எம்.சி. ராஜா அவர்கள், தொடக்கத்தில் தனி இடங்களுடன் கூடிய கூட்டுத் தொகுதிகளுக்காகத்தான் போராடினார். ஆனால், பின்னர் அவர் தன் நிலையை மாற்றிக் கொண்டார். மத்திய சட்டப் பேரவையில் எம்.சி. ராஜா, தாழ்த்தப்பட்ட வர்க்கங்களின் பிரதிநிதியாக இருந்தும், வட்டமேசை மாநாட்டுக்கு அவர் அழைக்கப்படவில்லை. ஒருவேளை, வட்டமேசை மாநாட்டிற்குத் தான் அழைக்கப்படாமல் விடுபட்டுப் போனதால் வருத்தமடைந்தோ, தாழ்த்தப்பட்ட வர்க்கங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உரிமையை காந்தி தானே வரித்துக் கொண்டதால் – மிகவும் மனக் கலக்கமடைந்தோ, அவர் கூட்டுத் தொகுதிகள் கருத்தைக் கைவிட்டு, தனித் தொகுதிகளை வலியுறுத்தினார். ஆனால் தற்பொழுது, அவர் மீண்டும் பழைய கோரிக்கைக்கே மாறிச் சென்றுவிட்டார். 

திரு. கவாய், தாழ்த்தப்பட்ட வர்க்க உறுப்பினர்களுக்கு பின்வரும் அறிக்கையை விடுத்தார். தாழ்த்தப்பட்ட வர்க் கங்களின் சார்பில், இந்திய வாக்குரிமைக் குழுவுக்கு கோரிக்கை மனுக்களை அளித்த தனிநபர்கள் அல்லது அமைப்பு களுடன் – தொகுதி முறை தொடர்பான பிரச்சினையை அக்குழு விவாதிக்க முடியாது என்று சில தவறான தகவல் உங்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. இதில் உண்மையில்லை. ஏனெனில், அறிக்கை 2 இல் தாழ்த்தப்பட்டவர்களின் பிரதிநிதித்துவம் என்ற தலைப்பின் கீழ் குழுவினால் அனுப்பப்பட்ட கேள்வித்தாளில், சட்டப் பேரவையில் மேற்படி சமூகத்திற்குப் பிரதிநிதித்துவம் பெறுவதற்கு ஒருவர் என்ன திட்டவட்டமான ஆலோசனை கூறவேண்டும் என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

ambedkar_495மேலும், மற்றவர்கள் தயாரித்த மாதிரி பதில்கள் எப்படியிருந்த போதிலும், தங்களுடைய சொந்த மாகாணங்கள் தொடர்பாக தமது கருத்துகளை அனுப்புமாறு, நமது அமைப்புகளுக்கு அறிவிக்கும்படி நான் ஆலோசனை கூறுகிறேன். 1931 டிசம்பர் 1இல் பிரதமர், இந்தியாவில் அரசியல் சாசனத்தில் மாற்றங்கள் வரும் என்று கூறியுள்ளதை முன்னிட்டு, மாகாணங்களுக்கு முழு சுயாட்சி வழங்கப்படும். நமது சமூகமும் காலத்திற்கு ஏற்ப நடந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். எனவே, மேலே குறிப்பிட்ட பிரதமரின் அறிக்கை வெளியிடுவதற்கு முன்னால், நாம் செய்துள்ள முடிவை நாம் மறு ஆய்வு செய்ய வேண்டும்.

வாக்குரிமைக் குழு வைசிராய் மாளிகையில் கூடியது. தாழ்த்தப்பட்ட வர்க்கங்களின் சார்பில், டாக்டர் அம்பேத்கர், இந்திய தண்டனைச் சட்டத்திலோ, வருங்கால அரசியல் சாசனத்திலோ, தாழ்த்தப்பட்ட வர்க்கங்கள் அடிப்படை உரிமைகளை சுதந்திரமாக அனுபவிப்பதிலிருந்து தடைசெய்த, தாழ்த்தப்பட்ட வர்க்கங்களுக்கு எதிராக தூண்டுதல் அல்லது புறக்கணிப்பை ஏற்பாடு செய்வதற்கு தண்டனை விதிக்கப்படும் என்பதை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று வாதிட்டார். இந்த ஆலோசனையை வாக்குரிமைக் குழு ஏற்றுக் கொண்டது.

ராஜா – மூஞ்சே ஒப்பந்தம் பற்றிய செய்தி வெளியானவுடனே, வங்காளம் மற்றும் அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட வர்க்கத் தலைவர்கள், ரிசர்வ் இடங்களுடன் கூடிய கூட்டுத் தொகுதிகள் முறைக்கு ராஜா மாறி சென்றுள்ளதைக் கண்டனம் செய்தனர். அதோடு, டாக்டர் அம்பேத்கர் முன்வைத்த கோரிக்கைகளுக்கும் ஆதரவு தெரிவித்தனர். வங்காள தாழ்த்தப்பட்டவர் அமைப்பின் தலைவர் எம்.பி. மாலிக், எம்.எல்.ஏ., உ.பி. ஆதி இந்து சங்கத்தின் தலைவர், அகில அஸ்ஸாம் தாழ்த்தப்பட்டோர் சங்கத் தலைவர், பஞ்சாபின் ஆதி – தர்மமண்டல் தலைவர், டில்லி தாழ்த்தப்பட்டவர் உதவிக் கழகத் தலைவர் முதலிய அனைவரும் ராஜாவைக் கண்டனம் செய்து, டாக்டர் அம்பேத்கர் முன்வைத்த கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

1932 ஏப்ரலில்தான் நாசிக் சத்தியாகிரகம் மூன்றாவது கட்டத்தில் நுழைந்தது. அதனுடைய தலைவர்கள் பாவ்ராவ் கெய்க்வாட்டும் ரங்காம்பேயும் கைது செய்யப்பட்டனர். அவர்களின் கைது பற்றிய செய்தி, அதே நாளில், அதாவது 1932 ஏப்ரல் 14இல் டாக்டர் அம்பேத்கருக்கு தந்தி மூலம் தெரிவிக்கப்பட்டது. வாக்குரிமைக் குழுவின் இந்து உறுப்பினர்கள் சிந்தாமணி, பார்க்கலே மற்றும் தாம்பே ஆகியவர்கள் தனித் தொகுதிகளுக்கான தாழ்த்தப்பட்ட வர்க்கங்களின் கோரிக்கையைக் கடுமையாக எதிர்த்தது, அவர்களுக்கும் டாக்டர் அம்பேத்கருக்கும் இடையில் மனக்கசப்பை ஏற்படுத்தியது. அவர்கள் டாக்டர் அம்பேத்கருடன் பேசும் நிலையில்கூட இல்லை.

அத்தகைய பதற்றமான சூழ்நிலையில், டாக்டர் அம்பேத்கர், தனது செயலாளரிடம், ஏக காலத்தில் இருவித நிலைமைகளுடன் தன்னால் சமாளிக்க முடியாததற்கு வருந்துவதாகக் கூறினார். ஆலய நுழைவுப் பிரச்சினையைக் காட்டிலும், அரசியல் உரிமைகள் பிரச்சினை கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்தது என்று அவர் கருதினார். எனவே, முழு மூச்சுடன் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ள அந்தப் பணியிலிருந்து விலகிச் செல்வது விவேகமற்றதும் ஆபத்தானதுமாகும் என்று அவர் கருதினார்.

சிம்லாவிலிருந்து எழுதிய ஒரு கடிதத்தில், வகுப்புவாரிப் பிரச்சினையில் பிரிட்டிஷ் பிரதமர் தனது முடிவைத் தெரிவிப்பதற்கு முன்னால், அவரைப் போய்ப் பார்ப்பது மிகவும் அவசியமாகும் என்று டாக்டர் அம்பேத்கர் கூறினார். எனவே, அவர் காரணங்களை வெளிப்படுத்தாமல், உத்தேசப் பயணத்திற்குப் பணம் திரட்டுவது சாத்தியமாகுமா என்று பார்க்கும்படி, தனக்கு நம்பகமான நண்பர்களிடம் கேட்டுக் கொண்டார். அப்பொழுது லண்டனிலிருந்த ஆகாகானுக்கும் அவர் எழுதி, இந்த விஷயத்தில் அவருடைய ஆலோசனையை யும் கோரினார். மேலும், வகுப்புவாரிப் பிரச்சினை தொடர்பாக பிரதமரின் முடிவின் சாத்தியப்பாடு குறித்தும், அதன் உத்தேசத் தேதி குறித்தும் அவரிடம் கேட்டுக் கொண்டார்.

அதே வாரத்தில் எழுதிய மற்றொரு கடிதத்தில் டாக்டர் அம்பேத்கர், வாக்குரிமைக் குழுவிலுள்ள இந்து உறுப்பினர்களின் போக்கு குறித்து தன் அருவெருப்பைக் கொட்டியிருந்தார். அவர்களுடைய மனப்போக்கைத் தான் வெறுப்பதாகக் குறிப்பிட்ட அவர், அதனால் அவர்களை அது, அவர்களுடைய சொந்த முகாமிலேயே சுயநலக்காரர்களாகவும், அதே நேரத்தில் வெளியில் கோழைத்தனமாகவும், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை உடையவர்களாகவும் ஆக்குகிறது என்று கூறினார். அவர்களது சுயநல மற்றும் சிந்தனையற்ற போக்கு தன்னை முற்றிலும் அருöவருப்படையச் செய்கிறது என்றும், அதனால் இந்து சமுதாயத்திலிருந்து வெளியே இருப்பதற்கு தான் முயலப் போவதாகவும் அவர் எழுதினார். அவர் மன உளைச்சல் மற்றும் உடல் உளைச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார்.

ஏப்ரல் மாதத்தில் "வங்காள நாமசூத்திரா சங்கம்' கல்கத்தா ஆல்பர்ட் இன்ஸ்டிடியூட் அரங்கில் தனது 14ஆவது ஆண்டு மாநாட்டை நடத்தியது. டாக்டர் காளிசரண் தலைமை வகித்தார். இம்மாநாடு டாக்டர் அம்பேத்கரின் கோரிக்கைகளை ஒரு மனதாக ஆதரித்தது. டாக்டர் அம்பேத்கரின் நிலையை நியாயமற்ற முறையில் விமர்சனம் செய்த பத்திரிகைகளைக் கண்டித்தது. தங்களின் பிரச்சினை தொடர்பாக காங்கிரசின் போக்கு, இரக்கமற்ற நடைமுறை சாத்தியமற்ற முறையில் இருப்பதாகவும் கூறியது.

வாக்குரிமைக் குழு, தனது பணியை 1932 மே 1இல் முடித்துக் கொண்டது. ஆனால், லார்டு லோதியான், சில வாழ்வியல் அம்சங்கள் பற்றி அவருடன் விவாதிக்க விரும்பியதால், டாக்டர் அம்பேத்கர் மேற்கொண்டு ஓரிரு நாட்கள் கூடுதலாகத் தங்கினார். வாக்குரிமைக் குழு விரிவான ஆலோசனைகளுடன் கூடிய தனது அறிக்கையைத் தயார் செய்திருந்தது. இதில் வாக்குரிமையைத் திருத்துவது, மாகாண மற்றும் மத்திய புதிய சட்டப் பேரவைகளுக்கு தொகுதிகள் விநியோகம் மற்றும் எல்லை நிர்ணயம் செய்தல் முதலியவை அடங்கியிருந்தன. இக்குழுவின் இந்து உறுப்பினர்களுடன் டாக்டர் அம்பேத்கர் கருத்து வேறுபாடு கொண்டதால், அவர் குழுவுக்கு ஒரு தனிக் குறிப்பை அளித்தார்.

குழுவின் மிக முக்கியமான முடிவு களில் ஒன்று, தாழ்த்தப்பட்ட வர்க்கங்கள் என்ற சொல்லின் திட்டவட்டமான விளக்கம் தொடர்புடையதாகும். இந்திய சட்டப் பேரவைக் குழு, 1916 இல் தனது முடிவில், இந்திய அரசின் கீழுள்ள கல்வித் துறை ஆணையர் சர். ஹென்ரி ஷார்ப்பும், சவுத்பரோ வாக்குரிமைக் குழுவும் தாழ்த்தப்பட்ட வர்க்கங்களை பூர்வ குடிகள் – மலைவாழ் பழங்குடி மக்கள் கிரிமினல்கள் அல்லது மற்றவர்களுடன் ஒன்றாக இணைந்திருந்தது. ஆனால், தற்பொழுது லோதியான் வாக்குரிமைக் குழு, தீண்டத் தகாதவர்களுக்கு மட்டுமே அந்த சொல் பயன்படுத்தப்பட வேண்டும் என்பது தங்களுடைய கருத்து என்று கூறியது. இது, டாக்டர் அம்பேத்கருக்கு கிடைத்த வெற்றியாகும். ஏனெனில், குழுவிற்கு அளித்திருந்த தனது குறிப்பில், “தீண்டாமை என்ற சொல்லை, அதனுடைய கருத்து ரீதியான பொருளில் பயன்படுத்த வேண்டும். ஏனெனில், தீண்டாமை என்ற சொல்லின் நேரடியான பொருள் இப்பொழுது இல்லாமல் போய்விட்டது'' என்று குறிப்பிட்டிருந்தார்.

வகுப்புவாரிப் பிரச்சினை தொடர்பான முடிவு அறிவிக்கப்படுவதற்கு முன்னால், பிரிட்டிஷ் பிரதமரையும் பிற கேபினட் அமைச்சர்களையும் சந்திப்பதற்காக, டாக்டர் அம்பேத்கர் மே 26 இல் இங்கிலாந்து புறப்பட்டுச் சென்றார். எஸ்.எஸ். கோன்டி ரோஸா என்ற இத்தாலிய கப்பலில் அவர் புறப்பட்டார். அவருடைய பயணம் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. ஏனெனில், தனது புறப்பாட்டை யாருக்கும் தெரிவிக்க வேண்டாம் என்று அவர் தனது நண்பர்களைக் கேட்டுக் கொண்டிருந்தார். 1932 ஆகஸ்டு இறுதியில் திரும்புவதற்கும் அவர் திட்டமிட்டிருந்தார். 

– வளரும்

Pin It