muthuஅன்று மார்ச் 8ஆம் தேதி மாலை 6.00 மணிக்கு தோழர் சமந்தாவை ஏதோ எழுத்துப் பணி குறித்துப் பேசுவதற்காக அழைத்த போது அவர்கள் சொன்ன செய்தி இடிபோல் இறங்கியது: தம்பி முத்து தூக்குப் போட்டுக் கொண்டான்!

தோழர் சமந்தா இமாச்சலில் நடக்கவிருந்த நக்வெய்ன் மார்க்சியப் பள்ளி செல்வதற்காக சென்னையிலிருந்து தில்லிக்குத் தொடர்வண்டியேற வேண்டும். சென்ட்ரல் சென்று வழியனுப்புவதற்காகக் காலையில் நாங்கள் புறப்பட்ட போது முத்துவும் எங்களோடு சேர்ந்து கொண்டார். சுதா காரோட்டினாள். 

சுட்டிக் குழந்தை பொருநை அம்மா மடியில் உட்கார அடம்பிடித்துக் கொண்டே வந்தாள். முத்துவின் முழுக் கவனமும் பொருநை மீதுதான்! அவளுக்கு ஏதாவது வேடிக்கை காட்டிக் கவனம் ஈர்க்க ஏதேதோ செய்து கொண்டே வந்தார். 

சமந்தாவை வழியனுப்பி விட்டு வீடு திரும்பும் போதும் பொருநையோடு விளையாடிக் கொண்டும் அவளைப் படம்பிடித்துக் கொண்டுமே வந்தார்.

அவருக்கொரு பெண் குழந்தை இருப்பதையும், அந்தக் குழந்தையைப் பிரிந்திருப்பதையும் அஜந்தாம்மா (தோழர் அஜந்தா) சொல்லி அறிந்திருந்தேன். முத்துவின் முழுப்பெயர் முத்து மூர்த்தி. இருவழிப் பாட்டனார்களையும் சேர்த்து வைத்த பெயர் என்றார்கள்!

தோழர்கள் அஜந்தாவுக்கும் சமந்தாவுக்கும் தம்பி, தீக்கதிரில் பணியாற்றிய கவிஞர் தோழர் ஏதெ சுப்பையனின் கடைப்பிள்ளை... இவரைப் பற்றி இன்னும் தெரிந்து கொள்ள வேண்டும், ஆனால் அவசரமில்லை, கொஞ்சம் கொஞ்சமாகத் தெரிந்து கொள்ளலாம் என்றிருந்தேன். 

தோழர் மங்கையின் நாடகக் குழுவில் இருக்கிறார், அரங்கம் அமைக்கும் கலையில் வல்லவர், என்றெல்லாம் தெரிந்து கொண்டேன்.  தமிழ் மக்கள் மேடை நிகழ்ச்சியில் பாடிய செய்தி தெரிந்த போது அவர் மீது கூடுதலான அக்கறை பிறந்தது. 

தமிழ்த் தேசம் இதழ் வேலையாகச் சென்னையில் தோழர் சமந்தாவைப் பார்க்கப் போகும் போது சில நேரம் அவரையும் பார்த்ததுண்டு. 

தனியறையில் இசைக்கருவியோடு உட்கார்ந்திருப்பார். வெளியில் எட்டிப் பார்த்து “தோழர், நல்லா இருக்கிங்களா?” என்று கேட்டு விட்டு மறைந்து விடுவார்.

புலனத்தில் உரையாடலாம் என்று தொடங்கினேன். முதலில் அவர் சில பாடல் பதிவுகளை அனுப்பியிருந்தார். “Pearlophony” என்று பெயரும் கொடுத்திருந்தார். ஒரு பாட்டு அதற்கான காட்சியோடு இருந்தது. இது யார் அமைத்த இசை? என்று கேட்டேன். 

நான்தான் தோழர் என்ற விடையில் வருத்தம் கலந்திருந்தது. அவரே தனியாக அமர்ந்து கையில் இசைக் கருவியோடு பாடுகிற காட்சி மனந்தொடும். பள்ளிக் குழந்தைகளுக்கு இசை கற்பிக்கும் காட்சி: அந்த ஹோசிமின் தாடியும் முடிந்த பின்முடியுமாக… அவரும் அந்தக் குழந்தைகளில் ஒருவராகவே எனக்குத் தெரிந்தார்.

இந்த இளைஞனை விடக் கூடாதென்று நினைத்தேன். அவரது கலைத்திறன், இயற்கை நேயம், குழந்தைப் பாசம், தன்னலமில்லா நட்புணர்வு எல்லாவற்றையும் அவருடன் பிறந்த அக்காமார் இருவரிடமும் தெரிந்து வைத்திருந்தேன். கொரோனாக் காலத்தின் நெருக்கடி ஒவ்வொருவரையும் தாக்கியதுதானே? தொலைபேசியில் அழைத்துக் கேட்டேன்: ”என்ன செய்றீங்க?” அவரது பதில் எனக்கு நிறைவளிக்கவில்லை. 

பள்ளிகளுக்குச் சென்று குழந்தைகளுக்கு இசை கற்றுத் தருவீர்களே? இப்போது அதையே ஆன்லைனில் செய்யலாமே? வாய்ப்பில்லை என்றார். ”எனக்காக ஒன்று செய்யுங்கள், நான் பாட்டு எழுதுகிறேன், நீங்கள் இசையமையுங்கள். அல்லது இசை போட்டுக் கொடுங்கள் நான் எழுதித் தருகிறேன்” என்றேன். ”சரி தோழர், நேரில் பேசிக் கொள்வோம்” என்றார்.

புலன உரையாடலில் அவருக்குக் கொஞ்சம் மனச்சிக்கல் இருப்பதாக எனக்குத் தோன்றியதால் அவரோடு தொடர்ந்து உரையாட வேண்டும் என்று நினைத்தேன். ஒரு முறை… தான் சுரண்டப்படுவதாக அவர் எழுதிய போது ”தற்கழிவிரக்கம் (self-pity)  வேண்டாமே”  என்றேன். அவர் அதை மறுத்தார். சரி, இல்லையென்றால் விடுங்கள் என்று விட்டு விட்டேன். 

விட்டிருக்கக் கூடாது! சென்னையை விட்டுத் தொலைவாக வந்து விட்டதால் அவ்வப்போது பார்க்கிற வாய்ப்பும் இல்லாது போயிற்று.  ஒருவேளை நெருங்கிப் பழகியிருந்தால் அவர் மனம் போகும் போக்கை உணர்ந்து இந்த முடிவைத் தவிர்த்திருக்கலாமோ என்ற எண்ணம் வந்து போகவே செய்கிறது.

முத்துவின் மறைவு நம் இயக்கக் குடும்பத்தை எதிர்பாராமல் தாக்கிய பேரிழப்பு. தோழர் பட்டுக்கோட்டை இராமசாமியை அழைத்துக் கொண்டு நேரில் பேராவூரணி சென்று குடும்பத்தினரைச் சந்தித்துத் துயர் பகிர்ந்து திரும்பினேன்.

தளையிடாமல் வளர்த்த தாய்தந்தை! யாருக்குமே கிடைக்காத அக்காமார்கள்! மாமா செல்லங்களான விளாதிமிர், ஜென்னி!  உயிருக்குயிரான தன் ஒரே பெண்குழந்தை யாழினி! அக்கணம் எந்த முகமும் உன் கண்முன் தோன்றவில்லையா, முத்து? எந்தத் தன்னலம் உன் கண்ணை மறைத்தது? வந்து சொல்லி விட்டுப் போ! இவன் ஏன் விளைவு கருதாமல் இப்படிச் செய்தான்? என்று கோபப்படுவதும் கூட இப்படியோர் அரிய முத்தைக் காப்பாற்றத் தவறி விட்டோமே என்ற வருத்தவுணர்வை நேர்செய்யாதா?

இந்தக் காலத்தில் இப்படிப்பட்ட முத்துக்கள் கிடைப்பது அரிது. கிடைத்த ஒரு முத்தைத் தொலைத்து விட்டோம் என்ற தவிப்பு அவரை அறிந்து நேசித்த எனக்கும் மற்றவர்களுக்கும் இல்லாமற்போகாது.

முத்து விட்டுப்போன சொத்து கொஞ்சம் இசையும் நிறையப் பாடமும்! 

- செங்காட்டான்