காஞ்சீ மகாநாட்டுத் தலைவர் ஸ்ரீமான். திரு.வி.கலியாணசுந்தர முதலியார், தமது ‘நவசக்தி’ பத்திரிகையில் “மகாநாட்டுத் தலைவர் ஐயங்கார், ஆச்சாரியார் கைப்பிள்ளையாக நடந்தார் என்னும் உரைகளை ‘குடி அரசு’ பத்திரிகை திரும்ப வாங்கிக்கொள்வது அதன் பெருந்தகைமையைக் காப்பதாகும். ஒருவர் தனது மனச் சான்றுப்படி நடந்ததை மற்றொருவர் திரித்துத் தம் மனம் போனவாறு கூறுவது அறமாகா. “குடி அரசு” ஆசிரியர்பால் எமக்கு நிரம்பிய அன்பு உண்டு. அவ்வன்பு காரணமாகவே இவ்வாறு எழுதத் துணிந்தோம்” என்று எழுதியிருக்கிறார்.

ஆனால் ‘குடி அரசு’ அதன் பெருந்தன்மையைக் காப்பாற்றிக் கொள்வதிலோ, சிறுந்தன்மை அடையாதிருப்பதிலோ கருத்துவைத்து அது தமிழ் நாட்டில் உலாவவில்லை. பெருந்தன்மையைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டுமானால், அனேக சிறுந்தன்மைக் காரியம் செய்யவேண்டுமென்பது அதற்குத் தெரியும். பெருந்தன்மை வந்தாலும் சரி சிறுந்தன்மை வந்தாலும் சரி அல்லது குடி அரசே மறைந்து போவதாயிருந்தாலும் சரி உண்மையை - தன் மனதுக்கு உண்மை என்று பட்டதை - எடுத்துச் சொல்லுவதுதான் அதன் தொண்டாக உடையது என்பதை நவசக்தியும் அதன் ஆசிரியரும் உணரட்டும்.

அல்லாமலும், இது உண்மைக் கலியாணசுந்தர முதலியார் எழுதியிருப்பாராயின், நிபந்தனையில்லாத மன்னிப்புக் கேட்டுக்கொண்டு எழுதியவைகளைப் பின்வாங்கிக்கொள்ள வேண்டியது உண்மையை உத்தேசித்து குடி அரசின் கடமையா என்றாவது யோசிக்கும். ஆனால், தமிழ்நாட்டை ஏமாற்றி பிராமணர்களுக்கு தலையையும், பிராமணரல்லாதாருக்கு வாலையும் காட்டும் போலிக் கலியாணசுந்திர முதலியார் எழுதியதைக் “குடி அரசு” எப்படி ஏற்கும்? போலிக் கலியாணசுந்திர முதலியாரின் அரசியல் நடவடிக்கைகளைத் திராசின் ஒரு தட்டில் வைத்துக் “குடி அரசு” “தமிழ்நாடு” “ஸைபுல் இஸ்லாம்” “சுகோதயம்” “ஸ்வராஜ்யா” “லோகோபகாரி” “ஊழியன்” “நவ இந்தியா” “தீனபந்து” “வஞ்சிகேசரி” முதலிய பத்திரிக்கைகள் எழுதியிருப்பவைகளையும் மற்றொரு தட்டில் வைத்தால், ஸ்ரீமான் போலிக் கலியாணசுந்திர முதலியாரின் தட்டு நிலத்தை விட்டுக் கொஞ்சங்கூட அசையாது என்பதோடு, ஸ்ரீமான் முதலியாரின் நடத்தைக்கு ‘குடி அரசு’ முதலியவைகளெழுதியது ஆயிரத்திலொரு பங்குகூட நிகராகாது என்பது விளங்கும்.

 ஸ்ரீமான். முதலியாரவர்களுக்கு மனச்சாக்ஷியென்னும் பேரால், தாம் நடந்து கொண்ட காரியத்தை மறுபடியும் நினைப்பு மூட்டுகிறோம். இதுதானா ஸ்ரீமான். முதலியாரின் மனச்சாக்ஷியென்பதை மற்றொருமுறையும் ஸ்ரீமான் முதலியாரைச் சிந்தித்துப் பார்க்கும்படி தாழ்மையாய்க் கேட்டுக் கொள்கிறோம். இதனால் அவருக்கு உண்மை கிடைக்காவிட்டால், தமிழ் நாட்டிலுள்ள ஏதாவதொரு ஐந்து பத்திராதிபர்களைப் பஞ்சாயத்தாராக நியமித்து, அவர்களைக் கொண்டு சொல்லப்படும் முடிவுக்கு ஸ்ரீமான் உண்மைக் கலியாணசுந்திர முதலியார் தயாராயிருக்கிறாராவென்று கேட்கிறோம். பஞ்சாயத்தார் சொல்லும் முடிவுக்கு “குடி அரசு” கட்டுப்படத் தயாராயிருக்கின்றதென்று இதனால் உறுதி கூறுகிறது. அன்றியும் ஸ்ரீமான். முதலியாரவர்களை “குடி அரசின்” நடத்தைக்காகச் சர்க்கார் நியாய ஸ்தலத்திற்குப் போகும்படி ஒரு நண்பர் அவருக்கு யோசனை சொன்னாராம். அப்படியானாலும், தனது நடபடிக்கையை, நியாயமானதாக்கிக் கொண்டாலுங்கூட சம்மதமே.

குடி அரசுக்காவது, அதன் பத்திராதிபருக்காவது நவசக்தியிடமோ, அதன் பத்திராதிபரான ஸ்ரீமான். முதலியாரிடமோ எவ்வித துவேஷமோ, பகைமையோ இல்லையென்பதையும் “குடி அரசும்” அதன் பத்திராதிபரும் உறுதி கூறுகிறார்கள். நிற்க, காஞ்சீயில் கூடின பிராமண ரல்லாதார் மகாநாட்டிற்கு ஸ்ரீமான் முதலியாரவர்கள் வரவேயில்லை. ஸ்ரீமான். டாக்டர். வரதராஜுலு நாயுடு வந்திருந்தார். டாக்டர் வரதராஜுலு நாயுடுவை ஸ்ரீமான் நாயக்கர் மகாநாட்டுக்கு வரும்படி அழைத்தபோது, தான் வருவதில் ஆக்ஷபணையில்லையென்றும், ஸ்ரீமான். முதலியார் வருவதில்லையெனச் சொல்லிவிட்டாரென்றும் சொன்னார். உடனே ஸ்ரீமான் முதலியாரை, ஸ்ரீமான் நாயக்கர் கேட்டபோது, ஸ்ரீமான் முதலியார் தாம் அப்படி ஒருக்காலும் சொல்லவேயில்லையென்றும், ஸ்ரீமான். நாயுடு வேண்டுமென்றே சொல்லி, நம்மிருவருக்கும் கலகத்தை உண்டாக்கப் பார்க்கின்றாரென்றும், மற்றும் சில விஷயங்களும் சொன்னதோடு, தான் வருவதாகவும் ஒப்புக்கொண்டார்.

அப்படியிருக்க, பிராமணரல்லாதார் மகாநாட்டிற்கே, ஸ்ரீமான். முதலியார் வராத காரணமென்ன? அதன் நடபடிக்கைகளைக் கூடத் தமது பத்திரிக்கையில் நடுநிலைமையுடன் பிரசுரிக்காமல், சுதேசமித்திரனைவிட மோசமான நிலைமையில் பிரசுரிக்கக் காரணமென்ன? அல்லாமல், “ஸ்ரீமான். தண்ட பாணி பிள்ளையின் கடுமையான மொழிப் பிரயோகத்தால் கூட்டத்தில் குழப்பமும், கூச்சலும் ஏற்பட்டு கூட்டம் கலைக்கப்பட்டது” என்று விஷம நிரூபம் எழுதக் காரணமென்ன? கூட்டத்திற்கு வந்திருந்தவர்களுடைய பெயரை ஏன் குறிப்பிட்டிருக்கக்கூடாது? அன்றி, மகாநாட்டின் விஷயாலோசனைக் கமிட்டியிலோ, மகாநாட்டிலோ ஒருவரும் முறைப்படி பிராமண ரல்லாதார் மகாநாட்டுத் தீர்மானத்தைக் கொண்டுவரவில்லையென்றும் அவை மகாநாட்டில் ஆலோசனைக்கே கொண்டுவரவில்லையென்றும் நவசக்தியில் எழுதியிருப்பது உண்மை முதலியாரின் நடவடிக்கையா? அல்லது போலி முதலியாரின் நடபடிக்கையா? நிற்க, பிராமணரல்லாதார் மகாநாட்டுத் தீர்மானங்களை மகாநாடு முடிந்தவுடன் விஷயாலோசனைக் கமிட்டியில்,

1. தலைவர் ஸ்ரீமான். முதலியாரிடம் ஸ்ரீமான். நாயக்கர் கொடுத்தாரா? இல்லையா?

2. ஸ்ரீமான். பாவலர் அதைப் பிரேரேபித்தாரா? இல்லையா?

3. ஸ்ரீமான். தண்டபாணி பிள்ளை அதை ஆதரித்தாரா? இல்லையா?

4. ஸ்ரீமான். நாயக்கரை ஸ்ரீமான் முதலியார், இரண்டு தீர்மானங்களிருக்கிறதே, உங்களுடைய அபிப்பிராய மென்னவென்று கேட்டாரா? இல்லையா?

5. ஸ்ரீமான். நாயக்கர் எழுந்து பிராமணரல்லாதார் மகாநாட்டுத் தீர்மானம், நானும் இருந்து செய்ததாதலால் அதற்கு மாறாக இப்பொழுது நான் பேச முடியாது; ஆகையினால் எந்தத் தீர்மானத்துக்கானாலும், வோட்டுக் கேளுங்கள் என்று ஸ்ரீமான். நாயக்கர் சொன்னாரா? இல்லையா?

6. அதன்மேல் ஸ்ரீமான். எஸ்.இராமநாதன் தீர்மானம் வோட்டுக்கு விடப்பட்டுத் தோற்றுப் போயிற்றா? இல்லையா?

7. அது தோற்றவுடன், உடனே ஸ்ரீமான். ஸ்ரீனிவாசய்யங்கார், ஸ்ரீமான். பாவலரை அவர் பிரேரேபித்த தீர்மானத்தை வாபீஸ் வாங்கிக்கொள்ளும்படி சொன்னாரா? இல்லையா?

8. ஸ்ரீமான். தண்டபாணி பிள்ளை எழுந்து, ஸ்ரீமான். பாவலர் தீர்மானத்தைப் பின்வாங்கிக்கொள்ளுவதாய்ச் சொன்னாலும், தான் அதை ஒப்புக்கொள்வதில்லையென்று வலியுறுத்தினாரா? இல்லையா?

9. பிறகு ஸ்ரீமான். முதலியார் வாபீஸ் வாங்கிக்கொள்ள அநுமதியளித்து விட்டதாகச் சொன்னாரா? இல்லையா?

10.அந்த அநுமதியை ஸ்ரீமான். நாயக்கர் ஒப்புக்கொள்ளாமல் வாதாடியதில், மறுபடியும் கொண்டுவர ஸ்ரீமான். முதலியார் அநுமதிகொடுத் தாரா? இல்லையா?

11. ஸ்ரீமான். நாயக்கரை மறுபடியும் பிரேரேபிக்கும்போது, எழுத்து மூலியமாய்க் கொடுங்கள் என்று கேட்டாரா? இல்லையா?

12. ஸ்ரீமான். நாயக்கர் முன்னமே உங்கள் கையில் கொடுத்திருக்கிறதே, அதை நீங்கள் கையில் வைத்துக் கொண்டிருக்கிறீர்களேயென்று சொன்னாரா? இல்லையா?

13. அது சமயம் ஸ்ரீமான். முதலியார் கையில் அத்தீர்மானங்கள் இருந்ததா? இல்லையா?

14. தமது கையில் அத்தீர்மானங்களிருந்தும், அதை ஏற்றுக்கொள்ள மாட்டேன், வேறு எழுதிக்கொண்டு வாருங்கள் என ஸ்ரீமான். முதலியார் சொன்னாரா? இல்லையா?

15.ஸ்ரீமான். நாயக்கரும், ஸ்ரீமான். தண்டபாணி பிள்ளையும் பிராமணரல்லாதார் மகாநாட்டுத் தீர்மானத்தை எழுதிக் கொண்டிருக்கும்போது தேர்தலுக்காக ஓர் போர்டு நியமிக்க வேண்டும் என்கிற ஓர் தீர்மா னத்தை ஸ்ரீமான். வரதராஜுலு நாயுடுவைக் கொண்டு பிரேரேபிக்கச் செய்து இத்தீர்மானத்திற்கு என்ன சொல்லுகின்றீர்களென ஸ்ரீமான். நாயக்கரைக் கேட்டாரா? இல்லையா?

16.ஸ்ரீமான். நாயக்கர் தனது தீர்மானம் எழுதிக்கொண்டிருக்கிறது, இதைத்தான் வோட்டுக்கு விடவேண்டும் என அக்ராசனராகிய ஸ்ரீமான். முதலியாரைக் கேட்டுக்கொண்டாரா? இல்லையா?

17.பிராமணரல்லாதார் மகாநாட்டுத் தீர்மானம் எழுதி, ஸ்ரீமான். தண்டபாணி பிள்ளையால் ஸ்ரீமான். முதலியாரிடம் கொடுக்கப்பட்டவுடன், இது ஒழுங்குத் தவறானதென்று ஒரேயடியாய் அடித்து விட்டாரா? இல்லையா?

18.வகுப்புவாரி தீர்மானத்தை ராஜீய மகாநாட்டில் பிரேரேபிக்க ஸ்ரீமான். ராமநாதன் அனுமதி கேட்டதற்கு, ஸ்ரீமான். முதலியார் அனுமதியளித்தாரா? இல்லையா?

19. ³ தீர்மானத்தை நகல் தீர்மானங்களோடு அச்சடித்து, பிரேரே பிப்பவர் ஸ்ரீமான். எஸ்.இராமநாதனென்றும், ஆமோதிப்பவர் ஸ்ரீமான். இராமசாமி நாயக்கரென்றும் குறிக்கப்பட்டதா? இல்லையா?

20. இப்படியிருக்க, மகாநாட்டின் விஷயாலோசனைக்கமிட்டியிலோ, மகாநாட்டிலோ ஒருவரும் முறைப்படி தீர்மானங்களைக் கொண்டுவரவில்லையென்று நவசக்தியில் ஸ்ரீமான். முதலியார் எழுதியிருப்பது உண்மை முதலியாரின் கூற்றா? அல்லது போலி முதலியாரின் கூற்றா?

மகாநாட்டு நடபடிக்கைகள்

21. மகாநாட்டில் இரண்டாவது தீர்மானமாக, ஸ்தல ஸ்தாபனங்களைக் காங்கிரஸ் கைப்பற்றவேண்டும் என்ற தத்துவத்தோடு கொண்டுவந்திருந் ததைப் பிரேரேபிக்க, ஆதரிக்க, ஆமோதிக்க மூன்று கனவான் கள் பெயர் குறிப்பிட்டிருந்ததா? இல்லையா?

22. அந்தப்படிச் செய்யாமல், அக்ராசனாதிபதி தானே எழுந்து அவசரவசரமாய்ப் பிரேரேபித்து நிறைவேறிவிட்டதென்று சொன்னாரா? இல்லையா?

23. இதற்குக் காரணம் ஸ்ரீமான்.இராமசாமி நாயக்கர், பின்னால் தண்ணீர் சாப்பிட்டுக் கொண்டிருந்ததும், அவர் வந்தால் ஆக்ஷபிப்பார் என்கிற பயந்தானா? அல்லவா? அல்லாமலும், அவர் வந்ததும் ஸ்ரீமான். முதலியாருட்பட யாவரும் சிரித்தார்களா? இல்லையா?

24. பாட்னா தீர்மானம் பாஸானபிறகு, ஸ்ரீமான். இராமசாமி நாயக்கரை, ஸ்ரீமான். முதலியார் கூப்பிட்டு உங்கள் தீர்மானம் ஒரு சமயம் தோற்றாலும் தோற்றுப் போகும்போல் இருக்கிறது. ஆதலால் வாபீஸ் வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொன்னாரா? இல்லையா?

25. ஸ்ரீமான். இராமசாமி நாயக்கர் தன்னுடைய தீர்மானம் தோற்காதென்றும், தோற்றுவிட்டாலும் அதைப்பற்றிக் கவலையில்லையென்றும் சொல்லிவிட்டாரா? இல்லையா?

26. பிறகு கொஞ்சநேரம் பொறுத்து காங்கிரஸ் விதிப்படி இருபத்தைந்து பிரதிநிதிகளின் கையெழுத்திருந்தால்தான் பிரேரேபிக்கலாமென்று ஸ்ரீமான். இராமநாதனிடம் சொன்னாரா? இல்லையா?

27. இதற்குக் காரணம், 25 கையெழுத்து வாங்குவதற்குள்ளாக மகாநாட்டு மற்ற தீர்மானங்களை யெல்லாம் தானே பிரேரேபித்து அவசரவசரமாய்த் தீர்மானித்து, மகாநாட்டு நடவடிக்கைகளை முடித்து அத்தீர்மானம் மகாநாட்டுக்கு வரவொட்டாதபடி செய்ய வேண்டு மென்ற எண்ணந்தானா? இல்லையா?

28.அப்படியிருந்தும், கல்பாத்தி தீர்மானத்தின் பேரில் ஸ்ரீமான். ஸ்ரீனிவாசய்யங்கார் சிநேகிதர்கள் சிலர் பேசக் கேட்டுக்கொண்டதால் அவர்களுக்குப் பேச அநுமதி கொடுத்தால், மத்தியில் கிடைத்த கொஞ்ச நேரத்தில் சுமார் 30 பிரதிநிதிகளுக்கு மேல் ஸ்ரீமான். நாயக்கரால் தீர்மானத்துக்குக் கையெழுத்து வாங்கிக் கொடுக்கப்பட்டதா? இல்லையா?

29. இது கேட்டதும், கொடுத்ததும், கையெழுத்து வாங்கினதும், பாட்னாத் தீர்மானத்தை ஒப்புக்கொண்டு காங்கிரஸ் சட்டசபைத் தேர்தலை நடத்த வேண்டுமென்ற தீர்மானத்தை ஸ்ரீமான். ஸ்ரீனிவாசய் யங்கார் பின் வாங்கிக்கொண்டதற்குப் பிறகுதானா? அல்லவா?

இவற்றிற்கு ஸ்ரீமான். முதலியாரவர்கள் தமது மனச்சாக்ஷி வாதத்தில் என்ன பதில் சொல்லியிருக்கிறார்? அல்லது என்னதான் சொல்லப்போகிறார்? மனச்சாக்ஷிக்கு ஓர் அளவுண்டா இல்லையா? திருடவும், கொலைசெய்யவும், கொள்ளையடிக்கவும், ஒரு மனிதனுக்கு அவனுடைய மனச்சாட்சி இடங்கொடுத்துவிட்டால், உலகத்தார் வாய்மூடிக்கொண்டிருக்க வேண்டியதுதானா? உலகத்தாருடைய மனச்சாட்சி இவ்விதக் காரியங்களை வெளிப்படுத்தக் கட்டளையிட்டால், அவர்கள் மனச்சாட்சிக்கு மரியாதையுண்டா? இல்லையா? மனச்சாட்சியென்றால், ஒருவர் மனச்சாட்சியில் மற்றொருவர் எப்படிப் பிரவேசிக்கலாம்?

குடி அரசின் மனச்சாட்சியில் ஏன் ஸ்ரீமான். முதலியார் பிரவேசித்துப் பின்வாங்கிக்கொள்ளும்படி கட்டளையிடுகிறார். ஸ்ரீமான். உண்மை முதலியாருடைய மனச்சாக்ஷியைக் குடி அரசும், அதன் பத்திராதிபரும் நன்கு அறிவார்கள். அது மிகவும் பரிசுத்தமான மனச்சாக்ஷி. காஞ்சீபுரம் மகாநாட்டு நடபடிக்கைகள் கண்டிப்பாய் ஸ்ரீமான். உண்மை முதலியாரின் மனசாட்சி அல்லவே அல்ல. ஸ்ரீமான் அய்யங்கார், ஆச்சாரியாரின் மனச் சாக்ஷிகள் ஸ்ரீமான். முதலியாரின் சரீரத்திற்குள் புகுந்து. ஸ்ரீமான். முதலி யாரின் மனச்சாக்ஷியை அடித்துத் துரத்தி அந்த ஸ்தானங்களை ஆக்ரமித்துக் கொண்டு அவைகள் நடத்தின நடவடிக்கைகள்தானென்பதை குடி அரசும், அதன் பத்திராதிபரும், மற்றும் அதன் நண்பர்களும் கோபுரத்தின் மீதிருந்து கூவவும் அஞ்ச மாட்டார்கள்.

காஞ்சீபுரம் மகாநாட்டில் ஸ்ரீமான். போலி முதலியார் கண்ணுக்கு ஸ்ரீமான்கள். இராமசாமி நாயக்கரும், இராமநாதனும், தண்டபாணி பிள்ளையும் ஓர் சிறிய மூட்டைப் பூச்சிபோல் விளங்கினார்களென்பதையும், அவர்களை மனிதர்களாகக்கூட மதிக்கவில்லையென்பதையும், அவர் மறுக்கவே முடியாது. ஆனால், ஸ்ரீமான்கள், ராஜகோபாலாச்சாரியாரும் ஸ்ரீனிவாசய்யங்காரும், போலி முதலியார் கண்ணுக்குக் குலகுருவாய் விளங்கினார்களென்பதை யும், அவர் மறுக்கவே முடியாது. உண்மை முதலியார் உள்ளத்தில் ஸ்ரீமான்கள். இராமநாதனும், தண்டபாணி பிள்ளையும், நாயக்கரும் எப்படி விளங்கு கின்றார்களென்பதும், ஸ்ரீமான்கள். ஸ்ரீனிவாசய்யங்காரும், இராஜகோபாலாச் சாரியாரும் எப்படி விளங்குகின்றார்களென்பதும் உண்மை முதலியாருக்கும், அவருடைய அன்பர்களுக்கும் நன்றாய்த் தெரியும்.

ஸ்ரீமான். முதலியாரின் தியாகமும், அவருடைய தேசபக்தியும் அவரது உழைப்பும் தமிழ்மக்கள் வெகுபேர் அறியமாட்டார்கள். சாதாரண மக்களுக்கு ஏதோ அவர் ஓர் தமிழ் படித்தவ னென்று மாத்திரம்தான் தெரியும். வாஸ்தவத்திலேயே ஸ்ரீமான். முதலியார் ராஜீய வாழ்வில் இறங்காமல் தனது தமிழ் உபாத்தியாயர் உத்தியோகத்திலேயே இருந்திருப்பாரானால், இதுவரையில் லக்ஷக்கணக்கான ரூபாய்கள் சம்பாதித்திருப்பாரென்பதோடு, மஹாமஹோபாத்தியாய பட்டங்களும், மற்றும் தமிழ் அகராதி எழுதுவதற்கும், தமிழ்ப் பிள்ளைகளைப் பரீட்சித்து அவர்கள் பிராமண பரீக்ஷகர்கள் கையில் சிக்கி பரீக்ஷையில் தவறிப் போகாமல் விருத்தியடைவதற்கும், அரசாங்கத்தில் தமிழுக்குத் தக்க யோக்கியதை சம்பாதிப்பதற்கும் உதவியாயிருந்திருப்பார்.

இராவணன் தங்கையாகிய சூர்ப்பனகையை மூக்கையும், முலையையும் அறுத்த ராமன், உத்தமன் - விஷ்ணு அவதாரம் என்றும், அதற்குப் பிரதியாய் சீதையைக் கொண்டுபோய் அசோகவனத்தில் வைத்து தன் மகளைக் காவல்போட்டு வைத்திருந்தவன் இராக்ஷஸன் என்றும், காலில்லாதவன் நொண்டி, கண்ணில்லாதவன் குருடன் என்றும், இருக்கிற புஸ்தகப் பள்ளிக்கூடப் பாடங்களை எழுதிக் கொண்டிருந்தால், அளவிட முடியாத பணத்தையும் சம்பாதித்திருப்பார்.

உண்மையில் தமிழ் நாட்டு ராஜீய வாழ்விலிருக்கும் எவருடைய தியாகத்திற்கும், ஸ்ரீமான். முதலியார் தியாகம் பின் வாங்கியது அல்ல என்று தான் சொல்லவேண்டும். அவர் தன்னைப்பற்றி விளம்பரப்படுத்திக்கொள்ளுங்குணம் கொஞ்சமும் இல்லாதவரானபடியால், அவருடைய தியாகங்களைப் பொதுமக்கள் அறிய வழியில்லாமற் போய் விட்டது. அது மாத்திரமல்ல, அவரிடத்தில் அந்நியரை மன்னிக்கும் குணம் தமிழ் நாட்டிலுள்ள யாரையும்விட அதிகமாயுண்டு. உதாரணமாக, இரண்டு மாதங்களுக்கு முன்புதான் ஸ்ரீமான். ஸ்ரீனிவாசய் யங்கார், நன்னிலத்தில் ஓர் கூட்டத்தில் பேசும்போது, ஸ்ரீமான். முதலியார் மாரீசன் என்றும், ஜஸ்டிஸ் கக்ஷியிலீடுபட்டவரென்றும் அவரை காங்கிரஸை விட்டு வெளியாக்க வேண்டுமென்றும், சொன்னதை உடனே மறந்து ஸ்ரீமான். ஸ்ரீனிவாசய்யங்கார் தலைமையின் கீழ் தமிழ்நாடு நடக்க வேண்டுமென்றும், அவர் அரும் பெரும் தலைவரென்றும் சொல்லி, அவரைக் காங்கிரஸ் கமிட்டிக்குத் தலைவராக்குவது இலேசான காரியமல்ல. இதற்கு பயங் கொள்ளித்தனம் ஓர் காரணமாயிருந்தாலுங்கூட, மன்னிப்புத்தன்மையின் பெருமையை நாம் மறந்துவிடக் கூடாது.

ஸ்ரீமான். ஆச்சாரியாரவர்களைப் பற்றியும் பல புராணங்கள் சொன்னவர் எவ்வளவு சீக்கிரத்தில் அதை மறந்து அவரிடத்தில் அன்பு கொண்டவர் போல் நடப்பதென்றால், அதுவும் பெருந்தன்மையின் அறிகுறியேயாகும். எப்படியான போதிலும் உண்மை முதலி யாரின் மனச்சாக்ஷியைப் பற்றியும், அவரது கொள்கைகளைப் பற்றியும், நமக்கு ஒருக்காலும் விரோதமோ, துவேஷமோ கிடையவே கிடையாது. உண்மை முதலியாரின் பலவீனத்தால், சிற்சில சமயங்களில் திடீரென்று போலி முதலியாரின் ஆதிக்கம் பலப்பட்டு தேசத்தையும், சமூகத்தையும் பாழாக்கும் நிலைமை ஏற்பட்டுப் போய் விடுகிறதே என்பதுதான் நமது கவலை. அத்தோற்றம் இனித் தோற்றக்கூடா தென்பதுதான் நமது உண்மையான ஆசையே யன்றி, உண்மை முதலியாரின் மனத்தைப் புண்படுத்தவோ, கஷ்டப் படுத்தவோ நாம் ஒரு நிமிஷமும் நினைக்கவேயில்லை; நினைப்பதுமில்லை. நமது கேள்விகளுக்குப் பதில் வந்தவுடன் மற்றவை எழுதுவோம்.

(குடி அரசு - கட்டுரை - 13.12.1925)

Pin It