வீடில்லாதவர்கள், குடும்பமில்லாதவர்கள், பண அருமை தெரியாத மைனர்கள், நாக்கு ருசி படைத்த மற்றவர்கள், – எல்லோருக்கும் புகலிடமாயிருப்பது ஹோட்டல்! சிற்றுண்டி சாலை! ஓரளவு பேருண்டி (சாப்பாடு) விடுதிகூட!
 
இவற்றின் அடுப்பங்கரைகளை முன் பக்கமாக வைத்து அதன் வழியாகத்தான் உணவருந்தும் இடத்துக்குப் போக வேண்டும் என்றும், எச்சில் பாத்திரங்கள் கழுவுவதைப் பார்த்த பிறகுதான் உண்டியருந்த வேண்டும் என்றும், ஏதாவதொரு பழக்கமோ, சட்டமோ, விதியோ, கட்டுப்பாடோ ஏற்படுமேயானால் லட்சத்தில் ஒரு ஹோட்டல்தான் நடந்து கொண்டிருக்கும்.
 
“பட்டினி கிடந்து செத்தாலும் சரி; நான் ஹோட்டலுக்குப் போகவே மாட்டேன்; மருந்துக் கடைக்கும் டாக்டருக்கும் பணம் கொடுக்கவும் மாட்டேன்'' என்ற முடிவுக்கு எல்லோரும் வந்து விடுவார்கள்.
 
பிறகு பயங்கரமான விளைவு ஏற்படலாம். டாக்டர்கள் அடியோடு வேலை நிறுத்தம் செய்து விடுவார்கள், தங்கள் வருமானத்தில் பெரும்பகுதி போய்விடுகிறதே என்று. மருந்துக் கடைகளிலும் கடை அடைப்பு (கிளர்ச்சி அல்ல!) நிகழும்!
 
ஆகவே, இந்த மாதிரி நெருக்கடியெல்லாம் நிகழ்ந்துவிடாதபடி ஹோட்டல்களும், டீ கடைகளும் பிறவும் தொடர்ந்து நடைபெற்று டாக்டர்கள் உட்பட எல்லோருமே பிழைப்பு நடத்திக் கொண்டிருப்பதே நல்ல சோஷலிசம் என்பேன்!
 
இன்று அப்பாவிகளான ஹோட்டல்காரர்மீது அபாண்டமான பழி சுமத்தப்படுகிறது! அதாவது சாப்பாடு, பலகாரம், காபி முதலியவற்றின் விலையை ஏற்றிவிட்டார்களாம் யாரோ சிலர்; எங்கேயோ இரண்டொரு இடங்களில்.
 
நான் சொல்கிறேன், அவர்கள் சார்பில். இப்பேர்பட்ட மடையர்கள் ஹோட்டல் தொழிலுக்கே வந்திருக்கக் கூடாது! எதற்காக விலையை ஏற்ற வேண்டும்? விறகு முதல் எண்ணெய் வரையில், அரிசி முதல் சர்க்கரை வரையில் – எது என்ன விலைக்குத்தான் விற்கட்டுமே! இன்னும் நான்கு மடங்கு அதிக விலைக்குத்தான் விற்கட்டுமே!
 
“வயிற்றுக் கடவுள்'' (கல்விக் கடவுள், செல்வக் கடவுள், என்பது போல) ஹோட்டல்காரருக்குத் தந்துள்ள இரண்டு வரங்கள்:
 
1. நீங்கள் எதில் எதை வேண்டுமானாலும் கலப்படம் செய்து விற்கலாம்; எவராலும் கண்டுபிடிக்க முடியாது.
 
2. நீங்கள் அளவையும் எடையையும் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் சுருக்கிக் கொள்ளலாம். எவனும் எடைபோட மாட்டான்; அளந்து பார்க்க மாட்டான்.
 
இந்த இரண்டு வரங்களும் உள்ள வரையில், இவற்றுடன், அடுப்பங்கரையில் தாராளமாகத் தண்ணீரும் கிடைத்துவிட்டால், ஹோட்டல் தொழிலை அசைப்பதற்கு யாராலும் முடியாது!
 
உதாரணமாக, இன்று இட்லி ஒரு ரூபாய்க்கு விற்க முடியாமலிருக்கலாம்! ஆனால் இட்லியையே ஒரு ரூபாய் அளவுக்குச் சுருக்கி விட்டால் போதுமே!  இனிப்புப் பண்டங்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்! காபி–டீ இத்தனை அவுன்ஸ் இன்ன விலை என்றா சட்டமிருக்கிறது? அதில் இவ்வளவுதான் தண்ணீர் ஊற்றலாம் என்ற கட்டுப்பாடுதான் இருக்கிறதா?
 
தோசை மாவில் இன்னின்ன மாவைத்தான் கலக்கலாம் என்ற  கட்டளை உண்டா? அதைச் சுடுகின்ற எண்ணெயில் இன்னின்ன எண்ணெய்களைத்தான் கலப்படம் செய்யலாம் என்ற கட்டுப்பாடு உண்டா?
 
இப்படியாக, எல்லா வசதிகளும் உள்ள ஒரு தொழிலான ஹோட்டல் தொழிலைப்பற்றி, அபாண்டமாக, “விலையை ஏற்றி விட்டார்கள்'' என்று கூறப்படுவதை நான் அழுத்தமாக எதிர்க்கிறேன்.
 
“எடையைக் குறைக்கும் வசதியுள்ள தொழிலில் விலையை ஏற்றுவானா எவனாவது? – என்ற பொன்மொழியைப் பொதுமக்களும் அரசாங்கமும் உணருமாக! 
 
("அறிவுப்பாதை' – 9.10.1964)