பார்ப்பனர் போற்றும் சாத்திரம் தன்னிலும்
நேராய் ஒப்பிய குறைமதிப் பார்ப்பரும்
நோதல் இல்லாப் பணிகள் அனைத்தையும்
சூதால் வெல்வதில் நலிந்து போனாய்
சந்தையின் சதியால் இன்னல்கள் யாவும்
வந்திடும் முறையிலும் நலிந்து போனாய்
வர்க்கச் சார்புடை ஊடகம் தம்மின்
அறமிலாச் செய்தியில் நலிந்து போனாய்
அண்ணலின் தந்தையின் உழைப்பில் வந்த
உண்மை உரிமைகள் தம்மை அரிக்கப்
பார்ப்ப ரிடத்தில் சோரம் போகும்
நேர்மை யில்லாத் தலைமையில் நலிந்தாய்
நிந்தன் நலிவை நோக்கையில் தோழா
எதனில் அதிகம் நலிந்தாய் அறியேன்.
 
(தோழனே! பார்ப்பனர்கள் போற்றுகின்ற (மனு நீதி, பகவத் கீதை போன்ற) சாத்திரங்களிலும், பார்ப்பனர்களில் அறிவுத் திறன் குறைந்தோர் உள்ளனர் என ஒப்புக் கொள்ளப் பட்டு உள்ளது.  அப்படிப்பட்ட குறைந்த அறிவுத் திறன் கொண்ட பார்ப்பனர்களும் (உயர் அறிவுத் திறனுடையோர் மட்டுமே செய்ய வேண்டிய) நுணுக்கமான வேலைகள் அனைத்தையும் ஏமாற்று வித்தைகள் மூலம் கைப்பற்றிக் கொள்வதால் (நீ அடைய வேண்டியவற்றை அடையாமல்) நலிந்து போனாய். சந்தைப் பொருளாதாரம் செய்யும் சதியால் இன்னல்கள் அனைத்தும் உனக்கே வருவதாலும் நலிந்து போனாய். அதிகார வர்க்கத்தின் சார்பாகவே இருந்து (உண்மையைக் கணக்கில் கொள்ளாமல்) நியாயம் அற்ற செய்திகளையே வெளிச்சம் போட்டுக் காட்டும் ஊடகங்களினால் நலிந்து போனாய். அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் ஆகியோரின் உழைப்பில் கிடைக்கப் பெற்ற உண்மையான உரிமைகளை, பார்ப்பனர்களிடத்தில் சோரம் போகும் (ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்த) நேர்மையற்ற தலைவர்கள் அரித்துக் காவு கொடுப்பதினால் நலிந்து போனாய். நீ நலிந்து போவதையெல்லாம் பார்க்கையில் எதில் அதிகமாக நலிந்து போகிறாய் என்று அறிந்து கொள்ளவே முடியவில்லை.)
 
- இராமியா

Pin It