இந்தியா ஒரே நாடாக வரலாற்றில் இருந்தது கிடையாது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் காலனி ஆக்கிய பகுதிகளை நிர்வாகம் செய்வதற்காக ஒன்றிணைத்தது. சுதந்திரத்திற்கு முன் 1946இல் “பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமை” என்ற வாக்குறுதியை நேரு கொடுத்தார். ஆனால் சுதந்திரத்திற்குப் பின் வாக்குறுதி காற்றில் பறக்கவிடப்பட்டது. மொழிவழித் தேசிய இனங்கள் மற்றும் பழங்குடிகளின் சிறைக்கூடமாக இந்திய ஒன்றிய அரசு கட்டமைக்கப்பட்டது.

மொழிவழி மாநில கோரிக்கைகள் வெடித்தன. ஆந்திர மாநில கோரிக்கைக்காக “பொட்டி ஸ்ரீராமுலு” உண்ணாவிரதம் இருந்து உயிர்விட்டார். முதலில் மறுத்த நேரு அரசு பின்னர் மொழிவாரி மாநிலங்களை ஏற்றுக்கொண்டது.

ஏனெனில், தேசிய சுயநிர்ணய உரிமைக்கானப் போராட்டத்தை தேசிய விடுதலை போராட்டத்தை தனிமாநிலக் கோரிக்கைகள் திசைத்திருப்பி காயடித்தன. இதனால் நேரு அரசு வரவேற்றது. தேசிய சுயநிர்ணய கோரிக்கைகள் முற்றிலுமாக பின்னுக்கு தள்ளப்பட்டது.

ஒன்றிய அரசு என்பது எதார்த்தத்தில் உண்மையில் மத்திய அரசாக இருந்தது. மைய, மாநில, பொதுப் பட்டியல் மையப் பட்டியலுக்கு பல விசியங்களில் சேர்க்கப்பட்டுள்ளன. உலகமயமாக்கலுக்குப் பிறகு கடந்த இருபதாண்டுகளில் இப்போக்கு வேகம் பிடித்துள்ளது.

நரேந்திர மோடி அரசு மிக வேகமாக உள்ளது. எல்லாவற்றையும் மையப்படுத்தும் நோக்கில் செயல்பட்டு வருகிறது. (மையப்படுத்தலில் பாசிசமயமாகி வருவதும் மிக முக்கிய காரணமாகும்)

எடுத்துக்காட்டாக, கல்வியை படிப்படியாக மாநிலப் பட்டியலிலிருந்து நகர்த்தி இன்று வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தாரைவார்க்க துடித்துக் கொண்டிருக்கிறது. மேலும் தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரில் கல்வியை முழுவதுமாக மைய அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரத் துடிக்கிறது.

நரேந்திர மோடி அரசு மாநிலப்பட்டியலில் உள்ள நிலத்தின் மீதான உரிமையை பறிக்கும் நோக்கில் மக்கள் விரோத “நிலங்கள் பறிப்பு மசோதாக்கள்” கொண்டு வரத்துடிக்கிறது.

அதேபோல் மாநிலங்களுக்கான வரிவிகிதத்தில் உரிமையைப் பறிக்கும் (ஜி.எஸ்.டி.) வரியின் மூலம் மையத்தில் ஒருமுகப் படுத்தப் பார்க்கிறது. இதன்மூலம் மாநில அரசுகளை பிச்சைக்காரர்களாக கையேந்த வைக்கிறது.

கஷ்மீருக்கான சிறப்புச் சட்டம் நீக்கப்பட்டு கஷ்மீர் ஒரு திறந்தவெளி சிறைச்சாலையாக ஆக்கப்பட்டுள்ளது. கஷ்மீர் துண்டாடப் பட்டுள்ளது. இது தமிழகத்துக்கும் நேரலாம். தமிழகமும் துண்டாடப்படலாம்.

ஒரு பக்கம் ஒரே தேசம், ஒரேமொழி, என்று முழக்கமிடுகிறது. மறுபக்கம், மொழிவழி தேசிய இனங்களின் எல்லையை துண்டு துண்டாக்கி நேரடியாக தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர நவீன பார்ப்பனீய - இந்துத்துவா பாசிச கும்பல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

உலகமயமாக்கலானது தமிழகத்திலும் இந்தியாவிலும் நிலவும் அடிப்படை முரண்பாடுகளை கூர்மையடைய வைக்கிறது. இதில் முக்கியமாக ஒன்றிய அரசு கட்டமைப்பிற்கும் தேசிய இனங்களை சேர்ந்த உழைக்கும் மக்கள், ஒடுக்கப்பட்ட மக்கள் மற்றும் பழங்குடிகளுக்கான முரண்பாட்டை தீவிரப்படுத்துகிறது. இதன் விளைவாக இந்திய ஒன்றிய அரசிற்கும் - தமிழக மக்களுக்குமான (உழைக்கும் மக்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள்) முரண்பாடு கூர்மையடைகிறது.

தமிழகம் இந்திய ஆளும் வர்க்கத்தின் வேட்டைக்களமாகியுள்ளது. கூடங்குளம், நியூட்ரினோ என்று அதன் தலையில் சுமத்தப்படுகின்றன. ஹைட்ரோ கார்பன் போன்ற கணிம வளங்களை கொள்ளையடிக்கும் திட்டங்கள் மக்களின் எதிர்ப்புக் கிடையிலும் மிகவேகமாக நடைமுறைப்படுத்த முயற்சி நடக்கிறது.

ஓ.என்.ஜி.சி. மூலம் எரிவாயுவை எடுக்க கடலூரிலிருந்து இராமநாதபுரம் வரை தமிழகத்தின் பெரும்பகுதிகளில் நிலங்கள் கைப்பற்றப்படுகின்றன. இத்திட்டம் மீத்தேன் திட்டம் நிறுத்தப்பட்ட இடங்களில் கூடநடக்கிறது. இது பல சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. இதில் ஓ.என்.ஜி.சி. எரிவாயு திட்டத்தையே எதிர்க்க வேண்டி உள்ளது.

காவிரி, முல்லைப்பெரியாறு, பாலாறு போன்றவற்றில் ஒன்றிய அரசு அலட்சியப்படுத்துகிறது. இது தமிழக மக்களை கோபத்தில் ஆழ்த்துகிறது. தமிழக மீனவர்களை இலங்கைப்படை தொடர்ந்து கைது செய்து துன்புறுத்தி வருகிறது. இது குறித்து ஒன்றிய அரசு நிரந்தரமாக தீர்ப்பதற்கு எந்தவித முயற்சியும் மேற்கொள்ளவில்லை.

மேற்கண்ட அம்சங்கள் இந்திய ஒன்றிய அரசிற்கும் தமிழக மக்களுக்குமான முரண்பாட்டை தீவிரப்படுத்துகிறது. தமிழக பாட்டாளி வர்க்கமும் இதை தீவிரப்படுத்த வேண்டிய கடமையில் இருக்கிறது.

நாம் மாநிலங்களுக்கு பதிலாக அனைத்து அதிகாரங்களும் பெற்ற சுதந்திரக் குடியரசுகளுக்கான போராட்டத்தை கூர்மைப்படுத்த வேண்டும். இந்திய ஒன்றிய கட்டமைப்பிற்கு மாறாக விருப்பப் பூர்வமான கூட்டரசுக்குப் போராட வேண்டும்.

- துரை.சிங்கவேல்

(அடுத்த பகுதி)