ஆப்கானிஸ்தானில் எண்ணெய் வளத்தை சுரண்டுவதற்காக உசாமா பின்லேடன் ஒளிந்திருப்பதாக கூறி அந்நாட்டின் மீது படையெடுத்து அதனை கைப்பற்றியது அமெரிக்கா. பேருக்கு ஒரு பொம்மை ஆட்சியை நிறுவி ஆப்கானிஸ்தானின் எண்ணெய் வளத்தை கொள்ளையடித்தது மட்டுமில்லாமல் அது வெளியுலகிற்கு தெரியாமல் இருக்கும் வண்ணம் உசாமா பின்லேடனை தேடித் திரிவதாக சீன் காட்டியது அமெரிக்கா.

ஆப்கானிஸ்தானின் எண்ணெய் வளத்தை கொள்ளையடித்து முடித்த அமெரிக்கா அந்நாட்டிலிருக்கும் தனது இராணுவத்தை திரும்ப அழைக்க முடிவு செய்தது. பத்து ஆண்டுகளுக்கு மேலாக தேடித் திரிந்தும் பின்லேடனை பிடிக்க முடியலையா என்று யாராவது கேள்வி கேட்டால் என்ன செய்வது என்று யோசித்த அமெரிக்கா பாகிஸ்தானில் வைத்து பின்லேடனைக் கொன்று விட்டதாக நாடகம் நடத்தியது.

பாகிஸ்தானைப் பற்றி துரும்பு கிடைத்தாலும் தூணாக மாற்றி எழுதி தங்களது வீரப்பிரதாபத்தை காட்டி வரும் இந்திய ஊடகங்கள் "உலகத் தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் தந்து வருவதாக' நீட்டி முழக்க ஆரம்பித்து விட்டன.

இந்த நெருப்பில் குளிர்காய முணைந்த இந்திய உள்துறை அமைச்சகம் தேடப்படும் ஐம்பது தீவிரவாதிகள் பாகிஸ்தானில் தங்கி இருப்பதாக பட்டியல் போட்டு கொடுத்தது.

பட்டியலில் நடந்த குளறுபடிகள் "சிபிஐ என்றால் சிரிப்பு போலீஸ் ஆப் இந்தியா' என்று நக்கலடிக்கும் லெவலுக்கு கொண்டு சென்று விட்டது. ஏனென்றால் உள்துறை அமைச்சகத்திற்காக இந்த பட்டியலை தயாரித்தது கொடுத்தது சி.பி.ஐ.

பட்டியல் வெளியிடப்பட்ட இரண்டு, மூன்று தினங்களில் பட்டியலில் இருக்கும் வாஜுல் கமர்கான் என்பவர் மும்பை நகரத்தின் அருகே உள்ள தானேவில் பல ஆண்டுகளாக தங்கி வருவதாக அவருடைய குடும்பத்தினர் ஊடகங்களில் தெரியப்படுத்தியவுடன் சிபிஐ சூடு தாங்காமல் கையை உதறிக் கொண்டது; சாரி சொன்னது.

சப்போர்ட்டுக்கு வந்த மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் இது 'சிம்பிள் மிஸ்டேக்' என்று கூறி சிபிஐக்கு வக்காலத்து வாங்கியது மட்டுமில்லாமல் நடந்த தவறுக்கு பொறுப்பேற்றுக் கொள்வதாகவும் கூறி இந்தப் பிரச்சினைக்கு முடிவுரை எழுத முயற்சி செய்தார்.

இந்தச் சமாளிப்பு முடிவதற்குள்ளாக பட்டியலில் இருக்கும் பெரோஸ் அப்துல் ரஷீத் கான் என்பவரும் இந்தியாவில் இருக்கும் தகவல் வெளியாகி அனைவரையும் தர்மசங்கடத்தில் ஆழ்த்தியது.

ஏற்கெனவே கைதாகி மும்பை சிறையில் இருக்கும் நபரைத்தான் பாகிஸ்தானில் ஒளிந்து கொண்டிருப்பதாக கூறி பட்டியலை தந்துள்ளது இந்தியா. அது மட்டுமில்லாது ஆட்டுக் குட்டியை தோளில் போட்டுக் கொண்டு ஊரெல்லாம் தேடிய கதையாக சிறையில் இருக்கும் பெரோஸ்கான் மீது சர்வதேச போலீஸ் மூலமாக பிடிவாரண்ட் வாங்கி சிபிஐ உலகம் பூராவும் தேடித் திரிந்த தகவல் வெளியாகி சிரிப்பாய் சிரிக்கிறது.

சிபிஐயின் நடவடிக்கைகள் உள்ளூரில் சிரிப்பாய் சிரித்துக் கொண்டிருக்கும் வேளையில் டென்மார்க்கில் ஆக்ஷன் ரிப்போர்ட்டை நிகழ்த்தப் போய் சிபிஐ தலையை சொரிந்து கொண்டிருக்கும் சேதி வெளியாகி 'இந்த வாரம் சிபிஐ சிரிப்பு வாரம்' என்பதை ஒளிபரப்பிக் கொண்டு இருக்கிறது.

1995ம் ஆண்டு டிசம்பர் மாதம் 18ம் தேதி மேற்கு வங்க மாநிலம் புருலியா மாவட்டத்திலுள்ள ஜோவ்பூர் ஜால்ரா பகுதியில் பறந்த மர்ம விமானம் ஆயுதக் குவியலை வீசியது. அந்த விமானத்தை வழியில் மடக்கிய சிபிஐ அதிகாரிகள் ஆயுத வியாபாரி பீட்டர் பீளீஸையும், நீல்ஸ் கிரிஸ்டியன் நீல்ஸன் என்கிற கிம்டேவியையும் கைது செய்தனர்.

சிபிஐ விசாரணை நடத்திக் கொண்டிருக்கும்போதே கிம் டேவி மர்மமான முறையில் தப்பியோடி விட்டான் என்று கூறியவுடனே வழக்கின் கதி அதோகதி என்று மக்கள் கூறி விட்டனர். அடுத்து கைவசம் இருந்த பீட்டர் பிளீச்சையாவது விசாரித்து தண்டித்ததா என்றால் அவனையும் ஜனாதிபதியின் மன்னிப்பை வாங்கிக் கொடுத்து பத்திரமாக ஃபாரீனுக்கு அனுப்பி வைத்தது.

குண்டு வெடிப்பு வழக்குகளில் சந்தேகமாக கைது செய்யப்பட்டவர்களுக்கு ஜாமீன் கூட தராமல் அலைகழிக்கும் சிபிஐ, வெளிநாட்டிலிருந்து ஆயுதக் குவியலை கொண்டு வந்துகையும், களவுமாக மாட்டிக் கொண்ட வெளிநாட்டுக்காரனை சகல மரியாதையுடன் அனுப்பிய சங்கதிகள் சிபிஐக்கே வெளிச்சம்.

எப்போதும் தும்பை விட்டுவிட்டு வாலை பிடிப்பதுதானே சிபிஐயின் பழக்கம். ஏற்கெனவே இந்தியாவில் தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்த போபால் விஷவாயு புகழ் வாரன் ஆண்டர்சனை அமெரிக்காவிற்கு அனுப்பிவிட்டு இப்போது தேடித் திரிகின்றனர்.

அதேபோல தங்கள் பிடியிலிருந்து தப்பி தலைமறைவாக இருக்கும் கிம்டேவியை தேடிப் பிடிக்க நடவடிக்கை எடுப்பதாக சீன்காட்ட ஆரம்பித்தனர். சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்தது போல பிலிம் காட்டுவதற்காக சிபிஐ கிம்டேவி குறித்து கூறியவைகள் பூமராங் போல சிபிஐக்கு எதிராக திரும்பி இருக்கிறது.

சிபிஐயின் அறிக்கைகளை கேள்விப்பட்ட கிம்டேவி, தான் மறைந்து வாழவில்லை என்றும், பல ஆண்டுகளாக கோபன் ஹேகனில் வெளிப்படையாக வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்தான். மேலும் தான் தப்பிக்கவில்லை என்றும், தன்னை பாதுகாப்பாக நேபாள எல்லைக்கு அழைத்துச் சென்று வழியனுப்பி வைத்ததே சிபிஐதான் என்றும் பேட்டி கொடுத்து சிபிஐ மானத்தை கப்பலேற்றி விட்டான்.

இன்னும் ஒருபடி மேலேபோய், தான் கோபன் ஹேகனில் தங்கி இருப்பது சிபிஐக்கு தெரியும் என்றும், சிபிஐ அதிகாரிகள் தன்னைத் தேடுவதாக கூறி இத்தனை ஆண்டுகள் உலகச் சுற்றுலா போய்க் கொண்டிருக்கிறார்கள் என்கிற குண்டைத் தூக்கிப் போட்டு சிபிஐயின் வண்டவாளத்தை தண்டவாளம் ஏற்றி விட்டான்.

இனிமேலும் இவனை விட்டு வைத்தால் மிச்சமிருக்கும் மானத்தையும் வாங்கி விடுவான் என்று சிபிஐ உடனடியாக கிம்டேவியை கைது செய்து கொண்டு வர ஒரு குழுவை அனுப்பியது. 'துடிக்குதுது புஜம்' என்று தீவிரவாதியை பிடிக்க விமானத்தில் பறந்த அதிகாரிகள் அதற்கு தேவையான வாரண்டை மறந்து போய் விட்டார்களாம்.

உள்ளூரில் மானம் போனது பத்தாது என்று சொல்லி மக்களின் வரிப் பணத்தில் விமானத்தில் பறந்து சென்று வெளிநாட்டில் நமது நாட்டின் மானத்தை விற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

"உள்ளூரில் போலீஸ் சொதப்புனா சிபிஐகிட்டே முறையிடுவோம்; அந்த சிபிஐயே சொதப்புனா யார்கிட்டே முறையிடுவது?' என்று புலம்பும் மக்களின் குரலை எங்கே போய் சொல்வது?

இந்தச் சூரப்புலிகளிடம்தான் ஆதர்ஷ் ஊழல் முதல் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வரை விசாரிக்கும் பொறுப்புகள் வழங்கப்பட்டிருக்கிறது. இவர்கள் பொறுப்பில் விசாரணை நடந்தால் அறுபது சதவீதத்தை விட்டு விட்டு இருபது சதவீதத்தை கைது செய்வார்கள். பிறகு அதையும் நிரூபிக்காமல் வழக்கை கோட்டை விட்டு விடுவார்கள் என்பதை நாம் சொல்லித்தானா மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்!