முந்தைய மழைக்காலங்களில் தேங்கிய நீரால்
Dam waterநிரம்பி வடிந்த அணைக்கட்டுகள்
சிறு குட்டைகளாக மாறத்தொடங்கியிருக்கின்றன

நீர்ப்பசையில்லாமல் வறண்டு செதில் செதிலாக
வெடிக்கத் தொடங்கிவிட்டிருக்கின்றன
குளத்தின் வண்டல்மண் தரைகள்

நீரோட்டமில்லாமல் நதிநீரின் போக்கிற்கேற்ப
உருண்டோட முடியாமல்
ஒரு குறிப்பிட்ட நிலையிலேயே தங்கி
ஓய்வெடுக்க தொடங்கிவிட்டன கூழாங்கற்கள்

பச்சை பசேலென பரந்து விரிந்து கிடந்த
நெல்மணிகள் அறுவடை செய்யப்பட்டு
வெட்டவெளி களமாக வெம்பரப்பாக
காட்சியளிக்க ஆரம்பித்திருக்கின்றன வயல்வெளிகள்

பச்சையமிழந்து பழுப்புநிறத்துக்கு மாறிய
சின்னஞ் சிறு இலைகளை தங்களது கிளைகளிலிருந்து
உதிர்க்க தொடங்கிவிட்டிருக்கின்றன வில்வ மரங்கள்
இளமஞ்சள் நிறத்தில் சற்று செழுமையாக
கொத்து கொத்தாக பூத்து
மதுர மணவாசத்தை வீசத் தொடங்கிவிட்டன மாம்பூக்கள்

பளீரென பாலாக கொட்டுகின்ற போது தெரியாத
அருவிகளின் பின்புற நெடும்பாறைகளின் தாமிரநிறம்
கண்களை கூசச் செய்ய ஆரம்பித்திருக்கின்றது

காற்றின் அலைவரிசையோடு தொடர்பு கிடைக்காமல்
பூத்தது பூத்த படியாக காயத் தொடங்கியிருக்கின்றன
வீட்டோர உயிர்வேலிகளாக உள்ள போகன்வில்லா பூக்கள்

தாகத்தால் தொண்டை வறண்டு போன மனிதர்கள்
மழையின் மகிமை குறித்தும்
மரநிழலின் மகத்துவம் குறித்தும்
அறிமுகமில்லாத சகமனிதர்களிடம் கூட
பரிமாறிக் கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள்

இவ்வாறாக மட்டற்ற வெயிலின் மூலம்
பருக முடியாத அமுதத்தை பொழிய ஆரம்பித்து
எந்தவித ஆரவாரமுமில்லாமல் தன் பருவத்தை
தொடங்கியிருக்கின்றது கோடை காலம்