aanaimuthuதமிழ்நாட்டு அரசே! இன்னொரு தீர்மானம் இயற்றி எழுவரையும் உடனடியாக விடுதலை செய்!

1991 மே 21 அன்று இரவு 10.20 மணிக்கு, தேர்தல் பரப்புரைக்காக சென்னை வந்த முன்னாள் பிரதமர் இராசீவ்காந்தி, திருப்பெரும்புதூரில் மனித வெடிகுண்டு மூலம் படுகொலை செய்யப்பட்டார்.

அதேநாள் காலை 8.10 மணிக்கே புறப்பட்டு கல்கத்தாவுக்கு இரயிலில் சென்று கொண்டிருந்த நான் மே 23, பிற்பகலில் கல்கத்தாவை அடைந்தேன்.

காவி வெறியால் காந்தியையே கொன்று இன்ப ஆரவாரம் செய்தவர்களான பார்ப்பனர்களும் மார்வாரிகளும் பாரதிய சனதாக் கட்சியினரும் மே 22 காலை முதலே இனிப்பும் பழமும் தேநீரும் இரயில் பயணிகளுக்கும் பொதுமக்களுக்கும் வழங்கி இராசீவ் கொலையை மகிழ்ச்சி பொங்கக் கொண்டாடினர்.

மே 23-இலும், அது தொடர்ந்தது. மாறாக, தமிழ்நாட்டிலோ, ஈழமக்கள் பல்லாயிரக் கணக்கில் இந்திய அமைதிப் படையால் இனப்படுகொலைக்கும் சொல்லொணாச் சீரழிப்புக்கும் ஆளாயிருப்பினும் அதற்குக் காரணமான இராசீவ்காந்தியின் படுகொலையை ஏற்கவில்லை. ஏனெனில், ‘பல்லுக்குப் பல்’, ‘கொலைக்குக் கொலை’ என்பது தமிழர் அறம் அன்று.

இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக்கு முன்புவரையில் மனுநீதி அடிப்படை யிலேயே குற்றத் தண்டனை வழங்கப்பட்டன. நால்வருணப் பிறவிச் சாதிச் சட்டம் அப்படியே நடைமுறைப் படுத்தப்பட்டது.

ஒரு பார்ப்பனன் இன்னொரு மனிதனைக் கொன்றுவிட்டால், கொலைக்குற்றம் செய்தவனின் தலையை மொட்டையடித்து அவனை ஊரைவிட்டு வெளியேற்றிவிட வேண்டும்; ஆனால், வேறு வருணத்தான் ஒரு மனிதனைக் கொலை செய்துவிட்டால், கொலைகாரன் தலையை வெட்டிவிட வேண்டும் என்பது மனுநீதிச் சட்டம்.

இசுலாமியர் ஆட்சிக் காலத்தில் - கொலைக்குக் கொலை, திருட்டுக் குற்றவாளியின் கைகளையும் கால்களையும் வெட்டுவதுதான் தண்டனைமுறை. வங்காளத்தில் ஒரு திருட்டுக்குற்றத்துக்காக நிறைவேற்றப்பட்ட தண்டனையை நேரில் கண்ட வெள்ளைக்காரன், தங்கள் நாட்டுக் குற்றத்தண்டனை முறை அடிப்படையில் குற்றத் தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் இவற்றை எல்லா இந்தியருக்கும் ஒரேமாதிரியானதாக 1860-இல் இயற்றினான்.

நாடு விடுதலை பெற்றதாகச் சொல்லப்பட்ட பிறகு இந்திய ஒன்றியத்தின் ஆட்சித் திருடர்கள் இங்கு எல்லா மக்களுக்கும் அடிப்படைக் கல்வியைக் கொடுக்கவில்லை; 12ஆம் வகுப்புப் படித்தவர்களுக்குச் சட்ட அடிப்படைகளைச் சொல்லித் தரவில்லை. இவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்களுக்கோ, பட்டம் பெற்றவர்களுக்கோ அடிப்படைச் சட்ட அறிவு தரப்படவில்லை.

அதன்விளைவாக, இந்தியாவிலுள்ள 21 உயர்நீதிமன்றங்களிலும், தில்லி உச்ச நீதிமன்றத்திலும், இந்தியாவை உண்மையாக ஆண்டுகொண்டிருக்கிற அதிகாரம் பெற்ற அரசு நிருவாகப் பணிகளிலும், இன்றும் 100-க்கு 85 பேர் பார்ப்பனர்களும், இந்து மேல்சாதிக்காரர்களும், பெருநில உடைமைக்காரர்களுமே இருக்கிறார்கள். எனவே, “பார்ப்பான் பண்ணையம் கேட்பார் இல்லை” என்பது 2020-இலும் உண்மையாக இருக்கிறது.

அதனால்தான் முன்னாள் பிரதமர் இராசீவ்காந்தி கொலையில் குற்றஞ்சாற்றப் பெற்றவர்களில், தடா சிறப்பு நீதிமன்றமே விசாரிக்கத் தகுதியற்ற ஒரு வழக்கில், இந்தக் கொலையின் பின்னணி பற்றி புலன்விசாரணை செய்ய அமைக்கப்பட்ட ஜெயின் கமிஷனின் விசாரணையே நாளது வரை முற்றுப்பெறாத நிலையில், சந்திரசேகர் - சுப்பிரமணியசாமி – - சந்திராசாமி முத்தரப்புக் கூட்டுச்சதி இன்னும் விசாரணையே செய்யப்படாத நிலையில், குற்றத்திற்கான காரணமோ, நேரடிக் குற்றவாளியோ கண்டுபிடிக்கப்படாத நிலையில், ‘கூட்டுமனச்சாட்சி’ என்று தீர்ப்பளிக் கப்பட்டு தண்டனைபெற்ற 26 பேர்களில் நீதிமன்றங்களால் விடுவிக்கப்பட்டவர்கள் 19 பேர் போக எஞ்சிய ஏழு தமிழரும் இரண்டு ஆயுள் தண்டனைக் காலங்களுக்கும் மேலாக 29 ஆண்டுகளாகச் சிறைக் கொட்டடிகளின் கதவுகள் எப்போது திறக்கப்படும் எனக் காத்துக்கிடப்பது கொடுமையிலும் கொடுமை.

கால்நூற்றாண்டு சட்டப் போராட்டங்களாலும், வளரிளம் பருவத்தில் தன்னையே பொசுக்கிக்கொண்ட வீரமங்கை செங்கொடி மூட்டிய தீயால் வெடித்த தமிழ்நாட்டு மக்களின் எழுச்சிப் போராட்டங்களாலும் மூவரின் தூக்கு 18.02.2014-இல் உச்சநீதிமன்றத்தால் இரத்துச் செய்யப்பட்டிருந்த நிலையில், அன்றைய தமிழ்நாட்டு முதலமைச்சர் செயலலிதா, 19.02.2014-இல் சட்டமன்றத்தில், “பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, இராபர்ட் பயசு, இரவிச்சந்திரன், செயக் குமார் எழுவரும் 23 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனு பவித்துவிட்டதால், அவர்களை விடுதலை செய்வது என்று தமிழக அமைச்சரவை தீர்மானித்துள்ளது” என அறிவித்தார்.

தமிழகஅரசின் அம்முடிவை எதிர்த்து, 20.02.2014 அன்றே மன்மோகன்சிங் அரசு வழக்குத்தொடுத்து, தடை ஆணை பெற்றுவிட்டது. 2016-இல் ஆட்சிப் பொறுப்பேற்ற பாசக - வும், வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சிபிஐ விசாரித்த வழக்கில், மாநில அரசு தன்னிச்சையாக குற்றவாளிகளை விடுவிக்க முடியாது; குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 432 முதல் 435 வரையிலான பிரிவுகளின்படி தண்டனைக் குறைப்பு முடிவெடுக்கும் அதிகாரம் ஒன்றிய அரசுக்கு மட்டுமே உண்டு என்று கூறி எதிர்ப்பு தெரிவித்தது.

ஆனால், 08.01.2016-இல் தகவலறியும் உரிமைச் சட்டப் படி பேரறிவாளன் வினவிய கேள்விகளுக்கு விடையிறுத்த இந்திய உள்துறை அமைச்சகம், “குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 432-435 பிரிவுகளின் கீழ் தண்டனைக் குறைப்பு செய்வது குறித்து ஒன்றிய அரசு இதுவரை எந்த விதி களையும் வகுக்கவில்லை” என்று கூறியுள்ளது.

தண்டனைக் குறைப்பு குறித்த விதிகளில் மாநில அரசுக்கும் - ஒன்றிய அரசுக்கும் உள்ள உறவு பற்றி எந்த விளக்கமும் வகுக்கப்படாத நிலையில், ஒன்றிய அரசு தனக்கே அதிகாரம் எனக் கூறி தமிழ்நாட்டு அரசு சட்டப் பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய தண்டனைக்குறைப்புப் பரிந்துரையை நிராகரித்தது மக்களாட்சி முறைக்கே எதிரானது.

இது இந்திய ஒன்றியத்தில் காங்கிரசு அரசானாலும், பாசக அரசானாலும் தமிழர்களுக்கு எதிரான போக்கையே தொடர்ந்து கடைப் பிடிக்கின்றன என்பதற்கும், இன்றைய பார்ப்பனியப் பாசக அரசின் நய வஞ்சகமான மனுநீதி ஆட்சிக்கும் வெள்ளிடை மலையான சான்றாகும்.

இந்நிலையில், மீண்டும் பல்வேறு சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு, “அரசமைப்புச்சட்டத்தின் 161-ஆவது பிரிவின்படி, தமிழ்நாட்டு அரசு தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி எழுவர் விடுதலை தொடர்பாக அமைச்சரவை யைக் கூட்டி முடிவெடுத்து விடுதலை செய்யலாம்” என்று 06.09.2018-இல் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதனடிப்படையில் 09.09.2018-இல் தமிழ்நாட்டு அமைச்சரவை கூடி முடிவெடுத்து ஏழு பேரையும் உடனடியாக விடுதலை செய்வதற்கான தீர்மானத்தை இயற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி இரண்டாண்டுகளைக் கடந்துவிட்டது.

தமிழ்நாட்டு அரசு சார்பில் மடல் வழியாகவும் நேரிலும் பலமுறை நினைவூட்டிய பிறகும் ஆளுநர், “அமைச்சரவையின் பரிந்துரை ஆய்வில் உள்ளது” என்று பதில் எழுதிவிட்டு கல்லுப்போல் அமைதி காப்பது என்பது தமிழ்நாட்டு மக்களையும் தமிழ்நாட்டுச் சட்டமன்றத்தையும் அவமதிப்புச் செய்வதாகும்.

ஒரு மாநிலத்தின் ஆளுநர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களால், சட்டமன்றத்தில், அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் செயல்பட வேண்டுமேயொழிய, இடஒதுக்கீடு, எழுவர் விடுதலை உள்ளிட்ட எல்லா நடவடிக்கைகளிலும் தன்னிச்சையாக முடிவெடுப்பதும், திட்டமிட்ட காலத்தாழ்வு ஏற்படுத்துவதுமான தமிழ்நாட்டு ஆளுநரின் போக்கு அடாதது.

தமிழ்நாட்டு அரசும் மக்களும் அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் எந்த வேறுபாடுமின்றி ஒரே குரலில் கிளர்ந் தெழுந்து “தமிழ்நாட்டு அரசின் சட்டமன்ற முடிவை மதியாத ஆளுநரை திரும்பப்பெறு” எனக் கோரிப் போராடிடவேண்டும்.

தமிழ்நாட்டு அரசும் இந்திய ஒன்றிய அரசிடம் இதே கோரிக்கையை வலியுறுத்துவதோடு, ஆளுநரின் இந்த அடாவடிப் போக்கை முறியடிக்கும் முகத்தான் ஏழு தமிழர் விடுதலை தொடர்பாக மீண்டும் ஒரு தீர்மானம் இயற்றி ஆளுநருக்குத் தெரிவித்துவிட்டு 29 ஆண்டுகளாக சிறைக் கொட்டடியில் வதையும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்து தமிழ்நாட்டு அரசின் - சட்டமன்றத்தின் மாண்பைக் காக்க வேண்டும்.

- வே. ஆனைமுத்து