இந்தியாவில் கோவிட் தொற்றுகளின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் கோவிட் மூன்றாம் அலை ஏற்படுவதற்கான அச்சுறுத்தல் தொடர்கிறது. இந்தியாவில் இது வரை 10 விழுக்காட்டினருக்கு மட்டுமே இரு முறை கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் கோவிட் தொற்று நோயால் ஏற்பட்ட இறப்புகளின் எண்ணிக்கை அதிகாரப்பூர்வ எண்ணிக்கையை விட 10 மடங்கு அதிகமாக இருக்கக்கூடும் என உலகளாவிய வளர்ச்சிக்கான மையம் என்ற அமெரிக்க ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. பெகாசஸ் மூலம் கைபேசிகளை ஒட்டுக் கேட்க பல லட்சம் டாலர் நிதி ஒதுக்கிய பாஜக அரசு அதை சுகாதாரத் துறையில் ஒதுக்கியிருந்தால் கோவிட் இறப்புகளின் எண்ணிக்கை இந்தளவுக்கு உயர்ந்திருக்காது. கோவிட்-தடுப்புமருந்து பெறுபவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளாமல், சுகாதார பாதுகாப்பு கட்டமைப்புகளை மேம்படுத்தாமல் கோவிட் மூன்றாம் அலையை எதிர்கொள்ள இந்தியா தயாராக உள்ளதாகக் கூறுகிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

modi and nirmala sitharaman 403பொது சுகாதார அமைப்பிற்கு, குறிப்பாக ஆரம்ப சுகாதார பராமரிப்பிற்கும், அத்தியாவசிய சுகாதார உள்கட்டமைப்பிற்கும் தொடர்ச்சியாக குறைந்த நிதியையே இந்திய அரசு ஒதுக்கீடு செய்யும் போக்கு, பேரழிவு தரும் இரண்டாவது அலைக்குப் பிறகும் அரசால் சரி செய்யப்படாமல் உள்ளது, என்று ஆக்ஸ்ஃபாம் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் பெஹார் கூறியுள்ளார். அரசு மதிப்பீடுகளின்படி, இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 6 கோடி பேர் சுகாதார செலவினங்களால் வறுமைக்கு தள்ளப்படுகின்றனர். தொற்றுநோய் ஏற்பட்டு ஒரு வருடம் ஆகியும், இரண்டு கோவிட்-19 அலைகளை எதிர்கொண்ட பின்னும், இந்திய அரசு மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 2.5 விழுக்காட்டை சுகாதாரத்துறைக்கு ஒதுக்க தவறியது" என்று ஆக்ஸ்பாம் இந்தியாவின், சமத்துவமின்மை, சுகாதாரம், கல்வித்துறை தலைவர் அஞ்சேலா தனேஜா தெரிவித்துள்ளார். தொற்றுநோய் தாக்கம் தொடர்ந்த போதும் 2021-22 நிதி நிலை அறிக்கையில் சுகாதாரம் , குடும்ப நல அமைச்சகத்திற்கு (MoHFW) சென்ற நிதி ஆண்டின் திருத்தப்பட்ட மதிப்பீட்டை விட 9.8 விழுக்காடு குறைவாக ரூ. 76,901 கோடியே ஒதுக்கப்பட்டது.

கோவிட்-19 பொதுமுடக்கம் இந்திய பெண்களின் உணவூட்டத்தை எதிர்மறையாக பாதித்துள்ளதாக விவசாயம், உணவூட்டம் பற்றி ஆய்வு செய்யும் அமெரிக்காவின் டாடா-கார்னெல் அமைப்பு அறிவித்துள்ளது. இவ்வமைப்பு மேற்கொண்ட ஆய்வில் உத்திரபிரதேசத்தின் மகாராஜ்கஞ்ச், பீகாரின் முங்கர், ஒடிசாவின் கந்தமால், காலாஹண்டி ஆகிய நான்கு பொருளாதாரத்தில் பின்தங்கிய மாவட்டங்களில் மே 2019 உடன் ஒப்பிடும்போது மே 2020 ல் வீட்டு உணவு செலவுகளும், குறிப்பாக இறைச்சி, முட்டை, காய்கறிகள்,பழங்கள் வாங்குவதற்கான செலவினங்கள் குறைந்துள்ளதாகவும் பெண்கள் உட்கொள்ளும் உணவின் பல்வகைத்தன்மையும் குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

தொற்றுநோயால் பல லட்சக் கணக்கான மக்கள் வேலையின்மை, வருவாய் குறைவு, சுகாதார செலவு, பணவீக்கம், ஆகியவற்றால் வறுமைக்கும், கடன் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர். வீட்டில் உள்ள தங்க நகைகளை அடகு வைப்பவர்கள்/ விற்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

 இந்தியப் பொருளாதாரத்தைக் கண்காணிக்கும் ஆய்வுமையத்தின் தரவுகளின் படி கோவிட்-2 அலையின் போது கொண்டுவரப்பட்ட பொதுமுடக்கத்தால் ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் 1.72 கோடி சிறு வணிகர்களும், தினக்கூலி தொழிலாளர்களும் வேலை இழந்துள்ளனர். ஊதியம் பெறும் ஊழியர்கள் 32 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். வணிகர்களில் 57 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர்.

இந்திய ஸ்டேட் வங்கியின் (SBI) பொருளாதார ஆய்வுத் துறை அதிகரித்து வரும் வீட்டு கடன்களின் அளவு குறித்து கவலை தெரிவித்துள்ளது. 2019-20ல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 32.5 விழுக்காட்டிலிருந்த வீட்டுக்கடனின் அளவு 2020-21 ஆம் ஆண்டில் 37.3 விழுக்காடாக அதிகரித்துள்ளது. 2020-21ல் வங்கி வைப்புத்தொகையில் சரிவு ஏற்பட்டுள்ளது, சுகாதார செலவினங்கள் அதிகரிப்பதால் குடும்பங்கள் கடன் நிலை மேலும் அதிகரிக்கும் என்பதால், 2021-22ல் நிலைமை மோசமடைய வாய்ப்புள்ளது என்று எச்சரித்துள்ளது. இந்தியாவின் ஊதிய வருவாய் 2019-20ல் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 34.1 விழுக்காடாக இருந்தது 2020-2021ல் 30.6 விழுக்காடாக சரிவடைந்துள்ளது. சென்ற வருடம் 11 விழுக்காடு இருந்த வங்கி வைப்புத் தொகைகளின் வளர்ச்சி இந்த வருடம் ஜூலையில் 9.8 விழுக்காடாகக் குறைந்துள்ளது.

இந்திய பொருளாதாரத்தின் முக்கிய இயக்கு சக்தியாக சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் செயல்படுகின்றன. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 30 விழுக்காடு பங்களிப்பையும், ஏற்றுமதியில் 50 விழுக்காடு பங்களிப்பையும் அளித்து வருகின்றன. இவற்றின் மூலம் 11 கோடிக்கும் அதிகமானோர் வேலை வாய்ப்பைப் பெற்றுள்ளனர். ஆனால் மத்திய அரசு அவற்றின் பங்களிப்பை அங்கீகரித்து உரிய விதத்தில் பொருளாதார ஆதரவை அளிப்பதில்லை. சிறு, குறு நடுத்தர நிறுவனங்களில் கோவிட் -19 தொற்றுநோயின் தாக்கத்தை ஆய்வு செய்ய நாடாளுமன்றத்தில் நிலைக்குழு அமைக்கப்பட்டது. தொழில்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு ஆய்வு மேற்கொண்டு அரசளித்த தூண்டுதல் நிதித் தொகுப்பு போதுமானதாக இல்லை என்று கூறியுள்ளது.

குழுவின் கூற்றுப்படி, தூண்டுதல் நடவடிக்கைகள் நீண்ட கால அடிப்படையிலானவை, அதில் கடன் திட்டங்களே அளிக்கப்பட்டுள்ளன. அதற்கு பதிலாக பணப்புழக்கத்தை அதிகரித்து வேண்டலை மேம்படுத்துவதற்கான உடனடி துயர்தணிப்பு நடவடிக்கைகளே தேவை என்றும் தொற்றுநோய் வீழ்ச்சியிலிருந்து பொருளாதாரத்தை மீட்பதற்கு, முதலீடு, ஏற்றுமதி, வேலைவாய்ப்பை கூடுதலாக்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு பெரிய நிதித்தொகுப்பை உடனடியாக வழங்குமாறு அரசிற்கு பரிந்துரை செய்துள்ளது. அரசின் கொள்கைகள் நாட்டின் நடுத்தர மற்றும் பெரிய நிறுவனங்களின் நலனை இலக்காகக் கொண்டவை. கடந்த ஆண்டு அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட தூண்டுதல் தொகுப்பின் பயன் சிறு குறு நிறுவனங்களை சென்றடையவில்லை என்றும் அறிவுறுத்தியுள்ளது.

காதி மற்றும் கிராம தொழில்கள் ஆணையம் (KVIC) பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் (PMEGP) கீழ் அமைக்கப்பட்ட குறு நிறுவனங்களில் தொற்றுநோய் தாக்கத்தை மதிப்பிடுவதற்காக சமீபத்தில் ஒரு ஆய்வை மேற்கொண்டது. பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் பயனாளிகளில் 88 விழுக்காட்டினர் எதிர்மறையாக பாதிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.

மே மாதத்திற்கான மத்திய வங்கியின் தரவுகளின் படி சிறு குறு நடுத்தர நிறுவனங்களின் கடன் வளர்ச்சி 2021-22 நிதியாண்டின் இரண்டாவது முறையாக குறுக்கமடைந்துள்ளது. மேலும், இந்தியாவின் மொத்த வங்கிக் கடனில் சிறு குறு நிறுவனங்களின் பங்கு தொடர்ந்து ஐந்தாவது மாதமாக சரிவடைந்துள்ளது. 2020 டிசம்பரில் 12.11 விழுக்காடு இருந்த சிறு குறு நிறுவனங்களின் கடன் பங்கு 2021 மே மாதத்தில் 9.48 விழுக்காடாக சரிவடைந்துள்ளது.

பெரு நிறுவனங்கள் வருடாந்திர கொள்முதலில் 25 விழுக்காடு சிறு குறு நடுத்தர நிறுவனங்களிடமிருந்து பெறவேண்டும் என்ற பொது கொள்முதல் கொள்கை 2018ல் அறிமுகப்படுத்தப்பட்டது. பொது கொள்முதல் கொள்கை கண்காணிப்பு தளம் 2019, 2020 மற்றும் 2021ஆம் ஆண்டில் சிறுகுறு நடுத்தர நிறுவனங்களிடமிருந்து பெற்ற பொதுக்கொள்முதல் முறையே 26 விழுக்காடு, 30 விழுக்காடு மற்றும் 28 விழுக்காடாக இருந்ததாகக் குறிப்பிடுகிறது. உண்மை என்னவென்றால் சிறு குறு நிறுவனங்களின் வாய்ப்புகளை பறிக்கும் கண் துடைப்பு நாடகமாகத் தான் இது நடைமுறையில் உள்ளது. பெருநிறுவனங்கள் பொது கொள்முதல் ஒப்பந்தங்களைப் முறைகேடாக பெறுவதற்காக தங்களுக்கு முற்றிலும் சொந்தமான துணை நிறுவனங்களை சிறுகுறு நடுத்தர நிறுவனங்களாக செயல்படுத்தி வருகின்றன. இதை பாஜக அரசும் கண்டும் காணாமல் உள்ளது.

பொது கொள்முதல் செய்யப்படும் 5-5.5 லட்சம் சிறு குறு நிறுவனங்கள் இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களின் சொந்த துணை நிறுவனங்கள் என்றும் ஜூன் மாதத்திலிருந்து, இத்தகைய நிறுவனங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்ததாகத் தெரிகிறது என்றும் இந்திய சிறு குறு நடுத்தர நிறுவனங்களுக்கான அவையின் நிறுவனரும், தலைவருமான சந்திரகாந்த் சலூன்கே கூறியுள்ளார்.

சிறு குறு நடுத்தர நிறுவனங்களின் வரையறையில் தற்போது சில்லறை விற்பனையாளர்களும், மொத்த வர்த்தகர்களும் சேர்க்கப்பட்டுள்ளது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சில்லறை மற்றும் மொத்த விற்பனை வணிகமும் சிறு, குறு மற்றும் நடுத்தர (எம்எஸ்எம்இ) தொழில் பிரிவுக்குள் இணைக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து சிறு குறு நடுத்தர நிறுவனங்களுக்கான சங்கங்கள் கவலை தெரிவித்துள்ளன. இந்த விரிவாக்கம் உற்பத்திச் செயல்பாடுகளில் ஈடுபடும் நிறுவனங்களின் நலன்களை நீர்த்துப் போகச்செய்யும். இதனால் சிறு குறு நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் முன்னுரிமை துறை கடனானது சில்லறை விற்பனையாளர்களுக்கும், மொத்த வர்த்தகர்களுக்கும் இனிமேல் அளிக்கப்படும். சிறுகுறுநடுத்தர நிறுவனங்களின்பிரிவில் 2.5 கோடி சில்லறை, மொத்த வர்த்தகர்கள் கொண்ட துறையையும் சேர்த்திருப்பது சிறு குறு நடுத்தர நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதரவையும் பலவீனப்படுத்தும்.

அரசின் மத்திய நிதியுதவி திட்டங்கள் (CSS) மற்றும் மத்தியத் துறை திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை குறைக்கும் விதமாக நிதி அமைச்சகம் அனைத்து அரசுத் துறைகள் மற்றும் அமைச்சகங்களை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குத் தொடரும் மத்திய நிதியுதவி திட்டங்கள் (CSS) மற்றும் மத்தியத் துறை திட்டங்களை மறு மதிப்பீடு செய்து 31 ஜூலை 2021-க்குள் தங்கள் முன்மொழிவுகளை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவித்துள்ளது. இதனால் தற்போது 131 ஆக இருக்கும் மத்திய நிதியுதவி திட்டங்கள், மத்தியத் துறை திட்டங்களுக்கான எண்ணிக்கை மூன்றில் ஒரு பங்கு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனியார்மயத்தை மேலும் துரிதப்படுத்துவதற்காகவும் பொதுத்துறை நிறுவனங்களை ஒழித்துக் கட்டுவதற்காகவும் பாஜக அரசு மத்திய பொதுத் துறை அலகுகளின் (PSU) கொள்கை உருவாக்கத்திற்கான முக்கிய அமைப்பாக செயல்படும் பொது நிறுவனங்களின் துறையை (DPE) தற்போது நிதி அமைச்சகத்துடன் இணைத்துள்ளது. பொது நிறுவனங்களின் துறை முன்னதாக, கனரக தொழில்கள் மற்றும் பொது நிறுவனங்களின் அமைச்சகத்தின் ஒரு பகுதியாக இருந்தது.

நிதியமைச்சர் முக்கியமான நான்கு துறைகளில் ஒரு பொதுத்துறை நிறுவனத்தை மட்டும் விட்டு வைத்து விட்டு, மற்ற அனைத்து நிறுவனங்களுமே தனியார்மயப்படுத்தப்படும் என அறிவித்திருந்தார். இந்த நிதி ஆண்டில் பங்கு விலக்கலின் மூலம் 1.75 லட்சம் கோடி வருவாய் ஈட்டுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதுவரை பாஜக அரசு இதில் 4.4% மட்டுமே அதாவது ரூ. 7,646 கோடி திரட்டியுள்ளது.

தற்போது, இந்தியாவில் தேசிய காப்பீட்டு நிறுவனம், நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம், ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனம் மற்றும் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் என நான்கு பொதுக் காப்பீட்டு நிறுவனங்கள் உள்ளன. பொது காப்பீட்டு தொழில் வணிக (நாட்டுடைமையாக்கம்) சட்டத்தை திருத்தி பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களை தனியார்மயமாக்க வழி ஏற்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இச்சட்டத் திருத்தத்தின் மூலம் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களில் நிர்வாகக் கட்டுப்பாட்டை தனியாருக்கு மாற்றுவதற்காக அவற்றில் அரசு குறைந்தபட்சம் 51 விழுக்காட்டுப் பங்குகளை வைத்திருக்கவேண்டும் என்ற உட்பிரிவு நீக்கப்படும்.

முதலீடு செய்ய அங்கீகரிக்கப்பட்ட பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களில் 100 விழுக்காடு அன்னிய நேரடி முதலீட்டை பாஜக அரசு அனுமதித்துள்ளது. அதன் பொருட்டு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு துறைக்கான நேரடி அந்நிய முதலீட்டுக் கொள்கையில் ஒரு புதிய உட்பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. பாரத் பெட்ரோலிய எண்ணெய் நிறுவனத்தில் அரசின் 52.98 விழுக்காடு பங்குகளையும் விற்பனை செய்ய உள்ளது. தேசிய ஓய்வூதிய அமைப்பின் (NPS) கீழ் ஓய்வூதிய நிதி நிர்வாகத்தில் அன்னிய நேரடி முதலீட்டு (FDI) வரம்பை 49% லிருந்து 74% ஆக உயர்த்தவும் அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

பொதுத்துறை வங்கிகளின் மூலமே பெரும் தொழிலதிபர்களுக்கு 100 கோடிக்கும் மேல் அதிகமான கடன்கள் அளிக்கப்பட்டுள்ளது. அவற்றை மீட்கமுடியாமல் தள்ளுபடி செய்யும் போக்கே பொதுத் துறை வங்கிகளில் தொடர்கிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகள் ஒவ்வொரு ஆண்டும் ரூ. 1 லட்சம் கோடிக்கும் அதிகமான கடன்களை தள்ளுபடி செய்துள்ளன. பொதுத்துறை வங்கிகள் கடந்த 7 ஆண்டுகளில் ரூ. 8 லட்சம் கோடி அளவிற்கு கடன்களை தள்ளுபடி செய்துள்ளன, வங்கிகளின் மூலதனத்தை உயர்த்த, மக்களிடமிருந்து பெறும் வரி பணத்திலிருந்து அரசு உட்செலுத்திய மூலதன நிதியை விட இது இரண்டு மடங்கு அதிகம். 2014-15 மற்றும் 2020-21 க்கு இடையில், அரசு பொதுத்துறை வங்கிகளில் ரூ. 3.37 லட்சம் கோடி செலுத்தியது. வாராக் கடன்களால் அவற்றை நொடிக்க செய்து, பொதுத் துறை வங்கிகள் திறனற்றவையே என்று பிரகடனம் செய்யவும் அவற்றை முற்றிலுமாக தனியார்மயம் செய்வதற்கான வழிமுறையாக கள்ளக் கூட்டு முதலாளித்துவத்தின் சுரண்டல் கருவிகளாக பொதுத்துறை வங்கிகள் செயல்படுத்தப்படுகின்றன.

மார்ச் 2020 வரை 46 விழுக்காட்டிலிருந்த வங்கி நொடிப்பு நிலை சட்டத்தின் (ஐபிசி) மீட்பு விகிதம் மார்ச் 2021 லிருந்து 39. 3 விழுக்காடாகக் குறைந்துள்ளது. மொத்த நிலுவைத் தொகையான ரூ. 1.3 டிரில்லியனில், சுமார் ரூ. 259.4 பில்லியன் அதாவது 19.7 விழுக்காடு மட்டுமே 2020-21 ல் மீட்கப்பட்டுள்ளது (டிரில்லியன் = ஓரு லட்சம் கோடி; பில்லியன் = நூறு கோடி)

நிதியமைச்சர் நொடிப்பு நிலை சட்ட திருத்த மசோதாவை லோக்சபாவில் தாக்கல் செய்துள்ளார். தேசிய சொத்து மறுசீரமைப்பு கோ லிமிடெட் (NARCL) என்ற பெயரில் வாராக்கடன்களை மீட்பதற்கான வங்கி ‘பேட் பேங்க்’ மும்பையில் 674.6 கோடி மூலதனத்துடன் அமைக்கப்பட்டுள்ளது.

அனைத்து அதிகாரங்களையும் மையப்படுத்தி ஒற்றைமய ஆட்சியை ஏற்படுத்தும் பாஜக அரசு கூட்டுறவுத் துறையையும் விட்டு வைக்கவில்லை. மையப்படுத்துதலில் அடுத்தகட்ட நடவடிக்கையாக கூட்டுறவு அமைச்சகம் என்ற பெயரில் புதிய அமைசச்சகத்தை உருவாக்கியுள்ளது. இதற்கு முன்னர் கூட்டுறவுத்துறை விவசாய அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வந்தது. கூட்டுறவுத்துறை அரசியலமைப்புச் சட்டத்தின் படி மாநிலங்களுக்கான அதிகாரப் பட்டியலில் உள்ள போது கூட்டுறவு கூட்டாட்சி தத்துவத்திற்கு முற்றிலும் புறம்பான முறையில் மாநிலங்களின் இறையாண்மையை பறிக்கும் விதமாக கூட்டுறவு அமைச்சகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள 1 லட்சத்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கூட்டுறவு நிறுவனங்களில் 12 லட்சம் கோடி ரூபாய் வைப்புத் தொகை உள்ளது. பாஜக அரசால் இவற்றின் பாதுகாப்பும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. கூட்டாட்சிக் கூட்டுறவுக்கு குழி பறித்த ஜிஎஸ்டியை சுதந்திர இந்தியாவின் சிறந்த கூட்டாட்சி அமைப்புகளில் ஒன்றாகும் என்பதையே நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார். அனைத்திற்கும் தலைகீழாக அர்த்தம் கற்பிக்கும் பாஜக அரசு கூட்டுறவு அமைப்பையும் தலைகீழாக்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளது.

எரிபொருள் விலையைக் குறைப்பதற்காக பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வருமாறு வர்த்தகம், தொழில்துறைகளின் அவை (CTI) அரசிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும் கடந்த ஆண்டு அதிகரிக்கப்பட்ட கலால் வரியை திரும்பப் பெறுமாறு மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளது. பெட்ரோல், டீசலின் மீது 28 விழுக்காடு சரக்கு சேவை வரி விதிக்குமாறும் பரிந்துரை செய்துள்ளது, இதனால் பெட்ரோல் விலை லிட்டருக்கு 20 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 15 ரூபாயும் குறையும்.

தலைமை பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன், அரசு ஜிஎஸ்டி விகித அமைப்பை நிச்சயம் பகுப்பாய்வு செய்யும் என்கிறார். பெட்ரோல், டீசல் விலைகளில் அதிக உயர்வு இருந்த போதும், எரிபொருள் வரிகளை குறைப்பது அரசுக்கு சாத்தியமில்லை என்றும் கூறியுள்ளார். எரிபொருள், சில்லறை பணவீக்கத்தின் குறியீட்டில் குறைந்த பங்கையே கொண்டிருப்பதால் எரிபொருள் வரிகளின் குறைப்பு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பில்லை என்று அவர் கூறியுள்ளார். நுகர்வோர் விலைக் குறியீட்டில் (CPI) பெட்ரோல், டீசலின் எடை மூன்று விழுக்காட்டிற்கும் குறைவாகவும், உணவின் எடை 50 விழுக்காடாகவும் உள்ளது. உணவுப் பணவீக்கமே அதிகக் கவலைக்குறியதே தவிர, எரிபொருள் விலை உயர்வு அல்ல என்று அவர் வாதிட்டுள்ளார். எரிபொருளின் விலை உயர்வு நேரடியாக இல்லாவிடினும் சுற்றடியாக மற்ற அனைத்து பொருட்கள், சேவைகளின் விலையையும் அதிகரிக்கும் என்பதை கற்றுக் கொள்ள வேண்டிய நிலையில் உள்ளது தலைமை பொருளாதார ஆலோசகரின் பொருளாதார அறிவு.

புள்ளியல் அரசியலாக்கப்பட்டுள்ளதாகவும் புள்ளியல் துறையின் மீதான பாஜக அரசின் கட்டுப்பாட்டைக் குறைப்பதன் மூலமே துல்லியமான தரவை உரிய நேரத்தில் வெளியிட முடியும் என்று இந்தியாவின் முன்னாள் தலைமைப் புள்ளியியலாளர் ப்ரொனாப் சென் குறிப்பிட்டுள்ளார்.

பணவீக்கம்:

மொத்த விலை பணவீக்கம் ஜூன் மாதத்தில் 12.07 விழுக்காடாக உயர்ந்துள்ளது, பெட்ரோல், டீசல், உற்பத்திப் பொருட்களின் விலையுயர்வினாலே பண வீக்கம் இந்தளவு அதிகரித்துள்ளது. எரிபொருள், ஆற்றலின் விலைவாசி 32.83 விழுக்காடு உயர்ந்துள்ளது. ஜூன் மாதத்தில் நுகர்வோர் குறியீடு அடிப்படையிலான சில்லறை பணவீக்கத்தின் அளவு 6.3 விழுக்காடு அதிகரித்துள்ளது, உணவுப் பொருட்களின் விலைவாசி 5.01 விழுக்காடு அதிகரித்துள்ளது. காய்கறிகளின் விலைவாசி 0.70 விழுக்காடு குறைந்துள்ளது. பழங்களின் விலைவாசி 11.82 விழுக்காடு உயர்ந்துள்ளது. பருப்பு வகைகளின் விலைவாசி 10.01 விழுக்காடு அதிகரித்துள்ளது. முட்டையின் விலை. 19.35 விழுக்காடு உயர்ந்துள்ளது. எண்ணெய், கொழுப்பு ஆகியவற்றின் விலைவாசி 34.78 விழுக்காடு அதிகரித்துள்ளது. மீன்,இறைச்சியின் விலைவாசி 4.83 விழுக்காடு உயர்ந்துள்ளது.

மே மாதத்தில் தொழில்துறை வளர்ச்சி:

புள்ளியியல் அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட தொழில்துறை உற்பத்திக் குறியீட்டு அறிக்கையின் படி மே மாதத்தில் உற்பத்தி 29.3 விழுக்காடு உயர்ந்துள்ளது. முதன்மைத் துறைகளில் சுரங்கத் துறை, செய்பொருளாக்கத் துறை, மின்சாரத் துறை ஆகியவற்றில் உற்பத்தி முறையே 23.3, 34.5, 7.5 விழுக்காடு உயர்ந்துள்ளது. சென்ற ஆண்டு மே மாதத்தில் பொதுமுடக்கத்தால் பெரும்பாலான உற்பத்திச் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டதாலே இந்த மாதத்தில் உற்பத்தி வளர்ச்சி இந்தளவிற்கு அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முதன்மை பொருட்கள், மூலதனப் பொருட்கள், இடைநிலைப் பொருட்கள், கட்டுமானப் பொருட்கள், உற்பத்தி அளவுகள் முறையே 15.8, 85.3, 55.2, 46.8 விழுக்காடு உயர்ந்துள்ளன. உடனடி நுகர்வுப் பொருட்கள் நீடித்த நுகர்வுப் பொருட்களின் உற்பத்தி அளவுகள் முறையே 0.8, 98.2 விழுக்காடு உயர்ந்துள்ளன.

ஜூனில் தொழில்துறை வளர்ச்சி:

இந்தியாவின் தொழில்துறை, உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை வெளியிட்ட எட்டு முக்கிய தொழில்களின் ஒருங்கிணைந்த உற்பத்திக்குறியீடு ஜூனில் 8.9 விழுக்காடு அதிகரித்துள்ளது. சென்ற ஆண்டு ஜூன் மாத உற்பத்தி அளவோடு ஒப்பிடும் போது நிலக்கரி உற்பத்தி 7.4 விழுக்காடு அதிகரித்துள்ளது. கச்சா எண்ணெய் உற்பத்தி 1.8 விழுக்காடு குறைந்துள்ளது, பெட்ரோலிய சுத்திகரிப்பு பொருட்களின் உற்பத்தி 2.4 விழுக்காடு அதிகரித்துள்ளது. உர உற்பத்தி 2 விழுக்காடு அதிகரித்துள்ளது. இயற்கை எரிவாயு உற்பத்தி 20.6 விழுக்காடும், எஃகு உற்பத்தி 25 விழுக்காடும், சிமெண்ட் உற்பத்தி 4.3 விழுக்காடும், மின்சார உற்பத்தி 7.2 விழுக்காடும் அதிகரித்துள்ளது.

1991 ஜூலை 23ல் இந்தியாவில் தாராளமயம் – தனியார்மயம் - உலகமயத்தை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார சீர்திருத்தம் மன்மோகன் சிங்கால் ஏற்படுத்தப்பட்டு 30 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. எந்த அடிப்படையில் இந்தியா பொருளாதார சீர்திருத்தத்தால் சமூக மேம்பாடு அடைந்துள்ளது என்பது பெரும் கேள்விக்குறியாக நீடிக்கிறது? பொருளாதார சீர்திருத்தம் மன் மோகன் சிங்கிற்கு பெருமிதம் அளிக்கலாம். சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற சமூகத் துறைகளில் இந்தியா பின்தங்கியுள்ளதாக அவரே ஒத்துக்கொள்கிறார். பொருளாதார சீர்திருத்தத்தின் பயன்கள் ஏழை மக்களை சென்றடையவில்லை என்பதை ஆசியா, இந்தியாவின் மிகப்பெரும் செல்வந்தர் அனில் அம்பானியே ஒத்துக் கொள்கிறார்.

உலகமயமாக்கம் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை மூன்று மடங்காக உயர்த்தியது, ஆனால் இவ்வளர்ச்சியில் தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்றும் பொருளாதார சமத்துவமின்மையை சந்தை சக்திகளால் தீர்க்க முடியாது என்றும் நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் எரிக் மாஸ்கின் கூறியுள்ளார்.

திட்டமிட்ட பொருளாதார அமைப்பாக இருந்த இந்தியாவின் திட்டக் கமிசனை கலைத்தது பாஜக அரசு. சமூகத் துறைகளை வளர்ப்பதற்குத் தானே திட்டமிடல் அவசியம். நிதி ஒதுக்கீட்டை வெட்டுவதற்கு எதற்கு திட்ட கமிசன் அதற்கு நிட்டி ஆயோக் போதும் என்பதே அவர்களது தர்க்கம். நிதி ஆயோக் பொதுத் துறைகளை ஒழித்துக் கட்டுவதைத் தான் கண்ணும் கருத்துமாக செயல்படுத்தி வருகிறது. கல்வி, சுகாதாரம் அனைத்து துறைகளையும் முற்றிலுமாக தனியார்மயப்படுத்துவதற்கான பரிந்துரைகளையே நவீன தாராளமய ஊது குழலான நிதி ஆயோக் இதுவரை பரிந்துரை செய்துள்ளது. . புதிய பொருளாதாரக் கொள்கையின் மூலம் அனைத்து துறைகளும் தனியார் துறைக்கும், நேரடி அந்நிய முதலீடுகளுக்கும் திறந்துவிடப்பட்டது. அந்நிய முதலீடுகள் பெரும்பாலும் ஊகமுதலீடுகளாகவும், சேவைத்துறைகளிலும் செய்யப்படுவதால் இந்தியாவின் உற்பத்தித் துறையின் மேம்பாட்டிற்கு அதுவே முட்டுக்கட்டையாகவும் செயல்படுகிறது.

பொருளாதார சீர்திருத்தத்தின் மூலம் ஜிடிபியை அதிகரிப்பதை மட்டுமே இலக்காகக் கொண்ட ஓட்டப்பாதையையே இந்தியா தேர்ந்தெடுத்தது. அந்த ஜிடிபியில் எவ்வளவு பங்கு தொழிலாளிகளிடமும், விவசாயிகளையும் அடைந்தது என்பது பற்றி பெயரளவிற்குக் கூட எந்த அக்கறையும் காட்டப்படவில்லை. பொருளாதார சீர்திருத்தத்தால் மூன்று லட்சத்திற்கும் மேலான விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். குறைந்த பட்ச ஆதார விலையும், அரசின் விலை நிர்ணய அமைப்பும் விவசாயிகளுக்கும், நுகர்வோருக்கும் பாதுகாப்பு அளித்தது. பொருளாதார சீர்திருத்தம் என்ற பெயரில் அந்த குறைந்த பட்ச பாதுகாப்பும் நீக்கப்பட்டுள்ளது.

விவசாயத் துறை இன்றும் புறக்கணிக்கப்பட்ட துறையாகவே உள்ளது. வேளாண் சீர்திருத்த சட்டங்களை திரும்பப் பெருமாறு இரவு பகலாக கடுங்குளிரிலும், மழையிலும், வெயிலிலும் 11 மாதங்களாகப் போராடும் விவசாயிகளின் வேதனை சொல்லி மாளாது. பெயரளவிற்குக் கூட அவர்களின் கோரிக்கைகளை செவி மடுக்க அக்கறை காட்டாத கொடுங்கோன்மையையே இந்த பொருளாதார சீர்திருத்தம் ஏற்படுத்தியுள்ளது. சமூகத் துறைகளுக்கான அரசு செலவினங்களை தொடர்ந்து வெட்டி எங்கும் எதிலும் தனியார்மயத்தை வளர்க்கும் போக்கு நீடித்த வறுமையையும், பெரும் சமூக பொருளாதார பின்னடைவையும் ஏற்படுத்தியுள்ளது.

பொருளாதார சீர்திருத்தம் அனைவருக்குமான இலவச ஆரம்பக் கல்வியை தடுத்து நிறுத்தி சமூக வளர்ச்சிக்கு முட்டுக் கட்டை போட்டுள்ளது. சாதிய ஏற்றத்தாழ்வுகளை குறைக்காமல் அதிகரித்து சாதியக் கட்டமைப்புகளை மேலும் வலுப்படுத்தும் விதமாகவே பொருளாதார சிர்திருத்தங்கள் நடைமுறைபடுத்தப்பட்டு வருகின்றன. பொருளாதார சீர்திருத்தத்தால் வறுமை குறையவில்லை வருவாய், சொத்துக்களில் பொருளாதர சமத்துவமின்மையே வரலாறு காணாத அளவிற்கு அதிகரித்துள்ளது. அடிப்படைக் கல்வியையும், சுகாதாரத்தையும் கொடுக்க வக்கில்லாத நிலைக்கு இந்திய அரசைத் தள்ளிய இந்த பொருளாதார மாற்றம் உண்மையில் பொருளாதார சீர்திருத்தம் அல்ல பொருளாதார சீரழிப்பே.

- சமந்தா