பணவீக்கம் என்ற சொல்லை நாம் கேள்விப்பட்டிருப்போம். பொருளாதார செய்திகளில் பணவீக்கம் என்ற சொல் அடிக்கடி பயன்படுத்தப்படுவதைக் காண்கிறோம். கடந்த இரண்டு வருடங்களாக இந்தியாவில் பண வீக்கத்தின் அளவு அதிகரித்துள்ளது. பண வீக்கத்தை பற்றி முழுமையாக புரிந்து கொள்ள வேண்டியதன் அவசியத்தையே இச்சூழல் கோருகிறது இல்லையா? ஆகவே பணவீக்கம் என்றால் என்ன, என்பதைத் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

சரக்குகள், சேவைகளின் விலையில் ஏற்படும் உயர்வே பண வீக்கம் எனப்படுகிறது.அதாவது பணத்தின் வாங்கும் திறனில் ஏற்படும் வீழ்ச்சியே பணவீக்கம் ஆகும்.மேற்கூறிய இரண்டையும் ஒன்றிணைத்துப் புரிந்துகொள்வோமானால் பொருட்களின் மதிப்பு அதிகரித்து, பணத்தின் மதிப்பு குறைவதே பணவீக்கம் எனப்படுகிறது. பணவீக்கம் அதிகரிக்கும் போது பணத்தின் வாங்கும் திறன் குறைகிறது.

நாம் பொதுவாகப் பயன்படுத்தும் ஒரு பொருளின் விலையில் ஏற்படும் உயர்வுக்கு இணையாக மற்றொரு நுகர்வுப் பொருளின் விலையில் தாழ்வு ஏற்படுமானால் அது நம் வாங்கும் திறனிலோ, நுகர்விலோ பெரியத் தாக்கத்தை ஏற்படுத்தாது. பொதுவாக பெருவாரியான பொருள்களின் விலைவாசியில் ஏற்படும் உயர்வே பணவீக்கம் எனப்படுகிறது.ஓரிரு பொருட்களின் விலைகளில் ஏற்படும் உயர்வை பண வீக்கம் என்று குறிப்பிட முடியாது. பணவீக்கம் பலதரப்பட்ட பொருட்கள், சேவைகளின் விலை மாற்றங்களின் ஒட்டுமொத்த தாக்கத்தை அளவிடுகிறது. ஒரு பொருளாதாரத்தில் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் பொருள்கள் மற்றும் சேவைகளின் விலைவாசி நிலவரத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் குறியீடாக பணவீக்கம் பயன்படுத்தப்படுகிறது.

ஒரு பொருளின் விலை நேற்று அதிகரித்திருந்தது, இன்று வீழ்ச்சியடைந்துள்ளது என்றால் அதை பணவீக்கம் எனக் குறிப்பிட முடியாது. ஒரு பொருளின் விலை ஒரே நாளிலே பல ஏற்ற இறக்கங்களுக்கு உட்படலாம். உதாரணமாக பங்குச் சந்தையில் ஒரு பங்கின் விலை ஒரு நாளைக்குள் பல்வேறு முறை ஏறி இறங்குகிறது. அதை பணவீக்கம் என்ற வரையறைக்குள் குறிப்பிட முடியாது, குறுகிய கால ஏற்ற இறக்கங்கள் என்றே குறிப்பிட முடியும்.

ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில், சில பொருட்களின் விலைகள் உயர்ந்திருக்கலாம், சில பொருட்களின் விலை வீழ்ச்சியடைந்திருக்கலாம். இதன் விளைவாக, ஒட்டுமொத்தமாக, இந்த விலைகளின் சராசரி மாறாமல் இருக்கலாம் அல்லது குறையலாம். இத்தகைய நிகழ்வால் பணவீக்கம் அதிகரிக்காது. பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகளில் ஏற்படும் நிலையான உயர்வு அல்லது பொது சராசரி விலைகளின் தொடர்ச்சியான உயர்வுக்கான போக்கு பணவீக்கம் எனப்படுகிறது.

பொருளாதாரத்தின் மொத்த வெளியீட்டில் ஒரு சிறு பங்கே வகிக்கும் பொருட்களின் விலை உயர்வும் பணவீக்கத்தை அதிகரிக்காது. அதாவது, அனைத்து பொருட்களின் சராசரி விலை மட்டத்தையும் பாதிக்காத அளவிற்கு அத்தகைய பொருட்களின் விலை உயர்வின் விளைவு மிகச் சிறியதாக இருக்கும். ஆகவே ஒரு பொருளின் விலை உயர்வையோ, ஒரு சிறுங்குழுமப் பொருட்களின் விலைகளில் ஏற்படும் உயர்வையோ பணவீக்கம் குறிப்பிடாது. பொதுவாக பெருவாரியான பொருள்களின் விலைவாசியில் ஏற்படும் உயர்வே பணவீக்கம் எனப்படுகிறது பணவீக்கம் என்பது ஒரு ஒரு பெரும பொருளாதார நிகழ்வாக உள்ளது.

பணவீக்கம் நம் அன்றாட வாழ்க்கையில் எத்தகையத் தாக்கத்தை ஏற்படுத்துகிறது?.பொருட்களின் விலைகள் உயரும் போது நாணயம் மதிப்பை இழப்பதால் ஓரலகு நாணயத்தைக் கொண்டு முன்னர் வாங்கியதைக் காட்டிலும் குறைவான பொருட்கள் அல்லது சேவைகளையே வாங்க முடிகிறது.

உதாரணமாக ஒரு கிலோ அரிசியின் விலை 20 ரூபாய் என்றும், ஒரு மாதத்திற்கு ஒரு நபருக்கு 5 கிலோ அரிசி தேவைப்படுகிறது எனவும் வைத்துக் கொள்வோம். அப்படி என்றால் அவர் ஒரு மாதத்திற்கு அரிசி நுகர்விற்காக 100 ரூபாய் செலவு செய்கிறார். ஆனால் விலைவாசி உயர்வால் அரிசியின் விலை 20 ரூபாயிலிருந்து 25 ரூபாயாக உயரும் எனில் அவர் 100 ரூபாயைக் கொண்டு 4 கிலோ அரிசியை மட்டுமே வாங்கமுடியும், முன்பு போல் 5 கிலோ அரிசியை வாங்கமுடியாது. ஐந்து கிலோ அரிசியை வாங்கவேண்டுமெனில் அவருக்கு 125 ரூபாய் தேவைப்படும் அதாவது கூடுதலாக 25 ரூபாய் தேவைப்படும்.

மேற்கூறிய எடுத்துக்காட்டில் அரிசியை மட்டுமே குறிப்பிட்டுள்ளோம். ஆனால் அன்றாட வாழ்வில் நாம் வெறும் அரிசியை மட்டும் நுகர்வதில்லை பல்வேறு பொருட்களையும், சேவைகளையும் நுகர்கிறோம்.இங்கே நுகர்வு என்பதை பயன்பாடு என்ற பொருளில் குறிப்பிடுகிறோம். நுகர்வு என்பது பொதுவாக பல்வேறு பொருட்களையும், சேவைகளையும் பயன்படுத்துவதையே குறிப்பிடுகிறது.

பொதுவாக எளிய மக்களின் வருவாய் நிலையானததாகவும், மாறாததாகவும் இருக்கிறது. ஊதிய உயர்வு அனைவருக்கும் கிடைப்பதில்லை, அப்படிக் கிடைத்தாலும் ஒரு ஆண்டுக்கோ அல்லது பல ஆண்டுகளுக்கோ ஒரு முறையோ அளிக்கப்படுகிறது. ஆனால் பணவீக்கம்/விலைவாசி உயர்வு என்பது அவ்வாறு நிலையானதாக இல்லை எப்பொழுது வேண்டுமானாலும் மாற்றத்திற்கு உட்படலாம். ஒரு நபரின் அல்லது குடும்பத்தின் வருவாய் நிலையாக இருக்கும் போது விலைவாசியில் ஏற்படும் உயர்வு, பணவீக்கத்தில் ஏற்படும் அதிகரிப்பு அவர்களின் வருவாயின் உண்மையான மதிப்பைக் குறைக்கிறது. பணவீக்கம் நிலையான வருவாய் பெறுபவர்களின் வாங்கும் திறனை குறைக்கிறது.இதனால் பணவீக்கத்தில் ஏற்படும் உயர்வு எளிய மக்களின் வாங்கும் திறனையும், அதன் மூலம் நுகர்வுத்திறனையும் குறைப்பதன் மூலம் அவர்களை கடுமையாக பாதிக்கிறது.

பணவீக்கம் சமூகத்தின் பல்வேறு பிரிவினரை வெவ்வேறு விதத்தில் பாதிக்கிறது. தொழிலாளர்கள், தினக்கூலி பெரும் ஏழை எளிய மக்களின் வாழ்க்கைத் தரம் பணவீக்கத்தால் அரிக்கப்படுகிறது. ஆனால் மூலதனமும், நிறுவனங்களும் லாபம் குறைந்துவிடும் என்பதால் விலைவாசிக் குறைவையோ, குறைந்த பணவீக்கத்தையோ விரும்புவதில்லை. விலை உயர்வு நிறுவனங்களின் உற்பத்தியையும், லாபத்தையும் அதிகரிப்பதால் பணவீக்கம் நிறுவனங்களுக்கு உற்பத்தியை விரிவுபடுத்துவதற்கும் இலாபத்தை அதிகரிப்பதற்கும் உதவுகிறது.

உயர்ந்த பணவீக்கம் நிறுவனங்களின் உற்பத்தி செலவுகளை அதிகரிக்கிறது என்பதால் மூலதனம்/நிறுவனங்கள் அதை விரும்புவதில்லை என்பதையும் குறிப்பிட வேண்டும். அதே நேரத்தில் பணவாட்டத்தையும் நிறுவனங்கள் விரும்புவதில்லை. பொருட்களின் விலைவாசி குறைந்து வீழ்ச்சியடையும் போக்கு பணவாட்டம் எனப்படுகிறது. பொருளாதாரம் மந்த நிலையில் இருக்கும் போது இத்தகைய நிலை ஏற்படலாம். இது நிறுவனங்களின் வருவாய்களில் வீழ்ச்சியை ஏற்படுத்துகிறது. மிதமான பணவீக்கமே முதலாளித்துவ பொருளாதார உற்பத்திமுறைக்கு ஏற்றதாகக் கருதப்படுகிறது.

ஏழை மற்றும் நிலையான வருவாய் ஈட்டுபவர்கள் தான் பணவீக்கத்தால் மோசமாக பாதிக்கப்படுகின்றனர். இந்திய மக்கள் தொகையில் பெரும்பான்மையானவர்கள் தினக்கூலி பெறும் தொழிலாளர்களாகவும், விவசாயக் கூலிகளாகவும் உள்ளனர். அவர்களிடம் எந்த சேமிப்பும் கிடையாது என்பதால் பணவீக்க உயர்வு அவர்களின் வாங்கும் திறனையும், நுகர்வையும் கடுமையாக பாதிக்கிறது. அரசு ஊழியர்கள் போன்ற அமைப்பு சார் ஊழியர்களின் ஊதியம் பணவீக்கத்தோடு இணைக்கப்பட்டு தகுந்த அகவிலைப்படி அளிக்கப்படுமானால் அவர்கள் பணவீக்கத்தால் பாதிக்கப்பட மாட்டார்கள்.

நிலம் போன்ற கட்புலனாகும் சொத்துக்கள், சரக்கிருப்புகளை வைத்திருப்போரின் சொத்து மதிப்பை உயர்த்துவதால் பணவீக்கம் அவர்களுக்கு சாதகமாக அமையும். மறுபுறம், பண வடிவில் அதிக சேமிப்புகளை வைத்திருப்பவர்களின் உண்மையான மதிப்ப்பை/வாங்கும் திறனை பணவீக்கம் குறைத்து விடுகிறது. பணவீக்க உயர்வு கடன் அளிப்பவர்களுக்கு பாதகமாகவும், கடன் வாங்குபவர்களுக்கு சாதகமாகவும் அமையும், ஏனெனில் நிலுவை கடன்களின் மதிப்பை பணவீக்கம் குறைக்கிறது. வெளிநாட்டுப் பொருட்களை இறக்குமதி செய்யும் இறக்குமதியாளர்கள் பண வீக்க உயர்வால் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்படும் ஆகையால் தேசங்களின் இறக்குமதி செலவினம் பணவீக்க உயர்வால் அதிகரிக்கும். பணவீக்கம் ஏழைகள், நிலையான வருமானம் ஈட்டுபவர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாள வர்க்கத்தை சமுதாயத்தின் பிற பிரிவுகளை விட மிகவும் மோசமாக பாதிக்கிறது. மொத்தத்தில் பணவீக்கம் பணக்காரர்களுக்கு ஆதரவாக வருவாயை மறுபகிர்வு செய்கிறது.

பணவீக்கத்தால் ஏற்படும் செல்வ இழப்பை/ மதிப்பு இழப்பை, இழப்பைத் தடுக்க பல்வேறு வழிமுறைகள் செல்வந்தர்களாலும், முதலீட்டாளர்களாலும் கடைபிடிக்கப்படுகிறது. செல்வந்தர்கள் பணவீக்கத்திலிருந்து பாதுகாப்பு பெற தங்கள் பணத்தை பங்குச்சந்தைகளில் பங்குகளில் முதலீடு செய்கிறார்கள், கடன் பத்திரங்களில் முதலீடு செய்கின்றனர். நிலம் போன்ற விலையேற்றம் பெறும் அசையா சொத்துக்களில் முதலீடு செய்கின்றனர். நீண்ட நெடுங்காலமாகவே தங்கத்தில் அதிக முதலீடு செய்வது பணவீக்கத்திலிருந்து பாதுகாப்பு பெறும் வழிமுறையாக அறிந்தேற்கப்பட்டுள்ளது. .

பணவீக்கத்தின் வகைகள்

பணவீக்கத்தை அதன் அளவின்/தீவிரத்தன்மையின் அடிப்படையில் மூன்று விதமாகப் பிரிக்கலாம். அவையாவன 1. மிதமான பணவீக்கம், 2. வேகமான பணவீக்கம் மற்றும் 3. உயர்பணவீக்கம்.

  1. மிதமான பணவீக்கம்:

 மிதமான பணவீக்கத்தின் போது பொது விலைவாசி நிலை மெதுவாக ஆனால் சீராக அதிகரிக்கும் போக்கு காணப்படுகிறது.பணவீக்கத்தின் அளவு 9 விழுக்காட்டிற்கும் குறைவான ஒற்றை இலக்க அளவில் உள்ளது.

  1. வேகமான பணவீக்கம்:

பொது விலை மட்டத்தில் நிலையான, மிக அதிகமான அதிகரிப்பு வேகமான பணவீக்கம் என்று அழைக்கப்படுகிறது. பணவீக்கத்தின் அளவு விகிதம் இரண்டு இலக்கங்களாக (20 விழுக்காடு, 40 விழுக்காடு) மற்றும் சில சமயங்களில் மூன்று இலக்கங்கள் (100, 200 விழுக்காடு) வரை உயருகிறது.

  1. உயர் பணவீக்கம்:

பணவீக்கத்தின் அளவு கட்டுக்கடங்காமல் பல இலக்கங்களுக்கு அதீதமாக அதிகரிப்பதே உயர் பணவீக்கம் எனப்படுகிறது.

 ஏகாதிபத்திய நாடுகளின் நவீன தாராள ஒடுக்குமுறையால் அர்ஜெண்டினாவில் 20262.80 விழுக்காடாகவும், வெனிசுலாவில் 344509.50 விழுக்காடாகவும் உயர்ந்த பணவீக்கத்தை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம்.

- சமந்தா