மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியின் சார்பில் திருவள்ளுவர் ஆண்டு 2054 சிலை 24 (08.01.2023) அன்று பிற்பகல் 3 மணிக்கு சென்னை, தேனாம்பேட்டை, அன்பகம் அண்ணா அரங் கத்தில் சிந்தனையாளன் 26-ஆம் ஆண்டு பொங்கல் மலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு மா.பெ.பொ.க. துணைப் பொதுச் செயலாளரும் புதிய சிந்தளையானன் இதழின் ஆசிரியருமான வாலாசா வல்லவன் தலைமை ஏற்றார். கட்சியின் காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் சி. நடராசன் வரவேற்புரையாற்றினார். திராவிடர் இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் பொங்கல் மலரை வெளியிட மாம்பலம் ஆ. சந்திரசேகர் முதல் படியைப் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து கட்சித் தோழர்கள் இரா. சிவப்பிரகாசம், புலவர் அ. சகாதேவன், லோ. இரத்தினகுமார், சீனி. அறிவுமழை, மா. முத்தமிழன், மா. தசரதன், சம்மந்த சிவகுமார், நா. வேலு, இரா. நாராயணமூர்த்தி, செந்தமிழ்க் கொற்றி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

அடுத்து தோழர் வே. ஆனைமுத்து அவர்கள் எழுதி, 1990-இல் வெளியிடப்பட்ட “மண்டல் குழு பரிந்துரை மக்கள் நாயக உரிமைப் போர் -வகுப்புரிமை வரலாறு” நூலின் மறுமதிப்பை பெரியார் சமஉரிமைக் கழகத்தின் தில்லி மாநில மேனாள் செயலாளர் ச. தமிழரசு அவர்கள் வெளியிட முதல் படியினை கோ.மு. கறுப்பய்யா பெற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து கட்சியின் வேலூர் மாவட்டச் செயலாளர் மோ.சி. சங்கர், தலைமைக்குழு உறுப்பினர் மு. சுவாமிநாதன், திருவண்ணாமலை மாவட்டச் செயலாளர் மா. முருகேசன், வாலாசாப்பேட்டை முனைவர் ப. வெங்கடேசன், இராணிப்பேட்டை மாவட்டச் செயலாளர் க. குப்புசாமி, அரியலூர் மாவட்டச் செயலாளர் த. இளவரசன், திருப்பத்தூர் மாவட்டத் துணைச் செயலாளர் இரா. பகுத்தறிவாளன், சோ. அண்ணாதுரை ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். பின்னர் வாலாசா வல்லவன் தலைமையுரையும் முதல்படி பெற்றுக்கொண்ட மாம்பலம் ஆ. சந்திரசேகர் வாழ்த்துரையும் ஆற்றினர். நிகழ்வின் நிறைவாக மலரினை வெளியிட்ட பேரா. சுப. வீரபாண்டியன் சிறப்புரையாற்றினார். வேலூர் மாநகரச் செயலாளர் மீ. டில்லிபாபு நன்றியுரையுடன் நிகழ்வு நிறைவுற்றது.subavee valaja vallavanமாலை 6 மணிக்கு கட்சியின் பொதுச் செயலாளர் தி. துரை சித்தார்த்தன் தலைமையில் நடந்த சனாதன எதிர்ப்புக் கருத்தரங்கம் திருப்பத்தூர் மாவட்டச் செயலாளர் நா. மதனகவி வரவேற்புரையுடன் தொடங்கியது. தி. துரை சித்தார்த்தன் தலைமையுரைக்குப்பின் கட்சியின் தலைமைக்குழு உறுப்பினரும் புதிய சிந்தனையாளன் ஆசிரியர் குழு உறுப்பினருமான க. முகிலன் தொடக்கவுரையாற்றினார். கட்சியின் தலைமைக்குழு உறுப்பினரும் புதிய சிந்தனையாளன் ஆசிரியர் குழு உறுப்பினருமான சா. குப்பன் தீர்மானங்களை முன்மொழிந்தார். அடுத்து தமிழ் உரிமைக் கூட்டமைப்பின் செயலாளர் காஞ்சி அமுதன் கருத்துரையாற்றினார். தொடர்ந்து பேரா. அ. கருணானந்தம் அவர்களும் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தியாகு அவர்களும் கருத்துரையாற்றினர். தோழர் மு. குடியரசு நன்றியுரையுடன் இரவு 8.15 மணிக்கு நிகழ்வு நிறைவடைந்தது.

மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியின் சார்பில் சென்னை தேனாம்பேட்டை அன்பகம் அண்ணா மன்றத்தில் 08.01.2023 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்கள்:

கடந்த 2000 ஆண்டுகளாக சமூகத்திலும் அரசியலிலும் மேலாதிக்கம் செலுத்தி வந்த உயர்சாதியினர் இந்தக் காலத்திலும் கீழ்ச்சாதி மக்களை அடக்குவதும், ஒடுக்குவதும், சுரண்டுவதும், கொடுமைகளுக்கு உள்ளாக்குவதும் தொடர்ந்து கொண்டுள்ளது.

மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் மன்னர்களுக்குக் கல்விப் புகட்டுபவர்களாகவும் ஒழுக்கங்களைக் கற்பிப்பவர்களாகவும் சாதிக் கட்டமைப்பின் உச்சத்தில் இருந்த பார்ப்பனர்கள், வருண-சாதிமுறையைச் சமூகத்தில் நிலைக்கச் செய்திட ஏற்ற சாத்திரங்களையும் ஸ்மிருதிகளையும் உருவாக்கி, அவற்றை மன்னர்களின் ஆட்சிக்குரிய சட்டங்களாக இந்தியத் துணைக்கண்டத்தின் எல்லாப் பகுதிகளிலும் நடைமுறைப்படுத்தி வந்தனர்.

இசுலாமிய மன்னர்கள் ஆட்சியிலும் பிரித்தானியர் ஆட்சியிலும் வருண-சாதி அடிப்படையான சாத்திரங்களும் ஸ்மிருதிகளுமே சட்டங்களாகத் தொடர்ந்தன.

சூத்திரர்கள் சொத்து வைத்துக் கொள்ளவும் கல்விகற்கவும் தடுக்கப்பட்டிருந்ததால் இந்து சமூகத்தில் 80 விழுக்காடு மக்கள் தொகையினர் சொத்துடைமை அற்றவர்களாகவோ மிகவும் சொற்ப சொத்துள்ளவர்களாகவும் கல்வி பெறாதவர்களாகவும் உள்ளநிலை நீடித்தது. உயர்சாதியினர் சொத்துடைமைத்த வர்க்கத்தினராகவும் அதன் காரணமாக சமூகத்தில் செல்வாக்கான உயர்நிலையில் நீடிப்பதும் காலம் காலமாகத் தொடர்கிறது. பிரித்தானியர் ஆட்சிக் காலத்திலும் சுதந்திரத்திற்குப் பிறகும் கொண்டு வந்த நில உச்ச வரம்புச் சட்டங்களால் குறிப்பிடத்தக்க பயன்கள் விளையவில்லை.

பிரித்தானியர் பொதுக் கல்வி முறையை நடைமுறைப் படுத்திய பின்னரும் பார்ப்பனர்களே உயர்கல்விப் பெற்றவர்கள் என்ற நிலை உருவானது. அரசியல் பதவி களிலும் உயர் அதிகாரப் பதவிகளிலும் பார்ப்பனர்களே நூற்றுக்கு நூறு இடம் பெற்றனர். இதன் காரணமாக பிரித்தானிய ஆட்சியிலும் விடுதலை பெற்ற இந்தியர் ஆட்சியிலும் பார்ப்பன உயர்சாதியினர் ஆதிக்கம் தொடர்ந்தது.

இந்திய அரசமைப்பு யாப்பு அவையில் (Constituent Assembly) பார்ப்பனர்களும் உயர்சாதியினரும் பழமைவாதிகளுமே நிறைந்திருந்ததால் இந்திய அரசமைப்பில் கூறு 13(3) (a), 25 (2) (26), 372 (1) மற்றும் 395 ஆகியவற்றை ஏற்படுத்தி பழக்கச் சட்டம், வழக்கச் சட்டம் என பழைய வருண -சாதி நடைமுறைகளுக்குப் பாதுகாப்பும் பழைய நடைமுறைகளே நீடிக்கவும் அதன்வழித் தங்கள் சாதி-பார்ப்பன மேலாதிக்கம் நீடிக்கவும் வழி அமைத்துக் கொண்டனர்.

வருண-சாதி அமைப்பைப் பாதுகாப்பது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கூறுகள் 13, 25, 372 என்பதைத் தெளிவாக அறிந்த பெரியார் 26.01.1957 இல் திராவிடர் கழகத் தோழர்கள் 10,000 பேர் அச்சட்டக் கூறுகளை எரிக்கும் வலிமையான போராட்டத்தினை நடத்தினார். இப்போராட்டம் நடந்து 56 ஆண்டுகள் கடந்த பின்னும் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இருந்து அந்த கூறுகள் நீக்கப்படவில்லை.

பெரியார் இயக்கத்தின் போராட்டத்தின் நோக்கத்தை நன்கு புரிந்த தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்திய அரமைப்புச் சட்டத்தின் கூறுகள் 13(3) (a), 25 (2) (b), 372 (1) விளக்கம் 1 மற்றும் 395இல் உள்ள பிரிவு கவுன்சில் அளித்த தீர்ப்பு செல்லும் என்ற சொற்றொடர் ஆகியவை இந்திய சாதி அமைப்பைப் பாதுகாத்து வருகிறது என்பதை உலகுக்கு உணர்த்த அக்கூறுகளை நீக்கிட நாடாளுமன்றத்தில் தீர்மானங்கள் அளித்து, விவாதங்கள் நடைபெற முயற்சிகள் மேற்கொள்ளுமாறு தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சியினரையும் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் இந்தச் சனாதன எதிர்ப்புக் கருத்தரங்கம் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 2

பெரியாரின் சிந்தனைகளை 21 மொழிகளில் மொழிப் பெயர்த்து உலக அளவில் பரப்பிட முயற்ச்சி செய்யும் தமிழ்நாட்டு அரசையும், மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களையும் இக்கருத்தரங்கம் பாராட்டுகிறது.

தீர்மானம் 3

புதுக்கோட்டை மாவட்டம் இறையூர்-வேங்கைவயல் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் குடிநீர் தொட்டியில் மலத்தை கலந்தவர்களை உடனடியாக கண்டறிந்து கைது செய்ய வேண்டும். இது மிக மிக கொடூரமான செயல். இதை இந்தக் கருத்தரங்கம் வன்மையாக கண்டிக்கிறது.

தீர்மானம் 4

சமூக அவலங்களையும் இழிவையும் ஏற்படுத்தும் வருண சாதி குறித்த புரிதலை மக்களுக்கு ஏற்படுத்தும் தன்மையில் பெரியார், மேதை அம்பேத்கர் ஆகியோரின் எழுத்துக்களையும், பேச்சுக்களையும் பள்ளி, கல்லூரிகளில் பாடத் திட்டத்தில் சேர்க்கப்பட மய்ய மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இந்தக் கருத்தரங்கம் கேட்டுக் கொள்கிறது.