இந்த 2014 நவம்பர் 2 அன்று வெளிவந்துள்ள உச்ச நீதிமன்றத் தீர்ப்பு சமூகநீதிக்குப் பேரிடியாய் வந்து இறங்கியுள்ளது. இந்தியச் சாதிகளின் நிலை என்ன என்று கணக்கெடுக்கும்படி நடுவணரசுக்குக் கட்டளையிட முடியாது என்கிறது. ஏனென்றால் அது அரசின் கொள்கை முடிவாம். இந்த நீதிமன்றங்கள் முன்பு அரசமைப்புச் சட்டத்தைக் காலில் போட்டு மிதித்து, இடஒதுக்கீட்டுக்கு 50 விழுக்காடென்னும் இலக்குவக் கோடு கிழித்ததும், புதிதாகப் பசையடுக்குக் கோட்பாட்டை உருவாக்கியதும் கொள்கைத் தலையீடு ஆகாதா? சொல்லப் போனால் அதனைப் பார்ப்பனியத் தீவிரவாதம் என்றே வர்ணிக்க வேண்டும். காங்கிரஸ் அரசுகளுக்குக் கொஞ்சமாவது சமூகநீதி அக்கறை இருக்குமானால், இந்தச் சமூகஅநீதி நீதிபதிகளை நாடளுமன்றத்தில் குற்றவாளிக் கூண்டில் ஏற்றி விசாரித்திருக்க வேண்டாமா? அரசமைப்புச் சட்டம் கூறாத ஒதுக்கீட்டு வரம்புகளையும், பொருளியல் அடுக்குகளையும் எங்களிடம் திணிக்கும் அதிகாரத்தை உங்களுக்கு யார் கொடுத்ததெனச் சட்டையை உலுக்கியிருக்க வேண்டாமா?

இடஒதுக்கீடு இரண்டாந்தரக் குடிமக்களையே உருவாக்கும் எனக் கூறினார் நேரு. மண்டல் குழு அறிக்கையை நாடாளுமன்றப் பரண்களில் தூங்க விட்டார் மகள் இந்திரா. மண்டல் குழு அறிக்கையையே இழிவுபடுத்தி நாடாளுமன்றத்தில் மணிக் கணக்காகக் கத்தினார் பேரன் ராஜீவ் காந்தி. பார்ப்பனர்கள் பொருளியல் இடஒதுக்கீடு கேட்பதிலும் நியாயம் இருப்பதாகக் கூறினார் கொள்ளுப் பேரன் ராகுல் காந்தி. காலங்காலமாய்ச் சமூகநீதியைக் குழிதோண்டிப் புதைத்து வரும் இந்தக் காங்கிரஸ் சமூகஅநீதிக் குடும்பம் கொடுக்கும் துணிச்சலில்தான் நீதிமன்றங்கள் சமூகஅநீதிக் குத்தாட்டம் ஆடி வருகின்றன. இந்த அநீதி வரலாறு இப்போதும் தொடர்கிறது. சாதிவாரிக் கணக்கெடுப்பு தேவையில்லை என உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை அளித்ததே ப. சிதம்பரம்தான். இது நடந்தது திமுக உள்ளிட்ட சமூகநீதி பேசும் கட்சிகளின் பங்கேற்புடன் நடைபெற்ற ஐமுகூ ஆட்சியில்தான். ஆனால் இது நமது சமூகநீதிப் பாய்ச்சலுக்குக் கேடுகாலம். இங்கிலாந்து துறைதோறும் துறைதோறும் புள்ளி விவரங்களைப் பாடுபட்டுச் சேகரிப்பதைப் பாராட்டி எழுதிய மார்க்ஸ் அந்தத் தரவுகள் மட்டும் இல்லையென்றால் தனது மூலதன ஆராய்ச்சியைச் செம்மையாகச் செய்திருக்க முடியாது என்றார்!

நமது சாதிய இந்தியாவில் சாதி பற்றிய ஆராய்ச்சி செய்யவில்லை என்றால் நம்மால் அம்பேத்கரின், பெரியாரின் சமூகநீதி அறிவியலைப் பட்டை தீட்டி வளர்க்க முடியாது. இருப்பதை இல்லாதடிப்பதுதானே பார்ப்பனிய வர்ணப் பண்பாடு! அமெரிக்காவில் வழங்கப்படும் ஒரு புகழ்வாய்ந்த கூற்றே நினைவுக்கு வருகிறது. அமெரிக்க வெள்ளையர் கருப்பின மக்களுக்கு எதிரான ஒதுக்கல்கள் இப்போது எங்கே இருக்கிறது? எல்லாம் ஜாம் ஜாமென நன்றாகத்தானே உள்ளது என்பார்களாம். நிறவெறி ஆதரவாளர்களை விட ஆபத்தான இந்தக் கூட்டத்தினரை ‘நிறக்குருட்டு இனவாதிகள்’ என்பார்கள். அதே போல் இங்கு இந்தியப் பார்ப்பனிய மன்றங்கள் சாதி பற்றி எவரும் மூச்சு விடக் கூடாது என்கிறது. தீண்டாமை எல்லாம் பழங்கதை என்கிறது. எல்லாரும் சுபிக்ஷமாக இருக்கும்போது சாதிக் கணக்கெல்லாம் எதுக்கு என்கிறார்கள்? இவர்களை ‘வர்ணக் குருட்டு சாதியவாதிகள்’ எனலாம்.

இப்படி இருண்ட இந்தியாவை உருவாக்கப் பார்ப்பது அப்பட்டமான அயோக்கியத்தனம். சாதி அறிவியலைப் புரிந்து கொள்ள இன்றைய, எதிர்காலத் தலைமுறையினருக்கு சாதிக் கணக்கீட்டு ஆய்வு முறை கட்டாயத் தேவை. இந்தக் கணக்கீட்டின் அடிப்படையில் சாதிவளர்ச்சிக் குறியீட்டெண் [Caste Development Index] ஒன்றை நாம் உருவாக்க வேண்டும். அதன் அடிப்படையில் பன்னாட்டுக் குழுமங்கள், தனியார்க் குழுமங்கள், நீதித்துறை, பொறியில் துறை, கலைத்துறை எனத் துறைதோறும் துறைதோறும் சாதிகளுக்குள்ள வளர்ச்சி நிலைகளை நாம் துல்லியமாகக் கண்டறிய முடியும். அந்த அடிப்படையில் சாதிகளுக்குரிய பங்கை நியாயமாகப் பங்கிட்டுத் தந்து சாதிகளுக்கிடையிலான சமத்துவத்தை வாழ்வியல் அளவில் நம்மால் ஏற்படுத்த முடியும். இதுவே தொடர்ந்து சாதி ஒழிப்புக்கும் களமமைத்துக் கொடுக்கும். எனவேதான் சாதி ஒழிப்புக்கு முன்னிபந்தனையாகச் சாதிச் சமத்துவத்தை அம்பேத்கர் முன்வைத்தார். நாம் சாதிக் கணக்கெடுப்பு கேட்பது சாதியை ஒழிக்க! பார்ப்பனிய மன்றங்கள் சாதிக் கணக்கெடுப்பை மறுப்பது சாதியை நிலை நிறுத்த!

இந்தப் புள்ளிவிவரங்கள் இல்லாதிருப்பது சமூகநீதி ஆய்வில் தடையாய் இருப்பது குறித்து அருந்ததி ராயும் கவலைப்படுகிறார். இந்திய இழிவு என்னும் தனது கட்டுரையில் அவர் இந்தக் கணக்கீட்டுக்குள்ள வரலாற்றுத் தேவையைத் தெளிவாகக் குறிப்பிடுகிறார். அந்த வகையில்தான் அவரது கட்டுரையைத் தமிழாக்கித் தருகிறோம்.

http://keetru.com/index.php/2012-08-21-05-45-16/tamildesam-oct14/27442-2014-11-29-06-01-25