சமூக விழிப்புணர்வு இதழ் சார்பாக மே 16, 2008 அன்று சென்னை தேவநேயப் பாவாணர் அரங்கில் நடத்தப்பட்ட ‘வே.மதிமாறன் பதில்கள்’ நூல் அறிமுக விழாவில் சிறைப்புரையாற்றிய மக்கள் கலை இலக்கிய கழத்தின் பொதுச் செயலாளர் தோழர் மருதையன் அவர்கள் பேசிய பேச்சின் சுருக்கப்பட்ட வடிவம் இங்கு தரப்பட்டுள்ளது.

Maruthaiyanஅனைவருக்கும் வணக்கம்,

மதிமாறனைப் பற்றி நாங்கள் அறிய வந்ததெல்லாம் பாரதிய ஜனதா பார்ட்டி நூல் வழியாகத்தான். அந்த நூலுக்கு முன்பு அவரை யாரென்றே தெரியாது. சொல்லப் போனால் அது வெளிவந்த பின்பு பல பத்திரிகைகள் விமர்சனம் என்ற பெயரிலே மண்ணை வாரித்தூற்றின. அதற்குப் பிறகும் மதிமாறன் யாரென்று தெரியாத நிலையிலேயே இந்த அயோக்கியத்தனத்தைக் கண்டிக்க வேண்டும் என்பதற்காக பாரதி குறித்து எழுதத் துணிந்தோம். அது மதிமாறனுக்கு வக்காலத்து வாங்க வேண்டும் என்பதற்காக அல்ல. மாறாக மதிமாறன் நூல் மீதான விமர்சனம் மார்க்சியப் பார்வையில் செய்யப்பட்டது என்ற முகாந்திரத்தில்.

மார்க்சியப் பார்வையில் செய்யப்பட்டது என்று கூறிக் கொண்டு, வரலாற்றுப் பொருள் வாதத்தில் பாரதியை பார்ப்பதாகக் கூறிக் கொண்டு பார்ப்பனியப் பார்வையில், இந்து தேசியப் பார்வையில், மதிமாறன் நூலை ஏறத்தாழ குதறினார்கள். இதை எதிர்த்து முறியடிப்பதற்கும், பாரதிக் குறித்த சரியான மார்க்சிய ஆய்வு முறை என்ன என்பதை நிலை நாட்டுவதற்கும், அதில் தலையிட்டு மீண்டும் ஒருமுறை பாரதி குறித்து எழுதினோம். அதற்கு முன்னாலே ஞானராஜசேகரனின் பாரதி திரைப்படம் வந்த போது பாரதி குறித்து எழுத வேண்டி வந்தது. ஆனால் பல்வேறு தரப்பினரும் பலரும் எழுதிய மதிமாறனின் நூல் பற்றிய விமர்சனத்திற்கு சில பொது அம்சங்கள் இருந்தன.

‘‘இது ஆய்வுத்தரமற்ற நூல், இதில் ஒரு ஆய்வு முறைமை பின்பற்றப்படவில்லை. இது ஒரு மலிவான விளம்பரம் தேடும் முயற்சி. பிரபலமானவர்களை புழுதி வாரித் தூற்றினால் தானும் பிரபலமாகி விடலாம் என்பதற்காக புழுதி வாரித் தூற்றும் ஒரு முயற்சி என்று’’. இன்னொரு பத்திரிகையில், கவிதாசரண் என்று நினைவு. ஒரு எழுத்தாளர் கழிசடை என்று எழுதி இருந்தார். அதற்குப் பிறகு தற்பொழுதைய சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார் இந்தியா டுடேயில் இப்படி எழுதி இருந்தார். ‘‘கட்சிகளின் மலிவான மேடைப் பேச்சும், தமிழ் சினிமாவின் காமெடி டிராக்கும் இணைந்தது’’ என்று எழுதினார்.

வேறொரு பத்திரிகையில் பொ.வேல்சாமி என்ற ஒரு எழுத்தாளர் மதிமாறனுக்கு ஒரு ஆலோசனை வழங்கி இருந்தார். அம்பேத்கர் லாலா லஜபதிராயை எப்படி விமர்சனம் செய்திருந்தார் என்று பாருங்கள் என்று அதிலிருந்து சில வரிகளை மேற்கோள் காட்டி எழுதி இருந்தார். அது மாதிரி எழுதணும், இப்படி எழுதக் கூடாது என்று. ஆக, அந்த மொத்த விமர்சனங்களிலும், பாரதியிடம் காணப்பட்ட முரண்பாடுகளை உரிய விபரங்களுடன் எடுத்துக்காட்டி, பாரதியின் காலம் என்பது நீங்கள் கொண்டாடும் முற்போக்கோ, தேசியமோ, சாதி ஒழிப்போ அல்ல. மாறாக, முதலாளித்துவமாக மாறிக் கொண்டிருக்கும் சமூகத்திற்கு உகந்த வகையில் தன்னை மறு சீரமைத்துக் கொண்ட பார்ப்பன இந்து தேசியம் தான் என்பதை மதிமாறன் நிலைநாட்டியிருந்ததற்கு அவர்கள் எந்த பதிலும் சொல்லவில்லை.

அவர் எழுதியதை மறுக்க முடியாத பொழுது, அதற்காக இப்படி எழுதக் கூடாது, இதற்காக அப்படி எழுதக்கூடாது, விமர்சிக்கக் கூடாது என்று சொல்லவில்லை. ஆனால் விமர்சனத்தை இப்படிச் செய்ய வேண்டும், அப்படிச் செய்ய வேண்டும் என்று எழுதினார்கள். இதெல்லாம் எதற்கு விரித்துச் சொல்லுகிறேன் என்றால் எல்லோரிடமும் இதில் ஒரே ஒரு விஷயம் இருக்கிறது. அது என்னவென்றால் மதிமாறனின் எழுத்து நடை தரம் தாழ்ந்தது, நாகரிகமற்றது, ஆய்வுத் தரமற்றது என்று. மதிமாறனே பின்னால் வந்த அவரது நூலில் எழுதி இருக்கிறார். “நான் எந்த பேராசிரியர்களிடமும் எம்.பிஃல், பி.எச்.டி., வாங்குவதற்காக பாரதியைப் பற்றி எழுதவில்லை. நான் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறேன். நூல் எழுதி இருக்கிறேன். அதில் கண்டுள்ள தரவுகளை மறுக்க திராணியற்றவர்கள். இதற்கு தரச்சான்றிதழ் கொடுக்கிறார்கள். அது எனக்குத் தேவையில்லை” என்று எழுதியிருந்தார். இந்தத் தரத்தில் தான் மறுப்புகள் வெளியிடப்பட்டன.

இதில் கண்டுள்ளதொரு பொதுவான விஷயம். இது ஒரு மலிவான, தரம் தாழ்ந்த விமர்சன முறை என்பது தான். அவர்கள் திரும்பத் திரும்ப என்ன கூறுகிறார்கள் என்றால், இதில் பாரதி பற்றி கூறிய கருத்துக்கள் பற்றி அவர்கட்குப் பிரச்சினை இல்லை. கூறப்பட்ட முறை பற்றித் தான் அவர்கட்குப் பிரச்சினை என்பது போல கூறி இருந்தார்கள்.

இவ்வளவு நேரமும் இந்த கேள்வி & பதில் நூலைப் பாராட்டிப் பேசிய வியந்து பேசிய பலரும், அந்த எழுத்துப் பாணியைச் சிலாகித்துப் பேசினார்கள். ஆனால் பாரதிய ஜனதா பார்ட்டி நூலினை ஒட்டி மலிவான மேடைப்பேச்சு, தமிழ் சினிமாவின் காமெடி டிராக், புகழ் தேடும் முயற்சி என்று அந்த நூலின் விமர்சனம் முழுவதும் எழுத்து நடையின் மீதான விமர்சனமாக மட்டுமே செய்யப்பட்டது. அது அதுதானா என்பதுதான் கேள்வி.

ஒரு வேளை அம்பேத்கர், லாலா லஜபதிராயை விமர்சனம் செய்ததைப் போல மதிமாறன் எழுதியிருக்க முடியுமா? எழுத வேண்டுமா? மதிமாறனை விட்டு விடுவோம். அம்பேத்கர் போல் பெரியார் எழுதவில்லையே? பேசவில்லையே? ஏன்? அம்பேத்கர் ஒரு ஆய்வறிஞராக தன்னுடைய கருத்துக்களை நிலை நாட்டி இருக்கிறார். ஒரு மேலைநாட்டில் கற்ற ஆய்வறிஞராக, ஆய்வறிஞர் என்பதனால் மட்டும் அல்ல, இந்த இந்து மதம் என்பது பார்ப்பன இந்து மதம் என்பதையும் அதனால் உருவாக்கப்பட்ட நிலைநாட்டப்பட்ட சாதி கொடுமையினால், இந்து மதத்தின் கீழ் தான் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் இன்று வரை அல்லலுறுகிறார்கள், என்பதையும் எனவே அவர்கள் இதனை விட்டு வெளியேற வேண்டும் என்பதையும் அதற்கு தர்க்கப்பூர்வமாகவும், ஆதாரப் பூர்வமாகவும் நிறுவும் தேவை அவருக்கு இருந்தது. அதனை அவர் செய்தார்.

வேறொரு தேவையும் அம்பேத்கருக்கு இருந்தது. இந்துப் பார்ப்பனியத்திற்கும், சாதி ஆதிக்கத்திற்கும் எதிரான ஒரு மக்கள் இயக்கத்தை கட்டும் தேவையும் இருந்தது. ஆத்திக்கத்திற்கு எதிராக நாத்திகத்திற்கான மக்கள் இயக்கத்தை கூட்ட வேண்டிய தேவை இருந்தது. அந்த தேவையை நிறைவு செய்யும் இடத்திற்கு வருகிறார் பெரியார். பெரியாருடைய மொழி எப்படி இருந்தது? அதை நான் இந்த மேடையில் விளக்கிச் சொல்ல வேண்டியது இல்லை. அது அறிவுத் துறையினரின் மொழி அல்ல அது. ஆங்கிலத்தில் லேமேன் (Layman) என்று சொல்வார்கள். அப்படிப்பட்ட சாதாரண மனிதர்களின் மொழி அது. அது அறிவுப்பூர்வமான மொழி அல்ல. ஆய்வறிஞர்களின் மொழி அல்ல. பொது அறிவுக்குப் பொருத்தமான ஒரு தர்க்கவியல் இது தான் பெரியார் எழுத்து முழுவதிலும் நான் பார்த்திருக்கிறேன்.

‘‘அன்பே சிவம் என்றால் கையில் சூலாயுதம் எதற்கு’’ என்பது திராவிடர் கழகத்தின் பிரபலமான முழக்கம். ‘‘பச்சை ரத்தம் குடிக்கும் பூசாரியே பாலிடால் குடிக்கத் தயாரா?’’ இது மக்களைì கவர்ந்த முழக்கம். இத்தகைய முழக்கங்கள், பிரச்சார முறை ஒரு போர்க்குணமிக்க நாத்திக இயக்கத்தை தமிழ்நாட்டில் கட்டி இருக்கிறது. உலகில் வேறு எங்கும் இல்லாதது. அதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். நாத்திகர்கள் பலர் இருந்திருக்கிறார்கள். உலகின் பல நாடுகளில் ஐரோப்பா உட்பட. ஆனால் நாத்திகம் ஒரு மக்கள் இயக்கமாக, அது தமிழகம் தவிர வேறு எங்கும் இல்லை. இருந்ததும் இல்லை. அப்படி ஒரு மக்கள் இயக்கம் கட்டுவதற்கு, அந்த கருத்தை, மக்களுடைய மொழியை, வெறும் அறிவியல் உண்மைகள் வழியாக அல்ல, மக்களுடைய அனுபவத்தின் வாயிலாக கடவுள் இல்லை என்று நிறுவுவதும், அதன் வாயிலாக பார்ப்பன ஆதிக்கம் அநீதியானது என்று நிறுவும் அவசியம் பெரியாருக்கு இருந்தது. அதை அவர் செய்தார். அதன் விளைவாகத் தான் அப்படி ஒரு மக்கள் இயக்கத்தை கட்ட முடிந்தது.

ஆக இந்த எழுத்து நடை தரம் தாழ்ந்தது என்றால், பெரியாரின் எழுத்து நடையும் தரம் தாழ்ந்தது. பெரியார் அப்படித்தான் பேசி இருக்கிறார். அது மக்களைத் திரட்டுவதற்கான மொழி. சாதாரண ஜனங்களைச் சென்றடைவதற்கான ஒரு மொழி. அப்படி ஒரு மொழியில் இந்தக் கருத்துக்கள் சொல்லப்பட்ட காரணத்தால் தான் நாத்திகம் என்பது மிக இயல்பாக, நாம் இங்கு மேடை போட்டுப் பேசும் விஷயமாக இங்கு தமிழகத்தில் உள்ளது.

என்னை அறிமுகப்படுத்தும்போது கூட தோழர் தில்லைப் போராட்டம் குறித்துச் சொன்னார். தில்லை சிற்றம்பல மேடையில் தமிழுக்கு அனுமதி இல்லை என்றொரு நிலை இன்று நேற்றல்ல பல நூற்றாண்டுகளாக நந்தன் காலத்திற்கு முன்பிருந்தே நிலவி வந்தது. தேவாரம், திருவாசகம் எங்கிருந்து மீட்டெடுக்கப்பட்டதோ அதே கோவிலில் தேவாரமும், திருவாசகமும் பாட முடியாது. அதற்குப் பிறகு தீட்சிதப் பார்ப்பனர்களைத் தவிர வேறு யாரும் அங்கு பாட முடியாது. சமீபத்திய தமிழக அரசின் அரசாணை வரும் வரை அதுதான் அங்கு நிலைமை, இதற்கு எதிராக அங்கு ஒரு பிரச்சாரத்தை, இயக்கத்தை கட்ட வேண்டிய தேவை இருந்தது.

நாங்கள் அங்கு கூட்டிய கூட்டத்தில் பேராசிரியர் பெரியார்தாசன் வந்திருந்தார். இன்றைக்கு உங்களுக்கு எல்லாம் தெரிந்த சாமியார் அவரும் மேடையில் அமர்ந்திருந்தார். பக்தர்கள் ஏராளமானோர் அமர்ந்திருந்தனர். இது ஒரு ஆத்திகர்களுடைய, இறை நம்பிக்கை உடையோருடைய மத உரிமைகளை நிலைநாட்டும் போராட்டம். வேறொரு கோணத்திலே, மொழி உரிமையை நிலை நாட்ட வேண்டிய போராட்டம். இரண்டும் அங்கே இணைந்திருந்தது. அங்கே வெறும் நாத்திகர்கள் மட்டும் இல்லை. இறை நம்பிக்கை உள்ளவர்களும் இணைந்திருந்தார்கள். அப்படி ஒரு மேடையில் பேராசிரியர் பெரியார்தாசன் பேசினார்.

அந்த மேடையிலிருந்து சிவபெருமானை கேலி செய்து பேசினார். அதற்கு அந்த சாமியார் சிரிக்கிறார். ‘நந்தியே விலகாய் என்று கல்லைப் பார்த்து ஏனடா பாடுகிறாய்?’ அது ஒரு கல்லு, உள்ளே இருக்கும் லிங்கம் ஒரு கல்லு இரண்டும் கல்லு. கல்லைப் பார்த்து ஏன் பாடுகிறாய்? யார் இதைத் தடுத்து நிறுத்துகிறார்களோ, அந்தப் பார்ப்பானைப் பார்த்தல்லவா பாட வேண்டும்? இதென்ன மோசடி? என்று அம்பலப்படுத்துகிறார்.

விவசாயிக்கு விளை நிலம் வேண்டும். விவசாயப் பொருட்களுக்கு நியாயமான விலை வேண்டும். வேலை இல்லாத இளைஞனுக்கு வேலை வேண்டும். மாணவர்கட்கு கல்வி வேண்டும். யாருக்குத் தேவாரம் வேண்டும்? என்று பேசுகிறார். தேவாரம் வைத்து என்ன செய்யப் போகிறாய்? இந்த சாமியார் என்னுடன் தேவாரம் பற்றி பேசுவதற்கு தயாரா? தேவாரத்தில் என்ன வெங்காயம் இருக்கு? என்று தேவாரத்திற்காக நடந்த போராட்ட மேடையில் பேசுகிறார். இது அனைத்தையும் மக்கள் கேட்டார்கள். இதில் எந்த முரண்பாடும் இருந்ததாக மக்கள் கருதவில்லை.

RSSகாரனும், பார்ப்பன பத்திரிகைகளும், சோ போன்றவர்களும் தான் நாத்திகனுக்கு என்ன வேலை என்று பேசினார்கள். மக்கள் கேட்கவில்லை. ஏன் கேட்கவில்லை என்று சொன்னால் பெரியாரின் பிரச்சாரம், பெரியாரியத்தின் பின்புலம் என்று ஒன்று இருக்கிறது. இதை மிகைபட புகழ்ந்து கூறுவது என் நோக்கமல்ல. அந்த தில்லை போராட்டத்தின் புகைப்படக் காட்சியைத் தொலைக்காட்சியில் பார்த்திருப்பீர்கள். இப்படி வேறு எந்த மாநிலத்திலாவது நடக்க முடியுமா? நடக்கக் கூடுமா? என்று யோசித்துப் பாருங்கள். ஒரு கோவிலுக்குள் நுழைந்து, போலீசார் பார்ப்பனர்களைப் பெருச்சாளியைப் பொந்தில் இருந்து வெளியே இழுப்பது போல இழுத்தார்களே? (பலத்த கை தட்டல்) இப்படி ஒரு காட்சி வேறு எந்த மாநிலத்திலாவது பார்த்திருக்க முடியுமா? முடியாது.

இது கழகத்தலைவர், தானைத் தலைவர் கலைஞரின் சாதனை அல்ல. இதைப் பார்த்து தமிழகம் குமுறவில்லை. கொந்தளிக்கவில்லை. சகஜநிலை பாதிக்கவில்லை. சிதம்பரத்தில் அவர்கட்கு ஆதரவாக ஒரு சொறிநாய் கூட குரைக்கவில்லை. ஆன்மீகம் புண்பட்டு விட்டதாகவோ, ஆத்திகம் புண்பட்டு விட்டதாகவோ, யாரும் கவலைப்படவில்லை. காரணம் நம்முடைய பொதுப்பண்பாட்டில் அவன் இறைநம்பிக்கை உள்ளவனாக இருந்தாலும், இறை நம்பிக்கை இல்லாதவனாக இருந்தாலும், நாத்திகத்தை ஒரு கருத்தாக, அதை ஒரு ஜனநாயக உரிமையாக அங்கீகரிக்கின்ற மனப்பாங்கை தமிழ் மக்கள் மத்தியில் உருவாக்கியிருக்கின்ற இயக்கம் பெரியார் இயக்கம். அப்படி உருவாக்கியது அந்த எழுத்துமுறை, எழுத்து நடை. இதை ஆய்வறிஞர்களின் மொழியில் எழுதி இருந்தால் இதில் எதுவும் நடந்திருக்காது. அது ஆய்வறிஞர்களுக்கு உள்ளே உள்ள ஒரு விவகாரமாக இருந்திருக்கும்.

பாரதி குறித்து எழுதுவதற்கு வே.மதிமாறனின் மொழி அப்படி தடித்த மொழியாக மாறுவது ஏன்? பெரியாரின் மொழி ஏன் தடித்த மொழியாக மாறியது? ஒரு விஷயம் எப்போது தடித்ததாக மாறும்? ஒரு அநீதியை வளைத்து, வளைத்து, வளைத்து நியாயப்படுத்தும் போது, ஒரு உண்மையை வளைத்து, வளைத்து, வளைத்து, இருட்டடிப்பு செய்யும் போது அங்கே என்ன வரும்? கெட்ட வார்த்தை தான் வரும். யோக்கியமாகப் பேச முடியுமா? இந்த சாமியார் சிவனடியார் 2000ஆம் ஆண்டு சிற்றம்பல மேடையில் இருந்து தேவாரம் பாட முயற்சிக்கும் போது, தீட்சித பார்ப்பனர்கள் அடித்து 5 அடி உயர மேடையில் இருந்து கையை ஒடித்து, கீழே வீசி எறிந்தார்கள்.

கீழே விழுந்த சாமியார் ‘சிவாய நமஹ’ என்றா சொன்னார்? கெட்ட வார்த்தை தான் சொல்லித் திட்டினார். இது உண்மை. இப்பொழுது இந்த சாமியாரும், தோழர்களும் போய்ப் பாடும்போது தீட்சிதர்கள் மறுபடி கெட்ட வார்த்தை சொல்லித் திட்டினார்கள். அங்கே யாரும் பக்தி பரவசத்தோடோ, இறைவனிடம் முறையிட்டோ அதைச் செய்யவில்லை. ஆக ஒரு மொழி தடித்ததாக மாறுவது என்பது, யாரும் விரும்பிச் செய்வது இல்லை.

பாரதியாரின் முரண்பாடுகளை வரிசையாகப் பட்டியலிட்டு, சுட்டிக்காட்டி இதற்கு என்ன பதில் என்று கேட்கும் பொழுது, அதற்கு நேர்மையாகப் பதிலளிக்காமல் சந்து பொந்துகளில் புகுந்து, நீங்கள் மீண்டும், மீண்டும் அதை நியாயப்படுத்தும்போது, வேறு எப்படி எழுத முடியும்? எருமை மாட்டை எப்படி அடிக்க முடியுமோ, அப்படித்தான் அடிக்க வேண்டும். அப்படித்தான் இந்த மொழிநடை வருகிறது. இது வெறும் வடிவம் பற்றிய பிரச்சனை அல்ல. இது வெறும் எழுத்து நடை குறித்த பிரச்சனை அல்ல. இது சொல்ல வந்த பொருளின் உள்ளடக்கம் குறித்த பிரச்சனை.

பாரதியின் முரண்பாடுகள் எந்த அளவுக்கு நகைக்கத்தக்கதாக, அருவருக்கத்தக்கதாக இருக்கின்றனவோ, அந்த அளவுக்கு பாரதியின் மீதான அவர்களின் மதிப்பீடுகளும் இருக்கின்றன. திருவல்லிக்கேணியில் ஒரு கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒரு பேச்சாளர் பேசிக் கொண்டிருக்கிறார். ‘சீச்சீ நாயும் பிழைக்கும், இந்தப் பிழைப்பு’ என்று பாரதி சொன்னான் என்று. இதைச் சொல்லவும் பாரதி தான் அவர்களுக்குத் தேவைப்படுகிறான். இதற்கு வேறு யாரையாவது எடுத்துக்காட்டி இருக்கலாம். பகத்சிங்கைச் சொல்லி இருக்கலாம். கட்டமொம்மனைச் சொல்லி இருக்காம். திப்புசுல்தானைச் சொல்லி இருக்கலாம். மருதுவைச் சொல்லி இருக்கலாம்.

பிழைப்பதல்ல வாழ்க்கை. பாரதி பிழைத்தவன், வாழ்ந்தவனல்ல. மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்து விட்டு பாரதி பிழைக்கவில்லையா? சாதி, பார்ப்பணியம், மனுதர்மம் இதெல்லாம் கிடக்கட்டும், ஒரு பக்கம் எந்த ஏகாதிபத்திய எதிர்ப்புக்காக நீங்கள் அவனைக் கொண்டாடுகின்றீர்களோ, அந்த ஏகாதிபத்தியத்தின் காலில் மண்டியிட்டு, சரணடைந்து மன்னிப்புச் சீட்டு எழுதிக் கொடுக்கவில்லையா? அது பிழைப்பில்லையா? எட்டயபுரம் மன்னனுக்கு சீட்டுக் கவி எழுதியனுப்பி நான் உன் வரலாற்றை எழுதித் தருகிறேன் என்று கூறியது பிழைப்பில்லையா? இது எதுவுமே உறுத்தாமல் அது வேற என்று கூறுகிறார்கள்.

‘இந்து’ போன்ற பத்திரிகைகள் மற்றும் ஆய்வறிஞர்கள் எல்லாம், கட்சிக்காரர்கள் பேசுவதை, அதை முறியடிப்போம், இதை ஒழிப்போம் என்று சொல்வதை எல்லாம் Rhetoric என்பார்கள். அதாவது சவடால், உதார் என்று சொல்வார்கள். அது உதார் அப்படின்னா, “உச்சி மீது வானிடிந்து வீழ்கின்ற போதிலும் அச்சமில்லை, அச்சமில்லை, அச்சமென்பது இல்லையே” என்று சொல்லிட்டு மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தானே பாரதி? அப்ப அது உதார் இல்லையா? சவடால் இல்லையா. அது கவிதை! அது கவிதை! (அரங்கில் பலத்த சிரிப்பு)

அந்த வார்த்தையை கேட்டுப் பாடியவன் உள்ளே போய் போலீசிடம் அடிவாங்கிக் கொண்டிருக்கிறான். பாரதி மன்னிப்புச் சீட்டு எழுதிக் கொண்டிருக்கிறான். ஆக, இப்படி பார்ப்பனியத்திற்கு எதிராக, பார்ப்பன கருத்தியலுக்கு எதிராக, எப்போதெல்லாம், கடுமையாக விமர்சனம் முன் வைக்கப்படுகின்றதோ, அப்போதெல்லாம், அந்த விமர்சனங்கள் கூறவரும் கருப்பொருள் என்ன? என்பதனை சற்றுபுறம் தள்ளிவிட்டு, அந்த மொழி நடையை முன்னிறுத்தி, இதோ பாருங்க நாகரீகமானவங்க பேசுற பேச்சா இது? என்று அதனை முன்னிறுத்திப் பேசுவது, ஒரு விமர்சனத்தை இருட்டடிப்பு செய்வதற்குத் தொடர்ந்து கையாளப்படும் ஒரு தந்திரமாக இருக்கிறது. ஆனால் மதிமாறன் எழுத்து நடை நான் பார்த்த வரையில், படித்த வரையில், வாழ்க்கை அனுபவத்தின் வாயிலாக உழைக்கும் மக்களுக்கு அறிவியலை, அரசியலை விளங்கச் செய்தல், என்ற அணுகுமுறையாக இருக்கிறது.

மதிமாறனின் கேள்வி-பதில் பற்றி இதற்கு முன்பு பேசிய தோழர்கள் பலவற்றை கூறியிருக்கிறார்கள். தமிழ், தமிழர் பண்பாடு பற்றி தோழர் விடுதலை ராஜேந்திரன் இங்கு குறிப்பிட்டார். பெரியாரின் பார்வையிலிருந்து வழுவி, அது இனவாதப் பார்வையாக மாறி வருவதை நாம் தமிழகத்தில் பார்க்கலாம். அதிலே ஒன்றைச் சொல்லுகிறார் மதிமாறன். தமிழர் என்றால் யாரையும் ஆதரிக்கலாமா? ஸ்ரீரங்கத்தில் பெரியார் சிலை உடைத்தானே அர்ஜீன் சம்பத். அவன் கூட பச்சைத் தமிழன்தான். அதற்காக அவன் பின்னால் போய்ப் பெரியார் சிலையை இடிக்க முடியுமா? பிறப்பால் தமிழன் என்பதற்காக அவன் பின்னால் செல்ல முடியுமா? அவன் என்ன கொள்கை அரசியலுக்காக இருக்கிறான் என்பதைக் கொண்டுதான் தீர்மானிக்க முடியும் என்று விளக்கம் தருகிறார்.

அதுபோல சாதி-வர்க்கம் தொடர்பான பிரச்சனைக்கும் பதில் தருகிறார். பெரியார் இயக்கத்தினருக்கும், கம்யூனிச இயக்கத்தினருக்கும் இது தொடர்பாக நீண்ட காலமான கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. கம்யூனிஸ்டுகள் என்று சொன்னால் இங்குள்ள இடது, வலது கம்யூனிஸ்டுகளைச் சொல்லவில்லை. பாவம் அவர்களை விலக்கி விடுவோம். நாங்கள் சொல்வது புரட்சிகர கம்யூனிஸ்டுகளைச் சொல்கிறேன்.

சாதி முதன்மையானதா? வர்க்கம் முதன்மையானதா? சாதி, வர்க்கம், இடையிலான இந்த முரண்பாட்டை எப்படிக் கையாள்வது என்பது குறித்த கேள்விகள் நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டுக் கொண்டு இருக்கிறது. கம்யூனிஸ்ட் இயக்கம் இதற்கு முன் கடந்த காலங்களில் தவறான அணுகுமுறை வைத்திருந்திருக்கிறது. அந்தப் பிரச்சனையே வே. மதிமாறன் இப்பொழுது தன்னுடைய பாணியில் சொல்லி இருக்கிறார். இந்தியாவில் எல்லாப் பிரச்சனையையும் சாதிதானே தீர்மானிக்கிறது. அப்புறம் என்னங்க வர்க்கம், வர்க்கம் அப்படின்னு சொல்றீங்க தேவையில்லாமல்? அப்படி என்று ஒரு கேள்வி.

அதற்குப் பதிலளிக்கையில், திருமணத்தை ஜாதிதான் தீர்மானிக்கிறது. ஆனால் தனக்கு வர இருக்கும் துணை தன்னுடைய ஜாதியாக இருந்தால் மட்டும் போதாது. தன்னைப் போல் வசதியாக அல்லது தன்னை விட வசதியாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்கிறார்களே? அதில் ஜாதி உள்ளதா? வரதட்சணை கேட்டு கொடுக்கவில்லை என்பதற்காகவும் அல்லது, கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுக்கவில்லை என்பதற்காக சொந்த ஜாதிக்காரர்களையே கொலை செய்கிறார்களே? அது ஜாதி உணர்வா? இவ்வாறே கூறிக்கொண்டு வந்து இறுதியில் கொலை செய்த ஜெயேந்திரனுக்கு ஆதரவா போராடின பிராமணர் சங்கம் கொலை செய்யப்பட்ட சங்கரராமர் ஐயருக்கு ஆதரவா போராட்டம் நடத்தலையே? ஏன்? இது தாங்க வர்க்க பாசம் என்கிறார்.

அப்போ சாதிக்கும், வர்க்கத்திற்கும் இடையேயான உறவு என்பது எப்படி இருக்கிறது? சாதி சங்கம் என்பது ஆதிக்க சக்திகளுக்கு சுயநிதி கல்லூரி முதலாளிகளுக்கு ஆதரவாக இருக்கிறது. அந்த ஜாதியில் உள்ள பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கு ஆதரவாக இருப்பதில்லை. அப்போ ஜாதி என்ற நிறுவனத்தைக் கூட ஆளுகின்ற வர்க்கங்கள் தங்களுக்கு ஆதரவாக பயன்படுத்திக் கொள்கின்றனர் என்ற உண்மையை வாழ்க்கையில் அன்றாடம் நாம் காணும் ஓர் உதாரணத்தின் வாயிலாக, தன்னுடைய பதிலின் வாயிலாக விளக்குகிறார்.

அடுத்து தனியார் மயம் குறித்து ஒரு கேள்வி. 27% இடஒதுக்கீடு பிரச்சனையாகி விட்டதே? என்று ஒருவர் கேள்வி கேட்கிறார். இடஒதுக்கீட்டிற்கு உச்சநீதிமன்றம் ஏற்படுத்துகின்ற தடைகள் ஒருபுறமிருக்க அதற்கு மதிமாறன் பதில் சொல்கிறார். “அரசுத் துறையில் மட்டும்தான் இட ஒதுக்கீடு இருக்கிறது. அரசுத் துறையைத் தனியார் மயமாக்குவதிலும், ஒழித்துக் கட்டுவதிலும் அதிக ஆர்வம் காட்டுகின்றன ‘சமூக நீதி’ அரசுகள். வேறு அரசுகள் ஆர்வம் காட்டினால் பரவாயில்லை. யார் இட ஒதுக்கீட்டின் பெயரால் ஆட்சிக்கு வந்தார்களோ, யார் சமூக நீதி பேசி ஆட்சிக்கு வந்தார்களோ அவர்கள்தான் இடஒதுக்கீட்டிற்கு வாய்ப்பளிக்கிற அரசுத்துறைகளை குழி பறித்து இழுத்துப் பூட்டி விட்டு, இட ஒதுக்கீட்டிற்கான கதவை இழுத்துச் சாத்துகின்றார்கள். இதே நிலை நீடித்தால், பிற்படுத்தப்பட்ட மக்களும் 100% இட ஒதுக்கீடு இருந்தால் கூட அதை எந்த எரவாணத்தில் போய் சொருகுவது? என்று கேட்கிறார்.

அப்ப தனியார் மயத்திற்கும், இட ஒதுக்கீட்டிற்கும் தொடர்புள்ளது. ஒரு குறிப்பிட்ட காலத்தில் தலித் அரசியலைப் பேசிய அறிஞர்கள் கூட உலகமயத்திற்கு ஆதரவாக நிறைய எழுதி இருக்கிறார்கள். தனியார் மயம், தாராள மயம், உலக மயம் தான் தலித் மக்களுக்கு விடுதலையைத் தேடித் தரும். அதுதான் கிராமப்புறம் என்னும் சிறையிலிருந்து விடுவித்து கொண்டு வரும். அதுதான் முன்னேற்றத்திற்கான வழிகாட்டி. அதன்மூலம் தீண்டாமை தகர வாய்ப்பு ஏற்படும் என்றெல்லாம் எழுதினார்கள். இங்கு அதைப் பலர் வழி மொழிந்தார்கள். ஆனால் இந்த தனியார் மயம், தாராள மயம், உலக மயக் கொள்கைகள் முதலில் காவு வாங்குவது பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களைத் தான் என்பதை எண்ணற்ற, ஆயிரக்கணக்கான சான்றுகள் அதை நிரூபித்து உள்ளன.

இன்று வரை வறுமைக் கோட்டுக்கும் கீழே உள்ள மக்கள் குறித்து காட்டும் புள்ளி விபரங்கள் அனைத்திலும் இடம் பெறுவது, பழங்குடியின, தாழ்த்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மக்கள்தான். அவர்கள் தான் கீழே போய்க் கொண்டிருக்கிறார்கள். மேலே போய்க்கொண்டிருப்பவர்கள். உயர்தட்டு வர்க்கத்தினர், மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் உள்ள சிலர். ஆக சமூக நீதி அரசியல் என்ற பெயரால் தனியார் மயம், தாராள மயம், உலக மயம் நியாயப்படுத்தப்படுவதை மதிமாறன் தனக்கே உரிய பாணியில் அம்பலப்படுத்துகிறார்.

இறுதியாக இன்னொரு கேள்வி. இது எனக்கு மிகவும் பிடித்தது. நாங்கள் அடிக்கடி சந்திக்கிற கேள்விக்கு மதிமாறன் பதில் சொல்லி இருக்கிறார். கேள்வியைப் படித்தாலே உங்களுக்குப் புரிஞ்சுடும். அடிக்கடி எங்களிடம் கேட்கப்படும் கேள்வி. யாரையும் விடமாட்டேங்கிறீங்களே? எல்லோரையும் திட்டிக் கொண்டிருக்கிறீர்களே? அதற்கு மதிமாறன் பெரியாரிடமிருந்து மேற்கொள் காட்டுகிறார். அதற்கு முன்பாக ஒரு செய்தியைச் சொல்கிறார். தன்னைப் பற்றியோ, தனக்கு வேண்டியவர்களைப் பற்றியோ விமர்சிக்கும் போது நேரடியாகக் கேட்கத் தைரியமற்றவர்களின் உளவியல் சார்ந்த கேள்வி இது. தம் விஷயத்தையே பொது விஷயமாக மாற்றி, தன்னையும் தனக்கு வேண்டியவர்களையும் விமர்சிக்கிற காரணத்தினாலேயே தரமான ஒன்றைத் தரமற்ற ஒன்று என்று பிரச்சாரம் செய்வதன் மூலம் பழி வாங்கிய மனநிலையை அடையும் முயற்சியே இந்தக் கேள்வி.

என்னைப் பற்றி இப்படி விமர்சனம் செய்து இருக்கிறீர்களே அது தவறு. அதில் ஆதாரம் இல்லை என்று ஒருத்தர் வாதாடலாம். அல்லது அவரைப் பற்றி விமர்சிக்கிறீர்களே அதில் ஆதாரம் இல்லை என்று கூறலாம். எல்லோரையும் விமர்சிக்கிறீர்களே? என்று கூறுகிறார்கள். விமர்சித்துக் கொள்ளாமலா இருக்கிறார்கள்.

சில ஆண்டுகளுக்கு முன் வைகோ பொடா கைதியாக வேலூர் சிறையில் இருந்தபோது இயக்கத்தின் புதிய தோழர்கள் மாணவர் போராட்டத்தில் கைதாகி, உள்ளே சென்ற போது வைகோ வாலிபால் விளையாடிக் கொண்டு இருந்தாராம். இவர்கள் அனைவரும் இளமைத் துடிப்புடன் தங்களை அறிமுகப்படுத்தி ம.க.இ.க. என்று கூறியவுடன், வாங்க எல்லோரையும் திட்டும் தோழர்களே என்று கூறினாராம். ஏன் இவருக்கு கருணாநிதியைத் திட்டுவது பிடிக்காதா? இல்லை ஜெயலலிதாவைத் திட்டுவது பிடிக்காதா? இல்லை கம்யூனிஸ்டுகளைத் திட்டுவது பிடிக்காதா? நமது தோழர்கள் பொடாவை இயற்றும் போது அதை ஆதரித்தீர்களே? அதைப் பற்றி உங்கள் பதில் என்ன? உங்களைப் பற்றி விமர்சனத்திற்கு உங்கள் பதில் என்ன? என்றார்களாம். அதற்கு வைகோ அது வரலாற்று சறுக்கல் என்றாராம். அந்தக் கதை போகட்டும். அந்தக் கதை போகட்டும். நமக்கு இப்ப அது வேண்டாம்.

எல்லோரையும் திட்டுவது பற்றிய கேள்விக்கு வே.மதிமாறன் பெரியார் குடியரசு இதழில் 1927ல் எழுதிய பதிலை மேற்கோள் காட்டி எழுதி இருக்கிறார். அப்ப கண்டிப்பதற்காக யாரும் கண்டிப்பது இல்லை. எல்லோரையும் திட்டுவதற்காக யாரும் திட்டுவது இல்லை. அப்ப எல்லோரையும் திட்டுகிறீர்களே என்ற விமர்சனத்திற்கு அதைப் பொருட்படுத்த வேண்டியது இல்லை. அது ஒரு முத்திரை குத்தும் முறை. விமர்சனத்திற்கு ஆளானவர்கள், அவங்களா, அவங்க எல்லோரையும் திட்டுவாங்க சரி, உங்களைப் பற்றி என்ன சொல்லி இருக்காங்க. அவரைப் பற்றியே அப்படிச் சொல்லி இருக்காங்க. என்னைப் பற்றிச் சொல்றது பெரிய விஷயமா? என்பார்கள். இப்படி அனைவரையும் திட்டுகிறீர்களே என்ற பொருளற்ற விமர்சனத்திற்கு நாங்கள் வரிந்து, வரிந்து பதில் எழுதி இருக்கிறோம். அதை விட இது கூர்மையாக, நெற்றியடியாக உள்ளது.

Maruthaiyanமதிமாறன் எழுத்தில் நான் கண்ட அளவில் பொய்யான ஆவேசம் இல்லை. தமிழ்நாட்டில் பேச்சிலும் சரி, எழுத்திலும் சரி, கவிதையிலும் சரி, பொய்யான ஆவேசம் நிறைய இருக்கிறது எழுத்துக்காக வரும் பொய்யான ஆவேசம் பாரதியைப் போல. அல்லது தன் நகைச்சுவை பாணியை முன்னிறுத்தி, இதோ என்னைப்பார், என்னைப்பார் என்று காட்டுகிற ஒரு அசட்டுத்தனமான நகைச்சுவை பாணி. இது எதுவும் மதிமாறனிடம் இல்லை. இப்படியெல்லாம் நான் அவரைப் பாராட்டுவதால், மகஇக உறுப்பினர் அவர் என்று நினைக்க வேண்டாம்.

பொதுவாக எழுத்தாளர்கள் என்பவர்கள் அமைப்புகளில் இணைவது இல்லை. அமைப்புகளில் ஏன் சேருவது இல்லை என்றால் அதனால் படைப்பு சுதந்திரம் பாதிக்கப்படும் என்பதுதான் எழுத்தாளர்களின் முக்கியமான வாதம். நான் ஒரு எழுத்தாளன். அதை எழுது, இதை எழுது என்று யாரும் கட்டளையிட முடியாது என்று கூறுவார்கள். படைப்புச் சுதந்திரம் என்றால் என்ன? படைப்பு, படைப்புச் சுதந்திரம், படைப்பு பற்றி நீண்ட விவாதம் நடத்துவதற்கான மேடை இதுவல்ல. ஆனால் இதனை பாரதியின் மூலம் தெளிவாக, வலிமையாக நாம் புரிந்து கொள்ள முடியும்.

எழுத்தாளனுக்கு, இதை எழுது, எழுதாதே என்று யாரும் கட்டளையிட முடியாது என்பதுதான் அமைப்புக்கு வெளியே நிற்பதையே ஒரு நியாயமாக, ஒரு கொள்கையாக வைத்திருக்கும் எழுத்தாளர்கள் கூறும் வாதம். பாரதியைப் பற்றி ஒரு விஷயம் வந்தது. எட்டயபுரத்தைச் சேர்ந்த பாரதி ஏன் கட்டமொம்மனைப் பற்றிப் பாடவில்லை. கட்டமொம்மன் பற்றி பாரதி ஒரு வரி கூடப் பாடியதில்லை. யார் யாரையோ பற்றிப் பாடிய பாரதி பக்கத்து ஊரைச் சேர்ந்த கட்டமொம்மனைப் பற்றி ஏன் பாடவில்லை? ஏன் பாரதி பாடவில்லை? ரொம்பப் பணிவோடு தான் கேட்கிறோம். அதற்குப் பாரதி அன்பர்கள் பதில் சொல்லலாம்.

இன்னின்ன காரணம். அதனால் பாடவில்லை என்று பதில் சொல்லலாம். அதைக் கேட்க நீ யாரு? யாரைப் பற்றி பாட வேண்டுமென்று கேட்க நீ யாரு? என்கிறார்கள். குங்குமத்தில் ஒரு வாசகர் கடிதம் எழுதுகிறார். என்ன மதிமாறன் ஏன் இப்படி எழுதுகிறார்? இப்படியே போனால் மதிமாறன் கட்டமொம்மன் பற்றி பாரதி ஏன் பாடவில்லை என்று கேட்பார் போலன்னு எழுதுறார். எங்கப்பன் குதிருக்குள்ள இல்லைன்னு சொல்ற மாதிரி.

அதற்குப் பின்னாலே ஆ.ரா.வெங்கடாசலபதி என்ற ஆய்வாளர். அவர் ஒன்றும் பாரதி விரோதி அல்லர். சொல்லப்போனால் ஒரு பாரதி அன்பர், ஆய்வாளர். அவர் வெளியிட்ட ஒரு சில தரவுகள், “பிற்காலத்தில் 1920களுக்குப் பிறகு பாரதி சென்னையில் குடியேறிய பிறகு எட்டயபுர மன்னனுக்கு, எந்த எட்டயபுர மன்னன்? கட்டமொம்மனைக் காட்டிக் கொடுத்தானே அந்த துரோகியின் வாரிசுக்கு ஒரு கடிதம் கொடுத்தனுப்புகிறார். எட்டயபுரம் சமஸ்தான வரலாறை எழுதி நான் தொகுத்து தருகிறேன் என்கிறார். ஆனால் அதற்கு எட்டயபுரம் மன்னர் செவி சாய்க்கவில்லை. நீ எழுத வேண்டாம் என்று சொல்லி விட்டார். இதை எழுதிட்டு ஆய்வாளர் எழுதுகிறார். அந்த வரி கூட மறந்து விட்டது. அப்படி ஒரு வேளை ம் என்று சொல்லி இருந்தால் கட்டமொம்மனுக்கு எதிராக பாரதி எழுதியிருப்பார் என்று கூறுகிறார்.

எட்டயபுரம் மன்னன் சார்பாக வரலாற்றை எழுதி இருந்தால் கட்டபொம்மனுக்கு எதிராகத்தானே எழுத முடியும். வேறு எப்படி எழுத முடியும்? கட்டமொம்மனை வில்லனாக்கித் தான் எட்டயபுரம் மன்னனை கதாநாயகனாக்க முடியும். ஒருவேளை அந்த மன்னன் சரி என்று சம்மதித்திருந்தால், பாரதி கட்டமொம்மனுக்கு எதிராக எழுதும் நிலை எற்பட்டிருக்கும். நல்லவேளை அந்தத் தீங்கிலிருந்து நாம் தப்பினோம் அப்படின்னு எழுதி இருக்கார். லஞ்சம் கொடுக்கிறேன்னு வந்தான், நல்லவேளை கொடுக்காமப் போயிட்டான். இல்லேன்னா நம்மாளு வாங்கியிருப்பான். குற்றவாளி ஆகியிருப்பான். இன்னைக்கு அமைச்சர் பூங்கோதை கதை நடக்குது இல்லையா? ஒருவேளை முகோபாத்தியா சம்மதித்திருந்தால் குற்றம் நிறைவேறி இருக்கும்.

பாரதி எழுதித் தர்றேன்னு சொன்னான் எட்டப்பன் வேண்டாம்னுட்டான். அதனால் பாரதி எழுதலை. தேசிய கவியா இருக்கார். பூங்கோதை ஒரு பரிந்துரை சொன்னார். காரியம் நடக்கலை அப்படின்னா நிரபராதி தானே அப்புறம் எதுக்கு அவங்க ராஜினாமா பண்ணனும்? அப்படித்தான் இருக்கிறது விவாதம்.

ஆக தோழர்களே, இதைக் கவனியுங்கள். இது கேவலமானது. ரொம்பக் கேவலமானது. ஆக கேவலம் பாரதி. ஜாலியன் வாலாபாக்கில் தொடங்கி, திப்புசுல்தானில் இருந்து எண்ணற்ற தியாகிகள் கொலை செய்யப்பட்டது வரை இவர்கள் யாரைப் பற்றியும், எதைப் பற்றியும் பாரதி பாடினது இல்லை. நீ எப்பேர்ப்பட்ட பாரதி பித்தனாக பக்தனாக, அடிமையாக வேண்டுமானாலும் இருந்து கொள். இந்தக் கேள்விக்கு ஒரு விடை வேண்டுமா? வேண்டாமா? அந்தக் கேள்வியைக் கேட்பவரை அகங்காரத்துடன் எதிர்கொண்டு, அது படைப்பாளியின் சுதந்திரம். யாரைப் பாடுவது? யாரைப் படாமல் இருப்பது. அது கவிஞர் தீர்மானித்துக் கொள்ள வேண்டியது என்று முடித்துக் கொள்கிறார்கள்.

அப்ப படைப்பாளியின் சுதந்திரம் என்பது அநேகமான சந்தர்ப்பங்களில், அது தன்னகங்காரமாக, சமூக விரோதமாக முடிகிறது. அமைப்புக்களில் இல்லாவிட்டாலும், ஓர் அமைப்பில் இணைந்து இயங்காவிட்டாலும், தனி நபராக சமூக உணர்வுடன் உழைக்கும் மதிமாறனைப் போன்றவர்கள் கடுமையாக விமர்சிக்கிறார்கள் என்பதற்காக அதை தரம்தாழ்த்தி உள்ளடக்கத்தை கொச்சைப்படுத்தி சொல்லப்படுகின்ற விமர்சனங்களை நாம் கடுமையாக எதிர்கொள்ள வேண்டும்.

ஒரு விமர்சனத்தை நான் செய்கிறேன் என்றால், ஒரு தவறின் மீது ஏன் கடுமையாக நான் விமர்சனம் செய்கிறேன் என்றால் அதன் பொருள் என்ன? எனக்கெதிராக ஒரு வாளைத் தயார் செய்து உங்கள் கையில் கொடுக்கிறேன் என்று அர்த்தம். ஒரு விமர்சனத்தை நான் செய்கிறேன் என்றால் அது அவர் செய்தாலும், யார் செய்தாலும், நான் செய்தாலும், அதன் பொருள் என்ன? நாளை அதே போன்றதொரு வாய்ப்பில், அதே போன்றதொரு நிகழ்வில், சூழலில் அத்தகைய தவறை நான் செய்வேனாகில் அந்த வாள் கொண்டு என்னை நீங்கள் குத்த முடியும். ஏண்டா அவனுக்குச் சொன்னாய்? நீ என்ன யோக்கியமா? என்று கேட்க முடியும்?

அப்ப ஒவ்வொரு விமர்சனத்தையும் எதிராளி மீது செலுத்தப்படும் அம்பு என்று மட்டும் பார்க்கக்கூடாது. அது தன்னை எய்வதற்கு வாசகர்களுக்கும், மக்களுக்கும் ஏன் எதிரிகளுக்கும் வழங்கப்படும் அம்பு. விமர்சனங்களைச் செய்வதற்குப் பொறுப்பின்மை அல்ல; தைரியம் வேண்டும். அறிவு நாணயம் வேண்டும். அத்தகைய பக்குவத்தை தோழர் மதிமாறன் பெற்றிருக்கிறார். இன்னும் பெற வேண்டும். அவரது விமர்சனங்கள் புதுமைப்படவேண்டும். சிந்தனையும், செயல்களும் செம்மைப்படவேண்டும் என்று கூறி வாய்ப்புக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன். வணக்கம். 

(அடுத்த இதழில் தோழர் கொளத்தூர் மணியின் உரை வெளிவரும்)