naveethan pillai- 300நவி பிள்ளை என்கிற நவநீதம் பிள்ளை 1941 செப்டம்பர் 23ஆம் நாள் தென்னாப்பிரிக்காவில் நடால் மாகாணம் டர்பன் நகரத்தில் தமிழ் வம்சாவழிக் குடும்பத்தில் பிறந்தார். அவர் தந்தை பேருந்து ஓட்டுனர். 1965இல் சட்டத்தில் பட்டம் பெற்றார். 1988இல் ஆர்வட் கல்லூரியில் பயின்று முதல் தென்னாப்பிரிக்கராகச் சட்டப் படிப்பில் முனைவர் பட்டம் பெற்றார்.

1967இல் நடால் மாகாணத்தின் வெள்ளையரல்லாத முதல் பெண் வழக்குரைஞரானார். அது இனஒதுக்கல் காலம் என்பதால் நீதிபதி அறைகளுக்குள் நுழைய அவர் அனுமதிக்கப்படவில்லை. அவர் வழக்குரைஞராகப் பணியாற்றிய 28 ஆண்டுக் காலத்தில் இனஒதுக்கலுக்கு எதிராகத் தொடர்ந்து போராடினார். இனஒதுக்கல் சட்டங்களால் சிறைப்படுத்தப்பட்ட பலருக்காகவும் வாதாடினார்.

பெரும் போராட்டங்கள் நடத்தி ராபன் தீவில் சிறைப்பட்டிருந்த நெல்சன் மண்டேலா உள்ளிட்ட பலருக்கும் வழக்குரைஞரைச் சந்திக்கும் உரிமையைப் பெற்றுக் கொடுத்தார். இல்ல வன்முறையில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கெனப் பாதுகாப்பு இல்லங்கள் நடத்தினார். ஈக்வாலிட்டி நவ் (இப்போதே சமத்துவம்) என்னும் பன்னாட்டுப் பெண்கள் அமைப்பை 1992இல் நிறுவினார்.

1995இல் ஆப்பிரிக்கத் தேசியக் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் நெல்சன் மண்டேலா இவரைத் தென்னாப்பிரிக்க உயர் நீதிமன்றத்தில் வெள்ளையரல்லாத முதல் பெண் நீதிபதி-யாக்கினார். அப்போதுதான் முதன் முதலாக அவருக்கு நீதிபதி அறைக்குள் நுழையும் வாய்ப்பும் கிடைத்தது. அங்கு சில காலம் பணி-யாற்றிய உடனேயே, அவர் ருவாண்டாவுக்கான பன்னாட்டுக் குற்றவியல் தீர்ப்பாயத்தின் நீதிபதியாக ஐநா பொது அவையால் அமர்த்தப்பட்டார். அப்போதுதான் ஜீன்-பால் அக்கேசு என்னும் வழக்கில் பாலியல் வல்லுறவும் வன்கொடுமையும் இனக்கொலையே என்ற வரலாற்று முக்கியத்தும் வாய்ந்த தீர்ப்பை அளித்தார்.

அப்போது நவநீதம் பிள்ளை கூறினார்: "காலங்காலமாகவே பாலியல் வல்லுறவு என்பது போர் வெற்றியாகவே கருதப்பட்டு வருகிறது. இப்போது அது போர்க் குற்றமாகக் கருதப்படும். நாம் இதன் மூலமாகத் தெரிவிக்க விரும்பும் அழுத்தமான செய்தி என்னவென்றால், கற்பழிப்பை இனியும் போர் வெற்றிக்குக் கிடைத்த ஒரு விருதாகக் கருத முடியாது."

2003 பிப்ரவரியில் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தின் நீதிமன்றக் குழுவில் அமர்த்தப்பட்டார். 2008 சூலை 24ஆம் நாள் ஐநா மனித உரிமைகள் அமைப்பின் உயர் ஆணையர் ஆனார். 2009இல் முள்ளிவாய்க்கால் இனஅழிப்பு முடிந்த நாள் தொட்டு இலங்கை உள்நாட்டுப் போரில் நிகழ்ந்த போர்க் குற்றங்களையும் பிற மனித உரிமை மீறல்களையும் அம்பலப்படுத்துவதிலும் அவற்றுக்கான நீதி கிடைக்கச் செய்வதிலும் அவர் ஆற்றிய அறிவார்ந்த, துணிவார்ந்த பங்கை உலகத் தமிழினம் மட்டுமல்ல, மனித உரிமைகளில் நம்பிக்கை வைத்துள்ள அனைவரும் மதித்துப் போற்றுவர்.

இப்போது ஐநா மனித உரிமை மன்றத்தின் சார்பில் தொடங்கப் பெற்றுள்ள பன்னாட்டுப் புலனாய்வுப் பொறி-யமைவைத் தக்கவாறு ஏற்படுத்துவதில் நவநீதம் பிள்ளை வகித்த பங்கு வரலாற்றில் என்றும் நினைக்கப்படும்.

ஐநா மனித உரிமை மன்ற உயர் ஆணையர் பொறுப்பிலிருந்து ஓய்வு பெற்றுச் செல்லும் நவநீதம் பிள்ளையைத் தமிழ்த் தேசம் வணங்கி வழியனுப்புகிறது.