புலிகளைத் தோற்கடிக்க இந்தியா எங்களுக்கு உதவியது உண்மைதான். இந்தியா எங்களது நட்பு நாடுதான்; அதற்காக இந்தியா எங்கள் நாட்டு உள் விவகா ரங்களில் தலையிட்டால் அதனை அனுமதிக்க முடியாது...'' - இப்படிச் சொன்ன சிங்கள அரசு தமது வெளி நாட்டு அமைச்சரான ஜி.எல். பீரீஸை மூன்று நாள் பயணமாக டெல்லிக்கு அனுப்பி வைத்திருக்கிறது.

டெல்லியில் மூன்று நாட்கள் தங்கிய பீரீஸ், பிரதமர் மன்மோகன் சிங், வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, முன்னாள் வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி (இலங்கையில் யுத்தம் நடந்தபோது இவர்தான் வெளியுறவு அமைச்சர்), அயலுறவுச் செயலாளராக இருந்து இலங்கைக்கு பலமுறை பயணம் மேற்கொண்ட - தற்போதைய தேச பாதுகாப்பு ஆலோசகராக பொறுப்பிலிருக்கும் ஷிவசங்கர் மேனன், தற்போதைய அயலுறவுச் செயலர் நிருபமா ராவ் ஆகியோரைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.

இவர்களெல்லாம் சிங்கள அரசுக்கு அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்தவர்கள். ஈழத் தமிழர்களின் படுகொலைக்கு காரணமானவர்கள் என்று உலகத் தமிழர்களால் நம்பப்படுபவர்கள்.

இவர்களுடனான ஜி.எல். பீரீஸின் சந்திப்பின்போது பேசப்பட்ட அல்லது ஒப்புக் கொள்ளப்பட்ட விஷயங்கள் குறித்த அறிக்கை கடந்த 17ம் தேதி இரவு வெளியிடப்பட்டது. அதில், இரு நாடுகளின் உறவுகள் பற்றி விவாதிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

அதோடு கூடுதல் செய்தியாக இலங்கையில் நெடுங்காலமாக இருந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஒரு நல்வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்று இரு தரப்பும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஜி.எல். பீரீஸ் இந்திய அரசுக்கு தெரிவித்ததாக ஒரு செய்தி மத்திய அரசால் சொல்லப்படுகிறது. தமிழர் பிரச்சினைக்கு இலங்கை அரசமைப்புச் சட்டத்தின் 13வது திருத்தத்தைக் கொண்டு வந்து தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது என்பதுதான் அந்தச் செய்தி.

மத்திய அரசு இன்னொன்றையும் கூறுகி றது. போரினால் இடம் பெயர்ந்த தமிழர்களை மீள் குடியேற்றம் செய்யவும், போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் மனிதாபிமான தேவைகளை நிறைவேற்றவும், அவசர கால சட்டங்களைத் திரும்பப் பெறவும், அங்கு இயல்பு நிலை திரும்ப நடவடிக்கை எடுக்கவும் ஜி.எல். பீரீஸ் உறுதியளித்துள்ளார் என்கிறது மத்திய அரசு.

அடடா... சிங்கள அரசுக்கும் - இந்திய அரசுக்கும் தமிழர் நலன் மீதுதான் எவ்வளவு கரிசனம்!

யுத்தம் முடிந்து 2 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. அகதி முகாம்களில்தான் இன்றும் அடைக்கப்பட்டுள்ளனர் ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள். எதிர்படுபவர்களிடம் 5 ரூபாய், 10 ரூபாய் கேட்டு பிச்சை எடுக்கும் சூழ்நிலைதான் அங்கே நிலவுகிறது.

இந்த இரண்டு ஆண்டுகளில் குறைந்தபட்ச அடிப்படை வசதிகள் கூட செய்து கொடுக்காமல் அம்மக்களை கொடுமைக்குள்ளாக்கும் சிங்கள அரசு, அதிகாரப் பகிர்வு குறித்து முயற்சி செய்வதாகக் கூறுவது நம்பும்படியா இருக்கிறது?

இதுவரை எத்தனை தமிழர்களை மீள் குடியேற்றம் செய்திருக்கிறது சிங்கள அரசு? தமிழர்கள் வாழ்ந்த பகுதிகள் இன்று யார் கட்டுப்பாட்டில் உள்ளது? அப்பகுதிகளில் இராணுவக் குடியிருப்பும், இராணுவ முகாம்களும் கட்டப்பட்டு வருகின்றனவே!

தமிழர்களின் காணிகள் சிங்கள மக்களுக்கு தாரை வார்த்துக் கொடுக்கப்பட்டுள்ளதே? இவற்றை நாம் சொல்லவில்லை. சிங்கள ஊடகங்கள் சொல்கின்றன. தமிழர் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் இலங்கை பாராளுமன்றத்தில் இதனைத் தெரிவிக்கின்றனர்.

ஆக, தமிழர்களை இலங்கையிலிருந்து முற்றாகத் துடைத்தெறியும் நீண்ட கால திட்டத்தை ஒருபுறம் செயற்படுத்திக் கொண்டு - தமிழர்கள் மீள் குடியேற்றம் செய்யப்படுவார்கள் என்று தரும் உறுதிமொழி விஷ வார்த்தைகளல்லவா?

சரி! தமிழர் நலன் குறித்து - டெல்லிக்கு வந்து மூன்று நாட்கள் தங்கிப் பேச வேண்டிய அவசியம்தான் என்ன? அந்த அவசியத்தை ஏற்படுத்தியிருப்பது ஐ.நா.வின் அறிக்கை. ஐ.நா. பொதுச் செயலாளர் பான்கி மூன் அமைத்த நிபுணர்கள் குழு, "இலங்கை யுத்தத்தின் போது போர்க் குற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. அது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கூறியுள்ளது. இவ்வறிக்கை சர்வதேச மட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.

இந்தியா, சீனா, ரஷ்யா தவிர்த்த உலக நாடுகள், பன்னாட்டு விசாரணைக் குழுவை அமைத்து இலங்கையில் உள்நாட்டுப் போரில் நடந்த போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என குரலெழுப்பி வருகின்றன.

இந்த சர்வதேச அழுத்தங்களிலிருந்து தப்பிக்க ஐ.நா. அறிக்கை எதிராக ஆதரவு திரட்டும் பணியில் முனைப்பு காட்டி வருகிறது சிங்கள அரசு. அதன் ஒரு பகுதி தான் ஜி.எல். பீரீஸின் டெல்லி விஜயம்.

வந்த இடத்தில் அவரது வருகைக்கு தமிழ் அமைப்புகள் ஆர்ப்பாட்டம், கண்டனம் என இறங்கி சர்ச்சைகளைக் கிளப்பிடக் கூடாது என்பதால் தமிழர் நலன் குறித்து பொய்யான வாக் குறுதிகளை வழங்கியிருக்கிறார் ஜி.எல். பீரீஸ். ஆனால் அவர் வந்த நோக்கத்தை திறம்பட நிறைவேற்றிக் கொண்டார் என்ப தைத்தான் அவரின் டெல்லி விஜயம் வெளிப்படுத்துகிறது.

- ஃபைஸல்