என் மகன் ஆறாம் வகுப்பில் படித்துவருகிறான். அவன் சென்ற வகுப்பில் படித்துக் கொண்டிருந்தபோது இது நடந்தது. ஒருநாள் வகுப்பிலிருந்து திரும்பிய அவன் கைகள் வலிப்பதாகச் சொன்னான். சட்டையைக் கழற்றச் சொல்லி பார்த்தபோது முழங்கைக்கு மேல் பகுதி வீங்கியிருந்தது. தோள்பட்டைகளில் இலேசான தடிப்புகள். என்னவென்று கேட்டபோது ஆசிரியர் அடித்தார் என்றான். அவன் செய்த தவறு இதுதான். விளையாட்டு பாடவேளைக்குப்பிறகு தண்ணீர் குடிக்கப்போக வேண்டும் என்று அனுமதி கேட்டது. “வகுப்புக்கு உள்ள வருவதற்கு முன்னாடியே குடிச்சிட்டு வரவேண்டியது தானே?” என்று அந்த ஆசிரியர் அடித்திருக்கிறார்.

நான் அப்பள்ளிக்குப்போய் தலைமையாசிரியரிடம் விவாதித்தேன். என்னுடன் சிறுவர்கள் உரிமை பாதுகாப்பு தொண்டு நிறுவன பொறுப்பாளர் இராசேந்திரபிரசாத் வந்திருந்தார். அப்பள்ளியின் தாளாளரையும் பார்த்தேன். விசாரித்த பின்புதான் அந்த ஆசிரியர் இது போன்றே பல மாணவர்களை உப்புக்கும் பெறாத காரணங்களுக்காக கடுமையாக அடித்ததாக, கடுமையாய்ப் பேசியதாகத் தெரிந்தது. அது ஒரு தனியார்ப் பள்ளி என்பதால் உடனே நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அண்மையில் மீண்டும் ஒரு புகாருடன் வந்து நிற்கிறான் என் மகன். ஆசிரியர் கேட்ட கேள்வி ஒன்றிற்கு முந்திக்கொண்டு விடை சொல்ல எழுந்தபோது “உனக்கு என்ன மயிறு தெரியும். உட்கார்!” என்றிருக்கிறார் அந்த ஆசிரியர். அவனின் ஆர்வம், மிகையுணர்வு எல்லாம் ஒரு கணத்தில் பொசுங்கிப்போக, அவமான உணர்வுடனும், வேதனையுடனும் என் முன்னால், நிற்கிறான். அவன் கண்கள் ஆயிரம் உணர்வுகளையும், சொற்களையும் கரைத்த நீர்த்துளிகளுடன் வழிகின்றன. அதை துடைத்துவிட்டு ஒரு கணம் யோசிக்கிறேன். இது என் மகனின் கண்ணீர் மட்டுமல்ல. நாட்டில் இன்று படித்துக் கொண்டிருக்கும் குழந்தைகளில் சரிபாதிக்கும் மேலானவர்களின் கண்ணீர்.

இந்த புகாருக்கும், பள்ளி நிர்வாகத்திடம் போக வேண்டும். எத்தனை முறை போவது என்ற சலிப்பும், தயக்கமும், எத்தனைமுறை வருவது என்ற கோபமும், வெறுப்பும் இரு பக்கமும் இருக்கத்தான் செய்யும். கெட்டித்தட்டி இருக்கும் பாறைகள் சம்மட்டியின் ஒரேயரு அடிக்கு ஒருபோதும் நெக்கு விடுவதில்லை. சிலநேரங்களில் வெடிவைக்கப்படவும் வேண்டும். ஆனால் மனித மனம் பாறைகளை விடவும் கடினமானது. அம்மனங்கள் எளிதில் நெக்கு விடுவதாக இருந்திருந்தால் இன்னேரம் உலகின் பாதி சமூகக்கசடுகள் ஒழிந்திருக்கும்.

இந்தியாவில் படித்துக் கொண்டிருக்கின்ற குழந்தைகள் மூன்று பேருக்கு இருவர் என்ற விகிதத்தில் தண்டனைப் பெறுகிறவர்களாக இருக்கிறார்கள். பள்ளிகளில் வழங்கப்படும் தண்டனைகளுக்கு சுமார் 65 சதவீத குழந்தைகள் ஆளாகிறார்கள். அய்ந்தில் வளையாமல் அய்ம்பதில் வளையாது என்று பழமொழி பேசும் பெரியவர்களின் உலகம் வன்முறையை சரி என்று நியாயப்படுத்துகிறது. அடியாத மாடு படியாது என்பது போல அடியாத பிள்ளை படியாது என்பது அவர்கள் கருத்து. ஆசிரியர்களிடம் இக்கருத்து செயல்வடிவம் பெறுகிறது.

நான் கொஞ்சகாலம் பணியாற்றிய ஒரு பள்ளியில் குழந்தைகளை கடுமையாகத் தண்டிப்பது ஒரு கட்டாய விதியாகவே கடைபிடிக்கப்பட்டது. காலையில் பள்ளிக்கு வந்ததும் ஆசிரியர்களுக்கும், வகுப்பு மாணவத் தலைவர்களுக்கும் பிரம்பு தேடுவதுதான் முதல் வேலை. பள்ளி மைதானத்தின் வேலிபோல வளர்ந்துநிற்கும் புன்னை மரக்கிளைகளிலிருந்து இளம் சிமிர்களை உடைப்பார்கள். தீட்டிய மரத்தையே கூர் பார்ப்பது என்பது போல அப்பிள்ளைகளால் நட்டு நீரூற்றி வளர்க்கப்பட்ட மரங்களே வதைக்க உதவும். அடிக்கவில்லை என்றால் அம்மாத தேர்வில் தேர்ச்சி விழுக்காடு குறைந்துவிடும் என்பது அங்கிருந்த மூட நம்பிக்கை.

தமிழக அரசு மாணவர்களை அடிக்கக்கூடாது என்று அரசாணை வெளியிட்ட சமயமது. ஆசிரியர் அறையில் கடும் விவாதமே நடந்தது. எல்லா ஆசிரியர்களும் அவ்வாணையை மூர்க்கமாக நிராகரித்தனர். அவ்விவாதத்தில் நான் தனித்து விடப்பட்டேன். அடிப்பதால் என்ன பயன்? அது குழந்தைகளை சித்திரவதை செய்வதாகும் என்று நான் சொன்னது எடுபடவில்லை. அப்போது ஒரு ஆசிரியர் தன் வீரபராக்கிரமங்களை பட்டியலிட்டார். “ஒரு மாணவன் கை நீட்டிப் பேசினான் என்பதற்காக அவன் கையையே உடைத்து விட்டேன் சார். +2 போயிட்டாலே திமிறு ஏறிடும். அப்புறம் நம்மை மதிக்கறதில்ல. அடிச்சாதான் சரிப்படும்.”

நான் அதிர்ந்தேன். அவர் இதற்கு முன்பு வேலை செய்த பள்ளிகளிலெல்லாம் தான் செய்த இவ்வகையான கொடூரங்களை சாதனைகளாக சொல்லிக்கொண்டே இருந்தார். இப்படி சொல்லப்படாத கதைகள் எண்ணிலடங்காமல் இருக்கின்றன.

பள்ளிகளில் குழந்தைகளுக்கு தண்டனை தருவது இரு காரணிகளால் நடக்கிறது. கல்வித்திட்டம் மற்றும் கற்பித்தல் குறைபாடு என்பவைகள் ஒரு காரணி. இன்னொன்று ஆசிரியரின் கருத்து நிலையும், சமூகச்சார்பும் உற்சாகம் தராத, ஆர்வமூட்டாத பாட திட்டங்களும், வகுப்பறை செயல்பாடுகளும் மாணவர்களை சோர்வடையச்செய்து அவர்களின் கவனத்தை சிதறடிக்கின்றன. ஆசிரியரின் கற்பித்தல் குறைபாடும், ஆளுமைக்குறைவும் அவர்களை அலுப்பூட்டி விடுகின்றன. வகுப்பறை சூழலில் இருந்து இதுபோன்ற தருணங்களில் அவர்கள் விடுபட விரும்புகின்றனர். இங்கு ஆசிரியரின் தோல்வி நிகழ்கிறது. ஆசிரியர் தோற்கும் இடத்தில் பிரம்பை எடுக்கிறார். மாணவர்கள் கவனிக்காதது, மதிக்காதது, சுதந்திரமாக கருத்து சொல்ல நினைப்பது போன்றவற்றையெல்லாம் தனக்கு இழைக்கப்படும் அநீதியாக கண்ணிக்கொள்கிறார் ஆசிரியர்.

அந்த ஆளுமை காயத்தை (Egoassualt) சரிசெய்து கொள்ள மாணவரை அடிக்கத் தொடங்கி விடுகிறார். பாடதிட்டம், ஆசிரியரின் ஆளுமை என்பவைகளை மீறி புறவயமான காரணிகளான சமூக நிலையும், அதில் ஆசிரியருக்கு இருக்கும் பிடிமானங்களும் சில நேரங்களில் மாணவர்களை அடிக்க தூண்டுகின்றன. இப்படிதான் தலித் குழந்தைகளும், பெண் குழந்தைகளும், அதிபுத்திசாலி குழந்தைகளும் அடி வாங்குகின்றனர். எல்லா குழந்தைகளும் முதலிடம் பெற்றுவிடவேண்டும் என்பதற்காகவும் அடிக்கப்படுகின்றனர். எல்லா குழந்தைகளும் முதலிடம் பெறுவது சாத்தியமில்லாது, குழந்தைகளுக்கு என்று தனித்தன்மைகள் இருக்கின்றன.

வகுப்பறையில் தன்னை மீறி எதுவும் நடந்துவிடக்கூடாது என்ற சர்வாதிகார சிந்தனை ஆசிரியர்களில் பலருக்கும் இருக்கிறது. சனநாயகத்தன்மை வகுப்பறைகளில் தேவையற்றது என்று அவர்கள் கருதுகின்றனர். கற்பித்தல் என்பது திணிப்பது என்ற நடைமுறை நிலையும் இங்கே நிலவுகிறது. மாணவர்களின் உளவியல் புறக்கணிக்கப்படுகிறது.

ஆசிரியர்கள் எல்லோருமே உளவியலை ஒரு பாடமாகத்தான் படித்துவிட்டு வருகிறார்கள். ஆனால் அப்பாடம் மதிப்பெண் பெற்று தேறிவிடுவதற்கானது மட்டும்தான் என்ற நிலை இருக்கிறது. உளவியல் பாடம் நடைமுறை பயன்பாட்டுக்கு உகந்த ஒன்று. மாணவர்களின் உளவியலை நன்கு புரிந்துக் கொண்டுவிடும் ஒரு ஆசிரியர் அக்கருத்துக்களை ஏற்பதோடு, அவ்விதமே நடக்கவும் தொடங்கி விடுகிறார். ஆனால் கெடுவாய்ப்பாக இம்மாற்றம் எல்லா ஆசிரியரிடமும் நடப்பதில்லை. ஆசிரியருக்கு என்று ஒரு தனி உலகம் இருப்பது போல மாணவர்களுக்கும் தனி உலகங்கள் உண்டு. மாணவர்கள் உளவியல் மற்றும் நுண்ணறிவு சார்ந்து பல வகையினராக பகுக்கப்படுகின்றனர்.

கற்பதில் ஆர்வம் காட்டாத, தொந்தரவு செய்கின்ற மாணவர்களின் காரணங்களை அறிய முற்படவேண்டும் என்பது உளவியலின், அடிப்படை வசதி. தனியாள் சோதனை போன்றவகைள் இப்படிப்பட்டவர்களுக்கு செய்யப்பட வேண்டும். தனியாள் ஆய்வு (Case Study) செய்வது மிகவும் முக்கியம். இம்மாதிரியான இடங்களில் தண்டனைகள் ஒருபோதும் மாற்றாவது இல்லை.

தமிழக அரசின் கல்வி விதிகளில், 51ஆம் விதி பள்ளியில் மாணவர்களை அடிக்கலாம் என்கிறது. “வேண்டுமென்றே பொய் கூறுதல், மோசமான வார்த்தைப்பிரயோகம் அல்லது செயல், தவறான நடத்தை போன்ற நடவடிக்கைகளைத் தவிர, வேறு எந்த நடவடிக்கைகளுக்காகவும் உடல்ரீதியாக தண்டணை வழங்கப்படக்கூடாது. அதுவும் பள்ளி தலைமையாசிரியரின் மேற்பார்வையின் கீழ் அல்லது தலைமையாசிரியரால் ஆறு அடிகள் மட்டும் கொடுக்கப்படலாம்.” இவ்விதி 10ஆம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் உள்ள வகுப்பினருக்கு பொருந்தாது. காயம் ஏற்படாமல்தான் மேற்சொன்ன தண்டனையும் இருக்கவேண்டும் என்றறெல்லாம் அவ்விதி மேலும் சொல்கிறது. இவ்விதி தற்போது நடைமுறையில் இல்லை. இது திருத்தம் செய்யப்பட்டு மாணவர்களை அடிக்கக்கூடாது என தமிழக அரசு சூன் மாதம் 2003ம் ஆண்டு ஓர் அரசாணையை வெளியிட்டது. ஆந்திரா, மேற்கு வங்கம், சண்டிகார், தில்லி ஆகிய மாநிலங்களில் இதுபோன்ற தடை ஆணைகள் இருக்கின்றன.

இந்த தடை ஆணைகள் பிறப்பிக்கப்பட்டிருந்தாலும் நடைமுறை படுத்தப்படுவதில்லை. குழந்தைகள் அடிபடுவது தொடர்கிறது. இப்படி தண்டனைகளை பெறுவதால் குழந்தைகள் உடல் அளவிலும், மனதளவிலும் பாதிக்கப்படுகின்றனர். தேவையற்ற பயம், நடுக்கம், கோழைத்தனம், தயக்கம் அவர்களிடம் உருவாகின்றன. அல்லது நேர்மாறாக மூர்க்கம் கொண்டு முரட்டுத்தன்மையுடன் உருபெற்று விடுகின்றனர். மோசமாக அடிபடும் குழந்தைகள் இறக்க நேரிடுகிறது. புதிய புதிய கற்பித்தல் உத்திகள், ஆர்வமூட்டும் பாடதிட்டம், செயல் மற்றும் ஆய்வுகளுக்கு அதிக வாய்ப்புகள், சுதந்திர சூழல் ஆகியவை இருந்தால் பள்ளிகள் மகிழ்ச்சிக்குரிய இடங்களாக மாறும். பிரம்புக்கு மாற்றாய் என்ன செய்யலாம் என ஆசிரியர்கள் நிச்சயம் யோசிக்க வேண்டும்.
வகுப்பறை வன்முறையைப் பற்றி தமிழ் இலக்கியத்தில் அதிகமாக எழுதப்படவில்லை. மாதா, பிதா, குரு, தெய்வம் என்று ஒருவழியாக சொல்லப்பட்டு வரும் ‘அபத்த சென்டிமெண்ட்’ தான் இதற்குக் காரணம். பள்ளிகள் இல்லாத காலத்தில் தொழில்களையும் திறன்களையும் சொல்லித் தந்தவரான குருவுக்கு பெற்றோர்க்கு அடுத்த இடம் வழங்கப்பட்டது. இன்று கற்பித்தல் முறை மாறிவிட்டது. ஆனால் பழைய கருத்தின் செல்வாக்கு மறையவில்லை. அதனால் பள்ளி வன்முறைகளை பற்றியாரும் விரிவாக எழுதவில்லை. ஆனால் தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்திலிருந்து வந்த சிலர் தமது கவிதைகளிலும், கதைகளிலும் இதைபற்றிய பதிவுகளை செய்திருக்கின்றனர்.

என்.டி.ராஜ்குமார் எழுதிய கவிதை ஒன்று காட்டாளன் தொகுப்பில் உக்கிரமாக இருக்கிறது. ஆனாலும் ராஜ்குமார் ‘குத்திக்காட்டுதேண்ணு நெனைக்காத சூசகப்படுத்துதேன்’ என்றுதான் தயக்கத்தோடு சொல்லிக்கொண்டு போகிறார்.

‘குத்திக்காட்டுதேண்ணு நெனைக்காத சூசகப்படுத்துதேன்
டூசன் படிக்கவராத என்ன நொங்கக்களத்துனியே
கணக்குப்பாடம் தப்பாச்சுண்ணும்
பள்ளிக்கொடத்துல நேரமாச்சுண்ணும்,
பக்கத்துல பேசினமுண்ணும்
நெலயளிஞ்சி நின்ன வாத்தியான்
பயலுவளுட்ட பைசாபிரிச்சு சந்தைக்குப்போய் கம்பு வாங்கி
கொம்மைக்க வீட்டுல கொண்டுபோய் நல்லெண்ண போட்டு தடவி
நெல்லு அவியித பானையில போட்டு அவிச்சு
கொண்டு வந்த பெரம்பெடுத்து
குண்டியும் தொடையும் பொட்டப்பொட்ட அடிச்சப்போ
புழுவப்போல சுருண்டுத் துடிச்ச நாங்க....’
(என்டி. ராஜ்குமார், காட்டாளன்&பக்23)

மனிதகுல விரோதி ஒருவனை தண்டிப்பதற்கான முன்தயாரிப்பு போல பள்ளிப்பிள்ளைகளை தண்டிப்பதற்கான இந்தத் தயாரிப்பு அதிர்ச்சி தருகிறது. இனி இது போன்றதொரு கவிதையை எழுதச் செய்யாதிருக்கும்படியான பள்ளிச்சூழல் வாய்க்க வேண்டும் என்பது என் விருப்பம்.