satyaki royநக்வெய்ன் மார்க்சியப் பள்ளியில்(17) : ஆசிரியர்: சத்யகி ராய்

உலகளவில் 1940களிலிருந்து உற்பத்தி அமைப்பில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதற்கு முன்னிருந்த உற்பத்தி அமைப்பில் ஒரு பொருளை தயாரிக்க அதற்கான துறை வாரியான சிறப்புத் தேர்ச்சியும், நிபுணத்துவமும் பெற்றிருக்க வேண்டும். 1940களிலிருந்து உற்பத்தி பணிகளின் அடிப்படையிலான ஒரு புதிய நாடோடித்துவம் ஏற்பட்டுள்ளது.

உற்பத்தியில் விற்பனை பொருட்களின், பகுதிப் பொருட்களை தயாரிக்கும் வெவ்வேறு பணிகள் வெவ்வேறு இடங்களில் செய்யும் முறை ஏற்பட்டுள்ளது. ஒரு பொருளை முழுமையாக உற்பத்தி செய்வது என்ற முறையிலிருந்து, அதில் ஒரு பகுதி ஆப்பிரிக்காவிலும், மற்றொரு பகுதி இந்தியாவிலும் தயாரிக்கப்படுகிறது.

இதனால் இடம் பெயரும் தொழிற்சாலைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இத்தகைய உலகமயமாதல் காலகட்டத்தில் ஒவ்வொன்றும் இடைத் தொடர்பு கொண்டதாக உள்ளது. பணிகளை வெளித்தரப்பில் ஒப்படைக்கும் முறை (Outsourcing) ஏற்பட்டுள்ளது. துணை ஒப்பந்த செயல்பாடுகளே உலக வர்த்தகத்தில் 40 விழுக்காடு பங்கு வகிக்கிறது.

உலகின் வட பகுதியிலிருந்து தென் பகுதிக்கு உற்பத்தி அமைப்பானது மாற்றப்பட்டுள்ளது. உலகளவில் உற்பத்தித் துறையில் பணி புரிவோரில் 83 விழுக்காடு தென் பகுதியை சார்ந்தவர்களாக உள்ளனர்.

மொத்தப் பொருளாக்க மதிப்பில் வரும் மதிப்புக் கூட்டல் நடவடிக்கை வெவ்வேறு கட்டங்களாக நடைபெறுகிறது. பணப் பரிவர்த்தனைக்குள் வராத எந்த வேலையும் மொத்தப் பொருளாக்க மதிப்பின் கணக்கில் சேர்க்கப்படாது. நான் ஒரு விரிவுரையை இலவச சேவையாக அளித்தால் அது மொத்தப் பொருளாக்க மதிப்பீட்டில் வராது.

வளர்ந்த நாடுகள் மொத்த மதிப்புக் கூட்டலில் 69 விழுக்காடும், வேலைவாய்ப்பில் 17 விழுக்காடும் பங்கு வகிக்கின்றன. உலகின் முதன்மையான மிகப்பெரிய 500 நிறுவனங்கள், உலகின் மொத்த வருவாயில் 35-40 விழுக்காடு வரை பெறுகின்றன.

முதன்மையான முதல் பெரும் 100 நிறுவனங்கள் தயாரிப்பு, விற்பனையில் 60 விழுக்காட்டை வெளி நாடுகளுக்கு பெயர்த்துள்ளனர். அதில் முதல் 10 நாடுகளில் 7 நாடுகள் வளரும் நாடுகள்.

சர்வதேச அளவில் ஓரலகு உழைப்புக்கான கூலி அடிப்படையில் போட்டி ஏற்படுகிறது. உற்பத்தித் திறன் அதிகரிக்கும் போது, அதற்கேற்ப ஓரலகு உழைப்புக்கான கூலி அதிகரிப்பதில்லை. பெரும்பாலான பன்னாட்டு நிறுவனங்கள் வளரும் நாடுகளிலே காணப்படுகின்றன. தொழிலாளர் செறிந்த தொழிலகங்களை அதிகம் கொண்ட 10 நாடுகளில் சீனா முதல் இடத்தில் உள்ளது.

ஏற்றுமதி சார்ந்த உலகளாவிய உழைப்புச் சக்தி, அதாவது உழைப்புச் சக்தியின் வளர்ச்சிக்கும், மொத்த உள்நாட்டு பொருளாக்க மதிப்பில் - ஜிடிபியில் ஏற்றுமதியின் பங்கிற்கும் இடையிலான விகிதம் 1980ஐ காட்டிலும் 2003ல் நான்கு மடங்கு அதிகரித்துள்ளதாக சர்வதேச நிதி நிறுவனம் குறிப்பிடுகிறது. தொழிலாளர்களின் கூட்டுப் பேர சக்தி குறைந்துள்ளது.

உலகளாவிய கூலி ஏற்றத்தாழ்வுகளால், பணிகளை வெளி நாட்டுகளுக்கு மாற்றுவதன் மூலம் நிறுவனங்களின் செலவு 40-60 விழுக்காடு வரை குறைக்கப்பட்டுள்ளது. அமைப்புசார் தொழிலாளரின் சராசரி கூலியானது, முறைசாரா தொழிலாளரின் கூலியைக் காட்டிலும் 2லிருந்து 5மடங்கு அதிகமாயுள்ளது.

மதிப்பு அபகரித்தலும், கூலி ஒடுக்குமுறையும்:

ஆப்பிள் ஐபேட் சீன தொழிலாளர்களின் உழைப்பை ஒட்ட சுரண்டுவதன் மூலம் தயார் செய்யப்படுகிறது. சீனாவில் ஆப்பிள் ஐபேட் தயாரிக்கும் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் வேலை செய்யும் சீனத் தொழிலாளர்களின் ஊதியம் அமெரிக்காவுடன் ஒப்பிடும் போது, தயாரிப்பு பிரிவில் 3.2 விழுக்காடும், சில்லறை விற்பனையில் 6 விழுக்காடும், தொழில்முறை வேலையில் 1.8 விழுக்காடு மட்டுமே பெறுகிறது.

அமெரிக்காவில் அதிக மதிப்புக் கூட்டல் செய்யப்படுகிறது என்ற பெயரில் லாபத்தில் 64 விழுக்காடு அமெரிக்காவால் அபகரிக்கப்படுகிறது. மதிப்புக் கூட்டல் என்ற பெயரில் உழைப்புச் சுரண்டல் மறைக்கப்படுகிறது. இவ்வாறு சீன தொழிலாளர்களின் கூலியை குறைப்பதன் மூலமே பெரும் லாபம் பெறப்படுகிறது.

சீனாவில் உற்பத்தித் திறன் குறைவு என கூலி குறைக்கப்படுகிறது, அமெரிக்க உற்பத்தித் திறன் அதிகம் என்று லாபத்தில் பெரும்பகுதி அமெரிக்காவுக்கு செல்கிறது. அமெரிக்கா, பன்னாட்டு நிறுவன சொத்துரிமையைக் கொண்டுள்ளது. வங்களாதேசத்தில் தயாரிக்கப்படும் போலோ சட்டையின் மூலம் 1800 விழுக்காடு லாபம் பெறப்படுகிறது.

புதிய தயாரிப்புகளுக்கான வருவாயில் அறிவுசார் சொத்துரிமைக்கு 20 விழுக்காடு அளிக்கப்படுகிறது. ஆனால் தொழிலாளர்களுக்கு 2 விழுக்காடு மட்டுமே அளிக்கப்படுகிறது. நோக்யா தயாரிப்பில் லாபத்தில் 51விழுக்காடு ஃபின்லாந்தைச் சேர்கிறது.

சரக்குகளின் உற்பத்திக்கு முந்தைய வடிவமைப்பும், உற்பத்திக்கு பிந்தைய திட்டமிடல், சந்தைப்படுத்தல் ஆகிய செயல்பாடுகளுமே வருவாயில் பெரும்பகுதியை ஈட்டுகின்றன என்பதையே சிரிப்பு வளைவு(smiley curve) சுட்டிக் காட்டுகிறது. ஆனால் உற்பத்திக்கு குறைந்த கூலியே அளிக்கப்படுகிறது.

ஒ.இ.சி.டி நாடுகளில் உழைப்புக்கான சராசரி பங்கு 1990களில் 66.1 விழுக்காடு இருந்தது, 2000ங்களில் 61.7 விழுக்காடாகக் குறைந்துள்ளது. அமெரிக்காவில் அளிக்கப்படும் கூலியில் வெறும் 1.5 விழுக்காடு மட்டுமே இந்தியாவில் கூலிமதிப்பாக உள்ளது.

இந்தியாவில் உற்பத்தித் துறையில் மதிப்பு கூட்டலுக்கான ஊதியப் பங்கானது 1970-71ல் 29 விழுக்காடாக இருந்தது, 2015-16ல் 12.2 விழுக்காடாகக் குறைந்துள்ளது. உலக பொருளாதாரக் கண்ணோட்டம் மதிப்புக் கூட்டலின் மூலம் பெறப்பட்ட லாபமானது 1974-75ல் 30.6 விழுக்காட்டிலிருந்து 2015-16ல் 40.3 விழுக்காடாக அதிகரித்துள்ளதாகக் குறிப்பிடுகிறது.

உலகின் தென்பகுதியிலுள்ள தொழிலாளரின் உழைப்பு வடபகுதிக்கு கிடைக்கிறது. ஆனால் வடப்பகுதியிலிருந்து தொழில்நுட்ப அறிவானது தென்பகுதிக்கு பகிரப்படாமல் தடுத்து பாதுகாக்கப்படுகிறது. இதனால் தென்பகுதி தொழில் நுட்ப அறிவைப் பெற முடியாமல் தடுக்கப்படுகிறது.

இந்தியாவில் கூலியில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அடிமைமுறை மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. வளர்ந்த நாடுகளில் ஒரு நிமிடம் கூட கூடுதலாகப் பணிபுரிய ஒத்துக் கொள்ள மாட்டார்கள். ஆனால் நாம் கூடுதலாக உழைக்கும் கலாசாரத்தை ஏற்றுக் கொண்டுள்ளோம். தொழிலாளர் குறைவாக ஊதியம் பெறுவது சர்வதேச போட்டியின் அடிப்படையில் ஒரு நாட்டிற்கு நலம் பயக்கும் என்றே பொதுவாகக் கருதப்படுகிறது.

நிதிமயமாக்கம், மூலதனத்தின் மேலாதிக்கம்:

1980களிலிருந்து நிதித்துறையின் பங்களிப்பு இரு மடங்காகியுள்ளது. சுதந்திரத்திற்கு பிறகு நிதித் துறையின் வளர்ச்சி மும்மடங்காகியுள்ளது, காப்பீட்டுத்துறை, நிதிசேவைத்துறைகளில் அதிக வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

2013ல் ஸ்வீடனில் உள்ள ஓட்டுநர் ஒரு மணி நேரத்திற்கு 890 ரூபாய் பெறுகிறார். ஆனால் அதே நேரத்தில் டெல்லி போக்குவரத்து கழகத்தை சேர்ந்த ஒரு ஓட்டுநர் வெறும் 23 ரூபாயே பெறுகிறார்.

இருவரும் வாகனம் ஓட்டுவதற்கான ஒரே திறனை தான் கொண்டுள்ளனர். இவ்விதத்தில் கூலி வேறுபாட்டை உற்பத்தித் திறனிலான வேறுபாட்டால் ஏற்பட்டது என நியாயப்படுத்த முடியாது. உலகமயமாதலில் மக்கள் புலம்பெயர்வதற்கு தடை விதிக்கப்படாமல் இருக்குமானால் லாபம் சமமாக்கப்படும்.

தற்போது உற்பத்தித் துறைகளின் மூலம் லாபம் பெறுவதைக் காட்டிலும் நிதித்துறைகளில் முதலீடு செய்வதன் மூலம் லாபம் ஈட்டும் போக்கே அதிகரித்துள்ளது. வளர்ந்த நாடுகளிலும், வளரும் நாடுகளிலும் கடனின் மூலமே வளர்ச்சிக்கான நிதி பெறப்படுகிறது. பொருளாதார சமமின்மை அதிகரித்து வருகிறது.

நீடித்த வருவாயை உறுதிப்படுத்தும் சொத்துக்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது.நிதி சொத்துக்கள், நிதி வருவிப்புகள் ஆகியவற்றின் வழங்கல் குறைவதால் தரம் அல்லாத நிதிச் சொத்துக்கள் உருவாக்கப்படுகின்றன.

1980களிலிருந்து நிதி, காப்பீட்டுத் துறை நடவடிக்கைகள் இருமடங்காகி உள்ளன. உலகளவில் மொத்த முதலீடுகள் 30 முதல் 40 பில்லியன் அமெரிக்க டாலருக்கு அதிகரித்துள்ளன. விவசாயத் தொழில் புரிந்தவர்களில் 20 விழுக்காட்டினர் விவசாயம் சாராத துறைகளுக்கு மாறியுள்ளனர்.

2001லிருந்து வளரும் நாடுகளில் 227 மில்லியன் ஹெக்டேர் அளவிற்கு, மேற்கு ஐரோப்பாவின் அளவுக்கு நிலமானது குத்தகைக்கு விடப்பட்டும், விற்கப்பட்டும் உள்ளது. நிலம் என்பது மிகவும் முக்கியமான சொத்தாக மாறியுள்ளது.

வர்க்க நிகழ்முறை என்பது வெறும் பொருளாதார நிகழ்முறை மட்டுமல்ல. சுரண்டல் என்ற வகுப்பு நிகழ்முறையில் இரண்டு வகையான செயல்பாடுகள் உள்ளன. ஒன்று முதலாளிகள் தொழிலாளர்களை சுரண்டல், இரண்டாவது வங்கிகள், நிதித்துறையின் மூலம் செய்யப்படும் சுரண்டல்.

உலக மூலதனத்தின் கட்டளைக்கிணங்க அபாயங்களை சரக்காக்குதல், பாதுகாத்தல், தரமாக்கல் ஆகியவற்றைக் கொண்ட நிர்வாக அமைப்பு உருவாகியுள்ளது. வருவாய் அதிகரித்தாலும், உடனடி செலவினங்கள் குறைக்கப்பட்டு, எதிர்காலத்திற்காக செல்வத்தை சேமிக்கும் போக்கு அதிகரித்துள்ளது.

நிதிமயமாக்கலின் மூலம் வருங்காலத்தில் லாபம் பெறுவதற்கான வருவிப்புகள் பல அடுக்குகளில் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. நிதி மூலதனம் எந்த ஒழுங்குமுறைக்கும் உட்படுத்தப்படவில்லை.

(தொடரும்)

- சமந்தா