தமிழ்நாட்டில் செவ்வியக்கம் தோற்றுவித்த செம்பாவலர்களில் முதன்மையான ஒருவர் தோழர் தணிகைச் செல்வன். வெறும் பாவலராகவே நின்று விடாமல் திறமிகு குமுக அறிவியல் கோட்பாட்டளராகவும் திகழ்ந்தவர், இன்றும் திகழ்ந்து வருகிறவர் என்பது இவர்க்குரிய தனிச்சிறப்பு.

என்னைப் பொறுத்த வரை முப்பதாண்டு காலத்துக்கும் மேலாக அவரைப் பின்தொடர்ந்து வருகிறேன். அவரது அழகொளிர் பாத்திறனையும் ஆழ்ந்த மார்க்சிய ஆய்திறனையும் நன்கறிவேன். நான் 1985ஆம் ஆண்டு சிறையிலிருந்து விடுதலையான பின் மதுரையில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கட்சி மாநாட்டில் தமுக்கம் கலையரங்கு நிறைந்து வழிந்த கூட்டத்தில் அவர் தெறிக்க விட்ட சரவெடிக் கவிதையில்தான் “ஓ, கவிஞர் தணிக்கைச் செல்வன்!” என்று அறிமுகம் பெற்றேன்.

மார்க்சிஸ்ட் கட்சிக்குள் தேசிய இனச் சிக்கல் தொடர்பாக நடைபெற்ற விவாதத்தில் தோழர் தணிகைச் செல்வனின் பங்கிற்கு இந்த நூலின் வரவேற்புரையே பதமாகும். தோழர் தணிகையின் முன்மொழிவை மதிப்பிற்குரிய தோழர் ‘ஏபி’ (ஏ. பாலசுப்பிரமணியன்) அவர்கள் ஆர்வத்துடன் வழிமொழிந்தும் ‘மற்றவர்கள்’ மறுதலித்தமை சிபிஎம் கட்சியின் முதற்கோணலாகிப் போயிற்று.

தணிகை எழுதிய சிபிஎம் -எதிர்- சிபிஎம் என்ற நூல் என்னைப் போன்ற பலருக்கும் அக்கட்சியின் முன்பின்முரணிலைகளை வெளிச்சமிட்டுக் காட்டிற்று.

பொதுமையராய் இருப்பதும் பொதுமைக் கட்சியில் உறுப்பினராய் இருப்பதும் ஒன்றல்ல. மார்க்சிஸ்ட் கட்சியிலிருந்து கொள்கை மாறுபாடுகளுக்காக நீக்கப்பட்ட பிறகு, பார்க்கப் போனால் அவ்வாறு நீக்கப்பட்ட பிறகுதான், தோழர் தணிகையின் மார்க்சிய ஆய்வுநோக்கு மேலும் சுடர் விட்டுள்ளது. பாட்டாளியத்துக்கும் தலித்தியத்துக்கும் தமிழியத்துக்குமான முக்கூடலை இயங்கியலாக அவர் விளக்கி எழுதியிருக்கும் பல எழுத்துகளைச் சான்றாகக் குறிப்பிடலாம்.

ஆட்சி மாற்றமும் அடிப்படை மாற்றமும் என்ற இந்நூலை ஒரு மார்க்சிய அரிச்சுவடியாக அவர் வடித்துக் கொடுத்துள்ளார். ஈழத்தமிழர் இனவழிப்பின் தாக்கத்தால் இருபத்தோராம் நூற்றாண்டின் தொடக்க ஆண்டுகளில் தமிழ்நாட்டில் இளைஞர்களின் அரசியல் ஈடுபாடு பெருகியுள்ளது. இந்த இளைஞர்களின் உணர்வியல் ஆர்வத்துடிப்புக்கு அறிவியல் உரமூட்ட வேண்டியுள்ளது. ஆட்சிமாற்ற முழக்கங்களின் பின்னால் எளிதில் இழுபடும் இந்த இளையோர் கூட்டத்துக்கு அடிப்படை மாற்றத்தின் தேவையை உணர்த்தும் கடமையை தணிகையின் இந்நூல் செவ்வனே செய்துள்ளது.

கார்ல் மார்க்சும் பிரெடெரிக் எங்கெல்சும் என்ன செய்து விட்டார்கள்? “கனவுகளின் இடத்தில் அறிவியலை அமர்த்தினார்கள்” என்பார் இலெனின்.

தமிழ்நாட்டு இளைஞர்களின் விடியற்கனவுகள் ஆட்சிமாற்றம் என்று சுருங்கி ஆள் மாற்றம் என்றே கருகி விடக் கூடாது என்று இந்த முதிர்பாவலர் கவலையுற்றதால் அடிப்படை மாற்றத்தின் தேவையை மார்க்சிய வெளிச்சத்தில் படம் பிடித்துக் காட்டியுள்ளார்.

அரசியல் ஆர்வமுள்ள இளைஞர்கள் – அகவை கூடியிருந்தாலும் மனத்தால் இளைஞர்களாகவே இருப்பவர்களும் கூட – இந்நூலைப் படித்துப் பயன் பெற வேண்டும். ஆனால் அரிச்சுவடியோடு படிப்பை நிறுத்திக் கொண்டுவிடக் கூடாது என்று அன்போடு எச்சரிக்கக் கடமைப்பட்டுள்ளேன்.

இந்நூலில் இந்திய நாட்டு முதலாளர்களை வகைப்படுத்திக் குணங்குறிக்கும் பகுதி (பக்கம் 49) குறித்துச் சில கூடுதல் குறிப்புகளைத் தர வேண்டுமெனக் கருதுகிறேன். எளிமைப்படுத்தி சொல்ல வேண்டும் என்ற தணிகையின் அக்கறையைப் புரிந்து கொள்கிறேன். அதே போது மிகையெளிமை குறை செய்யும் என்ற கவலையோடு இந்தக் குறிப்புகளைத் தருகிறேன்:

தரகு முதலாளர், வணிக முதலாளர், வட்டி முதலாளர், தொழில் முதலாளர், வங்கி முதலாளர், நிதிமுதலாளர் என்பன இலாபமீட்டும் வழிமுறை சார்ந்த பொருளியல் வகையினங்கள் (economic categories). சிறு முதலாளர், பெருமுதலாளர் என்ற பாகுபாடு முதலின் அளவை மட்டும் காட்டும். ஒரு பெருமுதலாளர் வணிகமுதலாளராகவோ தொழில் முதலாளராகவோ இருக்கலாம். நிதிமுதல் ஆளும் முற்றாளுமை முதலாளராகவே கூட இருக்கலாம். தேசிய முதலாளர் என்பதும் வல்லரசிய முதலாளர் என்பதும் சமூக-அரசியல் வகைப்பாடுகள் (socio-political classifications).

இந்திய ஆளும் வகுப்பாகிய முதலாளர்களை எடுத்துக் கொள்வோம். இவர்கள் கொழுத்த முதல் கொண்டவர்கள் என்பதால் பெருமுதலாளர்கள். வங்கி முதலையும் தொழில் முதலையும் இணைத்துக் கொண்ட நிதி முதலாளர்கள். அங்காடியில் போட்டிகளை ஒழித்து வரும் ஏகபோக (முற்றாளுமை) முதலாளர்கள். இந்திய அளவிலும் பன்னாட்டளவிலும் பல்வேறு தேசங்களுக்கும் நிதிமுதல் ஏற்றுமதி செய்து அரசியல் ஆளுகையை விரிவாக்க முயலும் அளவில் வல்லரசிய ஏகாதிபத்திய) முதலாளர்கள்.

இவர்களை இடம்பொருள்ஏவல் கருதி முதலளவைப் பொறுத்து பெருமுதலாளர்கள் என்றும், முதலியல்பைப் பொறுத்து முற்றாளுமை (ஏகபோக) முதலாளர்கள் என்றும், அரசியல் ஆளுகையைப் பொறுத்து வல்லரசிய (ஏகாதிபத்திய) முதலாளர்கள் என்றும் வரையறை செய்யலாம்.

அரசின் வகுப்பியல்பு (வர்க்கத் தன்மை), புரட்சியின் கட்டம், புரட்சியின் மூலவுத்தி, புரட்சியின் போர்முனைகள் ஆகியன குறித்து இந்தியப் பொதுமை இயக்கத்தின் கூறுகளுக்கிடையிலான வேறுபாடுகளைப் பட்டியலிடுவதோடு தமிழ்நாட்டில் மாற்றம் விரும்புவோர் இவ்வகையில் செய்ய வேண்டிய தேர்வுகளையும் சுட்டி நிற்கிறது இந்நூல். முதன்மை முரண்பாடு இந்திய வல்லரசுக்கும் தமிழ்த் தேசத்துக்குமான தேசிய முரண்பாடே என்று கூர்மையாகச் சுட்டுவது சிறப்பு!

சமூகத்தின் அடிக்கட்டுமானத்தில் சாதிக்குள்ள இடம் குறித்து கார்ல் மார்க்சின் மடல் ஒன்றிலிருந்து நறுக்கென்ற ஒரு சொல்லியத்தை எடுத்துக்காட்டியிருப்பது இவ்வகையில் ஆய்வு மாணவனாகிய எனக்குக் கருத்துக்குரியதாய் இருந்தது. மார்க்சின் இந்தப் பார்வையை என்னால் சாதி குறித்தான அம்பேத்கரின் சுடர்மிகு ஆய்வுகளில் உய்த்துணர முடிகிறது. அடிக்கட்டுமானம். மேற்கட்டுமானம் ஆகிய இரு தளங்களிலும் சாதியின் இருப்பை இயங்கியல் வழியில் விண்டுரைக்க நம் கவிஞர் மேலும் நமக்கு வழிகாட்ட வேண்டும்.

மார்க்சைக் கற்று மார்க்சே எல்லாம் என்றிருப்பதும் தமிழைக் கற்று தமிழே எல்லாம் என்றிருப்பதுமான இரட்டை இறுமாப்புகளையும் விலக்கி, மார்க்சையும் தமிழையும் கற்றவர், பணிவுடன் கற்றுக் கொண்டே இருப்பவர் என்பதால்தான் இயங்கியலுக்கும் பொருண்மியத்துக்கும் குறள் விளக்கம் தர தணிகையால் முடிகிறது. (பொருண்மியம் = பொருள்முதல்வாதம் = materialism). 

இந்நூலைப் படியுங்கள். இது உங்கள் பசியைத் தணிக்காது, தூண்டும்! மென்மேலும் தூண்டும்! தணிக்கத் தணிக்க எழும் அறிவுப் பசியைத் தணிக்கத் தணிக்கத் தணிகை நூல் உங்களைத் தூண்டும்!

(நூல் இன்னும் வெளிவரவில்லை. விரைவில் வெளிவரும்.)

- தியாகு