pegasus snoopingஉளவு பார்ப்பது ஜனநாயகத்தில் தெரிந்தோ தெரியாமலோ ஆளும் கட்சியால் செய்யப்படுகிறது. ஆனால் அதற்கு ஒரு எல்லை உண்டு. ஒரு நாட்டினுடைய பாதுகாப்பு இரகசியங்களை வெளிப்படுத்துவது அல்லது விலைக்கு விற்பது ஒரு நாட்டு விரோத நடவடிக்கையாக உள்ளது. இந்தச் செயலில் யார் ஈடுபடுகிறார் என்பதை உளவுத் துறை வழியாக அரசுக் கண்காணிக்கிறது. கூட்டாட்சி நாடுகளில் ஒன்றிய அரசும் மாநில அரசுகளும் தங்களுக்கென்று வகுக்கப்பட்டுள்ள அதிகார எல்லைக்குள் உளவுத் துறையைப் பயன்படுத்தி நாட்டுப் பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்கும் தனிநபர்களைக், குழுக்களை அல்லது அரசியல் சார்புடைய நபர்களைக் கண்காணிக்கிறார்கள்.

அதே போன்று இராணுவ உயர் அலுவலர்களையும் கண்காணிப்பதற்கென்று தனித்தனி உளவுப் பிரிவுகள் உலகம் முழுவதும் இயங்கி வருகின்றன. அமெரிக்காவில் உள்நாட்டுப் பாதுகாப் பினை ஒட்டி கமுக்கமாகக் கண்காணிக்க (Federal Bureau of Investigation) ஒன்றிய அரசின் துப்பறியும் மையம் செயல்படுகிறது. பாதுகாப்புக் காரணங்களைச் சுட்டிக்காட்டி வெளிநாட்டினரை வெளிநாடுகளில் கண்காணிப்பதற்கு அமெரிக்க உளவுத் துறை (Central Intellegence Agency) அமைக்கப்பட்டது. இத்துறையின் மீது பல காலக்கட்டங்களில் மனித உரிமை மீறல்களைச் செய்வதாக பல குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.

சோவியத் ஒன்றியம் இருக்கும் போது நாட்டுப் பாதுகாப்புக் குழு (KGB) அமைக்கப்பட்டு 1991க்குப் பிறகு கலைக்கப்பட்டது. சோவியத் ஒன்றியம் பல நாடுகளாகப் பிளவுபட்ட பிறகு ரஷ்யாவின் வெளிநாட்டு உளவுத் துறையாக மாற்றப்பட்டது. இரஷ்யாவின் பாதுகாப்புக் காரணங்களுக்கு இந்த அமைப்பு யார் எதிரிகள் எனக் கருதுகிறார்களோ அவர்களைக் கமுக்கமாகக் கண் காணித்து அரசுக்கு அறிக்கைகளை அளித்து வருகிறது. இருப்பினும் 1991ஆம் ஆண்டிற்கு முன்பு இயங்கி வந்த நாட்டுப் பாதுகாப்பு அமைப்பின் மீதும் தற்போது உள்ள வெளிநாட்டுக் கண்காணிக்கும் மையத்தின் மீதும் பல மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன. 2016ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தலில் டிரம்பிற்கு ஆதரவாகவும் ஹிலாரி கிளின்டனுக்கு எதிராகவும் ரஷ்யாவின் உளவுத் துறை செயல்பட்டது என 2018இல் குற்றம் சாட்டப்பட்டு விசாரணையும் மேற்கொள்ளப்பட்டது. தக்கச் சான்றுகளுடன் மெய்ப்பிக்க முடியாத காரணத்தினால் அந்தக் குற்றச்சாட்டுகள் இன்றும் அமெரிக்க அரசியலில் மீண்டும் பேசப்பட்டு வருகிறது.

உளவுத் துறை என்பது ஒவ்வொரு நாட்டினுடைய உள்நாட்டு, வெளிநாட்டுப் பாதுகாப்புப் பணிகளைக் கடந்து மற்ற நாடுகளின் அரசியல் கண்காணிப்பில் ஈடுபடுவதை மனித உரிமை செயல்பாட்டாளர்கள் அவ்வப்போது கண்டித்து வருகின்றனர். இவ்வாறாக ஐரோப்பிய நாடுகளிலும் ஆசிய நாடுகளிலும் பல்வேறு பெயர்களில் உளவுத் துறை அமைப்புகள் இயங்கி வருகின்றன.

இந்தியாவில் தேசிய புலனாய்வு முகமை (National Investigation Agency), வெளிநாட்டுப் பகைவர்களை, பயங்கரவாதிகளைக் கண்காணிக்கக் காவல் துறை உயர் அதிகாரிகளைக் கொண்ட ‘ரா’ என அழைக்கப்படுகிற ஆய்வுக் கண்காணிப்பு மையம் (Research and Analysis Wing), புலனாய்வு நிறுவனம் (Intelligence Bureau), இராணுவப் புலனாய்வு மையம் (Military Intelligence), ஒன்றிய அரசின் புலனாய்வு நிறுவனம் (Central Bureau of Investigation) எனப் பல காவல் துறை புலனாய்வு அமைப்புகள் ஒன்றிய அரசின் நேரடி அதிகார வரம்பிற்குள் இயங்கி வருகின்றன.

இத்தகைய உளவுத் துறை அமைப்புகள் இருப்பினும் இதையும் கடந்து இஸ்ரேல் நாட்டைச் சார்ந்த இணைய ஆயுதச் செயலி நிறுவனத்தின் பெகாசஸ் என்ற செயலியைப் பயன்படுத்தி எதிர்க்கட்சிகள், ஊடகவிய லாளர்கள், நீதிபதிகள், ஒன்றிய அரசின் அமைச்சர்கள் ஆகியோர்களின் கைப்பேசி வழியாக உளவு பார்க்கும் நோக்கத்தோடு ஒன்றிய அரசுத் தகவல்களைத் திரட்டியுள்ளதாக எதிர்க்கட்சிகள் மோடி அரசு மீது குற்றம் சாட்டுகின்றன.

உலகளவில் எதிர்க்கட்சிகளை ஒடுக்கும் நோக்கத்தோடு செயல்படும் உளவு அமைப்புகள் மீது தொடர்ந்து ஜனநாயகப் பாதுகாவலர்களும் மனித உரிமைச் செயல்பாட்டாளர்களும் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்தக் குற்றச்சாட்டுகள் உண்மை என்பதை உலகிற்கு முதன்முதலில் வெளிக்கொண்டு வந்தது அமெரிக்காவில் 1972இல் நடைபெற்ற வாட்டர்கேட் ஊழல் (Watergate) ஆகும். 1972இல் அமெரிக்கக் குடியரசுத் தலைவராக நிக்சன் இருந்த போது நடைபெற்ற இந்த ஜனநாயக விரோத உளவு பார்க்கும் செயலைத்தான் இவ்வாறு அழைத்தார்கள். குடியரசுத் தலைவர் நிக்சன் தன்னுடைய சுயநலத்திற்காக எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொலைப்பேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்டுப் பதிவு செய்து உளவு பார்த்தது வெளியுலகிற்குத் தெரிய வந்தது. இதன் அடிப்படையில் அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் உறுப்பினர்கள் கொண்ட குழு ஒரு நீதித்துறை விசாரணையை மேற்கொண்டது. இந்தக் குற்றச்சாட்டு உண்மை எனத் தெரிந்தவுடன் அமெரிக்கக் குடியரசுத் தலைவரைப் பதவியிலிருந்து நீக்கும் தீர்மானத்தை அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் முன்மொழியப்பட்டது. பதவி நீக்க நடவடிக்கை தொடங்குவதற்கு முன்பே நிக்சன் 1974 ஆகஸ்ட் 9ஆம் நாள் அன்று பதவி விலகினார். இருப்பினும் உளவுப் பார்ப்பதற்கு உதவிய அதிகாரிகளில் பலர் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டனர். உள்நாட்டு உளவுத் துறை செய்த தவறுக்கே குடியரசுத் தலைவர் நிக்சன் பதவி விலகும் சூழல் ஏற்பட்டதற்குக் காரணம், அரசியல் கட்சிகள் கடந்து நாட்டினுடைய ஜனநாயகத்தைப் பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைந்து போராடினர்; வெற்றி பெற்றனர்.

இந்தியாவில் அஞ்சல் துறை திருத்தச்சட்டம் 1986ஆம் ஆண்டு பிரதமர் ராஜிவ் காந்தியால் கொண்டு வரப்பட்டது. இந்தச் சட்டம் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் மடல்களைப் பிரித்துப் பார்க்கும் உரிமையை உளவுத் துறைக்கு வழங்கியதனால் இதனை எதிர்க்கட்சிகள் கடுமையான முறையில் நாடாளுமன்றத்தில் எதிர்த்தனர். அப்போது இச்சட்டம் குடியரசுத் தலைவராக இருந்த ஜெயில் சிங் அவர்களுக்கு அனுப்பப்பட்டது. அவர் இச்சட்டத்திற்கு ஒப்புதல் வழங்க விரும்பவில்லை. இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்றாலும் மீண்டும் அதே சட்டத்தை நிறைவேற்றினால் அது சட்டத் தகுதியைப் பெற்றுவிடும். இதை நன்கு அறிந்த குடியரசுத் தலைவர் ஜெயில் சிங் கிடப்பில் போட்டுவிட்டார். இச்சட்டத்தைத் திருப்பி அனுப்பாத காரணத்தினால் மீண்டும் நாடாளுமன்ற இரு அவைகளில் நிறைவேற்ற முடியவில்லை. எனவே அந்தச் சட்டத்தைக் கொண்டுவர முடியவில்லை. இத்தகைய அதிகாரத்தைச் சட்டைப்பை (Pocket Veto) சிறப்பு அதிகாரம் என அழைக்கிறார்கள். இது இந்திய ஜனநாயகத்தின் ஒரு மைல்கல்லாகக் கருதப்படுகிறது. 1990ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த வி.பி. சிங் இச்சட்டத்தை நாடாளுமன்ற இரு அவைகளிலும் திரும்பப் பெற்று மக்களாட்சியின் மாண்பை உயர்த்தினார்.

மாநிலக் காவல் துறையின் உளவுப் பிரிவு வழியாக எதிர்க்கட்சிகளின் தொலைப்பேசிகளை ஒட்டுக்கேட்டு உளவு பார்த்த குற்றச்சாட்டின்மீது கர்நாடக முதல் அமைச்சராக இருந்த இராமகிருஷ்ண ஹெக்டே 1988ஆம் ஆண்டு பதவி விலகினார்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகளின் பல பிரிவுகளில் தனிநபர் சுதந்திரமும், தனிநபர் கண்ணியமும் பாதுகாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக வாழும் உரிமை, சுதந்திர உரிமை, தனிநபர் உரிமைகளோடு இணைந்தவைகளாகும். 2017இல் உச்ச நீதிமன்றத்தின் 9 நீதிபதிகளைக் கொண்ட அமர்வு இந்திய அரசமைப்புச் சட்டத்தினுடைய பகுதி 3-இல் குறிப்பிட்டுள்ளபடி தனிநபர் சுதந்திரம் பாதுகாக்கப் படுகிறது எனக் குறிப்பிட்டது. ஆதார் அட்டையைக் குடிமக்களுக்கு வழங்கும் திட்டத்திற்கு எதிராகப் போடப்பட்ட வழக்கில்தான் இந்தத் தீர்ப்பு வழங்கப் பட்டது. குறிப்பாக எல்லாத் தனிநபர்களுடைய தகவல்களையும் பாதுகாப்பது அரசினுடைய கடமையாகும். அந்தத் தனிநபர் பாதுகாப்பிற்குத் தீமை ஏற்படுவதைத் தடுக்கும் பொறுப்பு அரசிற்கு உள்ளது எனவும் சுட்டியுள்ளது. இந்த அரசமைப்புச் சட்ட வழக்கின் தீர்ப்பு, பல பாதுகாப்பு உறுதிகளைத் தனி நபர்களுக்கு வழங்குகிறது. ஆதார் அட்டையின் வழியாகத் தனிநபர் தகவல்களை எடுக்கக் கூடாது என்பதற்காகத்தான் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது. ஒன்றிய அரசு பல நலத்திட்டங்களை வழங்குவதற்காக கொண்டு வரப்பட்ட ஆதார் அட்டை மற்றவர்களுக்குத் தகவல் அளிக்கும் கருவியாக மாறிவிடக்கூடாது என்ற எச்சரிக்கை இந்தத் தீர்ப்பில் எதிரொலித்துள்ளது.

இதே போன்று இந்தியா, ஐக்கிய நாடுகள் மன்றத்தின் மனித உரிமை அறிக்கையை (1948) ஏற்றுக் கொண்டு நடைமுறைப்படுத்த உறுதி பூண்டு கையொப்பமிட்ட நாடுகளில் இந்தியா முதன்மையான நாடாகும். ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆவணத்தில் 30 பிரிவுகள் மனித உரிமைகளைப் பாதுகாக்கும் விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பிரிவு 3இல் - ஒவ்வொரு குடிமகனும் தனிநபர் சுதந்திரத்தோடு வாழப் பாதுகாப்பு உரிமை உள்ளது. பிரிவு 7இல் - எல்லோரும் சட்டத்திற்கு முன், எவ்வித பாகுபாடு இன்றி, சமமானவராகக் கருதப்பட வேண்டும். பிரிவு 8இல் - அடிப்படை உரிமைகள் மீறப்படுகின்ற நேரத்தில் தீர்ப்பாயங்களையும் நீதிமன்றங்களையும் பாதிக்கப்பட்ட நபர் அணுகித் தீர்வு காணும் உரிமை வழங்கப்பட்டுள்ளது.

1950இல் உருவாக்கப்பட்ட அரசமைப்புச் சட்டத்தில், மனித உரிமை ஆணையத்தின் அடிப்படை உரிமைகளின் சட்டப்பிரிவுகளை அப்படியே ஏற்றுக் கொண்டுள்ளது. இத்தகையப் பின்னணியோடும் ஏற்கெனவே குடியரசுத் தலைவர் ஜெயில் சிங் எடுத்த நடவடிக்கையின் அடிப்படையிலும் இராமகிருஷ்ண ஹெக்டே பதவி விலகல் அடிப்படையிலும் இஸ்ரேலின் இணையச் செயலி வழியாக எதிர்க்கட்சிகளை அமைச்சர்களை, ஊடகத் துறையினரை உளவு பார்த்தது ஐக்கிய நாடுகள் மன்றத்தின் மனித உரிமை மாண்புகளையும் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகளையும் அப்பட்டமாக மீறிய கொடுஞ்செயலாகும். இந்திய ஜனநாயகத்தின் மீதும் மனித உரிமைகள் மீதும் நாட்டின் பாதுகாப்பின் மீதும் நடத்தப்பட்ட தாக்குதலாகும்.

மேற்குவங்க முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி, இஸ்ரேல் இணையச் செயலி வழியாக உளவு பார்த்த விவகாரத்தில், மாநில அரசின் சார்பில் ஒரு விசாரணையை அறிவித்துள்ளார். இந்த விசாரணை ஆணையத்தின் தலைவராக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மதன் லோகோரும் கல்கத்தா உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ஜோதிர்மயி பட்டாச்சாரியாவும் உறுப்பினராகவும் உள்ளனர். இந்த இரு நபர் விசாரணை ஆணையம் கூட்டாட்சி இயலையும், ஜனநாயகத்தையும் போற்றும் செயல் எனப் பலர் பாராட்டி உள்ளனர். உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரமணா அவர்கள் “வெளி வருகின்ற செய்திகள் உண்மையாக இருப்பின், இந்தக் குற்றச்சாட்டுகள் கடுமையானவை என்பதில் சிறிதும் ஐயமில்லை (No doubt, the allegations are serious, if the reports are true)” என்று குறிப்பிட்டுள்ளார் பெகாசஸ் இணையச் செயலி வழியாகப் பல்வேறு துறைகளைச் சார்ந்த 142 ஆளுமைகளின் கைப்பேசிகளை ஒட்டுக் கேட்ட ஜனநாயக விரோதச் செயலை எதிர்த்து, மூத்த இதழியலாளர்களான இந்து என். ராம், சசிகுமார் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்குப் பட்டியலிடப்பட்டுள்ளது.

இந்த பெகாசஸ் ஒட்டுக் கேட்பு நிகழ்வில் அதிர்ச்சி தரும் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அறிவியல் அறிஞரும் நச்சு உயிரியல் ஆய்வாளருமான திருமதி. ககன்டீப் கங் அவர்களுடைய பெயரும் இந்த ஒட்டுக் கேட்கப்பட்ட நபர்களின் வரிசையில் இடம் பெற்றுள்ளது. இந்த நச்சு உயிரியல் ஆய்வாளர் கொரானா தொற்று பாதிப்பு உச்சக்கட்டத்தை இந்தியா அடைந்த போது, ஒன்றிய அரசு செய்யத் தவறிய காரணிகளைக் கண்டறிந்து வெளிப்படுத்தினார். ஒரு கொடும் நோய்த் தாக்குதலின் போது உண்மையான வெளிப்படையான கருத்துகளை வெளியிட்டார் என்ற காரணத்திற்காகவே, இவரது கைப்பேசியும் ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளது. இதன் தொடர்பாக, ககன்டீப் கங் அவர்களை இந்தியா டுடே நாளிதழ் பேட்டி கண்டபோது. “சர்ச்சைக்குரிய கருத்து எதையும் நான் வெளியிடவில்லையே” எனக் குறிப்பிட் டுள்ளார். இது போன்ற அதிர்ச்சி தரும் கருத்துகள் வெளி வந்த வண்ணமே உள்ளன. கொரானா தொற்றின் பாதிப்பு முழுமையாக விடுபடாத நேரத்தில் ஒன்றிய அரசு மூடநம்பிக்கை சார்ந்த மத ஊர்வலங்களை அனுமதித்தது உட்படப் பல தவறான செயல்களை ஊக்குவித்து வருகிறது. இதற்கும் உச்ச நீதிமன்றம்தான் தலையிட்டுத் தடைசெய்து, நோய்த் தொற்று பாதிப்பிலிருந்து மக்களைப் பாதுகாத்தது. பொருளாதாரம் சரிகிறது. வேலையின்மை பல கோடி அளவிற்குப் பெருகி வருகிறது வறுமைக் கோட்டின் கீழ் வாழ்வோர் எண்ணிக்கை வளர்ந்து வருகிறது; விலைவாசி உயர்ந்து வருகிறது; எரிபொருள் விலையேற்றம் தொடர்கிறது; இதைப் பற்றிக் கவனம் செலுத்தித் தீவிரப் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அரசு, தனது சுய நல அரசியலுக்காக, எல்லாவற்றையும் இழந்து உண்மையைச் சுட்டிக்காட்டு பவர்களின் கைப்பேசிகளை ஒட்டுக் கேட்பது என்பது முற்றிலும் நாட்டு விரோதச் செயலே ஆகும்.

குட்டுவன்