மதிப்பை நிர்ணயிக்கிறது. உதாரணமாக 2 என்பது மட்டும் முக்கியமல்ல அந்த 2 ஒன்றாம் இலக்கத்தில் உள்ளதா, பத்தாம் இலக்கத்தில் உள்ளதா, நூறாம் இலக்கத்தில் உள்ளதா என்பதே அதன் மதிப்பை நிர்ணயிக்கும். இரண்டாவதாக, பூஜ்ஜியம் என்ற எண் ஒரு வெற்று எண், நிரப்பு எண் என்றில்லாமல் அதன் மூலம் பலக் கணக்கீடுகளையும் செய்யும் வகையில் இருந்தது. இதுவே அந்த எண் முறையின் இரண்டு முன்னேற்ற அம்சங்களாக இருந்தன. பாபிலோனியா, சுமேரியாவிலும் இலக்க முறை பயன்படுத்தப்பட்டது. பாபிலோனியாவிலும் பூஜ்ஜியம் பயன்படுத்தப்பட்டது. ஆனால் இந்திய எண் முறையில் (5-7ஆம் நூற்றாண்டு) பூஜ்ஜியத்தின் மூலம் கூட்டல் கழித்தலும் செய்யப்பட்டது. அதன் மூலம் பெருக்கல் செய்ய இன்னும் 300 ஆண்டுகள் ஆனது.

பூஜ்ஜியம் ஒரு எண்ணாக இருந்த போதும் அதனால் எந்த எண்ணையும் வகுக்க இயலாததால் அது தனித்துவம் மிக்க இயல் எண்ணாக இருப்பதால் மற்ற எண்முறைகளைக் காட்டிலும் இந்திய எண்முறையில் பலக்கணக்கீடுகளை செய்ய முடிந்தது. ரோமன், கிரேக்க எண்முறைகள் சிக்கலானவை. அவற்றின் மூலம் எளிதாகக் கணக்கீடுகள் செய்யமுடியாது. அதனால் மணிச்சட்டம் பயன்படுத்தினார்கள், இல்லையெனில் பாபிலோனிய முறையில் கணக்கீடு செய்து அதை ரோமன் எண்களாகப் பெயர்த்தார்கள். தாலமி எல்லா கணக்கீடுகளையும் சுமேரிய, பாபிலோனிய எண்முறையில் செய்து இறுதியில் அவற்றை ரோமானிய, கிரேக்க எண்முறைக்கு பெயர்த்தார். இந்த வகையில் மேற்குலகால் அரெபிய எண்முறை என்றே அழைக்கப்படும் இந்திய எண்முறை பெரிதளவில் சாதகமானதாக இருந்தது.

அல்-க்வரஷ்மி அல்-ஜபர் என்னும் எண்கணிதத்தின் (Algebra) வடிவமைப்பையும் தந்ததார். நிரல்நெறிமுறை(Algorithm)முறைகளைக் கண்டறிந்தவரும் அல்-க்வர்ஷ்மியே ஆவார். அரேபியர்கள் வழியாக கணிதமும், அறிவியலும் அண்டலூஸை அடைந்தது. அது மட்டுமில்லாமல் ஐரோப்பாவின் தொன்மையான கிரேக்க, ரோமானிய உரைகளும் அரேபிய மொழியில் பெயர்க்கப்பட்டது. அந்தத் தொன்மையான இலக்கியங்கள் ஐரோப்பாவில் அழிந்துவிட்டதால் ஐரோப்பியர்கள் தங்கள் தொன்மையான இலக்கியங்களை நேரடியாகப் பெறமுடியாத நிலையிலை இருந்தனர்.

அன்று கிரேக்கம் அனதொலியாவின் (துருக்கி) ஒரு பகுதியாகவே இருந்தது. கிரேக்கம் வேற்று நாடாக வெளியே இல்லை. வரைதாளில் பார்த்தால் மத்தியத்தரைக் கடல் நாடுகள், ரோமப் பேரரசு, கிழக்கு ரோமப் பேரரசான கான்ஸ்டான்டி நோபிள், அல்லது தற்போதைய இஸ்தான்புல் அவர்களின் அறிவியலின் பெரு மையங்களாக இருந்தது. இவையாவும் பரந்த ஆசியாவின் பகுதியாக இருந்தது. அரபு உலகம் அறிவியல் தொழில்நுட்பத்தைப் பெறும் மையங்களாக இருந்தது. சீனாவிலிருந்து திசைமானி, நட்சத்திர வரைபடம், இந்தியாவிலிருந்து எண்முறையும், கணிதமும், அரெபியாவை அடைந்ததுஅதை அவர்கள் மேலும் வளர்த்தார்கள். உலக அறிவின் உறைவிடமாக திகழ்ந்தது. ஏனெனின் இது பட்டு வழித்தடத்தின் மையத்திலும் இருந்ததால் உலகெங்கிலும் இருந்து அறிவைப் பெற்றனர். இங்கிருந்து அண்டலுஸைஅடைந்து நாகரிகம் மறுமலர்ச்சியை அண்டலூஸில் ஏற்படுத்தியது. அல் அண்டலுஸ் 700 ஆண்டுகள் இருந்தது. அதில் உமயத்துகளின் கீழ் 300-400ஆண்டுகளுக்கு இருந்தது. அங்கே மத சகிப்புத்தன்மை இருந்தது யூதர்கள், கிறித்தவ ர்கள், அரேபியர்கள், முஸ்லிம்கள் எந்த பிரச்சனையும் இல்லாமல் ஒன்றாக இருந்தனர்.

அங்கே தான் அரிஸ்டாட்டிலும் மற்ற மொழிகளுக்குப் பெயர்க்கப்பட்டார் அரேபிய மொழியில் தான். பெருமளவு மொழிபெயர்ப்பு அறிவு காணப்பட்டது. முஹம்மது இபின் ருஷ்த் மேற்குலகில் அவரோஸ் என்றே அழைக்கப்படுகிறார். பெரும்பாலான ஐரோப்பிய மாணவர்களுக்கு அவரூஷ் தான் முஹம்மது இபின் ருஷ்த் என்பதே தெரியாது. மய்மொண்டெஸ் ஒருயூதக் கவிஞர், எல்லோரும் அண்டலூஸிலே இருந்தனர். அண்டலூஸ் மேற்கு ஐரோப்பாவின் வாயிலாக இருந்தது அல் அண்டலூஸின் அறிவு அறிவொளியின் பகுதியாகக் காட்டப்படவில்லை. அறிவொளி அரிஸ்டாட்டிலிடமிருந்தே வந்தது. ஆனால் அரிஸ்டாட்டிலை மீண்டும் மேற்கு ஐரோப்பாவிற்கு அறிமுகப்படுத்தியது அவருஷ் ஆவார். அவர் தத்துவத்தில் எந்தப் புதிய முன்னேற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. அவர் ஒரு சிறந்த விளக்கவுரையாளராக இருந்தார் அதனால் ஐரோப்பிய உரைகளில் அவர் பெரும் விளக்கவுரையாளராக அழைக்கப்படுகிறார்.

அதன் பின் வந்த செயிண்ட் அக்வினஸ் அரிஸ்டாட்டிலின் தத்துவத்தை மதத்துடன் இணைத்தார். ரூஸோவும் கூட பகுத்தறிவுடன் கூடிய மதத்தை உருவாக்க முயற்சி மேற்கொண்டார். துரதிர்ஷ்டவசமாக உமயத்துகளை பெர்பெர் அரசர்கள் வீழ்த்திய பிறகு, அவர்கள் உமயத்துகளிடமிருந்து அல் அண்டலுஸைக் கைப்பற்றினர். பிறகு அல்மொரவிந்த்ஸ் அல்-அண்டலூஸைக் கைப்பற்றினர். அவர்கள் மதத்தைக் கேள்வி கேட்பவர்களை மத எதிர்ப்பாளர்களாக கருதினர். பெரும்கட்டுப்பாடுகளால் அறிவு மலர்ச்சியும் குன்றி போனது. கத்தோலிக்க அரசர், அரசிகளின் மறுவெற்றி (Reconquestia) வரை அங்கே மேற்கத்திய கிறித்தவர்கள், யூதர்கள் அங்கு இருந்துவந்தனர். கத்தோலிக்க அரசு ஸ்பெயினைக் கைப்பற்றியது கிறித்தவர் அல்லாதவர் நாட்டை விட்டு வெளியேறவேண்டும் இல்லை கொல்லப்படுவார்கள் என மிரட்டப்பட்டார்கள். பெருமளவில் முஸ்லிம்களும், யூதர்களும் நாட்டை விட்டு விரட்டப்பட்டார்கள். பெரும் எண்ணிக்கையிலானவர்கள் மனதளவில் கிறித்தவர்களாக மாற இயலாத போதும் கிறித்தவர்களாகக் காட்டிக் கொண்டார்கள். அவர்கள் கணிதம், அறிவியல் தெரிந்தவர்களாகவும், கற்றவர்களாகவும், வணிகத் தொடர்பும் கொண்டிருந்ததால் அவர்களின் அதிகாரம் நீடித்தது.

அவர்களில் யாராரெல்லாம் வீட்டில் ரகசியமாக இஸ்லாம், யூத மதங்களைப் பின்பற்றுகிறார்கள் என விசாரணை செய்யப்பட்டது. மத எதிர்ப்பாளர்களாக இருந்த கிருத்தவர்கள் மீதும் விசாரணை செய்யப்பட்டது. ஸ்பெயின் வரலாற்றின் இந்தப் பகுதி மறைக்கப்பட்டது. இந்த அல் அண்டலூஸ் என்ற ஸ்பெயின் ஐரோப்பிய அறிவுமலர்ச்சிக்காற்றியப் பெரும்பங்கு மறைக்கப்பட்டது. இங்கிருந்து பெற்ற கணிதம், அறிவியல், தத்துவம் எல்லாமே ஐரோப்பியாவில் தானேத் தோன்றியது போல தோற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அல் அண்டலூஸை சேர்ந்த அறிஞர்களின் பெயர்களும் இத்தாலியப் பெயர்களாக மாற்றப்பட்டதால் உண்மையில் அவர்கள் யார், அவர்கள் எங்குத் தோன்றினார்கள் என்பது எல்லோரும் அறியும் வண்ணம் இல்லை. அவரூஸ், அவிசேனா ஆகியோர் பெயரினால் இத்தாலியரைப் போலத் தோன்றச் செய்துவிட்டனர். இவை யாவும் வரலாற்றில் நீக்கப்பட்டுள்ளது.

கடைசியாக ஒரு குறிப்பு. கொலம்பஸ் கப்பலை ஸ்பானியர்கள் காரவல் என்றழைத்தார்கள், போர்த்துக்கீசியர்களால் காரகன் என்றழைக்கப்பட்டது அதன் மூலச்சொல் எங்கிருந்து வந்தது என்று பார்த்தோமானால் அரேபிய சொல்லான கரீப் என்பதிலிருந்தே பெறப்பட்டது. அவர்களின் கப்பலுக்கான மாதிரி அமைப்பை அரேபியர்களிடமிருந்தே பெறப்பட்டுள்ளது. அரேபியர்களும் கடல் பயணங்களில் சிறந்தவர்களாயிருந்தனர் அவர்கள் சீனர்களிடமிருந்து பெற்ற நட்சத்திர வரைபடங்களைக் கொண்டிருந்தனர். திறந்தகடல் பயணங்களை மேற்கொண்டனர். கப்பல் வடிவமைப்பும், திறந்தவெளிக் கடல் பயணத்திற்கான அறிவும் ஐரோப்பியர்கள் அரேபியர்களிடமிருந்து பெற்றனர். இந்த காலகட்டத்தில் தான் கான்ஸ்டான்டி நோபிள் 15 ஆம் நூற்றாண்டில் துருக்கிய நாடோடியரிடம் சேர்ந்தது. அவர்களை மையப்படுத்தி தான் அது துருக்கி எனப் பெயரிடப்பட்டது. அவர்கள் ஐபிரியன் வளைகுடாவைக் கைப்பற்றினார்கள், கான்ஸ்டான்டி நோபிளை 1453ல் கைப்பற்றினார்கள். அதன் பிறகு 30-40 ஆண்டுகளில் ஆண்டலூசியா முடிவை நெருங்கியது. கிரெனடா என்ற நகரத்தையும் ஸ்பானிய கிறித்தவ அரச கைபற்றியது. அதனுடன் அல் அண்டலுஸ் முடிவடைந்தது. பெரியதொரு இன அழிப்பு நிகழ்ந்தது. அதன் மூலம் எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள் என சரியாகத் தெரியவில்லை. மில்லியன் கணக்கான மக்கள் கொல்லப்படாமல் வெளியேற்றப்படுவது சாத்தியமில்லை.

இந்த கிரனடாவின் வீழ்ச்சி, அரபின் வீழ்ச்சி, அல் அண்டலூஸின் வீழ்ச்சி வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வாகக் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவேயில்லை. எத்தனை பேர் வெளியேற்றப்பட்டார்கள், அவர்கள் எங்கே சென்றார்கள் என்பது வரலாற்றிலிருந்து நீக்கப்பட்டுவிட்டன. 1492 ல் கொலம்பஸ் கப்பல் பயணத்தை மேற்கொண்டார். முன்னர் நிலவழியாக சென்ற பகுதிகளை கடல்வழியாக அடைவதற்கான முயற்சிகளை ஸ்பானியர்களும், போர்த்துக்கீசியர்களும் மேற்கொண்டனர். கடல் பயணங்களின் ஒரு சிறப்பம்சம், வர்த்தகத்தை எளிதில் தடைபடுத்த முடியாது. கடல் வழிப் பயணங்களின் மூலம் உலகின் எந்த மூலையையும் அடைவதற்கானத் தொழில்நுட்ப ங்களைப் பெற்றிருந்தனர். சீனர்கள் ஏற்கெனவே தங்கள் கப்பற்படைகளை அழித்து ஐரோப்பியர்களுக்கு அனுகூலம் செய்தனர். இந்தப் பின்ன்ணியில் தான் ஐரோப்பியர்கள் கடலாதிக்கம் பெற்று முன்னணிக்கு வந்தனர்.

(தொடரும்)