நீதியான, நேர்மையான அதே சமயம் அதிகார வர்க்கத்தினருக்கு எதிராக சாட்டையடித் தீர்ப்பு வழங்கி மக்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றிருப்பவர் உச்ச நீதிமன்ற நீதிபதியான மார்க்கண்டேய கட்சு.

அலஹாபாத் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஊழலுக்கு எதிராக கடும் கண்டனம் தெரிவித்த வரும் இவரே! பாபரி மஸ்ஜித் தீர்ப்பின் மேல் முறையீட்டின்போது கடந்த வாரம் அலஹாபாத் நீதிமன்றத் தீர்ப்பை கண்டித்து இடைக்கால தடை விதித்ததும் கட்சுதான்.

இவரது குடும்பத்தினருக்கு நூறு ஆண்டுகளுக்கும் மேலாக நீதித் துறையோடு இருக்கும் தொடர்பு அவரை நீதியுடன் நடக்க வைத்திருக்கிறது.

கடந்த வாரம் இரண்டு வழக்குகளில் அதிரடித் தீர்ப்புகளை வழங்கியிருக்கிறார் மார்க்கண்டேய கட்சு. அவரது இரண்டு தீர்ப்பையும் மக்கள் வர வேற்றுள்ளனர். நேர்மையான தீர்பாகவே அவை அமைந்திருக்கின்றன.

போலி என்கவுண்டர் நடத்துகின்ற போலீஸ் அதிகாரிகளை கொலைகாரர்கள் என வர்ணித்திருக்கும் மார்க்கண்டேய கட்சு, இதுபோன்ற செயல்களில் இறங்கும் போலீசாருக்கு மரண தண்டனை தரலாம் எனத் தெரிவித்திருக்கிறார்.

மும்பை வர்சோவா பகுதியில் நானா-நானி பார்க்கில் சில ஆண்டுகளுக்கு முன்பு மும்பை தாதா சோட்டா ராஜனின் கூட்டாளி என்று கூறி வாலிபர் ஒருவரை போலி என்கவுண்ட்டர் செய்தனர் மும்பை போலீசார். இந்த போலி என்கவுண்ட்டர் வழக்கை சிறப்பு புலனாய்வுக்குழு விசாரித்து போலி என்கவுண்ட்டரில் ஈடுபட்ட பிரதீப் சர்மா, பிரதீப் சூரியவன்ஷி உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகளை கைது செய்தனர்.

இவர்களுக்கு மும்பை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுக்கவே... அவர்கள் ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தை அணுகினர். இந்த விசாரணையின்போது தான் அதிரடித் தீர்ப்பை வழங்கினர் உச்ச நீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்சுவும், நீதிபதி கியான் சதா மிஸ்ராவும்.

விசாரணையின்போது, "போலி என்கவுண்ட்டர் நடத்துகிற போலீஸ் அதிகாரிகள் கொலைகாரர்கள். போலி என்கவுண்ட்டர் நடத்தியதாக நிரூபிக்கப்பட்டால் அதை அரிதினும் அரிதான வழக்காகக் கருதி போலி என்கவுண்ட்டரில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும்.

என்கவுண்ட்டர் என்ற பெயரில் மக்களை சுட்டுக் கொன்று விட்டு அதில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்று போலீசார் நினைத்தால் அவர்களுக்கு தூக்கு மேடை தயாராக இருக்கிறது. உயர் அதிகாரி போலி என்கவுண்ட்டர் நடத்த உத்தரவிட்டதாக கூறி போலீசார் தப்பிக்க நினைத்தால் அந்த உத்தரவை நிறைவேற்ற மறுப்பது போலீசாரின் கடமை...'' என வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை நீதிபதி மார்க்கண்டேய கட்சு வாசித்திருக்கிறார்.

இன்னொரு வழக்கு கௌரவக் கொலை பற்றியது...

சாதி, மதம் மாறி கலப்புத் திருமணம் செய்து கொண்ட இளைஞர்கள் - இளம் பெண்களை அவர்களது பெற்றோரோ, ஊர் பெரியவர்களோ சேர்ந்து சாகடிக்கும் செயல் கௌரவக் கொலை என்று நியாயப்படுத்தப்படுகிறது. இதுபோன்ற கொடூரங்கள் உத்திரப்பிரதேசம், ஹரியானா, உத்திராஞ்சல், ராஜஸ்தான் போன்ற வட மாநிலங்களில் சர்வ சாதாரணமாக நிகழ்ந்து வருகின்றன.

உத்திரப் பிரதேச மாநிலத்தில் அண்மையில் நடந்த கவுரவக் கொலை தொடர்பான வழக்கு கடந்த வாரம் உச்ச நீதிமன்றத் தில் மேல் முறையீட்டு மனுவாக விசாரணைக்கு வந்தது.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகளான மார்க்கண்டேய கட்சுவும், கியான் சுதா மிஸ்ராவும் தங்க ளது தீர்ப்பில், "இந்தக் கௌரவக் கொலைகளில் கௌரவம் என்பது கிடையாது; காட்டுமி ராண்டித்தனம் இது. இதுபோன்ற நடைமுறைகள் நம் நாட்டுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்துகின்றது.

கௌரவக் கொலைகளில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும். நாடு முழுவதுமுள்ள நீதிமன்றங்கள் இதனை பின்பற்ற வேண்டும். கௌரவக் கொலை செய்பவர்களுக்கு தூக்கு மேடை காத்திருக்கிறது...'' என விளாசியுள்ளனர். இத்தீர்ப்பையும் மார்க்கண்டேய கட்சுதான் வாசித்திருக்கிறார்.

தண்டனைகள் கடுமையாக் கப்பட்டால்தான் குற்றங்கள் குறையும். அதை சரியாக புரிந்து வைத்திருக்கிறார் நீதிபதி மார்க்கண்டேய கட்சு. அவரது தீர்ப்புகள் மனித உரிமை அமைப்பினரால் சில நேரம் விமர்சிக்கப்பட்டாலும், பாதிக்கப்பட்டவர்களின் நிலையிலிருந்து பார்க்கும் வகையில் இருக்கிறது மார்க்கண்டேய கட்சுவின் தீர்ப்புகள்! இஸ்லாம் ஒரு வழக்கை இதுபோன்ற நிலையிலிருந்துதான் அணுகச் சொல்கிறது.

கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல், கொலைக்கு கொலை என்கிற இஸ்லாமிய சட்டங்கள் கடுமையாக இருப்பதாக வீம்புக்காக அவ்வப்போது விமர்சனம் செய்யப்படுகின்றன. ஆனால் அதுதான் நீதியானது, நியாயமானது, மனித குலத்திற்கு அமைதியைத் தர வல்லது.

இஸ்லாமிய சட்டங்கள் இந்தியாவிலும் சரி, உலக அளவிலும் சரி இதுவரை புரிந்து கொள்ளப் படவில்லை. ஆனால் அவ்வப்போது உச்ச நீதிமன்றம் வெளிப் படுத்தும் அதிரடித் தீர்ப்புகள் இஸ்லாமிய சட்டங்களின் அடிப்படையில்தான் தரப்படுகின்றன என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.

மிகக் கடுமையான தண்டனைகளை இஸ்லாமியச் சட்டங்கள் சொன்னாலும், பாதிக்கப்பட்டவர்கள் மன்னித்தால் குற்றவாளி தண்டனையிலிருந்து தப்பலாம் என்று மனித நேயத்தையும் வலியுறுத்துகிறது. இது உலக நாட்டு நீதிமன்றங்கள் கூட பேணாத மனித நேயம்.

- அபு