ஒரு தேசத்தின் குமுகப் பொருளியல் அடித்தளக் கட்டுமானங்களிலிருந்து கிளை பரப்பி வளர்கிற பண்பாட்டுக் கூறுகளுள் மதமும் குறிப்பிடத் தகுந்தது.

கலை, பண்பாட்டுக்குரிய பல கூறுகள் மதங் களிலும் உண்டு. அவை அனைத்தும் அரசியலோடும் பின்னிப் பிணைக்கப்பட்டிருக்கின்றன.

ஆண்டை அரசின் அரசியல், பொருளியல் ஆளுமைகளை எளிதே விளங்கிக் கொள்ள இயலாத வகையில் மதங்கள் மக்களிடையே மயக்கப் போக்கைத் தருகின்றன.

ஒவ்வொருவரும் தங்களின் ஊழ் வினையின் பயனால் தான் எல்லாமும் நடப்பதாக எண்ணு கின்றனர். தங்கள் மீதான ஊழ் வினைக் கெடுதல்கள் நீங்குவதற்குக் கடவுள்களைத் தொழுவதே வழி என்று மதங்கள் சொல்லுகின்றன.

“நடப்பன அனைத்தும் நாடகம் போன்றவையே. இந்த நாடக வாழ்வில் மகிழ்ச்சி என்பதும் துன்பம் என்பதும் அவரவர்கள் என்ன வகையில் அவற்றை எடுத்துக் கொள்கிறார்களோ அப்படியே உணரப்படும். எனவே மகிழ்ச்சி, துன்பம் இரண்டையும் ஒன்றாகவே எண்ண வேண்டும்'' என்றெல்லாம் மதங்கள் அறிவுறுத்துகின்றன.

கடவுள் கருத்துகளுக்கோ, கடவுள் சார்ந்த மதவியல் கோட்பாடுகளுக்கோ மொழி, இனம், தேசம், நாடு என்ற பகுப்பெல்லாம் இல்லை. எல்லா உயிர்களும் ஒரே தன்மையுடையனவே. எனவே பெரியோர், சிறியோர், உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்றெல்லாம் பாகுபடுத்துதல் தவறு என்று சமயங்கள் கருத்து கூறுகின்றன.

மேலெழுந்த அளவில் பார்க்கும்போது இவையெல்லாம் சரி போலவே தோன்றலாம். ஆனால் ஆழ்ந்து எண்ணிப் பார்த்தால்தான் அக் கருத்துகள் நம் அறிவை மயக்கியிருப்பது தெளிவுக்கு வரும்.

எல்லா மொழியும் ஒன்றுதான் எனில் கடவுளை வழிபட மட்டும் தனிமொழி எதற்கு? சமற்கிருதம் இல்லாமல் தமிழில் வழிபாடு செய்ததால் தீட்டாகி விட்டனவாகப் பல கோயில்களில் 'சம்புரோக்சன' வேள்வி என்று தீட்டுக் கழிப்பு வேள்விகள் ஏன் செய்யப் பெற்றன?

மக்கள் அனைவரும் ஒன்றுதான் எனில் ஒரு குறிப்பிட்ட குமுகத்தைச் சார்ந்தவர்கள் மட்டும் கடவுளர் சிலைகளுக்குப் பூசை செய்வதையும், சங்கராச்சாரிகள் போலும் மடங்களின் தலைவர்களாக வருவதையும் எப்படிச் சரி என்று சொல்ல முடியும்.

மக்கள் அனைவரும் கடவுளின் குழந்தைகள் எனில் சிலர் மட்டும் எப்படிச் "சாமி'களாக ஆகமுடிகிறது.

 இப்படியாக மதத்தின் பெயரால் கடைபிடிக்கப் படும் ஏற்றத் தாழ்வுப் போக்குகளைச் சுட்டிக் காட்டி நூற்றுக்கணக்கான கேள்விகளைக் கேட்க முடியும்.

ஆனால் அவற்றுக்கெல்லாம் மதங்கள் சரியான விடைகளைச் சொல்வதில்லை.

இந்நிலையில், மதங்கள் என்பவை என்ன? அவை எவ்வாறு தோன்றின? அவற்றால் குமுகத்திற்கு என்ன வகைப் பயன்கள் உண்டு? கேடுகள் என்னென்ன? அக் கேடுகளை எப்படி நீக்குவது... தமிழர்களுக்கு மதங்கள் உண்டா? தமிழ்த் தேசத்திற்கு மதங்கள் தேவையா? எல்லா மதங்களையும் ஒரே தன்மையில் அளவிட முடியுமா? இறுதியாய் நாம் என்னதான் செய்ய வேண்டும் என்றெல்லாம் சுருக்கமாகவேனும் தெரிந்து கொள்ள வேண்டும்.

தொல் பழங்காலங்களில் மதங்கள் இல்லை. கடவுள் என்ற கற்பனை உருவும் இல்லை.

விலங்கு வாழ்க்கையிலிருந்து வேறுபட்டு உழவு, தொழில் வழி பொருள்களை உருவாக்கக் கற்றுக் கொண்ட கால வளர்ச்சியிலேயே மாந்தன் அவற்றையெல்லாம் உருவாக்கிக் கொண்டான்.

அச்சமே அவனை வணங்க வைத்தது. காட்டுத் தீயும், காற்றும், மழையும், கதிரவனும் இருளும் அவன் வணக்கத்திற்குரியவையாயின.

அழிவு நிலைக்குரிய அச்சம் தருவனவற்றையும், நல்லன செய்யக் கூடிய ஆற்றல் கொண்டவற்றையும் வேறுபிரித்து உணரத்தொடங்கினான்.

மறைவுற்றவர்கள் தூக்கக் கனவில் வரும்போது, அவர்கள் இறந்து விட்டாலும் காற்றாய் உலாவுவதாக நம்பத் தொடங்கினான்.

அவ்வாறு உலவுவதால்தான் தூக்கத்தில் வந்து செல்வதாக எண்ணினான்.

அவற்றால் நல்ல செயல்கள் நடக்குமானால் அவற்றைத் தெய்வம் என்றும், அச்சம்தரும் செயல்கள் நடக்குமானால் அவற்றைப் பேய் என்றும் நம்பிக் கொண்டான்.

தாய் வழிக் குமுகம் இருந்த தொடக்கக் காலங்களில் மறைவுற்ற தாய் நிலையினரையும், வீரர்காலக் குமுகத்தில் மறைவுற்ற வீரர்களையும், தாய் மற்றும் வீரத் தெய்வங்களாகவும், அவர்களால் கொடுமைகள் நிகழ்ந்திருக்குமானால் தாய் மற்றும் வீரப் பேய்களாகவும் வணங்குதல்கள் நடந்தன.

அணங்கு, அரமகள், அரத்தக் காட்டேரி, காத்து, கருப்பு, காளி, பூதம், பேயன், பேய், பேய்ச்சி என எண்ணற்ற பேய்த்தெய்வங்களையே தொல்குல மக்கள் உருவாக்கிக்கொண்டு அஞ்சவும், வணங்கவும் செய்தனர்.

கால வளர்ச்சியில் தொல்குலக் குமுகங்கள் பலவகையில் வளர்ச்சியுற்றன.

தமிழகத்தைப் பொறுத்த அளவில், குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என வகைப்படுத்தப்பட்ட ஒவ்வொரு நிலத்திற் கேற்பவும் குல வாழ்க்கை முறைகள் வேறுபடவும், வழிபாடுகள் மாறுபட வும் இருந்தன.

சேந்தன், சேயோன், குமரன், கந்தன், வேலன், மாலன், மாயோன், வேந்தன், வாரணன், காளி, சூலி, கொற்றவை என்றெல்லாம் ஐவகை நிலங்களிலும் அவ்வாழ்வியல் முறைகளுக் கேற்ப வழிபாட்டுத் தெய்வங்கள் உருவாக்கப்பட்டன.

அத் தொல்குலத் தெய்வங்கள் எல்லாம் மதங்களுக்குட்பட்டவை அல்ல.

வீரர்கால அரசாட்சிகளில் குறிஞ்சி, முல்லை நிலத்தெய்வங்களும், நிலவுடைமை தோற்றங் கொண்ட ஆட்சிக் காலங்களில் மருத நிலத்தெய்வங் களும் எனக் காலச் சூழலுக்கேற்பச் சில தெய்வங்கள் முதன்மை நிலைக்கு வந்தன.

அக் காலச் சூழலில் பரவியிருந்த உழவு, தொழில், வணிகம் காரணமாய் வளர்ச்சியுற்ற குமுகத்தில் பல்துறை அறிவு பல திறத்துடன் வளர்ந்தது. அற உணர்வு மேலோங்கியது.

மருத்துவம், வானியல், எண்ணியல், கணக்கியல், இவற்றோடு மெய்யியலும் செழித்தது.

உலகாய்தம், ஓகம், ஆசிவகம் என்றெல்லாம் பிற்காலங்களில் சூட்டப்பட்ட பெயர்களுக்குரிய மூல மெய்யியல் கூறுகள் ஊற்றெடுத்தன.

மருத்துவம், வானியல், கணக்கியல் உள்ளிட்ட அம் மெய்யியல் அறிவுகள் கடல் கடந்தும், நிலம் கடந்தும் பரவத்தொடங்கின.

பரந்து விரிந்த அறிவு ஆங்காங்கிருந்த குமுகங் களோடுஇணைந்து பல்லுரு மாற்றங்களும், பெயர் மாற்றங்களும் பெற்று சமணமாய், புத்தமாய் இன்னும் பல படிகளாய்த் தமிழகத்திற்குள் மீண்டும் நுழைந்தன.

அதற்கிடையில் தமிழக இயற்கைத் தெய்வ வழிபாடு முல்லை, மருத நிலங்களில் காலூன்றிச் சிவனிய, மாலிய சமயங்கள் உருக் கொண்டன. தொடர்ந்த காலங்களில் அவை சிறப்புற்று மேலோங்கின.

இவை யாவற்றோடும் தொடர்பற்ற ஆரிய வைதீக வருண வழிபாட்டு முறைகள் வடக்கிலிருந்து ஆளுமைகளினூடாகவே தமிழகம் நுழைந்தது.

பிரம்மத்திற்கு அனைத்து வழிபாட்டு முறை களையும் படிப்படியே அடிமைப்படுத்தியது.

பிரம்மாவின் முகத்திலிருந்து பிறந்தவனை பிராமணன் என்றும், தோளிலிருந்து பிறந்தவனைச் சத்திரியன் என்றும், தொடையிலிருந்து பிறந்தவனை வைசியன் என்றும், பாதத்திலிருந்து பிறந்தவனைச் சூத்திரன் என்றும் வருணங்களாகப் பிளவுபடுத்தி ஏற்றத் தாழ்வுகளை உருவாக்கியது.

ஆரியப் பார்ப்பனர்களே பிறர் அனைவர்க்கும் தெய்வம் என்று சொல்லிக் கொண்டது.

தமிழகத் தெய்வ வழிபாட்டு முறைகளிலும், பிற குலங்களின் சமய வழிமுறைகளிலும் இருந்த செய்திகளையெல்லாம் வைதீகத்தில் பிணைத்துக் கொண்டு, பன்னூற்றுக் கணக்கான புனைகதைகளை உருவாக்கியது ஆரியம். அவற்றைத் தொன்மங்கள் (புராணங்கள்) என்றது.

ஆரியத்தாலும், அதற்கு முன்னரும், பின்னரும் நுழைந்த பிற வந்தேறிய சமயங்களாலும் கூறுபட்டுப் போயிருந்த குமுகங்களை வெல்வது ஆரியத்திற்கு எளிதாகப் போனது.

பல்லவர் காலம் தொடங்கியே ஆரிய வைதீகம் காலூன்றிச் செழித்து வளரத் தொடங்கியது. சமற்கிருதம் வேர் பரப்பியது.

சமண, புத்தத்தோடு முரண்பட்ட சிவனிய, மாலியங்கள் வைதீகத்தோடு பெரிய அளவில் முரண்படவில்லை.

பின்னர் நுழைந்த இசுலாமிய,கிறித்துவ சமயங் களிடமிருந்து தம் ஆளுமையைத் தற்காத்துக் கொள்ள அனைத்துச் சமயக் கூறுகளும் தங்களுக்கிடையிலான வேறுபாடுகளைப் பெரிதுபடுத்தாமல் இணக்கப் போக்கு கொண்டன. இந்தப் போக்கு வைதீகத்திற்குப் பெரும் வாய்ப்பாகப் போனது.

இந்த நிலையில்தான் ஆரிய வைதீகம் தாம் உருவாக்கிய தொன்ம (புராண)ப் புதை சேறுகளைப் பயன்படுத்தி மக்களை "இந்துசுத்தானம்' எனும் நாட்டு ஒருங்கிணைப்பைக் காட்டிப் பிணைத்தது. அவ் ஒருங்கிணைப்பு வாய்ப்பை யொட்டியே "இந்து' எனும் மதவியல் சொல்லாடலையும் உள்நுழைத்தது.

இந்தியன் என்றாலும், இந்து என்றாலும் என்னவென்றே உணராத வெகு மக்களுக்குள், அவ்விரு அடையாளங்களும் கொஞ்சம் கொஞ்சமாக நஞ்சாக ஊட்டப்பட்டன.

இந்து என்றால் என்ன என்றே பொருள் விளங்காத அடிநிலை மக்கள் எல் லாம் கூடத் தங்களை "இந்துக்கள்' என்று அழைத்துக் கொள்ள வேண்டிய தாயிற்று.

தமிழர்கள் இந்தியர்களாக்கப் பட்டதுபோல், இந்துக்களாகவும் ஆக்கப்பட்டனர்.

இந்து என்றால் என்ன? யார் தோற்றி வைத்தது? வைதீகம் சொல்லும் வேதங்கள், பனுவல்கள் (சாத்திரங்கள்) தொன்மங்கள் (புராணங்கள்) போன்றவற்றுக்கும், தமிழர்களுக்கும் என்னவகையில் தொடர்புண்டு என்று தெரியாமலேயே அவற்றை யெல்லாம் தங்களுடையவையாகத் தமிழர்களை எண்ண வைத்தனர் இந்திய, இந்து ஆண்டைகள்.

இந்து மதம் ஆதியற்றது (அனாதி) என்றும், யார் யார் கிறித்தவர் இல்லையோ, இசுலாமியர் இல்லையோ, சீக்கியர் இல்லையோ, அவர்கள் எல்லாம் இந்துக்கள் என்பதாகச் சட்டவழிக் கட்டாயப்படுத்தியும் சொல்லிக் கொண்டனர்.

அதன் வழிக் கடவுள் நம்பிக்கை உள்ளவரோ, நம்பிக்கை யற்றவரோ, அல்லது புத்தத்தை, சமணத்தை, சிவனியத்தை, மாலியத்தை என எந்த நிலைப்பாட்டுக்குட்பட்டவராக இருந்தாலும் அவர்களையெல்லாம் "இந்து' என இந்திய அரசியல் சட்டமிட்டு அவர்களை வலியப் பிணைத்திருக்கிறது.

எப்படி நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் இந்தியர்களாக ஆக்கப்பட்டுக் கிடக்கிறோமோ அப்படி அனைவரையும் இந்து என்று இந்திய அரசியல் சட்டம் கட்டாயப்படுத்தியது; கட்டாயப்படுத்துகிறது.

மக்கள் ஏற்றுக் கொள்கிறார்களோ இல்லையோ அவர்களை இந்துவியச் சடங்குகளுக்குள் புதைத்திருக்கிறது இந்திய அரசு.

மதச் சார்பற்ற நாடு என வெளியே சொல்லிக் கொண்டு முழுக்க முழுக்க ஆரியச் சார்பு வைதீக மதத்தை ஊக்கப்படுத்தி வளர்த்துக் கொண்டும், அதற்கெனப் பல்லாயிரம் கோடி உருவாக்களைச் செலவழித்துக் கொண்டும் இருக்கிறது இந்திய அரசு.

ஒரு தொழிலகத்தையோ, நிறுவனத்தையோ, புதிதாக ஒருதொடர் வண்டியையோ, தொடங்குவ தென்றால் கூட இந்துவியச் சடங்குகளோடுதான் அரசே தொடங்குகின்றது.

அரசுப் பொறுப்பில் இருந்து கொண்டே தலைமை அமைச்சரோ, குடியரசுத் தலைவரோ, இந்துவியச் சடங்குகளுக்குத் தன்னை ஆட்படுத்திக் கொண்டு பெரும் படை சூழக் கோயில் களைச் சுற்றுவதும், சங்கராச்சாரி, சாய்பாபா போன்ற பித்தர்களின் கால்களில் விழுவதும், இன்னும் கூடுதலாக அவர்களின் கால்களைக் கழுவிக் குடிப்பதும், கோயில் உண்டியல்களில் காசுகளைக் கொட்டுவதும் போன்றவை எவ்வளவு பெரிய அட்டூழியங்கள்.

அரசுப் பொறுப்பில் இருப்பவர் கடவுள் நம்பிக்கை யுடையவராக இருப்பதில் நாம் குறுக்கிடவில்லை. அது அவருடைய தனிப்பட்டமுடிவு.அவர் தனிப்பட்ட கடவுளை வழிபடுவதும், நம்புவதும், சடங்குகளை மேற்கொள்வதும், பட்டினி கிடப்பதும் என எதையும் செய்துகொள்ள அவருக்குள்ள தனி உரிமைகளை நாம் தடை சொல்லவில்லை.

ஆனால் அரசு அதிகாரிகளின் புடை சூழலோடு மேலே சொன்ன வகையில் கோயில்களுக்கும், மடங்களின் தலைவர்களிடமும் செல்வது அம்மதச் சடங்குகளுக்கு அவரே பரப்பல் செய்வது போன்றாகி விடாதா?

அவை மட்டுமின்றி அறிவு புகட்டும் இங்குள்ள கல்விக் கூடங்கள் அவற்றின் பாடப் புத்தகங்கள் என்ன சொல்கின்றன. அறிவியல் புத்தகம் அறிவியலைச் சொல்கின்றது. பிற புத்தகங்கள் சமயங்களையும், மூட நம்பிக்கைகளையும் அல்லவா இணைத்துப் பரப்பல் செய்கின்றன.

அவை மட்டுமின்றி, இந்தியத் துணைக் கண்டத் தில் உள்ள பெரும்பான்மைக் கல்விக் கூடங்களை மத நிறுவனங்களே அல்லவா நடத்துகின்றன.

அந்த அந்த மத நிறுவனங்களும் தங்களின் மதவியல் கருத்துகளைப் பரப்புவதிலும், மாணவப் பருவத்திலிருந்தே இளைஞர்களின் அறிவை மயக்கி அடிமைப்படுத்தி வைப்பதிலும் அல்லவா அவற்றின் கல்விக் கூடங்களைப் பயன்படுத்திக் கொள்கின்றன.

அவற்றையெல்லாம் இந்திய அரசு இசைவதன் காரணம் என்ன?

ஒரு பக்கம் கல்விக்கான அறிவு ஊட்டப்படு வதற்கும், மறுபுறம் நேர் எதிரான அறியாமையைப் பரப்புகிற வகையில் மதங்களைப் பரப்புதற்கு மத நிறுவனங்களுக்கு இசைவு தருவதற்கும் காரணம் என்ன?

மதங்கள் அரசுகளை, ஆட்சியாளர்களின் தவறுகளை எதிர்க்கச் சொல்லவில்லை. தவறு செய்பவர்களைக் கடவுள் தண்டிப்பார். நீ அமைதியாகக் கடவுளை வழிபடு என்றே மதங்கள் வலியுறுத்துகின்றன.

இதைத்தான் அரசுகளும்,ஆளுமையர்களும் விரும்புகின்றனர்.

தவறு யார் செய்தாலும் நீங்கள் அரசிடம் தான் முறையிட வேண்டும் என்கின்றனர்.

ஆட்சியாளர்களே, அரசு அதிகாரிகளே தவறுகள் செய்தால் என்ன செய்வது? எப்படி மாற்றுவது?

மாற்றங்களைச் செய்வதற்குத்தான் தேர்தல் அமைப்புகள் இருக்கின்றனவே என்று பலர் நம்புகின்றனர்.

குடி (சன)நாயக அமைப்பில் ஆட்களும், கட்சி களும் தாம் தவறானவையாக உள்ளன என்றும், நல்ல கட்சியாக, ஆளாக ஒருவர் ஆட்சிக்கு வந்தால் எல்லாம் சரியாகி விடும் என்பதாக நம்ப வைக்கின்றனர்.

ஆனால் அது உண்மையில்லை.

இன்றைக்கு இருக்கிற குடி (சன) நாயக அமைப்பில் தேர்தல் வழி மாற்றங்கள் நடந்து விடுவதில்லை.

மாற்றங்களை ஒருவர் முடிவு செய்திட முடியாது.

நயன்மைத் (நீதி) துறை, ஆளுகைத்(நிர்வாக) துறை, சட்டமன்ற நாடாளுமன்றத் துறை எனும் மூன்று நிறுவனங்களும்தான் இன்றைய குடி (சன) நாயகத்தின் தூண்கள்.

இம்மூன்றில் மூன்றாவதாக உள்ள சட்டமன்ற நாடாளுமன்றத்திற்கு மட்டும்தாம் தேர்தல்கள் நடக்கின்றன.

அந்தத் தேர்தல்களிலும் எப்படி எல்லாம் பொய்ம்மையர்களும், புரட்டல் செய்பவர்களும், பணம் படைத்தவர்களும், அதிகாரம் படைத்தவர் களும் ஆளுமை செய்வதன் வழி மக்கள் அடங்கிப் போகிறார்கள் என்பது நாடறிந்த உண்மை.

மேலும் நயன்மை(நீதி)த் துறை, ஆளுகை (நிர்வாக)த் துறைகளுக் கெல்லாம் தேர்தல்கள் நடத்தப் பெறுவதில்லை என்பவற்றோடு அத்துறையினர் அனைவரும் முதலாளிய நலன்களுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டுவோராக உருவாக்கப்பட்டிருக் கின்றனர் என்பதை வெளிப்படையாக அறியலாம்.

ஆக, அரசு என்பது பணம் படைத்தவர்களுக்கும், முதலாளியர்க்குமான அரசாகவே இருக்கிறது. பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளைக்கு, சுரண்டல் களுக்கு வழி அமைத்துத் தருகிற அரசாக இருக்கிறது.

எனவே முதலாளி யத்தின், வல்லரசுகளின் நலன்களுக்கான அரசு, அவற்றின் ஆதரவுக்கான கருத்துகளையே பரப்பல் செய்கின்றன.

மதங்களோ முதலாளியத்தை மறுப்பதில்லை. சாதிகள் முதலாளியத்தை எதிர்ப்பதில்லை. எனவே மதங்களையும், சாதிகளை யும் அரசும், முதலாளியமுமே வாழ்விக்கின்றன.

அதாவது நேரடியாக வாழ்விக்காமல் மதங்களுக் கும், சாதிகளுக்கும், அப்பாற்பட்டு நடுநிலையாக இருப்பதாகக் காட்டிக் கொண்டு அவற்றை வாழ வைக்கின்றன.

எவ்வாறு முதலாளியத்தை, அதன் சீரழிந்த பாலியல் வஞ்சக வெறி உணர்வுப்பண்பாடுகள் வாழ்விக்கவும், வளர்க்கவும் செய்கின்றனவோ, அவ்வாறே மதங்களும் அதன் சடங்குகளும், விழாக்களும் முதலாளியத்தை வாழ்விக்கவும், வளர்க்கவும் செய்கின்றன.

இந்தியஅரசுக்கு அந்த வகையில் எல்லாம் பெருந் துணையாக இருப்பது இந்துமதம் செயல்படுவது போல் வல்லரசுகள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வகை மதங்கள் செயல்படுகின்றன.

எனவே, அரசின் ஆளுமைக் கூறுகளுள் மதங்களும் பெரும்பங்கு வகிக்கின்றன.

மதங்கள் நேரடியாக மதவியல் சடங்குகளாக, விழாக்களாக மட்டுமின்றி நிறுவனங்களாகவும் செயல்படுகின்றன.

அந்நிறுவனங்கள் பெரும் இயக்கமாகவே இயங்குகின்றன.

இருக்கின்ற அரசமைப்பிற்கு எவ்வகைப் பாதிப்பும் ஏற்படுத்தி விடாத வகையில் அவற்றின் நிறுவனங்கள் வேலை செய்கின்றன. எனவே அரசும் அந்நிறுவனங் களுக்குப் பெருந்துணையாக இருக்கின்றன.

மத நிறுவனங்கள் பலவற்றுக்கு ஆயிரக்கணக்கான குறுக்கங்கள் (ஏக்கர்கள்) நிலங்கள் உண்டு. பல்கலைக் கழகங்கள், பல்துறைக் கல்லூரிகள், பள்ளிக் கூடங்கள் உண்டு. தங்கள் கருத்துக்களைப் பல வகையில் புத்தகங்களாக, வெளியீடுகளாக, அறிக்கைகளாக, இதழ்களாக, செய்தித்தாள்களாக வெளியிடும் வாய்ப்புகள் உண்டு. மதங்களைப் பரப்புவதற்கும், மதக் கோட்பாடுகளில் பயிற்சியளிப்பதற்கும், ஆயிரக்கணக்கான பயிற்சிப் பள்ளிகள், பாழிகள் உண்டு. அவற்றில் எல்லாம் பயிற்சி பெற்றோர் பல்லாயிரக்கணக்கினர்.

அவ்வகையில் பயிற்சி பெற்றோர் இந்தியப் படைத் துறை முதற் கொண்டு, அரசுத் துறைகள், ஆளுகைத் துறை கள், நயன்மை (நீதி)த் துறைகள், கல்வித் துறைகள் என எல்லாவற்றி லும் உள்நுழைந்து அம்மதவியல் கோட்பாடுகளுக்கு இசைவாகவும் இயங்குகின்றனர். அக்கோடுபாடு களுக்கு இசைவாக அரசை, முதலாளியத்தை இயக்கக் கூடிய வகையிலும் திட்டமிட்டுச் செயல்படுகின்றனர்.

மக்களை எப்போதும் மதவியல் போக்குகள் மயக்கிய நிலையிலேயே வைத்திருக்கவும், மக்களி டையே விழிப்புணர்வோ, எழுச்சியோ வந்துவிடாத வகையில் செயல்படுவதில் அந்நிறுவனங்கள் ஆளுமை அரசுக்குப் பெரும் பக்க வலுவாக உள்ளன.

தமிழகத்தைப் பொறுத்த அளவில் இந்து மதத்தின் பெயரால், புத்த மதத்தின் பெயரால், சமணத்தின் பெயரால், மட்டுமல்லாமல் கிறித்துவத்தின் பெயரால், இசுலாத்தின் பெயரால் என அனைத்து மதங்களின் பெயராலும் நிறுவனங்கள் உண்டு.

இவ்வகை மத நிறுவனங்கள் இன்றைக்கு மாந்த உரிமைச் சிக்கல்களிலும், பெண்ணுரிமைக் கோரிக்கை களிலும், தாழ்த்தப்பட்டோர் உரிமைகளிலும், தமிழ்த் தேச உரிமைகளிலும் தலையிட்டுப் போராடுவதாக ஊடுருவி, உண்மையிலேயே அவ்வகை உரிமை களுக்காகப் போராடும் இயக்கங்களைக் கீழறுப்பு செய்கின்றன.

அவற்றை அரசுக்கும், ஆண்டைகளுக்கும் வல்லரசு களுக்கும் காட்டிக் கொடுக்கின்றன.

ஆக, இந்த வகையில் எல்லாம் ஆழ்ந்து பார்க்கிற போதுதான் மதம் என்பது ஏதோ கடவுள் வழிபாடு டைய வழிமுறை கொண்டது என்பது மட்டுமல்லாமல் அதன் பின்புலத்தில் பெரும் வன்மங்களைக் கொண்டிருப்பதையும் நன்கு உணர முடியும்.

எனவே அத்தகைய நோக்கங்கள்கொண்ட மதவியல் போக்குகளைத் தமிழ்த் தேச அரசியல் இலக்குடைய இயக்கங்கள் எவ்வகையில் எதிர் கொள்ளப் போகின்றன என்பது கேள்வியாகின்றது.

அத்தகைய கடமைகளை உணராதபோது அவை தமிழ்த்தேச அரசியலையே தடம் மாற்றி விடுகிற வகையிலோ, கீழறுப்பு செய்து எளிதே அழித்து விடுகிற வகையிலோ செய்து விடும் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

இதற்குக் கடந்த காலங்களில் பல சான்றுகள் உண்டு. எனவே அவ்வகை எச்சரிக்கை உணர்வோடு அந்நெருக்கடி களைத் தமிழ்த் தேச அமைப்பு கள் எப்படியெல் லாம் எதிர் கொள்ள வேண் டும் என்பதைச் சுருக்கமாகக் காண்போம்:

முதலில் மதக் கருத்தாடல்களை யும், மதப் பரப் பல்களையும், மத நிறுவனங்களையும் ஏதோ மதம் சார்ந்தவையாக மட்டும் பார்க்காமல் அவை அரசியல் திட்டத்தோடு இயங்குவதை, இயக்கப்படுவதை உணர்தல் வேண்டும்.

இந்துமதம் எனும் வைதீக மதம் ஏதோ அம்மதச் சடங்குகளைப் பரப்புவதாகவும், மக்களை மூட நம்பிக்கைகளை ஆட்படுத்தி வைத்திருப்பதாகவும் மட்டுமே எண்ணிவிட முடியாது.

அவை ஆரியப் பார்ப்பனிய ஆளுமை அரசியலோடு மட்டுமல்லாது, இந்தியப் பார்ப்பனிய அரசதிகார அரசியலோடும் பிணைந்திருக்கிறது.

வைதீக மதத்தைக் கட்டிக் காப்பதையும், இந்தியா வைக் கட்டிக் காப்பதையும் அவை ஒன்றாகவே எண்ணுகின்றன.

எனவே வைதீக இந்து வெறியனை இந்திய வெறியனாக மாற்றி வைத்திருக்கிறது இந்தியப் பார்ப்பனியம்.

எனவே, இங்கு வைதீக இந்துமதம் என்பது இந்திய ஆளுமை அரசியலாகிவிடுகிறது.

இந்நிலையில், வைதீக இந்துமதத்தை ஆரியப் பார்ப்பனிய பண்பாட்டுக் கூறாக மட்டுமே அளவிட்டுச் சிலர் அதற்கு எதிராகத் திருவள்ளுவர் மதம், திராவிடர் மதம், தமிழர் மதம் என்றெல்லாம் உருவாக்க முனைந்ததுண்டு.

ஆனால் அவ்வகை முனைப்புகள் வைதீக மதம் பிணைந்து கொண்டிருக்கிற இந்திய அரசியலை மறுப்பதில்லை.

அப்படி மறுக்காமல் போவதால், எப்படிக் கடவுள் மறுப்பாளர்களும் இந்து மதத்திற்குள் அடக்கப்பட்டு விடுகின்றனரோ அப்படி மேற்படி முனைப்பு கொண்டோரும் வைதீக இந்து மதத்திற்குள் அமிழ்த்தப்பட்டுப் போகும் நிலைகளை அவர்களுக்கு உணர்த்துதல் வேண்டும்.

எனவே, வைதீக, இந்து மத எதிர்ப்புள்ளவர்களுக்கு இந்திய எதிர்ப்பை உருவாக்க வேண்டுவது கட்டாயமாகின்றது.

தமிழிய இயற்கைத்தெய்வ வழிபாடுகளை, சித்தர் வழிமுறைகளை, சிவனிய, மாலிய வணங்கு முறைகளை ஏற்றுக் கொண்டி ருக்கும் மிகப் பெரும்பான்மையர் அவற்றை இந்து மதத்திலிருந்து வேறுபடுத்தி உணர்வதில்லை. எனவே அத்தகைய கருத்தாõளர்கள் வைதீக மதத்தை அதன்ஆளுமைப் போக்குகளை மறுக்கவோ, எதிர்க்கவோ செய்வது மில்லை.

எனவே அப்படி மறுக்கவோ அல்லது எதிர்க்கவோ செய்யாத மேற்படித் தமிழிய சமய வழிபாட்டாளர் களுக்குத் தமிழிய மெய்யியல் வளர்ச்சிப் போக்கைப் பொறுப்பெடுத்து விளக்கியாக வேண்டும்.

அவற்றை விளங்கிக் கொள்ளாமலும் விளங்க மறுத்தும் ஆரியப் பார்ப்பனியத்தின் அடிமடியில் கிடப்பவர்களை இந்திய இந்துவிய அடி வருடி களாகவே வரையறுத்துக் கொள்ளுதல் வேண்டும்.

தமிழக வெகுமக்களிடையே வைதீக இந்து மதம் கடைபிடிக்கிற சாதி, வருணத் திமிரொழுக்க, தமிழியத் திற்கு மாறான நடைமுறைகளை வெளிச்சப்படுத்திக் காட்டுவதும், சங்கராõச்சாரி, சாய்பாபா போன்ற வைதீக மடத்தினரின் வெகு மக்களுக்கு எதிரான போக்குகளை வெளிச்சப்படுத்திக் காட்டுவதும், அப்போக்குகளை எதிர்த்துப் போராடு வதுமாக அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

அவற்றோடு கடவுள் கருத்து, வழிபாடு என்பன அவரவர் தனிப்பட்ட கருத்தாக, நடைமுறையாக இருக்க வேண்டுமேயல்லாமல், அவற்றைப் பரப்புகிற ஆரவாரப் படுத்துகிற வேலைகளைத் தவிர்க்கச் சொல்லி மக்களை வலியுறுத்துவதும், அரசிடம் அவற்றையெல்லாம் தடை செய்ய வேண்டும் எனக் கட்டாயப்படுத்துவதும் வேண்டும்.

தமிழகமெங்கும், தமிழிய மெய்யியலை, வரலாற்றை, பண்பாட்டை, அறிவியலைத் தமிழ்த் தேசிய அரசியல் பிணைப்போடு சொல்லித்தருகிற வகையில், பள்ளி, கல்லூரி, பல்கலைக் கழகங்களை நிறுவி நடத்துகிற, நடத்த வைக்கிற அளவில் வலுவான திட்டங்கள் தமிழ்த் தேச அரசியலாளர் களுக்குத் தேவை.

அவ்வகைக் கண்ணோட்டங்களோடான மாத, கிழமை, நாளிதழ்களை, செய்தித் தாள்களை நடத்த முனைவதும், பிற அனைத்து வகை ஊடகங்களிலும் உள் நுழைந்து செயலாக்கப்படுத்தும் முனைப்பும் வேண்டும்.

தமிழ்த் தேசிய அரசியலுக்கு ஈர்க்கப்படுகிற தோழர்களை ஆதரவாளர்களை முழுமையாகத் தமிழ்த் தேச அரசியலில் தெளிவுபடுத்துவதோடு, தமிழிய மெய்யியல் வரலாற்றை விளக்கப்படுத்துவதுடன் பொருள் முதலியல் கண்ணோட்டத்தோடும் அறிவி யல் பார்வையுடனும் குமுகத்தை அணுகும் பகுத் தறிவை ஊட்டிச் செழுமைப்படுத்தியாக வேண்டும்.

அத்தகு பல்துறை முயற்சிகளாலேயே தமிழியத்தை வீழ்த்தத் திட்டமிட்டுச் செயல்படும் மதவியல் தலையீடுகளைப் படிப்படியாக ஒழிக்க முடியும்.