nirmala sitharaman on bank mergingஇந்தியாவில் கோவிட் தடுப்பு மருந்து இருமுறை செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை 17.8 விழுக்காடாகவும். ஒரு முறை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை 48.5 விழுக்காடாகவும் உள்ளது. இந்தியாவில் பெருவாரியானோருக்கு கோவிட் தடுப்பு மருந்து அளிப்பது பொருளாதாரச் சரிவு மேலும் அதிகரிக்காமல் இருப்பதற்கான முன் நிபந்தனை மட்டுமே, அதன் மூலம் மட்டுமே பொருளாதார மீட்சியை அடைய முடியாது. ஆனால் நிதியமைச்சகமும், பாஜக தலைமையும் கோவிட் தடுப்பு மருந்து அளிக்கப்படுவதையே பொருளாதார மீட்சியாகக் காண்கிறது.

கோவிட் மூன்றாவது அலை ஏற்பட்டாலும் பொருளாதார மீட்பு தொடரும் என்றும் இந்தியாவின் பொருளாதார மீட்பு, கோவிட் -19 இன் இரண்டாவது அலையால் பாதிக்கப்பட்டது, மூன்றாவது அலை நாட்டைத் தாக்கினாலும் அடுத்த மூன்று காலாண்டுகளில் பொருளாதார மீட்சி வேகமாக இருக்கும் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. கோவிட் தடுப்பு மருந்து விரைவாக அளிக்கப்படுவதும், கோவிட்-க்கு முந்தைய நிலைக்கு திரும்பும் பல பொருளாதாரக் குறியீடுகளும் இத்தகைய நம்பிக்கையை அளித்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. இந்தப் பொருளாதாரக் குறியீடுகள் குறிப்பிடுவது வெறும் புள்ளியியல் வளர்ச்சியே தவிர உண்மையான வளர்ச்சி அல்ல. 2020-21 முதல் காலாண்டில் பொதுமுடக்கத்தால் மொத்த பொருளாக்க மதிப்பு 24.4 விழுக்காடு குறுக்கமடைந்தது. அதனுடன் ஒப்பிடும்போது, இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் வளர்ச்சி 20.1 விழுக்காடாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது உண்மையான வளர்ச்சியைக் குறிப்பிடவில்லை. பொருளாதாரம் கொரோனா தாக்கத்திற்கு முந்தைய நிலையை அடையவில்லை என்பதே உண்மை.

சில்லறை வணிகர், சிறு முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையில் பணத்தை முதலீடு செய்வதால் இந்திய பங்குச் சந்தையில் நம்பிக்கை அதிகரித்து வருவதாகவும், நேர்முக வரி வருவாயில் அரை ஆண்டு இலக்கு ஏற்கனவே அடையப்பட்டுள்ளதாகவும், இந்தியப் பொருளாதாரம் புத்துயிர் பெறும் பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும் நிதியமைச்சர் கூறியுள்ளார்.பங்குச் சந்தையில் நம்பிக்கை ஏற்படுவது இருக்கட்டும், உண்மையான பொருளாதாரத்தில் நம்பிக்கை ஏற்படும் படி ஏதேனும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறதா பாஜக அரசு. உண்மையான பொருளாதார நடவடிக்கைகளுக்கு தொடர்பில்லாத ஊக முதலீடுகளால் ஏற்படும் உயர்வை வைத்துக் கொண்டு, இந்தியாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவை இட்டு நிரப்ப நிதியமைச்சர் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார்.

உயிர்கள் மற்றும் வாழ்வாதாரங்களைக் காப்பாற்ற உடனடி துயர் தணிப்பு நடவடிக்கைகளை செய்ததுடன், விநியோகக் கட்டமைப்பு சீர்திருத்தங்களை மேற்கொண்ட ஒரே நாடு, தொற்றுநோயின் ஆரம்பக் கட்டங்களில் வழங்கலில் நெகிழ்வுத்தன்மையை வழங்கிய ஒரே நாடு என்று நிதி அமைச்சகம் பீற்றிக் கொள்கிறது.கோவிட்-19 இந்தியா உட்பட ஒட்டுமொத்த உலகின் பொருளாதாரங்களையும் பாதித்தது. ஆனால் தொற்றுநோயால் தடுக்கப்பட்டதை விட நமது பொருளாதாரம் மிகவும் வலுவாக மீண்டுள்ளதாக பிரதமர் ந.மோடி கூறுகிறார்.

ஜன்தன் யோஜனா திட்டத்தின் மூலம் தொற்றுநோயின் முதல் மூன்று மாதங்களில் கிராமப்புற இந்தியாவில் உள்ள ஏழைகளுக்கு அவர்களின் கணக்கிற்கு ரூ .500 செலுத்தியதின் மூலம் அரசாங்கம் வெற்றிகரமாக உதவியது என்று நிதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார். வெறும் 500 ரூபாயைக் கொண்டு வாழ்வாதாரங்களையும் உயிர்களையும் பாதுகாத்தார்களாம். இதற்கு அவமானப் படாமல், வெட்கப்படாமல் அதையே பெருமையாக பீற்றிக் கொள்வதில் பாஜகவிற்கு ஈடு இணை கிடையாது.

ஆகஸ்ட் மாதத்தில் வேலையின்மை விகிதம் 8.32 விழுக்காடாக உயர்ந்துள்ளது, 3.6 கோடிமக்கள் வேலையின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். சமையல் எரிவாயு உருளையின் விலை செப்டம்பரில் மேலும் 25 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. மே மாதத்திலிருந்து சமையல் எரிவாயு உருளையின் விலை 300 ரூபாய்க்கு மேல் உயர்த்தப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் விலை 80 டாலரை நெருங்கும் சூழலில் பணவீக்கம் மேலும் அதிகரிக்கும் அபாயமே ஏற்பட்டுள்ளது. பணவீக்கம். வேலையின்மை, வருவாய்க் குறைவாலும் விலைவாசி உயர்வாலும் மக்களின் வாங்கும் திறன் குறைந்து, நுகர்வில் சரிவு ஏற்பட்டுள்ளது ஆனால் இந்த உண்மையான நடப்பு நிலையை கண்டு கொள்ளாது, போலிப் பெருமிதத்தில் மிதக்கிறது பாஜக தலைமை.

இந்தியாவில் முதலீட்டை ஈர்ப்பதற்கும் வளர்ச்சியை அதிகரிப்பதற்கும் வழங்கல் பக்க சீர்திருத்தமே ஒரே வழி என்கிறார் தலைமை பொருளாதார ஆலோசகர் (CEA) கே.வி.சுப்பிரமணியன். வரி செலுத்துவோரின் பணத்தை இலவசங்களுக்கும், தள்ளுபடிகளுக்கும் செலவளிக்காமல் மாநில அரசுகள் வழங்கல்-சார் சீர்திருத்தங்களை மேற்கொண்டு தனியார் முதலீடுகளை ஈர்ப்பதற்காக மூலதன செலவினங்களை அதிகரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். மத்திய அரசு தன் பொறுப்புகளை தட்டிக் கழித்து அனைத்து சுமையையும் மாநில அரசுகளின் தலையில் கட்டி வருகிறது. என்ன பெரிய இலவசங்களை இந்த அரசு வழங்கியுள்ளது. ஜன்தன் கணக்குகளில் 500 ரூபாய் அளித்ததா? அவற்றை இலவசங்கள் என்று குறிப்பிடுவது குடிமக்களை அவமானப்படுத்துவதாகும்.

பெருகிவரும் வறுமையும், பசி, பட்டினியும் மக்களின் நிகரத் தேவையை நிறைவு செய்வதற்கான வாங்கும் திறன் இல்லாததால் மக்கள் அவதிப்படுவதையே குறிப்பிடுகிறது.வழங்கல் பக்க சீர்திருத்தங்களை முன்னிருத்தும் பொருளாதார ஆலோசகரால் வேண்டல் பக்கத்தில் உள்ள குறைபாடுகளை ஏன் காணமுடியவில்லை. நிகரத் தேவையில் பற்றாக்குறை உள்ளதை ஏன் அங்கீகரிக்க முடியவில்லை. அதிகரித்துள்ள வேலைவாய்ப்பின்மையாலும், அதிகரித்துள்ள விலைவாசியாலும் மக்களின் வருவாய் குறைந்துள்ளது, அவர்களின் நுகர்வும் குறைந்துள்ள நிலையில் நாட்டின் ஒட்டு மொத்த வேண்டல் பற்றாக்குறையை சரிசெய்ய அரசு முன்வந்து முதலீடுகளை அதிகரித்து, வேலைவாய்ப்புத் திட்டங்களை அதிகப்படுத்த வேண்டும். பொது விநியோக முறையை விரிவுபடுத்தி அரிசி, பருப்புடன் நின்றுவிடாமல், மற்ற அத்தியாவசிய பொருட்களான பால், காய்கறிகள், பழங்கள் ஆகியவையும் மக்கள் மலிவு விலையில் பெறுவதற்கான ஏற்பாடுகளை செய்யவேண்டும்.

கிராமப்புறங்களில் விவசாய தொழில்களிலிருந்து பெறப்படும் உண்மையான கூலி கடந்த ஆண்டில் 4.6 விழுக்காடும், கடந்த இரண்டு ஆண்டுகளில் 0.8 விழுக்காடும் குறைந்துள்ளதாகவும் விவசாயம் அல்லாத தொழில்களுக்கு இந்த சரிவு மேலும் அதிகமாக உள்ளதாகவும் பொருளியலாளர் ஹிமான்ஷூ குறிப்பிட்டுள்ளார். கடந்த ஜூன் மாதத்துடன் ஒப்பிடும்போது கூலி 6.7 விழுக்காடும், 2019 ஜூன் மாதத்துடன் ஒப்பிடும்போது 1.8 விழுக்காடும் குறைந்துள்ளது. உழைப்புச்சக்தி கணக்கெடுப்பு 2019-20 தரவுகளின் படி இந்தியாவின் சிறந்த ஊதியம் மற்றும் பாதுகாப்பு பெறும் தொழிலாளர்களுக்கு கூட உண்மையான கூலி கிராமப்புறங்களில் 1.8 விழுக்காடு குறைந்துள்ளது. ஆனால் 2017-18 உடன் ஒப்பிடும்போது நகர்ப்புறங்களில் கூலி 0.4விழுக்காடு அதிகரித்துள்ளது. 2020-21ஆம் ஆண்டுக்கான உழைப்புச்சக்தி கணக்கெடுப்பு தரவு இன்னும் கிடைக்கவில்லை ஆனால் பெருந்தொற்றுநோய்க்கு முன்னரே கூலி வீழ்ச்சி ஏற்பட்டுள்ள நிலையில் தொற்று நோய் தாக்கத்தால் தொழிலாளர்களின் துயர் மேலும் கடுமையாக அதிகரித்திருக்கும். 20 விழுக்காடு பொருளாதார வளர்ச்சி என்பது பெரும்பான்மையான தொழிலாளர்களின் வாழ்நிலை மேம்பட்டிருப்பதற்கான அறிகுறியாக கருதவே முடியாது. முறைசாரா துறையில் வாழ்வாதாரம், வருவாய் இழப்புகள் ஜிடிபி மதிப்பீடுகளில் வெளிப்படுவதில்லை என்பதால் ஜிடிபி தரவுகள் போதாக்குறையானவை என்கிறார் ஹிமான்ஷூ.

2019-2020 ன் முதல் காலாண்டு -1 (தொற்றுநோய்க்கு முன்) மொத்த நிலையான மூலதன உருவாக்கம் (GFCF) ரூ. 12.3 லட்சம் கோடி. இது 2021-22 காலாண்டில் ரூ. 10.2 லட்சம் கோடியாக குறைந்தது - முதலீடுகளில் 2.1 லட்சம் கோடி சரிவு ஏற்பட்டுள்ளது, பல ‘நிதித்தொகுப்புகளுக்கு’ பின்னும் பெருநிறுவன வரி குறைப்புகள் இருந்தபோதிலும், முதலீடுகள் குறைந்துள்ளதாக மேற்கு வங்க நிதியமைச்சர் அமித் மித்ரா குறிப்பிட்டுள்ளார். 2021-22 முதல் காலாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 56 விழுக்காடாக உள்ள தனியார் நுகர்வு, 2019-2020 தொற்றுநோய்க்கு முந்தைய நிலையை விட 12 விழுக்காடு சரிவடைந்துள்ளது.2021-22 ல் இதுவரை தனியார் நுகர்வு 2017-18ன் தனியார் நுகர்வுக்கு கிட்டத்தட்ட சமநிலையில் பரிதாபத்திற்குரிய நிலையில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மத்திய வங்கி, இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் தரவுகளின் படி ஆகஸ்ட் மாதத்தில் நுகர்வோர் நம்பிக்கை கணிசமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

தலைமைக் கணக்காயர் (CGA) வெளியிட்ட நடப்பு ஆண்டின் முதல் நான்கு மாதங்களுக்கான மத்திய அரசின் நிதித் தரவு பகுப்பாய்வின் படி

  1. தொற்றுநோய் கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், முதல் நான்கு மாதங்களில் அதிக வருவாய் வளர்ச்சி இருந்துள்ளது. முதல் நான்கு மாதங்களில் நிதிநிலை அறிக்கையில் மதிப்பிடப்பட்டதில் 37.4 விழுக்காடு வருவாயையும், 34.2 விழுக்காடு வரி வருவாயையும் மத்திய அரசு பெற்றுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும் போது 194 விழுக்காடு உயர்வையும், 2019-20ன் முதல் நான்கு மாதங்களுடன் ஒப்பிடும் போது 74 விழுக்காடு உயர்வையும் குறிப்பிடுகிறது.
  1. செலவு செய்வதிலும், கடன் பெறுவதிலும் அரசாங்கம் எச்சரிக்கையாக உள்ளது. முதல் நான்கு மாதங்களில் நிதிநிலை அறிக்கையில் மதிப்பீடு செய்ததை விட 29 விழுக்காடு குறைவாகவே செலவு செய்துள்ளது. முந்தைய ஆண்டுகளில் 34-35 விழுக்காடு வரை செலவு செய்துள்ளது. மத்திய அரசு நிதிநிலை அறிக்கையில் மதிப்பிடப்பட்டதில் 21 விழுக்காடே கடன் பெற்றுள்ளது. 2019-20ல் அரசு கடன் விகிதம் 77.8 விழுக்காடாகவும், 2020-21ல் 103 விழுக்காடாகவும் இருந்துள்ளது.

நிதிப் பற்றாக்குறை முதல் நான்கு மாதங்களில் 21.3 விழுக்காடாக மிகக் குறைந்த அளவிலே இருந்துள்ளது. 2020-21ல் நிதிப்பற்றாக்குறை நிதிநிலையறிக்கையில் மதிப்பிடப்பட்டதில் 103 விழுக்காடாகவும், 2019-20ல் 77.8 விழுக்காடாகவும் இருந்துள்ளது.

இந்தப் பகுப்பாய்வு எதைக் குறிப்பிடுகிறது என்றால் மத்திய அரசு இந்த அதிக வருவாயை பயன்படுத்தியும், கூடுதலாக கடன் பெற்றும், முறையாக செலவு செய்திருந்தால், பொதுத்துறை முதலீடுகளை அதிகரித்திருந்தால் மக்களின் நுகர்வும், நிகர வேண்டல் பற்றாக்குறையும் மீட்கப்பட்டு பொருளாதாரம் மீண்டெழப் பயன்பட்டிருக்கும்

செப்டம்பர் மாதத்தில் நடைபெற்ற சரக்கு சேவை வரி அவையின் 45வது கூட்டத்தில் பெட்ரோல், டீசலை சரக்கு சேவை அமைப்புக்குள் கொண்டுவர இயலாது எனவும் கூடுதல் கட்டணம் மூலம் பெரும் சரக்கு சவை வரி இழப்பீட்டு நிதியை மாநில அரசுகளுக்கு 2022க்கு மேல் நீட்டிக்க முடியாது என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது பெரும் ஏமாற்றத்தையே அளிக்கிறது. அதே நேரத்தில் ஆட்டோமொபைல்கள், சிகரெட்டுகள் மற்றும் பான் மசாலா போன்ற பொருட்களின் மீதான கூடுதல் கட்டணத்தை 2026 இறுதி வரை நீட்டிக்க வேண்டும் என்று நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். சரக்கு சேவை வரி அமைப்பால் மாநிலங்களின் வரி வருவாயில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கும்,கோவிட் தொற்று தாக்கத்தை சரியாக சமாளிப்பதற்கும் கூடுதல் செலவினங்களை மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டிய தேவை உள்ளது. ஆனால் மாநிலங்களின் நிதி இறையாண்மையை ஒட்டச் சுரண்டிய பாஜக அரசு குறைந்தபட்சம் நிதி இழப்பீட்டை இன்னும் ஓரிரு ஆண்டுகளுக்கு நீட்டிப்பதற்குகூட முன்வராது மாநிலங்களை நட்டாற்றில் தவிக்க விட்டுள்ளது.

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், இந்தியா மையத்திலிருந்து நிர்வகிக்க முடியாத அளவுக்கு பெரியது என்று அதிகாரப் பரவலாக்கலின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார். அதிக அதிகாரம் அரசுக்கு வழங்கப்படுவதே ஜனநாயகத்தை வலுப்படுத்தும். ஜனநாயகம் செயல்படும் போது கள்ளக்கூட்டு முதலாளித்துவத்தின் பலன்கள் ஒரு சிலருக்கு மட்டுமே போய் சேருவதைத் தடுக்கமுடியும். வங்கிகள் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களின் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். ராஜன் சுகாதாரம், கல்வி செலவினங்கள் குறைக்கப்பட்டுள்ளது அவை அரசால் சரியாக கவனம் செலுத்துவதில்லை என்றும் விமர்சித்துள்ளார்.

பங்குவிலக்கலின் மூலம் பொதுத்துறை நிறுவனங்களின் வருவாயை அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளதாகவும், பங்குவிலக்கல் செயல்முறை பொதுத்துறை நிறுவனங்களின் (PSUs) வருவாயை அதிகரிக்கவும் வேலைவாய்ப்பை உருவாக்கவும் உதவும் என்று துணை நிதியமைச்சர் பகவத் கே காரத் தெரிவித்துள்ளார். பொதுத்துறை நிறுவனங்கள் நாட்டில் 14 லட்சம் மக்களுக்கு வேலை வழங்குகின்றன என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இது எவ்வளவு முன்னுக்குப் பின் முரணான கருத்து. பொதுச் சொத்துக்களை தனியாருக்கு அடிமட்ட விலைக்கு விற்பதை வருவாய் பெற்றுத்தரும் செயல்முறையாக எப்படிக் குறிப்பிடமுடியும். பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயப்படுத்தினால் வேலைவாய்ப்புகள் குறைந்துவிடும், அதில் வேலையிலிருந்தோரின் சமூகப் பாதுகாப்பு அச்சுறுத்தப்படும். பங்கு விலக்கலின் மூலம் வேலைவாய்ப்பை அதிகரிக்க முடியும் என்பது கடைந்தெடுத்த மடத்தனத்தின் உச்சக்கட்டமே. பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் செயலாளர் தருண் கபூரும் இதே போன்ற கருத்துக்களை தெரிவித்துள்ளார். நாட்டின் வளர்ச்சிக்கு பொதுத்துறை நிறுவனங்கள் முக்கிய பங்கு வகித்துள்ளன, தொடர்ந்து அவை அதைச் செய்யும் என்று கூறுகிறார் தருண் கபூர்.

பொதுத்துறை வங்கிகளிடமிருந்து பெறும் பெருநிறுவனங்களின் கடன் தேவை குறைந்துள்ளது. கோவிட்19 ஆல் ஏற்பட்ட நிச்சயமற்ற சூழலில் நிறுவனங்கள் விரிவாக்க செயல்பாடுகளில் ஈடுபடுவதை விடுத்து கடனற்று இருப்பதற்கே முக்கியத்துவம் அளித்துள்ளன. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் (SBI) உள்நாட்டு பெருநிறுவனக் கடன்கள் ஜூன் 2021 காலாண்டில் 2.2 விழுக்காடு குறைந்து ரூ .7.9 லட்சம் கோடியாக உள்ளது, இது கடந்த ஆண்டு இதே காலாண்டில் ரூ .8.1 லட்சம் கோடியாக இருந்துள்ளது. கடந்த காலாண்டில் இந்தியன் வங்கியில் பெருநிறுவனக் கடன்கள் 3 விழுக்காடு குறைந்துள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் பெருநிறுவனக் கடன்கள் 0.6 விழுக்காடு சரிவடைந்துள்ளன.

கடந்த ஆண்டு கோவிட் பொது முடக்கத்தால் சரிவடைந்த தனியார் நிறுவனங்களின் மூலதன முதலீடுகளில் நடப்பு நிதியாண்டிலும் சரிவு ஏற்படலாம் என மத்திய வங்கியின் அறிக்கை தெரிவிக்கிறது. கடந்த ஆண்டுகளில் வங்கிகள்/ நிதிநிறுவனங்களால் ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட கடன் திட்டங்களை அடிப்படையாகக் கொண்ட தரவுகளின் படி 2020-21-ல் 94227 கோடி ரூபாயில் இருந்து 2021-22-ல் 68469 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளதாகவும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அனைத்து நிதியுதவிகளையும் ஒன்றாகக் கருத்தில் கொண்டால், 2020-21-ல் ரூ .1,13171 கோடி ரூபாயாக இருந்த இவற்றின் மதிப்பு 2021-22-ல் ரூ .1,07535 கோடி ரூபாயாக உள்ளது என்றும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு மாறாக, இந்திய பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் (SEBI) தரவுகளின்படி, இந்திய நிறுவனங்கள் பத்திர சந்தையில் இருந்து மொத்தம் 81.8 லட்சம் கோடி ரூபாய் திரட்டியுள்ளன. ஆகஸ்ட் மாதத்திற்குள் பங்குச் சந்தையில் இருந்து கிட்டத்தட்ட 1 லட்சம் கோடி ரூபாய் நிதி திரட்டப்பட்டுள்ளது. வங்கியல்லாத மூலங்களிலிருந்து கடன் பெறும் போக்கு சென்ற ஆண்டு அதிகரித்துள்ளது. இந்த ஆண்டும் இதே நிலை தொடரும் போக்கு காணப்படுகிறது (livemint).

2021ஆம் நிதியாண்டில், தனியார் துறை நிறுவனங்களின் வைப்புத்தொகை 26.5 விழுக்காடு அதிகரித்துள்ளது. மொத்த வங்கி வைப்புத்தொகையில் தனியார் துறை நிறுவனங்களின் பங்கு 2020ல் 11.3 விழுக்காட்டிலிருந்து 2021 இல் 12.7 விழுக்காடாக அதிகரித்துள்ளது.உண்மையில், வங்கி அமைப்பின் வருடாந்திர வைப்புத்தொகையில் வளர்ச்சி இந்த ஆண்டின் தொடக்கத்தில் சுமார் 10 விழுக்காடாக இருந்தது ஆகஸ்ட் மாதத்தில் 8.62 விழுக்காடாகக் குறைந்துள்ளது.

தனியார் வங்கிகள் வங்கிகளுக்கான முன்னுரிமைக் கடன் நெறிமுறைகளை சரியாக பின்பற்றுவதில்லை. வங்கிகள் அவற்றின் மொத்த நிகரக் கடன் தொகையில் 40 விழுக்காடு முன்னுரிமைத் துறைகளுக்கு அளிக்க வேண்டும், அதில் 7.5 விழுக்காடு சிறு குறு நடுத்தர நிறுவனங்களுக்கு அளிக்க வேண்டும் என்று மத்திய வங்கி நெறிமுறை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் பெரும்பாலான வங்கிகள் இதில் 25 விழுக்காட்டிற்கு மேல் சிறு, குறு நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதில்லை என்பதே உண்மை நிலவரம். குறு, சிறு தொழில் நிறுவனங்களுக்கான வரையறையில் சமீபத்தில் செய்யப்பட்ட மாற்றங்களால் 90 விழுக்காட்டுக்கும் மேற்பட்ட தொழில் அலகுகள் குறுந்தொழில்கள் பிரிவில் வருகின்றன. இதனால் முதன்மைத் துறை கடன் நெறிமுறை மேலும் நீர்த்துப் போகும் நிலை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மாறிவரும் பொருளாதார சூழலை சமாளிக்க பாரத ஸ்டேட் வங்கியை போல 4 வங்கிகள் இந்தியாவுக்கு தேவை. பொருளாதார மற்றும் தொழில் துறை வளர்ச்சிக்கு ஈடு கொடுக்கும் வகையிலான பணப்புழக்கத்துக்கு இது அவசியமாகும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து தெரிவித்துள்ளார். சில கிராமப் பகுதிகளில் வங்கிகளின் சேவை போதுமான அளவுக்கு இல்லை என்பதே யதார்த்தமான நிலையாக உள்ளது. இப்பகுதிகளில் வங்கிக் கிளைகளைத் தொடங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதோடு எந்த ஒரு பகுதியிலும் வங்கிக் கிளைகள் இல்லை என்ற நிலை உருவாக வேண்டும் என்றும் கூறியுள்ளார். பெரிய வங்கிகளால் மட்டும் தான் கிராமங்களில் கிளைகள் ஏற்படுத்த முடியுமா என்ன?. உண்மை நிலவரம் இதற்கு நேரெதிராக அல்லவா உள்ளது. பெரிய வங்கிகள் கிராமப்புறங்களை விலக்கி நகர்ப்புறங்களுக்கே முன்னுரிமை அளிக்கும் என்பது தானே உண்மை. நிதியமைச்சர் கூறியதற்கு என்ன பொருள்? வங்கிகளில் எஞ்சியிருக்கும் பொதுத்துறை பங்குகளையும் தனியார்மயப்படுத்த வேண்டும், வங்கிகளை இணைத்து பெரும் வங்கியாக்கி கிராமங்களில் ஏற்கெனவே இயங்கிவரும் வங்கிக் கிளைகளையும் மூடவேண்டும் என்று உட்பொருள் கற்பிக்கிறாரா எனத் தெரியவில்லை. ஏனென்றால் பெரிய, சிறந்த, திறன் மிக்க ஆகிய சொல்லாடல்கள் தனியார்துறையை குறிக்கும் பொருளிலே பயன்படுத்தப்படுகிறது.

இந்தியாவில் ஒரு சராசரி விவசாயக் குடும்பம் 2018-2019 ஆம் ஆண்டில் மாதம் ரூ. 10,218 ஈட்டியதாக தேசிய மாதிரி கணக்கெடுப்பு அலுவலகத்தின் தரவுகளின் மூலம் தெரிய வந்துள்ளது. 2012-2013ல் ஒரு மாதத்திற்கு மாத வருவாய் ரூ.6,426 ஆக இருந்துள்ளது. இது ஆறு ஆண்டுகளில் சுமார் 60 விழுக்காடு பெயரளவிலான வருவாய் வளர்ச்சியைக் குறிக்கிறது. இருப்பினும், கிராமப்புற நுகர்வோர் விலைக் குறியீட்டைப் பயன்படுத்தி பணவீக்கத்தை சரிசெய்த பிறகு, விவசாயிகளின் வருவாய் இந்த காலகட்டத்தில் உண்மையாக 21 விழுக்காடு மட்டுமே வளர்ந்துள்ளது. இந்தியாவின் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி (பொருளாதாரத்தின் உண்மையான அளவு) அதே காலகட்டத்தில் 52 விழுக்காடு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய மாதிரிக் கணக்கெடுப்பு அலுவலகத்தின் 2019 கணக்கெடுப்பின் படி சராசரியாக ஒரு விவசாய குடும்பத்தின் கடன் சுமை ரூ.74,121ஆக இருந்துள்ளது. இப்போது கோவிட் தொற்றுத் தாக்கத்திற்கு பின் இந்த கடன் அளவு இன்னும் அதிகரித்திருப்பதற்கான வாய்ப்புகளே உள்ளன. வங்கிகள், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் அரசு சார்ந்த நிதி அமைப்புகளில் பெற்ற கடன் தொகை 69.2 விழுக்காடாகவும், தனியாரிடம் பெற்ற கடன் 20 விழுக்காடாகவும், மொத்த கடன் தொகையில் விவசாயத்துக்காக பெறப்பட்டவை 57.5 விழுக்காடாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.

பணவீக்கம்:

மொத்த விலை பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில் 11.39 விழுக்காடாக உயர்ந்துள்ளது, எரிபொருள், ஆற்றலின் விலைவாசி 26.09 விழுக்காடு உயர்ந்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் நுகர்வோர் குறியீடு அடிப்படையிலான சில்லறை பணவீக்கத்தின் அளவு 5.30 விழுக்காடு அதிகரித்துள்ளது, உணவுப் பொருட்களின் விலைவாசி 3.11 விழுக்காடு அதிகரித்துள்ளது. காய்கறிகளின் விலைவாசி 11.68 விழுக்காடு குறைந்துள்ளது. பழங்களின் விலைவாசி 6.69 விழுக்காடு உயர்ந்துள்ளது. பருப்பு வகைகளின் விலைவாசி 8.81 விழுக்காடு அதிகரித்துள்ளது. முட்டையின் விலை 16.33 விழுக்காடு உயர்ந்துள்ளது. எண்ணெய், கொழுப்பு ஆகியவற்றின் விலைவாசி 33.00 விழுக்காடு அதிகரித்துள்ளது. மீன், இறைச்சியின் விலைவாசி 9.19 விழுக்காடு உயர்ந்துள்ளது.

ஜூலை மாதத்தில் தொழில்துறை வளர்ச்சி:

புள்ளியியல் அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட தொழில்துறை உற்பத்திக் குறியீட்டு அறிக்கையின் படி ஜூலை மாதத்தில் உற்பத்தி 11.5 விழுக்காடு உயர்ந்துள்ளது. முதன்மைத் துறைகளில் சுரங்கத் துறை, செய்பொருளாக்கத் துறை, மின்சாரத் துறை ஆகியவற்றில் உற்பத்தி முறையே 19.5, 10.5, 11.1 விழுக்காடு உயர்ந்துள்ளது. சென்ற ஆண்டு ஜூன் மாதத்தில் பொதுமுடக்கத்தின் தாக்கத்தால் உற்பத்தி சரிவடைந்ததன் அடிப்படையில் இந்த உயர்வை புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். முதன்மை பொருட்கள், மூலதனப் பொருட்கள், இடைநிலைப் பொருட்கள், கட்டுமானப் பொருட்கள், உற்பத்தி அளவுகள் முறையே 12.4, 29.5, 14.1, 11.6 விழுக்காடு உயர்ந்துள்ளன. உடனடி நுகர்வுப் பொருட்களின் உற்பத்தி 1.8 விழுக்காடு குறைந்துள்ளது. நீடித்த நுகர்வுப் பொருட்களின் உற்பத்தி 20.2 விழுக்காடு குறைந்துள்ளது.

ஆகஸ்டில் தொழில்துறை வளர்ச்சி:

இந்தியாவின் தொழில்துறை, உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை வெளியிட்ட எட்டு முக்கிய தொழில்களின் ஒருங்கிணைந்த உற்பத்திக்குறியீடு ஆகஸ்டில் 11.6 விழுக்காடு அதிகரித்துள்ளது. சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாத உற்பத்தி அளவோடு ஒப்பிடும் போது நிலக்கரி உற்பத்தி 20.6 விழுக்காடு அதிகரித்துள்ளது. கச்சா எண்ணெய் உற்பத்தி 2.3 விழுக்காடு குறைந்துள்ளது, பெட்ரோலிய சுத்திகரிப்பு பொருட்களின் உற்பத்தி 9.1 விழுக்காடு அதிகரித்துள்ளது. உர உற்பத்தி 3.1 விழுக்காடு குறைந்துள்ளது. இயற்கை எரிவாயு உற்பத்தி 20.6 விழுக்காடும், எஃகு உற்பத்தி 5.1 விழுக்காடும், சிமெண்ட் உற்பத்தி 36.3 விழுக்காடும், மின்சார உற்பத்தி 15.3 விழுக்காடும் அதிகரித்துள்ளது.

உலக வங்கி எளிதாக வர்த்தகம் செய்வது தொடர்பான அறிக்கையை வெளியிடுவதை நிறுத்தியுள்ளது, நாடுகள் எந்தளவிற்கு நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்படுகின்றன என்பது இந்த அறிக்கையில் மதிப்பீடு செய்யப்பட்டது. உலகெங்கிலும் உள்ள பல நிறுவனங்களும் முதலீட்டாளர்களும் இந்த அறிக்கைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வந்தனர். உலக வங்கியின் "எளிதாக வர்த்தகம் செய்வது தொடர்பான" அறிக்கையைப் பயன்படுத்தி பணத்தை எங்கு முதலீடு செய்வது, உற்பத்தி ஆலைகளை எங்கு திறப்பது அல்லது பொருட்களை எங்கு விற்பனை செய்வது என்பது தொடர்பாக முடிவு செய்யப்பட்டது. 2002ல், உலக வங்கி இந்த அறிக்கையை அறிமுகப்படுத்தியது, அதன் வருடாந்திர தரவரிசையில் எந்தெந்த நாடுகள் வர்த்தக நிறுவனங்களுக்கு சாதகமான தாராளமயக் கொள்கைகளை செயல்படுத்துகின்றன என்பது மதிப்பீடு செய்யப்பட்டது. அரசமைப்புகள் உள்நாட்டு நிறுவனங்களை எப்படி நடத்துகின்றன என்பது குறித்தே இதில் மதிப்பிடப்படுகிறது என்ற போதிலும், இந்தத் தரவரிசை பெரும்பாலும் ஊடகங்கள் மற்றும் முதலீட்டாளர்களால், தேச அரசுகள் அந்நிய முதலீடுகளுக்கு எவ்வளவு சாதகமாக இருக்கின்றன என்பதற்கான அடிப்படையாகவே கருதப்படுகிறது.

இந்த அறிக்கையில் வெளிப்படைத் தன்மை இல்லை என்று 2018ல் அப்போதைய உலக வங்கியின் தலைமை பொருளாதார நிபுணர் பால் ரோமர், பதவி விலகினார். தென் அமெரிக்க நாடான சிலியில் சோசலிசவாதி மைக்கேல் பேச்லெட் அதிபரான பிறகு சிலி தரவரிசையில் கீழே தள்ளப்பட்டது, பழமைவாத கட்சியை சேர்ந்த செபஸ்டியன் பினேராவின் ஆட்சியில் சிலிக்கு உயர்ந்த தரம் அளிக்கப்பட்டது, மீண்டும் மைக்கேல் பேச்லெட் ஆட்சிக்கு வந்த போது மீண்டும் சிலி மீண்டும் கீழே தள்ளப்பட்டது இந்த நேரங்களில் எந்தக் கொள்கை மாற்றமும் செய்யப்படாத போதும் தரவரிசையில் ஏற்ற இறக்கங்களுக்கு உட்படுத்தப்பட்டது என்று உலக மேம்பாட்டு மையம் குறிப்பிடுகிறது.

உலக மேம்பாட்டு மையத்தைச் சேர்ந்த ஜஸ்டின் சாண்ட்பர் கூறுகிறார் உலகவங்கியின் இந்தத் தரவரிசை எப்போதும் பொருளாதாரத்தில் அரசாங்கத்தின் தலையீட்டிற்கு எதிரான போக்குடையதாகவும், அரசு செலவினம், தொழிலாளர், நுகர்வோர் பாதுகாப்பு ஆகியவற்றை சரியாக மதிப்பிடுவதில்லை என்றும், ஒழுங்குமுறைக்கு, வரிவிதிப்பு ஆகியவற்றுக்கு எதிரான தனியார் ஆதரவு போக்கைக் கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

உலக வங்கியின் எளிதாக வர்த்தகம் செய்வது தொடர்பான அறிக்கை வெளிப்படைத்தன்மை இல்லாது அழுத்தத்திற்கு அடிபணிந்து தரவுகளை மாற்றி வெளியிடுகிறது என்று குற்றம் சாட்டப்பட்டது. 2018, 2020 பதிப்பு அறிக்கைகளின் மீதான உள்ளக தணிக்கையில் முறைகேடுகள் கண்டறியப்பட்டதை அடுத்து, இந்த அறிக்கையை வெளியிடுவதை நிறுத்த உலக வங்கி குழு முடிவு செய்துள்ளது. விசாரணையின் படி, அழுத்தத்தின் காரணமாக சீனாவிற்கு உயர்ந்த தரமதிப்பீடு அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. உலக வங்கியின் இந்த முடிவு வரவேற்கத்தக்கது ஏனென்றால் தேச அரசுகளின் பொருளாதார சுதந்திரத்தை ஒடுக்கும் கருவியாகவே இவ்வறிக்கை இதுவரை பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அரசுகள் உயர்ந்த தரமதிப்பீட்டை பெற தாராளமய சீர்திருத்தங்களை மேற்கொள்ளுமாறு நிர்பந்திக்கப்பட்டன. இதனால் பொது சமூகத் துறைகள் புறக்கணிக்கப்பட்டன, அரசு செலவினங்கள் குறைக்கப்பட்டன. மக்கள் சார் பொருளாதார நடவடிக்கைகளை செயல்படுத்தவிடாமல் தடுக்கும் கருவியாகவே இந்த அறிக்கை இருந்து வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் தேசிய மாதிரி கணக்கெடுப்பு அலுவலகம் மேற்கொண்ட கணக்கெடுப்பின் தரவுகளில் 10 விழுக்காடு பணக்காரர்களிடம் இந்தியாவின் 50 விழுக்காடு சொத்துகள் உள்ளதாகத் தெரியவந்துள்ளது. நகர்ப்புற பகுதிகளில் 55.7 விழுக்காடு சொத்துகள் 10 விழுக்காடு பணக்காரர்களிடமும், கிராமப் பகுதிகளில் 50.8 விழுக்காடு சொத்துக்கள் 10 விழுக்காடு பணக்காரர்களிடமும் உள்ளது. மிகவும் கீழ்நிலையில் உள்ள ஏழைகளிடம் ஒட்டுமொத்த சொத்துகளில் 5 விழுக்காட்டிற்கும் குறைவாகவே இருக்கின்றது. நாட்டில் கிராமப் பகுதிகளில் ஒட்டுமொத்தமாக உள்ள ரூ.238.1 லட்சம் கோடி சொத்துகளில் 10 விழுக்காடு பணக்காரர்களிடம் ரூ.132.5 லட்சம் கோடி சொத்துகள் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. சொத்து வரியை மீண்டும் கொண்டு வர வேண்டியதன் அவசியத்தையே இத்தரவுகள் தெரிவிக்கின்றன.

சுவிட்சர்லாந்தில் இருந்து இந்தியா பாடம் கற்க வேண்டும். மூலதனத்திற்கு வரி விதிப்பது மட்டுமே வளர்ச்சியை அதிகரிக்கவும் சமத்துவமின்மையைக் குறைக்கவும் விவேகமான வழியாகும் என்பதை அங்கீகரித்து பொது வாக்கெடுப்பு சுவிட்சர்லாந்தில் நடத்தப்பட்டது. ஊதியங்களின் மீதான வரியைக் குறைக்கவும், மூலதனத்தை நியாயமான வரிக்குட்படுத்தவும் 99 விழுக்காட்டினரால் ஏற்படுத்தப்படும் முன்முயற்சி என்று இந்த முன்னெடுப்பு சோசலிச இளைஞர் குழுவால் தொடங்கப்பட்டது, இது ஒரு விழுக்காடு பெரும் பணக்காரர்களின் மூலதன வருவாய் மீதான வரியை 150 விழுக்காடு அதிகரித்து அதில் கிடைக்கும் வருவாயை மீதமுள்ள மக்களுக்கு மறுபங்கீடு செய்யவேண்டும் என்ற அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டது.இது செயல்படுத்தப்பட்டால் சுவிட்சர்லாந்து அரசு 500 முதல் 1000 கோடி ஃபிராங்குகள்(சுவிஸ் நாணயம்) கூடுதல் வருவாயைப் பெற முடியும். ஆனால், அரசு உட்பட அரசியல் கட்சிகளும், வர்த்தக வட்டாரங்களும் இந்த முயற்சியை நிராகரிக்குமாறு வாக்காளர்களை வலியுறுத்தி எதிர் பரப்புரை செய்துள்ளன. செப்டம்பர் 26ல் மேற்கொள்ளப்பட்ட இந்தப் பொதுவாக்கெடுப்பில் சுவிட்சர்லாந்து வாக்காளர்களில் 64.10 விழுக்காட்டினர் மூலதனத்தின் மீது கூடுதல் வரி விதிப்பதை நிராகரித்து வாக்களித்துள்ளனர். ஆனபோதும் மற்ற நாடுகளுக்கு வழிகாட்டும் நல்லதொரு முன்முயற்சியாகவே இதைக் குறிப்பிட வேண்டும். பொது வாக்கெடுப்பு உண்மையான ஜனநாயகத்திற்கு வழிகோலுவதற்கான அருமையான கருவிகளில் ஒன்று நம் நாட்டிலும் அதை பெருவாரியாக பயன்படுத்துவதற்கான வழிவகையை ஏற்படுத்த வேண்டும்.

சமந்தா